Tuesday, March 1, 2011

2011 புத்தாண்டு ராசி பலன்கள்

மேஷம் :

அன்பார்ந்த மே...ஏ ..ஏ..ஷ ராசி நேயர்களே..உங்களுக்கு இந்த வருடம் மேய்ச்சல் ..அதாவது அலைச்சல் மிக அதிகமாக இருக்கும்.

இருப்பினும் உங்கள் ராசி நாதனாகிய செவ்வாய் உங்கள் வாயையே பார்த்து கொண்டே இருப்பதால் அனாவசியமாக செல்கின்ற இடங்களில் வாயை திறக்காமல் இருப்பது நல்லது.இல்லாவிடில் ராசி நாதன் உண்மையிலேயே உங்கள் வாய்க்குள் புகுந்து விடும் விபரீதம் நிகழ கூடும்.உங்களுக்கு இந்த வருடம் மிக சோதனைக்குரிய வருடமாகும்.நீங்கள் தொட்டால் தவிடு பொடியாகும்.பொடி தூளாகும்.தூள் தூள்தூளாய் பறந்து போகும்.செவ்வாய்க்கு பக்கத்து கிரகமான குரு உங்களை குறுகுறு வென்று பார்ப்பதால் ஓரளவிற்கு அடி வாங்குவதில் இருந்து தப்பிப்பீர்கள்.அப்படியே வாங்கினாலும் அது ஊமை காயமாக மாறி காயம் (உடல்) காயத்திலிருந்து தப்பிக்கும்.மொத்தத்தில் மேஷ ராசி நேயர்களுக்கு இந்த வருடம் மோசம் செய்யும் வருடமாகும்.


ராசியான நிறம் : கருப்பு (கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கும் அதனால )


அனுகூலமான திசை : வடமேற்கு மூலை.


ரிஷபம்:

மாடாய் உழைக்கும் ரிஷப ராசி நேயர்களே..

இந்த வருடத்தில் நீங்கள் எங்கே சென்றாலும் முட்டி கொள்வீர்கள்.உங்கள் திறமைக்கு தகுந்த தீனி கிடைப்பது சந்தேகமே.அதனால் கிடைப்பதை வாயில் ம்ம்...வாய்ப்பை பயன்படுத்தி கொள்வது சால சிறந்தது.இத்தனை நாள் துள்ளி திரிந்த காளையான உங்களுக்கு மூக்கணாங்கயிறு போட்டு விடும் காலம் வெகு தொலைவில் இல்லை. எவ்வளவு தான் முட்டி மோதினாலும் திருமண முயற்சிகள் கூடி வருகின்ற வேளையில் தட்டி போய்விடும்.இருப்பினும் வருட இறுதியில் உங்கள் வயிற்றில் பாலை வார்க்க பசு போன்ற சாந்தமான பெண் உங்கள் எதிர் வீட்டில் வாசம் செய்வாள்.பெண் பசுவாக இருந்தாலும் பெற்றவர்கள் புலி போல பாயக்கூடியவர்களாக இருப்பார்கள்.எனவே வெளியில் செல்லும் பொழுது சகுனம் பார்த்து மணி சத்தம் கேட்டு விட்டு செல்வது நல்லது.உங்கள் ராசி நாதனாகிய சுக்கிரன் மூன்றாம் இடத்திலிருந்து நான்காம் இடத்தில் சஞ்சரித்தாலும் ஐந்தாம் இடத்தில் சற்றே நீசம் வாங்கி இருப்பது உங்களுக்கு உகந்தது அல்ல.எனவே உங்கள் வீட்டில் ஐந்தடிக்கு ஒரு சுவரை எழுப்பி பரிகாரமாக தினமும் ஐந்து முறை முட்டிக்கொள்ளவும்.

மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு சீறிப்பாய்ந்து பல சிக்கல்களை தருகின்ற வருடமாகும்.

ராசியான நிறம் : சிவப்பு (முட்டினால் வெளியே வருகின்ற ரத்தத்தின் நிறம்)
அனுகூலமான திசை: ஈசான மூலை


மிதுனம் :

எந்த பிரச்சனையையும் எளிதாக ஊதித்தள்ளும் மிதுன ராசி நேயர்களே..உங்களுக்கு எதிர் காற்று வீசும் நேரம் இது.காற்றுள்ள பொழுதே தூற்றி கொள் என்ற பழமொழிக்கேற்ப உங்களுக்கு கிடைக்கின்ற "வாய்"ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள்.மனதில் பல எண்ணங்கள் அலை மோதும்..அலை பாய்கின்ற மனதை "னம் னம் "என்று மிதி'த்து தள்ளுகின்ற பலத்தை மிதுன ராசி நாதனாகிய புதன் தருகின்றார்.உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் இருக்கின்ற சந்திரன் ஆறாம் இடத்தில் வாடகையின்றி குடியேறுவதால் ஏற்கனவே அங்கே இருக்க கூடிய ராகு கடுப்பாகி வக்ரமாகிறார்.எனவே எங்கேனும் நாகம் தென் பட்டால் அதன் கண் உங்கள் மேல் படுவதற்குள் ஓடி விடவும்.அருகில் இருக்க கூடிய சக கிரகமாகிய கேது கேட்காமலேயே எட்டாம் இடத்தில் புகுவது நல்லதல்ல.எனவே நீங்கள் யார் வீட்டிற்கு சென்றாலும் ஏன் உங்கள் வீட்டிற்கே சென்றாலும் உள்ளே வரலாமா என்று கேட்டே செல்ல வேண்டும்.இல்லாவிடில் கேட் [gate] ஐ இழுத்து மூடி விடுவார்கள்.மொத்தத்தில் இந்த வருடம் உங்களுக்கு மொத்து விழாமல் தப்பித்தாலே பெரிய விஷயம்.

ராசியான நிறம் : பச்சை (என்ன வேணா பண்ணிக்க கிரீன் சிக்னல் கிடைச்சாச்சு )

அனுகூலமான திசை: மேற்கிலிருந்து 

கடகம்: 

கட கட என்று எப்பொழுதும் உருண்டு கொண்டிருக்கும் கடக ராசி நேயர்களே ..மெதுவாக பேசினாலும் "நறுக்" என்று பேசுவதில் வல்லவர் நீங்கள்.உங்கள் கைகளின் பலம் அறிந்தவர்கள் உங்களை தொட பயப்படுவார்கள்.இருப்பினும் பிறர் நலம் கருதி சோப்பு போட்டு கைகளை கழுவுவது நல்லது.கடக ராசி நேயர்கள் இந்த வருடம் கம் என்று இருப்பது உசிதம்.ஏன் எனில் உங்கள் ராசி நாதன் சூரியன் சுட்டெரிக்க வருகிறார்.வெளிச்சம் அதிகமாக வருகின்றது என எண்ணி நெருப்பு இருப்பதை அறியாமல் போய் விழ கூடும்.கவனம் தேவை.யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் ...நாக்க மூக்க ..நாக்க மூக்க தான்.அதாவது நாக்கும் மூக்கும் வெளியே வந்து விடும் ஜாக்கிரதை.

கொல கொலையா முந்திரிக்கா கொழைஞ்சு போச்சு கத்திரிக்கா என்ற ஆன்றோரின் வாக்கிற் கிணங்க பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
உங்களுக்கு இந்த வருடம் கட கடவென்று ஓடினாலும் மந்தமாகவே தான் இருக்கும்.

