Sunday, October 4, 2015

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..

பாடல் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
படம்    : கோபுர வாசலிலே
பாடலாசிரியர் : பிறை சூடன்
இசை : இளையராஜா

இந்தப் பாடல் பற்றி உங்களுக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை..ராஜாவின் டாப்  பட்டியலில் எப்படியும் பத்துக்குள் வந்துவிடும் .இந்தப் பாடல் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது எனது ஹெட்போன்..அதிலே கேட்கும்போது தான் இப்பாடலில் ராஜா கொடுத்த விருந்து ,இசை ஜாலங்கள் சின்னச் சின்ன நுணுக்கங்கள் எல்லாம் புரிபட்டன..எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் எனக்கு இந்தப் பாடல் இன்னமும் புத்துணர்ச்சியோடு புதிதாகவே உணர வைக்கின்றது..காரணம் இசை.எவ்வளவு வாத்தியக் கருவிகள் பயன்படுத்தி அதை எத்தனை அடுக்குகளாக வைத்து ஒரு RICH ORCHESTRATION கொடுத்திருக்கிறார் ராஜா என்ற ராட்சசன்.. எத்தனையோ இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிறோம் தான்.மறுப்பதற்கில்லை.. ஆனால் அவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி தனித்தன்மையோடு காட்டுபவை இவை போன்ற பாடல்களே..

எங்க...ஒன் .....டூ...த்ரீ...
எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅஅ அட்

பெண் என்பவள் அவ்வளவு எளிதில் காதலைச்சொல்லிவிட மாட்டாள்..அவளைத் தூண்டி உள்ளிருக்கும் காதலை இப்படி சத்தமாக வெளிப்படுத்துவதைச் சாத்தியமாக்கிய சிரிப்புடன் கார்த்திக் ,சொல்லிவிட்டு வெட்கிச் சிரிக்கும் அப்பெண்(பேர் சுசித்ரா வாம்..பாடல் இருக்கும் வரை இவரும் நினைவில் இருப்பார் )  என்று அப்படியே அந்தக் காட்சி மனதில் நிறைக்க,  அந்த ஆனந்தத்தை , உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இசை..

மனசுல பட்டாம்பூச்சி பறப்பது மட்டுமல்ல மனமே பட்டாம்பூச்சியாகி பறந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிறது அந்த வயலின் இசை..மெலிதாக ஆனந்தப் பிரவாகத்தை , ஆர்ப்பரித்து மேலெழும்ப வைக்கும்.
இந்த வயலினைத் தொடர்ந்து பீட்ஸ் ஆரம்பிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள் சில் சில் என்ற ஓசை வெகு வெகு மெலிதாக ஒவ்வொரு காதிலும் மாற்றி
மாற்றிக் கேட்கும். இது வீடியோவில் கேட்பதில்லை.. அந்த பீட்ஸ் தொடர்ந்து
புல்லாங்குழல் ..அதுவும் இரண்டு விதமாக ஒலிக்கும்..முதலில் தொலைவில்
இருந்து ஒலிப்பது போலவும் அடுத்து நெருக்கமாக ஒலிப்பது போலவும்
இருக்கும்.அப்படியே நின்று அடுத்து மணி மங்கள ஒலி எழுப்பும் .  அந்த மணி ஓசையின் போது அந்த சில் சில் நின்றுவிடும்..பின் SPB ஆரம்பிக்கவும் திரும்ப வந்து இணைந்து கொள்ளும்.

பாருங்கள்..ஒரு சில நொடிகளுக்கான PRELUDE க்கு எவ்வளவு மெனக்கெடல்..எத்தனை இசைக் கருவிகள் அதில் எத்தனை ஜாலங்கள்..இது பாடல் முழுக்கத் தொடர்கின்றது..SPB பாட இடையில் தொடர்கிறார் சித்ரா..இது படத்தில் சின்னக் கவிதையாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்..கார்த்திக் பாடிக்கொண்டிருக்கும் போதே மைக்கை நாயகியிடம் நீட்ட , அவர் வெட்கத்தோடு பாட ஆரம்பிப்பார்..கார்த்திக் உற்சாகத்தோடு இன்னும் ஆவலாய் மைக்கை நீட்டுவார்..இதைக் கற்பனை செய்து இசை அமைத்தாரா இல்லை இப்படித்தான் எடுப்போம் என்று கேட்டே இப்படி பாட வைத்தாரா எனத் தெரியவில்லை :)

அதே போல இடை இசையையும் கவனியுங்கள் எத்தனைக் கருவிகள் எப்படி நிறைத்து , நிறைவு செய்திருக்குமென..பியானோ(என நினைக்கிறேன் ) , ட்ரம்ஸ், புல்லாங்குழல்,கிடார்,வயலின் என ஒரு அவியலே இருக்கும்.எனினும் தனித் தனியாக உணர முடியும். அளவாக மிகையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் . அந்த சில் சில் , சிலவற்றுக்கு வழி விட்டு நின்று திரும்பத் தொடரும்.. இடையில் வரும் அந்த வயலின் நின்று நின்று இசைக்கும்..எனக்கென்னவோ அது கார்த்திக்கின் துள்ளலுக்கானது :)) ஓர்
அழகான GIFT கவரில் இன்னும் அழகு சேர்க்க அதன் மேல ஓர் வெல்வெட்
துணி கொண்டு பூ டிசைனில் அழகு படுத்திக் கட்டி இருப்பார்களே அது
போன்று இருக்கும்.இந்த வயலின் முடிந்து ஒலிக்கும்
புல்லாங்குழலானது..இசை முடிவதும் பாடகர்கள் தொடங்குவதும் ஓர்  அழகான புரிந்துணர்வு ..

கை வீசிடும் தென்றல்ல்ல்
கண் மூடிடும் மின்னல்ல்ல்
இது கனியோ கவியோ சிலை அழகோ..

பாடலாசிரியர் பிறை சூடன்..ஆச்சரியம்தான் வழக்கமாக வாலி,வைரமுத்து என்றில்லாமல் இவரைப் பற்றியும் அறிய ஓர் அரிய வாய்ப்பு.. ராஜ இசைக்குத்
தக்க இவரும் பரிமாறி இருக்கிறார் வரிகளை.

மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..

என்ன அழகான வரிகள் :)

இரண்டாவது இடை இசையில் அந்த டோட்டடோட்ட உடுக்கை மாதிரி ஒரு  இசை வர்றப்ப அந்த சில் சில் மாறி மாறி ஒலிக்காமல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கும்.அடுத்து ஒரு புல்லாங்குழல் நீளமாக ஒலிக்கும்..அதுவரை இந்த சில் சில் சேர்ந்தே வரும். அது முடிய மெலிதாக பியானோ , அடுத்த விருந்து  வயலின் கொடுக்கும்
பாருங்கள் கண் மூடி லயிக்கலாம்..

பாடலே ராஜ போதை..இதிலே கள்ளுண்டவர்கள் போலத்தான் பாடி இருப்பார்கள் SPBயும் சித்ராவும்..அதனால் ஒவ்வொரு வரியிலும் அது தென்படும்..

பூ மாலைகள் கொஞ்சும்ம்ம்
பாமாலைகள் கெஞ்சும்ம்ம்
.................
தோள் சேர்ந்திடும் கங்கைஐஐ
செவ்வாழையின் தங்கைஐஐ
............................................
இதயம்ம்ம் இடம் மாறும்
இளமை பரி...மாறும்..(உச்சரிப்பிலேயே பரிமாறுவார் SPB)
அமுதும்ம்ம் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இப்படி..

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை என்றதும் வயலின் -புல்லாங்குழல் -வயலின்  மெலிதாகத் தொட்டுச்செல்லும்..

போலவே கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவா என்ற முடிவில் வரும்
 வயலினும்..பாடல் முழுக்க இந்த வயலின் மொத்தமாய் ஒரு விதமாக கட்டி
அணைத்தால் குறுக்கே குறுக்கே வரும் மற்ற புல்லாங்குழல் வகையறாக்கள்
காதலர்களின் செல்லச் சீண்டல்கள் ,குறும்புகள் கொண்டவை.

சரணம் முடியும் தருவாயில் பல்லவி முதல் சொல் ஆரம்பிக்கும்போது     காஆ ஆஆஆத..ல் என்பதில் கொத்து புரோட்டாபோட்டிருப்பார் மெலிதான ட்ரம்ஸ்  வைத்து :)

இதயம்ம்ம் இடம் மாறும்....ம் 
இளமை பரி...மாறும்.
அமுதும்ம்ம் வழிந்தோடும்.....ம் 
அழகில் கலந்தாட

பாடல் முடியும் தருவாயில் , ஆடியோ வெர்சனில் மட்டும்தான் தனியாக
 மயக்கத்துடன் சொல்லும்  இந்த "ம்" வரும்.  வீடியோ வெர்சனில் இல்லை.
இறுதியாக ஒரு பினிஷிங் டச் என்பார்களே..புது மோகம் என சித்ரா,  முடிக்கும் போது வைத்திருப்பார்

ராஜா இதை நேரடியாக கச்சேரியில் இசைக்கும் போது ஒவ்வொரு இசைக் கருவிகளும் என்ன என்ன என அறிந்து ரசிக்கணும்..என்பது என் பேராசை..
.கண்டிப்பா இந்தப் பாடலோட ஆடியோவெர்சனை டவுன்லோட் செய்துவிட்டு மொபைலில் ஹெட்போனோடு அமர்ந்து கொண்டே இதைப்படிக்கவும்.. பின்னர் வீடியோ வெர்சனையும் பார்த்து மகிழவும்..அதன் பின் மனம் முழுக்க ஆனந்தப் பிரவாகம்  பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை ராஜா மீது ஆணையாக சொல்லிக் கொள்கிறேன் :)

ராஜாவின் இசைக்கு சரியாக நியாயம் செய்திருப்பார்கள் அழகான காட்சிப்படுத்தலின் மூலம்.  காட்சியில் ஆரம்ப வயலின் & புல்லாங்குழலுக்கு உற்சாகத்தோடு நீரில் விழுவதும்,  புறாக்கள் மேலே எழும்புவதும் வெகு பொருத்தம் .புறாக் கூட்டம் , கடல்,கார் பயணம், மழை என பாட்டு முழுக்க ஒரே மகிழ்ச்சியில் திளைத்தல் தான் காதலர்களுக்கு வேலை :) காதலர்களின் உற்சாகம் அப்படியே நம் மனத்திலும் அப்பிக் கொள்ளும் :))

 இரண்டாம் இடை இசையில் , பறக்கும் குடையை யாரோ ஒருவர் இழுத்துச் செல்வதை சமீபமாக , எழுத்தாளர் நர்சிம் சொல்லித்தான் ஊன்றிக்
கவனித்தேன்:) எங்க .. பாட்டை ரசிக்கவும் , கார்த்திக்கை வேடிக்கை பார்க்கவே போதல :)

சார் கார்த்திக் சார் அழகு சார் :-)) குறும்பு சார் .. இனிமையான காதலன் சார் .. :))
சிரிப்பே கிக்கா இருக்கும் சார் :)) சிரிக்கறப்ப கண் சின்னதாகிடும் சார்.. :))
எத்தனை ஹீரோ அவருக்கும் முன்பும் பின்பும் ..  ஆனாலும் கார்த்திக் தான்
ரொமாண்டிக் ஹீரோ.  காதல் காட்சிகளை , கார்த்திக்கின் சாயல் இல்லாமல்,
இனி வரும் ஹீரோக்கள் செய்துவிட முடியாது.

எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅ அட் :))