Sunday, July 28, 2013

#365RAJAQUIZ ஒரு நினைவலைகள் ..!

ட்விட்டர் @Rexarul

நடத்திய #365RajaQuiz ஐ கௌரவிக்கும் பொருட்டு என்னாலான  என் மனம் திறந்த பதிவு .இந்த நெடிய பயணத்தில் அவ்வப்பொழுது நானும் உடன் வந்திருக்கிறேன் என்பதே எனக்குப் பெருமையாக இருக்கின்றது .என்ன ஒரு சமர்ப்பணம் மாஸ்டர்… மாஸ்டர் என்ற வார்த்தைக்கு முழுக்க பொருள் சேர்த்திருக்கின்றார் . நிச்சயம் ராஜா மட்டும் இவரின்  இந்த அர்ப்பணிப்பான அவருக்கு ஒரு பைசா பிரயோசனம் இல்லாத பொழுதும் காரியத்தை செய்ததை அறிய நேர்ந்தால் மனிதர் புல்லரித்துப் போகக் கூடும் இப்படி ஒரு ரசிகரை நினைத்து.. எத்தனையோ ராஜா ரஹ்மான் சண்டைகளை இந்த ட்விட்டர் பார்த்து இருக்கின்றது. ஆனால் மாஸ்டரைப்  போன்ற ஒரு ரசிகனை பார்ப்பது அபூர்வம் என்று எந்த இசையமைப்பாளரை ரசிக்கும் இதயம் சொல்லும்.. நிச்சயம் ஒரு பொறாமை கூட வரும்..

பலரின் ரசிகர்கள் அவர்கள் ரசிக்கின்ற விதத்தில் குருட்டுத் தனமான பற்றுதலில் அவர்களின் ரசனை,ரசிப்பவர்கள் மீதே வெறுப்பே வரும்.அதில் நடிகர்களுக்கோ அல்லது இசையமைப்பாளர் ரசிகளுக்கோ இருக்கும் ரசிகர்கள் பெரும்பாலோனோர் விதிவிலக்கே அல்ல.ஆனால் மாஸ்டர் அவர்களில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றார். ஒரு பாடலை ரசிப்பதற்கு அவர் வைக்கும் ஆழ்ந்த காரணங்கள் அதை அவர் ரசித்துச் சொல்கின்ற விதம் நிச்சயம் பலரை அவர் வசப்படுத்தி வைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

இலவசம் அவர்கள் குறிப்பிட்டது போல எவ்வளவு விஷயங்கள் எத்தனைப் பாடல்கள் ..நான் நிறைய பாடல்கள் டௌன்லோட் செய்து வைத்திருக்கிறேன் ஆனால் அவர்  இசைத்துணுக்கில் இருக்கும் க்ளாரிட்டி சத்தியமாய் இராது..அவ்வளவு அருமையாக ஒலிக்கும். ஆச்சர்யமாக இருக்கும்..எனக்கு பல நேரத்தில் ஒரு ஆகச் சிறந்த மன அழுத்த விடுதலை செய்யும் அம்சமாக இந்த #365RajaQuiz இருந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.அதனால் தான் நிறைவு தினத்தில் எந் த ஒரு திட்டமிடலும் இன்றி வந்தவுடன் மனதில் இருப்பதை படபடவென எழுதுகின்றேன்.@vrsaran . @RagavanG போன்ற நல்ல நண்பர்களைப் பெற்றுத் தந்ததுவும் இந்த #365RajaQuiz  தான் .

நீண்ட நாட்களுக்குக் பிறகு , ஒரு கண்டிப்பான அதே சமயம் தெரியாமல் முழிக்கின்ற நேரத்தில் தட்டிக் கொடுத்து கண்டுபிடிக்க வைக்கும் அருமையான வாத்தியாரும் , நான் திருதிருவென விழிக்கும் பொழுதெல்லாம் . எக்ஸ்ட்ராவாக க்ளூ கொடுத்து எனக்கு உதவி செய்யும் நண்பர்களுமாய் ஒரு பள்ளிக் காலத்தை கழித்தது போன்ற உணர்வு..திரும்ப ஒரு பயணத்தில் இணைவேனா தெரியாது.ஆனால் நிச்சயம் இதை மறக்கவே மாட்டேன் :) மாஸ்டரின் பதிவுக்கு அருமையாய் ரசித்து பின்னூட்டமிடும் பிரசன்னா போன்றோர் இன்னும் இதை அழகாக்கி இருக்கின்றார்கள்.

தெரியாத பாடல் என்றால் விட்டு விடுவதுண்டு.தெரிந்த பாடல் என்றால் திரும்பி அவர்  அடுத்த பதிவு போடும் வரை மண்டை காய்ச்சல் தான் . பல நல்ல பாடல்களை அறிமுகம் செய்ததற்கு நன்றி :) (ஒரு போக்கிரி ராத்திரி , ஒரு கானம் அரங்கேறும் இப்படி பல..அதே போல பல பாடல்கள் பிடித்திருந்தாலும் கேட்டு நெடு நாளாகி இருக்கும்.அவை அவர் அறிமுகம் செய்கின்ற விதத்தில் இன்னும் மெருகேறி இன்னமும் இன்னமும் பிடிக்கும். உதாரணமாக மேகம் மேகம் போகும் போகும் மேஜிக் ஜர்னி , வானமென்ன கீழிருக்கு ,அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா ,,மலேசியா ,சொர்ணலதா போன்ற பாடகர்களின் தனித்திறன் அறியப் பெற்றது மாஸ்டரைப்  போன்றோர் இங்கே பாடல் அறிமுகப் படுத்தி அதை ஒரு விவாதமாக்கும் பொழுதில் தான் .சொக்கன் சார் சொன்னது போல இதில் ராஜாவே பங்கு பெற்றிருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்ததுண்டு.ஆனால் அவர் மாஸ்டர் கொடுக்கிற க்ளூவை வச்சுப் பார்த்தா நிச்சயம் குழம்பிடுவார் என்னைப் போலவே :)

தலைப்பிலேயே க்ளூ வைக்கின்றார்  என்பதே ராமன் அப்துல்லா படப் பாடலை புதிரில் வச்சப்போ தான் தெரிஞ்சுது என்றால் நான் எவ்ளோ ட்யூப்லைட் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளவும் :) அப்புறம் அவர்  சொல்லும் வானொலி க்ளூ மண்டை காயும் .நேரில் கிடைத்தார் என்றால் எத்தனை பாட்டு சார் வானொலி ல கேட்டீங்க என்று ஒரு உலுக்கு உலுக்கனும் போல தோணும் :) தப்பிச்சுட்டார் :) 
வாய்ப்பே இல்லை மாஸ்டரைப் போன்ற ஒருவர்..

எப்பவும் அண்ணனிடம் திட்டு வாங்குவேன்..ஆனால் அவர்  இசைத் துணுக்கை ஓட விட்டு எங்க அண்ணனையும் யோசிக்க விட்டு மண்டை காய விடுவதில் ஒரு தனி ஆனந்தம் :) )

மானுத் தோலு ஒண்ணு மஞ்சக் கிழங்கு ஒண்ணு பாடலுக்கு அவர்  கொடுத்த இசைத்துணுக்கு அம்மன் கோவில் வாசலிலே பாடலுக்கும் கொஞ்சம் ஒத்து வரும் ..அதே போல பாரி சாத பூவே,நான் சிரித்தால் தீபாவளி இரண்டு பாடல்களில் interludes ..வாவ் இந்த ராஜா என்ன என்ன மேஜிக் செய்திருக்கிறார் என்று மாஸ்டர் மூலமாக இன்னும் அறிந்தேன்.அதே போல ஷெனாய்க்கும் நாதஸ்வரத்துக்கும் வித்தியாசமே தெரியாது.ஆனால் மாஸ்டர் கொடுக்கிற க்ளூ வச்சு இது இன்ன இன்ஸ்ட்ருமென்ட் என்று தெரியும்…ரியலி ஹேட்ஸ் ஆஃப் மாஸ்டர் :)

அள்ளித் தந்த வானம் பாடல் என்ன படம் என்றே கண்டுபிடிக்க முடியாமல் ட்விட்டர் டைம் லைனில் நான் திணற கானாபிரபா sundar 140 என்று பலரும் க்ளூ கொடுத்தும் அந்த "கடல் நண்டு"எனக்கு சிக்கவே இல்லை :) இறுதியில் ஒரு இருபது பேராவது என்னோடு மண்டை காய்ந்து அந்தப் பாடல் என்னவென்று எனக்கு சொல்லித் தந்து விட்டுப் போனார்கள் :)ஆனால் பொதுவில் க்ளூ வைத்து விவாதிப்பது புதிரை நீர்க்கச் செய்யும் என மாஸ்டர் மென்மையாக கண்டித்ததால் அத்தோடு டைம் லைனில் விவாதிப்பது கிடையாது. 

மாஸ்டர் முதல் நாள் கொடுத்த பாடலையே கண்டுபிடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்போம் நானும் @amas32 அம்மாவும்..ஆனால் மிஸ்டர் முசகுட்டி @vrsaran அடுத்த பாடலுக்கு மாஸ்டர் ப்ளீஸ் செக் டிம் என் விடை சரிதானா பார்த்துச் சொல்லுங்கள் எனும் பொழுது முதல் பெஞ்ச் ல உட்கார்ந்து முந்திகிட்டு பதில் சொல்வோர் மீது ஒரு ஆதங்கம் வருமே அது போல வரும்.
அதுக்குள்ள என்ன அவசரம் என்று தலையில் கொட்டி விடத் தோன்றும் :) ஆனால் அவரை விட @yezhara இன்னும் சிலர் பல பதில்களை மிகச் சரியாக ஊகித்து முதல் இடத்தில் இருப்பதைப் பார்த்தால் மலைப்பாகவே இருக்கும்.

எந்த ஒரு விசயத்தையும் வெறும் நுனிப்புல்லாக மேயாமல் மனதிற்குப் பிடித்த விசயத்தை ஆழ்ந்து அதில் தேர்ந்த அறிவு பெறுவது எப்படி என்று இங்கே மாஸ்டர் @rexarul ,@nchokkan ,@kryes @kanapraba இன்னும் சிலரிடமும் கற்றுக் கொள்ளலாம்..விரல் நுனியில் வைத்திருப்பார்கள் சேதிகளை.
எத்தனை பஞ்சாயத்துகள் ட்விட்டரில் ஓடினாலும் #365Rajaquiz இந்த ஒரு வருடத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம் என்றே நினைக்கின்றேன்.

ஊரடங்கும் சாமத்திலே ,காதல் மயக்கம்  இன்னும் பல பாடல்கள் இந்த #365Rajaquiz ஆல் மறக்க முடியாத ஒன்றாகிப் போனது.

மொத்தத்தில் ஒரு அருமையான சுகானுபவம் இனிமையான பயணம் இந்த #365Rajaquiz .
மாஸ்டர் @rexarul -ன் அர்ப்பணிப்புக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!!

Wednesday, July 17, 2013

தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா !

நம்ம ட்விட்டர் @RavikumarMGR புதன் மாலை 5 மணிக்கு தியாகராஜா கலைக் கல்லூரிக்கு இளைய ராஜா வருகை தருகிறார் அவசியம் செல்லுங்கள் என்று மென்சன் போட்டார். விஷயம் ஆச்சர்யம் என்றாலும் உள்ளே விடுவார்களா என்று அசுவராசியம்.ஆனால் எளிதாக பார்க்கலாம் என்றும் சொல்லவே சரி போகலாம் என்று ஒரு சபலம். ஆனால் நான் ஒரு மறதி கேஸு தயவு செய்து அந்த நேரத்தில் நினைவு படுத்துங்க என்றதும் மொபைல் ரிமைன்டர் வைக்கச் சொன்னதும் வைத்திருந்தேன்.(இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல என்று சொக்கன் தன் மைண்ட் வாய்ஸ் பதிவும் செய்து விட்டார் :) ) அதே போல மறந்தும் விட்டு தூங்கி எழுந்ததும் ரிமைன்டர் NOTIFICATION காட்டியது.சுத்தம் ..

அரக்க பறக்க ஒரு கலர் சுடு தண்ணியை அதான் காப்பி (நானே போட்டா அப்படித்தான் இருக்கும்)விழுங்கிட்டு அந்த டம்ளரை தூக்கி எறியாத குறையா வச்சுட்டு இரண்டு ஷேர் ஆட்டோ மாறிப் பயணித்தேன்.  எப்படியும் நம் தமிழ்க் குல வழக்கப்படி 5 மணி விழா ஆரம்பம் என்றால் 6 மணிக்குத் தான் ஆரம்பிப்பாங்க.காலம் காலமா அதானே சம்பிரதாயம்.அந்த நம்பிக்கையில் அங்கே சென்றடைந்தேன்.என்னை ஏமாற்றவில்லை.  5.50 க்குத் தான் ஆரம்பித்தார்களாம்.பத்து நிமிடம் தான் ஆகுதுன்னு பக்கத்துல இருக்கிற பொண்ணு சொல்லவும் தான் நிம்மதி :)

