Monday, February 28, 2011

அப்பா!

.என் தந்தை கண்ணே மணியே குட்டிமா செல்லம் என்றெல்லாம் கொஞ்சி நினைவில் இல்லை.அள்ளி அணைத்து முத்தம் கொடுத்ததில்லை.அதனால் தானோ என்னவோ அப்படி யாரேனும் அழைத்தால் கூட அது செயற்கையாகவே இருக்கும் இன்றும் எனக்கு.அந்த பிம்பம் இப்பொழுது நினைத்தால் அப்படியே ஆக்கிரமிக்கிறது மனம் பூராவும்.சிவந்த மேனி நெற்றியில் செந்துருக்கம் கம்பீரமான நடை,கணீரென்ற குரல் ரசிக்க வைக்கின்ற சிரிப்பு,தனக்கே உரிய குறும்புத்தனம் கலந்த நகைச்சுவை பேச்சு இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.கையில் சிறிய மடிப்போடு வெள்ளை வேட்டியில் நடக்கும் கம்பீர நடை அப்படியே பதிவாகி இருக்கிறது மனதில். எந்த இடத்தில்  அப்பாவின் மீது பிடிப்பு ஏற்பட்டது என்று நினைவில் இல்லை.பொதுவாகவே எதிர்பாலின ஈர்ப்பு காரணமாக பிடித்திருக்கலாம்.ஒவ்வொரு குழந்தைக்கும் தன் தந்தை தான் ஹீரோ.எனக்கும் அப்படிதான்.வயதிற்கு வரும் வரை அப்பாவின் மிக அருகில் இரண்டு கைகளின் ஊடே உறங்கியபோழுது இருந்த கதகதப்பு இன்னமும் நினைவில் இருக்கின்றது.அந்த கைகளில் இடையே இருக்கின்ற பொழுது வருகின்ற பாதுகாப்பான உணர்வை வேறு எதுவும் தருவதில்லை.அப்படியே தூக்கி தோளின் ஓரம் சுமந்து செல்லும் பொழுது கிடைத்த உயரம் இறுமாப்பு கொடுத்திருக்கின்றது.
"பச்சை மாமலை போல் மேனி
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன்
அரங்கமா நகருளானேன்"


அரங்கமா நகருளா...னேன்  என்று அவர் இழுத்து கண்களை மூடி  பாடுகின்ற பொழுது அக்கணமே பெருமாள் உயிர்த்தெழுந்து அருகமர்ந்து கேட்பது போல இருக்கும்.அப்படியே பிரம்மிப்பாய் "ஆ.."வென பார்த்துக்கொண்டிருப்பேன்.அப்பாவின் தமிழ்ப்புலமை மெய்சிலிர்க்க வைக்கும்.சரியான புத்தகப்புழு.படித்தவற்றை விளக்கும் போதும் சரி விமர்சிக்கும் பொழுதும் சரி ஆழ்ந்த அறிவை அவரிடம் பார்த்திருக்கின்றேன்..சிறு வயதில் அவர் வாங்கிபோட்ட குழந்தைகளுக்கான புத்தகங்கள் தான் வாசிக்கின்ற பழக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தின.ஒரு அகராதியை போல எந்த விஷயத்தை பற்றி கேட்டாலும் விளக்கம் கிடைக்கும்."நிறைகுடம் நீர் தளும்பல் இல்" என்ற வார்த்தைக்கு அர்த்தமாக என் தந்தையை பார்க்கிறேன்.அதிகம் கோபப்பட்டு பார்த்ததில்லை.ஆனால் கோபம் வந்தால் அதிகமாகவே இருக்கும்.அம்மாவின் அடிகூட வாங்கிக்கொள்ள அனைவரும் தயாராக இருப்போம்.ஆனால் அப்பாவின் கோபத்தை தாங்குவது மிகக்கடினம் எங்களுக்கு.சிறுவயதில் பலர் முன்னிலையில் கைகொடுத்து திருமணவாழ்த்து சொன்னதற்கு வாங்கிய திட்டு இன்றுவரை வேறு எவரிடமும் கைகொடுக்க தயக்கத்தை ஏற்படுத்திவிட்டது..மற்ற அப்பாக்கள் போல அதிகம் இவர் உருகுவதில்லையே என்ற ஏக்கம் உண்டு.பிறிதொருநாள் வேறுஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபொழுது "அதிகம் பாசத்தை வெளியே காட்டினால் நம்மை பிரிகின்ற பொழுது பிள்ளைகள் கஷ்டப்படுவார்கள்"என்பதை கேட்க நேர்ந்தது.நேராக புகழா விட்டாலும் நண்பரிடம் சொல்லிபெருமைபட்டிருப்பார் நம்மை பற்றி என்று அறியவில்லை.அண்ணன் திருமணத்தில் அப்பாவின் நண்பர் அழைத்து "உன் தந்தை எப்பொழுதும் உன்னைப்பற்றி தான் பேசுவாரம்மா"என்ற பொழுது உள்ளே நெகிழ்ந்திருக்கின்றேன்.

என்னை பொறுத்தவரை பிள்ளைகள் அம்மா அப்பாவின் நம்பிக்கைபடி நடந்து கொண்டாலே அவர்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்றே நினைக்கின்றேன்..சில நேரங்களில் அப்பா சின்ன விசயங்களுக்கு கோபப்படுவது போல தோன்றினாலும் பெரிய விசயங்களில் மிக அமைதியாக எதிர்கொண்டு நேர்த்தியாக அவர் செயல்படுகின்ற விதம் இன்றளவும் எங்களுக்குகூட இருந்ததில்லை.என் வாழ்க்கையிலேயே நான் செய்த உருப்படியான விசயமாக நான் நினைப்பது வேலைக்கு சென்று சொற்ப சம்பளத்தில் பெற்றோர்களுக்கு துணி எடுத்துகொடுத்ததுதான்.அப்பாவிற்கு என் சம்பளம் ஒரு நாள் செலவு.இருப்பினும் அன்று அவர் முகத்தில் கண்ட ஆனந்தம் இன்றும் நினைவில் இருக்கின்றது.ஆண் பிள்ளையை பெற்றிருக்கிறோம் என்ற இறுமாப்பை ஒருநாளும் கண்டதில்லை.மாறாக தானும் பெண் பிள்ளையை பெற்றவன் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்.அதனால் தானோ என்னவோ அழகு,நிறம்,பணம் பார்த்து பெண் முடிப்பதில் உடன்பாடில்லாமல் குடும்பம் மட்டுமே பார்க்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.பொறுப்பில்லாத தந்தையாக அவருடைய தகப்பனார் இருந்தாலும் இறுதிக்காலத்தில் அவருக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் உதவி செய்த ஒரு மிகச்சிறந்த குணத்தை என் தந்தையிடம் கண்டிருக்கின்றேன்.ஒரு மகனாக அவர் கடமையை நிறைவேற்றத்தவரவில்லை.சிறு சிறு குழந்தைகளை பார்த்து அவர் ஏக்கமும் ஆசையுமாக கொஞ்சும்போழுதேல்லாம் நமக்கும் திருமணமாகி நம் பெண்ணை கொஞ்சினால் எப்படி இருக்கும் என்று உள்ளே கற்பனை செய்து பூரித்து இருக்கிறேன்.ஆனால் ஒரு பேரன் பேத்தி கூட பார்க்காமல் அவரை காலன் கொண்டு செல்வான் என்பது நாங்களே எதிர்பாராதது.ஏதோ காய்ச்சலில் படுத்திருக்கின்ற அப்பா அழைத்தபொழுது அதுவே கடைசியாக இருக்கும் என தோன்றவில்லை.அண்ணன் வந்து சொல்கின்ற வரை மாரடைப்பின் காரணமாகவே அப்பா மருத்துவமனையில் சேர்க்கபட்டார் என்று தெரியவில்லை.இன்று வரை அந்த மோசமான இரவை பழித்து கொண்டுதானிருக்கிறேன்.இழந்தது இழந்தது தான் என்பதை உணரவே நீண்ட மாதங்கள் ஆயிற்று.இன்றும் கூட கனவில் அப்பா வருகின்ற பொழுது எழுந்து பார்த்து இல்லை என யதார்த்தம் உணர்வது கல்லை மெல்லுவது போல மிக கடினமாக இருக்கின்றது.
உள்ளார்ந்து சொன்ன வார்த்தைகள் காதுகளில் ஒலிக்கின்றன."என் பிள்ளைகளுக்கு பிரச்சனை என்றால் உயிரையும் தருவேன்.அவர்கள் முன் உயிர் மண்ணிற்கு சமம்"
அண்ணி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பொழுது அப்பாவின் ஆன்மா பிரிந்தது.ஸ்கேனில் கூட பெண்குழந்தை என்றார்கள்.ஆனால் எங்கள் அனைவரது பிரார்த்தனையும் அவரே வந்து பிறக்கவேண்டும் என்பதில் இருந்தது.கிட்டத்தட்ட உருப்போட்டுக்கொண்டிருந்தோம் என்று கூட சொல்லலாம்.டாக்டர் சொன்ன தேதியையும் தாண்டிஇரவு வேளையில்  அப்பாவின் பிறந்த தேதி பிறந்த கிழமையில் அவர் உயிர் பிரிந்ததாகக் சொல்லப்பட்ட அதே நேரத்தில் ஆண் குழந்தை அவரையே உரித்தார் போல பிறந்தது.அன்று வடித்த கண்ணீர் எந்த வகை என இன்றுவரை அறியேன்.மறுநாள் அந்த குழந்தையை பார்க்கசென்ற பொழுது அதன் யதார்த்தமான சின்னஞ்சிறு கண்கள் மேல்நோக்கி பார்த்தது ஆயிரம் கதை சொல்லியது.இன்று வரை அந்த குழந்தைக்கு எங்கள் தந்தைக்கு கொடுக்கின்ற மரியாதை தான் வீட்டில்.

பகுத்தறிவாளர்களே சற்றே தள்ளி நில்லுங்கள்.உங்கள் அறிவார்ந்த விளக்கங்களையும் விஞானத்தையும் என் நம்பிக்கைக்குள் புகுத்தி காயப்படுத்தாதீர்கள்.இது போலி எனத் தோன்றினாலும் சரி யதார்த்தம் என வாதிட்டாலும் சரி எனக்கு அது என் தந்தை.அவ்வளவே நான் சொல்லவந்தது.எந்த மக்களின் குடிகெடுக்கவும் மதம் சார்ந்த நம்பிக்கைகளுக்கு பரப்புரை கொடுக்கவும் இங்கே நான் வரவில்லை.என் உணர்வுகளை மதித்து அமைதியாக செல்லுங்கள்.

அந்த குழந்தை கொடுத்த மகிழ்வு அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய சோகத்தில் இருந்த எங்களை மீட்டெடுக்க உதவியது என்றால் அது மிகையாகாது.
என் தந்தையின் பிறந்த தேதியில் ஒரு குழந்தையும் இறந்த தேதியில் ஒரு குழந்தையும் உண்டு எங்கள் வீட்டில்.கடவுள் மீதான நம்பிக்கையை விட இங்கே என் தந்தை எங்களுடன் இருக்கின்றார் என்ற உணர்வே மேலோங்கி இருக்கின்றது.

6 comments:

maithriim said...

தந்தை, தமிழ் பாண்டியத்தை உங்களிடம் கொடுத்து விட்டு தான் சென்றிருக்கிறார். நீங்கள் பரமஹம்ச யோகானந்தாவின் சுய சரிதை படித்து இருக்குறீர்களா? அதில் அவர் எப்படி ஒரு ஆத்மா திரும்ப விருப்பபட்டு பிறக்கின்றது, எப்படி அதே முந்தயப் பிறவியின் முகச் சாயலுடன் பிறக்கும் போன்றவற்றை விளக்கி இருப்பார்! படித்ததில்லை என்றால் படியுங்கள்.
தந்தைக்கும் மகளுக்கும் உள்ள உறவு என்றும் மிகவும் விசேஷமானது. தந்தை போன பிறகும் அவரின் ஒவ்வொரு சொல்லும் செயலும் நம் மனதில் இருந்து நம்மை வழி நடத்தும்.
உங்கள் எண்ணங்களை அழகாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள்.
amas32

Rekha raghavan said...

மிகவும் நெகிழச் செய்த பதிவு. தந்தையுடனான உங்களின் அன்புக்கு ஈடு இணையில்லை. வாழ்த்துகள் சகோதரி.

உமா கிருஷ்ணமூர்த்தி said...

amas ,ரேகா ராகவன் மிக்க நன்றி!

உமா கிருஷ்ணமூர்த்தி said...

//பரமஹம்ச யோகானந்தாவின் சுய சரிதை ///

இதுவரை படித்ததில்லை வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் படிக்கிறேன்

Unknown said...

kadhari aludhuviten.aruamai thangaiye..

Unknown said...

செம.. அப்பாக்கள் இறந்தும் வாழ்கிறார்கள் பெண்பிள்ளைகளின் மனதில்