Saturday, April 9, 2011

திரை விமர்சனம்

மாப்பிள்ளை 

முதலிலேயே சொல்லி விடுகிறேன் .ரஜினி ,அமலா ,ஸ்ரீவித்யா ஆழ மனதில் பதிந்து இருந்தால் இந்த படத்தை பார்க்காமல் விட்டு விடலாம்.பிம்பம் கலையாமல் பாதுகாக்கப்படும்.தனுஷ் நடித்திருக்கிறார் பார்ப்பேன் என்றால் மேலே படிக்கவும்.
மாப்பிள்ளை படத்தின் கதைக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு காட்சியமைப்புகளை சற்றே மாற்றி அமைத்து முயற்சித்து இருக்கின்றார்கள்.ஏனோ மலையை பார்த்துவிட்டு மடுவை பார்ப்பது உப்பாமல் விட்ட பூரி போல பொசுக்கென்று இருக்கின்றது.மாப்பிள்ளை படத்தை மட்டும் உல்டா செய்யவில்லை கொஞ்சம் பிஸ்தா கொஞ்சம் சகலகலா வல்லவன் என்றும் கலந்து அடித்திருக்கின்றார்கள்.பக்திப்பழமாக தோன்றும் தனுஷ் திடீர் என்று பொறுக்கி மாப்பிள்ளை ஆகிறார்.அவருக்கும் மநீஷாவிற்கும் உள்ள மோதலுக்கு வலு சேர்க்கும் விதமாக காட்சிகள் அமைக்கப்படவில்லை.பெரிதாக பெண் தாதா போல மணீஷாவை அறிமுகப்படுத்தி விட்டு இறுதியில் கைப்புள்ள ரேஞ்சிற்கு காமெடி பீஸ் ஆக்கிவிட்டார்கள்.அருமையான வில்லியாக வந்திருக்க வேண்டியவர் அந்தோ பரிதாபம்.அவரை மட்டுமல்ல.மற்றுமொரு வில்லன் (?) ஆஷிஷ் வித்யார்த்தியின் கதியும் அப்படித்தான்.சீரியசான படமாகவும் இல்லாமல் காமெடி படமாகவும் இல்லாமல் இருக்கின்றது.விவேக் கிச்சுகிச்சு மூட்டுகிறார்.அந்த நேரத்திற்கு சிரிப்பு வரலாம்.அவ்வளவே.கதாநாயகியை காப்பாற்றபோய் கவுந்தடித்து விழுந்து வசனம் பேசும் காட்சியில்மட்டும் கைத்தட்டல் பெறுகிறார்.ஹன்சிகா சிரித்துக்கொண்டே இருக்கிறார்.உதடசைவு பொருத்தமில்லாமல் போவதால் அவர் வரும் காட்சிகள் அசுவராசியமாக போகின்றது.ஹீரோ ஹீரோயின் க்கு காதல் வர அதிகம் சிரமப்படாமல் அரைத்தமாவை சிக்கனமாக அரைத்திருக்கிறார்கள்.மநீஷாவிற்கு குரல் கொடுத்தவர் (ரோஹிணி?) நன்றாக செய்திருக்கிறார்.இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை.
மாப்பிள்ளை என்ற பெயர் பார்த்த மாத்திரத்திலேயே பழைய மாப்பிள்ளை கனவு லோகத்தில் ஓட ஆரம்பித்து விடுகிறது.புதிய மாப்பிள்ளையில் கோர்வையான காட்சியமைப்புகள் இல்லை.ரவுடி என காட்டிக்கொள்ள தலையில் கட்டும் நாலு பேரை நொறுக்கவும் செய்கிறார் தனுஷ்.நித்யானந்தாவின் லீலை ஒரு காட்சிக்கு பயன்பட்டிருக்கின்றது.
தனுஷ் தன தங்கையை பணக்காரர் பெண்ணாக காட்ட முயற்சிப்பது சகலகலா வல்லவனை நினைவு படுத்துகிறது.ஆனால் கெட்டிக்காரியாக காட்டப்படும்  மனீஷா அதைகூட கண்டுபிடிக்காமல் இருப்பது ஏனோ?மிகப்பெரிய பணக்காரி சின்ன வீட்டில் கஷ்டப்படுவது பணம் வரும் என்பதற்காக என்ற தீம் நன்றாக இருந்தாலும் ஏனோ ரசிக்கவில்லை.
படத்தில் நான் மிகவும் ரசித்தது இறுதிக்காட்சி மட்டுமே.ஆசிஷ் வித்யார்த்தி "நான் அனாதை வில்லன் ஆகிட்டேனே நீயும் ஒரு வில்லனானாத்தான் என் பீலிங்க்ஸ் புரியும்"என்ற உரையாடல்தான்.ஆனால் வழக்கமான இறுதி காட்சி திருந்தல் மன்னிப்பு க்ரூப் போட்டோ திடீரென மனீஷாவின் கணவர் என்று எதுவும் இன்றி படத்தை முடித்தது பெரிய ஆறுதல்
கண்டிப்பாக ரஜினியின் மாப்பிள்ளையை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தை இப்படம் தூண்டிவிட்டது.
மாப்பிள்ளை - வீண் பிள்ளை 

No comments: