Monday, February 28, 2011

படித்ததில் பிடித்தவை!


இரண்டு நாட்களாக விடாமல் அமர்ந்து படித்தேன்..நடிகர் திரு.சிவகுமார் அவர்களின் "இது ராஜ பாட்டை அல்ல " என்ற நூலினை.யாரும் சொல்லாத அற்புத கருத்துக்கள் என்றோ புதிதாக ஏதோ சொல்லுகிறார் என்றோ சொல்ல மாட்டேன்.அவ்வளவு எளிமையாக தன வாழ்க்கையில் நடந்த வற்றை உள்ளது உள்ளபடி மிக யதார்த்தமாக அவர் எழுதி இருப்பது மனதை அவ்வளவு கவர்ந்து விட்டது.சத்திய சோதனை ரசித்தவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்திலும் அதன் பிரதிபலிப்பை உணர்வார்கள்.அப்படி நான் சொன்னாலும் அதிலும் மிகையில்லை.சம காலத்திய மனிதர்களை ஒரு கலைஞனாக பாராட்டுகின்ற மனப்பாங்கு தனக்கு நல்லது செய்தவர்களிடம் இருக்கின்ற நன்றி கடன் தமிழ் மீது கொண்டுள்ள அளவில்லாத பற்று தொழில் பக்தி தனக்கு தீங்கு நினைத்தவர்களிடம் முகத்திரையை கிழிக்கிறேன் பேர்வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் அவர்களிடமும் கற்ற விசயங்களை மட்டும் நினைவு கூர்ந்து சபை நாகரித்தோடு நாசூக்காக அவர்கள் பெயர்களை தவிர்த்து தனது மேலான குணத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.சிவாஜி அவர்கள் மீது கொண்டு இருக்கும் தீராத ப்ரியம் மதிப்பு ..தன் வாழ்க்கை பாதையில் கடந்து வந்தவர்களை மறக்காமல் மறைக்காமல் சொல்கிறார்.சிவாஜி அவர்களே "சிவா !உன்னை யாராலும் வெறுக்க முடியாது டா " என்று மனம் நெகிழ்ந்து புகழப்பட்டவர் என்றால் அதுவும் மிகையில்லை.எவ்வளவு விஷயங்கள் தெரிந்தாலும் அதை தன்னடக்கத்தோடு சொல்கின்ற பொழுது தான் அது மனதை தொடுகின்றது.சிவகுமார் அவர்களுக்குள் ஒளிந்திருந்த ஓவியர் புத்தகம் முழுக்க காட்சி தருகின்றார்.ரசிக்கலாம் அத்தனை ஓவியங்களையும்.தன் சாதனைகளை சாதாரணமாகவும் தவறுகளை சிரம் தாழ்த்தி உள்ளார்ந்த வருத்ததோடும் ஒப்புவிக்கின்ற குணத்திற்கு ஒரு வணக்கம்.

தொழில் முறை போட்டி இருந்தும் பொறாமையின்றி அனைவருடனும் இணக்கமாக இருப்பது மிக சாதாரண விஷயம் அல்லவே.புகழை பற்றி அவர் கூறுகின்ற விமர்சனம் யதார்த்தத்தை உணர்ந்த உயர்ந்த மனிதன் என்றே எண்ண தோன்றுகிறது.

சினிமா என்ற தொழில் அன்றைய கால கட்டத்தில் எப்படி இருந்தது நடிக நடிகையர் எப்படி ஒவ்வொரு விசயங்களிலும் ஆழ்ந்த அறிவை கொண்டு இருந்தனர் அந்த காலம் எப்படி பட்ட மனிதர்களையும் தொழிலை நேசிக்கின்ற பல மாமேதைகளை உள்ளடக்கிய பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதை வரும் காலத்தினருக்கு சுருக்கென்று உரைத்திருக்கின்றார்.

பாராட்டி கொண்டே இருக்கணும் போல இருக்கின்றது.இருப்பினும் முத்தாய்ப்பாய் மனதில் ஆழமாக பதிந்த அவருடைய வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

"எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது "

உண்மை ! சந்தர்ப்பமே கிடைக்காமல் தவறு செய்யாமல் இருப்பவனை விட பல சந்தர்ப்பங்கள் வலிய கிடைத்தும் அத்தனை தருணத்திலும் மன உறுதியை இழக்காமல் இருப்பது வீரம் என்று படித்திருக்கிறேன்.நிச்சயம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டி இவருடைய வாழ்க்கை.

ரசித்"தேன்"

என் தோழியின் வீட்டிற்கு சென்று இருந்தேன்..அவளுக்கு அக்கா மகள் வெகு சுட்டி.ஆறு வயது அவளுக்கு..நாங்கள் அனைவரும் தோழியின் அக்காவின் திருமண ஆல்பத்தை பார்த்துகொண்டு இருந்தோம்.வழக்கமாக அணைத்து குழந்தைகளும் தன் அம்மா அப்பா திருமண புகைப்படத்தில் நான் எங்கே என்று தானே கேட்பார்கள் இந்த குழந்தை கேட்கவே இல்லையே என்று தோழியின் அம்மாவிற்கு சந்தேகம்..எனவே அவள் வாயை கிண்டுவதற்காக அவளிடம் " எங்கே இந்த புகைப்படத்தில் உன்னை காணோம்..உங்க அப்பா அம்மா கல்யாணத்துல ஏன் நீ இல்லை ?" என்று கேட்க அவளிடமிருந்து சற்றும் யோசியாமல் வந்த பதில் இதோ ...:

" ஏன் ஔவா(பாட்டி) உங்களுக்கு எதாச்சும் அறிவிருக்கா ..?யாருக்காச்சும் கல்யாணம் ஆகும் போது குழந்தை இருக்குமா..?கல்யாணம் ஆனப்பறம் தான் குழந்தை பிறக்கும்..அப்புறம் எப்டி நான் எங்க அப்பா அம்மா கல்யாணத்துல இருப்பேன்...அவங்க கல்யாணம் பண்ணிகிட்ட அப்புறம் தான் நான் பிறந்தேன்..சரியா ..இது கூட தெரியாதா உனக்கு..?" 



அதே போல பிறிதொரு சமயத்தில் அவங்க பாட்டியிடம் உங்க கூட பிறந்தவர்கள் எத்தனை பேர் என்று கேட்க ஒன்பது பேர் என்று சொல்லி இருக்கிறார்கள்..ஒன்பது என்றால் எத்தனை என்று கேட்டு இருக்கிறாள்..நைன் என்று சொல்லவும்..அதற்கும் ஒரு ஆச்சரியம்..

"ஏன் பாட்டி நைன் பிள்ளைங்களை உங்க அம்மா எப்படி பெத்தாங்க..அவங்க அதனை பேருக்கும் புவா எப்படி ஆக்கி போட்டாங்க..துணிமணி துவைக்க ரொம்ப கஷ்டமா இருந்திருக்காதா?எங்க அப்பா அம்மா கு நான் அண்ணா டூ பிள்ளைங்க தானே...அதே மாதிரி ஏன் அளவா பெத்துக்க உங்க அம்மா ?" என்று அதிக சமூக அக்கறை [?] யோடு கேட்டிருக்கிறது பிள்ளை.

இனி வருகிற காலத்தில் நமக்கே இவர்கள் பாடம் எடுப்பார்கள் போலும்.

***************

வழக்கமாக அஞ்சா நெஞ்சரை எப்பொழுதும் வித விதமாக பெயர் சொல்லி அழைத்து குளிர வைப்பது ஆல் அல்லகைகளுடைய வழக்கம்.இந்த தடவை சனவரி (ஜனவரி அல்ல தமிழ் மாநாடு கொடுத்தது.)முப்பது ல பிறந்த நாள் (சாமி ஆறு மாசம் முன்னாடியே கொண்டாடுராங்கப்பா ) காணும் எங்கள் கலைஞரின் "குமுகி " என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...
எனக்கு ஒன்னும் புரியல.குமுகி ன்னு ஏன் சொல்றாங்க...ஒரு வேலை கும்மு கும்மு ன்னு ஆளுங்களை கும்மி எடுக்கரதாள தான் இந்த பேரு வச்சுருப்பாய்ங்களோ  அனுபவஸ்தனுங்க...
யோசிசுகிட்டே வீட்டுக்கு வந்து கேட்டேன்.குமுகி ண்ணா மதம் பிடிச்ச யானையவே மடக்கற சக்தி கொண்ட யானையாம் அது பேரு தான் குமுகி யாம்...அடேங்கப்பா...
ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ
*****************
மிக சமீபமாக நான் சென்ற இடம் ஈஷா தியான மையம்...
மிக அருமையான சூழலில் அழகாக அமைந்திருந்தது.வெள்ளிங்கிரி மலைச்சாரலில் அமைந்து இருக்கிறது.கண்ணை கவரும் கட்டிடங்கள் இல்லை.மிக எளிமையாக கட்டப்பட்டு இருக்கிறது.அந்த இடம் நோக்கி செல்கின்ற பொழுதே சுற்றி உள்ள மலைகளின் அழகை ரசித்து கொண்டே செல்லலாம்.ஆம் அப்படியே மேகம் மிக நெருக்கமாக தெரிகிறது.சற்று புல்லரிக்கிறது.ஏதோ வேறு உலகத்திற்கு செல்வது போன்று. பெரிய நந்தியின் வரவேற்பிற்கு பின் உள்ளே செல்வதற்கு முன்பே ஒரு சிறிய விளக்கம் கொடுத்து அனுப்புகிறார்கள்.லிங்க பைரவி...பார்க்க சிறு பயத்தோடு பரவசமும் தருகிறது.தீர்த்த குண்டம் ..அதிலே பாதரச லிங்கம்..அதையடுத்து தியான lingam.குண்டூசி விழுந்தாலும் சப்தம் கேட்கும்.அங்கே மிக பிரம்மாண்டமான சிவன் ஆதி சேஷனின் அரவணைப்பில்பார்த்து கொண்டே இருக்கலாம் போல இருந்தது...வெளியே வர மனமே இல்லை..கண்டிப்பாக சென்று வர வேண்டிய இடம் 
**************
///தலைவிதி என்னும் வார்த்தை கவலைக்கு மருந்தானதே//

சமீபத்தில் விதியை நம்புபவர்கள் நம்பாதவர்கள் பற்றிய நீயா நானா சுவராசியமாக இருந்தது.அதில் ஒரு பெரியவர் இதை தான் சொன்னார்.எனக்கு ஒரு விஷயம் கிடைக்கவில்லை என்று நான் கவலைப்பட்டு அதிலேயே மூழ்கி கிடந்தால் பைத்தியம் பிடிக்கும்.அதற்கு விதி என்று பெயர் சொல்லி விட்டு மனதை திடப்படுத்தி கொண்டு அடுத்த வேலை பார்ப்பதே நலம்.நம் மனதை ஆறுதல் படுத்தி கொள்ள இந்த விதி என்பதன் மேல் பழி போட்டு கொண்டால் மட்டுமே அது இயலும் என்றார்..
உண்மை என்றே தோன்றியது
***************
பானர் களுக்கும் போஸ்டர்களுக்கும் பெயர்போன மதுரையில் தற்பொழுது ஆர்ப்பாட்டம் (?) நடத்த வரும் "அம்மா"வை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பேனர் என்னை கவர்ந்தது.அதில் அநீதியை ஒழிக்கஅம்மா ஆட்சி என்ற வாக்கியத்தில் அநீதி என்பதன் அருகில் அடைப்புக்குறியில் ( அ + நிதி ) என்று போட்டு இருந்தார்கள். படித்து விட்டு ரசித்து சிரித்தேன்.எப்புடித்தான் யோசிக்கிறாய்ங்கன்னே தெரியலப்பா ..
******************************************************************************
புது மண்டபத்தில் வளையல் பாசி வாங்க ஒவ்வொரு இடத்திலா விலை கேட்டோம் .ஒரு இடத்தில விலை கூட சொல்லவும் "என்ன இங்கே கூட சொல்றிங்க அங்கே கம்மியா சொல்றிங்களே " ன்னு சொன்னதுக்கு அதுக்கு சட்டென்று கடைக்காரர் "ஏம்மா அப்போ ஒவ்வொரு இடத்திலையும் விலை கேட்டுகிட்டே தான் வர்றீங்க ரொம்ப நேரமா அப்போ ஒன்னு கூட எங்கேயும் இதுவரைக்கும் வாங்கல ;அப்படிதானே...?" என்றார்.நிஜமாகவே சிரித்து விட்டேன். ஏனென்றால் உண்மை அதுதான்.
ஒரு நாலு இடத்தில விலை விசாரிச்சு வாங்கறது தப்பாங்க?
******************************************************************************
ஒரு இரவு நேரத்தில் மிகுந்த மன வருத்தம் திடீரென்று...ஏனோ வேதனையாக இருந்தது..வெளியே சொல்லாமல் தனிமையில் இருந்து விடுபடவும் வேதனையை ஒதுக்கி வைக்கவும் சற்று நேரம் தொலைக்காட்சியில் ஒரு நகைச்சுவை சானலை வைத்தேன்..யதேச்சையாக அதிலே மதன்பாப் பேசிய வார்த்தைகள் சட்டென்று என் கவனத்தை ஈர்த்தது.ஷிவ் கேரா என்ற நபரை பற்றி பேசிவிட்டு அவர் கூறியதாவது.."பிரச்சனைகளை எதிர்கொள்ளுங்கள் நிச்சயம் அவர் சாதித்தது போல் உங்களாலும் சாதிக்க முடியும்.வாடி உட்காருவதை விட தைரியமாக எதிர்கொள்ளுங்கள் ..முடியும் என்று மனதார நினையுங்கள் ..நான் வெறும் போஸ்ட் மேன் தான்..இதை உங்களிடம் சொல்ல சொன்னது கடவுள்..அவர் சொல்ல சொன்னதை உங்களிடம் அப்படியே சொல்லிவிட்டேன்..அவர் உங்களை கைகளில் தாங்கி கொண்டு இருக்கிறார் என்பதை மறக்காதீர்கள் .நல்லது நடக்கும்..நிம்மதியா தூங்குங்க.." அந்த நேரத்தில் மிக தேவையான அந்த ஆறுதலும் வார்த்தைகளும் கொஞ்சம் நெகிழ செய்தது மட்டுமல்லாமல் வருத்தத்தை தூர வைத்துவிட்டு நிம்மதியாக தூங்க உதவியாகவும் இருந்தது..மிகவும் ரசித்தேன்.
*********************************************************************************
என் தோழியின் வீட்டிற்கு சென்று இருந்தேன்..அங்கே அவள் அக்காவிற்கு ஒரு சுட்டி பெண்..இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்..அவர்கள் வீட்டில் இருந்த பெட் இல் அவள் எழுதி இருந்ததை மிகவும் ரசித்து சிரித்தேன்...
அவள் எழுதி இருந்தது இதுதான் :
M.Rithika
2nd B bed
அவளுடையது என்பதற்கு இப்படி சான்று பொறித்து இருந்தாள்.
*********************************************************************************


மதுரை காந்தி மியுசியத்திற்கு வீடு உபயோக பொருட்கள் கண்காட்சி கு சென்று இருந்தேன்.காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அங்கே பேராசிரியர் கு.ஞான சம்பந்தன் பட்டி மன்றம் அப்பொழுது தான் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.உடனே என் அண்ணன் மனைவியிடம் வாங்க அவர் நல்லா பேசுவார்.நல்லா இருந்தா கேட்போம்.ஒரு ரெண்டு நிமிஷம் அப்புறம் அங்கே போய்டுவோம் நு சொல்லிகிட்டே அவர் பேசுவதை தள்ளி நின்று கவனிக்க ஆரம்பித்தோம்.அப்பொழுது அவர் அங்கே அங்கே நின்று கொண்டு இருப்பவர்கள் இருக்கையில் வந்து அமருங்கள்.ஒருவேளை நின்று கொண்டு கொண்டு இருப்பவர்களுக்கு இப்படி கூட ஒரு எண்ணம் இருக்க கூடும் நன்றாக இருந்தால் கேட்போம் இல்லாட்டி போய்டுவோம் நு நான் நினைத்ததை அப்படியே பட்டென்று போட்டு உடைத்தார்.கூட்டத்தில் ஒரே சிரிப்பலை.எதிரே இருப்பவர்களின் மன நிலையை அறிந்து சமயோசிதமாக அவர் பேசி சிரிக்க வைத்ததை மிகவும் ரசித்தேன்.


அப்பா!

.என் தந்தை கண்ணே மணியே குட்டிமா செல்லம் என்றெல்லாம் கொஞ்சி நினைவில் இல்லை.அள்ளி அணைத்து முத்தம் கொடுத்ததில்லை.அதனால் தானோ என்னவோ அப்படி யாரேனும் அழைத்தால் கூட அது செயற்கையாகவே இருக்கும் இன்றும் எனக்கு.அந்த பிம்பம் இப்பொழுது நினைத்தால் அப்படியே ஆக்கிரமிக்கிறது மனம் பூராவும்.சிவந்த மேனி நெற்றியில் செந்துருக்கம் கம்பீரமான நடை,கணீரென்ற குரல் ரசிக்க வைக்கின்ற சிரிப்பு,தனக்கே உரிய குறும்புத்தனம் கலந்த நகைச்சுவை பேச்சு இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.கையில் சிறிய மடிப்போடு வெள்ளை வேட்டியில் நடக்கும் கம்பீர நடை அப்படியே பதிவாகி இருக்கிறது மனதில். எந்த இடத்தில்  அப்பாவின் மீது பிடிப்பு ஏற்பட்டது என்று நினைவில் இல்லை.பொதுவாகவே எதிர்பாலின ஈர்ப்பு காரணமாக பிடித்திருக்கலாம்.ஒவ்வொரு குழந்தைக்கும் தன் தந்தை தான் ஹீரோ.எனக்கும் அப்படிதான்.வயதிற்கு வரும் வரை அப்பாவின் மிக அருகில் இரண்டு கைகளின் ஊடே உறங்கியபோழுது இருந்த கதகதப்பு இன்னமும் நினைவில் இருக்கின்றது.அந்த கைகளில் இடையே இருக்கின்ற பொழுது வருகின்ற பாதுகாப்பான உணர்வை வேறு எதுவும் தருவதில்லை.அப்படியே தூக்கி தோளின் ஓரம் சுமந்து செல்லும் பொழுது கிடைத்த உயரம் இறுமாப்பு கொடுத்திருக்கின்றது.
"பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்"


அரங்கமா நகருளா...னேன்  என்று அவர் இழுத்து கண்களை மூடி  பாடுகின்ற பொழுது அக்கணமே பெருமாள் உயிர்த்தெழுந்து அருகமர்ந்து கேட்பது போல இருக்கும்.அப்படியே பிரம்மிப்பாய் "ஆ.."வென பார்த்துக்கொண்டிருப்பேன்.அப்பாவின் தமிழ்ப்புலமை மெய்சிலிர்க்க வைக்கும்.சரியான புத்தகப்புழு.படித்தவற்றை விளக்கும் போதும் சரி விமர்சிக்கும் பொழுதும் சரி ஆழ்ந்த அறிவை அவரிடம் பார்த்திருக்கின்றேன்..சிறு வயதில் அவர் வாங்கிபோட்ட குழந்தைகளுக்கான புத்தகங்கள் தான் வாசிக்கின்ற பழக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தின.ஒரு அகராதியை போல எந்த விஷயத்தை பற்றி கேட்டாலும் விளக்கம் கிடைக்கும்."நிறைகுடம் நீர் தளும்பல் இல்" என்ற வார்த்தைக்கு அர்த்தமாக என் தந்தையை பார்க்கிறேன்.அதிகம் கோபப்பட்டு பார்த்ததில்லை.ஆனால் கோபம் வந்தால் அதிகமாகவே இருக்கும்.அம்மாவின் அடிகூட வாங்கிக்கொள்ள அனைவரும் தயாராக இருப்போம்.ஆனால் அப்பாவின் கோபத்தை தாங்குவது மிகக்கடினம் எங்களுக்கு.சிறுவயதில் பலர் முன்னிலையில் கைகொடுத்து திருமணவாழ்த்து சொன்னதற்கு வாங்கிய திட்டு இன்றுவரை வேறு எவரிடமும் கைகொடுக்க தயக்கத்தை ஏற்படுத்திவிட்டது..மற்ற அப்பாக்கள் போல அதிகம் இவர் உருகுவதில்லையே என்ற ஏக்கம் உண்டு.பிறிதொருநாள் வேறுஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபொழுது "அதிகம் பாசத்தை வெளியே காட்டினால் நம்மை பிரிகின்ற பொழுது பிள்ளைகள் கஷ்டப்படுவார்கள்"என்பதை கேட்க நேர்ந்தது.நேராக புகழா விட்டாலும் நண்பரிடம் சொல்லிபெருமைபட்டிருப்பார் நம்மை பற்றி என்று அறியவில்லை.அண்ணன் திருமணத்தில் அப்பாவின் நண்பர் அழைத்து "உன் தந்தை எப்பொழுதும் உன்னைப்பற்றி தான் பேசுவாரம்மா"என்ற பொழுது உள்ளே நெகிழ்ந்திருக்கின்றேன்.

