Saturday, February 4, 2012

பொத்தி வச்சா அன்பு இல்ல..!



எத்தனையோ இருந்தாலும் அத்தனையும் ஒரு சேர நினைவுகூறுவது கடினமே எனினும் சில முக்கியமான தருணங்கள் பகிர விரும்புகிறேன்.
பெரிதாக அன்பை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை எங்கள் வீட்டில்.என் தோழி அவள் அண்ணாவிற்கு சட்டை வாங்கிக் கொடுக்கவும் மிகுந்த தயக்கத்துடன் நானும் அண்ணனின் பிறந்தநாளுக்கு சட்டை பரிசளித்தேன்.எங்கள் சண்டையை மட்டுமே பார்த்துப் பழகி இருந்த அப்பா,இதழில் குறும்புச் சிரிப்புடனும் அம்மாவிடம் பார்த்தியா என்று கண்களில் ஜாடை காட்டியதும் மறக்கவே முடியாதது:)
என் பிசாத்து சம்பளத்தில் வாழ்க்கையிலேயே உருப்படியாகச் செய்த காரியம் தீபாவளிக்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் துணி எடுத்துக் கொடுத்தது.பசங்க செய்யாததை நான் செய்தேன் என்று அவர்களுக்குள் நெகிழ்வு.
என் பிறந்தநாளுக்கு பரிசளிக்க தோழி என்னையே அழைத்துச் சென்று யாருக்கோ வாங்குவது போலச் சொல்லி என்னையே பரிசை தேர்ந்தெடுக்கச் சொன்னாள்.அவளுக்குப் பிடித்தது என்று நானும் எனக்குப் பிடித்திருக்கும் என்று அவளும் ஏதோ ஒரு மஞ்ச வாத்தை தேர்வு செய்தோம்.யாருக்கோ தானே என்று அசுவராசியம் எனக்கு.பின் எனக்குத் தான் எனத் தெரியவும் அசடு வழிந்தேன்.அன்று முதல் இன்று வரை எவருக்கோ என்றாலும் பரிசு எனக்கே வாங்குவது போல முடிந்தவரை மிகச் சிறப்பாகவே தேர்வு செய்கிறேன்:)
இணைய நண்பர் ஒருவர் போன் நம்பர் கேட்க அவர் மீது இருந்த அசாத்திய நம்பிக்கையினால் முதன் முறையாக அவரிடம் மட்டுமே கொடுத்தேன்.என் பிறந்தநாள் அன்று அவர் போன் செய்த நேரத்தில் அதை எடுத்தது அம்மா.வாழ்த்து சொல்ல அழைத்தேன் நண்பர்தான் என்று வைத்துவிட்டார்.அவர் நம்பரை தோழியின் பெயரில் SAVE செய்து வைத்திருந்தேன்:) அம்மா சொல்லவும் வியர்த்து விட்டது தவறா எடுத்திருப்பாங்களோ என்று.தோழியிடம் சொல்லி அவர் கணவர்தான் போன் செய்ததாக சொல்லிவிடு என்று கேட்டுக் கொள்ளவும் அவளும் அதையே சொல்லிவிட்டாள்.பிறகு மெதுவாக அவளிடம் எதனால் அப்படிச் சொல்லச் சொன்னேன் என்று விளக்க முற்பட்ட பொழுது சட்டென்று உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் உமா விளக்கனுமா என்ன என்றதும் ஒரு ஆசுவாசம் வந்தது பாருங்கள் அத்தனை வருட நட்பின் ஆழமும் அர்த்தமும் அன்றுதான் புரிந்தது எனக்கு.மறக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும்:)சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிராக அமைந்தாலும் நம்மை புரிந்து கொள்ளும் நட்பு அமைவது ஒரு வரம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு எனத் திட்டிக் கொண்டிருந்தார்கள் அம்மாவும் அண்ணனும்.எனக்கும் குற்ற உணர்ச்சி இன்னும் முயன்றிருந்தால் நல்லதாக மார்க் வாங்கி இருக்கலாமோ என்று.அப்பா வீட்டிற்குள் நுழையவும் இதைக் கேட்டுவிட்டு என்ன மார்க் என்றார்.445 என்று சொல்லவும் ஏன் நல்ல மார்க் தானே எனவும் தான் மூச்சே வந்தது எனக்கு:) அவ்வளவு பயந்திருந்தேன்.
முதன் முறையாக சேமியா உப்புமா சமைத்தேன்.பக்குவம் தவறி சேமியா குலைந்து ரவா உப்புமா போல கெட்டியாக மசமசத்து விட்டது.அதனால் என்ன வேறு எப்படி சமைச்சு பழகறது நல்லாத்தான் இருக்கு என்று வீணடிக்காமல் அப்பா சாப்பிட்டார்.(சமையலில் சிறு குறை இருந்தாலும் அம்மாவை வறுத்து எடுத்து விடுவார் அவ்வளவு கோபம் வரும் சாப்பாடு விஷயம் சரியாக இல்லையென்றால்.அதனால் தான் அவர் சாப்பிட்டது 

அதிசயம்.அம்மாவிற்கும் பொறாமை :) (ம்க்கும் மக செஞ்சா மட்டும் :P )
என் தோழியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசளிப்பது என்று யோசித்து ஒன்றுமே தோன்றவில்லை.மேலும் அந்த நேரம் கையிலும் பணம் இல்லாமல் போகவே என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் அவர் அன்போடு முன்பு அனுப்பிய SMS ஐ பொக்கிஷமாய் வைத்திருந்து அதை அனுப்பினேன்.அன்று அது தான் ஆகச் சிறந்த பரிசு என் நட்பிற்கு இவ்வளவு மதிப்பா என்று தோழி வெகுவாகப் பூரித்தார்.பரிசு என்றால் நிறைய பணமும் பிரம்மாண்டமும் தான் என்பதை அடியோடு பொய்யாக்கிய மகிழ்வு.
அண்ணா பையனை அழைக்க முக்கால் மணி நேரம் காத்திருந்தேன் பஸ் ஸ்டாப் ல நேரம் வீணாகிடுச்சு கரெக்ட் டைம் க்கு வந்திருக்கலாம் ன்னு தோனுச்சு.

பக்கத்தில் ஒரு பெண் உன்னைக் கூப்பிட யாரும் வரலையோ எனக் கேட்டாள் போல பஸ் போகவும் என்னைப் பார்த்த நிமிடத்தில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி
அந்த வினாடி குழந்தை முகத்தில் பார்த்த மகிழ்ச்சி முக்கால் மணி நேரம் நின்றது பெரிதாகத் தோன்றவே இல்லை :)

 
சென்ற வாரம் வீட்டில் விருந்தினர் வருகை அதிகம். காலையிலேயே வருவார்கள் என எதிர்பார்த்து இருந்ததால் சாப்பிடக் கூட நேரமின்றி ஆளுக்கொரு வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.மூன்று மணிக்கு மேல் அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு இறுதியாக வீட்டில் உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட குழந்தைகளை மேய்க்க தனி அறையில் இருந்த நான் கதவை திறந்து எட்டிப் பார்த்தேன்.நான் பசி பொறுக்கவே மாட்டேன் என்பதை என் அண்ணி நன்றாக அறிவார்.அதனால் முதலில் என்னை அமரவைத்து சாப்பிட வைத்துவிடுவார்கள் வீட்டில்.அன்று மறந்துவிட்டு அண்ணி உணவருந்திக் கொண்டிருந்தார்.என்னைப் பார்க்கவும் ஏதோ குற்ற உணர்ச்சியிலும் வந்து என்னையும் அமரச் சொல்லி தலையசைத்த பாவனையும் மறக்கவே முடியாத ஒன்றாகிப் போனது எனக்கு.வார்த்தைகள் கூடத் தேவைப்படுவதில்லை அன்பை வெளிப்படுத்த.அன்று என்னைப் பார்த்த பார்வை இன்னமும் ஆழமாக மனதில்.மெலிதாகப் புன்னகைத்து சாப்பிடச் சொல்லி சைகை செய்துவிட்டு பின்னர் உணவருந்த அமர்ந்த வேளையில் அருகில் இருந்து பரிமாறினார்.
சில வருடங்களுக்கு முன் மிக மோசமான ஒரு தருணத்தில் ஆழ்ந்த வருத்தத்தை வேறு வழியே இன்றி அழுகையாய் வெளிப்படுத்திய போது இரண்டே வயது நிரம்பிய வாண்டு சட்டென்று வந்து கண்ணீரைத் துடைத்து கழுத்தை இறுக அணைத்து அமர்ந்து கொண்டது மடியில்.அண்ணா திட்டியதற்கு முன்பு அழுத பொழுது அன்று ருத்ர தாண்டவம் ஆடி கோபமாய் அப்பா வெளிப்படுத்திய அன்பின் ஈரம் அந்தப் பிஞ்சுக் கரங்களில்.
எனக்கு பொம்மை வெகு இஷ்டம்.அதனால் தோழி வாங்கிக் கொடுத்த பொம்மையை என் அண்ணன் மகளுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்தேன்.அடம் அதிகம்.கேட்டால் மறுக்க முடியாது என்பதால்.எங்கோ வெளியே சென்று விட்டு வந்து பார்த்தால் என் டிரெஸ்ஸிங் டேபிள் கலைந்து கிடந்தது.இவள் வேலை என அறிந்து பதட்டம்.பொம்மையைப் பார்த்திருந்தால் கேட்பாளே என்று.ஆனால் அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பார்க்கவில்லை போலும் என ஆறுதலடைந்தேன்.ஆனால் அவள் வீட்டிற்கு செல்லும் பொழுது அத்தை நீங்க பொம்மை வச்சிருக்கீங்க நான் பார்த்தேன்.சட்டென்று கதி கலங்கிவிட்டது.ஆனால் அவள் இலகுவாக நீங்க என்ன INFANT ஆ பொம்மை வச்சுக்க?நீங்களே வச்சுக்கோங்க எனக்கு வேணாம் என்று சொல்லிவிட்டுப் போனாள்.எனக்கு பல்ப்.குழந்தைகள் தான் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்கின்றார்கள் நம்மைவிட:)
சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது.தலையில் அடி இரண்டு தையல் போடும் அளவுக்கு.பலத்த அடி எனச் சொல்லமுடியாது எனினும் அதிர்ச்சியில் சுய நினைவை சில மணி நேரம் இழந்திருந்தேன்.அதை விடக் கொடுமை எழுந்து என்ன நடந்தது என்றே மறந்துபோனது.வெகு சிரமப்பட்டு ஒவ்வொன்றாக ஒருமணி நேரத்திற்குள் நினைவுக்கு கொண்டு வந்தேன்.தோழிகள் தவிர ஒரே ஒரு நண்பரிடம் மட்டும் பகிர்ந்தேன்.சும்மா கிடந்த வண்டிய இடிச்சு தலையில எம்பராய்டரி போடும் அளவுக்கு கோவக்காரங்களா என்று வெகு இயல்பாக கிண்டல் செய்தார்.எனினும் அக்கறையான விசாரிப்புகளும் கூடவே.மனம் விட்டுச் சிரித்தேன்.வந்து குசலம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாக அறிவுரை கொடுத்து போரடிக்க வைக்கும் சொந்தங்களுக்கு நடுவே நோயாளியாக உணரவைக்காமல் கேலியும் கிண்டலுமாய் இயல்பாய்ப் பேசுவது தோழமை மட்டுமே.
நேற்று நிலா என்ற பெண்ணை டிவிட்டரில் பின்தொடர்ந்தேன்.ஒருசிலர் பின்தொடர்வதற்கு நன்றி சொல்வது வழக்கமே எனினும் இவர் சொன்ன விதத்தில் சற்று நெகிழ்ந்தே போனேன்.என்னை அவ்வளவு கவனித்து இருக்கிறார்.ஒன்று ஒன்றாகச் சொல்லி அவ்வளவு பிடிக்கும் என்றது எனக்கே ஆச்சர்யம்.என்னைத் தாழ்வாக நினைக்கவோ அன்றி உயர்வாக நினைக்கவோ எதுவும் இல்லை.என் தகுதி என்னவென்று நான் அறிவேன் என்பதால்.அதிகம் புகழ்ந்தால் சட்டென்று கவனம் என மூளை உசுப்பி விடும்.அதே சமயம் ஆத்மார்த்தமான பாராட்டுகள் மனதிற்கு இதத்தை அளிக்கின்றன.அது போல இதமாக இருந்தது நிலாவின் பாராட்டும் அன்பும்.
இப்படி எழுதிக் கொண்டே போகலாம் அன்பு பரிமாறிக் கொண்ட நினைவுகளை.இங்கு சொல்லாமல் விட்டவை நிறைய.பொதுவாக பெரும்பாலோனோர் மனதில் அன்பை வெளிப்படுத்த அதிக பணம் தேவை என நினைக்கிறார்கள்.புடவையும் நகையும் மட்டுமே மனைவியை மகிழ்விக்க போதுமானவை என்றும் நினைப்பு சில ஆண்களுக்கு.அவை வேண்டும் ஆனால் அவை மட்டுமே என்றால் வேண்டாம்.ஆனால் உப்பில்லாப் பண்டம் மட்டுமல்ல அன்பில்லாப் பொருளும் மண்ணிற்குத் தான் சமம்.பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்பைப் பகிராமலும் பரிமாறாமலும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.என்றேனும் ஒரு நாள் திரும்பிப் பார்க்கும் பொழுது அவர்கள் சேர்த்த பொருளை விட இழந்தது அதிகமிருக்கும்.அதை அனுபவிக்கவும் ஆள் வேண்டாமா?பரிசு என்றாலே நிறைய பணமும் பிரம்மாண்டமும் என்பதே நினைவுக்கு வருகிறது பலருக்கு.ஆனால் அதையும் தாண்டி நம் பொன்னான நேரம் அதை நம் பிரியமானவர்களுக்கு எப்படிச் செலவிடுகிறோம் என்பதில் இருக்கிறது.பிறந்தநாளுக்கு விழித்திருந்து பனிரெண்டு மணிக்கு தோழமையிடம் இருந்து வரும் SMS இல் உள்ள சுவராசியம் மறுநாள் வரும் போன் காலில் கூட இராது.மிக மோசமான தருணங்களில் சட்டென்று தோள் சாய விரும்பும் தோழமைக்கு நாம் கொடுக்கும் நம் நேரம் விலைமதிப்பற்றது.

எங்கேனும் மகளுடன் நட்புறவோடு விளையாடும் தந்தையைக் கண்டால் ஏக்கம் பீறிடும் எனக்கு.அது போல எல்லாம் இல்லாமல் வேலைப் பளுவில் மூழ்கடித்துக் கொண்டவர் என் அப்பா.தகுந்த நேரத்தில் அன்பை வெளிப்படுத்தாமல் பின்னர் அப்படிப் பாசம் வைத்தேன் இப்படிப் பாசம் வைத்தேன் என்று புலம்புவதில் என்ன பயன்?எங்கேனும் சென்ற இடத்தில் பிரியமானவர்களுக்குப் பிடிக்கும் என அறிந்து பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள் மறக்கவே முடியாததாகப் போகும் அவர்களுக்கு.சின்னச் சின்னச் சந்தோசங்கள் தான் வாழ்வின் மிகப் பெரிய மகிழ்விற்கு ஆரம்ப அடிப்படை.
"பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல "
காதலுக்கு மட்டும் அல்ல எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் 
அன்பைப் பகிர்வதில் உள்ள நன்மை பெறுதல் இருபக்கமும் உண்டு.கொடுப்பதில் நஷ்டம் இல்லை லாபம் மட்டுமே.மிகச் சிறிய வாழ்க்கையில் வெளிப்படுத்தப்படும் அன்பு மட்டுமே வாழ்வின் ஜீவாதாரமாக இருக்கும்.


