Friday, April 15, 2011

என் இனிய சகியே...

அதிகம் பேசாததாலேயே
நானும்
அதிகம் பேசுவதாலேயே 
நீயும்
திமிர் பிடித்தவர்களாகிப்போனோம்
முதல் பார்வையிலேயே !
  

உனது குதிரைவால்
 உன்னிரு கன்னங்களையும்
தீண்டியதை 
பொறாமையால் 
சீண்டின 
என் கண்கள் !


செம்பருத்திப்பூவின் 
வாசம்
நுகரும் பொழுதெல்லாம்
உன் கூந்தல் வாசமும் 
கடந்து செல்கின்றது 

பூப்பெய்திய பின்
நீ முதன்முதலில்
மஞ்சளுடன் வந்த முகம்
மங்காமல் மனதிலே!


உன் இனிய தோழி
எனக்கும் தோழியான 
நாளில் உன்னை 
அவளிடமிருந்து
பிரிக்க எண்ணி
இறுதியில் அவளிடமிருந்து
நின்னைத் தஞ்சம்
புகுந்ததென் நெஞ்சம்

கூண்டுக்கிளி 
என்னை 
தலை சாய்த்து
எட்டிப்பார்க்க 
வைத்ததுன்
தைரியம்

பேசா மடந்தையை
பேச வைத்த
மங்கை நீ!


எனக்குப் பிடித்ததாய் 
நினைத்து நீயும்
உனக்குப் பிடித்ததாய் 
நினைத்து நானும் 
வாங்கிய என் பிறந்தநாள் 
பரிசு 
நமக்குள் பிடித்துப்போன
கதை சொல்லிற்று

இது தான்
இறுதிநாள் என்று 
புல்வெளியில்
அமர்ந்து கதைத்தது
இனிக்கிறது இதயத்தில்!

என்னுடன் மட்டுமே
படிப்பேன் எனச்சொல்லி
இயலாமையால்
வேறு பள்ளியில்
நீ படிக்காமல் போனது
இன்னமும் குத்துகிறது நெஞ்சில்!

தோளில்
நான் புத்தகத்தை
சுமந்த நேரம்
நீ குடும்பத்தை
சுமந்தாய்

உங்களிருவரின்
நட்பை தொடர்பில்
வைத்தது தான்
என கர்வம் 
கொண்டது 
 எனது சைக்கிள்!

முடிவில்
உறுதி
கொண்டு
வாழ்க்கைப்படகில்
பயணித்தாய்

கூட்டில் இருந்து
பட்டாம் பூச்சியாய்
நான்
பட்டாம்பூச்சியிலிருந்து
கூட்டுக்குள்ளே நீ !

கூட்டுக்குள்
கூடி வாழும்
குணம் கொண்டே
என் மனம் வென்றாய் !


அன்புக்கணவன் 
அழகுக்குழந்தை
முகம் மலர
உன்னைப்பார்த்தபோழுது
அகம் மலர்ந்தேன் நான்!



தகவல் பரிமாற்றத்திற்கு
எத்தனை வசதிகள் வந்தாலும்
மணம் முடிந்து
முதன்முதலில் 
நீ எழுதிய கடிதத்தைப் போல் 
பிரியத்தை எதுவும் வெளிப்படுத்தியதில்லை 

மணம் ஆகவில்லை 
என்ற காரணத்தினாலேயே
என்னைச் சிறு பிள்ளையாக்கி
சின்ன சின்ன வருத்தம் மறைத்தாய் 


விடுமுறைக்கு நீ வரும் 
பொழுதெல்லாம் 
விடுமுறையின்றி 
ஊர் சுற்றுவோம் 


ஆண் நண்பரின்
தொலைபேசி அழைப்பிற்கு
அவசரமாய் 
விளக்கம் கொடுக்கும் முன்
சட்டென்று நிறுத்தி 
நீ சொன்ன வார்த்தைகள் 
என் மீதான
உன் நம்பிக்கையை
பொட்டென்று உறைத்தது 
என் நெற்றியில்..!

உன் உருவம் 
மாறினாலும் 
உள்ளம் நான் பார்த்த
முதல் பொழுதில் 
ரசித்தது போன்றே 


குடும்பத்தலைவி 
என்பதைமெதுவாக 
உச்சரிப்பவர்களுக்கிடையே
அதை கம்பீரமாக
உணர வைத்தவள் நீ !


தமக்கை 
இல்லையென தவறியும்
நினைத்ததில்லை நான்
உன்அக்காவுடனான
உனது 
ப்ரியத்தைப்பார்க்கும் வரை...

இலக்கணம் 
 சொல்லிக்கொடுக்க
திட்டியதை இன்றும் 
நீ சொல்லிசிரிக்கையில்
பெண்ணிலக்கணம் மீறி
முத்தமிடத் தோன்றுகிறது உன்னை !

என் வருத்தங்களை
உன் தோள்களில்
ஏந்தித் தாயாகினாய்
எனக்கு

என் நம்பிக்கை
 உன் வார்த்தைகளாலே
உயிர்ப்பெற்றது

எவ்வளவு பெரிய
கடினத்தை
மென்று மிழுங்கிக் கொண்டு
உன் உதடுகள்
சிரிக்கின்றன என
நான் அறிவேன்

இந்தப்பூமியில்
நாம் பிறந்த காரணம்
தேடி அலையச்சொன்னாய்
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
நானும் !

ஏமாந்தவள் என்று
ஏளனம் செய்தபொழுது
விட்டுக்கொடுத்தலால்
நிறைய பெற்றிருக்கிறேன்
என்ற உன்னை
கண் வியந்தது
தலை கவிழ்ந்தது
குற்ற உணர்வால்

உன்னிடமிருந்தே
இரவல் பெற்றேன்
வெளிப்படையாக
 பேசும் குணத்தை

வெளியிலிருந்து
பார்ப்பவர்களைவிட
என்னை உள்ளிருந்து
உணர உன்னால்
மட்டுமே முடியும்

துயரம்கொடுத்தாலும் 
துவளாமல் தாங்க
உன் போன்ற தூண்களையும்
கொடுத்தென்னை காக்கின்றான்
இறைவன்

திருமணம்
பெண்களின் நட்பிற்கு
வரமா சாபமா
என்பதை வருகின்ற
கணவனாலும்
சூழ்நிலைகளாலும்
மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றது

கணவன் குழந்தைகள் 
என கவனம் சென்ற பிறகு
நட்பைத்தேடி
புதுப்பிக்க நேரம் இருப்பதில்லை 

என்றேனும் ஒரு 
தொலைபேசி
ஏதேனும் விழாவில் 
சந்திப்பு 
குசல விசாரிப்புகள் 
என்று இங்கே 
எத்தனையோ பேர் 

எத்தனைச் சிரமங்கள்
நீ பட்டிருந்தாலும்
நீ அழுது நான் பார்த்ததில்லை

பிறந்த இடத்தை 
விட்டுப்பிரிவது
எத்தனை வலியானது
என உன் கண்ணீர்
உணர்த்தியது எனக்கு!

உனது 
கலங்கிய கண்களை 
சந்திக்க திராணியற்று
வேறிடத்தில் பார்வையைச்
சுழல விடும் கோழை நான் 

ரயிலில் நீ சென்றதற்கு
எதிர்த்திசையில்
மிக வேகமாக உனது 
மனம் உன் பிறந்த 
மண்ணை நோக்கியே 
பயணித்திருக்கும் 

கவலை கொள்ளாதே 
எனக்கூற வார்த்தைகள் 
என்னிடமில்லை
என்றேனும் ஒருநாள்
எனக்கும் இதே நிலை வரும்
என்றெண்ணும் பொழுது ...


சூழ்நிலைகளை உடைத்து
நினைத்த நேரத்தில்
சந்திக்கின்ற சூழ்நிலை
நமக்கில்லை 


தள்ளி இருந்தாலும்
 மனதால் 
என்றென்றும் 
இணைந்தே இருப்போம் 
என் இனிய ப்ரிய சகியே...







1 comment:

jroldmonk said...

அருமை..! (அந்த டிவிட் பார்த்திட்டு தானே இந்த லிங்கை குடுத்தீங்க #கரை நல்லது :-) )