ராசியான நிறம் : பொன்மஞ்சள்(சாணி கலர் ..மிதி வாங்குவீங்க கண்டிப்பா)
அனுகூலமான திசை : வடக்கிலிருந்து கிழக்கா போய் அப்புறம் மேற்கே


   சிம்மம் :

சிம்"மை அடிக்கடி மாற்றி கொண்டே இருக்கும் சிம்ம ராசி நேயர்களே..!
உங்களுக்காகவே நம்பர் மாற்றாமல் நிறுவனத்தை மட்டும் மாற்றி கொள்ளும் வசதி வரபோகின்றது.இதனால் உங்கள் நம்பர் மாற்றும் இம்சையில் இருந்து உங்கள் நண்பர்கள் விடுபடுவார்கள்.என்னதான் உங்கள் ராசி நாதன் சூரியன் பத்தாம் இடத்தில் பற்கள் காட்டி சிரித்தாலும் பதினோராம் இடத்தில் சனி பகவான் இருப்பதை மறந்து உங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் உங்கள் எண்ணை தெரிந்து கொண்டு இம்சிப்பார்கள் என்பது விதி. இருப்பினும் காலர் ட்யூனை கொல்லர் ட்யூனாக மாற்றி அமைத்தால் விமோச்சனம் உண்டு. நமது நாட்டில் எப்பொழுது மே உள்ள வாஸ்து பிரச்சனையால் அடிக்கடி சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுவீர்கள். ராகுவும் கேதுவும் ஒண்ணா சஞ்சரிக்கிரதால எல்லாருக்கும் கால் பண்ற உங்களால உங்களுக்கு ஒரு கால் கூட பண்ண முடியாது.ஒருக்கால் நீங்க பண்ண முயற்சி செஞ்சாலும் நோக்கியா ஆண்டவர் துணையோட ரெண்டு சிம் போட்டு முயற்சி பண்ணி பாருங்க.

உங்களுக்கு இந்த வருடம் கால் மேல கால் போட்டு கால் கால் ன்னு காத்த கூடிய யோகமான வருடம்.
ராசியான நிறம் : நீலம் (நீளமா பேசறதால )
அனுகூலமான திசை : டவர் இருக்குற எல்லா பக்கமும்
கன்னி :
கன்னா பின்னா வென சுற்றி அலையும் கன்னி ராசி நேயர்களே..இந்த வருடமும் உங்களுக்கு திருமண யோகம் கூடி வருவது கடினமே..காரணம் மூன்றாம் இடத்திற்கு குரு எதிர்பாராவிதமாக வந்ததால் திருமண தடை ஏற்படும்.(நீங்க எங்க சுத்தினாலும் ஒரு பிகர் கூட செட் ஆகாது)முடிந்தவரை நண்பர்களை உடன் அழைத்து செல்வதை தவிர்ப்பது நல்லது.இல்லாவிடில் காத்திருந்தவருக்குரியதை நேற்று வந்தவர் தட்டி சென்றதாகி விடும் உங்கள் கதை.மின்சாரமே கனவு ஆகி விட்ட கலியுகத்தில் உங்கள் கனவு கூட மின்சாரம் தொட்டது போன்று அதிர்ச்சியை மட்டுமே கொடுக்கும்.இதற்கு பரிகாரம் இரவில் நான்கு சொட்டு கண்ணில் விளக்கெண்ணை விட்டு விட்டு மல்லாக்க படுத்து விட்டத்தை வேடிக்கை பார்க்கவும். கல்விக்கு அடித்தளம் வலிமையாக இடுவீர்கள்.(அரியர் அதிகம் விழுந்தாலும் ஆச்சரியபடுவதற்கில்லை).
எங்கேனும் தவறு செய்து எக்குத்தப்பாக மாட்டிகொண்டு முதுகு கன்னிப்போகும் அளவுக்கு அடி வாங்குகின்ற விபரீத யோகம் இருக்கின்றது.மொத்தத்தில் இந்த வருடம் கடலை விளைச்சல் அதிகம் இன்றி வறண்டு கிடக்கும் வருடம் ஆகும்

ராசியான நிறம்: சிவப்பு (ரெட் சிக்னல் ...தடை தான் )

