Monday, February 28, 2011

படித்ததில் பிடித்தவை!


இரண்டு நாட்களாக விடாமல் அமர்ந்து படித்தேன்..நடிகர் திரு.சிவகுமார் அவர்களின் "இது ராஜ பாட்டை அல்ல " என்ற நூலினை.யாரும் சொல்லாத அற்புத கருத்துக்கள் என்றோ புதிதாக ஏதோ சொல்லுகிறார் என்றோ சொல்ல மாட்டேன்.அவ்வளவு எளிமையாக தன வாழ்க்கையில் நடந்த வற்றை உள்ளது உள்ளபடி மிக யதார்த்தமாக அவர் எழுதி இருப்பது மனதை அவ்வளவு கவர்ந்து விட்டது.சத்திய சோதனை ரசித்தவர்கள் நிச்சயம் இந்த புத்தகத்திலும் அதன் பிரதிபலிப்பை உணர்வார்கள்.அப்படி நான் சொன்னாலும் அதிலும் மிகையில்லை.சம காலத்திய மனிதர்களை ஒரு கலைஞனாக பாராட்டுகின்ற மனப்பாங்கு தனக்கு நல்லது செய்தவர்களிடம் இருக்கின்ற நன்றி கடன் தமிழ் மீது கொண்டுள்ள அளவில்லாத பற்று தொழில் பக்தி தனக்கு தீங்கு நினைத்தவர்களிடம் முகத்திரையை கிழிக்கிறேன் பேர்வழி என்று பகிரங்கமாக சொல்லாமல் அவர்களிடமும் கற்ற விசயங்களை மட்டும் நினைவு கூர்ந்து சபை நாகரித்தோடு நாசூக்காக அவர்கள் பெயர்களை தவிர்த்து தனது மேலான குணத்தை அவர் வெளிப்படுத்தி இருக்கின்றார்.சிவாஜி அவர்கள் மீது கொண்டு இருக்கும் தீராத ப்ரியம் மதிப்பு ..தன் வாழ்க்கை பாதையில் கடந்து வந்தவர்களை மறக்காமல் மறைக்காமல் சொல்கிறார்.சிவாஜி அவர்களே "சிவா !உன்னை யாராலும் வெறுக்க முடியாது டா " என்று மனம் நெகிழ்ந்து புகழப்பட்டவர் என்றால் அதுவும் மிகையில்லை.எவ்வளவு விஷயங்கள் தெரிந்தாலும் அதை தன்னடக்கத்தோடு சொல்கின்ற பொழுது தான் அது மனதை தொடுகின்றது.சிவகுமார் அவர்களுக்குள் ஒளிந்திருந்த ஓவியர் புத்தகம் முழுக்க காட்சி தருகின்றார்.ரசிக்கலாம் அத்தனை ஓவியங்களையும்.தன் சாதனைகளை சாதாரணமாகவும் தவறுகளை சிரம் தாழ்த்தி உள்ளார்ந்த வருத்ததோடும் ஒப்புவிக்கின்ற குணத்திற்கு ஒரு வணக்கம்.

தொழில் முறை போட்டி இருந்தும் பொறாமையின்றி அனைவருடனும் இணக்கமாக இருப்பது மிக சாதாரண விஷயம் அல்லவே.புகழை பற்றி அவர் கூறுகின்ற விமர்சனம் யதார்த்தத்தை உணர்ந்த உயர்ந்த மனிதன் என்றே எண்ண தோன்றுகிறது.

சினிமா என்ற தொழில் அன்றைய கால கட்டத்தில் எப்படி இருந்தது நடிக நடிகையர் எப்படி ஒவ்வொரு விசயங்களிலும் ஆழ்ந்த அறிவை கொண்டு இருந்தனர் அந்த காலம் எப்படி பட்ட மனிதர்களையும் தொழிலை நேசிக்கின்ற பல மாமேதைகளை உள்ளடக்கிய பொற்காலமாக இருந்திருக்கிறது என்பதை வரும் காலத்தினருக்கு சுருக்கென்று உரைத்திருக்கின்றார்.

பாராட்டி கொண்டே இருக்கணும் போல இருக்கின்றது.இருப்பினும் முத்தாய்ப்பாய் மனதில் ஆழமாக பதிந்த அவருடைய வரிகளை மட்டும் இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

"எதுவும் மலிவாகவும் எளிதாகவும் கிடைக்கின்ற இந்த சினிமா துறையில் இத்தனை காலம் ஒழுங்காய் வாழ்ந்திருக்கிறேன் என்பதே என் சாதனை என்பதை நினைக்கும் பொழுது மனதுக்குள் இதமாக ஒரு சுகம் பரவுகின்றது "

உண்மை ! சந்தர்ப்பமே கிடைக்காமல் தவறு செய்யாமல் இருப்பவனை விட பல சந்தர்ப்பங்கள் வலிய கிடைத்தும் அத்தனை தருணத்திலும் மன உறுதியை இழக்காமல் இருப்பது வீரம் என்று படித்திருக்கிறேன்.நிச்சயம் பல இளைஞர்களுக்கு வழிகாட்டி இவருடைய வாழ்க்கை.

No comments: