Friday, March 4, 2011

2011 புத்தாண்டு ராசி பலன்கள் :

தனுசு :

தனுஷ் ரசிகர்கள் ஆன தனுசு ராசி நேயர்களே..!
உங்கள் ஆடுகளம் ரணகளமாக அமையும்.எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பில் ஒட்டவே ஒட்டாது.நாலு நல்லி எலும்பு அஞ்சு குருத்தெலும்பு ஒரே ஒரு முதுகெலும்பு அனைத்தும் சேர்ந்த கலவையாக காணப்படுவீர்கள்.உணவில் எலும்பு குழம்பை தவிர்த்து கூட்டு பொரியலை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.இருப்பினும்புடலங்காய் கூட்டை தவிர்க்கவும்.எதிர்காற்று வீசும் பக்கம் செல்ல வேண்டாம்.டாப்சி புயலால் அதிகம் பாதிக்கபடுவீர்கள்.உங்கள் ராசிநாதனாகிய குரு ஐந்தாம் இடத்தில நீசம் வாங்குகிறார்.எனவே ஐந்தாம் இடத்திற்குரிய சந்திரன் மறைந்து கிரகணத்தை ஏற்படுத்துகிறார்.அது உத்தமம் அல்ல.எனவே பரிகாரமாக மன்மதன் அம்பு படத்தை பத்து தடவை பார்க்கவும்.திரிஷாவை தரிசிப்பதன் மூலம் உற்சாகம் ஊற்றெடுத்து வரும் காலம் இது.பத்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் வாக்கு வாதங்களை குறைத்து கொள்வது நல்லது.இல்லாவிடில் வெள்ளாவியில் வைத்து வெளுக்கப்படுவீர்கள்.இந்த வருடம் மாப்பிள்ளையாகும் யோகம் உங்களுக்கு இல்லை.எனவே வீண் முயற்சி வேண்டாம்.உங்களுக்கு இந்த வருடம் வாய்க்கா தகராறு அதிகம் ஏற்படும் வருடம் ஆகும்.எனவே திரும்ப திரும்ப பேசுவதை தவிர்க்கவும்.


ராசியான நிறம் : வெள்ளாவி வெள்ளை
அனுகூலமான திசை : கெட்டவன் இருக்கும் திசை அல்ல

மகரம்:
பிறர் மண்டையை காயவைப்பதில் அதிக ஆர்வம் கொண்ட மகர ராசி நேயர்களே..!

உங்களுக்கு அதிர்ஷ்ட எண் எட்டு என்பதால் பிறரை நொட்டு நொட்டு என்று கொட்டிக்கொண்டே இருப்பீர்கள்.உங்கள் ராசி நாதன் சனி பகவான் உச்சத்தில் இருக்கிறார்.எனவே அடிக்கடி உச்சி மாடிக்கு செல்லும் பழக்கம் உங்களிடம் இருக்கும்.அதே சமயம் ஏழாமிடத்தில் நின்று கொண்டு வெகு வக்கிரமாக பார்க்கின்றார்.எனவே உங்களிடம் தெரிந்து தெரியாமலோ வாய் கொடுத்தால் வாங்கி கட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும்.நீங்கள் எவரைப்பற்றியும் கவலைப்பட வேண்டியதே இல்லை.உங்களை பார்த்தால் பார்ப்பவர்களுக்கு தான் கஷ்டம்.ஆகவே உங்களிடம் நேராக மோதாமல் சாய்ந்து நின்று பார்த்து விட்டு செல்வது நன்று.உங்களுக்கு இந்த வருடம் பொங்கு சனி.எனவே ஏடாகூடமாக பேசுபவர்களிடம் பொங்கு பொங்கென்று பொங்கி பொங்கல் வைத்து விடுவீர்கள்.நீங்க கேப்ரிகான் என்பதால் பாப் கான் கண்டிப்பாக உணவில் மூன்று வேளை சேர்த்து கொள்ள வேண்டும.அமீர் கான் ஷாருக் கான் படங்களை மட்டுமே பார்க்க வேண்டும்.ஆயினும் சல்மான் கான் மட்டும் தவிர்க்கவும்.தேவையில்லாத தலைவலி வரக்கூடும்.
சனியின் வக்கிரத்தில் இருந்து தப்பிக்க எந்திரனின் சுந்தரியை தரிசித்துவிட்டு வாருங்கள்.
உங்களுக்கு இந்த வருடம் செம்மையான வருடம் ஆகும்.
ராசியான நிறம் :சிவப்பு..(கோபம் கொப்பளிக்கும் )
அனுகூலமான திசை : ஓவரா பேசறவங்க இல்லாத இடம்

கும்பம் :
கும்பலோடு கோவிந்தா போடும் கும்ப ராசி அன்பர்களே.!

நீங்கள் தனியாக சென்றாக கூட கும்பலாக செல்வது போன்ற உணர்வு இருக்கும்.அதுக்கு காரணம் செவ்வாய் மூன்றாம் இடத்தில் ராகு சனி குரு என்று முக்கால் வாசி கிரகங்களோடு கும்பலாக உட்கார்ந்து இருப்பதால் தான்.உங்களுக்கு தீனி போட்டு மாளாது.தின்னிப்பண்டாரங்கள் உங்கள் வீட்டில் எப்பொழுதும் வாசம் செய்யும்."தின்னா தினக்கு தின்னா தின் தின்னா தினக்கு தின்னா தின்னாட்டி உனக்கு என்னா இப்பிடி தின்னா எல்லாம் போகும் மண்ணோடு மண்ணா" என்ற பாடல் நேயர் விருப்பமாக உங்கள் வீட்டில் ஒலித்து கொண்டே இருக்கும். கழுத்திலிருந்து வெறும் வயிறு மட்டுமே உள்ளவர்கள் உங்களுக்கு உற்ற துணையாக இருந்து கழுத்தறுப்பார்கள்.இதற்கு பரிகாரமாக ஒரு அன்னதான உண்டியலை உங்கள் வீட்டில் திறந்து வைத்து வசூல் செய்தால் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வரும்.வாழ்ந்து கெட்ட குடும்பம் பார்த்திருப்பார்கள்.ஆனால்ஆக்கி பொங்கி போட்டே கெட்ட குடும்பம் நீங்களாக தான் இருக்கும்.உங்கள் கஷ்டம் தீர உலக்கை பகவானை நாடி வருபவர்களை நமஸ்காரம் செய்து பூஜை செய்தால் பலன் அமோகமாக இருக்கும்.
இந்த வருடம் அத்தனை சோதனைகளும் கும்பலாக கூடிக்கும்மியடிக்கும் வருடம் ஆகும்.
ராசியான நிறம் : ஊதா (வர்றவன் எவனுக்கும் கஞ்சி ஊத்தாதீங்க )
அனுகூலமான திசை : தலை தெறிக்க ஓடுங்க எந்த திசை இருந்தா என்ன(?)


மீனம்:
தலைவலியே தானே தேடி கொள்ளும் மீன ராசி நேயர்களே !


முதலில் யாகூ பின்னர் ஜிமெயில் ,ஆர்குட் , facebook இப்போ ட்விட்டர் என்று இணையத்தில் பல ஆறுகளில் நீந்தி கொண்டு இறுதியில் எந்த கடலில் சங்கமிப்பது என்று தெரியாமல் விழிப்பீர்கள்.உங்கள் ராசி நாதனாகிய குரு உங்களை விட்டுட்டு பக்கத்தில் இருக்கிற ஆறாம் வீடான சனி யை குறுகுறு ன்னு பார்க்கறதால உங்களுக்கு வினை எல்லாம் வீடு தேடி வரும்.சொல்லமுடியாது வினை வீட்லயே கூட இருக்கலாம்.சனி பகவானை மடியில கட்டிக்கிட்டு சகுனம் பார்க்கிற மாதிரி தான்.ஏழாம் இடத்தில ராகு இருந்தாலே தோஷம்.இதுல கேதுவும் சேர்ந்து ராகுவோட பின்னி பிணைஞ்சு டான்ஸ் ஆடிகிட்டு இருக்கறதால மிக பெரிய சர்ப்ப தோஷத்திற்கு ஆளாகின்றீர்கள்."ஆடதடா ஆடாதடா மனிதா ரொம்ப ஆட்டம் போட்டா அடங்கிடுவே மனிதா" என்ற பாடலை ரிங் டோனாக வைத்து கொண்டு அடக்கி வாசிக்கவும்.தோஷம் நீங்க இரண்டு மண்டலம் ராகு காலத்துல கேது ஓரை ல ராம நாராயணின் "நாகாத்தா " திரைப்படத்தை தினமும் நாலு தடவை பார்க்கவும். சந்திரன் மூன்றாம் இடத்தில இருக்கறதால பௌர்ணமி பௌர்ணமிக்கு எம கண்டத்துல நிலா சோறு நின்று கொண்டே சாப்பிடவும்.
ஜென்ம சனி பொங்கு சனி மங்கு சனி விரய சனி கண்ட சனி என்று எல்லா சனியும் உங்க அக்கௌன்ட் ல ..சாரி உங்க ஜாதகத்தில தான் ஓடுது. அது உங்களுக்கு சுப காரிய தடைகளை கொடுக்கும்.யாருக்காச்சும் பணம்  கடன் கொடுத்திருந்தீங்கன்னா வடக்கம் பட்டி ராமசாமிகிட்ட கௌண்டமணி கொடுத்த பணத்திற்கு நேர்ந்த கதிதான் ..ஊ ஊ..ஊ..ஊ..
மொத்தத்தில் உங்களுக்கு இந்த வருடமும் சென்ற வருடம் போலவே தான் இருக்கும்.பெருசா ஒன்னும் சொல்றதுக்கில்ல.
பரிகாரம் : ஆணியே புடுங்க வேணாம்.அமைதியா உட்கார்ந்து ஆனந்த விகடன் படிங்க.

ராசியான நிறம் : உங்களுக்கு எப்பவுமே வெள்ளை தான்.(சரணாகதி என்று சொல்ல வெட்கமாக இருக்கும்.சமாதானம் சொல்லி சமாளிச்சுக்கலாம்)
ராசியான திசை : ஏதாவது ஒரு மூலை..சும்மா உட்கார்றது எந்த திசையா இருந்தா என்ன 

No comments: