Thursday, May 2, 2013

சுந்தரி..கண்ணால் ஒரு சேதி ..

சம்பிரதாய வார்த்தைகளாக இருப்பினும் சொல்லியே ஆகவேண்டும் .மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று..:)

சிவகாமியின் சபதம் முதன் முதலில் படித்த பொழுது அதிலே ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு பாடலைப் பொருத்திப் பார்த்ததுண்டு..அதிலே மாமல்லர் ஒரு சின்ன போருக்கு செல்ல வேண்டி வரும்..செல்கின்ற வழியில் சிவகாமியைப் பார்க்க வேண்டி வரும். ஓரமாய்ப் பார்த்துவிட்டு கோபமும் தாபமுமாக குதிரையை ஓங்கி ஒரு உதைத்து முன்னேறிச் செல்வார். பாழும் பெண் மனம் மன்னவன் திரும்பி வரும் வரை தவிப்பில் ஆழ்ந்து இருக்கும். 


அப்பொழுது இந்தப் பாடல் பொருந்தும் என நினைக்கிறேன். போருக்குப் பின் இருவரும் இறுதியாய் ஒரு இடத்தில மகிழ்ச்சியும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கலக்கமுமாக லயித்திருப்பார்கள்.அவ்விடத்திலும் இதைப் பொருத்தலாம்.மிக சமீபத்தில் தான் படித்தேன் அந்தப் பாடல் பொன்னியின் செல்வன் தாக்கத்தில் படமாக்கப் பட்டதாக . ஆனால் எதற்கு ரஜினிக்கு அந்த கருப்பு உடையும் கொண்டையும் தான் என்பது புரியவில்லை. வழக்கமாக மன்னன் உடை வேண்டாம் என்று மணி  இப்படிசெய்தாரோ என்னவோ ?


நான் ரஜினியை வேறெந்த படத்திலும் இவ்வளவு ரசித்ததே இல்லை :) 

ரஜினியின் வேகம் மட்டுமே இருக்கும் படம் முழுவதும். எவ்விடத்திலும் ரஜினியின் தனி முத்திரையான ஸ்டைல் எதுவும் இராது. ரஜினியை ரஜினியாய் பயன்படுத்தாமல் தான் நினைத்த ஒரு கதாபாத்திரமாக மட்டுமே உலவவிட்டிருப்பார் மணி. 
ஒரு சூப்பர்ஸ்டார் என்றெல்லாம் அதீத மரியாதை கொடுத்து அந்நியமாக்காமல் வெகு இயல்பான கோபக்கார இளைஞனாக காட்டியதில் மணிக்கு ஒரு ஜே. கர்ணன் படத்தின் ரீமிக்ஸ் என்றாலும் தன் பாணி தனி முத்திரை .

இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது மும்பையில். பாடலை எழுதியவர் வாலி. பாடலைப் பதிவு செய்த தினத்தில் மும்பை இசைக் கலைஞர்கள் வாய் பிளந்து அதிசயித்தார்களாம் . நிச்சயம் மிகையிருக்காது செய்தியில். அவ்வளவு பிரம்மாண்டம் பாடலில் கொடுத்திருக்கிறார் ராஜா . 

பொதுவாக  ஒரு நல்ல சேதி எதிர்பார்க்கும் பொழுது எங்கேனும் மணியடிக்கும் சத்தம் கேட்டால் அதை மங்களகரமாக நினைப்பது வழக்கம். ரஜினிக்கு தன் கோபம் உள்ளூர நம்மையெல்லாம் இவளுக்குப் பிடிக்குமா என்ற பரிதவிப்பு , மனசுக்குப் பிடிச்சிருந்தாலும் திருதிருன்னு விழிச்சுகிட்டு பயமும் தயக்கமுமாக ஷோபனா பிடிச்சிருக்குன்னு சொன்னவுடன் அடிக்கும் மங்கள மணியோசையில் ஆரம்பிக்கும் பாட்டு ..டாப் கியரில் தூக்கும்னு சொல்வாங்களே அப்படி இருக்கும் ஆரம்ப இசையே :)


சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்றதும் ஒரு மிக மெல்லிய புல்லாங்குழல் வரும் .
சுந்தரி கண்ணால் ஒரு சேதி (புல்லாங்குழல் )
சொல்லடி இந்நாள் நல்ல தேதி ((புல்லாங்குழல் )
என்னையே தந்தேன் உனக்காக (புல்லாங்குழல் )
ஜென்மமே கண்டேன் உனக்காக (புல்லாங்குழல் )


சில வருடங்களுக்கு முன்பு ஒரு வலைத்தளத்தில் CALL& RESPONSE  பத்திப் படித்தேன் .அதாவது இசையினாலே அழைப்பும் அதே இசையிலேயே அதற்கு மறுமொழியும்.அதற்கு உதாரணமாக சில பாடல்கள் சொல்லிருந்தாங்க கீரவாணி என SPB அழைத்ததும் அடுத்து வரும் சிதார் இசை பல்லவியை அழகு படுத்தி இருக்கும் அந்த சிதார் இசை ஒவ்வொரு அழைப்பிற்கும் மறுமொழியாக .
அதே போல பாடும் வானம் பாடி ஹாங்....என்றதும் அடுத்து டொய் டொய் டொய்ங் என்று வருமே வீணை அவ்வளவு அழகாய் SPB க்கு ஈடு கொடுத்திருக்கும்.

பாடல் ஆரம்பத்தில் மட்டுமல்ல சரணத்திலும் பயன்படுத்தப் பட்ட பாடல்களும் உண்டு .
ஒரு பொன் மாலைப் பொழுது பாட்டின் சரணத்தில் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வரிகளுக்கு அடுத்து வரும் புல்லாங்குழல்

இது பற்றி அறிந்த பொழுது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஆர்வத்தில் நான் கேட்ட சில பாடல்களை ஆய்ந்தேன். எதுவுமே அறியாமல் ப்ல்யாஂக் ஆக ஒரு பாடல் கேட்பது ஒரு சுகம் என்றால் ஏதேனும் அதில் உள்ள நுணுக்கம் அறிந்து கேட்கும் பொழுது அது இன்னமும் அழகாகிவிடுவதும் நிஜம்.

என் உதாரணங்கள் மிகச் சரிதானா என்று தெரியாது.ஆனால் இவை அந்த CALL &RESPONSE க்குப் பொருந்துவது போல ஒரு பிரம்மை. இசை நுட்பம் அறிந்தவர்கள் பிழை என்றால் திருத்தவும். 

1.கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்று ஜானகி சொன்னதும் அடுத்து வரும் வயலின் கொஞ்சிக் குழைந்து அந்த அழைப்பை ஏற்கின்றது.உன்னோடுதான் வாழ்க்கை(புல்லாங்குழல்) உள்ளே ஒருவேட்கை (புல்லாங்குழல்)செல்லம் கொஞ்சி ம்ம் என்பது மறுமொழி செய்கின்றது.
2. மஞ்சப் பொடி தேய்க்கையிலே என்றதும் அடுத்து வரும் புல்லாங்குழல் விசிலடித்து செய்யும் ரெஸ்பான்ஸ் கிளாஸ் :) 

3.பொன் மானே (புல்லாங்குழல்)கோபம் ( (புல்லாங்குழல்)
ஏனோ ( (புல்லாங்குழல்)
4.பூந்தளிர் ஆட (ஹம்மிங் ரெஸ்பான்ஸ் )
5.காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ஆடியோ வெர்சனில் பாடல் இறுதியில் வரும் இதயம்ம்ம் இடம் மாறும் (ம்)  இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் (ம்) இடையில் வரும் இந்த இரண்டு ம் களும் வெகு நேர்த்தியான கொஞ்சல்கள் :)

வாலிக்கு கேக்கணுமா?சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைப்பது என்பது இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காணலாம். ரைமிங்காக எங்கிருந்துதான் வந்து விழுகின்றதோ வார்த்தைகள் :)
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி "
காதலைச் சொன்ன அன்றே பதில் சொல்லிடனும் என்னால வெயிட் பண்ண முடியாது செல்லம் :))

உடனே பதில் எப்படி வந்து விழுது பாருங்க "என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக " அடுத்த உத்தரவாதம் ஆணிடமிருந்து "நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே "

எப்படி எல்லாம் ப்ராமிஸ் பண்ணின ஆனா இப்போ ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேன்ற என்ற இக்கால ஊடல் நிமித்த சண்டைகள் நிறைய பார்த்திருப்போம்.
"வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா "

சில பாடல் வரிகள் எனக்குப் புரியாத பட்சத்தில் பாடியவர்தான் பிழை செய்திருக்கிறார் என்று உறுதியாய் நம்புவேன் :) 
எனைத்தான் அன்பே மறந்தாயோ என்ற கேள்விக்கு . மறப்பேன் என்றே நிலைத்தாயோ என்று முடிப்பார்..

நியாயமா நினைத்தாயோ என்று தானே வரணும் ஏன் SPB தப்பா பாடறார் ? ஒருவேளை நம்ம காது தான் சரியில்லையோ அவர் சொன்ன நினைத்தாயோ தான் நமக்கு காதுல அப்படி விழுதோன்னு ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனிச்சிருக்கேன்..ம்ஹ்ம்ம் ..:) இறுதியாக SPB மறந்தார்போல தவறு செய்திருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது..கோபமா நான் மறப்பேன்னு நீ நினைச்சிட்டியோ ன்னு தானே கேப்பாங்க என்ற எண்ணம். இப்பொழுதுநான் மறப்பேன் என்பதை அப்படியே நம்பி அதே நிலைப்பாட்டில் இருந்துட்ட அதான் இப்படில்லாம் கேள்வி கேக்குற அப்படின்னு  நானாக புரிஞ்சுகிட்டேன் (வேற வழி :) )

அதே போல தேன் நிலவு நான் வாழ என்பது பொருந்தாமல் காண என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோன்னு வாலிக்கே எடுத்துச் சொல்லிருக்கேன் அந்த வயசுல :)
ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சின் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை



இரண்டாம் சரணம் சில வரிகள் காதல் தேசம் படத்தில் என்னைக் காணவில்லையே நேற்றோடு பாட்டிலும் வரும் .மிக வழக்கமான வரிகளே எனினும் அவ்விடத்தில் ஆகப் பொருத்தம் .






DISCLAIMER : இந்தப் பதிவை நீளம் கருதி சற்றே எடிட் செய்து #4வரி நோட் க்கு அனுப்பியிருந்தேன் .முதன் முதலாய் #4varinote இல் நான்அனுப்பியவாறே எடிட் செய்யப்படாமல் என் பதிவு இடம் பெற்றது மகிழ்ச்சி. அதற்கான சுட்டி :)