5 comments:

செல்வா said...

கட்டுரை முழுவதும் அன்பு சிதறிக்கிடக்கிறதுங்க :)) இரண்டு முறை படித்தேன். ரொம்ப நெகிழ்வான பதிவு.


//சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிராக அமைந்தாலும் நம்மை புரிந்து கொள்ளும் நட்பு அமைவது ஒரு வரம்.//

// பரிசு என்றால் நிறைய பணமும் பிரம்மாண்டமும் தான் என்பதை அடியோடு பொய்யாக்கிய மகிழ்வு//

இன்னும் உங்கள் சகோதரர் மகள் கொடுத்த பல்பும் அருமை. அழகான நிகழ்வுகளின் தொகுப்பு.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

மிக்க நன்றி செல்வா:)

Unknown said...

கலவையாக கொட்டிக்கிடக்கின்றன வார்த்தைகள் அன்பின் ஆக்கிரமிப்பில் நெகிழ்ந்த உணர்ச்சிகளைச்சுமந்து...நைஸ்

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி :)

chinnapiyan said...

நல்லா சொல்லியிருக்கீங்க உங்க அனுபவத்தை.

"என் அப்பா.தகுந்த நேரத்தில் அன்பை வெளிப்படுத்தாமல்"

ஒரு முன்னால் ராணுவத்தினன், ஒரு மகளுக்கு தந்தை என்ற முறையில் சொல்கிறேன்.நானும் ஒரு வகையில் உங்கள் தந்தையை போலவேதான். இம்மீடியட்டா வாய்திறந்து புகழாவிட்டாலும் உள்ளத்திள்ளே பூரித்து போய்விடுவேன். குடும்பம் உறவினர்களிடையே புகழ்ந்தோ பேச தோன்றாது. அப்படி பேசுபவர்களைக்கண்டால் செயற்கைத்தனமா தோன்றும். ஆனால் அலுவலக நண்பர்களிடம் வானளாவி என் மகளை புகழ்ந்து பாராட்டுவேன். நண்பர்கள் அவர்களின் மகளின் நடவடிக்கைகளை பற்றி கூறி வேதனையடையும்போது, நான் மனதில் என் மகளை நினைத்து பெருமைகொள்வேன். ஆனால் இதுகாறும் அவளின் முன்னே பாராட்டியது இல்லை. அதனால் பாசம் இல்லை என்று நினைப்பது தவறு. தானாடாவிட்டாலும் தன் தசையாடும். ஒரு குடும்பத்தலைவனாக எல்லாவற்றுக்கும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியை தெரிவிக்கவோ அல்லது கலங்கி நிற்பதோ இயலவில்லை. ஏனென்றால் 1) ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்துவிட்டதால் 2) நன்கு படித்து மாதம் ஒரு லட்சம் வாங்கி திருமணம் செய்து மகிழ்ச்சியுடன் வாழ்கையை நடத்தி வந்தாலும், அன்று முதல் இன்றுவரை என் மகள் விவரம் தெரியாத குழந்தை என்ற நினைப்புதான். எப்படி மகன் மேல் தாய் பிரியம் வைத்து இருக்கிறாளோ அதுபோலவே தந்தையும் தன் மகள் மேல். ஒரு தாயைப்போல தந்தைக்கு வெளியே எக்ஸ்ப்ரஸ் பண்ண தெரியாமல் இருக்கலாம். ஆனால் அன்புக்கும் பாசத்திற்கும் குறைவில்லை. ஒருவேளை உங்களைப்போல என் மகளும் ஏங்கி இருக்கலாம். ஒரு மகள் தன் தந்தையின் நடவடிக்கைகளை கொண்டே அவரை புரிந்து கொள்வாள் என்றே நம்பிகிறேன். வாழ்த்துகள் :)