Thursday, December 12, 2013

கூண்டுக்குள்ள என்ன வச்சு..

படம்                    : சின்ன கவுண்டர்
பாடல்                 : கூண்டுக்குள்ள என்ன வச்சு 
இசை                   : இளையராஜா 
பாடலாசிரியர் :  R .V .உதயகுமார் 

பொதுவாக இந்தப் படத்தில் முத்துமணி மாலை தான் நான் விரும்பிக்கேட்பது.
இந்த கூண்டுக்குள்ள என்ன வச்சு பாடல் சோகமானது என்பதால் உடனே 
சானல் மாத்திடுவேன்.சமீபத்தில் தான் எதற்கும் கேட்போமே என்று வரிகளும் 
ஊன்றிக் கேட்டதில் மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஒவ்வொரு வரிகளிலும் 
சின்னச் சின்ன சேதிகள்.வெகு இயல்பான பேச்சு வழக்கில் அமைந்தது 
இன்னும் பாடலுக்கு அழகைச் சேர்த்திருக்கின்றது .
கிராமத்து வாழ்க்கை என்றால் என்னவென்றே அறியாமல் வளர்ந்தவர்களுக்கு இந்தப் பாடல் பல சேதிகளைச் சொல்லும்.

சினிமா தாண்டி எவ்வளவோ பொழுது போக்கு
அம்சங்கள் வந்து விட்ட போதிலும் ,படத்தைப் பார்ப்பதுவும் முன்பு போல
வெகு சிரமமின்றி மலிந்து விட்ட போதிலும், சினிமா என்ற பொழுது போக்கு 
அம்சத்திற்கான அவசியம் என்னவென்று ஆராய்ந்தோமானால் வருங்காலச் 
சந்ததிக்கு , முந்தைய காலம் ,அக்கால மனிதர்கள் எப்படி 
இருந்தார்கள் என்பதை எல்லாம் அறிந்து கொள்ள ,அற்புதமான ஒரு ஊடகம் 
இது. ஆவணப் படுத்துதல் என்பது அவசியமான ஒன்று. அப்படி ஒவ்வொரு கால கட்டத்தையும் 60,70,80,90 ,2000 கள் எப்படி அக்காலத்திய மனிதர்கள் எப்படி 
அக்கால கட்ட கிராமம் எப்படி , அக்காலத்திய நாகரிகம் என அழகாய் ஆவணப் 
படுத்தியதில் சினிமாவின் பங்கு பெரிது என்றால் அது மிகை ஆகாது.
வெறுமனே ஏட்டில் படிப்பது வேறு காணொளியாகப் பார்ப்பது வேறு.ஒரு 
காமராஜர் ,பெரியார் வாழ்ந்தார்கள்  என்பதெல்லாம் பின்னாளில் அதிசயத் தக்க ஒன்றாகவே இருக்கும்.அதை  மூன்று மணி நேரமாகப் பதிவு செய்ததில் நிச்சயம் இந்த மனிதர்கள் எப்படி என வரும் தலைமுறை அறிய ஒரு வாய்ப்பாகவே அமையும்.திரை இசை மட்டும் இல்லாவிட்டால் இசையை 
இத்தனை பேர் ரசித்திருப்போமா என்பதே கேள்விக் குறி தான்.
அது போலத் தான் கிராமத்துப் படங்களும் பாடல்களும்..அத்தைகைய ஒரு பாடலாகவே இதையும் நான் பார்க்கிறேன்.

"கூண்டுக் குள்ள என்ன(னை ) வச்சு 
கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக் கிளியே.."

இதுல கோலக் கிளியே வா இல்ல (கோழைக்  கிளியே )வா என்றொரு 
சந்தேகம் என் காதுக்கு வந்ததுண்டு. சுகன்யா தைரியமா கொலை செய்து 
விட்டுச் சென்றிருந்தாலும் பேச்சு வழக்கில் ஏதோ செல்லமா கோபிச்சுத் 
திட்டறாரோன்னு நினைச்சதுண்டு.

"கண்ணு   வலது கண்ணு தானா துடிச்சதுன்னா ஏதோ நடக்குமின்னு 
பேச்சு "

நல்ல சகுனம் கெட்ட சகுனம் என நம் மக்களின் வாழ்வோடு கலந்துவிட்ட சில நம்பிக்கைகள் உண்டு. அதில் இந்த வலது கண் துடிப்பதுவும் ஒன்று.
என் அம்மா சொல்வதுண்டு வாழப் போற பொண்ணுக்கு வலது கண்ணு துடிக்கக் கூடாது ன்னு..ஏதோ கெட்ட சகுனமாம்..அந்தக் கெட்ட சகுனதிற்குத் தகுந்தார் போலவே

"மானம் கொறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கத முடிஞ்சு போச்சு "

நடந்த நிகழ்வைச் சொல்லி விடுகிறார்.

" ஈசான மூலையில லேசான பல்லிச் சத்தம் மாமன் பேரைச் சொல்லிப்
 பேசுது"

இந்த ஈசான மூலை  என்பது வட கிழக்கு (நம் வீட்டு அடுப்படி இருக்கும் இடம் வாஸ்து படி ) பல்லி கத்தும் சத்தம் கொண்டும் பலன் சொல்வாங்க அம்மா .
சின்னச் சின்ன நம்பிக்கைகள் :)

"ஆறாத சோகம் தன்னைத் தீராம சேர்த்து வச்சு ஊரும் சேர்ந்து என்ன ஏசுது "

இந்த ஏசுவது என்பதும் வெகு இயல்பான கிராமத்து வழக்கு தான்.திட்டுவதை அப்படிச் சொல்வார்கள்.

"தென்னங்கிளையும் தென்றல் காற்றும் குயிலும் அடி மானே ஒன்ன தினம்
பாடும்
கஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்
இந்த மாமன் கதையை தெனம் பேசும்"

கிராமத்து வீடுகள் தோப்பு,தோட்டம் சூழப் பார்த்திருக்கின்றீர்களா?ஒரு விதத்தில் அப்பேர்ப்பட்ட சூழலையும் சொல்லிச் செல்கிறது பாடல்.
இந்தக் கஞ்சி மடிப்பு என்பது பருத்தி ஆடைகளுக்கு விறைப்பைக் கொடுக்க
பானையில் ஆக்கிய சோறை வடிச்ச கஞ்சில சற்றே நீர் சேர்த்து அலசிக் காயப் போடுவார்கள்.இந்தக் கஞ்சிக்கு ஜவ்வரிசியை உடைச்சு வேக வச்சு அதிலும் நீர் கலந்து அலசுவதுண்டு.

"பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் 
விட்டுப் போகல "


கட்டிய கணவர் உடனே இறந்து விட்டால் தாலியில் உள்ள மஞ்சளின் ஈரம்
கூடக் காயல என்பதுண்டு.உள்ள சோகத்தை பளிச்சென எடுத்துச் சொல்லும் .
எந்த ஒரு பருத்தி ஆடையும் முதல் சலவையில் சாயம் போகும்..அப்படிக் கூடப் பயன் படுத்தப் படாம கிடக்கு என்ற இயல்பான ஆதங்கம் ஒரு பக்கம்

"பண்ணாரி கோவிலுக்கு முந்தானை ஓரத்துல நேந்து முடிச்ச கடன் தீரல"

பண்ணாரி கோவில் பற்றி கோவை வாசிகளுக்குச் அறிமுகமே தேவையில்லை. இவ்விடத்தில், இந்த முந்தானை முடிச்சு தான் நான் ரசித்த
வார்த்தைகள் .. என் அம்மா அது போல நேந்து கொண்டு பார்த்திருக்கேன்.
பல சமயம் ஒரு வெள்ளைத் துணியில் முழுக்க மஞ்சள் நீரில் நனைத்து
அதிலே ஒன்னேகால் (அது என்ன கணக்கோ காலணா)ரூபாயை முடிந்து
வச்சிருப்பாங்க. நாம் நினைச்ச உடனே கோவிலுக்குப் போக முடியாது
என்பதால் ஏதேனும் சோதனைக் காலத்திலோ அல்லது ஒரு காரியம்
ஈடேறவோ சட்டென வீட்டில் இப்படிச் செய்து காணிக்கை எடுத்து வச்சு
காரியம் ஈடேறவும் அக்கோவிலுக்கு செல்லும் தருணத்தில் காணிக்கை
செலுத்துவது உண்டு.

எவ்வளவு சேதிகள் பாருங்கள் இந்தப் பாடலில் :-)

நவீன காதலில் ஆயிரம் டா ,லூசு என இருந்தாலும் இந்த "மாமா"என்ற
அழைப்பிற்கு ஈடாகா :))

(மாமா மாமா  ஒன்னத் தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ")

எங்கள் வீட்டில் வழி வழியாக அம்மாச்சி,அம்மா,அண்ணி என அனைவரும்
தங்கள் கணவரை மாமா என்றே அழைப்பதுண்டு.பல வீடுகளில் இன்னமும்
இந்த அழைப்பைக் கேட்கலாம் .
ஒவ்வொரு ஊருக்குமான வட்டார வழக்கு என்பது ஒரு வகை சிறப்பம்சம்
ஆனால் நாகரிக வட்டத்தில் (?!) இருப்பவர்கள் அதை கௌரவக்
குறைச்சலாகக் கருதி "பண்ணித் தமிழுக்கு"மாறிவிட்டது வருந்தத் தக்க
ஒன்று.

பாட்டுக்கு மெட்டமைப்பது இசையமைப்பாளர்களுக்கு சவால்.மெட்டுக்குப்
பாட்டெழுதுவது பாடலாசிரியர்களுக்கான சவால்.இது எப்படி அமைக்கப்பட்ட
பாடலோ யான் அறியேன்.ஆனால் இரண்டும் இலகுவாகப் பொருந்தி காதுக்கு
இனிமை சேர்த்திருக்கின்றன..

மண்வாசனையுடன் எடுக்க பாரதி ராஜா மட்டுமே என்ற பிம்பத்தைத் தாண்டி இயக்குநர் R .V .உதயகுமார் தானும் உண்டு என நிரூபித்த படமாகவே இதைப்
 பார்க்கிறேன்.

தற்பொழுது டிவிட்டரிலும் கூட பேச்சு வழக்கில் எழுதுவது ஒரு இலகுவையும் ஆசுவாசத்தையும் கொடுக்கிறது.போலவே இந்தப் பாடலும் மனதிற்கு மிக நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கின்றது:)



No comments: