Tuesday, December 31, 2013

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள்:)எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் என சில டிராப்ட் கிடக்கு:)  ஆனால் எதையும் 
முழுமைப் படுத்தாமல் வெளியிட மனம் வரவில்லை.அதே சமயம் இப்படி 
ஒரே பதிவில் இயன்றவரை பிடித்தவற்றைச் சொல்ல வேண்டும் எனத் 
தோன்றியதால் திடீரென இந்த உப்புமா பதிவு :)

ஆத்மார்த்தமாக உணர்ந்ததை இனி :

நிஜமாகவே நன்றாக எழுதக் கூடிய ஆனால் டிவிட்டரில் அதை அவ்வளவாக 
காட்டிக் கொள்ளாத நல்ல பதிவர் @Poopoonga
எதிர்பாராவிதமாக கை முறிந்து ட்விட்டர் பக்கம் சற்று இளைப்பாற வந்த 
பொழுது கலகலவென பேசிக் கொண்டிருந்த @KirukkanJagu  வைப் பார்த்ததும் 
சட்டெனத் தெளிவு வந்தது..சிறந்த தன்னம்பிக்கையாளன் 

எந்த ஒரு கோபத்தையும்,வேதனையையும்,மோசமான கலாய்த்தல்களையும் 
சாதாரண புலம்பலாகவும் கண்ணியமான தத்துவமாகவும் மாற்றுகின்ற 
வல்லமை (நிச்சயம் பெரிய விஷயம் தான் எனக்கெல்லாம் வார்த்தைகள் 
கூர்மையா வந்து விழும் :) ) கொண்ட @Sricalifornia இவ்வருடத்தில் நல்ல 
ட்விட்டர் என்பதைத் தாண்டி எனக்கு நல்ல தோழி என்ற பதவியும் 
ஏற்றிருக்கிறார் (அவ்வளவு சீக்கிரம் யாரையும் என் நட்பு வட்டத்தில் நுழைய 
விட மாட்டேன் :)மருத்துவ ரீதியாக எவ்வித சந்தேகங்களும் எந்த நேரத்திலும் 
கேட்டுத்  தெளிந்து கொள்ள முடிவது இன்னுமொரு சிறப்பு

ஒவ்வொரு ட்வீட்டும் அட இது நம்மள  போலவே இருக்கே என புருவம்
உயர்த்த வைத்த @RenugaRain  மனத்திற்கினிய பெண்களின் பட்டியலில்
மானசீகமாக வந்தமர்ந்து கொண்டிருக்கிறார் .அதற்கான எவ்வித
மெனக்கெடலும் இல்லாமலேயே .

புத்திசாலித்தனம் இருந்தாலும் கூடவே குழந்தைத் தனம் வெகு இயல்பாய்
அமைவது எல்லாம் வரம் .லேடி தெனாலி @subaangi ஒருமுறையேனும்
பார்த்து கன்னம் கிள்ளி காதைத் திருகி வைக்க வேண்டும் எனத் தூண்டி
வைத்திருக்கிறார் :)நான் அதிகம் ரசித்த , ரசிக்கின்ற பெண் .

சாய் சித்ரா என்றாலே மொக்கை என்பது மட்டும் தான் எல்லாருக்கும்
நினைவுக்கு வரும்.ஆனால் அவர் அட்டகாசமாகவும் எழுதுவார்.ஆனால் அது
 ரொம்பக் குறைவு.ஆர்வம் அந்த ஏரியாவில் அவருக்கு இல்லை
என்பதால்.என்றேனும் சோகம் இழையோட மெலிதாய் ஒரு தத்துவம்
விழும்..நிச்சயம் அந்த நேரத்தில் நம் மனதை பிரதிபலிப்பதாகவும்
அமையும்.எவரையும் காயப் படுத்த விரும்பாத,பெண்ணியம்
பேசாத,இயன்றவரை சுற்றி உள்ளவர்களில் ஒருவரேனும் நம்மால்
மகிழ்ந்தால் அது வரம் என்ற எண்ணம் கொண்ட பெண்..கற்றுக் கொள்ள
நிறைய இருக்கிறது இவரிடம் :)

சிறந்த மகளதிகாரம் இம்முறை எனை அதிகம் ரசிக்க வைத்தவர்கள் காயத்ரி 
(முகநூல்),ஜனனி அம்மா,கீதா .காயத்ரியின் மயக்குறு மகள் பதிவுகள்
அனைத்தும் அட்டகாசம்.தவறவிடாமல் படியுங்கள் 
என்னை கவனித்துப் பார்த்திருந்தால் தெரியும்.எவ்ளோ பேர் இருந்தாலும் 
குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே திரும்பத் திரும்ப இயல்பாக 
கலாட்டா,கேலி,என சகஜமாய்ப் பேசிக் கொண்டிருப்பேன்.பட்டெனப் பழகுவது வெகு சிரமம்.அதனாலேயே இங்கு பலருடன்  நிறைய 
இடைவெளியும்,புரிதலற்ற தன்மையும். ஆனா இந்த ஸ்வீட் சுதா மட்டும் 
எப்படி பட்டுன்னு எல்லார்கிட்டயும் ஒட்டிக்கிறாங்க என ஆச்சர்யமும் 
பொறாமையும் உண்டு :)ஆனால் நல்ல பழக்கம்.கொஞ்சம் சுரண்டி 
எடுத்துக்குவோம்:)

இவ்வருடத்தில் எனக்கு மிகப் பிடித்த ட்வீட்கள் அதிகம் @Alexxious 
உடையது.ஒவ்வொன்றும் இன்னொன்றுக்கு இளைப்பில்லை ரகம் :)செம
கிரியேட்டிவ்.

நவீனுக்குப் பிறகு நான் ஏற்றுக் கொண்ட   நல்லதொரு தம்பி  


நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய நல்ல ட்விட்டர் @Im_sme 

 இவங்களாம் பெரிய ஆளு நம்ம கிட்ட பேசவா போறாங்க என நமக்கு நாமே 
ஒரு திரை போட்டு வெளியே உட்கார்ந்து இருப்போம்.ஆனால் ஏதேனும் ஒரு 
தருணத்தில் திரை  விலக்கி சன்னமாய்க் கவனித்து பேச ஆரம்பித்தால் 
அவர்களும் சகஜமான ஆட்கள் தான் என ஓர்  ஆசுவாசம் வரும் அப்படி நான் 
வியந்தும்,விலகியும் மரியாதைக்குரியவர்கள் பட்டியலில் இணைத்து 

வைத்திருப்பது @Skpkaruna
தமிழில் ஒரு தகவல் பக்கம் @Tamilfacts பல கேலி கிண்டல்களையும் தாண்டி 
ஆச்சர்யமான தகவல்களை வெகு சுவராசியமாக தொகுத்து வழங்கும் முயற்சி போற்றுதலுக்குரியது.வரும் புது டிவிட்டர்கள் ஒவ்வொருவரும் 
தவறாமல் follow  செய்தே ஆக வேண்டும் என்பதற்கான என் உறுதியான 
பரிந்துரை
பெண்களுக்கு நகைச்சுவை உணர்வு இல்லை என்று பொதுவாய்க் குற்றச் 
சாட்டு வைப்பவர்கள் சற்றே @Jen_guru @Shanthhi  .பெரிய 
ஊமைக் குசும்பிகள் :) போற போக்குல நறுக்குன்னு நையாண்டி செய்வாங்க 
பாருங்க இப்படி ஸ்மைலி போடலாம் :)))))))))))))))

என்னதான் நாம கவித எழுத முயற்சி செய்தாலும் அதை முழுமைப் படுத்த
படுற பாடு..ஆனால் போடுகின்ற ஒவ்வொரு ட்வீட்டிலும் ரசிக்க வைக்கின்ற
நபராக @raajaacs 
சிறந்த #365ப்ராஜெக்ட்  ராஜா க்விஸ் ஒரு துளி கூட பிறரை மட்டம் தட்டாது
 உள்ளதை அழகுபடச் சொல்லி சுவராசியமாய் ஒற்றை ஆளாய் மெனக்கெட்ட 

@Rexarul   மாஸ்டரின் உழைப்புக்கு வந்தனங்கள்.இவர் போன்ற ரசிகர்கள் தான் ராஜாவுக்கு பலம்:)நண்பர்கள் பழக இனிமையான கலகலப்பான சகாக்கள் முசகுட்டி @vrsaran 
@Tparavai 

இவ்வருடத்தில் சிறந்த மாஸ் எண்டெர்டைனெர் என எனக்குத்

 தோன்றுவது @Kattathora @Thirutukumaran @Sathi_ya_priyAn


கட்டதொர ஒரு டாபிக் டேக் வைத்து எழுதும் அத்தனையும் அட்டகாச ரகம் :) 
நையாண்டியும் நக்கலும் அவ்வப்பொழுது புலம்பலுமாக ,அன்பாலோ செய்த 
பிறகும் ஈர்த்து எனைத் திரும்ப பாலோ செய்ய வைத்த பெருமை திருட்டுக் 
குமரனுக்கு..ஒரு சிறிய இடைவெளியில் அவ்வப்பொழுது வம்பிழுத்து நான் 
ரசிக்கும் நபர்:)ட்விட்டரில் இது புதுசு:)அன்பாலோ செய்தவர்களை அடடா மிஸ் செய்கிறோமோ எனத் தோன்ற வைப்பது அவ்வளவு இலகுவான 
காரியமில்லை:)ஆனால் அன்பாலோ செய்தது எவ்வளவு பெரிய ஆசுவாசம் 
எனத் தோன்ற வைப்பது வெகு எளிது .பிடிக்காவிடில் சத்தமே இல்லாமல் 
அன்பாலோவும் பிடித்ததற்கு ஆர்ப்பாட்டமே இன்றி சகஜமாகவும் இருந்து 
பார்த்தால் மட்டுமே நிச்சயம் இது சாத்தியம்:) எனது ஆல் டைம் ஃபேவ் லிஸ்டில்  இணைந்திருக்கிறார் திகு :)

@sathi_ya_priyan விளையாட்டாய் ஹூ டு ஃபாலொ கொடுத்த சிபாரிசில் செக் 
செய்த . ..ஒரு அரை நாள் முழுக்க ரசித்துச் சிரிக்க வைத்தது இவரது 
பக்கம்..இன்றும் டைம் லைனில் எத்தனைத் தக்காளிச் சட்னி இருந்தாலும் 
தான் உண்டு தன் கமெண்ட் உண்டு என அனைவரின் கவனத்தையும் 
ஈர்த்தவர்..எழுத்துப் பிழைகளை மட்டும் சரி செய்து விட்டால் இன்னும் சூப்பர் :)


சில சமயம் குதர்க்கம் எனத் தோன்றினாலும் இவரைப் போன்று அப்படியே 
எதையும் ஏற்றுக் கொள்ளாமல் மாற்றுச் சிந்தனையாளர்கள் அவசியம் தேவை என்பேன்  @GVhere  விவாதத்தை வேறு ஒரு களத்திற்கு எடுத்துச் 
செல்ல ஏதுவாக இருக்கும்.கூத்தாடி (ட்விட்டர் தான்:) ) க்கும் இவருக்கும்
 நடக்கும் விவாதங்கள் வெகுவாகவே ரசிக்க வைத்திருக்கிறது என்னை:)

அறவே பிடிக்காத சந்தானத்தை பிடிக்க வைத்ததில் இவர் @Razkolu  பங்குண்டு:)எதிர் கருத்துக்களை எவனா இருந்தா எனக்கென்ன என்ற தொனியில் இவர் சொல்லும் பாங்கு பிடிக்கும்.பல புது டிவிட்டர்கள் எனக்கு அறிமுகம் ஆவது இவரது பாரபட்சமற்ற RT யினால் தான்.

இந்தப் பெண் கொடுத்து வைத்தவள் இவன் கிடைக்க எனத் தோன்ற வைப்பது 
ஒரு ஆடவனுக்குக் கிடைத்த வெற்றி.வெகுமானம்.ஒரேயடியா பாசத்துல
பொங்க வைக்கிறாரோ எனத் தோன்ற வைத்தாலும் நான் ரசிக்கும் 
எமோசனல் இடியட் இந்த @Rasanai

அவரின் மகள் மீது இனம்புரியா அன்பும்,அவளைப் பெற்ற இவர் மீது ஒரு வித 
பொறாமையும் இன்றி எந்த ஒரு டிவிட்டரும் இருக்க முடியாது என்றே 
அவதானிக்கிறேன்..நான் நேரடியாகக் காணாமல் நேசிக்கும் பெண் 

குழந்தைகளில் குஷியும் ஒருத்தி:)

படிக்க போரடிக்காத சின்னச் சின்ன டிட்பிட்ஸ் களினாலும் வெகு 


எளிமையான பேச்சினாலும் தனியே கவர்ந்து நிற்கிறார் @Nvaanathi

எனை எப்பொழுதுமே எழுத ஊக்குவிக்கும் நண்பர்களில் புதியதாகச் 
சேர்ந்திருப்பவர் @RagavanG  ஜிரா .பல தகவல்களின் தொகுப்பும் கூட :)

இவ்வருடத்தில் நான் மிகவும் ரசித்த பெண் ட்விட்டர் எழுத்துக்கள் 
மிருதுளாவும் ,யமுனாவும்.வார்த்தைகள் நன்கு வசப்படுகின்றன 
இவர்களுக்கு 


அதிகம் பேசி கூட இருக்க மாட்டேன்.ஆனால் அத்திப் பூத்தாற் போல அந்த 
நபர்கள் நம் மீது வைத்திருக்கும் மரியாதை தெரிய வரும் தருணம் 
நெகிழ்வானது.அது போல ஒரு அழகான தருணத்தைக் 
கொடுத்தவர்கள் @RavikumarMGR @Piliral நீங்க பாடல்களை நன்றாக 
கவனித்துக் கேட்பவர் என என்னை கவனிச்சு பாலா தன் பாடலுக்குக் கருத்து 
கேட்டப்போ எனக்கு கண்ல வேர்த்திடுச்சு :))

எனக்கு மிகப் பிடித்த பதிவுகள் 
என் அமெரிக்கப் பயணமும் அதன் சாரமும் :-)

மிகப் பிடித்த குறும்படம் குட்டிம்மா (நிச்சயம்  நீங்க இடம் பிடிக்கும் என்பது என் துணிபு)


இவ்வருடம் நான் ரசித்த அடக்க முடியாமல் சிரித்த மரண கலாய் பொதுவாய் 

பெண்களை முகம் சுளிக்க வைக்கும் டாபிக் ஆனால் காரண கர்த்தாக்களால் 

கலகலப்பானது @ThirutuKumaran @Kanapraba


பிறரைக் கேலி செய்ய விட்டு இயல்பாய் ஒதுங்கியதில் இருவரின் ஆடிட்யூட் 
பாராட்டத் தக்கது..:)

இவ்வருடத்தின் மிக மோசமான கலாய்த்தல்கள்  என நான் நினைப்பது 
தலைவா படத்திற்கு கலந்து கட்டி அதிகப்படியாகவே போனது மட்டுமின்றி 
தனக்கு அறவே பிடிக்காத விஜய் ரசிகை/ரசிகர்களை கடுமையாகத் தாக்கியது.

வருடத்திற்கு இப்படி ஒரு பஞ்சாயத்து, ஒரு மோசமான சூழலை உருவாக்கி 
விடுகிறது.உண்மையில் அந்த நேரத்தில் , நான் அதிகம் பேசாவிட்டாலும் 
 சிலர் மீது நல்லதாய் இருந்த பிம்பம் அசைந்து விட்டது உண்மை.இவ்வளவு 
இறங்கி இருக்க வேணாம் என்பது என் தாழ்மையான கருத்து.

திடீர்னு சவுண்ட் க்ளவுடே ஒரே அமளி துமளி..அம்புட்டுப் பேரும் பாட 
ஆரம்பிச்சுட்டாங்க ஆனால் சிறந்த குரல் என்பது எவ்வித விவாதங்களுக்கும் 
இடமின்றி இந்தச் சுட்டி @NangaiN உடையதுதான் வந்தாளே ராக்கம்மா 

இவ்வருடத்தின் சிறந்த டேக் ஆக நான் கருதுவது #IFPoliceEnterintoTwitter

மனம் விட்டுச் சிரிக்க வைத்த அட்டகாசமான டேக்.பிறிதொரு தருணத்தில் 
தொகுக்க உத்தேசம்:)


எனது ட்விட்டர் டைம் லைனை அழகாகவும்,அர்த்தமுள்ளதாகவும் ஆக்கும் 
அத்தனை நபர்களுக்கும் என் நன்றி :) ஆக்கப்பூர்வமாக ஆக்கியதில் நிச்சயம் 
இருவருக்கு அதிக பங்குண்டு.அது நம்ம சூப்பர் ஜோடி @N_shekar @amas32
என்னை எவ்வித ஆதாரமும் இன்றி நம்பி ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் உதவி செய்தது.அதையெல்லாம் தாண்டி  இணையம் ஊடாகவே பழகியும் ஒரு அபரிமிதமான அன்பைப் 
பொழிவது..என்ன தவம் செய்தனை இங்கிதை யான் பெறவே:)

இந்த மூன்று வருடத்தில் வெகு நிதானமான பயணம் என்னுடையது.முக்காவாசிப் பேரு ஆக்டிவாக இல்லாததாலேயே ஃபாலொவர்ஸ் எண்ணிக்கை அதிகம் என்ற யதார்த்தம் ஒத்துக் கொள்ள வேண்டிய அதே தருணத்தில் , நம் எழுத்தையும் வாசிக்க மூவாயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை நினைச்சா..:)Thursday, December 12, 2013

கூண்டுக்குள்ள என்ன வச்சு..

படம்                    : சின்ன கவுண்டர்
பாடல்                 : கூண்டுக்குள்ள என்ன வச்சு 
இசை                   : இளையராஜா 
பாடலாசிரியர் :  R .V .உதயகுமார் 

பொதுவாக இந்தப் படத்தில் முத்துமணி மாலை தான் நான் விரும்பிக்கேட்பது.
இந்த கூண்டுக்குள்ள என்ன வச்சு பாடல் சோகமானது என்பதால் உடனே 
சானல் மாத்திடுவேன்.சமீபத்தில் தான் எதற்கும் கேட்போமே என்று வரிகளும் 
ஊன்றிக் கேட்டதில் மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஒவ்வொரு வரிகளிலும் 
சின்னச் சின்ன சேதிகள்.வெகு இயல்பான பேச்சு வழக்கில் அமைந்தது 
இன்னும் பாடலுக்கு அழகைச் சேர்த்திருக்கின்றது .
கிராமத்து வாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவர்களுக்கு இந்தப் பாடல் பல சேதிகளைச் சொல்லும்.

சினிமா தாண்டி எவ்வளவோ பொழுது போக்கு
அம்சங்கள் வந்து விட்ட போதிலும் ,படத்தைப் பார்ப்பதுவும் முன்பு போல
வெகு சிரமமின்றி மலிந்து விட்ட போதிலும், சினிமா என்ற பொழுது போக்கு 
அம்சத்திற்கான அவசியம் என்னவென்று ஆராய்ந்தோமானால் வருங்காலச் 
சந்ததிக்கு , முந்தைய காலம் ,அக்கால மனிதர்கள் எப்படி 
இருந்தார்கள் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள ,அற்புதமான ஒரு ஊடகம் 
இது. ஆவணப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்று. அப்படி ஒவ்வொரு கால கட்டத்தையும் 60,70,80,90 ,2000 கள் எப்படி அக்காலத்திய மனிதர்கள் எப்படி 
அக்கால கட்ட கிராமம் எப்படி , அக்காலத்திய நாகரிகம் என அழகாய் ஆவணப் 
படுத்தியதில் சினிமாவின் பங்கு பெரிது என்றால் அது மிகை ஆகாது.
வெறுமனே ஏட்டில் படிப்பது வேறு காணொளியாகப் பார்ப்பது வேறு.ஒரு 
காமராஜர் ,பெரியார் வாழ்ந்தார்கள்  என்பதெல்லாம் பின்னாளில் அதிசயத் தக்க ஒன்றாகவே இருக்கும்.அதை  மூன்று மணி நேரமாகப் பதிவு செய்ததில் நிச்சயம் இந்த மனிதர்கள் எப்படி என வரும் தலைமுறை அறிய ஒரு வாய்ப்பாகவே அமையும்.திரை இசை மட்டும் இல்லாவிட்டால் இசையை 
இத்தனை பேர் ரசித்திருப்போமா என்பதே கேள்விக் குறி தான்.
அது போலத் தான் கிராமத்துப் படங்களும் பாடல்களும்..அத்தைகைய ஒரு பாடலாகவே இதையும் நான் பார்க்கிறேன்.

"கூண்டுக் குள்ள என்ன(னை ) வச்சு 
கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக் கிளியே.."

இதுல கோலக் கிளியே வா இல்ல (கோழைக்  கிளியே )வா என்றொரு 
சந்தேகம் என் காதுக்கு வந்ததுண்டு. சுகன்யா தைரியமா கொலை செய்து 
விட்டுச் சென்றிருந்தாலும் பேச்சு வழக்கில் ஏதோ செல்லமா கோபிச்சுத் 
திட்டறாரோன்னு நினைச்சதுண்டு.

"கண்ணு   வலது கண்ணு தானா துடிச்சதுன்னா ஏதோ நடக்குமின்னு 
பேச்சு "

நல்ல சகுனம் கெட்ட சகுனம் என நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட சில நம்பிக்கைகள் உண்டு. அதில் இந்த வலது கண் துடிப்பதுவும் ஒன்று.
என் அம்மா சொல்வதுண்டு வாழப் போற பொண்ணுக்கு வலது கண்ணு துடிக்கக் கூடாது ன்னு..ஏதோ கெட்ட சகுனமாம்..அந்தக் கெட்ட சகுனதிற்குத் தகுந்தார் போலவே

"மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கத முடிஞ்சு போச்சு "

நடந்த நிகழ்வைச் சொல்லி விடுகிறார்.

" ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் மாமன் பேரைச் சொல்லிப்
 பேசுது"

இந்த ஈசான மூலை  என்பது வட கிழக்கு (நம் வீட்டு அடுப்படி இருக்கும் இடம் வாஸ்து படி ) பல்லி கத்தும் சத்தம் கொண்டும் பலன் சொல்வாங்க அம்மா .
சின்னச் சின்ன நம்பிக்கைகள் :)

"ஆறாத சோகம் தன்னைத் தீராம சேர்த்து வச்சு ஊரும் சேர்ந்து என்ன ஏசுது "

இந்த ஏசுவது என்பதும் வெகு இயல்பான கிராமத்து வழக்கு தான்.திட்டுவதை அப்படிச் சொல்வார்கள்.

"தென்னங்கிளையும் தென்றல் காற்றும் குயிலும் அடி மானே ஒன்ன தினம்
பாடும்
கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தெனம் பேசும்"

கிராமத்து வீடுகள் தோப்பு,தோட்டம் சூழப் பார்த்திருக்கின்றீர்களா?ஒரு விதத்தில் அப்பேர்ப்பட்ட சூழலையும் சொல்லிச் செல்கிறது பாடல்.
இந்தக் கஞ்சி மடிப்பு என்பது பருத்தி ஆடைகளுக்கு விறைப்பைக் கொடுக்க
பானையில் ஆக்கிய சோறை வடிச்ச கஞ்சில சற்றே நீர் சேர்த்து அலசிக் காயப் போடுவார்கள்.இந்தக் கஞ்சிக்கு ஜவ்வரிசியை உடைச்சு வேக வச்சு அதிலும் நீர் கலந்து அலசுவதுண்டு.

"பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் 
விட்டுப் போகல "


கட்டிய கணவர் உடனே இறந்து விட்டால் தாலியில் உள்ள மஞ்சளின் ஈரம்
கூடக் காயல என்பதுண்டு.உள்ள சோகத்தை பளிச்சென எடுத்துச் சொல்லும் .
எந்த ஒரு பருத்தி ஆடையும் முதல் சலவையில் சாயம் போகும்..அப்படிக் கூடப் பயன் படுத்தப் படாம கிடக்கு என்ற இயல்பான ஆதங்கம் ஒரு பக்கம்

"பண்ணாரி கோவிலுக்கு முந்தானை ஓரத்துல நேந்து முடிச்ச கடன் தீரல"

பண்ணாரி கோவில் பற்றி கோவை வாசிகளுக்குச் அறிமுகமே தேவையில்லை. இவ்விடத்தில், இந்த முந்தானை முடிச்சு தான் நான் ரசித்த
வார்த்தைகள் .. என் அம்மா அது போல நேந்து கொண்டு பார்த்திருக்கேன்.
பல சமயம் ஒரு வெள்ளைத் துணியில் முழுக்க மஞ்சள் நீரில் நனைத்து
அதிலே ஒன்னேகால் (அது என்ன கணக்கோ காலணா)ரூபாயை முடிந்து
வச்சிருப்பாங்க. நாம் நினைச்ச உடனே கோவிலுக்குப் போக முடியாது
என்பதால் ஏதேனும் சோதனைக் காலத்திலோ அல்லது ஒரு காரியம்
ஈடேறவோ சட்டென வீட்டில் இப்படிச் செய்து காணிக்கை எடுத்து வச்சு
காரியம் ஈடேறவும் அக்கோவிலுக்கு செல்லும் தருணத்தில் காணிக்கை
செலுத்துவது உண்டு.

எவ்வளவு சேதிகள் பாருங்கள் இந்தப் பாடலில் :-)

நவீன காதலில் ஆயிரம் டா ,லூசு என இருந்தாலும் இந்த "மாமா"என்ற
அழைப்பிற்கு ஈடாகா :))

(மாமா மாமா  ஒன்னத் தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ")

எங்கள் வீட்டில் வழி வழியாக அம்மாச்சி,அம்மா,அண்ணி என அனைவரும்
தங்கள் கணவரை மாமா என்றே அழைப்பதுண்டு.பல வீடுகளில் இன்னமும்
இந்த அழைப்பைக் கேட்கலாம் .
ஒவ்வொரு ஊருக்குமான வட்டார வழக்கு என்பது ஒரு வகை சிறப்பம்சம்
ஆனால் நாகரிக வட்டத்தில் (?!) இருப்பவர்கள் அதை கௌரவக்
குறைச்சலாகக் கருதி "பண்ணித் தமிழுக்கு"மாறிவிட்டது வருந்தத் தக்க
ஒன்று.

பாட்டுக்கு மெட்டமைப்பது இசையமைப்பாளர்களுக்கு சவால்.மெட்டுக்குப்
பாட்டெழுதுவது பாடலாசிரியர்களுக்கான சவால்.இது எப்படி அமைக்கப்பட்ட
பாடலோ யான் அறியேன்.ஆனால் இரண்டும் இலகுவாகப் பொருந்தி காதுக்கு
இனிமை சேர்த்திருக்கின்றன..

மண்வாசனையுடன் எடுக்க பாரதி ராஜா மட்டுமே என்ற பிம்பத்தைத் தாண்டி இயக்குநர் R .V .உதயகுமார் தானும் உண்டு என நிரூபித்த படமாகவே இதைப்
 பார்க்கிறேன்.

தற்பொழுது டிவிட்டரிலும் கூட பேச்சு வழக்கில் எழுதுவது ஒரு இலகுவையும் ஆசுவாசத்தையும் கொடுக்கிறது.போலவே இந்தப் பாடலும் மனதிற்கு மிக நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கின்றது:)