Friday, June 29, 2012

அக்னி நட்சத்திரம்..!

ஏதாச்சும் ஒரு படம் பார்த்துட்டு அதற்கு விமர்சனம் என்கிற பெயரில் தாளிப்பதை விடுத்து மனசுக்கு பிடிச்ச படங்களைப் பத்திப் பகிர்வது இன்னமும் மகிழ்வான ஒன்று.இனி அது போல ஒவ்வொரு பிடித்த படம் பற்றி எழுத முடிவு.சமீபத்தில் சுற்றுலா சென்ற பொழுது அக்னி நட்சத்திரம் போட்டார்கள் பேருந்தில்.எத்தனை முறை பார்த்திருந்தும் ஒரு காட்சி கூட போரடிக்காம ஏதோ இப்பொழுதுதான் புதிதாய்ப் பார்ப்பது போன்ற உணர்வு.கார்த்திக்கும் சரி பிரபுவும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் வாழ்ந்திருக்கின்றார்கள் அந்த கதாபாத்திரங்களாகவே.இரண்டாவது துணைவியின்(courtesy :கலைஞர்) மகனாக அவமானமும் கோபமும் கலந்த உணர்வுகளை கார்த்திக் காட்டினால் அம்மாவுக்கு அப்பா செய்த துரோகம் தாளாத மகனாக பிரபு பட்டாசாய் வெளுத்து வாங்கி இருக்கிறார்.எண்பதுகளில் கார்த்திக் 
அதிக அழகே எனினும் பிற பிடங்களில் இல்லாத அளவு இந்தப் படத்தில் படு ஸ்மார்ட் பிரபு.
அதிலும் இந்தப் பாடலில் 0 .25 ல பிரபு நிற்கும் அழகே தனி ஸ்டைல்.
  "நீங்க உதாரணம் காட்ட என் குடும்பத்தை இழுக்காதீங்க"ன்னு கதவை அறைஞ்சு சாத்துவாரே பிரபு அடடா கோபத்தையும் ரசிக்க வைத்திருக்கின்றார்.


ஏதோ ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிராங்கன்னு இல்லாம அதிக வார்த்தைகளில் விவரிக்காம இருவருக்குமுண்டான பகையை நம்மை உணர வைத்த விதத்தில் மணி ரத்னம் மிளிர்கின்றார்.
படத்தில் காதலிப்பது தவிர வேறு வேலை கொடுக்கப்படாவிட்டாலும் நிரோஷாவும் அமலாவும் நிறைவாய்ச் செய்திருக்கின்றார்கள் ரசிக்கும்படியாகவே. 
அமிதாப் இந்தப் படம் பார்த்து நிரோஷா வெகு அழகு என நம்பி நேரில் பார்த்து வெறுத்துப் போனதாக என் அண்ணன் சொன்னதுண்டு:)
ஜெயச்சித்ராவிடம் "அவர் பேர் கெட வேணாம்ன்னு தான் வந்தேன் புள்ளைய ஒழுங்கா வளர்க்கப் பாருங்கன்னு"சுமித்ரா நறுக்கென கொட்டு வைக்கிறார்.அளவான நடிப்பு இருவருமே
  இளையாள் மகளே எனினும் எவரோ இரயிலில் வம்பிழுத்ததும் அண்ணனாக பிரபு படும் கோபம் செம்ம:)
 தனி ட்ராக்காக ஓடும் ஜனகராஜ் -VKR காமெடி பெரிதாக ஈர்க்கவில்லை எனினும் நோ தங்கமணி என்ஜாய் தமிழ்நாட்டில் எவரும் மறக்கமாட்டார்கள்
 குற்ற உணர்ச்சியில் அமைதியாகவே இருந்துவிட்டு இறுதியில் பொங்கும் விஜயகுமார் பாசமான அப்பா 
 இளையராஜா -எங்க சுத்தினாலும் நிச்சயம் இவர்கிட்ட வந்துதான் ஆகணும் படத்தை இன்னமும் சுவராசியமான ஒன்றாக வைத்திருப்பதில் இவர் பின்னணி இசையின் பங்கும் அதிகம்.தங்கையைப் பெண் பார்க்க வந்தவர்கள் திரும்பிச் சென்ற கோபத்தில் கார்த்திக் விஜயகுமார் வீட்டுக்குச் சென்று கத்தும் பொழுது சூழ்ந்துள்ள அமைதி சொல்கின்றது ஏதோ நடந்திருக்கிறது என்பதை. காமிராவும் இசையும் மெதுவாக எட்டிப் பார்க்கின்றன பாட்டியின் சடலத்தை அதிர்ந்தே போகிறோம் நாமும் கார்த்திக் போலவே.
 பாடல்களுக்குப் பெரிதாய் விளம்பரம் தேவையில்லை ஒவ்வொன்றும் நல்முத்து.ராஜாதி ராஜா பாடலில் கார்த்திக்கின் பின்புறம் பிரபுதேவாவும் க்ரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடுகிறார்.நிச்சயம் வில்லன் பாத்திரமும் படு நேர்த்தி.(பெயர் தெரியல)
 இருவரும் ஒன்றாய்த் தந்தையைக் காக்க முற்படும் நேரத்தில் இப்பவாச்சும் சேர்ந்தாங்களேன்னு ஆசுவாசம் வருது.இறுதிக் காட்சிகளின் முடிவு தெரிந்தே இருந்தாலும் புதிதாய்ப் பார்ப்பது போல படபடப்பு பற்றிக்கொள்கின்றது.


ஒரு படத்தின் வெற்றி என்பது தனிப்பட்ட ஒருவரினால் மட்டும் அல்ல 
ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பு என்பதை நிரூபித்த படங்களில் ஒன்று அக்னி நட்சத்திரம்

Saturday, June 9, 2012

கதம்பம்..!

தோழி ஒருத்தியின் சகோதரிக்கு கிட்னியில் பிரச்சனை அதைப் பற்றி ஆட்டோவில் பேசிக் கொண்டே வந்த பொழுது ஆட்டோக்காரர் சொன்ன ஒரு தகவல் பெரும் அதிர்ச்சி அளித்தது .பொதுவாக பெரும்பாலோனோர் மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் தண்ணீர் (25 லிட்டர் ) தான் வாங்குகிறோம் வீடுகளில் .அதிகம் அலுவலகங்களிலும் அதையே பார்க்க முடிகிறது.ஆனால் அதை விட சுகாதாரமற்ற தண்ணீர் வேறு இல்லையாம்.வீட்டில் பயன்படுத்தும் குடம் ,பானை கூட நாம் தான் கை வைத்து கழுவுகிறோம்.அந்த கேன் களை கழுவுவதற்கு என்று கெமிக்கல் ஊற்றி விடுவார்களாம்.அதனால் அது அவ்வளவு சுகாதாரமானது அல்ல என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.நீரைத் தூய்மையாக்கி குடிக்கும் வேறு கருவிகள் வாங்கி பயன்படுத்துவது நல்லது கவனம் மக்கள்ஸ்..! 
***********************************************************************
அம்மாவுக்கு திடீர் என உடல்நிலை மோசமாகிவிட்டது.தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தலைக்குள் ஏதோ செய்கிறது வாந்தி வருவது போல இருக்கு கிறுகிறுப்பு என்றெல்லாம் பீதி கிளப்பி விட்டுவிட்டார்.அத்தனை பதட்டமும் வந்து ஒட்டிக் கொண்டது.வெளியே காட்டிக்காமல் இருக்கவே சிரமப்பட்டேன்.இத்தனைக்கும் முடிந்தவரை அதிகம் மன தைரியம் உள்ள ஆள் நான் தான்.ஆனால் இந்த விடயத்தில் ஆணி வேரே ஆடிப் போயிருந்தது.அப்பாவின் மறைவே இன்னமும் ஆற்றமுடியாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அம்மாவிற்கு உடல் மோசமானதைத் தாங்கவே முடியவில்லை.மருத்துவமனை அழைத்துச் சென்றேன்.வழக்கமாய் அம்மாவுக்குச் செக் அப் செய்யும் டாக்டர் தான்.பொறுமையாக கேட்டுவிட்டு அவர் கொடுத்த ஆறுதல் வார்த்தைகள் நிச்சயம் மறக்கவே முடியாத ஒன்று."எதுவுமே இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.இரும்பில் செய்த உடம்பல்ல.வந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேணும்.ரத்த அழுத்தம் தான் உணவுக் குழாய் புண் ஆகி இருப்பதால் அது போன்ற உணர்வு வரவே செய்யும்.வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை.பயமே பெரிய வியாதி.அது இருந்தால் எந்த நோயும் குணப்படுத்தவே முடியாது.சும்மா தொட்டதுக்கெல்லாம் டெஸ்ட் அது இதேன்றால் செலவு தான் ஆகும் என்றார்.(இதுவே சென்னை கோவை என்றால் கற்பனை செய்து பாருங்கள் எத்தனை ஆயிரம் செலவுகள் ஆகியிருக்கும் ஆய்வின் முடிவில் ஒன்றுமில்லை என்று சொல்ல #ஒய் மதுரை இஸ் காட் :) இறுதியில் மெதுவாக தோளில் தட்டி ஒரு மகன் போன்று ஆறுதலாய்ச் சிரித்தது இன்னமும் மதிப்பு கூடிற்று.என் மனத்திலும் அப்பாடா என்ற ஆசுவாசம் வந்தது பாருங்கள் அதை வெறும் வார்த்தைகளில் அந்த உணர்வை சொல்லிவிட முடியாது.என்னதான் நாம் பேசினாலும் ஒரு ப்ரோபெசனலிஸ்ட் பேசும் போது அதற்கு தனி மரியாதை தான்.அதனால் தானோ என்னவோ மருத்துவத் துறையில் இருப்பவர்களை வெறும் சாமான்யர்களாக நம்மால் எண்ண முடியவில்லை.உயிரைக் காப்பாற்றும் வேலையைச் செய்பவர்கள் தரம் இறங்கி செய்யும் வேலைகளை ஜீரணிக்கவும் முடிவதில்லை
****************************************
பதின்ம வயதுகளில் படிக்க முடியாமல் வசதியின்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட தோழிக்கு கணவர் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு இறந்து போனார்.கணவரின் அலவலகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கிடைத்தது.சில வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் மனம் மாறி தோழி மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றாள்.விஷயம் கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சி.அழகு,அடக்கம்,எவரையும் நிமிர்ந்து பார்க்காத ஒழுக்கம் அனைத்தும் ஒருங்கே சேர்ந்த பெண் என பழகிய இரண்டு ஆண்டுகளில் நன்கு அறிவேன்.ஆனால் இதுவரை அவர் வருமானம் அனுபவித்த பெற்றோர் அதை இழக்கவிரும்பாமல் முன்பே அவள் திருமணம் செய்யவிருக்கும் நபருக்கும் உறவு இருந்தது போல அக்கம்பக்கம்,வேலை பார்க்குமிடம்,உறவினர் மத்தியில் அசிங்கப்படுத்திவிட்டனர்.பெற்றோரே இப்படி செய்வது அதிர்ச்சியும் வேதனையும் தாளாமல் தோழி கதறி அழுதது என்னவோ போல் இருக்கின்றது.தனியாய் இருக்கும் பெண் தானே என்ற சீண்டல்கள்,வக்கிரப் பார்வைகள் என்று ஒவ்வொன்றிலும் தப்பித்து வருவது எவ்வளவு சிரமம் என்பது கணவர் இல்லாத பெண்களுக்குத் தான் தெரியும்.வயதின் தேவைக்கே திருமணம் செய்தால் கூட தவறென்ன?அறுபது வயதில் மனைவி இறந்த மூன்றாம் மாதம் திருமணம் செய்து கொண்டார் உறவினர் ஒருவர்.ஆணைப் பழிக்காத சமூகம் பெண்ணைப் பழிப்பதை மட்டும் எப்பொழுது நிறுத்தப் போகின்றது?தனிப்பட்ட வலிகள்,ஆழ்ந்த வேதனை ,இளமையில் தனிமை புரியாமல் துணை இல்லாதவர்களை கிண்டல் செய்பவர்களைப் பார்த்தால் அருவெருப்பாகவே இருக்கின்றது
***********************************************