Monday, December 14, 2015

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ..

பாடல் : காதல் ஊர்வலம் இங்கே..
படம் : பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை : டி. இராஜேந்தர்
பாடலாசிரியர் : டி . இராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,சித்ரா
இந்தப் படத்துக்கு இசை டி. ராஜேந்தர் என்பதே எனக்கு இணையம் வந்துதான் தெரியும்..ஆ!ச்சரியம்.. இயக்குநர் ,பாடலாசிரியர் ,இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திறமையாளர்..தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர்.  எண்பதுகளில் தமிழ்த் திரையுலகம் பற்றிப் பேச ஆரம்பித்தோமானால் தவிர்க்கவே முடியாதவர் . இசையில் மட்டுமே இவரது கவனம் இருந்திருக்குமேயானால் நாம் இன்னும் பல முத்துக்களை இவரிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பது என் துணிபு.. இசையும் தமிழும் இவரிடம் துள்ளி விளையாடி இருக்கிறது என்பதை இவரது பாடல்கள் மூலம் உணரலாம்..
வழக்கமாக அவர் இயக்கிய படங்களுக்கு மட்டுமே இசை என்பதில் இருந்து,வேறொரு இயக்குநருக்கும் இவரது இசை ஜொலித்து இருக்கிறது..
இப்படத்தில் "பூக்களைத்தான் பறிக்காதீங்க காதலைத்தான் முறிக்காதீங்க "
மலேசியா வாசுதேவன் குரலில் ஓர் அட்டகாசப் பாடல். அதையும் அவசியம் கேளுங்க..
இந்தப் படத்தில் மற்றுமொரு பாடலான மாலை எனை வாட்டுதே தான் எனக்கு மிகப் பிடித்தது..நிச்சயத்ததில் இருந்து திருமண நாளுக்கான இடைப்பட்ட இன்பமான வேதனை மற்றும் ஏக்கம் எதிர்பார்ப்பை வெகு அழகாகச் சொல்லிய பாடல்களில் முதல்தரம் அது.. அது இந்தத் தலைமுறைக்கும் அறிமுகமான பாடல் பெரிதாக அறிமுகம் நான் தரத்தேவை இல்லை என்றே அடுத்த முத்தான இதைத் தேர்ந்தெடுத்தேன்..
ராஜாவுக்கு வயலின்,  ரஹ்மானுக்கு புல்லாங்குழல் என  இசைக்கருவிகள் பாடலில் ஆளுமையைத் தருவது போல டி .இராஜேந்தருக்கு வீணை..நிறைய பாடல்களில் துள்ளி விளையாடும்..
இந்தப் பாடல் ஆரம்ப இசையிலும் பாருங்கள்.. அட்டகாசமான துவக்கத்தைக் கொடுக்கும்..பெண்ணை மீட்டுவது போல. அது முடிந்து மெதுவாக எடுப்பார் SPB . SPB சித்ரா கலக்கலான டூயட்களில் இதுவும் ஒன்று
சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ..சுகம் சுகம்..ஆ ஆ..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ ஓ ..
காதல் ஊர்வலம் இங்கே...(வீணை )
கன்னி மாதுளம் இங்கே..(வீணை )
கன்னி என்பதிலேயே சன்னமா ஒரு குறும்புச் சிரிப்பை வைத்திருப்பார் SPB ..இப்பாடலில் ஆங்காங்கே அவரது மயக்கும் சிறப்பைக் கேட்டு ரசிக்கலாம். காதல் டூயட்களில் இவரது குறும்புச் சிரிப்பு ஒரு காதலனின் குறும்பை நினைவூட்டி மெய் சிலிர்க்க வைத்து விடுகிறது.. 😍😍
பாடலாசிரியரும் இவரே..பேச்சிலேயே எதுகை மோனை துள்ளும்...பாட்டில் கேட்கணுமா? ஆனால் உறுத்தலாக இல்லாமல் அழகாக வந்து விழுந்திருக்கின்றன வரிகள்.. இடையிடையே அழகான கோரஸ் குரல்கள்..
காதலி அருகிலே (வயலின் )
இருப்பதே ஏ ஏ ஆஆனந்தம்
காதலன்ன்ன் மடியிலே (வயலின்)
கிடப்பதே ஏ   பரவசம்
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா..ஹஹ்ஹா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா..
புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே...அடுத்து அந்த வீணையோடு,  த தா த ததா வை இட்டு நிரப்பி இருப்பார் SPB அட்டகாசமாக இருக்கும் ☺
நதியாவும் சுரேஷும் அந்தக் கால ஹிட் ஜோடி..நதியா என்றாலே அவர் உடைகளைக் குறிக்காமல் இருக்க முடியாது..அருமையான dressing sense உடையவர்.. அதனால் இன்றளவும் அவரது உடைகளுக்கு நான் பெரிய ரசிகை.. துளி கூட ஆபாசமில்லாம ஒரு டூயட் எடுத்திருக்காங்கப்பா :)
இருப்பினும் எனக்கென்னவோ கார்த்திக் காதல் காட்சிகள் அளவுக்கு சுரேஷ்  பாடல்கள் ஈர்க்கவில்லை :)
இந்தப் பாடல் இடை இசைகள் flute ,வயலின் ,சாக்ஸ் என பல கருவிகளால் நிறைந்து இருக்கும்..எனக்கென்னவோ இவை ஏதோ ஒரு format ல அமைஞ்ச உணர்வு..அதாவது வேற சில பாடல்களிலும் இந்த format வருவது போலவும்.. அப்படி வேற ஒரு பாடல் கேட்டு இது நிச்சயமாக TR பாட்டாகத் தான் இருக்கும் என நினைச்சு அதே போலயே அது TR பாடல் :) TR பற்றி பல பிம்பங்கள்..ஆனால் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது இசையை மட்டும் ரசிப்போம் ..அதுவே நிறைவானது :)Saturday, November 7, 2015

மழை நின்ற பின்பும்..

பாடல் : மழை நின்ற பின்பும் தூறல் போல
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர் :கபிலன்
பாடியவர் : கல்யாணி

வித்யாசாகரின் தரமான ஆல்பங்களில் ஒன்று "ராமன் தேடிய சீதை " ஒவ்வொரு பாடல்களுமே முத்து.. என்ன புள்ள செஞ்ச நீ பாடலில் ஒரு பாமரனின் குரலில் உருகி இருப்பார் வித்யாசாகர்.. பெற்றவனுக்குத் தானே தெரியும் புள்ளையோட அருமை .உணர்ந்து பாடி இருப்பார்..அந்த வலியை அப்படியே நம்மிடம் சேர்த்திருப்பார். இப்பவே இப்பவே இன்னுமொரு முத்து..
இதிலே மழை நின்ற பின்பும் தூறல் போல தான் என்னோட most favorite .
இந்தப் பாடலைப் பிடிக்கக் காரணம் இது பெண்ணின் மனக் குரலாக வருவது தான்..இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் :) நல்ல உவமை வரிகளில் ..

அடர்த்தியான பெண் குரலை விட மெலிதான குரல் வெகுவாக ஈர்த்து விடுகிறது.. பாடலானது ஒரு  ரமணிச்சந்திரன் சிறுகதை படித்த உணர்வைக் கொடுத்து விடுகிறது :) தனக்கு வந்த காதலை அவ்வளவு எளிதாக எந்தப் பெண்ணும் சொல்லி விடுவதில்லை.. ஆணுக்கு அந்த உணர்வு பெரும் பாரம் உடனே இறக்கி வைத்து விட வேண்டும்..ஆனால் பெண்களுக்கு அது வாழ்க்கை , யோசித்தே தான் முடிவு எடுப்பார்கள்..சட்டென உணர்வின் வசம் செல்லாம  நாலையும் யோசிப்பதும், அப்படியே சென்றாலும் யாசிக்கச் சிரமப்பட்டு நிற்பதும் நான் பார்த்த பெண்களுக்கான குணம்..இதை அப்படியே பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல்.. எத்தனையோ பாடல் வரிகள் இசை நன்றாக இல்லாமல் நம்மை வந்தடையாமல் குப்பைக்குள் முத்தாகக் கிடக்கின்றன..நல்ல இசை என்பது தனியாக ஹிட் ஆகலாம்..ஆனால் பாடல் வரிகள் மனதில் பதிவது என்பது இசை ஒத்துழையாமல் நிகழாது.. இப்பாடலிலும் இசை தன் பணியைச்  செவ்வனே செய்கின்றது..
மெலிதான ஹம்மிங்ல ஆரம்பிக்குது பாடல்..
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் ..
ஒரு பாடலை ரசிக்க வைப்பதில்  எப்படி இசை மற்றும் வரிகளுக்குப் பங்கிருக்கிறதோ அதே போல பாடலைப் பாடியவரும் .
அதிலும் சில சொற்களை உச்சரிக்கும்போது அதிலே கொடுக்கும் அழுத்தம் ,கிறக்கம் ,மென்மை இப்படிப் பல உணர்வுகள் பாடல் வரிகளுக்கு அர்த்தமூட்டுகின்றன.. இதை இந்தப் பாடலைப் பாடிய பாடகியும் உணர்ந்து செய்தது சிறப்பு..ஆங்காங்கே பாடலின் இடையே மூச்சு விட்டிருப்பார் அதுவும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்கவே செய்கின்றது..
இந்தப் பாடலில் இரண்டாம் சரணம் தான் எனக்கு மிகப் பிடித்தமானது :)
கண்ணிமைகள் கைத் தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ வில்லையா..  உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நானிருந்தும் உண்மை சொல்லத் துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை"

இந்தப் பாடலுக்கு முத்தாய்ப்பான வரிகளாக நான் நினைப்பவை
"உன்னை எனக்குப் பிடிக்கும்
அதைச் சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும் "
அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்க நேரிடும்போது இந்த வரிகளில் வழியும் பெண்மையை  வெகுவாக ரசிப்பேன் :))
இந்தக் குரல் கொடுத்த உணர்வை , காட்சியமைப்பில் கோட்டை விட்டு விட்டதாகவே தோன்றும்..அதனால் இந்தப் பாடல் கேட்க மட்டுமே..
பாடல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காதல் வந்த பெண்ணின் மனதை ,மெதுவான துள்ளலோடு (அது என்ன துள்ளல் என்று சொல்லிட்டு மெதுவா ன்னு யோசிக்காதீங்க.. பெண்ணின் மலர்ப்பாதம் எவ்வளவு துள்ளினாலும் மென்மை தான் ) இசையால் படம் பிடித்திருப்பார் வித்யாசாகர்..என்றும் இனியவைப் பட்டியலில் ஒரு தரமான மெலடி..மழை நின்ற பின்பும் தூறல் போல  பாடல் முடிந்த பின்பும் பாடலின் ஆலாபனை மனத்தில்..

Sunday, October 4, 2015

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..

பாடல் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
படம்    : கோபுர வாசலிலே
பாடலாசிரியர் : பிறை சூடன்
இசை : இளையராஜா

இந்தப் பாடல் பற்றி உங்களுக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை..ராஜாவின் டாப்  பட்டியலில் எப்படியும் பத்துக்குள் வந்துவிடும் .இந்தப் பாடல் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது எனது ஹெட்போன்..அதிலே கேட்கும்போது தான் இப்பாடலில் ராஜா கொடுத்த விருந்து ,இசை ஜாலங்கள் சின்னச் சின்ன நுணுக்கங்கள் எல்லாம் புரிபட்டன..எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் எனக்கு இந்தப் பாடல் இன்னமும் புத்துணர்ச்சியோடு புதிதாகவே உணர வைக்கின்றது..காரணம் இசை.எவ்வளவு வாத்தியக் கருவிகள் பயன்படுத்தி அதை எத்தனை அடுக்குகளாக வைத்து ஒரு RICH ORCHESTRATION கொடுத்திருக்கிறார் ராஜா என்ற ராட்சசன்.. எத்தனையோ இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிறோம் தான்.மறுப்பதற்கில்லை.. ஆனால் அவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி தனித்தன்மையோடு காட்டுபவை இவை போன்ற பாடல்களே..

எங்க...ஒன் .....டூ...த்ரீ...
எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅஅ அட்

பெண் என்பவள் அவ்வளவு எளிதில் காதலைச்சொல்லிவிட மாட்டாள்..அவளைத் தூண்டி உள்ளிருக்கும் காதலை இப்படி சத்தமாக வெளிப்படுத்துவதைச் சாத்தியமாக்கிய சிரிப்புடன் கார்த்திக் ,சொல்லிவிட்டு வெட்கிச் சிரிக்கும் அப்பெண்(பேர் சுசித்ரா வாம்..பாடல் இருக்கும் வரை இவரும் நினைவில் இருப்பார் )  என்று அப்படியே அந்தக் காட்சி மனதில் நிறைக்க,  அந்த ஆனந்தத்தை , உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இசை..

மனசுல பட்டாம்பூச்சி பறப்பது மட்டுமல்ல மனமே பட்டாம்பூச்சியாகி பறந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிறது அந்த வயலின் இசை..மெலிதாக ஆனந்தப் பிரவாகத்தை , ஆர்ப்பரித்து மேலெழும்ப வைக்கும்.
இந்த வயலினைத் தொடர்ந்து பீட்ஸ் ஆரம்பிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள் சில் சில் என்ற ஓசை வெகு வெகு மெலிதாக ஒவ்வொரு காதிலும் மாற்றி
மாற்றிக் கேட்கும். இது வீடியோவில் கேட்பதில்லை.. அந்த பீட்ஸ் தொடர்ந்து
புல்லாங்குழல் ..அதுவும் இரண்டு விதமாக ஒலிக்கும்..முதலில் தொலைவில்
இருந்து ஒலிப்பது போலவும் அடுத்து நெருக்கமாக ஒலிப்பது போலவும்
இருக்கும்.அப்படியே நின்று அடுத்து மணி மங்கள ஒலி எழுப்பும் .  அந்த மணி ஓசையின் போது அந்த சில் சில் நின்றுவிடும்..பின் SPB ஆரம்பிக்கவும் திரும்ப வந்து இணைந்து கொள்ளும்.

பாருங்கள்..ஒரு சில நொடிகளுக்கான PRELUDE க்கு எவ்வளவு மெனக்கெடல்..எத்தனை இசைக் கருவிகள் அதில் எத்தனை ஜாலங்கள்..இது பாடல் முழுக்கத் தொடர்கின்றது..SPB பாட இடையில் தொடர்கிறார் சித்ரா..இது படத்தில் சின்னக் கவிதையாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்..கார்த்திக் பாடிக்கொண்டிருக்கும் போதே மைக்கை நாயகியிடம் நீட்ட , அவர் வெட்கத்தோடு பாட ஆரம்பிப்பார்..கார்த்திக் உற்சாகத்தோடு இன்னும் ஆவலாய் மைக்கை நீட்டுவார்..இதைக் கற்பனை செய்து இசை அமைத்தாரா இல்லை இப்படித்தான் எடுப்போம் என்று கேட்டே இப்படி பாட வைத்தாரா எனத் தெரியவில்லை :)

அதே போல இடை இசையையும் கவனியுங்கள் எத்தனைக் கருவிகள் எப்படி நிறைத்து , நிறைவு செய்திருக்குமென..பியானோ(என நினைக்கிறேன் ) , ட்ரம்ஸ், புல்லாங்குழல்,கிடார்,வயலின் என ஒரு அவியலே இருக்கும்.எனினும் தனித் தனியாக உணர முடியும். அளவாக மிகையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் . அந்த சில் சில் , சிலவற்றுக்கு வழி விட்டு நின்று திரும்பத் தொடரும்.. இடையில் வரும் அந்த வயலின் நின்று நின்று இசைக்கும்..எனக்கென்னவோ அது கார்த்திக்கின் துள்ளலுக்கானது :)) ஓர்
அழகான GIFT கவரில் இன்னும் அழகு சேர்க்க அதன் மேல ஓர் வெல்வெட்
துணி கொண்டு பூ டிசைனில் அழகு படுத்திக் கட்டி இருப்பார்களே அது
போன்று இருக்கும்.இந்த வயலின் முடிந்து ஒலிக்கும்
புல்லாங்குழலானது..இசை முடிவதும் பாடகர்கள் தொடங்குவதும் ஓர்  அழகான புரிந்துணர்வு ..

கை வீசிடும் தென்றல்ல்ல்
கண் மூடிடும் மின்னல்ல்ல்
இது கனியோ கவியோ சிலை அழகோ..

பாடலாசிரியர் பிறை சூடன்..ஆச்சரியம்தான் வழக்கமாக வாலி,வைரமுத்து என்றில்லாமல் இவரைப் பற்றியும் அறிய ஓர் அரிய வாய்ப்பு.. ராஜ இசைக்குத்
தக்க இவரும் பரிமாறி இருக்கிறார் வரிகளை.

மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..

என்ன அழகான வரிகள் :)

இரண்டாவது இடை இசையில் அந்த டோட்டடோட்ட உடுக்கை மாதிரி ஒரு  இசை வர்றப்ப அந்த சில் சில் மாறி மாறி ஒலிக்காமல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கும்.அடுத்து ஒரு புல்லாங்குழல் நீளமாக ஒலிக்கும்..அதுவரை இந்த சில் சில் சேர்ந்தே வரும். அது முடிய மெலிதாக பியானோ , அடுத்த விருந்து  வயலின் கொடுக்கும்
பாருங்கள் கண் மூடி லயிக்கலாம்..

பாடலே ராஜ போதை..இதிலே கள்ளுண்டவர்கள் போலத்தான் பாடி இருப்பார்கள் SPBயும் சித்ராவும்..அதனால் ஒவ்வொரு வரியிலும் அது தென்படும்..

பூ மாலைகள் கொஞ்சும்ம்ம்
பாமாலைகள் கெஞ்சும்ம்ம்
.................
தோள் சேர்ந்திடும் கங்கைஐஐ
செவ்வாழையின் தங்கைஐஐ
............................................
இதயம்ம்ம் இடம் மாறும்
இளமை பரி...மாறும்..(உச்சரிப்பிலேயே பரிமாறுவார் SPB)
அமுதும்ம்ம் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இப்படி..

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை என்றதும் வயலின் -புல்லாங்குழல் -வயலின்  மெலிதாகத் தொட்டுச்செல்லும்..

போலவே கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவா என்ற முடிவில் வரும்
 வயலினும்..பாடல் முழுக்க இந்த வயலின் மொத்தமாய் ஒரு விதமாக கட்டி
அணைத்தால் குறுக்கே குறுக்கே வரும் மற்ற புல்லாங்குழல் வகையறாக்கள்
காதலர்களின் செல்லச் சீண்டல்கள் ,குறும்புகள் கொண்டவை.

சரணம் முடியும் தருவாயில் பல்லவி முதல் சொல் ஆரம்பிக்கும்போது     காஆ ஆஆஆத..ல் என்பதில் கொத்து புரோட்டாபோட்டிருப்பார் மெலிதான ட்ரம்ஸ்  வைத்து :)

இதயம்ம்ம் இடம் மாறும்....ம் 
இளமை பரி...மாறும்.
அமுதும்ம்ம் வழிந்தோடும்.....ம் 
அழகில் கலந்தாட

பாடல் முடியும் தருவாயில் , ஆடியோ வெர்சனில் மட்டும்தான் தனியாக
 மயக்கத்துடன் சொல்லும்  இந்த "ம்" வரும்.  வீடியோ வெர்சனில் இல்லை.
இறுதியாக ஒரு பினிஷிங் டச் என்பார்களே..புது மோகம் என சித்ரா,  முடிக்கும் போது வைத்திருப்பார்

ராஜா இதை நேரடியாக கச்சேரியில் இசைக்கும் போது ஒவ்வொரு இசைக் கருவிகளும் என்ன என்ன என அறிந்து ரசிக்கணும்..என்பது என் பேராசை..
.கண்டிப்பா இந்தப் பாடலோட ஆடியோவெர்சனை டவுன்லோட் செய்துவிட்டு மொபைலில் ஹெட்போனோடு அமர்ந்து கொண்டே இதைப்படிக்கவும்.. பின்னர் வீடியோ வெர்சனையும் பார்த்து மகிழவும்..அதன் பின் மனம் முழுக்க ஆனந்தப் பிரவாகம்  பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை ராஜா மீது ஆணையாக சொல்லிக் கொள்கிறேன் :)

ராஜாவின் இசைக்கு சரியாக நியாயம் செய்திருப்பார்கள் அழகான காட்சிப்படுத்தலின் மூலம்.  காட்சியில் ஆரம்ப வயலின் & புல்லாங்குழலுக்கு உற்சாகத்தோடு நீரில் விழுவதும்,  புறாக்கள் மேலே எழும்புவதும் வெகு பொருத்தம் .புறாக் கூட்டம் , கடல்,கார் பயணம், மழை என பாட்டு முழுக்க ஒரே மகிழ்ச்சியில் திளைத்தல் தான் காதலர்களுக்கு வேலை :) காதலர்களின் உற்சாகம் அப்படியே நம் மனத்திலும் அப்பிக் கொள்ளும் :))

 இரண்டாம் இடை இசையில் , பறக்கும் குடையை யாரோ ஒருவர் இழுத்துச் செல்வதை சமீபமாக , எழுத்தாளர் நர்சிம் சொல்லித்தான் ஊன்றிக்
கவனித்தேன்:) எங்க .. பாட்டை ரசிக்கவும் , கார்த்திக்கை வேடிக்கை பார்க்கவே போதல :)

சார் கார்த்திக் சார் அழகு சார் :-)) குறும்பு சார் .. இனிமையான காதலன் சார் .. :))
சிரிப்பே கிக்கா இருக்கும் சார் :)) சிரிக்கறப்ப கண் சின்னதாகிடும் சார்.. :))
எத்தனை ஹீரோ அவருக்கும் முன்பும் பின்பும் ..  ஆனாலும் கார்த்திக் தான்
ரொமாண்டிக் ஹீரோ.  காதல் காட்சிகளை , கார்த்திக்கின் சாயல் இல்லாமல்,
இனி வரும் ஹீரோக்கள் செய்துவிட முடியாது.

எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅ அட் :))Wednesday, August 26, 2015

மீனம்மா..அதிகாலையிலும் அந்தி மாலையிலும்

பாடல் : மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
படம் : ஆசை 
வரிகள் : வாலி 
இசை : தேனிசைத் தென்றல் தேவா 

பாட்டைப் பற்றி மட்டுமே எழுத நினைச்சேன்..ஆனால் பாடல் சார்ந்த நினைவுகள் என்னைப் பாடாய்ப் படுத்தி,  ரசிச்சததை முழுசாச் சொல்லியே ஆகணும்னு சற்றே நீளமானது பதிவு:)
தேவாவின் பாடல் ஒன்றைப்பற்றி எழுத வேண்டும் என்றதுமே இந்தப் பாடலே மின்னியது எண்ணத்தில்..இருப்பினும் வேறு பாடல்கள் பற்றியும் பரிசீலிக்கலாம் என கூகுளை ஒருமுறை ராவிவிட்டு அதிலே "ஆசை" பட ஸ்டில்களைப் பார்க்கவும் மனம் அங்கேயே நிலைகுத்தி , திரும்பவும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டேன்..மனசுக்குப் பிடிச்ச பாடல்களை எழுதும்போது , உள்ளார்ந்து ரசித்து இருந்தால் ஒழிய ,அதைப் பற்றி எழுத முடியாது எழுதவும் வராது..அதனாலேயே சில நண்பர்கள் வேண்டி விரும்பிக் கேட்ட பாடல்கள் இன்னமும் தொங்கலில் நிற்கின்றன..
பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல்கள் யாவுமே அவ்வளவு எளிதாக மறப்பதில்லை. ஒரு பாடலின் வெற்றி என்பது அதைத் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்ட வைப்பதில் தான் இருக்கிறது..இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என எண்ண முடியாத அளவுக்குக்கேட்டிருக்கிறேன்..அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் சரியான டேப் ரிக்கார்டர் கிடையாது..ஒரு வாக்மேன்..ரெண்டு ஸ்பீக்கர்.. அவற்றை இணைக்க ஒரு ஆம்ப்ளிஃபையர் .. என் அண்ணன் செட் பண்ணி வச்சது.. இதுல கேசட் சிக்கினா எடுத்து , அந்த ஓட்டையில் விரலை விட்டு சுத்தோ சுத்துன்னு சுத்துவோம்..அந்த அளவுக்குப் பாட்டைப்போட்டு தேய்தேய்ன்னு தேய்க்கிறது :) அதிலும் ஸ்பீக்கரில் அலற வைச்சு பக்கத்து வீடுங்களுக்கு யாம் பெற்ற இன்பத்துல வாரி வழங்குறது..அவங்களுக்குத் தொந்தரவா இருக்கும்ன்னு தோனவே தோனாது..பாவம் அவங்க வீட்டுல இதெல்லாம் இருக்குமான்னு ஒரு கர்வமும் கரிசனமும் தான் :)) இதுல அஞ்சாறு வீடு தாண்டி எங்க ட்யூஷன் அக்கா (நோ டீச்சர் என்ற அழைப்பு ) ஹேய் உமா உங்க வீட்டில அந்தப் பாட்டு கேட்டுச்சே..செம சூப்பர் என்பார்கள்..அவ்ளோ பெரும்மையா இருக்கும்..ஆனால் அதெல்லாம் அவங்க வீட்டில் புதிதாய் வந்து இறங்கிய வெளிநாட்டு டேப் ரெக்கார்டரை பார்க்கும் வரை தான்.. மனம் அப்படியே தொங்கிப் போனது.. அது போன்று நாமும் வாங்கி வைக்க வேண்டும் என்ற கங்கணம்  நிறைவேறிய காலத்தில் அதன் மீதான ஈடுபாடு அற்று , சன் டிவியில் வீடியோ பாடல்கள் மீது மனம் லயித்து விட்டது..

இந்தப்படத்திற்கு இசை தேவா என்று அறிந்தபோது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை..காரணம் தேவா மீதான காப்பி என்ற பிம்பம் தான்..இதற்கு ரஹ்மான் என்றே நினைக்கும் அளவுக்கு பாடல்கள் அவ்வளவு fresh செம பீட்ஸ்.. காதலன் படத் தரத்தில் இந்தப் பாடல்கள் இருப்பதாகவே என் மனசுக்குப்பட்டது..அதற்கு முன்பு தேவா பல படங்களுக்கு இசை அமைத்து இருந்தாலும், அநேகமாக இந்தப் படத்திற்குப் பிறகு தான் அவருக்கு நிறைய படங்கள் கிடைத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் அந்த அளவுக்குப் பாடல்கள் சூப்பர்  ஹிட்.தேவா என்றாலே கானா பாடல்கள் என்பது எல்லாம் வான்மதி பட பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா பாடல் பின் அதை விட அதிக ஹிட் ஆன வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா ,கவலைப்படாதே சகோதரா பாடல்களுக்கு அப்புறமே..ஆனால் இந்தப் படம் அதற்கும் முந்தைய கால கட்டம்..இன்று ஒன்றிரண்டு ஹிட் பட இசைகளை வச்சுகிட்டு இன்டர்நெட் காலத்தில் அடுத்த அடுத்த படங்களுக்கு வேறு எங்கோ சுட்டும் (கவுரமாக இன்ஸ்பிரேஷன் ) இசை அமைக்கும் இசையமைப்பாளர்கள் மத்தியில் தேவா மட்டும் இப்படி ஒரு பழி சுமந்து திரிவது வேதனையே..அதை என் மனத்தில் இருந்து புறந்தள்ளி அவர் கொடுத்த பல மெலடி மெட்டுக்களை இன்றளவும் ரசித்து வருகிறேன்.. 90- களில் பல ஹிட் படங்களில் இவர் ஹிட் பாடல்கள் ..கேட்டுப்பாருங்கள் அட என அசந்தே போவீர்கள்..இந்தப் படத்தில் அத்தனைப் பாடல்களுமே அருமை ரகம்..புல்வெளி புல்வெளி சித்ரா சோலோ ஓர் அட்டகாசம் என்றால் SPB&சொர்ணலதாவுக்கு திலோத்தமா இன்னுமோர் முத்து..கொஞ்ச நாள் பொறு தலைவா ஹரிஹரனின் கொஞ்சும் குரலில் ..ஷாக்கடிக்குது சோனா அக்காலத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே புகழ் சுரேஷ் பீட்டர் -GV பிரகாஷ் ..மீனம்மா உன்னி கிருஷ்ணன்,அனுராதா ஸ்ரீராம்..

அஜித் என்ற ஹீரோ ஆசை நாயகன் எனப் பெயர் பெறக் காரணம் பெற்ற படம்.பைக் ரேஸில் முதுகில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தவருக்கு, பவித்ரா கவனத்தைக் கொடுத்தாலும் முழு வீச்சில் பலரிடமும் சென்றடைய "ஆசை" தான் காரணம்.  இந்தப் பட ஷூட்டீங்ல பிரகாஷ் ராஜிடம் படம் ஹிட் ஆகிடும்ல என அஜித் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.. இந்தப் பட ஹிட்டுக்கு நன்றிக்கடனாகவே இயக்குநர் வசந்துக்கு "நேருக்கு நேர்" படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் அஜித்..ஆனால் பேருக்கு சில காட்சிகள் எடுக்கப்பட்டு , அதை வீணடித்து வேறு வழியே இல்லாமல்தான் விலகினார் அஜித்..அஜீத்துக்குப் பதில் சூர்யா ஒப்பந்தம் ஆனார். இப்படத்தில் கிடைச்ச ரொமாண்டிக் ஹீரோ இமேஜை அடுத்து வந்த "வான்மதி"" காதல் கோட்டை" தக்க வைத்தன. நிறைய தோல்விப்படங்கள் இருப்பினும் அரவிந்த்சாமி மாதிரி காணாமல் போகாமல் ,அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு தோல்வியிலும் பொறுமை காத்து , ஹிட் வரவும் கொண்டாடினார்கள்.. இதுதான் இன்றுவரை அஜித்தின் பெரிய பலம்..அஜித் உடைகளும் ரசிக்கும்படி இருக்கும்.இப்படத்தில் அஜித்க்கு குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்..perfect match..நிஜமாகவே அது மட்டும் ஒரிஜினலா இருந்திருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்.அஜித் டான்ஸ் குறை சொல்றவங்களே ..இந்தப் படப் பாடல்களில் வேகமாக ஆடாவிடிலும் ஒரு தனி ஸ்டைலாகவே எனக்கு இன்னைக்கு வரைக்கும் படுது  :))

ஆசை கேசட் முகப்பில் இந்தப் பாடலின் ஸ்டில்கள் தான் ..
அஜித் எனும் நடிகன் மீதான மோகம் இந்தப் படத்திற்குப் பிறகுதான்..கைகள் விரித்து ,அதில் கன்னம்  பதுக்கி ஆ...வென பார்த்ததுண்டு..:)) இந்தப் படம் பாட்டெல்லாம் இப்படி ஒவ்வொரு தடவையும் புதுசா பார்க்கிற மாதிரியே பார்த்ததால ,அம்மா கொதித்து ,அதைப் பார்த்து அண்ணன் என் முதுகில் ஓங்கி ஒன்னு போட்டதெல்லாம் வரலாறு.. இப்பவும் இந்தப்  பாடல் பத்தி எழுதலாம்னு எதுக்கும் ஒருதடவை யூ ட்யூப்ல பார்க்கப் போனா மீள முடியல உட்கார்ந்து நாலு நாளா எழுதிட்டுகிருக்கேன்  ..:)) ஒரு ட்யூஷன் வகுப்பில் மஞ்சள் மாலை வேளையில்,  மாடில உட்கார்ந்து படிக்கிறோம் க்கான்னு சொல்லிட்டு நானும் தோழியும் மேல உட்கார்ந்து ,எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே இதுவரை யார் கேட்டும் பாடினது இல்லடி உனக்காக.. சரியா..என்று தோழி இந்தப் பாடலைப் பாடினாள்..எனக்கு அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி அது ஒரு சிறப்புப் பரிசாகவே தெரிகிறது :))
என் அம்மா இப்பவும் "இந்த பிரகாஷ்ராஜ் படமே எனக்குப் பிடிக்காது அவன் கட்டுன பொண்டாட்டியை மூச்சடைக்க கொல்லுவான் "என்று பிரகாஷ்ராஜ் படங்களைப் புறந்தள்ளுவார் ..அந்த அளவுக்கு சைக்கோ இப்படத்தில்.
இந்தப் பாட்டுக்கு முன்பும் திலோத்தமா பாடல் முன்பும் அஜித்,  சுவா விடம் கட்டிக்கட்டுமா என்று தவிப்பும் ஆசையுமாகக் கேட்பார்..அனுமதி கிடைத்ததும் ஓடிச் சென்று அணைப்பார்..அதை உணர்த்தும் வகையில் இருக்கும் இப்பாடலின் ஆரம்ப இசை..வீடியோவில் அது மிஸ்ஸிங்..ஆடியோல இருக்கும் கேளுங்க..இளமையும் துள்ளலுமாக இசை.

இணையத்தில் இந்தப் பாடல் வரிகள் பெரும்பாலும் தவறாகவே எழுதப்பட்டிருக்கின்றன.. என்னை மாதிரி நிறையவாட்டிக் கேளுங்கடா :)
மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில்தான் புதுக்காவியமே
அது என்ன அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே.. ஏன் அப்ப மதியம் யார் ஞாபகமாம்?  என்றொரு கேள்வி மனதில் கோபமாய் எழுந்து அடங்கும் :)
சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக் கொண்ட போதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல.. ஆ ..ஆ..
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல...ஆ..ஆ..
காயமின்றி..என்ற உச்சரிப்பில் செல்லமாய் ஒரு கொஞ்சலும் குறும்பும் கலந்த சங்கதி வைத்திருப்பார் அனுராதா ஸ்ரீராம்..
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா..
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா...
உன்னியின் சீண்டல் குரலுக்கு வெட்கமாய் பதில் தருவார் அனுராதா..
மாமன் காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்..
ஓர் அழகான ஊடலுக்குப் பின்னான சமாதான உடன்படிக்கையில் காதலன் மடியில் காதலி அமர்ந்து கொண்டு, இருவருக்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதைப் போன்றதே இப்பாடல் வரிகள் :) அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க அஜித் -சுவா ஆனாலும் ஆத்மார்த்தமான காதல் தான் திரும்ப அவங்கள சேர்த்து வைக்கும்..படத்தில் கவிதையாய் சில காட்சிகள் ..நிறைய ரசிக்கலாம் :) இந்தப் பாடலுக்கு இப்பாடகர்கள் அருமையான தேர்வு என்பேன்..உன்னி குரலில் ஒரு வாஞ்சை. ..அனுராதா ஸ்ரீராம் இதற்கு முன்பு என்ன பாடல் பாடினார் என்று தெரியாது..ஆனால் எனக்கு அவரை அறிமுகம் செய்து வைச்ச பாடல் இது..மிக மிக மெலிதாக காதுக்குக் குளிர்ச்சி அவர் குரல்..
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உன்னைக் கேட்டேனே சண்டை போட்டேனே ன்னு ஒரு வரி வரும்..இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சியே கிடையாது..அப்புறம் ஏன் இப்படி வச்சாங்கன்னு ரொம்ப நாள் மண்டை காஞ்சேன் ..ஊடல் என்பதற்காக இதைச் சேர்த்து இருப்பார் போலும் வாலி..சரி அவங்க போட்ட சண்டையக் காட்டலன்னு நானா சமாதானம் ஆகிகிட்டேன் அப்ப :))

அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது 
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது 
அன்று பட்டுச்சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் 
உன்னைக் கேட்டேனே சண்டை போட்டேனே 
அது க..ண்ணில் நிற்கிறது..
ஜாதி மல்லிப் பூவே..தங்க வெண்ணி லா...வே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு....
யாராச்சும் பேசி நேரத்தை வீணடிப்பாங்களா டே ன்னு தோனிருக்கு :-P
மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு 
அம்மம்மா உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு..
இந்தப் பாடலில் ஆடியோவில் தான் கீழ்க்கண்ட வரிகள் இடம்பெறும்..வீடியோவில் இதுவும் கட்..படுபாவிப்பசங்க..
உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டுப் போக 
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
பின்பு மோகனப் பாட்டேடுத்தோம் ஆ..ஆ..
முழு மூச்சுடன் காதலித்தோம் ஆ..ஆ..
பாடல் படமாக்கிய விதமும் அருமை....நடன அமைப்பாளர் ராஜூ சுந்தரம் .   மங்கலான ஒளியில் முகம் தெரியாமல்  ஆடுவதும் அவரே..ஒரு பக்கம் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் மறுபக்கம்  உறுத்தாமல் இருக்கும் நடனக் காட்சிகள்..ராஜூ சுந்தரம் & கோ அதிகம் கவனிக்கப்பட்டது இப்படத்திற்குப் பிறகே என நினைக்கிறேன்..ஹைய்யோ ஹய்யையோ பாட்டில் பூஜா பத்ராவுடன் நடனம் ஆடுவார்..அந்தப் பாட்டுல கூட கடைசியா அஜித் தன் தொப்பிய எடுத்துட்டு சுவா கன்னத்தில் முத்தமிடுவார்..பயபுள்ள இதுக்குத்தான் முன்னாடியே திட்டுவாங்கும் ஆனாலும் அடங்காது :))

இந்த ஹம்மிங் துத்துத்துது...துது துத்துத்துது இன்னும் அழகு பாடலுக்கு..பேசிக் கொண்டு இருக்கும் போதே எதிர்பாரா விதமாய் கன்னத்தில் சன்னமாய் அஜித்தின் முத்தமிடல்களே ரொமான்ஸை அதிகமாய்க் கொடுக்கும்..பாடல் முடியும் தருவாயில் 4.35-4.40 அஜித் ஒரு காதல் பார்வையை எடுத்து வீச, சுவலட்சுமி தாளாமல் கழுத்தோடு கட்டி அணைப்பார்..சட்டென இறுகும் அஜித் பிடி..சான்சேஏஏஏஏ.. இல்ல மச்சி :)))


டிஸ்கி : அன்று பட்டுச்சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே என்ற வரிகளுக்கான அர்த்தத்தை நண்பர் ஒருவர் கூறியுள்ளார்..அது கல்யாணத்துக்கு நாள் குறிக்கச் சொன்னேனே என்ற பொருளாம்.. படத்திலும் அப்படி ஒரு சண்டை வரும்..வாலி சும்மா எதுவும் எழுதல ..:))Thursday, August 13, 2015

கனா காணும் கண்கள் மெல்ல..

