Tuesday, December 20, 2011

இதயங்களின் ராஜா!

 நிறைய பேரு அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க தீவிரமா விவாதம் பண்ணிக்கறாங்க.ராஜாவா 
ரகுமானா என்று நான் அந்த விவாதத்திற்குள் எல்லாம் போக விரும்பல .எனக்கு ஏன் பிறரை விட ஒரு படி மேலே ராஜாவைப் பிடித்தது என்று மட்டுமே யோசிக்க விரும்புகிறேன்.இந்தப் பதிவின் நோக்கமும் அதுவே 

ராஜா பத்தி பேசும் முன் என் சுய புராணம் கொஞ்சமா சொல்லிடறேன்.என் ஆத்மார்த்தமான நேசித்தலுக்கு எங்கேனும் காரணம் கிடைக்கலாம் உங்களுக்கு.

நான் சின்ன வயசில் எவரிடமும் அதிகம் பழகாமல் மனதில் பட்டதைப் பேசவே தயங்கும் ரிசர்வ்ட் டைப் என்றால்
நம்புவீர்களா?நம்பனும்:)அம்மா எங்கயும் வெளியே விட மாட்டாங்க வீட்டிற்கு உள்ளேயே இருக்கணும்
.அதிகம் கண்டிப்பு வேற.அண்ணனுக்கு விழும் அடி எல்லாம் பீதியடைந்த கண்களோடு வேடிக்கை பார்த்து ஓரமாய் ஒடுங்குவேன்.வெளியே நட்பு வட்டம் அறவே கிடையாது.அது மாதிரியான தருணங்களில் அண்ணன் அறிமுகப் படுத்தியவர் தான் ராஜா.அறியா வயசிலேயே ஆழப் பதிந்த ஆத்மார்த்தமான நண்பன் .
 என் அண்ணன் இசை ரசனையை சொல்லியே ஆகணும்.மெலடி ,பீட் ரெண்டும் ஒன்றாகக் கூட பதிய மாட்டாங்க.மிகச் சரியான கலவையாக இருக்கும் ஒரு கேசட்டில் பாடல்கள் அனைத்தும்.ஏனோ தானோ என்றல்லாமல் மிக செலெக்டிவ் பாடல்களாக இருக்கும்.ஸ்பீக்கர் ல அலற விட்டுத் தான் பாட்டு போடுவாங்க.கேசட்டில் இடையே நின்று நின்று பாடும்.எந்த இடத்தில் நின்று பாடும் என்பது கூட அத்துப்படி.தேர்ந்தெடுத்துப் பாடல்கள் இருக்குமென்பதால் எது எந்தப் படம் என்று எனக்குத் தெரியாது.யேசுதாஸ் பாடல்கள் பாகம் ஒன்று இரண்டு என்று வச்சிருந்தாங்க.அதிலே அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ பாடலை மிகச் சமீபத்தில்தான் யு ட்யூப் ல பார்த்தேன்.படம் பெயர் கூட அப்போதான் தெரியும்.இது பகல் ல கேக்கணும் இது இரவுல கேக்கணும் ன்னு பிரிச்சு வைப்பாங்க.(அதே பழக்கத்தில் இப்பவும் BEAT ,FEMALE SOLO MALE SOLO ,ROMANTIC DUETS ,MELODIES ன்னு டௌன்லோட் பண்ணதை தனித்தனியா பிரிச்சு வச்சு சிஸ்டம் ஹேங் ஆகிடாதான்னு அண்ணா கிட்ட வாங்கிக் கட்டினது வேற விஷயம் :P ) சின்ன வயசுல வானொலியில் பின்னணிப் பாடகர்கள் அறிவிப்பு செய்யும் பொழுது அவங்க தப்பா சொல்றாங்க படத்துல இது ரஜினி தானே பாடினாரு கமல் தானே பாடினாருன்னு தோணும் :) அப்புறம் அண்ணா சொல்லித் தான் தெரியும் பாடுறது வேற ஆளுங்கன்னு.
இயேசு தாஸ் குரல் மட்டுமே சட்டென்று கண்டு பிடிக்கும் வகையில் இருக்கும்.தனித்துவம் வாய்ந்த குரல் அது.பின்னாளில் எஸ்பிபியும்  மிக அருமையான பாடகர் என்று அறிவு சொன்னாலுமே கூட முதல் இடம் இயேசு தாசிற்குத் தான்.நீண்ட வருடங்கள் பொன் மானே கோபம் ஏனோ யேசுதாஸ் என்றே நினைத்திருந்தேன் ;-O உன்னி மேனன் என்றதும் ஆச்சர்யம்.இவர் மது பாலக்ருஷ்ணன் போன்றோரிடம் யேசுதாஸ் அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்குன்னு தோணுது.
ராஜா இசையமைத்த படங்களை எல்லாம் தேடித் தேடிக் கேட்கும் அளவுக்கு வெறியை இல்லை.இசை நல்லா இருந்தா ரசிப்பேன்.படம் கவிஞர் எல்லாம் ஆராய்ச்சி பண்ணித் தெரிஞ்சுக்க நினைச்சதே கிடையாது.ஏதோ பொழுது போகக் கேக்கிறோம்.அவ்ளோதான்.அதனால் இசை ஞானம் எல்லாம் அரைகுறைதான்.இணையத்தில் ராஜா ரசிகர்களைப் பார்த்தபின்பு தான் மலைத்தே விட்டேன்.எவ்ளோ தகவல்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.அவங்க முன்னாடி நிச்சயம் நான் மிக மிகச் சாதாரணம்தான்.பாட்டில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பது தெரியாமலே ரசிப்பதற்கும் முழுவதும் அறிந்து சிலாகிப்பதற்கும் வித்தியாசம் உணர முடிந்தது.ரவி ஆதித்யா,றேடியோஸ்பதி,ராஜாரசிகன் என்னைக் கவர்ந்த தளங்கள்.
மனதிற்குப் பிடித்த விசயங்களில் முழுப் பைத்தியமா இருக்கணும் அதிலே அதிக பட்ச அறிவைப் பெற என்பது இணையதள ராஜா ரசிகர்களிடம் தாமதமாக அறிந்து கொண்டேன்.
கேட்காமல் விட்ட ராஜாவின் பாடல்கள் யாவும் புதுப் பாடல்கள் போலல்லாமல் சிரமமின்றி சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்கின்றன.தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் ...பாடல் சமீபத்தில் தான் கேட்டுப் பிடித்தது. 
அப்பாவின் கிராமத்திற்குப் போய்விட்டு மதுரை வரும் தருணங்களில் எல்லாம் பேருந்தில் இளையராஜா ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே திரும்பி வருவோம்.அந்த நேரம் எப்படிப் போகும் என்றே தெரியாது.அப்பாவே ரசித்ததால் சிந்து பைரவி அதிகம் பிடிக்கும் எனக்கு.
மண்ணில் இந்தக் காதலன்றி பாடலில் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழலே சொல்லும் காற்றில் காகிதம் பறப்பதை.முத்துமணி மாலை ஆரம்ப இசையும் அப்படித்தான் முத்துமணி மாலை உருண்டோடுவதை கண் முன்னால் படம் பிடித்து காட்டும்."சொந்தம் வந்தது வந்தது ",பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் " போன்ற பாடல்களை பார்க்காமலே கற்பனை செய்த விதமும் படத்தில் முதன் முதலில் பார்த்த பொழுதும் அப்படியே பிரம்மித்துப் போயிற்று.ராஜாவிடம் காட்சிப் படுத்தி விட்டு இசை அமைக்கச் சொன்னார்களா அல்லது அவர் இசைக்குத் தகுந்தாற் போல பாடல் காட்சிகளைப் படமாக்கினார்களா என்று பல முறை குழம்பி இருக்கின்றேன்.எப்படியாயினும் வெளிநாடு லொகேஷன் இல்லாமல் ,புது வித நடன அசைவுகள் பேர்வழி என்றோ இல்லாமல் அந்தக் காலத்தில் இயல்பாக நம் ஊர்களில் எடுக்கப்பட்ட பாடல்களே வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன இன்றளவும்.மதுர மரிக் கொழுந்து வாசம்,நிக்கட்டுமா போகட்டுமா இப்படி பாடல்களை அடுக்கிகிட்டே போகலாம்.ராஜா ஒரு முறை சொன்னது "இசையைக் கேட்கும் பொழுதே காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே உணர வைக்க வேண்டும் "என்று.அதை அப்படியே பல பாடல்களில் பிரதிபலித்திருப்பார்.
 
ஒரு படத்தின் கதை மட்டும் நன்றாக அமைந்து விட்டால் அதற்கு இசை ஞானியின் இசை பலமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமின்றி நிரூபித்த படங்கள் நிறைய மௌன ராகம்,சிந்து பைரவி ,முதல் மரியாதை ,சேது என வரிசையாக பல வெற்றிப் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எத்தனை துன்பங்களையும் அந்த நேரத்தில் மறக்க மாமருந்தாக ராஜ இசை உதவி இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.ஒரு தாயைப்போல மடியில் வைத்து மெல்லத் தலை வருடி அன்பைச் சொல்லும் பாடல்களாகட்டும் காதலனின் பிரியத்தைச் சொல்லும் காதல் பாடல்களாகட்டும் எத்தனை அவர் பெருமை சொல்ல?எல்லா நேரமும் நண்பர்கள் அருகில் இருக்க முடியாது.வேதனையான தருணங்களில் பெரும்பாலும் நான் தோள் சாயும் நண்பன் ராஜா மட்டுமே.அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளும் நண்பன் ,காதலன், தாயுமானவன் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைப்பேன் மொத்தத்தில் இசைக்கு இறைவன். 
 எண்பதுகளில் பல நல்ல பாடல்கள் வேறு இசையமைப்பாளர்கள் இசைத்திருந்த பொழுதும் அதுவும் ராஜாகவே இருக்கக் கூடும் என்று அனிச்சையாகவே பலரும் நினைத்திருக்கக் கூடும்.ராஜாவின் இசையில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அது.
அவர் இசை அறிவை எடுத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை.அதே போல ராஜாவை மோசமாக விமர்சிக்கவும் எவருக்கும் அருகதை இல்லை.காலிக் குடங்களின் சத்தமும் குறை குடங்களின் கூத்தாட்டமும் மிகுந்த உலகில் தலையில் விஷயம் உள்ள ஒருவர் தலைக்கனமாக இருந்தால் கூட தவறே இல்லை.
என்னைப் போன்ற பல ரசிகர்களின் எண்ண அலைகள், நிழலாய் இருந்து அவரைத் தெம்பூட்டிய அவரது துணைவியாரின் பிரிவில் இருந்து அவரை ஆற்ற சென்றடையட்டும் என்பதே என் பிரார்த்தனை.

Wednesday, December 14, 2011

வாழ்க்கை!

ஒரு மனிதனுக்கு மரண பயம் வந்துட்டா எப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடும் என்று ஒரு உறவினர் மூலம் காண்கிறேன் வாழ்ந்த காலத்தில் எல்லாம் சுயநலமே பெரிதாகக் கருதி அத்தனை பேரையும் துச்சமென அவமதித்தவர்.அவர் நடவடிக்கை பிடிக்காமல் உடன்பிறப்புகள் சொந்தங்கள் அத்தனையும் ஒதுங்கிக் கொண்டன.இப்பொழுது தேடிச் சென்று ஒவ்வொரிடமும் வலிய பேசுகிறார்.சண்டை போட்ட உடன்பிறப்புகளிடம் கண்ணீருடன் உரையாடுகிறார்.ஆனா அவர் செய்த அநியாயங்கள் மனதைச் சுட அவரை முழுமையாக நம்ப மறுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

என் அம்மாவிடம் வந்து சித்தி உங்களைப் பார்க்கணும் போல இருந்தது என்று வெகு நேரம் பேசிவிட்டுச் சென்ற பொழுது கூட ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு போல அதான் வந்திருக்கிறார் என்று ஒதுங்கிக் கொண்டேன் நானும் .அவர் சென்ற பின்பு அம்மா வருத்ததுடன் சொல்லியே தெரியும்.அம்மா சட்டென்று நம்புபவர் என்பதால் அப்பவும் நான் நம்பல ஆனா தொடர்ச்சியான அவர் நடவடிக்கைகள் அவர் நிஜமாகவே உள்ளூர வருத்தம் கொண்டு அலைகிறார் என்றே புரிந்தது.இதயம் மிகவும் பலவீனப்பட்டு பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றது போல.அத்தனை பேரின் ஒட்டுமொத்த வெறுப்பும் நெஞ்சைச் சுடுகிறது போலும்..அவர் உடன்பிறப்புகளிடம் அம்மா தான் பேசுகிறார் முடிந்த அளவு பேசுங்கப்பா பாவம் அவன் என்று.மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை  என்பது வாழ்க்கைக்கும் பொருந்தும் எதுக்கு அவ்ளோ வேதனைப் படுத்தணும் இன்னைக்கு எல்லாம் நினைச்சு வருத்தப் படணும்?ஆனாலும் இந்த அளவாவது உணர்கின்றாரே ஆச்சர்யம் தான் எங்களுக்கு.(எங்கள் குடும்பத்திலும் அத்தனை இடைஞ்சல்கள் முடிந்தவரை கொடுத்திருக்கிறார் இருப்பினும் மன்னித்தது எங்கள் தாய் மனம்) ஆனாலும் அம்மாவைப் போல உருகாமல் எங்களால் தள்ளி நின்று அனுதாபப்படுவது தவிர வேறு எதுவும் செய்ய முடியல.

இப்பவும் அவரை உறவுமுறை சொல்லி அழைக்க கூட மனம் வரல ஹ்ம்ம்..வாழ்க்கையில் எவ்வளவு இருக்கு என்பதற்கும் இவ்வளவு தான் வாழ்க்கை என்பதற்கும் இடைப்பட்டது அந்த நபருடைய வாழ்க்கை.முடிந்தவரை இனி செல்லுகின்ற நாட்களில் பிரியமானவர்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது..

Thursday, December 1, 2011

அம்மா!

அம்மா சமையலைச் சிலாகிக்கும் பாக்கியம் நமக்கு மட்டும்தான் அடுத்த தலைமுறை வீட்டில் வேலைபார்ப்பவர்களைப் பற்றிச் சொல்லக் கூடும் ..
***************************************************************************
உருக்கமா ஒரு பொய் சொல்லிவிட்டால் உடனே நம்பிவிட அம்மாவால்
மட்டுமே முடியும்
******************
பிள்ளைகளிடம் விரும்பி ஏமாறுபவர்கள் ஏமாறுவதை விரும்புபவர்கள் 
அம்மா 
*******
நலமில்லை என பொய்
சொன்னாலேபார்க்காமல்  நம்பிவிடும் அம்மா
நலமாகிவிட்டது என எத்தனை முறை
சொன்னாலும் கண்களால்
அளவெடுத்துக்கொண்டே இருக்கின்றாள்..

***********************************************
  நாலு தடவை சொல்லி விட்டு ஐந்தாவது தடவை மனசில்லாமல் தானே
அந்த வேலையைச் செய்துவிடுவது அம்மாவாகத் தானிருக்க முடியும்
*************************************************************************
சிறு வயதில் அம்மா சீயக்காய் தேய்த்துப் பராமரித்தவரை
கேசம் நன்றாகத் தானிருந்தது #கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் 
**********************************************************************
தலையில் துண்டு கட்டிக் கொண்டு வேலையில் தீவிரம் காட்டும்
வெள்ளிக் கிழமை தேவதைகள் #அம்மா 
*****************************************
அப்பாவின் சுடு சொற்களை விடப்
பெரிதாக அம்மாவின் அடிகள் பாதிப்பதே இல்லை 
***************************************************
சாப்பிடப் பிடிக்காததை உடனே எடுத்துப் போட
அம்மாவின் தட்டு எப்பொழுதும் அருகில் தேவைப்படுகின்றது 
வேண்டாமென ஒதுக்கிய பின்பே தான் உண்ணும் அம்மா 
***********************************************************
அம்மா உணவை ஊட்டுவிட்ட காலங்களில் உணவின் சுவை
இன்னமும் அதிகமாக இருந்தது #ஏக்கம் 
*****************************************
எளிமையாகச் சாப்பிடுவது நல்லது 
அம்மா ஊரில் இல்லாத தருணங்களில் மட்டும்  
ரொம்ப நேரம் யார் சமைக்கிறது :)))
*********************************
பெரும்பாலும் அம்மாவே பெண் குழந்தைகளை புகுந்த வீட்டில் 
எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று மனதளவில் தயார்
செய்து விடுகின்றார்கள் 
*************************


 


அனாவசியப் பொங்கல்களும் அத்தியாவசியப் பொங்கல்களும் !


நடிகர் கார்த்தி என்ன சொன்னார் அது எப்படி சொல்லலாம் என தமிழ்ச் சமூகம் பொங்கிக் கொண்டிருக்கின்றது.அப்படி என்ன சொல்லிட்டாரு மனுஷன் தமிழ் ரசிகர்களை விட தெலுங்கு ரசிகர்களை அதிகம் பிடிக்கும்.FRAME க்கு FRAME கைதட்டல் கிடைக்கும் இது அங்க இல்லன்னு சொன்னார்.ஒருத்தனை இன்னொருத்தனை விட ரொம்பப் பிடிக்கும்னா இன்னொருத்தன் ரொம்பக் கேவலமானவன்னு தானா அர்த்தம் கற்பிச்சுக்கறது.இதுல தமிழர்களை இழிவு படுத்தி எதாச்சும் இருக்கிறதா எனக்குத் தெரியல.மும்பைல இருந்து வர்ற நடிகைகள் எல்லாம் என்க்கு மும்பை FANS விட டமில் FANS ரொம்போ புட்ச்சிர்குது.ன்னு யாராச்சும் மண்டையை ஆட்டி ஆட்டிச் சொன்னா உடனே அதை நம்புற அதே ஆளுங்க தான் இதையும் நம்பிருப்பாங்க.


போற இடத்தில பொழைப்புக்கு தகுந்தமாதிரி பொய்யா பேசுறவங்க சினிமாக்காரங்க மட்டும் தானா?ஏன் சராசரி ஆட்கள் இல்லையா?.சரி அதுல உண்மை பொய் ஆராய்வது அப்புறம் இருக்கட்டும்.இதுக்காக பொங்கற தமிழ் உணர்வாளர்களே இன்னும் நிறைய இருக்கு இதை விட ஜாஸ்தி பொங்க.அதையெல்லாம் ஒப்பிடும் பொழுது இது சப்பை விஷயம்.தமிழ் நாட்டுப் பொண்ணுதான் ரமலத்.முடிஞ்சவரை போராடுச்சு.அதுக்காக நயன்தாரா படம் பார்க்கிறதை நிறுத்திட்டீங்களா? 
முல்லைப் பெரியாறுன்னு  ஒரு விஷயம் ஓடிகிட்டு இருக்கு பாஸ் ஒட்டுமொத்த கேரளாவும் முழுப் பூசணிக்காயை இல்ல ஒரு அணையவே சோத்துல மறைக்கிறாங்க.அங்க கொஞ்சம் பொங்கறது.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் ன்னு ஆரம்பிச்சதோட சரி அப்புறம் அது என்ன ஆச்சுன்னே தெரியல அதுக்கு கொஞ்சம் பொங்கறது .இதையெல்லாம் விட்டுட்டு எதுக்கோ எல்லாம் பொங்கறீங்க .நடிகனை கேவலமாகவும் பார்க்கவேணாம்.பால் குடம் எடுத்து உயர்த்தியும் பார்க்க வேணாம்.ஒரு தொழில் பண்ற நம் போலவே குறைகள் உள்ள ஒரு சராசரி மனுஷன் தான் நடிகனும்.ஏதோ படம் பார்த்தோமா நல்லா இருக்கு இல்லன்னு சொல்லிட்டுப் போனோமா ன்னு இல்லாம மாறுபட்ட ரசனை உள்ளவர் எந்த நேரம் பார்த்தாலும் குழாயடிச் 
சண்டையை விடக் கேவலமா சண்டை போடுறதை இணையத்தில் தான் அதிகம் பார்க்கிறேன்.படிப்பு என்பது சபை நாகரிகத்தையும் கற்றுக் கொடுப்பதாக அமைய வேண்டும்.இல்லாட்டி அந்தப் படிப்பு வீண்தான்.தொழில்நுட்பங்களை வக்கிரங்களுக்குப் பயன்படுத்துகிறார்கள்.சூர்யா ஒரு ஃ பேர்னஸ் க்ரீம் விளம்பரத்தில் நடிக்கவும் அதற்கும் இதே போல சவுண்டு.ஒரு நடிகன் கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நடிப்பது மட்டுமே அவன் வேலை.எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்?காலம் காலமாக இதே போல ஃ பேர்னஸ் க்ரீம் விளம்பரம் வரலையா?அப்போ எல்லாம் எங்க போனாங்க?அவங்க பிரச்சனை அந்த விளம்பரப் படத்தின் மீது அல்ல சூர்யா மீது.சச்சின் பெப்சிக்கு நடிச்சப்போ சச்சினையும் அப்போ திட்டலாமா?ஒரு ப்ளாக் ல பார்த்தேன் காசு கொடுத்தா அவங்க அப்பன் கூட நடிப்பார் கண்ட விளம்பரத்தில் என்று படு அசிங்கமான வார்த்தைகளை கமென்ட் ல உபயோகப்படுத்தி இருந்தார்கள்.சிவகுமாரைச் சொல்லும் முன் "இது ராஜபாட்டை அல்ல"படிச்சுட்டு பேசணும்.காதலை எதிர்க்கும் அப்பா ரோல் அது இதுன்னு நிறைய பண்ணியாச்சு.புதுசா ஒண்ணுமில்ல நடிக்கன்னு நடிப்பதையே மனிதர் நிறுத்தி வச்சிருக்கார்.பணம் மட்டும் தான் குறிக்கோள் என்றால் பண்றதுக்கு ரோல் இல்லாமலா போகும்?இதையெல்லாம் சொல்வதால் தீவிர ரசிகை என்று எனக்கும் முத்திரை குத்திடாதீங்க.
கேவலமாப் பேசுறதைக் கண்டிக்கிறேன் பேர்வழின்னு அதைவிடக் கேவலமா பேசி நோக்கத்தையே சிதைப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள்.அஜித் பிரியாணி போட்டார் ன்னு ஒரு மேக் அப் மேன் சொன்னதை சொன்னா உடனே வினவுல அதுக்கு ஒன்றை முழத்துக்கு கட்டுரை எழுதறாங்க.பிரியாணி போட்டப்போ அஜித் கூட அவ்ளோ யோசிச்சு இருக்கமாட்டாரு.விஜய் படத்துக்கு பாடை கட்டி FB ல போட்டோ அதுக்கு 657 LIKES .எவ்வளவு வக்கிரம் பிடித்தவர்கள்?இதுல அரசியல்வாதியை சொல்றதுல எங்க இருந்து இவங்களுக்குத் தகுதி வருது?கிண்டல் அடிக்கலாம் படம் சரியில்லாட்டி ஆனா இருபத்திநாலு மணி நேரமும் அதே பொழைப்பா திரியரவங்களைப் பார்த்தா அருவெறுப்பா இருக்கு.வீட்ல பெத்தவங்க அடிச்சு வளர்த்திருக்கணும் இது மாதிரி மறை கழண்ட கேசுங்களை எல்லாம்.
சினிமா மீது ஆர்வம் இருக்கலாம் ஆனா மோகம் அனாவசியம்.அதனால் தான் சினிமாக்காரங்க அரசியல் க்கு படையெடுத்து வராங்க.சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வரக் கூடாது எனச் சொல்ல வரல.ஆனா ஸ்க்ரீன் ல கைதட்டறாங்க நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருப்போம் ன்னு ஈசியா நம்ப வைக்க அதை பயன்படுத்திக்காம இருக்கணும் அவ்ளோதான்.டிவிட்டர்லையே பார்த்திருக்கேன் ஹன்சிகா பல்லு விளக்கினியா ஜெனிலியா குளிச்சியா டாப்சீ ரொம்ப பிடிக்கும் ப்ளீஸ் இதை RT பண்ணுங்க நான் உங்க தீவிர ரசிகன் இது போன்ற டெம்ப்ளேட் டயலாக் எல்லாம்.என்னைப் பொறுத்தவரை நான் பின்தொடர்பவர்களை விட அருமையா எந்தப் பிரபலமும் எழுதுவது இல்லை பல விசயங்களிலும் பட்டையை கிளப்பறாங்க.அதனால் நான் எந்தப் பிரபலத்தையும் தொடர்வது இல்லை.எனக்குப் பிடிச்ச பிரபலங்களைப் பார்த்தா நானும் சந்தோசப்படுவேன்.அதற்காகத் தலையில் தூக்கி வைத்து என் பெற்றோர்களை விட  பெருசா அவங்களைக் கொண்டாட மாட்டேன்.
புகழ் என்ற வெளிச்சம் இருப்பதாலேயே அங்க நடப்பதெல்லாம் பெரிய விசயமாகவும் அந்த வெளிச்சம் இல்லாத காரணத்தினாலேயே பலர் உத்தம வேடமிட்டு அலைகிறார்கள் யதார்த்த வாழ்வில்.பிரச்னையை எதிர்கொள்ள முடியாம தற்கொலை பண்ணிகிட்டா ஐயோ பாவம் அந்த நடிகைன்னு பரிதாபப்படும் அதே வாய் சமாளிச்சு வேறு திருமணம் போனா ரெண்டு கல்யாணம் பண்ணவன்னு நக்கல் அடிக்கவும் செய்யுது.மாற்றுக் கருத்துகளுக்கு பழிவாங்கும் மனோபாவம் சாதாரண சராசரி மனிதர்கள் கிட்டேயே இருக்கு.அதிகாரத்தில் இருப்பவர்களை குறை சொல்லி என்ன செய்ய? ஒருவரை மிகக் கேவலமாக விமர்சனம் செய்யும் பொழுது அது அவங்களுக்கும் பொருந்திப் போயிடுதுன்னு யாராச்சும் எடுத்துச் சொன்னாத் தேவலை.நடிகைதானே கவர்ச்சியா நடிச்சா அப்படித்தான் பேசுவோம்ன்னு படு ஆபாசமா கமென்ட் கொடுக்கிறவங்க எல்லாம் பெண்ணுரிமை பேசும் பொழுது இயல்புக்குப் பொருந்தாத  ஒன்றாகிவிடுகின்றது.புகழ் பெற வேண்டும் என்றால் பிரபலமாக இருப்பவரை அல்லது இருக்கின்ற விஷயத்தை எதிர்த்தால் போதுமானது என்று பலர் மனதில் அப்பட்டமா பதிஞ்சுருச்சு.இன்னொரு கூட்டம் எதையாச்சும் ஆதரிக்கனும் இல்லாட்டி எதிர்க்கணும் அப்படி செய்யாட்டி தமிழினத் துரோகி ன்னு பட்டம் கொடுத்திடறாங்க.
குஷ்பூ குட்டைப் பாவாடை போடுதா நமீதா நெக்லஸ் போடுதான்னு கவனிச்சு ஆர்ப்பாட்டம் பண்றதுக்குன்னே ஒரு கூட்டம்.நியாயமான விசயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது தவறு இல்லை.ஆனா தன் இருப்பைக் காட்டிக் கொள்ள பதினைந்து நிமிடப் புகழ் பெற பிரபலங்களைப் பயன்படுத்திக் கொள்(ல்)பவர்களே அதிகமாகிவிட்டதால் எது நியாயம் எனத் தெரியாமலே போயிடுது.
எந்த ஒரு விசயத்தையும் அலசி ஆராயாம கருத்து சொல்வது தேச வியாதி போல.அதுக்கும் எதுவுமே பேசாம அமைதியா இருந்திடலாம் ...DOT