என்னை பொறுத்தவரை பிள்ளைகள் அம்மா அப்பாவின் நம்பிக்கைபடி நடந்து கொண்டாலே அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்..சில நேரங்களில் அப்பா சின்ன விசயங்களுக்கு கோபப்படுவது போல தோன்றினாலும் பெரிய விசயங்களில் மிக அமைதியாக எதிர்கொண்டு நேர்த்தியாக அவர் செயல்படுகின்ற விதம் இன்றளவும் எங்களுக்குகூட இருந்ததில்லை.என் வாழ்க்கையிலேயே நான் செய்த உருப்படியான விசயமாக நான் நினைப்பது வேலைக்கு சென்று சொற்ப சம்பளத்தில் பெற்றோர்களுக்கு துணி எடுத்துகொடுத்ததுதான்.அப்பாவிற்கு என் சம்பளம் ஒரு நாள் செலவு.இருப்பினும் அன்று அவர் முகத்தில் கண்ட ஆனந்தம் இன்றும் நினைவில் இருக்கின்றது.ஆண் பிள்ளையை பெற்றிருக்கிறோம் என்ற இறுமாப்பை ஒருநாளும் கண்டதில்லை.மாறாக தானும் பெண் பிள்ளையை பெற்றவன் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.அதனால் தானோ என்னவோ அழகு,நிறம்,பணம் பார்த்து பெண் முடிப்பதில் உடன்பாடில்லாமல் குடும்பம் மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.பொறுப்பில்லாத தந்தையாக அவருடைய தகப்பனார் இருந்தாலும் இறுதிக்காலத்தில் அவருக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் உதவி செய்த ஒரு மிகச்சிறந்த குணத்தை என் தந்தையிடம் கண்டிருக்கின்றேன்.ஒரு மகனாக அவர் கடமையை நிறைவேற்றத்தவரவில்லை.சிறு சிறு குழந்தைகளை பார்த்து அவர் ஏக்கமும் ஆசையுமாக கொஞ்சும்போழுதேல்லாம் நமக்கும் திருமணமாகி நம் பெண்ணை கொஞ்சினால் எப்படி இருக்கும் என்று உள்ளே கற்பனை செய்து பூரித்து இருக்கிறேன்.ஆனால் ஒரு பேரன் பேத்தி கூட பார்க்காமல் அவரை காலன் கொண்டு செல்வான் என்பது நாங்களே எதிர்பாராதது.ஏதோ காய்ச்சலில் படுத்திருக்கின்ற அப்பா அழைத்தபொழுது அதுவே கடைசியாக இருக்கும் என தோன்றவில்லை.அண்ணன் வந்து சொல்கின்ற வரை மாரடைப்பின் காரணமாகவே அப்பா மருத்துவமனையில் சேர்க்கபட்டார் என்று தெரியவில்லை.இன்று வரை அந்த மோசமான இரவை பழித்து கொண்டுதானிருக்கிறேன்.இழந்தது இழந்தது தான் என்பதை உணரவே நீண்ட மாதங்கள் ஆயிற்று.இன்றும் கூட கனவில் அப்பா வருகின்ற பொழுது எழுந்து பார்த்து இல்லை என யதார்த்தம் உணர்வது கல்லை மெல்லுவது போல மிக கடினமாக இருக்கின்றது.
உள்ளார்ந்து சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஒலிக்கின்றன."என் பிள்ளைகளுக்கு பிரச்சனை என்றால் உயிரையும் தருவேன்.அவர்கள் முன் உயிர் மண்ணிற்கு சமம்"
அண்ணி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பொழுது அப்பாவின் ஆன்மா பிரிந்தது.ஸ்கேனில் கூட பெண்குழந்தை என்றார்கள்.ஆனால் எங்கள் அனைவரது பிரார்த்தனையும் அவரே வந்து பிறக்கவேண்டும் என்பதில் இருந்தது.கிட்டத்தட்ட உருப்போட்டுக்கொண்டிருந்தோம் என்று கூட சொல்லலாம்.டாக்டர் சொன்ன தேதியையும் தாண்டிஇரவு வேளையில்  அப்பாவின் பிறந்த தேதி பிறந்த கிழமையில் அவர் உயிர் பிரிந்ததாகக் சொல்லப்பட்ட அதே நேரத்தில் ஆண் குழந்தை அவரையே உரித்தார் போல பிறந்தது.அன்று வடித்த கண்ணீர் எந்த வகை என இன்றுவரை அறியேன்.மறுநாள் அந்த குழந்தையை பார்க்கசென்ற பொழுது அதன் யதார்த்தமான சின்னஞ்சிறு கண்கள் மேல்நோக்கி பார்த்தது ஆயிரம் கதை சொல்லியது.இன்று வரை அந்த குழந்தைக்கு எங்கள் தந்தைக்கு கொடுக்கின்ற மரியாதை தான் வீட்டில்.

பகுத்தறிவாளர்களே சற்றே தள்ளி நில்லுங்கள்.உங்கள் அறிவார்ந்த விளக்கங்களையும் விஞானத்தையும் என் நம்பிக்கைக்குள் புகுத்தி காயப்படுத்தாதீர்கள்.இது போலி எனத் தோன்றினாலும் சரி யதார்த்தம் என வாதிட்டாலும் சரி எனக்கு அது என் தந்தை.அவ்வளவே நான் சொல்லவந்தது.எந்த மக்களின் குடிகெடுக்கவும் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு பரப்புரை கொடுக்கவும் இங்கே நான் வரவில்லை.என் உணர்வுகளை மதித்து அமைதியாக செல்லுங்கள்.

அந்த குழந்தை கொடுத்த மகிழ்வு அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய சோகத்தில் இருந்த எங்களை மீட்டெடுக்க உதவியது என்றால் அது மிகையாகாது.
என் தந்தையின் பிறந்த தேதியில் ஒரு குழந்தையும் இறந்த தேதியில் ஒரு குழந்தையும் உண்டு எங்கள் வீட்டில்.கடவுள் மீதான நம்பிக்கையை விட இங்கே என் தந்தை எங்களுடன் இருக்கின்றார் என்ற உணர்வே மேலோங்கி இருக்கின்றது.