அனுகூலமான திசை : கன்னி பெண்கள் இருப்பதற்கு எதிர் திசை

துலாம் : 
தும்மி கொண்டே இருக்கும் துலாம் ராசி நேயர்களே..!
உங்கள் ராசி நாதனாகிய சுக்ரன் எட்டிலிருந்து பின் வாங்கி ஏழிற்கு வருவதால் பலமிழந்து காணபடுகிறார்.எனவே உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.முடிந்தால் மருத்துவமனைக்கு சென்று குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ளவும்.
சனி பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வாதங்களை குறைத்துக் கொள்வதுடன், . சுலபமாக நிறைவேற வேண்டிய காரியத்திலும் தாமதம் காணப்படுவதால் அலுவலகத்தில் வீண் விவாதங்களை குறைத்துக் கொண்டு எச்சரிக்கையோடு செயல்படுவது உத்தமம்.உங்களுக்கு ஒரு மண்டலத்திற்கு தண்ணீரில் கண்டம் இருக்கிறது.பக்கத்தில் இருப்பவர்களை பற்றி எல்லாம் கவலைப்படாமல் நாற்ப்பத்திஎட்டு நாட்கள் குளிக்காமல் விரதம் இருக்கவும்.மீறி குளித்தால் ஜல"தோஷம்" ஏற்ப்படும் வாய்ப்பு உண்டு.
நீதி நேர்மை எருமை கருமை என்றெல்லாம் பேசினால் தகாத வார்த்தைகள் பேசி விட்டதாக தேசீய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவீர்கள்.அடக்கி வாசிக்காமல் வாசிக்காமலே அடக்கி வைக்கவும்."பரிகாரமாக ஆடாதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவ மனிதா என்ற மந்திரத்தை ஏழு முறை சபிக்கவும்.தன்

னாலேயே அடங்கி தூங்குவீர்கள்.இந்த வருடம் உங்களுக்கு சோதனையான வருடமாகும்.
ராசியான நிறம் : கருப்பு (கண்களை கட்டி கொண்டே இருக்க வேண்டும் என்பதால் )
அனுகூலமான திசை : வட தெற்கு


விருச்சிகம் :

வெடுக் வெடுக் என்று வெட்டியும் கொட்டியும் பேசும்
விருச்சிக ராசி நேயர்களே..!
உங்களுக்கு இந்த வருடத்தில் கொட்டோ கொட்டென்று கொட்ட போகின்றது.பூர்வ புண்ணிய பலனை நிர்ணயிக்கும் கேது ஐந்தாம் இடத்தில நிற்கிறார்.முன் ஜென்மத்தில் ஜந்துக்களை அடித்த பாவத்திற்கு தேள் கொட்டலாம்..பூரான் கொட்டலாம்..குழவி கூட கொட்டலாம்.ஏன் வீட்டில் சாப்பிடுவதற்கு என்று வைத்திருந்த குழம்பு கூட கொட்டலாம்.அதனை கண்டு உங்கள் மனைவியும் கொட்டோ கொட்டென்று கொட்ட கூடும்.எனவே கவனம் தேவை.எந்த பொருள் எடுத்தாலும் அதை பிரிச்சு பிரிச்சு மேயும்குணத்தை மாற்றிக்கொள்ளவும்.ஆகாதவர்கள் அதிலே தேளை பிடித்து வைக்க கூடும்.உங்கள் ராசி நாதன் செவ்வாய்க்கு புதன் ஆகாது.எனவே உங்கள் காலண்டரில் செவ்வாய் க்கு அடுத்து உள்ள புதனை எடுத்து விட்டு நேராக வியாழனை வைத்து வெள்ளி வழியாக புதனுக்குள் நுழைவது உங்களுக்கு மாய போக நீக யோகத்தை தரும்.இந்த வருடம் உங்களுக்கு ஊர்ந்து செல்கின்ற வருடம் ஆகும்.ராசியான நிறம் : கருநீலம்
அனுகூலமான திசை : ஜந்துக்கள் இல்லாத திசைNo comments: