Sunday, April 6, 2014

பங்குனியில் ஒரு சித்திரைத் திருவிழா ...!


ராஜா நிகழ்ச்சி மதுரையில் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மனம் இருதலைக் கொள்ளியாய்த் தவித்தது.நேர்ல பார்த்தா எப்படி இருக்கும் என்ற கற்பனையும் இரவு வெகுநேரம் ஆகிவிடும் வீடு திரும்ப என்ற யதார்த்தமும் மாறி மாறி அலைக்கழித்தது.ஒரு வழியாக அம்மாவிடம் அனுமதி பெற்றேன்.ஆனால் டிக்கட் நான் வாங்கலம்மா தோழி தான் வரமுடியவில்லை என்று அவள் வாங்கிய டிக்கட் நமக்குக் கொடுத்திருக்கிறாள் என நம்பவும் வைத்தாயிற்று :) (no screenshot allowed )அனுமதி கிடைத்தவுடனே டிக்கட் வாங்க முயற்சி செய்தால் இணையத்தில் ஒரு டிக்கட் கூட இல்லை என வெறுப்பேற்றியது.கீஷ்டு கானம் சென்றால் அங்கே அரங்க அமைப்பு map இருந்தது.500 ,1000ரூபாய் டிக்கட் எடுப்பது வீண் எனப் புரிந்தது.ஒரு வழியாகத் தோழி மூலம் ரூ.2500 டிக்கட் 2 புக் செய்தாயிற்று:))

அப்பொழுதில் இருந்து "மாலையில் நடத்தனும் இளையராஜா கச்சேரி"என்று சித்ரா காதில் பாடிக் கொண்டிருந்தார்.FREE SEATING  ஆகவே முதலில் செல்பவர்களே முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு .அதனால் 3.30 மணியில் இருந்தே 3 dress மாத்தி 4.30 க்கு கிளம்பியாச்சு..:)

சரியாக 5 மணிக்கு அங்கே ஆட்டோவில் சென்றால் கூஊஊட்டம் ..ஆ..த்தி...இது என்ன சித்திரைத் திருவிழாவாட்டம்...மலைத்தே போனேன் PLATINUM GATE ,GOLD GATE ,SILVER GATE என விலை வாரியாக பிரித்து விடப்பட்டு இருந்தது.SILVER க்கு உரிய இடத்தில் முன்னாடியே சென்று அமர்ந்தாலும் அங்கிருந்து stage வெகு தொலைவு..

பக்கத்தில் ஸ்க்ரீன் கட்டப்பட்டு இருந்தது.இவ்வளவு தூரம் வந்தும் இப்படி screen ல தான் பார்க்கணுமா என நினைத்த பொழுதே எங்களுக்கு முன்பு பண்ணைபுரம் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு முன்னேறிச் சென்றது நாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில இருந்து ஒரு கூட்டம். இரும்புத் தடுப்பின் அடியில் புகுந்து அந்தப் பக்கம் சென்றாயிற்று.இப்படியா சேரைத் தூக்கிட்டுப் போறது என்னா சனங்க என அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே யாமும் அதே வேலையைச் செய்து stage நன்றாகத் தெரியும் இடத்தில் சேரைப் போட்டு இடம் பிடித்தாயிற்று :)) ஒத்திகை நடந்து கொண்டிருந்தது..ஆகா..என அங்கே கவனம் செலுத்தினால் வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் பாடல்..அந்த prelude beats இருக்கே என்னா அடி..:) ச்ச..இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டே ட்விட்டரில் நேரலை செய்ய போனை எடுத்தேன்.இறுதியாக அமாஸ் அம்மாவின் பறவையும் அங்குதான் இருக்கிறார் என்ற ட்வீட் மட்டுமே கண்ணில் பட்டது.அத்தோடு மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவே இல்லை.நானும் ஒரு 10 முறை போனை swtich off செய்து on செய்திருப்பேன்.ம்ஹ்ம்ம் ..போனைக் குலுக்கினா நெட் work ஆகுமா ஜீவா என எனக்கு நானே கேட்டுக் கொண்டே அதையும் செய்து பார்த்துவிட்டேன்.AIRTEL  ஐச் சபித்துவிட்டு சுற்றி உள்ள கூட்டத்தில் பார்வையைச் சுழல விட்டேன்.பறவையைத் தான் வெகு நேரம் தேடினேன்."பறவையே எங்கு இருக்கிறாய்"..ட்விட்டர் அப்டேட் உம் செய்ய முடியாது..இந்தப் பறவையையும் எங்கு என கண்டுபிடிக்க முடியாது.பேசாமல் நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதுதான் என முடிவு கட்டியாயிற்று.நிகழ்ச்சி ஆரம்பம் ஆக இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.அதனால் அருகில் இருந்த பண்ணைபுரம் மக்களிடம் பேச்சு கொடுத்தேன்.5000 ரூ,10,000 ரூ.டிக்கட் அரங்கமும் நிறைந்து வழிந்தது.ஆனால் அங்கே போய் அமருவதை விட இங்கேயே இருக்கலாம் இதுவே போதும் என்ற எண்ணமே வந்தது.பொதுவாக இப்படி கிராம மக்களைச் சந்திக்கும் பொழுது அவர்களின் வட்டார வழக்கிலேயே பேசி விடுவதில் ஒரு இலகுத் தன்மையை உணர முடியும்.இது எங்கள் இடமாச்சே நீங்க எப்படி இங்க உட்காரலாம் என விதிகள் எதுவும் பேசாமல் டிக்கட் விலை விசாரித்தார்கள்.

சொல்லவும் ஆத்தி..இம்புட்டா..எங்களுக்கெல்லாம் சும்மாக் கொடுத்தாக என்று தனக்கு அளிக்கப்பட்ட VIP டிக்கட்டை ஒரு அம்மா ஆட்டி ஆட்டிக் காட்டியது சிரிப்பை வரவழைத்தது. கிராமத்துல மொத்தம் எத்தனை தலைக்கட்டு என விசாரித்தேன்.அது இருப்பாங்க பத்தாயிரம் பேரு.வீட்டு வீடுக்கு டிக்கட் கொடுத்தாக..5000 டிக்கட் இருக்கும் மொத்தம் என்றார் அப்பெண்மணி.(13 சாதிகளாம் அங்கே..அத்தனை பேருக்கும் கொடுத்திருக்கின்றார்கள் ) என் அம்மா மெச்சிக் கொண்டார் பரவாயில்லை சொந்த கிராமத்து மக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என.
180 சுமோ(அவர்களில்  ஒருவர் கொடுத்த தகவல் ) ,பேருந்து வேன் என அங்கிருந்து சிரமம் பார்க்காமல் வந்திருந்தார்கள்.பின் இன்னொரு பெண்மணி மகன் பெங்களூருவில் வேலை பார்ப்பதாகவும்,இந்த நிகழ்ச்சிக்காகவே வந்திருப்பதாகவும் கூறினார்.இன்னொரு பண்ணைபுரத்துவாசி வேலை பார்ப்பது கேரளாவில்.அங்கிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்தாராம்..நான் எந்த ஊர் ,பெயர்,வேலை வரைக்கும் விசாரித்துவிட்டு நிகழ்ச்சி முடிவதற்குள் பேர் சொல்லி அழைத்து இலகுவாகப் பேசிக் கொண்டே இருந்தார்.பண்ணைபுரம் பற்றி,வீரபாண்டி போலவே இருக்குமா ஊரு ,தேனியில் இருந்து எவ்வளவு தூரம் போடி வழியா என விசாரித்து அறிந்துகொண்டேன் .எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெரு தான் அவர் வீடு.முந்தா நேத்து சின்ன மகனைப் பார்த்தேன் வந்திருந்தாக என்றார் பெருமை பொங்க ..இருக்காதே பின்னே...

அவங்க சொந்த பந்தம் எல்லாம் வந்திருக்காகளா எனக் கேட்டதில் ஆமாம் சித்தப்ப மக்க பெரியப்ப மக்க எல்லாம் வந்திருக்காக என கூட்டத்தில் ஒரு திசையைக் காட்டினார்..ம்ஹ்ம்ம் ..நமக்கு யாரைத் தெரியும்..இருந்தாலும் ஒரு ஓஹோ போட்டுக் கொண்டேன். உங்க கிராமத்துக்கு ஏதேனும் செய்திருக்கிறாரா என விசாரித்ததில் அங்கே பள்ளிக் கூடம் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.பரவாயில்லை நல்ல விஷயம்.அப்படியே சுத்தி எதுக்கும் போட்டோ எடுப்போம் ன்னு எடுத்தா நான் ஏதோ பத்திரிக்கையில் இருந்து போட்டோ எடுக்க வந்தவள் என நினைத்து எங்களை எடுங்கள் என ஒரு ஜோடி குரல் கொடுத்தது.
காசா பணமா எடுத்து வைப்போமே எடுத்துக் கொண்டேன் புன்னகையுடனே. வீடியோ கேமரா என்றால் ஆர்ப்பரிக்கும் கூட்டம் எல்லா இடத்திலும் இருப்பார்கள் போலும்..மேலும் கீழுமாகச் சுழன்ற கேமராவுக்கு ஏகப்பட்ட கையசைப்பும் குரலும் ..:)

பண்ணைபுரத்து மக்கள் வந்திருக்கீங்களா என கார்த்திக் ராஜா கேட்கவும் மேலே கையை உயர்த்தித் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.அவர்களின் வரவுக்குத் தனி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றார் கார்த்திக் ராஜா.அதே சமயம் சேரைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தவர்களை இது உங்களுக்கான நிகழ்ச்சி தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்க அவரவர் இடத்தில் அமருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.யாரது சேரைத் தூக்கிட்டுப் போறது ராஸ்கல்ஸ் என திட்டிக் கொண்டேன் :P மைதானத்தின் அருகில் வீடு வாய்க்கப்பட்டவர்கள் மொட்டை மாடியில் குவிந்து இருந்தார்கள்.கருமுத்து கண்ணன் தலைமையில் கார்த்திக் ராஜா வழங்கும் "ராஜாவின் சங்கீதத் திருநாள் "இதிலே கருமுத்து கண்ணன் என்பவர் மீனாட்சி கோவில் அறங்காவலர் என அம்மா சொன்னார்கள்.இருளத் துவங்கியதும் வண்ண ஒளி விளக்குகள் கண்ணைக் கவர்ந்தன.சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜாவுடனான சந்திப்பு காணொளி ஒளிபரப்பட்டது.அந்தப் பேட்டியில் வந்த சந்திரா அக்காவை அம்மா அடையாளம் கண்டுகொண்டார்.சென்னைக்கு சென்ற பொழுது பார்த்தோமே பௌஷ்யா அம்மா தானே என்று.இடையில் மடை திறந்து பாடல் க்ளிப்பிங்க்ஸ் வெகுவாகக் கவர்ந்தது.."புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் நான்...." அந்த நிகழ்ச்சியை ரசிப்பதற்கான முழு மனதையும் தயார்படுத்த இது போதுமானதாக இருந்தது.
ஹலோ FM RJ அறிமுகம் நடந்தது..எனக்குப் பிடித்த  இரவு 12 மணிக்கு பேசும் வாடாத ரோசா வாடிப்பட்டி ராசா பிரபுவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.இசை THIS  ..ஆனது இசைTHAT  ஆனது என ஒரு RJ feeling ஆக பேசிக் கொண்டிருந்தார்.இந்தப் பாழாப் போன ட்விட்டர் சகவாசத்தால் எனக்குத்தான் சிரிப்பு சிரிப்பா வந்தது மச்சி :-))


.மேலும் கவனம் முழுக்க ராஜா எப்போ வருவார் நிகழ்ச்சி எப்போ ஆரம்பிக்கும் என்றே இருந்ததால் இந்த இடைப்பட்ட மொக்கைகளை ரசிக்கும் மனநிலையே இல்லை.இறுதியாக , நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சுஹாசினியை அழைத்தார்கள்.எப்படி இன்னமும் இளமையாக இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தை விதைத்துச் சென்றார்.நம் தமிழ் நாட்டின் சமீப UNIFORM DRESSCODE  ஆன வயலட்&பிங்க் கலந்த சேலை. எழுதிக் கொடுத்த மொக்கையை இம்மி பிசகாமல் பேசினார்.ரசிகர்களின் குரலாக என அவர் ராஜாவிடம் ஏதோ சொல்லப் போகிறார் என நினைத்தால் யாரோ ஒரு பக்கி மதுரையில் உள்ள அரசரடி,தல்லாகுளம் இடங்களுக்கு எதுகை மோனை போட்டு எழுதிக் கொடுத்த குடும்பமலர் டைப் கவிதையை வாசிச்சுக் காண்பித்தார்.உஸ்ஸ்ஸ் ..அவன் மட்டும் கையில கிடைச்சான்....

பின்னால் உள்ள திரையில் சிவனை வைத்து நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என பாடல் ஆரம்பிக்கப்பட்டது.

ராஜா வரவுக்கு முன்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டுவரப்பட்டது அவரின் ஆர்மோனியப்பெட்டி தான்.ராஜா குரலில் ஜனனி ஜனனி பாடல்.அதன் பின்னணியில் திரையில் அம்பிகையின் திருவுருவம் மற்றும் பல காட்சிகள் பாடலுக்குப் பொருத்தமாக..அந்தப் பாடலில் கண்ணை மூடி அமர்ந்திருப்பாரே ஒரு சாது ..நிச்சயம் அது ராஜாவின் அந்தப் பாடலை உள்வாங்கி மனமார ரசித்தே அப்படி அமர்ந்து இருந்திருக்கக் கூடும்..அடுத்து பாடகர் விஜய் பிரகாஷ் ஓம் சிவோகம் இவரைப் பார்த்தால் நிழல்கள் ரவியின் சற்றே ஒல்லியாக மாற்றி வடிவமைக்கப்பட்ட version போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா?..பாடகர்கள் அனைவரும் பாடுவதற்கு முன்பு ராஜாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டுப் பாட ஆரம்பித்ததில் துளி கூட போலித் தனம் தெரியவில்லை.குருபக்தி..ஆனால் வேறு சிலர்,சுஹாசினி கவிதை(?i ) புகழ்ந்தே ஆகவேண்டும் என்று கழுத்தைப் பிடித்தது போலப் பேசியது ஏனோ கவரவில்லை.அவ்வப்பொழுது அவர்களின் அந்தப் பேச்சுக்கு சிரித்துக் கொண்டே ராஜா கொட்டு வைத்தது ரசிக்க வைத்தது :) உதாரணத்திற்கு போடா போடா புண்ணாக்கு (முற்றிலும் இந்தப் பாடலை எதிர்பார்க்கவே இல்லை..ராஜ்கிரணின் கிராமத்துப் படங்களுக்கு ரசிகையான என் அம்மாவுக்கு இந்தப் பாடல் நல்ல விருந்து  ) பாடலில் இடையில் பேசிய ஆண் குரல் ராஜா பாடலைக் கேட்டு கிராமத்து மக்களுக்கு உற்சாகம் என்று ராஜ்கிரண் வசனத்தோடு extra bit போட ,ராஜா"கிராமத்து மக்களுக்கு மட்டும் தானா..பேச வந்ததை மட்டும் பேசு..உண்மையைச் சொல் "என சிரித்துக் கொண்டே கூற அந்தப் பாடகர் பே ..பே ..பின்பு அந்த டயலாக் மட்டும் பேசி பாடலைத் தொடர்ந்தார்கள்.அம்மா என்றழைக்காத பாடலின் பின்னணியில் ராஜாவின் அம்மா புகைப்படம் திரையில் அடிக்கடி காட்டினார்கள்.இந்தப் பாடல் எல்லாமே இவர் இசையமைத்ததா என என் அம்மா விசாரித்துக் கொண்டார்.அடுத்து வந்த முந்தி முந்தி விநாயகனே பாட்டில் அந்தத் தவில் சத்தம் மட்டும் தனியா வந்து விழுந்தது..இந்த நிகழ்ச்சியில் ஒரு குறையாக நான் நினைப்பது KS .சித்ரா அவர்களின் குரல்  தான்.பாவம் பயிற்சி அதிகம் எடுத்தாரா அல்லது மனநிலை சரியில்லையா எனத் தெரியவில்லை.குரல் வழக்கம் போல இல்லை:( பல்லவியில் திணறி சரணத்தில் எப்படியோ சரி செய்து சமாளித்தார்.மாங்குயிலே பூங்குயிலே என அவர் பாடியதில் எல்லாமே எனக்கு இந்த எண்ணம் தான்.(ஒருவேளை டிவியில் கேட்கும் பொழுது இது தெளிவாகக் கேட்குமோ?) எதிர்பாராவிதமாக பாடகி பிரியா அசத்தினார்.

ஓ ..பிரியா பிரியா என அட்டகாசமாக ஆரம்பித்தார் மனோ..அப்படியே திசை மாறி இஞ்சி இடுப்பழகா பாட வைத்தார் ராஜா பிரியாவை.அப்படியே தாளம் மாற்றி நில்லாத வைகையில நீராடப் போகையில என மனோ எடுக்க ஒரே உற்சாகம்..மனோவும் பிரியாவும் மாறி மாறிப் பாடி இஞ்சி இடுப்பழகா பெண் குரலாக மனோவும் ஆண் குரலாக ப்ரியாவும் சில வரிகள் பாடியது செம அசத்தல்.மனோ ஜானகி அம்மா குரலில் ப்ரியாவை ஆசிர்வதித்தார்..சின்ன மாணிக் குயில் இல்ல சின்ன மணிஈஈ குயில் என சரியாகப் பாட வைத்தார் மனோவை.நிச்சயம் இதை டிவியில் மறுமுறை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.காற்றில் வரும் கீதமே பாடலில் வரும் ஸ்வரங்கள் "பாமரிக ரிக " ஹரிஹரன் சரியாக எடுக்காதது போல உணர்வு.பாடல் முடிந்ததும் ராஜா அதையே சொல்ல..அட..அந்தப் பாடலில் கவரும் இடம் அதுதான்.அதைத் திரும்ப பாட வைக்கப் போகிறார் என மனம் துள்ளிக் குதித்தது..ஆனால் அதற்குள் கார்த்திக் ராஜா sponsors க்கு ராஜா கையால் பொன்னாடை போர்த்த அழைக்க அது அப்படியே நின்று அந்த நிகழ்வு முடியவும் வேறு பாடலுக்குத் தாவியது பெரிய ஏமாற்றம் எனக்கு. சங்கீதத் திருநாளோ ,சொர்க்கமே என்றாலும் பாடல் வரிகள் மாற்றிப் பாடினார்கள்.அதிலும் சொர்க்கமே என்றாலும் பாடலை நிறுத்தி ராஜா சித்ராவைப் பாடு எனச் சொல்ல அவர் வழக்கம் போல ஆடுபுலியாட்டம் என ஆரம்பித்து பல்பு வாங்கினார் :) அது வேணாம்னு தானே வேற வரிகள் கொடுத்தேன் எனச் சொல்லி அந்த வரிகள் பார்வையாளர்களுக்கும் புரிய இசையை நிறுத்தி பாடிக் காட்டினார்.

மதுரையில் நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ "தென் மதுரை வைகை நதி" பாடப்பட்டது.(இசை அப்படியே இருந்தாலும் குரலோடு ஒன்ற முடியவில்லை) ஆயிரம் தாமரை மொட்டுக்களே  prelude ஆரம்பிக்கவும் ஆ..வென ஒரு உணர்வு..இதயெல்லாம் நேரா எப்போ பார்க்கப் போகிறோம் என எண்ணிக்கொண்டே ரசிக்க ஆரம்பித்தேன்.அமெரிக்காவிலிருந்து வந்த அனிதா கிருஷ்ணா ,சுரேந்தர் பாடினார்கள்.அவர்களின் best அவர்கள் கொடுத்தாலும் ஜானகியின் குரலில் இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று"புல்லரிக்கும் மேனி என புல்லரித்துப் போய் பாடியதும் SPB யின் அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும் "என்பதும் சட்டென நினைவில் வந்து போனது..திரும்ப இதுபோல ஒரு ஜோடி அமையுமா..ஏக்கமாகிப் போனது miss you ஜானகி அம்மா 

சரிகா...சரிசரிசரிசரிகா...என ராஜா எடுத்துக் கொடுக்க ..அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே என பாடல் ஆரம்பிக்க கூடவே சேர்ந்து பாட ஆரம்பித்தேன்.என் முன்பிருந்த அம்மா அப்படியே கண்ணிமைக்காமல் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்..அட..என கொஞ்சம் காலர் தூக்கும் போதே எனக்குப் பின்னிருந்த பெரிய திரையைத் தான் வேடிக்கை பார்க்கிறார் என உறைத்தது .அந்த இருட்டிலும் என் முகம் பிரகாசமாய் எரிந்தது:)  that moment 
என் அருகில் இருந்த பலர் stage இருந்த திசைக்கு எதிராக screen தெரியும் இடத்துக்கு நேராக திருப்பிப் போட்டு அமர்ந்தார்கள்.

நானோ screen ஐ அவ்வப்பொழுதும் பெரும்பாலும் stage ஐ எக்கி எக்கிப் பார்த்தேன்.கழுத்தே சற்று நீண்டுவிட்ட உணர்வு.அப்படியே சோர்ந்து நாற்காலியில் பின் சாய்ந்தால் "எனக்கு என் பாட்டு வேண்டும் என்ற பாலாவின் வேண்டுகோளுக்கு இணங்க கான கருங்குயிலே பாடலுக்கு தாரை தப்பட்டை கிழிய ஆரம்பித்தது.திரும்ப நிமிர்ந்து அமர்ந்தேன் :) ஒரு கல்லில் மூன்று மாங்காயாக கச்சேரி,IFC இனிதே துவக்கம்,கார்த்திக் ராஜா நீண்ட இடைவேளைக்குப் பின் இசையமைக்கும் "வாராயோ வெண்ணிலாவே "ஆடியோ லான்ச் ..ஆனால் பாலாவும்,பிரகாஷ் ராஜும் இங்கிதமாக தங்கள் படத்துக்கு விளம்பரம் அவ்விடத்தில் தேடாமல் அவர்கள் படத்துக்கு ராஜா இசையமைப்பதைத் தகவலாகச் சொல்லி சிலாகித்தனர்.மிஸ்கின்,பாலா சிநேகன் ,சுஹாசினி என எத்தனை பேர் பேசினாலும் என்னை முழுமையாகக் கவர்ந்தது பிரகாஷ் ராஜ்-ன் பேச்சு தான்.பிறருக்கு எப்படித் தெரியுமோ எனக்கு அவர் பாராட்டு பாசாங்கின்றி இயல்பான மரியாதையுடன் வெளிப்பட்டதாகவே உணர முடிந்தது.

பாடல்கள் பற்றி பல சுவராசியமான தகவல் எதிர்பார்த்தேன்.ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே வெகு நேரம் எடுத்துக் கொண்டதன் விளைவு,குறிப்பிட்ட நேரத்திற்குள்,விளம்பரதாரர்களை கௌரவித்தல் உட்பட அனைத்துப் பொறுப்புகளும் இருந்ததால் அந்தக் குறையைப் பொறுத்து புரிய முடிந்தது.நிறைய பாடல்கள் இன்னும் எதிர்பார்த்தேன்.(நமக்கு எவ்ளோ கொடுத்தாலும் போதாதுதான் ) நேரமின்மை.
இசை நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே ராஜா கையை உயர்த்தி "பிற இசை நிகழ்ச்சிகளில் செய்வது போல இங்கே விசில் அடிக்கவே கூடாது.அமைதியாக ரசிக்க வேண்டும்.என் இசைக் கலைஞர்களை மதிப்பது என்னையே மதிப்பது போல "குரலை உயர்த்தாத அதே சமயம் அழுத்தமாக சொல்லியதில் ஒரு தகப்பனின் கண்டிப்பு இருந்தது. அதன் பின்பு ஒரு விசில் சத்தம் கூட விழாமல் அமைதி காத்து ரசித்தார்கள்.சின்னத் தாயவள் பாடல் FLUTE ஆரம்பிக்க அருகில் இருந்தப் பெரியவர் "ஆரது ..அதான் விசில் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காருல்ல " என்றதும் சிரித்துக் கொண்டே அது பாட்டுலேயே வருது தாத்தா என்றதும் தான் அமைதியானார் .எங்களுக்கு முன்பு எவரையும் நின்று ரசிக்க பண்ணைபுரத்து மக்கள் விடவில்லை.அதனால் நன்றாகSTAGE தெரிந்தது.




"நீ தூங்கும் நேரத்தில் " ஹரிஹரன் படு சிறப்பாகப் பாடினார்.போலவே யுவனும் "போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி"என்னா பீட்ஸ்...ப்ப்பா :) ஒன்றே பாடினாலும் நன்றே செய்தார் யுவன்.

ராஜா நிகழ்ச்சி என்றாலே சில குறிப்பிட்ட பாடல்கள் தான் இருக்கும் என்பதை உடைத்து முற்றிலும் புதிதான பாடல் தேர்வு..அதைச் செய்தவர் திருமதி கார்த்திக் ராஜா..வாழ்த்துகள் அவருக்கு.200 பாடல்கள் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக குறைத்து 47 பயிற்சி செய்து அதிலும் சுருங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் சீக்கிரமே நிகழ்ச்சி ஆரம்பித்து இருந்தால் இன்னும் சில பாடல்கள் கொடுத்திருக்கலாம்.அடுத்த முறை கார்த்திக் ராஜா இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே போல பாடலின் ஒலித்தரம் பாராட்டும் படியாகவே இருந்தது.கண்ணை மூடிக் கேட்டால் பக்கா original தரத்தில் சற்றும் குறைவில்லாமல்.
சுஹாசினி அதிகம் பேசாதது ஒரு பெரிய ஆறுதல்:)

இசைக்கலைஞர்கள் அனைவரையும் ராஜா பெயர் சொல்லி அறிமுகம் செய்து கௌரவப் படுத்தினார்.புல்லாங்குழல் வாசித்தவர் அருண்மொழி என்றே நினைத்தேன்.நெப்போலியன் என்றார்(இருவரும் ஒரே ஆள் தானா?) குன்னக்குடி வைத்தியநாதன் மகனும் அவர்களில் ஒருவர்.அப்புறம் யார் அது ரவுடி பேர் என்ன என ராஜா கேட்டதும் ப்ரியாஎன்று பதில் வந்தது.எவ்வளவு செல்லமோ இந்தப் பெண் என ரசித்தேன்  அந்த அழைப்பை :) 

பாடல்களை நோட்ஸ் வைத்துக் கொண்டு பாட வேண்டியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டார் ராஜா.பாப் சாங் எல்லாம் நோட்ஸ் வச்சுகிட்டா பாடுறாங்க நாமதான் இப்படி பாட வேண்டி இருக்கு..அது சரி அவங்கல்லாம் ஒரே  பாட்டை பாடுறாங்க என்று சந்தில் சிந்து பாடினார் :) அவ்வப்பொழுது அம்மாவையும் பார்த்துக் கொண்டேன்.MSV காலத்து ஆள் இந்த நிகழ்ச்சிக்கே என் வற்புறுத்தலின் பெயரிலியே வந்தவர் என்ன மனநிலையோ என்று பரிதவிப்புடன் பார்த்தேன்.ஆறும் அதுவும் ஆழமில்லை,ராஜாவின் அந்த தாங்கிடதத்த தரிகிட தத்த வீட்டுக்குவீடு பாடல் யாவும் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.

தாங்கிடதத்த தரிகிட தத்த வரிகளை தம் கட்டிப் பாடி தவறு செய்ததாக ராஜாவே சொல்லும் வரை கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படித் தவறு செய்யப்பட்டது என சொல்லியும் காட்டினார் :)
என் பின்னே ஒரு வாண்டு பாப் கார்ன் வேணும் என அழ,  கையில் வைத்திருந்த முறுக்கைக் கொடுத்து சமாதானம் செய்தார் என் அம்மா ..அன்னபூரணி :) நிகழ்ச்சிக்கு இடையே இந்த வாண்டுகள் தான் அழிச்சாட்டியம்..ஒரு வாண்டு வலது புறக் கடைசியில் இருந்து இடது புறக் கடைசியில் உள்ள அதோட அம்மாவின் கைகளுக்கு இடையில் அமர்ந்திருந்தவர்களால் கை மாற்றி கை மாற்றி கடத்தப்பட்டதை வெகுவாக ரசித்தேன்.படக்கென பிடுங்கி கொஞ்சம் கடிச்சு வச்சிருக்கலாம்..ஒரு இடத்துல உட்கார்ந்தா என்னவாம் ?:)

அட்டகாசமான ஒலித்தரத்தில் இந்த நிகழ்ச்சியிலேயே சிறந்தது என நான் நினைப்பது அச்சு அசலாக உமா ரமணனின் குரலிலேயே வந்த ஆனந்த ராகம் பாடலைத்தான்.வயலின் என்னவோ இது தனக்கான பாடல் என ஆர்ப்பரித்து முழங்கியது.

இது போன்ற தருணத்தில் நம் அலைவரிசைக்கு ஒத்தவர்கள் அருகில் இருந்தால் அந்த சுகமே தனி.குறைந்தபட்சம் மொபைல் வேலை செய்திருந்தாலாவது எண்ணங்களைப் பகிர்ந்திருக்கலாம். இரவு வீடு வந்து ட்விட்டரில்  பறவை&லதா மகனின் ட்வீட்ஸ் முழுக்க வெகுவாக ரசித்தேன்.
ராக்கம்மா கையத் தட்டு பாடலும் அந்த பிரம்மாண்ட அரங்கம் முழுக்க அனைவர் மனத்திலும் அடி வரை சென்றிருக்கும்.குற்றம் குறைகள் இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று கார்த்திக் ராஜா கேட்டுக் கொண்டார்.அதற்கு ராஜா கொடுத்த நதி நீர் விளக்கம் திரையில் பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள் :)

கூட்டம் மொத்தமாக வெளியேறும் பொழுது வரும் தள்ளுமுள்ளுவில் இருந்து தப்பிக்கவும் நேரம் கருதியும் கடைசி 15 நிமிடங்கள் மனதே இன்றி வெளியே கிளம்பினோம்.தண்ணித் தொட்டி பாடலும்,என்கிட்டே மோதாதே பாடலும் படு உற்சாகமாய் பாடப்பட்டது.

நான் ரசித்ததை விட ,60 வயது அம்மாவையும் ரசிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞரை மற்றும் ஒரு பிரம்மாண்டமான மேடையில் SPB யுடன் பார்க்கும் ஆசையைச் சுமந்து வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள் காலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பொழுது காற்றில் இருந்து வந்த "அடி வான்மதி"பாடல் முதல் நாள் நிகழ்ச்சியில் ஒருவரால் சொல்லப்பட்ட ஒரு கருத்தை நினைவூட்டிச் சென்றது.
அது ==> "ராஜா அவர் பசங்களுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்காரோ இல்லையோ நிச்சயம் தமிழ்நாட்டுக்கு ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்காருய்யா :) "

கானாபிரபாவுடன் இந்த அனுபவம் பற்றி ஒரு உரையாடல் :)
பாடல்கள் பட்டியல்