இராஜ ராஜ சோழனின் இளம்பிராயத்து கதை.மனதில் கல்கி உருவாக்கிய அந்த சோழன் பிம்பம் மனதில் மறையாமல் இன்றும்.ஒன்றரை பாகம் முடிந்தபின்னர் எப்பொழுது என்று ஏங்கித்தவித்த பின்னர் அறிமுகப்படுத்துவார்.சாண்டியனின் கதாநாயகன் அதிகம் கவர்ந்ததாலோ என்னவோ அனைவரும் புகழும் வந்தியத்தேவன் அவ்வளவாக ஈர்க்கவில்லை அருண்மொழி வர்மர் அளவிற்கு.வந்தியத்தேவன் வீராணம் ஏரியில் நடைபயின்று செல்வதில் இருந்து இறுதி சுவராசியத்திற்கு குறைவின்றி நம்மை இழுத்துச் சென்றிருப்பார்.அதே போல காட்சிகளின் தொடர்ச்சி மிக சரியாக அமையப்பெற்று இருக்கும்.உண்மைக்கதையை அப்படியே புனைவதில் உள்ள சிக்கல்கள் இறுதியில் கதையில் சில இடங்களில் தடுமாறியதில் தெரிந்திருக்கும்.ஆதித்ய கரிகாலன் மர்மம் உட்பட.கதை ஆரம்பித்த சில நேரத்திலேயே ஒன்றிவிட செய்துவிடுவது அவர் எழுத்தாளுமையைக் காட்டுகின்றது.அப்படியே ஆயிரம் வருடம் பின்னோக்கி அன்று நடந்தவற்றை அருகிருந்து பார்ப்பது போன்ற பிரம்மை வந்துவிட்டது.நான் கதாபாத்திரங்களின் உருவங்களுடன் கொண்ட புத்தகத்தைப் படித்தேன் ஆதலால் எளிதாக உருவகப்படுத்தி கண்முன்னே நடமாட விட முடிந்தது.வந்தியத்தேவன் குந்தவை அறிமுகம் கொள்ளும் காட்சியும் வந்தியத்தேவனை சிறையிலிட்ட பின்னர் குந்தவை சோகம் கொள்ளும் காட்சியும் சிறந்த காதலர்களாக மனதில் பதியவைக்கின்றது.ஒவ்வொரு அபாயமான தருணத்திலும் ராஜ ராஜ சோழர் தப்பித்து வருதல் வரலாற்றில் அவர் பெயர் பதிவாக இயற்கை எவ்வளவு உதவி இருக்கக்கூடும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகின்றது.மெய் கீர்த்தி என்று தன் ஆட்சியில் செய்த தவறுகளைக்கூட கல்வெட்டில் எழுத வைத்த மன்னன்.ஜோதிடம் உண்மையாக இருக்கலாம்.ஆனால் ஜோதிடர்கள் உண்மையானவர்களாக இருப்பதில்லை என்று குடந்தை ஜோதிடர் மூலம் கல்கி சொன்னதை மனப்பூர்வமாக ஏற்கிறேன்.
இலங்கையின் மகாவம்சம் பற்றி சொல்லியிருப்பார்.பதவிக்காக எவரையும் கொல்லத்துணியும் ராஜவம்சம் அது.படிக்கின்ற பொழுது இன்றைய இலங்கை அரசின் மனோபாவம் நினைவுக்கு வருவது தவிர்க்க இயலாத ஒன்று.பிற மன்னர்களை போல வென்ற இடங்களின் தாங்களே ஆட்சி நிறுவி கவனம் செலுத்தாமல் அங்கே தனக்கு கீழ் செயல்படுமாறு கட்டளையிட்டு பெயரளவில் ஒரு கப்பம் கட்ட வைத்தது பின்னாளில் சோழ மன்னர்களின் அழிவுக்கு அதுவும் காரணமாக அமைந்தது என்று எப்பொழுதோ படித்த நினைவு.நாகையில் புத்தவிகாரத்தில் என் முன்னோர்களின் எவர் பாதையை எடுத்துக்கொண்டு நான் முன்னே செல்வது என்று புலம்புவது ராஜ ராஜ சோழனின் குழம்பிய மனநிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.ஏனோ அப்பொழுது தலை கோதி தாலாட்ட வேண்டும்போல இருக்கின்றது.
ஆ ஊ என கத்தி ஆர்ப்பரிக்கும் இன்றைய சீரியல் வில்லிகளை விட அமைதியா நேர்த்தியாக அமைக்கப்பட்ட நந்தினி எவ்வளவோ தேவலை.இருப்பினும் அவளுடைய கதாபாத்திரமும் சற்று குழப்பமுடையதே.கதை தொடர்கதையாக வந்துகொண்டிருக்கும் பொழுதே திடீரென முடிக்கும் பொருட்டு பொன்னியின் செல்வனை கல்கி முடித்துவிட்டார் என்றும் அதன் பின்னர் வாசகர்களின் கேள்விக்கு அவர் விளக்கம் அளித்திருக்கிறார் என்றும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.அந்த கேள்வி -பதில் படிக்கவில்லை இன்றுவரை.கண்டிப்பாக இந்த கதைக்கு ஓவியம் தீட்டியவரை பாராட்டியே ஆகவேண்டும்.குந்தவையின் சிகை அலங்காரம்,நந்தினியின் சிகை அலங்காரம்,பெரிய பழுவேட்டரையர்,ஆழ்வார் நம்பி என்று கதாபாத்திரங்களை வித்தியாசபடுத்தி மனதில் பதிய வைக்க பெரிதும் உதவியதற்கு.
பொன்னியின் செல்வன் -காலம் கடந்தாலும் தங்கத்தின் மதிப்பு குறையாது
No comments:
Post a Comment