ஒரு கல்லூரியின் தனிப்பட்ட விழா என்பதாலோ என்னவோ மதுரையில் எந்த இடத்திலும் ஏன் கல்லூரிக்கு அருகில் கூட வரவேற்பு பேனரைக் காணோம். முழுக்க கல்லூரி மாணவர்களால் மட்டுமே அரங்கம் நிறைந்து வழிந்தது.அதிலே ஒருவராக சத்தமில்லாமல் உள்ளே சென்று அமர்ந்தேன்..(ஹி ஹி ..இப்பவும் காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான் இருப்பேன் என நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்   என்பதற்காகவே   இது :) 

 பேராசிரியர் ஞான சம்பந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் .அவர் பேசுவதில் என் கவனம் செல்லவே இல்லை .  பல அடிகள் தூரத்தில் இருந்து ராஜாவை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்..  மெலிந்த தேகம் தும்பைப் பூவாய் வெள்ளை வேட்டி சட்டை கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலையுடன் மைக்கில் பேசுபவர்களை புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.. மேடையையும் அருகே வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சி நேரலையையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  எழுத்தாளர் சுகா அவர்கள் மூலமாக ராஜாவை இந்நிகழ்ச்சிக்கு வரவழைத்திருந்தார்கள் .தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா . ராஜா சிறப்பு விருந்தினர் .

என்ன ஒரு ஆச்சர்யம் அரங்கத்தில் இந்த மாணவ மணிகள் அமைதியா உட்கார்ந்து இருக்கே என்று .  நான் வேடிக்கை பார்ப்பதற்கும் உலை வைப்பது போன்று நடு மத்தியில் ஒருவர் நின்று கொண்டார்.அருகே சென்று சார் தெரியல என்றேன்.  அதுக்கென்ன செய்யறது நான் இங்கிருந்து நகர்ந்துட்டா பசங்க ரொம்ப கத்துவாங்க என்றார் .  வேறு வழியின்றி வேறு பக்கம் நகர்ந்து அமர்ந்தேன்.ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியல அங்கிருந்து வெளியேறி அடுத்த பக்கம் போயிட்டார்.  அப்பத் தான் அவர் சொன்னது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது.  ஏகப்பட்ட சலசலப்பு.அவர்களுக்கு சினிமாத் துறையைச் சார்ந்த ஒருவரைப் பார்க்கிறோம் என்ற பெருமை தானே தவிர அங்கே இருக்கும் சுகா பற்றியோ இளையராஜா பற்றியோமுழுவதும் அறிந்தவர்கள் இல்லை.  மேலும் அவர்கள் வயது அதற்கு அனுமதிக்கவும் இல்லை.  ஆனால் இளையராஜா பற்றி ஆச்சர்யத் தகவல்கள் அங்கே பேசுபவர்கள் பகிர்ந்த பொழுது எவரும் சொல்லாமலே உற்சாகத்துடன் கை தட்டினர் .

சுகா பேசும் பொழுது மட்டும் அந்த சலசலப்புக்கு இடையே முடிந்தவரை கூர்ந்து கவனித்தேன். மிகத் தெளிவான பேச்சு, அருமையான தமிழ் உச்சரிப்பு அழிந்துவரும் நாட்டுப்புற இசை,வாத்தியங்கள் பற்றி நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "நிகழ்ச்சிக்கு வருகிறேன் ஆனால் இசை பற்றி எனக்கென்னயா தெரியும்?"   என்றாராம் ராஜா (ஙே ..அவருக்கு தன்னடக்கம்ன்னா என்னன்னே தெரியாதுன்னாங்க யாரோ) எழுபதுகளில் தமிழ் நாட்டில் இந்திப் பாடல்கள் படங்கள் மீதான மோகம் அதிகம் இருந்தது எனவும் அது அத்தனையையும் உடைத்து தமிழிசை கேட்க வைத்தவர் ராஜா என்பதை சுகாவும் ஞான சம்பந்தரும் நினைவு கூர்ந்தனர். இந்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைத் தமிழ்ப் பாடல் கேட்க வைத்தவர் ராஜா இந்திக் காரர்களையே கேட்க வைத்தவர் ரகுமான் (அடக் கிரகமே ட்விட்டர் புத்தி அங்கயும் இப்படி யோசிக்க வைத்தது :) ) சுகாவை அறிமுகம் செய்த பொழுது எழுத்தாளர் ,படித்துறை என்ற படத்தின் இயக்குனர் என்று சொன்னார் ஞான சம்பந்தன். (படித்துறை படம் ரிலீஸ் எப்போ?நிறுத்தப்பட்டது என்று சொன்னாங்களே )இளைய தலைமுறை தொலைக் காட்சிகளில் அடங்கி விட்டீர்கள் .  இயன்றவரை அழிந்துவரும் நாட்டுப் புறக் கலைகளை மீட்டெடுக்க நம்மால் ஆன முயற்சிகள் எடுக்க வேண்டும்  நாதஸ்வரம் கச்சேரி போன்றவற்றை நம் வீட்டில் வைத்து அக்கலையை வளர்க்க இயன்ற அளவு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் ஆதங்கமுமாக முடித்தார் சுகா .  சிறுவயதில் எங்கள் கிராமத்தில் கல்யாண வீட்டிலும் சரி ,கருமாதி வீட்டிலும் சரி நிச்சயம் நாதஸ்வரம் இருக்கும்.தமிழ் சினிமாப் பாடல்களை மிக அழகாக வாசிப்பார்கள்.அதையெல்லாம் பார்க்கும் கொடுப்பினை வரும் தலைமுறைக்கு இல்லை என்று சுகா கவலைப்பட்டதிலும் ஒரு அர்த்தம் இருக்கின்றது.

இந்த பேச்சுக்கிடையில் எங்கெல்லாம் எனக்கு முன்பு இடம் காலியாகிறதோ அங்கெல்லாம் நகர்ந்து நகர்ந்து முன்னே உட்கார்ந்தேன்.  இறுதியில் ராஜா பேச வருகிறார் எனும் பொழுதே ஒரே கைதட்டல் தான். காலையில் மீனாட்சியை தரிசித்து விட்டு வந்ததும் இப்பொழுது கோவில் சுத்தமாக இருப்பதையும் சொன்னார்.  சிறு வயதில் தியாகராஜா கல்லூரி எதிரே இல்ல தெப்பக்குளத்தில் சுற்றிய நாட்களையும்  .கல்லூரி நாடகத்திற்கு இசை அமைத்தது உட்பட சின்னச் சின்ன விசயங்களை நகைச்சுவையோடு நினைவு கூர்ந்தார். இயன்றவரை முன்னிருப்பவர்கள் அமைதி காக்க பின்னாடி இருக்கும் மாப்பிள்ளை பெஞ்ச் அட்டகாசம் தாங்க முடியல. அதிலும் பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கூட்டத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் பறந்தது. ராஜா பேசுவதைக் கேட்க மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்தது.  பெண்களைக் கவர அவர்கள் கமெண்ட் அடிக்க இங்க பெண்கள் பக்கம் இருந்து அவர்கள் எதிர்பார்த்தது போன்றே கிக்கிக்கி ரெஸ்பான்ஸ். பொறுமையை இழுத்துப் பிடிப்பது மிகச் சிரமமாக இருந்தது எனக்கு.  வேறு வழியின்றி எனக்கு அருகே அந்த பக்கம் அமர்ந்திருந்தவன் கமெண்ட் அடிச்சுட்டு இந்தப் பக்கம் பார்க்கும் பொழுது ஒரு அருவெறுப்பான பார்வையை உமிழ்ந்தேன்.அவன் காதுக்கு மட்டும் கேட்கும் படி லூசா நீ என்றேன்.அத்தோடு அடங்கினான்.(யார்ரா இந்தப் பக்கின்னு நினைச்சிருப்பானோ ?:) 

நேரலையில் அருகில் இருந்த டிவியில் யாரோ ஒரு அம்மணியைக் காட்ட ஒரு கூட்டம் மட்டும் திடீர் கைதட்டல்.  ராஜாவுக்கே குழம்பி இருக்கும் , 
இசையின் மகத்துவத்தை சுருக்கமாக விளக்கி இசையை ஒரு கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்தார் .  கல்லூரி முதல்வர் தமிழக அரசுடன் பேசி இதற்கு தக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. இசையால் லயித்த மனத்தில் வன்முறை குறையும் என்பதையும் சொல்லி இறுதியாக இதயம் ஒரு கோவில் என்று ஆரம்பித்ததும் ஹே என்று கூட்டத்தோடு கூட்டமாக கத்தியதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது :) எனது ஜீவன் நீதான் என்று முன்னிருந்த கூட்டம் நோக்கிப் பாட அரங்கமே அதிர்ந்தது கைதட்டலிலும் உற்சாக கூச்சலிலும் :) அவர் பேசியதும் கிளம்ப யத்தனித்தவர்களை நன்றியுரை மற்றும் தேசிய கீதம் ஒலித்த பின்பே நகர வேண்டும் என்று ஞான சம்பந்தர் கேட்டுக் கொண்டார்.

நன்றியுரையில் பேசியவர் தமிழிசை பத்தி  என்ன தெரியும் என்று ராஜா கேட்டது ஏழு பிள்ளை பெத்தவ ஒத்த பிள்ளை பெத்தவளிடம் அனுபவம் கேட்பது போல .இசையே நீங்கள் தான் ஐயா என்று பேசி கோவையைச் சேர்ந்த முத்துச் சாமி என்பவர் DTS தரத்தில் ராஜா இசையைத் தருவதாக பகிர்ந்து அமர்ந்தார் .  தேசிய கீதம் ஆரம்பித்ததும் நான் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் மேடையில் இருந்து ராஜா இறங்கிச் செல்லும் வழியில் அவரின் கார் அருகே சென்று நின்று கொண்டேன் .  எப்படியும் அருகில் பார்க்க வேண்டும் என்று.தேசிய கீதம் பாடும் பொழுது அசையவே கூடாது என்று பள்ளி சொல்லிக் கொடுத்த பாடமெல்லாம் போயே போச்சு. இறுதியில் சுகா அழைத்து அவரை காரில் ஏறும் வரை கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுகாவையும் ராஜாவையும் அவ்வளவு அருகில் பார்த்தும் கூட ஒரு வார்த்தை கூட வாயில் இருந்து வரல . கம் போட்டு ஒட்டிக் கொண்டது போல் ஆகி விட்டது :)

நடிகர் நடிகைகள் மீதிருந்த ஈர்ப்பு இசையமைப்பாளர்கள் மீது சிறு வயதில் இருந்ததே இல்லை . இசை எவரேன்றே தெரியாமல் நான் கேட்ட பாடல்கள் இன்றளவும் எனக்கு இனிக்கவே செய்கின்றன.நினைத்த மாத்திரத்தில் அழவும் சிரிக்கவும் செய்த பால்யத்தைக் கடந்த நாளில் இருந்து எனக்குள் ஒரு தனிமையை உருவாக்கிக் கொண்ட நாள் முதல் இசை மட்டுமே எனக்கு அதிகம் துணையாய் இருந்திருக்கின்றது.  அதில் அதிகம் ராஜாவின் பாடல் கலந்தே இருக்கின்றது.  அவ்வளவே எனக்கும் அவருக்குமான தொடர்பு.

இளையராஜாவைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததே இல்லை.  இசை நிகழ்ச்சியை நேரலையாக ட்விட்டரில் நேரலையாக ட்விட்டர் நண்பர்கள் ஒளிபரப்பும் பொழுது உள்ளே எப்பொழுது இதையெல்லாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்றொரு ஏக்கம் வந்ததுண்டு.   எதிர்பாராத விதமாய் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் ரவிக்குமார் MGR க்கு நன்றி :))

ஒரு பூரண மன நிறைவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்து ஷேர் ஆட்டோவில் அமர்ந்த பொழுது பண்பலையில் இருந்து "கற்பூர முல்லை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று" பாடல். கலந்தாடக் கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் என சுசீலா பாடியதும் கண்களில் ஈரம் எவருமறியாமல்.  அந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட அங்கே பரபரப்புடன் சென்று கொண்டிருந்த மக்களுக்கு ராஜா எங்கிருக்கிறார் என்று தெரியாது.  அவர் வந்து போனதையும் அறிந்திருக்க முடியாது. ஆனாலும் அம்மாமனிதர் அம்மக்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் .  இசையை மலராய் நாளும் சூட்டிக் கொண்டு .

மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா ... பின்னாளில் எனக்குப் பிறக்கப் போகும் என் செல்ல மகளுக்கு கருவிலேயே இப்பாடலை அறிமுகம் செய்து வைப்பேன்.

இதயம் ஒரு கோவில் பாடி முடித்ததும் "இதை நான்  பாடி இப்பவே மறந்துடுவேன் ஆனால் உங்க காதுகளில் ஒலித்துக் கொண்டே தானிருக்கும் உங்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காது " என்று ராஜா உறுதியாகச் சொன்னது  இப்பொழுது நிஜமாகியது .ஆட்டோ என்னை இறக்கி விட்டுச் சென்று வெகு நேரம் ஆகியும் இதோ இந்த நொடி வரை "கற்பூர முல்லை ஒன்று "