பாடல் : கனாக் காணும் கண்கள் மெல்ல..
படம் : அக்னி சாட்சி
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : வாலி
 பாடியவர் : SPB
இளையராஜா முதலில் அறிமுகம் ஆன எனக்கு இந்தப் பாடல் MSV இசை என்றதும் ஆச்சர்யம் தாள வில்லை. MSV என்றால் பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தவர் அதைத் தாண்டி இப்படி ஒரு மெலடி அவரிடம் இருந்து என்ற போது தான் அவரின் உண்மைத் திறமைகள் புலப்பட ஆரம்பித்தது..
ஆரம்பத்தில் மெல்லிய கிடார் இசை தாலாட்டுக்குத் தயார் படுத்தும் அதைப் பின் தொடர்ந்து மொத்த தாய்மையையும் உள்ளடக்கி தாயுமானவனாக SPB மெல்லமாக ஆரம்பிப்பார்..
இசை சிறந்ததா பாடல் வரிகள் சிறந்ததா என சில பாடல்களுக்கு பட்டி மன்றமே வைக்கலாம்..அப்படியான பாடல் இது..வாலியின் மென்மை தோய்ந்த இந்தத் தாலாட்டு வரிகள் என் மனதிற்கு மிக மிக நெருக்கமானவை. ஒரு தலைவன் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான பாடலாக இதுவும் ,உறவுகள் தொடர்கதையும் (கங்கை அமரன் )மிகப் பிடித்தம்..
சமூகத்தின் அநீதிகள் பிடிக்காத நாயகி,அவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நாயகன் அவளின் மனப் போராட்டங்களுக்கு மயிலிறகான சொற்கள் கொண்டு வருடுகிறான்..இந்த அருமையான கதைக் களத்திற்கு பக்க பலமாக இசையும் வரிகளும் .. இந்தப் படம் பார்த்தால்தான் இந்தப் பாடல் இப்படத்திற்கு எப்பேர்ப்பட்ட ஜீவனை சுமந்து நம்மிடம் கொண்டு செலுத்துகிறது என உணர முடியும்..சமூகத்தின் மீதான ஆதங்கங்கள் அநீதிகள் ஓய வேண்டும் என நாயகி நினைவோ அன்றி வெறும் கனவு மட்டும் தானோ என்பதை உணர்ந்து தலைவன் ஆரம்பிப்பது போல் இருக்கும்.
"கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப்போகும் நேரம்  கண்ணே.."
இதற்கு அடுத்து வரும் இடை இசை ஆனது நாயகியின் மன ஓட்டங்களைப் பதிவு செய்திருக்கும்..அவளின் பதட்டம் வேகம் கோபம்  ,வேதனை என..அதனை அப்படியே அரவணைத்து ஆறுதல் சொல்லும் அடுத்து வரும் சரண இசையும் வரிகளும் ..
" குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ 
நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி 
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே.."
சரிதாவுக்கு இது ஓர் அட்டகாசமான படம்..இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தனக்குப் பிடித்த நடிகை சரிதா என்றதில் துளி கூட மிகையில்லை..அந்த குண்டுக் கண்களும்,இயல்பான நடிப்பும் அருமையான குரலும் நம்மைக் கதறடித்து இருப்பார் படத்தில்.. எல்லாப் பெண்களும் புரட்சிப் பெண்கள் அல்ல..விரும்பி ஆவதும் அல்ல..சூழல் ..ஒடுக்கி ஒடுக்கி ஒரு கட்டத்துக்கு மேல் தாள முடியாமல் வெடிக்கும்போது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றப் பழமொழி நினைவுக்கு வருகின்றது..
எண்பதுகளில் படங்கள்  எப்படி பெண்களின் மீதான அடக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அதை எப்படிப் போராடி பெண்கள் எதிர்கொண்டனர் என்பதைப் பதிவு செய்தன பல திரைப்படங்கள்..இன்று அதை மீறிக் கடந்து வந்து விட்டாலும் ,அக்காலம் எத்தகையது என்பதை அறிய உதவியாய் இருக்கின்றன இது போன்ற படங்கள் தாம்.. இப்படியான கதைக் களங்கள் கொண்ட படங்களில் இசையும் அதன் பொறுப்பை உணர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது..
"புதிய கவிதை புனையும் குயிலே 
நெஞ்சில் உண்டான காயம் என்ன..
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன..
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் 
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் 
வருங்காலம் இன்பம் என்று 
நிகழ்காலம் கூறும் கண்ணே..நிகழ்காலம் கூறும் கண்ணே.."

எவ்வளவு அழகான நம்பிக்கை தரும் ஆறுதல் ..இது போன்ற பாடல்கள் எல்லாம் SPB க்கு அல்வா போல.. இவ்வளவு இனிமையான குரலில் , ஆண்மை சற்றே மென்மையும் பெண்மையும்  கலந்து வெளிப்படும்போது அது முழுமையும் நிறைவும் பெறுகின்றது..அப்படி  ஓர் தலைவன் மடிதான் ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கக்கூடும்.எந்த கிடாரில் அச்சாரம் போடப்பட்டதோ இறுதியில்  அதிலேயே மெல்லக் கண்ணுறங்க வைத்தும் முத்தாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..
தலைவனின் மனம் மற்றும் தலைவியின் மனம் என்று இரு மாறுபட்ட மனநிலைகளின் வெளிப்பாடான இசை அவ்விரண்டையும் ஒரு புள்ளியில் முரண்பாடின்றி இணைத்து ,அருமையான காலத்தால் நிலைத்து நிற்கும் பாடலைக் கொடுத்துத் தாலாட்டிய MSV அவர்களின் புகழ் என்றென்றும் நீங்கா இடம் பெற்று கன கம்பீரமாக நம் மனதில் வீற்றிருக்கும் ..


Thursday, July 2, 2015

மலரே..மௌனமா...

பாடல் : மலரே..மௌனமா..
படம் : கர்ணா
பாடியவர்கள் : SPB,ஜானகி
பாடலாசிரியர் : வைரமுத்து
இளையராஜா ,ரஹ்மான்,தேவா,சிற்பி, வித்யாசாகர் என்ற பல அற்புதக் கலவைகள் கலந்த வரத்தை அனுபவித்ததை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்.. சில பாடல்கள் தென்றலைப் போல உள் நுழைந்து ஒரு புயலைப் போன்ற தாக்கத்தை மனதினில் ஏற்படுத்தி விடும்..அது போன்றவற்றில் இதுவும் ஒன்று..

மனம் மெல்ல மேலெழுந்து பறந்து ஒரு நிலைக்குச் சென்றமர்வதைப் போன்ற ஆரம்ப இசை ..அதிலே வண்டு, பூவின் மௌனத்தைக் கலைக்கவென  அதைச் சுற்றி வட்டமிடுவதற்கு ஒப்பாக புல்லாங்குழல் . SPB ,ஜானகி டூயட்களுக்கு மற்றுமோர் மணிமகுடமாக இந்தப் பாடல். ஓர் ஏகாந்தத் தருணத்தில் எப்படி உருக வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியாதா என்ன ..பாடலாசிரியரின் வரிகளுக்கு நியாயம் செய்தல் என்பது அந்தச் சொற்களை இடம் பொருள் ஏவல் உணர்ந்து உச்சரிப்பதுவே..இந்தப் பாடல் முழுக்க அந்த நியாயத்தைக் காணலாம்..பாடல் முழுக்க ஏகப்பட்ட சங்கதிகள்.. இந்தப் பாடலை அச்சுப் பிசகாமல் அப்படியே பாடுவது வேறு பாடகர்களுக்கு ஒரு பெரிய சவால் தான்.
ஏதோ சுகம் உள்ளூறுதே ..ஏனோ மனம் தள்...ளாடுதே ....என்ற உச்சரிப்புகளாகட்டும் ..கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன் என்பதற்கு காற்றைப் போல வந்து கண்கள் மெல்ல திறந்தேன் என்பதில் மெல்லத் திறப்பதை உணர்த்துவார்..செவிக்குக் காட்சியானவை SPB அவர்களின் பாடும் விதமும் உச்சரிப்புகளும்..

பொதுவாக இரவு ஒன்பது மணிக்கு மேல் தான் பாட மாட்டேன் என்று SPB சொல்ல,சரி எதற்கும் பாட்டைக் கேளுங்க பிடிச்சா இப்பப் பாடுங்க இல்லாட்டி காலையில் பார்த்துக்கலாம் என வித்யாசாகர் சொல்ல ,பின்பு கேட்ட SPB இரவு 11.30 வரை மெய் மறந்து பாடிக் கொண்டே இருந்தாராம்.. நடிகர்,இயக்குநர் ,இசையமைப்பாளர் சூழ இருந்த இடத்தில் ,பாலு சார் மெல்ல மண்டியிட்டு , கைகூப்பி (தட் கே ஆர் விஜயா கைகூப்பிக் கதறும் மொமென்ட் ) தயவுசெய்து இந்தப் பாடலை நன்கு காட்சிப்படுத்துங்கள்..பத்து பதினஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை தான் இந்தப் பாடல் போன்று ஒன்று கிடைக்கும்..அதை மிஸ் பண்ணிடாதீங்க என்றாராம்..ஆகவே காட்சியமைப்பிலும் என்னைக் கவர்ந்த பாடல்.. காதலை யாசித்து நிற்கும் தலைவனும் , யாசிப்பதேன் மௌனம் சம்மதம் எனச் சொல்லும் தலைவியுமாக பாடல் செல்லும்..ரஞ்சிதாவின் வெட்கத்தை நன்கு தரிசிக்கலாம்:)  ரஞ்சிதா கைகள் கொண்டு முகத்தை மூடி நிற்க ,பின்னர் கைகள் விலக்கும் போது அவ்விடத்தில் புல்லாங்குழல் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கும்

காதலர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாதது போலவும்,அதே நேரம் அவர்களின் மகிழ்வுக்கு இசைந்து நடப்பது போல (0.19ஆரம்பித்து -0.27 குரல் ஆரம்பிக்கவும்,அத்தோடு இணைந்து பாடல் முழுக்க வரும் இசை அழகு .ஆனா..ஊ ன்னா அந்தக் காலத்துல பனிப் பிரதேசத்திற்குப் போயிடுவாங்க..ரோஜாவில் பிரபலமானதாலோ என்னவோ..ஆனால் அதுவும் கண்ணுக்குக் குளிர்ச்சி.. முதல் இடை இசையில் மெல்லிசான அந்த ஹம்மிங் ..அதன் பின் வரும் வயலின் "ஆமா ஏதோ பேசிட்டு இருந்தோம்ல" என்று இயல்புக்கு இழுக்கும்...அதைத் தொடர்ந்து வரும் புல்லாங்குழல் அதை ஆமோதித்து விட அதற்கடுத்து வரும் வீணை சிணுங்கிக் கொண்டே பேச எடுத்துக் கொடுக்கும் .பாடல் முழுக்க மயங்கிக் கொண்டே பாடும் காதலர்கள் , மனத்தை மயக்கும் மெல்லிசை ஏகாந்தத்தை உணர்த்திச் செல்லும்..இரண்டாவது இடை இசையில் , புல்லாங்குழல் ,வீணை, வயலின் சூழலைப் புரிந்து ஒன்றுக் கொன்று நமட்டுச் சிரிப்போடு குசலம் விசாரித்துக் கொள்கின்றன .
காற்றே என்னைக் கிள்ளாதிரு..
பூவே என்னைத் தள்ளாதிரு..
வெகு அழகாகப் பாடி இருப்பார்கள் ..இந்த வரிகளின் ஊடே வயலின் சும்மா புகுந்து விளையாடி இருக்கும்.. கிள்ளிடாத கிள்ளிடாதன்னு கொஞ்சுவது போல :) தொடக் கூடாது என்று அல்ல தொடாததாலே கோபம் வரும் மலருக்கு..ஆனால் பொய்யாக கோபப் பட்டுக் கொள்வது தான் :)

இறுதியாக ஜானகியின் ஹம்மிங், பாடலுக்கு முத்தாய்ப்பாக அமைவது இன்னொரு சிறப்பம்சம்.. கால ஓட்டத்தில் , என்றென்றும் வித்யாசாகரை அடையாளப்படுத்தும் பாடல் இது.
தன்னை உலகெங்கிலும் கொண்டு சேர்த்தது இந்தப் பாடல் என வித்யாசாகர் சொன்னது துளி கூட மிகையில்லை ..என்ன...இன்று ஒரு சில ஹிட் கொடுத்தவர்களையே தகுதிக்கு மீறிக் கொண்டாடும்போது , நாம் வித்யாசாகரை இன்னும் கொஞ்சம் கொண்டாடி இருந்திருக்கலாம் என்ற பெருமூச்சு எழாமலில்லை..

Wednesday, June 10, 2015

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே...

பாடல் : சிறிய பறவை
படம் : அந்த ஒரு நிமிடம்
இசை :இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : SPB,ஜானகி
பாடல் என்ன படம் இசை யார் என்றே அறியாத காலத்தில் அண்ணனின் TDK கேசட்டின் மூலம் அறிமுகமான பாடல்களில் ஒன்று.. இது இரவு கேட்பதற்கு, இது பகலில் கேட்பதற்கு , இது ஒரே மாதிரி பீட்ஸ் , இடையில் அதிரடியாய் உறுத்தல் வராத விதத்தில் பாடல்களின் தர வரிசை பிரித்து வைத்திருப்பார் என் அண்ணன்.   அப்படியாக என் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல். இப்பாடலை ஒலியைச் சத்தமாக வைத்தும் பீட்ஸ் ரசிக்கலாம்.   அன்றி மெலிதாக, இரவு நேரத்தில் ஓர் ஏகாந்தத் தருணத்திலும் கசிய விடலாம்.  எச்சூழலுக்கும் கேட்க இனிமை. சில நேரம் பாடலுக்காக இசையா, இசைக்காக பாடலா எனக் குழப்பம் வரும்..  இந்தப் பாடல் எழுதிய பின்பே இசையமைக்கப்பட்டதோ என்றே தோன்றும் எனக்கு.   சிறிய பறவை என்று தான் பாடலின் ஆரம்பம் என்பதை அறிந்தே அமைத்தது போல ஆரம்ப இசை அப்படியே கீழிருந்து மேலே எழும் ஒரு பறவை பறக்க ஆயத்தமாகி பின் எழுவது போல வயலின் ஆர்ப்பரித்து எழும்.

 பல்லவி முடிந்ததும் அன்பு லைலா என்ற வரிகளுக்காகவே கோர்த்தது போல இடை இசை (.59-1.01 &1.04-1. 06) இருக்கும் . கவனித்தால் தெரியும்.கருவி பெயர் பரிட்சயம் இல்லாவிடிலும் பொதுவாக மொகலாய கதைகள் கொண்ட பாடல் படங்களில் அந்த இசை வரும்.

SPB-ஜானகி போன்ற ஜோடிகள் இனி கிடைப்பது அரிது.. டூயட் பாடல்களில் அப்படியே ஒரு ரொமாண்டிக் mood ஐக் கொண்டு வந்து விடுவார்கள் .. கேட்பவர்களுக்கு ;)  இசையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் இருவரும் செய்யும் கொஞ்சல்கள் பாடலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.
 SPB &கமல் ஜோடி பற்றி தனிப் பதிவுகளே எழுதலாம் ஆராய்ச்சி செய்து .. அந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒத்துப்போகும் :)

அன்பு லைலா...ம்
நீயே எந்தன் ஜீவ சொந்தம் (ஒரு சிறிய சிரிப்பு)
நீ சிரித்தால் ..
பாலை எங்கும் பூ வசந்தம்
காதலர்களுக்கு இடையேயான உரையாடல் ஒரு கலை நயத்தோடு சொற்களால் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் . ராஜா- வைரமுத்து ஜோடியில் மற்றுமோர் முத்து மணி .வருகவே என்ற ஒலியில் ஓர் அழைப்பை உணர முடியும்.

அடுத்து 2.04இல் ஆரம்பிக்கும் இடை இசை ,  முதல் இடை இசையில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.   ஒரு rich orchestration என்பார்களே அதை இந்தப் பாடலில் நாம் உணரலாம்.   ஸ்வரங்கள் பதனிச என வரும்..அந்தக் காலத்தில்  ஆடத் தெரியாதவர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமோ என நினைக்கும் அளவுக்கு இருக்கும் ஓர் ஆளை நான்காய் திரையில் காட்டுவது :)  ஓர் மாபெரும் சபையினில்,  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அறிதல் மட்டுமல்ல  உங்கள் செவிக்கும் அதைக் காட்சியாக்க வேண்டும்.   அதை அப்படியே பிறழாமல் செய்திருக்கும் இரண்டாவது சரண இடையிசை.
இரண்டாவது சரணத்தில் நான் எப்பொழுதுமே ரசிக்கின்ற வரிகள்

"சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் "

இந்த வரிகளாகட்டும் அதற்கு உயிர் கொடுத்து உருகும் SPB ஆகட்டும் ஒரு பெரிய கை தட்டல் :) சோழன் குயிலுக்கும் சோலைக் குயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உச்சரிப்பில் உணர முடியும் .
வல்லினங்கள் வாய் வலிக்கும் என்பதில் ஓர் அக்கறை தெரியும்.. வல்லினங்கள் எனும்போது அவர் எப்படி உச்சரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.செம்ம :) வலிச்சுடுமோ எனும் பதட்டமும் இருக்கும்.

யப்பா..டேய்..சாமி...என்னாம்மா லவ் பண்றீங்கடா...ன்னு தோன வைக்கும் :) தமிழோடு என்ன ஓர் அழகான ஓர் உவமை.

"அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே
இதழில் யுத்தமே முத்தமே "

இரண்டாம் சரணத்தில் வரும் இளைய கம்பனே என்பது அம்பிகாபதி.கம்பரின் மகன் .அமராவதியுடனான இவரது காதல் புகழ்மிக்கது.அதை அழகாகப் பிரதி பலிக்கும் வரிகள்.

சொந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்தது
தென்றலே இங்கு நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது..
இதுவரை முதல் சரணத்திற்கும் இரண்டாவது சரணத்திற்கும் எவ்வளவு வேறுபாடு ..எனினும் எங்கேனும் ஓர் உறுத்தலையாவது நம்மால் உணர முடிகிறதா?அது தான் இசை .ராஜாவைக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன ஆயிரமாயிரம் பாடல்கள் இது போல இருக்கின்றன :)
முதலாம் சரணம் "வருகவே" போலவே இங்கு "வாழவே" அப்படியே இணையும் .
மூன்று சரணங்கள் கொண்ட பாடல்கள் பெரும்பாலும் இப்பொழுது வருவதில்லை. அடுத்த இடையிசை அப்படியே மேற்கத்திய பாணியைத் தொட்டுச் செல்லும்..
ஏனெனில் சரணம் ஆரம்பம் அன்பு ரோமியோ என இருக்கும்
சரண முடிவில் ,இப்படி மூன்று விதமான (லைலா-மஜ்னு), அம்பிகாபதி அமராவதி , பின்னர் ரோமியோ -ஜூலியட் )கலந்த கற்பனையை மரத்தில் சாய்ந்து கொண்டு கமல் கண்டு கொண்டிருப்பார். இந்த மனசு இருக்கே அது திடீர்னு எங்க வேணா பறக்கும்..ஆனா அதைச் செயல் படுத்துவது அவ்வளவு சாத்தியமா ?ராஜா அதில் கமலுக்கு நன்கு ஒத்து உழைத்திருக்கிறார் .பாலா அதை உணர்ந்திருக்கிறார். சரண முடிவில் வரும் அந்தச் சிரிப்பு ..யப்பா என்னா கிக்..:))  இது கமலுக்காகவே என பரிசளித்து இருக்கிறார் SPB.
"பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே" (திரும்பவும் பல்லவிக்கு வர்ற அந்த  வர்ற பீட்ஸ் இங்க வந்து சேர்ந்துக்கும் .. சரணத்தில் மட்டும் வேணாம்  நீ கொஞ்சம் ஓரமா நில்லுன்னு சொல்லி வச்சிருப்பார் போல ) போதும் நம்ம கனவு கண்டது இனி காதலுக்கு இலக்கணமா அவங்களைச் சொன்னது போல இனி நம்மையும் உலகம் புகழட்டும் என்று முடித்திருப்பார்கள்

கனவு கலையலாம் ..பாடல் தந்த பாதிப்பு கலையாது :)Thursday, June 4, 2015

காடு பொட்டக் காடு..

பாடல் : காடு பொட்டக் காடு 
படம் : கருத்தம்மா (1994)
இசை : A.R.ரஹ்மான் 
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்,பாரதிராஜா ,டி.கே.கலா 
பாடலாசிரியர் : வைரமுத்து 
நேயர் விருப்பமாக வருகிறது இந்தப் பாடல் :-) ரஹ்மான் எத்தனையோ படங்களுக்கு இசை அமைத்து விட்டாலும் என் மனம் என்னவோ அவரின் தொண்ணூறுகளின் பாடலைத் தாண்டி நகர மறுக்கின்றது..அத்தனையும் முத்துக்கள்..ஒருவேளை நிரூபித்துக் காட்ட வேண்டிய வெறி கொண்ட காலமோ என்னவோ? எப்பக்கம் தொட்டாலும் இனிக்கிறது..என்னுடைய பால்யம் ராஜா, ரஹ்மான், தேவா, வித்யாசாகர், சிற்பி என பலரை உள்ளடக்கியது..இசை யார் இயக்கம் யார் என்றறியாமலே கேட்டு ரசித்த பாடல்களே இன்றளவும் நெஞ்சில் நிற்கின்றன.. 

பாரதிராஜா படங்கள் என்றாலே மண் மணம் வீசும் ..இதிலும் பொட்டக் காட்டின் மணம் வீசுகின்றது..பாரதிராஜா படங்களில் இது அப்பொழுது மிக முக்கியமான பிரச்சனையாக இருந்த பெண் சிசுக் கொலையை மையமாகக் கொண்டது..அதனால் பாட்டைப் பற்றிப் பேசும் முன் படத்தின் கரு  பற்றியும் சில வரிகள் ..என் உறவினர் அக்காவுக்குத் திருமணம் ஆன புதிதில் "ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே வீட்டுக்கு வா " என்ற கட்டளை வந்ததாகக் கேட்டு அறிந்திருக்கிறேன்..(இன்று அவர்களே ஒரு பெண் குழந்தை இல்லாமல் போனதே என்ற ஏக்கத்தையும் கண்டு கொண்டிருக்கிறேன் ) பெண் குழந்தை என்றாலே செலவு ,வரதட்சணை கொடுத்து மாளாது என்ற எண்ணத்தில் இருந்து இன்று ஓரளவு மீண்டு வெற்றி கண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.. ஏனெனில் இன்று பெரும்பாலும் முப்பதுக்குப் பிறகே தாமத திருமணம் அதிலும் குழந்தைப் பிறப்பு ஒரு பேறாக வேண்டி வரம் இருக்கும் நிலையில் எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன குழந்தை இருந்தால் போதும் என்ற நிலை வந்திருக்கிறது..இன்று பல மகளதிகாரங்கள் பார்க்க நேரிடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது..(இது மிகப் பெரிய சமூக மாற்றம் ) போலவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் குறைய மகளைப் பெற்ற அப்பாக்களும் மகனைப் பெற்ற அம்மா  களும் பொறுப்புடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள் என நம்புவோமாக ! பெண்களுக்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என முணுமுணுப்புகள் எழுந்தாலும் அவற்றில் சில உண்மை இருந்தாலுமே கூட , மிகக் கடுமையான சட்டங்கள் தாம் இன்று பல பெண்களைக் காப்பாற்றி இருக்கின்றன என்றால் அது மிகையாகாது..எண்பதுகளில் வரதட்சணை ஒரு மிக மோசமான சக்தியாக உருவெடுத்து இருந்தது.

படத்திற்கு பக்க பலமாக ரஹ்மான் இசை..இது டைட்டில் பாடலாக வருகிறது. இந்தப் பாடல் ,மற்றும் காட்சி அமைப்புகள் அப்படியே கிராமத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்னை..சிறு வயதில் ஒரு மணல் வீட்டில் வாழ்ந்ததுண்டு..அப்படியே எங்களுக்குச் சொந்தமான சில காடுகளையும் பராமரித்து வந்தார் அம்மா. ஏனோ நகரத்து பளபளப்பு மீது ஈர்ப்பு இருந்ததால் , கிராமத்து வாழ்க்கை பிடிக்காமலே ஓர் ஐந்து ஆண்டுகள் அங்கே வேண்டா வெறுப்பாகவே இருந்தேன்.. ஆனால் இப்போ ஒரு timecraft கிடைச்சா அப்படியே காலாற தொண்ணூறுகளுக்கு நடந்து போய் கண்மாய் ,செழிப்பான காடுகள் தோட்டங்கள் ,பவர்கட்டே இல்லாமல் இருந்த வாழ்க்கை,கூட்டாஞ்சோறு என ஒரு நாளேனும் வாழ்ந்து பார்த்துவிட்டு வர ஆசை. காடுகளில் சில வகை உண்டு..கரிசல் காடு ,பொட்டக் காடு என்பார்கள்.. நீர் இறைக்க கிணறு உள்ளவை தோட்டம் எனப்படும்..இதிலே பொட்டக் காடு கருப்பும் சிவப்பும் சேர்ந்த மண்.பொருபொருவென இருக்கும் (சகதி இன்றி ) ஓர் மழை நாளில் இந்தப் பொட்டக் காட்டுக்குச் சென்ற பொழுது கண்ணுக்குக் குளிர்ச்சியாக கண்ட  விதம் விதமான வண்ணத்துப் பூச்சிகள் இன்னமும் என் நினைவுகளில் பறந்து கொண்டே இருக்கின்றன..ஹ்ம்ம்..
காடு பொட்டக் காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு 
எலியோடு எங்க பாடு...
கீத்து வீடுன்னா என்னன்னு தெரியுங்களா ?தென்னங்கீத்து இருக்கு பாருங்க அதிலே வேயப்பட்ட வீடு.. அதிலே வெளியே இருந்து உள்ள பூனை குதிக்கும் எலி குதிக்கும்..சூரியன் கூட அப்பப்ப எட்டிப் பார்க்கும்..கிராமங்களில் மணல் வீடு ,கல்லு வீடு (காரை வீடு என்போம் ) மற்றும் இது போல கீத்து வீடுகள் நிறையப் பார்க்கலாம்.. 
கூழு சோழக் கூழு 
வெங்காயம் கூடச் சேரு 
தை மாசம் நெல்லுச் சோறு 
பூமி எங்க பூமி 
வானம் பார்த்து வாழும் பூமி 
தூங்கிப் போச்சு எங்க சாமி 
கிராமத்து உணவு முறை எப்படி தெரியுமா? நெல்லுச் சோறு விலை கூட அப்ப .(நெல் அவிக்கிற வாசம் இருக்கே..ப்பா ) தை மாசம் தான் அறுவடை.. பெரும்பாலும் கஞ்சி தான்..கம்பங் கூழு கேப்பக் கூழு சோழ கூழு.. இப்பல்லாம் மதுரையில் ஆங்காங்கே இவை விற்கப் படுகின்றன..ஒரு தலைமுறை இதன் ருசி அறியாமலே வளர்வது வருத்தம் தான்.. மெனக்கெட்டு வெஞ்சினம் (side dish) வைக்க மாட்டாங்க வெங்காயம்  உரிச்சு தான் சாப்பாடு.. அந்த எளிமையான உணவு முறையே ஆரோக்கியமாகவும் இருக்கும். காட்டு வெள்ளாமை ,தோட்ட வெள்ளாமை என்ற இரண்டு சொற்பதங்களை கிராமங்களில் கேட்கலாம்.. நீர் தேவையை கிணறு வெட்டி இறைத்துக் கொண்டால் அது தோட்ட வெள்ளாமை..இதற்கு மழை தேவையில்லை.. இந்த நீரே போதுமானது.. ஓரளவு பணம் உள்ளவர்கள் இப்படி செய்து மாட்டின் மூலமாக நீர் இறைப்பதோ அன்றி மோட்டார் போட்டு தண்ணி எடுப்பதோ உண்டு.
காட்டு வெள்ளாமை என்பது இப்பாடலில் வரும் வானம் பார்த்த பூமி என்ற வரிகளுக்கானது.. விதைச்சுடுவாங்க ..மழை வந்தால் பிழைச்சுக்கும் இல்லாட்டி சிரமம்.அதிலும் பருவம் தப்பி மழை பெய்தாலும் கஷ்டம்..வானம் பொய்த்தால் அந்த ஆண்டு அதோ கதி தான்.
அந்தி நேரம் வந்தா தலையெல்லாம் எண்ணிப் பாரு 
ஆடு மாட்டச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு 
ஆறு எங்க ஆறு அட போடா வெட்கக்கேடு 
மழை வந்தா தண்ணி ஓடும் மறுநாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு  என் கன்னுக்குட்டி ஒன்னு ஒன்னு 
கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு .
வீட்டிலே கோழி,ஆடு வளர்த்த அனுபவம் உண்டா? :) பகல் முழுக்க மேய விட்டுட்டு மாலையில் அவை வந்து அடையும் போது வெள்ளச்சி இருக்காளா கருப்பன் வந்துட்டானா என அண்ணன் சோதிப்பதுண்டு :) என்னதான் ஆட்டை ஒருநாள் வெட்டத் தான் போகிறார்கள் என்பதே நிதர்சனம் என்றாலும் பார்த்துப் பார்த்து வளர்க்கும் இன்பமே தனி :) இப்பவும் ஊருக்குள்ள மழை வந்தா அது பெரிய சேதியாகவே பரிமாறிக் கொள்வது .விவசாயம் நம்பியே வாழ்க்கை 
காக்கா இளைப்பாற கருவேலம் மரம் இருக்கு 
என் மக்க இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசியாற கொக்குலத்து மீனிருக்கு 
என் மக்க பசியாற மக்கிப் போன நெல்லிருக்கா ?
சீமைக் கருவேலத்தை விட நம் கருவேல மரங்கள் எவ்வளவோ தேவலாம்..ஆனால் முள் இருக்கே ..கரிசக் காட்டில் பார்த்திருக்கிறேன் .இந்த மக்க என்ற சொல் கிராமத்தில் அதிகம் புழங்கும்..பிள்ளைகளைத் தான் நான் பெத்த மக்கா என்பார்கள் .சமீபத்தில் த்ரிஷ்யம் பார்த்தப்ப இந்த மக்களே மலையாளத்திலும் இதே பயன்பாட்டில் வருகிறது என அறிந்தேன். 

மாடு தத்த மாடு இது ஓடும்  ரொம்ப தூரம் 
வாழ்க்க தத்த வாழ்க்க இது போகும் ரொம்ப காலம்
காட்டுக் கள்ளிக்குள்ள  உள்ளாடும் வால போல 
உள்ளூர கண்ணீர் பொங்கும் சொல்லாம உள்ளம் பொங்கும்..
பட்ட மரத்து மேல எட்டிப் பார்க்கும் ஓணான் போல
வாழ வந்தோம் பூமி மேல 

நான் ஏன் வரிக்கு வரி எழுதி இங்க சொல்கின்றேன் என்றால் கவிஞர் வைரமுத்துவின் இயல்பான யதார்த்தம் தோய்ந்த உவமை மிக்க வரிகளுக்காகவே.. கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால் கிராமத்துப் பாடல்களில், தான் கண்டவற்றை சொற்களில் அழகாகப் படம் பிடிக்கின்றார் .
மாடுகள் விவசாயிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம்.  மாட்டு வண்டிப் பயணங்கள் மறக்கவே முடியாது.. இதிலே சுறுசுறுப்பான மாடுகள் கழுத்தில் மணியோடு பறக்கும்..சில ஆடி அசைஞ்சு ,நீ எவ்ளோ வேணா பின்ன இருந்து குச்சி வச்சு குத்து நான் மெதுவாத் தான் போவேன்னு நிக்கும்..இன்னமும் "ஒரு வேலை செய்ய வைக்க உன்ன குச்சி வச்சுக் குத்தணுமா" என்று அம்மாவிடம் திட்டு வாங்குவதுண்டு :) இதுல மெதுவாகப் போகின்ற மாட்டைத் தான் தத்த மாடு என்பதுண்டு. தத்தித் தத்திச் செல்லும் என்ற வரிகள் கேள்விப் பட்டதுண்டு தானே ? (தத்தி என திட்டும் சொல் கூட உண்டு ..எதையும் உடனே புரிஞ்சுக்காத மண்டன்னு அர்த்தம் ) இப்படி தத்தித் தத்திச் செல்லும் மாடு எவ்வளவு மெதுவாகப் போகுமோ போலவே எங்களின் வாழ்க்கையும் என்பதே இதன் பொருள். சற்றே வலி தைக்கும் வரிகள். 

கள்ளிச் செடி வெளியே பார்க்க கனமான தோலைக் கொண்டதாக இருக்கும்..ஆனால் உள்ளே வழுவழுப்பான உட்பொருளைக் கொண்டிருக்கும் . இந்தப் படத்தில் கூட தகப்பன் பெண் குழந்தைகளாப் போச்சே என்றொரு எரிச்சலோடு தான் இருப்பார். ஆனாலும் பெண் மணமாகிச் செல்லும்போது கண் கலங்குவார். அழகான உவமை இது.
ஒரு பாடல் எவ்வளவு சின்னச் சின்னச் கதைகளை சொல்லிச் செல்கிறது..போகிற போக்கில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும்..
எல்லாப் பாடல்களும் அட்டகாசமாய் பாடக் கூடியவர் எனினும் கிராமத்துப் பாடல்கள் எனில் அதற்குத் தனி உயிர் கொடுக்க மலேசியா வாசுதேவனாலேயே  முடியும் .அதற்கெனவே நேர்ந்து விட்டது போல..சோகம் இழையோட , ஒரு துண்டை வீசி தோளில் போட்டு நடந்து கொண்டே ஒரு பெரியவர் நம்மிடம் இக்கதைகளைச் சொல்வது போன்ற ஒரு பாவனை குரலில். இடையே கட்டையாய் சற்றே இழுவையுடன் பாரதிராஜா குரலும் ஆகப் பொருத்தம் இந்தப் பாடலுக்கு. பெண் குரல்  மிக மெலிதாக , பெற்றவளின் மனக் குரல் வேதனையைப் பறை சாற்றும்.. 

படமும் பாடலும் வெளி வந்து இருபது ஆண்டு காலம் ஆகியும் இன்னமும் பசுமையாக மனதில் நிற்கின்றது. பாடல் கேட்டு முடித்தவுடன் மனம் முழுக்க ஓர் ஆக்கிரமிப்பு அகலாது ஏதோ ஒன்று அப்படியே அழுத்தி வைக்கிறது சில கணங்களுக்கு.. .
Wednesday, February 11, 2015

கொடியிலே மல்லியப் பூ..

படம் : கடலோரக்கவிதைகள் 
பாடல் :கொடியிலே மல்லியப் பூ 
இசை : இளையராஜா 
பாடலாசிரியர் வைரமுத்து 
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , ஜானகி 

படிக்கும் பொழுது, தங்கி இருந்த ஹாஸ்டலில் பொழுது போக்காக ஓர் இரவில் தோழி, காதில் கிசுகிசுப்பாகப் பாடியதில் பிடித்துப் போன பாடல் இது :) வருங்காலச் சந்ததிக்கு நான் சொல்லும் தகவல் முன்பெல்லாம் பாடல் என்பது டீ ப்ரேக்க்கு அல்ல.  ஒரு குழும உழைப்பாக இருக்கும்..போற போக்குல மச்சி பச்சின்னு இல்லாம,படத்தோட சூழல், கருப்பொருள் உள் வாங்கி,  உருப்பெற்றதாக இருக்கும்.. இந்தப் பாடலும் அவ்வகை சார்ந்ததே.. ஒரு காலத்தில காதலைச்சொல்லவே தயங்கி இருக்காங்க என்பது கூட,  வரும் காலத்தினருக்கு காமெடியாக இருக்கக்கூடும் .. ஆனால் இருந்தது .

பாடல் முழுக்க கவனிச்சுப் பாருங்க.. ஒரு தயக்கம் இழையோடும் இசையில்.. 4 நிமிடங்களும் , மழை சற்றே வெறித்த யாருமற்ற சாலையில் ,கைகளை உரசவா,வேணாவா என்ற தயக்கத்தின் ஊடே ,மயக்கத்துடன் மெலிதாக நடை போடும் இசை , காதலர்களின் மனம் உணர்ந்தார் போல .. 

கொடியிலே....மல்லியப் பூ...... மணக்குதே மானே...
எடுக்கவா....தொடுக்கவா...துடிக்கிறேன் நானே..
பறிக்கச் சொல்லித் தூண்டுதே... பவள மல்லித் தோட்டம்..
நெருங்க விட வில்லையே நெஞ்சுகுள்ளக் கூச்சம்..(இந்தக் கூச்சம் என்ற சொல்லைக் கூச்சத்துடன் உச்சரித்து இருப்பார்கள் பாடகர்கள் )

கவனிச்சுக் கேளுங்க..ஒவ்வொரு சொல்லின் ஊடேயும் இடைவெளி இருக்கும்..அதை ஆமோதித்து ,அடுத்துச் சொல்ல மெல்லத் தூண்டுவது போல இடையிசை..எப்பவுமே தயக்கத்தில் பேசுபவர்களைத்தடை செய்யக் கூடாது..அதுவும் பேசவே யோசிக்கின்ற விசயத்தில்..இசை அதை நன்கு உணர்ந்து எவ்விதத்திலும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்பது போலச் சமர்த்தாக இருக்கும் ..எட்டி எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே  பயணிக்கும் உறுத்தலின்றி .. பாடல் முழுக்க mindvoice தான்...அதனால சத்தமாப் பாடக் கூடாதுன்னு சொல்லிருப்பாரு போல :) சின்ன வயசுல இந்தப் பாட்டை டிவியில முதல் முத பார்த்தப்ப, வாயே திறக்காம எப்படிப் பாடுறாங்க என வியந்து ,நானும் முயற்சி செய்ததில் ஒரு ம்காரம் மட்டுமே தொண்டையில் இருந்து வந்தது :( 

ஒரு நல்ல காரியம் என்றால் நல்ல சகுனம் வேணும் இல்லையா...46வது  விநாடியில வரும் பாருங்க ஒரு கோயில் மணி ஓசை..டிவைனு :) அதன் பின்னான வயலின் கூட அநியாயத்துக்கு அடக்கி வாசிக்கும்..அந்த குட்டி குய்குய்குய்  சன்னமாக ஒவ்வொரு சொற்களுக்கும் இடையில் வருவது பாடலுக்கு ராஜா செய்த அலங்காரம் :) 

மனசு தடம் மாறும் அது நினைச்சா இடம் மாறும்..
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்..

இப்படியாகச் செல்லும் மனவோட்டங்கள்...பாடலாசிரியர் பற்றிக் குறிப்பிடா விட்டால் அது பெரும் அநீதி.. வைரமுத்துவின் சிறப்பே இது போன்ற இயல்பான வரிகள் தான்.. வார்த்தை விளையாட்டு,தமிழை ஆழமாகப் பயன்படுத்தி அந்நியப்படுத்திவிடாமல்,ஒரு யதார்த்தமானவனின் குரலாகவே ஒலிப்பது..காதலிக்கும் எல்லாருக்கும் கவிநயமாகப் பேச வந்துவிடுவதில்லை என்பதே நிதர்சனம்.. அதே சமயம் காதலிக்கும் அனைவருக்குமே பொதுவான உணர்தல் என்ற ஒன்று இருக்கும்..அதை உள்ளது உள்ளபடி சொல்லும் பொழுது தானாகவே முன் வந்து மனதுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது மக்கள் பாடலாக :P

சொன்னால் தோற்றுவிடுவோமோ என்றஞ்சியே சொல்லாமலேத் தோற்ற காதல்கள் இம்மண்ணில் தான் எத்தனை..வெளிப்படுத்தப் படாத அன்பு முழுமை பெறாமலே போய்விடுகிறது..ஒருவேளை சொல்லி இருக்கலாமோ, ஒருவேளை சொல்லாமலே இருந்திருக்கலாமோ என்ற நுண் உணர்வுகளைக் கடக்காத காதல் மனம் மிகக் குறைவு..

ஜெயச்சந்திரனும் ஜானகியும் தயங்கித் தயங்கி ,காதலர்  மன ஓட்டங்களைப் பதிவு செய்திருப்பார்கள்.. ஆண் குரலே தயக்கத்துடன் வரும் பொழுது பெண் குரல் எப்படி இருக்கும்..வெளியேவே வராதே...அப்படியான குரல்.. பாறையில பூ முளைச்சு பார்த்தவுக யாரு...எனும் போது ஒரு மெலிதான வலி கொண்டும், அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு என சொல்ல மாட்டாமல் சொல்லும் அழகும், பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத் தானே தெம்பு இல்ல ன்னு ஒரு இழு இழுப்பாங்க.. 


ஜானகியை ஓர் ஆகச் சிறந்த பாடகி என்பேன்.. சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள் காண்பது எளிது.. பாடலின் அழகியலை உணர்ந்து அதை இன்னும் மெருகேற்றும் பாடகிகள் அரிது..அதிலே ஜானகி "அ.."
கடைசியில் கூட 
காலம் வரும் வேலையில 
காத்திருப்பேன் பொன் மயிலே 
தேரு வரும் உண்மையில 
சேதி சொல்வேன் கண்ணால " தான் முடிக்கிறாங்க :) 

நிறையப் பணம் செலவழித்து வெளிநாட்டு லொகேஷன் இல்ல ஒரு பாலத்தின் மீது பீர் பாட்டிலோடு நண்பர் குழுவோடு நடனம் என்றில்லாமல் , அழகான காட்சியமைப்பு ஒளிப்பதிவு  .  பாடலில் வரும் கடலைப் பாருங்கள் ஏதோ சொல்ல வந்து வந்து தயங்கி,  பின் செல்வது போன்றே தோன்றவில்லை? A to Z வரை எழுத்து ஒரு பக்கம் சத்யராஜ் மறுபக்கம் ரேகா...எதனால் தயக்கம் என்ற மொத்தக் கதையும் இறுதியாக வந்து நிற்கும்..பிரம்மாண்டம் என்பது இத்தகைய பாடல்கள்  உள் நுழைந்து நம் மனதில் காலம் கடந்து ,நம்மில் விரிந்து இசைந்து ஒன்றி விடுவதும் கூடத் தான் :) எளிமையின் பிரம்மாண்டம் இந்தப் பாடல் 


நமது திண்ணை என்ற தமிழ் மின்னிதழில் வந்த பதிவு இது..அதற்கான சுட்டி :) 

Tuesday, February 10, 2015

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் பாகம் -3எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் பாகம் -1 & பாகம் 2

கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும், சுவராசியமாகவும் சொல்லித் தரும் மெய்நிகர்  தமிழாசிரியர் ..ஆர்வம் உள்ளோர் அவரது முகநூல்ப் பக்கத்தில் தொடரலாம் . 

இந்த ஆண்டில் @saichithra வை நேரில் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது.. தனிப்பட்ட முறையில் எவ்வளவு பெரிய பதவி , வெற்றிபெற்ற நபர் ஆனால் பழக இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்ற பிரம்மிப்பு இப்போ வரை அகலவில்லை..  என்னைச் சந்தித்த மகிழ்ச்சியை அவர் அதிர்ஷ்டமாகப் பார்த்த பொழுது அது இன்னமும் அதிகமானது..  கொஞ்சம் காலர் தூக்கி விட்டுக்கற மொமென்ட் :)

பொதுவாக படம் பார்க்கும் முன் திரை விமர்சனங்கள் படிப்பதே கிடையாது.. ஏனெனில் அவை சுவராசியத்தைக் கெடுத்து விடும் . பெரும்பாலும் விமர்சனம் என்கிற பெயரில் கதை சொல்லிகள் கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் பல முந்திரிக் கொட்டைகளை உருவாக்கி இருக்கிறது இணையம்..  அவர்களிடம் இருந்து காத தூரம் ஓடி நான் தஞ்சம் புகும் இடம் @amas32 blog ... இயன்றவரை சார்பற்ற விமர்சனமும், கதை சொல்லி விடாமல் பிடித்த/ பிடிக்காதவற்றை விளக்கும் பாங்கும் , காயப்படுத்தாமல் எதிர்மறை விமர்சனம் செய்யத் தேர்ந்தெடுக்கும் சொற்களுமாக என்னைக் கவர்ந்திழுத்திருக்கிறார் :)


.இங்கே விவாதங்கள் எப்பொழுதும் இறுதியை எட்டுவதில்லை.அவரவர் அவரவர் சார்ந்த கருத்துக்களுடன் இனிப் பேசிப் பயனில்லை என விலகிச் செல்வதே உலக வழக்கம். ஆயினும் காரசார விவாதங்கள் ஒன்று சேற்றைப் பூசுபவனவாக இருக்கும் அல்லது தனி நபர் தாக்குதலாக இருக்கும்.   அவ்விரண்டும் அன்றி @amas32 -@kryes க்கும் இடையே நடந்த இந்த விவாதம் மிகப் பிடித்தமானது..   அமாஸ் அம்மாவின் தரப்பைத் தேடி இங்கு தர இயலவில்லை

பெண்களைப் பற்றிய மிகச் சிறப்பான புரிதலுக்கான எடுத்துக்காட்டாக இந்த ட்வீட் :)

ரஜினிக்கு ஆகச் சிறந்த சமர்ப்பணம் :) 
எனக்குப் பிடித்த ட்விட்டர் உரையாடல்கள் :)
ட்விட்குறள் 
பிசாசுகுட்டி-சுப்பிரமணி 

ஆகச் சிறந்த நகைச்சுவை போட்டோ அந்தாக்ஷரி by @Mrelani & Bubloo 
நான் ரசித்த பதிவுகள்
சில பதிவுகள் நம் அடி மனதின் ஆழம் வரைத் தாக்கி கண்ணில் நீராக வெளிப்படும்..அது போன்று ஒன்று இது..ஒவ்வொரு பெண்ணுக்குமான மன பிரதிபலிப்பு .

வெகு இலகுவான நகைச்சுவையில் கணவன் மனைவி உறவைப் பற்றிய பதிவு 

வயிறு வலிக்கச் சிரிக்க "தீனித் தின்னிகள் :)

நான் மிகவும் ரசித்த இன்னும் சொல்லப் போனால் அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ஆத்மார்த்தமாக உணர்ந்த சொற்களைக்  கொண்ட டிவிட்லான்கர் இது by @selvarocky 

போரடித்து மொபைலைத் திறக்க , பேருந்து நிலையம் எனப் பாராமல் வாய் விட்டுச் சிரிக்க வைத்த டிவிட்லான்கர்  இது :-)) by @MrElani 

நாடி நரம்பு எல்லாம் குறும்பும் , நகைச்சுவை உணர்வும் ஊறிப் போன ஒருத்தரால தான் ,  இப்படி பெண்கள் விலகிப் போற டாபிக்ல கூட,  நிறுத்திப் படிக்க வைத்து  வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க முடியும்  :-)) அது முத்தலிப்பின் இந்தப் பதிவு லிங்க் திறக்காமலே எதுவெனத் தெரிந்திருக்குமே :)

எத்தனையோ பிரபலங்கள் இந்த ஆண்டு இப்பூலகை விட்டுப் பயணித்திருந்தாலும் என் மனதில் ஆழப் பதிந்து போனவர் விகடன் ஆசிரியர் S.பாலசுப்பிரமணியன்  . அவரைப் பற்றி ஓரளவே முன்பு அறிந்திருந்தாலும் தற்பொழுது , அவரைப் பற்றிய கட்டுரைகள், பகிர்வுகள் படிக்கப் படிக்கப் பிரம்மிப்பு.. விகடனின் முன்பு உங்கள் மனம் கவர்ந்தவர்களைச் சந்தியுங்கள் என்று ஒரு நிகழ்ச்சி வைத்து அதில் நமக்குப் பிடித்தமான பிரபலங்களைச் சந்திக்க வைத்து , அதைக் கட்டுரையாக பிரசுரிப்பார்கள்.. இப்பொழுது மட்டும் எஸ் பி அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் , அப்படி ஒரு வாய்ப்பை அவருடன் எனக்கு வழங்குமாறு கேட்டிருந்திருப்பேன்.. அந்த அளவுக்கு என் மனதில் உயர்ந்து இருக்கிறார் . பல எழுத்தாளர்களை ஊக்குவித்த அந்த நல்லாசிரியருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!


நான் மிக மிக ரசித்தக் குறும்படம் எனைச் சாய்த்தாளே .. ஒரு நண்பரின் மூலம் அறிமுகம் ஆகி, அதை டைம் லைனில் பகிர்ந்த பின் , இப்போ மூஞ்சிபுக்ல பரவிகிட்டு இருக்கு வைரஸ் மாதிரி ..இந்தப் பெண்ணின் ஒவ்வொரு முகபாவமும் ரசிக்க வைக்கிறது . அட தமிழ் சினிமாவே   எப்படித் தவற விட்டாய் இப்படி ஒரு நாயகியை :-))


ராஜாவைப் பற்றி  பண்டிட் பாலேஷ்.. பத்திரப் படுத்த வேண்டிய ஒன்று 

சிவன் தருமிக்குக் கொடுத்த பாடல் அன்று ஒரு புலவர் தமிழுக்கு அளித்த குறுந்தொகை ..அதற்கான அருமையான விளக்கம் சொக்கன் குரலில்

மன்னிச்சூ ..மிக தாமத வெளியிடலுக்கு ..மனசுக்குப் பிடிச்ச விசயங்களை மட்டும் எடுத்துகிட்டா ட்விட்டர் ஓர் அருமையான பொழுதுபோக்குத் தளம்.. 
பலதரப்பட்ட மக்களைக் கையாளுவது எப்படி என்பதைப் பற்றி அனுபவப் பாடம் கொடுக்கும் இடமும் கூட :) நான் தொடராவிட்டாலும் எனைப் பின் தொடருபவருக்கு என் நன்றி :) பலரைப் பிடித்தும் பின் தொடராமல் இருக்கக் காரணம் அவர்களுக்கும் எனக்குமான wavelength முற்றிலும் வேறாக இருப்பதால் தான்..இயன்றவரை சகிக்கக் கூடிய , அல்லது கடக்கக்கூடிய நபர்களாகப் பார்த்தே தேர்ந்தெடுக்கிறேன்.. படக்கென அன்பாலோ வேண்டாம் எனத் தோன்றினால் mute போட்டுவிட்டு சகஜமாக இருக்க முடிகிறது.. ட்விட்டர் முழுதுமாய் வசப்பட்டு இருக்கிறது.. ட்விட்டர் விட்டு விலகி இருத்தலும் கூட ...என் எழுத்தை ரசிக்க,விமர்சிக்க என ஒரு நட்பு வட்டம் என்னை நன்கு செதுக்கவே செய்திருக்கிறது..அவர்களுக்கு என் சிறப்பு நன்றி :)

இனி எல்லாம் சுகமே.. :-)


Thursday, January 1, 2015

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் -2014- பாகம் 2

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் 2014 பாகம் -1==>  இங்கே 

ஒவ்வொரு காட்சியையும் வெகு அழகியலோட விவரிக்க வண்ணதாசனால் முடியும் என்றால் சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி தமிழை வெகு லாவகமாக பளிச் எனப் புரியும்படி கையாள்வதில் வல்லவர் ராஜா சந்திரசேகர்
@RAAJAACS எவருக்கேனும் இங்கே கீச்சுலக அரசியல் அடிதடிகள் பிடிக்கவில்லை முற்றிலும் வேறு ரசனையான உலகம் வேண்டும் என்பவர்கள் இவரைப் பின் தொடரலாம்..போன ஆண்டு குறிப்பிட்டவர்களைப் பெரும்பாலும் இம்முறைக் குறிப்பிட தவிர்த்தாலும் இவர் எழுத்து ஈர்த்து மறுபடியும் எழுத வைத்துவிட்டது :)


@narsimp  என்னைக் கவர்ந்த எழுத்தாளர்.. ஏதோ சாத்வீகம் என்பார்களே..அப்படியான மென்மையான பேச்சாளர்.. ஆனால் எழுத்துகள் ஆழப் பதியும் திறன் பெற்றவை.. வட்டார வழக்குகளைத் தப்பாமல் எழுத்தில் கொண்டு வருவது கலை..அதை மிகச் சரியாகச் செய்யும் எழுத்தாளர்களில் ஒருவர்..இது எல்லாம் தாண்டி,  சில பல followers பெற்றதுமே எழுத்தாளர் பிம்பம் கொண்டு தலையில் கிரீடம் வைத்து , சாமான்யர்களிடம் இருந்து தங்களைத் தனியாகக் காட்டி அலைபவர்கள் மத்தியில், அதை எல்லாம் ஒதுக்கி இனிய முகம் காட்டி இலகுவாகப் பழகி பிரம்மிப்பை பேச்சினூடே உருவாக்கிய மனிதர் .


@BoopatyMurugesh ஒரு நல்ல போழுதுபோக்காளாராக டிவிட்டரில் வலம் வந்திருக்க வேண்டியவர் ஆனால் மெய்யுலக வேலைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் போலும்..எப்பவாவது வந்தாலும் நச் என ட்வீட் போட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்..  மீத்தேன் பற்றிய ட்வீட்ஸ் எல்லாமே அருமையாக இருக்கும் . இவருடைய பல கீச்சுகள் வெகுவாக ரசிக்க வைத்திருக்கின்றன. உதாரணத்திற்குச் சில :)

@shanth_twits  நல்ல கவிஞர் .. ஆனால் நான் டைம் லைன்ல இருக்கறப்ப மட்டும் போட மாட்டேங்கறாரா அல்லது நான் தான் தவற விடுகிறேனா தெரியல..எப்பவுமே RT ஆகி வந்துதான் என் கவனத்திற்கு வரும் :) இவரது நாயகன் கமல் DP க்கு நான் ரசிகை :)

@rkthiyagarajan  பெண்களைப் பற்றி வலிக்காமல் அடித்து விட்டு எஸ் ஆகி விடுவார்.. பெரும்பாலும் சர்ச்சைகளில் சிக்காமல் வலம் வரும் ட்விட்டர் :)

@Koothaadi இங்கே நான் உரையாடும் பொழுது வெகு இலகுவாக உணரும் இன்னொரு நண்பர் .. புரட்சி mode இல் அலையும் இன்னொரு ரகுசி ..கல்யாணம் ஆகவும் அவருக்குத் தெளிஞ்ச மாதிரி இவருக்கும் தெளிஞ்சுடும்ன்னு நினைக்கறேன் :)

@Tamizhanban08 எப்பவுமே சமூகம் சார்ந்த கேள்விகள், அக்கறை என்றே கீச்சுகள் வரும்.. எப்பவுமே எப்படி என்றக் கேள்வி எழுந்தாலும் இப்படியும் ஓர் ஆள் தேவை என்றே நினைக்கின்றேன். முல்லைப் பெரியாறு முதல் மீத்தேன் வரை இவர் முன் வைக்காத கருத்துக்களே இல்லை.  சற்று வலிமையாகவும் இருக்கும்


@tejomayan ..யாரோ என்னம்மோன்னு நினைக்காதீங்க ..எல்லாம் இந்த ஜூனியர் ஓல்ட் மாங்கோட கவிதைக்கான id தான்..பெரும்பாலும் ரசிக்கும்படி இருக்கும்.


@IamSleepercell  மிக மோசமான மீத்தேன் திட்டத்தின் மோசமான விளைவுகளை, சமூக தளத்திற்குக் கொண்டு வந்து , ஒரு நாள் இந்திய ட்ரென்ட்- ம் ஆக்கி , மீடியா கவனத்தை ஈர்த்த , நல்லுள்ளத்திற்கு என் வணக்கங்கள்.. நிஜமாகவே மீத்தேன் திட்டம் நிறுத்தப்பட வேண்டும்..அதைப் பற்றிய விழிப்புணர்வைப் அவ்வப்பொழுது இந்த id யில் இருந்தும் , அதை RT செய்யவும் என் வேண்டுகோளினை வைக்கின்றேன் .


@yalisaisl நான் இங்கு  பிரம்மிக்கும்,  டிவிட்டருக்கே செட்டியார் மதர் :) உலக சினிமாவாகட்டும் , புத்தகமாட்டும் இப்படி  பலவற்றிலும் ஆழ்ந்த கவனிப்பு கொண்டவர்.. இந்தக் கீச்சுலக அரசியலில் சிக்காமல் , தான் ரசித்தவற்றைப் பகிர்வதிலேயே திருப்தி கொள்பவர்.. நல்ல நகைச்சுவை உணர்வு..டைமிங் சினிமா டயலாக் எடுத்து விடுவதில் வல்லவர்..


@priyakathiravan  ச்ச முன்பே தொடர்ந்து விட்டோமே எனவும் முன்பே தொடர்ந்திருக்கலாமோ எனவும் சிலர் நினைக்க வைப்பார்..இதுல இவங்க ரெண்டாவது ரகம் . இவங்க நல்ல பதிவர்..எழுத்துக்களை முன்பே வாசிக்கத் தவறிவிட்டோமே எனத் தோன்றும் அளவுக்கு..இயல்பான நீரோடை போன்றது..படியுங்கள் ஏமாற்றம் வராது ..அக்கறையும் அன்புமாக இந்த ஆண்டில் மனதிற்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொண்டார் :)

 @urs_priya  சென்ற ஆண்டே குறிப்பிட்டு இருந்திருக்க வேண்டும்.ஆனால் அப்போதான் தொடர்ந்திருந்தேன் என்பதால் செய்யல.. பொதுவாக வார்த்தை விளையாட்டு ட்வீட் ரசிப்பதில்லை.ஆனால் இவரிடம் இருந்து வரும் போது மட்டும் வெகுவாக ரசிப்பேன் :)

 @PDSangeetha  பெண்களில் மிகக் குறிப்பிடத்தக்க பதிவர்.. நெஞ்சை உறைய வைக்கும் உண்மைகளை எவ்வித வார்த்தை அலங்காரமும் இன்றி நம்மையும் அதே வலியை உணர வைத்துவிடும் எழுத்தாளர் .. படித்தபின் பாதிப்பு அகல சில நாழியாவது சர்வ நிச்சயம்

@itsnandhu  சில நேரங்களில் , நான் எழுதத் தயங்கும் விஷயங்கள் கூடச் சுளீர் என வரும்.. அதற்காகவேப் பிடித்துப் போனார்.

@barathi_ ஏதேனும் ஒரு "concept" கொண்டு இவர் வரைவது பிடிக்கும்..  @itzraga பார்த்ததை அப்படியே ஓவியத்தில் கொண்டு வருவது சிரமமான காரியம்..அது ஓரளவுக்கு வசப்படுகிறது இவருக்கு ..

@npgeetha  நான் இங்கே மிகவும் ரசிக்கின்ற பெண்ணியவாதி.. எப்பவுமே அந்த mode கிடையாது . எப்பவாச்சும் எவரேனும் வரம்பு மீறும் பொழுது,  சுளீர் என வரும் கீச்சுகள் .. இங்கே பெண்ணிய கீச்சுகளுக்கு எந்த வித எதிர்வினை வரும் என நன்றாகவேத் தெரியும் எனக்கு .ஆனாலும் இவராவது கேட்கிறாரே என்று உள்ளுக்குள் ரசித்துக் கொள்வேன் :)

நான் விரும்பிப் படிக்கும் அரசியல் செய்தித் தளமாக இருக்கிறது  @savukku .
ஏதோ போகிற போக்கில் பழி போட்டுவிட்டுச் செல்லாமல் ஆதாரத்தோடு பதிவிடுவதும்,  அது பொறுக்காமல் தொடர்ச்சியாக இவர்களது தளங்கள் முடக்கப்பட்டுக் கொண்டே இருப்பதும் , அதை மீறியும் இவர்கள் பீனிக்ஸ் போல் திரும்பத் திரும்ப வருவதும் பிரம்மிப்பு எனக்கு.  பல மூத்த , பிரபல பத்திரிக்கைகளே அம்மா தண்டிக்கப்படும் வரை அடக்கி வாசித்த பொழுது , இவங்களுக்கு மட்டும் எங்கிருந்து இவ்வளவு தைரியம்?உண்மையை வெளிக்கொணரும் நேர்மை மட்டுமே இவர்கள் நோக்கமா?அல்லது அரசியல்வாதிகளிடம்  இயன்றவரை பணம் பறித்துச் சாதிக்கும் எண்ணமா ?எதுவெனப் புரிபடவில்லை.  ஆனால் துணிச்சல் மட்டும் அன்னாந்து பார்க்க வைக்கிறது. எழுதுகின்ற விதத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தி , நாகரிகச் சொற்கள் கொண்டே சவுக்கைச் சுழட்டலாம் என்பது என் தாழ்மையான கருத்து..


நெகடிவ் விசயங்களில் இருந்து விலகிச் சென்றோமானால் பல நல்ல தகவல்களுடன் காத்திருக்கிறது @pasumaivikatan . 
பல நல்ல தகவல்கள் ஆரோக்கிய உணவுகள்,  விவசாயம் சார்ந்த பதிவுகள் என விகடனின் முகநூல்ப் பக்கம் ஜொலிக்கிறது.. பல விமர்சனங்கள் இருந்தாலும் அதைத் தாண்டி விகடன் மீதான கவனம் குறைவதாக இல்லை இது போன்ற விசயங்களால்.


இந்த ஆண்டு எனக்கு மிகப் பிடித்த ட்விட்டர்  என்ற பட்டியலில் முதல் நபராக இவரை வைக்கிறேன் @skclusive  . கவனித்தவரை படு சுவராசியமான மனிதர்.. வலைபாயுதே,அலைபாயுதே ,தல தளபதி ,ராஜா ரஹ்மான் என்ற எந்த வட்டத்திற்கும் சிக்காமல்,  மனம் போன போக்கில் எழுதுபவர்.. சுருக்கமாகவும் நறுக் என்றும் பல ட்வீட்ஸ் உண்டு..இங்கே "ஆமாம் நான் அப்படித்தான்"  எனத் திமிராய்ச் சொல்லும் எத்தனை பேருக்குத் தன்னையே பிடிக்கும்?   மனம் தொட்டு தங்களுக்குள் சொல்லிப் பார்த்துக் கொள்ளட்டும்.. நிச்சயம் என்னால் முடியாது.   ஆனால் தன்னோடு பேசிக் கொள்வதையும் சுவராசியமாகவே உணரும் மனிதர்..என்னை அவ்வப்பொழுது ஆச்சர்யப்படவைப்பார் :) எல்லாவற்றுக்கும் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை , டிவிட்டர்காக என எழுத வேண்டியதுமில்லை என்பது இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம்  :) 

@altappu  THE BEST ALL ROUNDER OF THE YEAR IN TWITTER & FB

எந்தத் தலைப்பு எடுத்தாலும் அதில் வெளுத்து வாங்குவதும் நக்கலும் நையாண்டி தெறிக்கும் எழுத்துக்களும் வெகு இயல்பாக இவர் வசம்.. 
fb யைப் பொறுத்தவரை இவர் , @rasanai @G_for_guru பதிவுகளை , தாராளமாக லைக் செய்த பின்பு படிக்கத் துவங்கலாம்..அத்துணை சுவராசியம் 
மற்றபடி ராஜா ரசிகர்கள் மட்டும் விலகியே இருக்கவும் :-))


தொடரும் ;-)