குழந்தைக்கே "குழந்தையா?"
என்கிறாய்புசித்தது அனைத்தும்
வெளியேறி
நான் மயக்கத்தில் விழ
நான் அறியாமல்
மனமின்றி
நீயும் விரதமிருக்கிறாய்
கவனமுடன்
எனக்குரிய உணவுகளை
நீ குறித்துக்கொள்கிறாய்
தூக்கத்தில் என்
ஒவ்வொரு அசைவுக்கும்
துயில் கொள்ளாமல்
நீ அசைகிறாய்
கருவில் இருக்கும்
சிசுவை வாங்கி
சற்றே இளைப்பாற்றிக்கொள்ள
தவிக்கிறாய்
உன் விரல்களோடு
கோர்த்து நடைபயில
கற்றுக்கொடுக்கிறாய்
ஒரு நாள் நடுஇரவில்
பசித்தது
என்றதற்காக
தினமும் பசியாற்றுகிறாய்
வளைகாப்பில்
சிரித்தபடி
அமர்ந்திருக்கும்
என்னை
தள்ளிநின்று கைகட்டி
ரசிக்கிறாய்
பிரியவிரும்பாது
மறுநாளே
வந்து அழைத்துச் செல்கிறாய்
என் தவறுகளை
கடித்த பற்களுக்கிடையே
அடக்குகிறாய்
சிசுவின் அசைவை
சிறுபிள்ளை போல
நான் சொல்வதை
மடியில் தலைவைத்து
ரசித்து உணர்கிறாய்
சற்றே முகம் மாறினாலும்
வலி தானோ என
முகம் வாடுகிறாய்
அருகிருந்து
தலைகோதி
பிரசவத்தின்
ஒட்டுமொத்த வலியையும்
நீ பிரசவிக்கிறாய்
என் "தாயுமானவன்"நீ
No comments:
Post a Comment