Saturday, February 25, 2012

பெரு மூச்சு ஒரு தொகுப்பு

 அதிகம் ரசிக்கப்பட்டவைகளின் ஒரு தொகுப்பு 

நீ புத்தகம் படிக்கின்ற பொழுதெல்லாம்
உன்னிரு கைகளுக்குள் புகுந்து
உன் உறுதியையும் 
படித்துவிட ஆசை எனக்கு
ம்ம்ம்ம் ..படி..dடா.. பார்க்கலாம் ;)
 ********************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
******************************
நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
************************************
பொய்யறிந்த கண்களின் 
கேலியில் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட மெய்யறிந்து
வெட்கித் தலைகவிழ்ந்தன 
என் இதழ்கள் பற்களுக்குள்...
**************************
முகம் நோக்கித் தூறும்
சாரல்கள் யாவும் 
என் செல்லக் கோபங்களை 
சமாதானம்செய்யத்
தீண்டும்
உன் விரல்கலாகின்றன
"ம்ம்ம்மாமழை"
***************
விலகி செல்லாதே அருகில் வந்தென்
இதழ் ஒற்றி(று) ப்பிழை திருத்து
******************************
எனை எவ்வளவு பிடிக்கும் என 
கைகள் விரித்து சொல்லாதே 
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான் 
என் "மெய்"அளவு கை சுருக்கி 
"மெய்" சொல் அதுபோதும்
************************************
உன்னை எவ்வளவு பிடிக்கும் 
எனக் கேட்டால் தெரியாது
உன்னளவு மட்டுமே பிடிக்கும் 
உன்னைத் தவிர வேறு எதுவும் சிறந்ததில்லை 
உதாரணம் சொல்வதற்க்குக்  கூட...
************************************************* 
ஏதோ பண்டிகை என்கிறார்கள் 
திருவிழா என்கிறார்கள் 
நீ வருகின்ற வரையில்
எனக்கு இது மற்றும் ஒரு நாளே !
*********************************************
தேடாதே என் வெட்கங்களை
உன் கேலி சிரிப்புகள் விரட்டி சென்றதால் 
வெட்கப்பட்டு உன் முதுகின் பின்னால் 
ஒளிந்து கொண்டு நிற்கின்றன...
*****************************************
"அசடாகவே"
இருக்க ஆசைப்படுகிறேன்
என் தலை குட்டி 
மூக்கை ஆட்டி 
நீ சொல்கின்ற அழகிற்காகவே!
**********************************
ஒரு கையால்
இடைவளைத்து
மறுகையால் தாடை நிமிர்த்தி
"பேசு"எனக் கெ(கொ)ஞ்சுகிறாய் 
உன் அருகாமையில்
நான் பேச்சிழந்ததை அறியாமல் !
*********************************
தூக்கத்தில் ஆதரவிற்கு அலையும் 
குழந்தையின் கை போல 
பர பரவென எப்பொழுதும் 
உன்னையே தேடி அலையும் மனது
************************************************
பயந்தால்
அணைத்துக் கொள்வாய் 
என அறிந்தே
பயம் கொள்கிறேன் நான்! 
************************************
பெண்ணாக பிறந்தது
பிழையென கருதுகிறேன்
பெண்மை மீறி
மழையென என்
காதலை
பொழிவதற்கு இயலாத போது ...!
******************************
 
 
 
 
 
 

 
 
 

Friday, February 24, 2012

ட்விட்டர் அப்டேட்ஸ்..!3

 காயில் இனிது லிக்விட் இனிது என்பர் பேட்டால் அடித்து  கொசு கருகும் இனிமைச் சத்தம் கேளாதவர்

இயலாமையால் தீர்த்துக் கொள்ள முடியாத பழிகள் பெரும்பாலும் கடவுள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஆற்றாமையில் விடப் படுகின்றன

தைரியமின்றி தற்கொலை செய்பவர்கள் புனித ஆத்மாவாகவும் எதிர்த்து போரிட்டு வேறு வாழ்க்கை தேடிக் கொண்டால் புறம்போக்காகவும் ஆக்கப்படறாங்க#நடிகை

அப்பாடக்கர் என்பதற்குச் சரியான தமிழ் வார்த்தை "தில்லாலங்கடி" உபயம் கவுண்டமணி #வெட்டியா இருக்கும் பொழுது யோசிச்சேன்:)

தானே மாமியார் ஆனாலும் தன் மாமியாரைக் குறை சொல்றதை விட மாட்டாங்க போல சில பெண்கள் :)


உதவி செய்தாலும் மிதிக்கவே படுகின்றன ஏணிகள்

சிலர் விலகிச் சென்றபின்தான் சுதந்திரமாகச் சுவாசித்தலின் சுகம் தெரிகின்றது

பாட்டு டெடிகேட் பண்றோம் தங்கபாலுவுக்கு #போ னால் போகட்டும் போடா இந்த காங்கிரசில் நிலையாய் நிலைத்தவர் யாரடா
பணம் உதவி செய்தால் மட்டுமே அது உதவியாகக் கணக்கில் கொள்ளப்படுகின்றது பலருக்கு#மத்த உதவியை மனசுல வச்சுக்க மாட்டேங்கறாங்கப்பா:(
நம் இடைவெளிகளை நிரப்பிக்கொண்டிருக்கின்றன மௌனங்களும் உன் நினைவுகளும்


2016 -இல் நாம் தான் ஆட்சியில் என்று உடன்பிறப்புகள் வாக்கை மெய்யாக்க அம்மாவே போதும் போல :P 
சோகத்தை வெளியே "காட்டிக்"கொண்டே இருந்தால் மட்டுமே சோகமாய் இருப்பதாக நம்பப்படுகின்றது
என்னதான் சரியா பார்த்து ஓட்டினாலும் எதிர்த்து வருபவனிடம் இருக்கு நம்ம உசிரு #ட்ரங்கன் மங்கி ஸ்டைல் ல ஓட்டரானுங்க
கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்றதும் வயலின் வெளிப்படுத்தும் உணர்வுகள் அபாரமானது கொஞ்சிக் குழைந்து அழைப்பை ஏற்கின்றது
மேஜர் சுந்தர் ராஜன் ஸ்டைல்ல தான் குழந்தைங்களுக்கு தமிழ் சொல்லித் தரவேண்டியதா இருக்கு# இது வாழைப்பழம் "பனானா"
இந்தக் குழந்தையின் அம்மா என்று அறியப்படுவதில் ஒரு கர்வம் இருக்கு அம்மாக்களுக்கு#அர்ஜூனம்மா துர்காம்மா

தற்பொழுது விமர்சனம் செய்பவர்களிடம் முந்திக் கொண்டு சொல்லணும் என்ற அவசரத்தனம் மட்டுமே தெரியுது#முழுசா கவனிக்கிறதே இல்லை
மக்களோட சோம்பேறித்தனங்களை காசாக்கி பார்ப்பதுதான் தொழில்நுட்பம் :)


உனக்கான சமையலில் நான் அதிகம் இடுவது உப்பு #உள்ளவரை நினைப்பாய் ஆதலால் #கடுப்பு :)
பட்டப் பகலில் எவன்டா லைட்டை போட்டு கரெண்ட்டை வேஸ்ட் பண்றது ராஸ்கல்ஸ் -குடிமகன் நடுரோட்டில் சூரியனைப் பார்த்து#வேடிக்கை:)
சத்தமா பேசிகிட்டு இருந்தவங்க திடீர்ன்னு சன்னம்மா பேசினா வேற யாரை பத்தியோ புறணி பேச ஆரம்பிச்சிட்டாங்கன்னு அர்த்தம் :)
என்னதான் பார்த்துப்பார்த்து ட்ரெஸ் எடுத்தாலும் அது என்னவோ அடுத்தவங்க கையில இருக்கிற ட்ரெஸ் தான் ரொம்ப அழகாத் தெரியுது:) 
ஓசில வண்டி வாங்கிட்டுப் போனா திரும்பத் தரும் போது பெட்ரோல் போட்டுக் கொடுங்கப்பா#திடீர்னு உருட்ட வேண்டியதா இருக்கு 
வாழ்வின் எல்லா தருணங்களிலும் உடனே இருக்கும் உற்ற தோழன் இளையராஜா  

பாட்டு டெடிகேட் பண்றோம் தங்கபாலுவுக்கு "ஆகாயச் சூரியனை ஒற்றைத் தலையில் கட்டியவர் " :))))
பாட்டு டெடிகேட் பண்றோம் கி.வீரமணிக்கு "சொந்தம் ஒன்றைத் தேடும் அன்னக் கிளி சொல்லி சொல்லிப்பாடும் இந்தக் கிளி" :P

ட்விட்டர் அப்டேட்ஸ்..!

குரு பெயர்ச்சி பலன் இன்ன பிற ஆண்டுப் பலன்கள் அனைத்தும் நன்மை பயக்கும் #அதை எழுதி புத்தகமா விற்பனை செய்யறவங்களுக்கு மட்டும் :P
ரசிப்பு அவரவர் விருப்பு வெறுப்பு சார்ந்ததே எனினும் அது பிறரைக் காயப்படுத்தா வண்ணம் கவனமா இருந்தா நலம்:)
வெறுப்பதை விட ஆகச்சிறந்த தண்டனை அலட்சியமே உன்னால் துளியும் நான் பாதிக்கப்படவில்லைஎன நம் வேலையை நிமதியாகப் பார்ப்பது:)
நேசிக்க ஆயிரம் பேர் இருக்கும் பொழுது வெறுப்பவர்களைப் பற்றிக் கவலைப் படுவானேன்#கடவுளிடம் கற்றுக் கொண்டது:)
இடைவெளி விழுந்த பின் இயல்பாகப் பேச முடிவதில்லை ..
மிக மோசமான சூழ்நிலையில் எதிர்கொண்டே ஆகவேண்டிய கையறு நிலையில் உள்ளிருந்து வருகின்ற அசாத்தியத் துணிச்சல்தான் நமது விஷ்வரூபம்
எளிதில் உருவாகக் கூடியதும் எளிதில் உடையக் கூடியதுமானது இணைய நட்பு
வர வர கரென்ட் சூப்பர் ஸ்டார் மாதிரி ஆகிடுச்சு எப்போ வரும் ன்னு தெரியல வர வேண்டிய நேரத்துக்கும் வர மாட்டேங்குது
 
கால் வலிக்கிறது கால்களை சிறிது நேரம் நாற்காலியில் அமர வைத்திருக்கிறேன் செல்லும் பொழுது எடுத்துச் செல்ல வேண்டும் 

பழகி விட்ட தொல்லைகள் திடீரென நின்றாலும் அதைப் பழகவும் சில நாட்கள் பிடிக்கின்றது
பல உதவிகள் செய்து இருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு முறை உதவி செய்ய முடியாமல் போவதைத்தான் பெரிதாகக் குறைபடுகிறார்கள்
வயதான காலத்தில் பெற்றோர்களுக்கு ஆகச் சிறந்த மகிழ்வு பேரன் பேத்திகளுடன் செலவழிக்கின்ற பொழுதுகள் தான்#எவ்ளோ சந்தோசம் கண்ல:)
விவாதத்தில் அதிகம் சத்தமாகப் பேசினால் தன்னிடம் உண்மை இருப்பதாக நம்பிடுவாங்க என்று பதட்டத்தில் பேசுபவர்களைப் பார்த்தா சிரிப்பா இருக்கு
 நெருக்கங்கள் ஏற்பட பல வார்த்தைகள் தேவையாயிருக்கின்றன இறுக்கம் ஏற்பட ஒரே ஒரு மௌனமே போதுமானதாக இருக்கின்றது
ஆண்களின் "பார்வை"யை அறிந்து கொள்ள இணையம் உதவியிருக்கின்றது#இன்னும் கவனமா இருக்கணும்
தூங்கி எழுந்ததும் திரும்ப தூங்கறது தனி சுகம் #அடடா அப்பப்பா :)
நம்மை நாமே ஓங்கி அறைந்து கொள்ள வேண்டி இருக்கின்றது#கொசு
நண்பர்களிடம் நமக்கு பிடிச்சது மட்டுமே இருக்க வேண்டும் என்பது என்ன மாதிரியான மனநிலை#நாமே அப்படி இருக்க முடியாத பொழுது ?

வெள்ளிக் கிழமை பெண்கள் தலை குளிக்க வேண்டும் என்று விதி வகுத்தவன் வெகு ரசனைக்காரனாக இருக்கணும்#எங்கெங்கு காணினும்:)
 நல்ல மதிப்பு நம் மீது பிறர்க்கு இருக்கும் போதே விலகிப் போயிடனும் நல்லா ஆரோக்கியமா இருக்கும் போதே செத்துப் போயிடனும்
மனதில் இருப்பதை வெளியே சொல்வதால் மட்டும் அல்ல காலம் கடந்து சொல்லாமல் போனாலும் கூட பிரச்சனைகள் வரவே செய்கின்றன
அவங்க அவங்களுக்குன்னு எதிர் கருத்து வந்தா எல்லாருமே அரசியல்வாதிதான்  #ஒரு ஆட்டம் ஆடிட்டு தான் விடறாங்க
அம்மா அமைச்சரவையை மறுபடி மாத்திட்டாங்களாம் #சரி சமமா எல்லாரும் கொள்ளையடிக்க வாய்ப்பு வழங்கராங்களோ#மாத்தி யோசி:) 
உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதிலும் வெளிக்காட்டாமல் இருப்பதிலும் பெண்கள் ஆண்களைவிட ஒருபடி மேல் என்பதையும் இணையம் உணர்த்தியிருக்கின்றது
காலம்காலமாக புலம்புகின்ற வாயடிக்கின்ற குணம் பெண்களுக்குமே மட்டும் ஆண்களுக்கில்லை என்பதை இணையம் தகர்த்துவிட்டிருக்கின்றது
சிலர் பிரஷ்ஷை வச்சு பல்லைத்தேய்ப்பாங்களா இல்ல பல்லை வச்சு பிரஷ்ஷைத் தேய்ப்பாங்களான்னே தெரியல#கண்றாவியா வச்சுருக்காங்க பிரஷ்ஷை
நம்மை விட்டு எவரேனும் விலகினா எல்லா நேரமும் காரணங்களை சமபங்காப் பிரிக்கிறது இல்லை நாம #அவங்க மேல தான் தப்பு:)
என் கோலத்தை வேடிக்கை பார்க்க வந்து அழகு எனக் கைகொட்டிச் சிரித்தது #மழை :)  
அப்பாடக்கர் என்பதற்குச் சரியான தமிழ் வார்த்தை "தில்லாலங்கடி" உபயம் கவுண்டமணி #வெட்டியா இருக்கும் பொழுது யோசிச்சேன்:)
சீரியல்களில் பெரும்பாலும் நல்ல நிகழ்வுகள் யாவும் இறுதியில் கனவுக் காட்சி என்று போடப்படுகின்றன #அதானே பார்த்தேன்:)
பேச்சுத் தமிழ் எழுத்துத் தமிழ் என்று வெவ்வேறாக இருப்பதுவும் படிப்பதற்கு மிகச் சிரமமான காரணமாக இருக்கிறது குழந்தைகளுக்கு
மௌனம் சில நேரங்களில் சம்மதத்தின் அறிகுறி அல்ல புரிந்து கொள்வதற்குக் கொடுக்கப்படும் அவகாசமும் கூட
சொல்லப்பட்ட நோக்கம் ஆராயாமல் வார்த்தைகளுக்குள்ளேயே சிக்கித் தவிக்கிறது மனது
குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா அத்தனைப் பகுத்தறிவும் பஞ்சாகப் பறந்து விடுகிறது

தானே மாமியார் ஆனாலும் தன் மாமியாரைக் குறை சொல்றதை விட மாட்டாங்க போல சில பெண்கள் :)



உங்ககிட்ட ஒருத்தர் நல்லவரா இருந்தா எல்லார்கிட்டயும் அதே மாதிரி இருக்க வேண்டிய அவசியம் இல்லை
எத்தனை விளையாட்டுப் பொருட்கள் வந்தாலும் பலூன் என்றுமே தனிச் சிறப்பானதுதான் #எவ்ளோ குதூகலம் குழந்தைங்களுக்கு
உண்மையாகவே பாராட்டுக்க்குரியவர்கள் பாராட்டுவிழாவில் அமைதியாக வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்கள்தான் #இவங்க ஊதறதும் அவங்க ஆடறதும்
கேவலமாப் பேசுறதைக் கண்டிக்கிறேன் பேர்வழின்னு அதைவிடக் கேவலமா பேசி நோக்கத்தையே சிதைப்பதில் தான் தீவிரம் காட்டுகிறார்கள்
சந்தர்ப்பமும் சூழலும் எதிரா இருக்கின்ற பொழுதும் புரிந்து கொள்கின்ற தோழமை கிடைப்பது பெரிய வரம்
தெரிந்தோ தெரியாமலோ பல பாடல்கள் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரித்தறிய முடியாதபடி பிணைந்தே இருக்கின்றன:)
 
எத்தனைப் பாடல்கள் வந்தாலும் ஐயப்பனுக்கு வீரமணியின் பாடல்கள் தான் கிரீடம் #பள்ளிக் கட்டு சபரிமலைக்கு
சில பாடல்கள் ரசனையுடனும் ஆழ்ந்த காரணங்களுடனும் எவரேனும் அறிமுகப்படுத்தறப்போ கேட்கும் போதெல்லாம் அவங்க நினைவும் வந்துடுது
ஒத்த ரசனைகளும் சுபாவத்தில் எதிரெதிர் துருவங்களுமான ஜோடிகளுக்கு சுவராசியத்தில் பஞ்சமிருக்காது என்று நினைக்கிறேன்:)
நேரத்திற்கு வேலை செய்யும் துறை அநேகமாக மின்வாரியத் துறையாகத் தானிருக்கும்#கரெக்டா கரென்ட் கட் பண்ணி விடறாங்க
வலி(ழி)ந்து பேசப் பிடிப்பதில்லை:)
பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள் "அகராதி" யில் திமிர் எனப் பெயருண்டு:)
இணையம் வந்துவிட்ட பின் கண்ணிற்குத் தெரியாத உலகம் சுருங்கிடுச்சு கண் முன்னால் இருப்பவை யாவும் வெகு தூரத்தில் விலகிச்சென்றுவிட்டன
எதிர்வீட்டில் இருந்த ஒரு மன நோயாளித் தாத்தாவைக் காணவில்லையாம் எங்கேனும் பார்த்தால் சொல்லுங்கள் என்று வேண்டுகோள் வந்தது.
வேதனை என்னவென்றால் அப்படி ஒருத்தர் இருந்தார் என்பதே கேபிள்காரர் சொல்லித்தான் தெரியும் அப்புறம் எங்க அடையாளம் பார்க்கறது :((


காதலும் சுய கவுரவமும் ஒன்றுக்கொன்று எதிரிகள் #படித்ததில் பிடித்தது
அருகில் உள்ளவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்ள புத்தகம் டிவி போன்றவை முகமூடியாகப் பயன்படுகின்றன சிலருக்கு
பிடித்த விசயங்களில் முழுப் பைத்தியமாக இருக்கக் கத்துக்கணும் அதிலே அதிகபட்ச அறிவைப் பெறுவதற்காகவாவது
நம் மதிப்பிற்குரியவர்கள் தவறாக நினைக்கிறார்களோ என்பதே பெரிய மனக் குடைச்சலாக இருக்கிறது
மாற்றுக் கருத்துகளுக்குப் பழி வாங்கும் குணம் சாமான்யனுக்கே இருக்கிறது #அதிகாரம் வச்சிருக்கிற அம்மா மட்டும் சும்மா விடுவாங்களா
இணையம் போல பிறரைச் சகிப்பதும் இல்லை எவரையும் துணிந்து கேள்வி கேட்பதும் இல்லை நிஜத்தில் #பொய்முகங்கள் நாம்
பலவீனமே பலமாய் அமைந்து விடுகிறது #அடிச்சா காலி ஆனா கைக்கு சிக்குற அளவு பெருசு இல்ல #கொசு
நாலு பேரு சேர்ந்து பஸ் ல போறதுக்கு ஆட்டோ ல போய்டலாம் #அம்மா ஆட்டோக் காரங்களுக்கு நல்வாழ்வு கொடுத்திருக்காங்க :)
காமம் அற்ற காதல் இருப்பதில்லை காதல் அற்ற காமம் ருசிப்பதில்லை
அலுக்காதது காதல் உடையணிந்த காமம் நிர்வாணமான காமம் சகிக்கவியலாதது
கவலையே இல்லன்னுன்னு கண்ட சப்பை மேட்டருக்கெல்லாம் கவலைப்படறவங்களைப் பார்த்தா சப்புன்னு அறையணும் போலஇருக்கு#உலகம் பெருசுடா
தன் நகைச்சுவை உணர்வைஉயர்த்திக் காட்ட தங்கள் மனைவிகளைத் தரம் தாழ்த்துகிறார்கள் கணவர்கள்
பிரபலங்களிடம் நட்பு வைத்திருப்பதாலேயே தானும் பிரபலம் போல பந்தா விடும் பேர்வழிகள் அலும்புகள் தாங்கல
நன்றியோ கோபமோ திருப்பித் தரும் வரையில் நிம்மதியடைவதில்லை மனது
இதை யார் கிட்டயும் சொல்லிடாத அப்படின்னு ஒரு விஷயத்தை சொன்னாத்தான் ஒருத்தர் பாக்கி விடாம சொல்றாங்க#ஊரறிஞ்ச இரகசியம்:)
கள்ளங்களை மனதில் மறைத்துக் கொண்டு தங்கை என அழைப்பதை விட கேவலமான ஒன்று இருக்க முடியாது
பிரியத்தை விட கண்டிப்பை அதிகம் காட்டும் அண்ணன்களே அதிகம் #ஆண் புத்தி அறிந்தே இருப்பதால்

Monday, February 6, 2012

நான் குழந்தையா இருக்கறச்ச....

 அரும்பு(ம்) நினைவுகள்:

1 . மயில் றெக்கை குட்டி போடும் என நம்பி இருக்கேன் 
2 .என் அண்ணா பம்பரத்துக்கு ஆக்கர் வைக்கிறத ஆ ன்னு வேடிக்கை பார்த்திருக்கேன் 
3 .முழு நெல்லிக்காயை அழகா அரை வட்டமா சாப்பிடுவேன் 
4 .லிப்ஸ்டிக் பூசிட்டு பல்லுல ஒட்டக்கூடாதுன்னு  வாயை ஈ ன்னு வச்சிட்டே இருந்திருக்கேன்.(வாய் வலிச்சுச்சு ;) )
5 .உடைஞ்ச பல்லை சாணி வச்சு மூடி ஓட்டு மேல தூக்கிப் போட்டிருக்கேன்(அப்படித்தான் செய்யணுமாம் :) )
6 .பொய்க்கால் குதிரை ஆடுறவங்களுக்கு நிஜமாவே மனுஷ முகம் குதிரை உடம்புன்னு பயந்து பார்த்திருக்கேன் 
7 .காந்தத்தை மணல்ல உருட்டி காகிதம் மேல மணலும் அடியில் காந்தமும் வச்சு விளையாடுவேன்
8 .ஃ ப்ரூட்டி வாங்கிக் குடிச்சு சேராம வாந்தி எடுத்ததில் இருந்து இன்றுவரை மாம்பழ சுவை ஆகாது எனக்கு 
9 .இப்பவரை விசிலடிக்க முயற்சி பண்ணி தோல்விதான்.வெறும் காத்துதான் வருது ஊ ஊ ஊ :)
10 .சினிமா தியேட்டரில் கலர் ஸ்க்ரீன் அழகா மெதுவா மேல ஏறி திரும்ப படம் முடியும் போது இறங்குவதையும் பார்த்து ரசிப்பேன்
11 .தமிழக அரசு செய்தது ,வாங்கியதுன்னு சொல்றாங்களே அது எங்க,எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு இருக்கேன்.
12 .தண்ணி கேட்டா வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணி கொடுப்பா பக்கத்துல இருக்கிற பக்கி :)
13 .அம்மை போட்டப்போ என் பெரியம்மா பையன் போலியா சாமி ஆடுனதை பார்த்து பயந்திருக்கேன் 
14 .கிரகணத்தப்போ நிலாவ பாம்பு முழுங்கிரும் ன்னு நம்பிருக்கேன்
15 .ஒரு ரூவாய்க்கு ரெண்டே ரெண்டு மிட்டாய் கொடுத்திட்டு மிச்சக் காசுதராம ஏமாத்தின பாட்டியை ரொம்ப நாள் சம்பிச்சிருக்கேன்
16 .நிலாவில் தெரியும் கறையை நுணுக்கமா ஆராய்ஞ்சு அதுல பாட்டி வடை சுடுதுன்னு நம்பிருக்கேன் 
17 .பீச் ல கரை ஓரமாவே நேரா நடந்து போனா வானத்தை தொட்டுரலாம்ன்னு நம்பிருக்கேன்
18 .ஸ்லேட்டு குச்சி,செங்கல்,விபூதி எல்லாம் சாப்பிட்டுருக்கேன் 
19 .சத்தியம் பண்ணி அதை மீறிட்டா பைத்தியம் பிடிச்சிரும்ன்னு நம்பிருக்கேன் 
20 .வாயைத் திறக்காமலே எப்படி பாடுறாங்கன்னு அதே போல முயற்சி பண்ணி ம்ம் தான் வந்தது 
21 .கரென்ட் வந்தா AREA குள்ள இருக்கிற வாண்டுகளோட சேர்ந்தே ஹே ன்னு கத்துவேன்
22 .நூத்தம்பது ரூபா இருந்தா அம்புட்டுக்கும் தேன் மிட்டாயா வாங்கி சாப்பிடலாம்னு நினைச்சிருக்கேன்
23 .என் அண்ணா ஸ்கூலுக்கு போகலன்னு அப்பா வீட்டுக்குள்ள நுழையும் போதே போட்டுக்கொடுப்பேன் 
24 .TV குள்ள எப்படி ஆளுங்க வராங்கன்னு TV க்கு பின்னாடி போய் ஆராய்ச்சி பண்ணிருக்கேன்
25 .செய்திகள்ன்னு போடுறப்போ அந்த FLASH சத்ததோட கூட சேர்ந்து ஷ் ன்னு கத்துவேன் 
26 .பழம் சாப்பிட்டு கொட்டை துப்பாட்டி வயித்துக்குள்ள மரம் வளர்ந்து செத்துப் போயிருவேன்னு நினைச்சிருக்கேன்
27 .சினிமாக்காரங்க எல்லாரும் மெட்ராஸ் ல ஒரே வீட்ல இருப்பாங்கன்னு நினைச்சிருக்கேன்
28 .நைட் சாப்பிடாட்டி பிள்ளையார் வந்து சோதிப்பார் ன்னு அம்மா சொல்றதை நம்பிருக்கேன்
29 .maths நோட் ல அண்ணாவுக்கு லெட்டர் எழுதிருக்கேன் அது போய்ச் சேருமா சேராதா ன்னு தெரியாம
30 .ரெண்டு ரெண்டு பேரா வரிசையா போய் பாட்டு பாடி பிள்ளையாரை கரைச்சுட்டு வருவோம்
31 .ஐ லவ் யூ ரொம்ப கெட்ட வார்த்தைன்னு நினைச்சிருக்கேன்
32 .மாசமா இருக்கிறவங்களுக்கு வயிறு பெருசாகி பெருசாகி அப்படியே பாப்பா ரொம்ப ஈசியா வெளியே வந்திரும்ன்னு நினைச்சிருக்கேன்:)
33 .காப்பி கலக்க குழம்பு கரண்டி உபயோகப்படுத்தினேன் அது காரமா இருந்துச்சுன்னு அண்ணன் இன்னைக்கு வரை திட்டு :)
34 .ஏரோப்ளேன் சத்தம் கேட்டா உடனே மாடிக்கு போய் வேடிக்கை பார்ப்பேன் 
35 .அரைத் தூக்கத்தில் எழுந்து தீபாவளி முதல் நாள் இரவுஎனக்கு என்ன டிரஸ் ன்னு பார்ப்பேன்
36 .சொர்க்கம் மதுவிலே சொறிநாய் தெருவிலே,நானொரு சிந்து சாக்கட பொந்து ன்னு என் அண்ணா பாடுறதுதான் சரியான பாட்டு வரின்னு நம்பிருக்கேன் (நற நற)
37 .மழை பெஞ்சு ஓய்ந்த பிறகு மரத்தின் மீது உள்ள துளிகளை உதிர்த்து விளையாடிருக்கேன்
38 .மழை ஈரமுள்ள சுத்தமான ஆத்து மணலை மிதிச்சா லைட் எரியும்ன்னு நம்பிருக்கேன்(அதுல ஒரு மாதிரி கலர் மண் தெரியும்)
39 .புது நோட்,புத்தக வாசனை பிடிப்பேன் 
40 .பொன்வண்டை தீப்பெட்டிக்குள்ள போட்டு அதுக்கு இலை போட்டு பாதுகாத்தேன் 
41 .நண்பர்களோட சேர்ந்து நிலா முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு இருக்கேன்.
42 .இஞ்சினியர் ன்னா அது கட்டிடம் கட்டற வேலைன்னு மட்டும்தான்னு நினைச்சிருக்கேன்
43 .மேஜை மேல் ஏறி விளையாடி ஒரு கையை உடைச்சுகிட்டு சுண்ணாம்பு பத்து போட்டிருக்கேன்
44 .பாட்டி இறந்ததற்கு நாங்க வளர்த்த கருப்பு ஆட்டுக்குட்டியை கறியும் சோறுக்காக வெட்டினப்போ அழுதோம் நானும் என் அண்ணாவும்
45 .முதமுதல்ல டிவி வீட்டுக்கு வந்தப்போ சும்மா போட்டு வெறும் புள்ளியை வேடிக்கை பார்த்திருக்கோம்
46 ஆத்துல மணல் வீடு கட்டி ரெண்டு பக்கமும் ஓட்டை போட்டு கைகொடுத்துக்குவோம்
47 களிமண் பொம்மைகள் செய்ததுண்டு இப்போ போல நகம் அழுக்குப்படாமல் பாதுக்காக்கும் கவலை எல்லாம் அப்போ இல்லை.அப்பாவுக்கு மீன் பிடிக்க மண் புழு தோண்டி எடுத்துக் கொடுத்ததுண்டு.
48 அப்ப நல்லாப் படிச்சேன்னு சத்தியமா இப்போ என்னால நம்பவே முடியல :)(கவனம் சிதறும் வாய்ப்புகள் இப்போ போல அப்போ இல்ல )
49 வளர்ற புள்ளன்னு அளவு பெரிசா உள்ள டிரஸ் எடுத்துத் தருவாங்க.எரிச்சலா இருக்கும் எப்போ பெரிய ஆளாவோம்ன்னு.
50 இரயில் பயணங்களுக்கு ஏங்கி இருக்கேன் 



Saturday, February 4, 2012

பொத்தி வச்சா அன்பு இல்ல..!



எத்தனையோ இருந்தாலும் அத்தனையும் ஒரு சேர நினைவுகூறுவது கடினமே எனினும் சில முக்கியமான தருணங்கள் பகிர விரும்புகிறேன்.
பெரிதாக அன்பை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை எங்கள் வீட்டில்.என் தோழி அவள் அண்ணாவிற்கு சட்டை வாங்கிக் கொடுக்கவும் மிகுந்த தயக்கத்துடன் நானும் அண்ணனின் பிறந்தநாளுக்கு சட்டை பரிசளித்தேன்.எங்கள் சண்டையை மட்டுமே பார்த்துப் பழகி இருந்த அப்பா,இதழில் குறும்புச் சிரிப்புடனும் அம்மாவிடம் பார்த்தியா என்று கண்களில் ஜாடை காட்டியதும் மறக்கவே முடியாதது:)
என் பிசாத்து சம்பளத்தில் வாழ்க்கையிலேயே உருப்படியாகச் செய்த காரியம் தீபாவளிக்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் துணி எடுத்துக் கொடுத்தது.பசங்க செய்யாததை நான் செய்தேன் என்று அவர்களுக்குள் நெகிழ்வு.
என் பிறந்தநாளுக்கு பரிசளிக்க தோழி என்னையே அழைத்துச் சென்று யாருக்கோ வாங்குவது போலச் சொல்லி என்னையே பரிசை தேர்ந்தெடுக்கச் சொன்னாள்.அவளுக்குப் பிடித்தது என்று நானும் எனக்குப் பிடித்திருக்கும் என்று அவளும் ஏதோ ஒரு மஞ்ச வாத்தை தேர்வு செய்தோம்.யாருக்கோ தானே என்று அசுவராசியம் எனக்கு.பின் எனக்குத் தான் எனத் தெரியவும் அசடு வழிந்தேன்.அன்று முதல் இன்று வரை எவருக்கோ என்றாலும் பரிசு எனக்கே வாங்குவது போல முடிந்தவரை மிகச் சிறப்பாகவே தேர்வு செய்கிறேன்:)
இணைய நண்பர் ஒருவர் போன் நம்பர் கேட்க அவர் மீது இருந்த அசாத்திய நம்பிக்கையினால் முதன் முறையாக அவரிடம் மட்டுமே கொடுத்தேன்.என் பிறந்தநாள் அன்று அவர் போன் செய்த நேரத்தில் அதை எடுத்தது அம்மா.வாழ்த்து சொல்ல அழைத்தேன் நண்பர்தான் என்று வைத்துவிட்டார்.அவர் நம்பரை தோழியின் பெயரில் SAVE செய்து வைத்திருந்தேன்:) அம்மா சொல்லவும் வியர்த்து விட்டது தவறா எடுத்திருப்பாங்களோ என்று.தோழியிடம் சொல்லி அவர் கணவர்தான் போன் செய்ததாக சொல்லிவிடு என்று கேட்டுக் கொள்ளவும் அவளும் அதையே சொல்லிவிட்டாள்.பிறகு மெதுவாக அவளிடம் எதனால் அப்படிச் சொல்லச் சொன்னேன் என்று விளக்க முற்பட்ட பொழுது சட்டென்று உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் உமா விளக்கனுமா என்ன என்றதும் ஒரு ஆசுவாசம் வந்தது பாருங்கள் அத்தனை வருட நட்பின் ஆழமும் அர்த்தமும் அன்றுதான் புரிந்தது எனக்கு.மறக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும்:)சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிராக அமைந்தாலும் நம்மை புரிந்து கொள்ளும் நட்பு அமைவது ஒரு வரம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு எனத் திட்டிக் கொண்டிருந்தார்கள் அம்மாவும் அண்ணனும்.எனக்கும் குற்ற உணர்ச்சி இன்னும் முயன்றிருந்தால் நல்லதாக மார்க் வாங்கி இருக்கலாமோ என்று.அப்பா வீட்டிற்குள் நுழையவும் இதைக் கேட்டுவிட்டு என்ன மார்க் என்றார்.445 என்று சொல்லவும் ஏன் நல்ல மார்க் தானே எனவும் தான் மூச்சே வந்தது எனக்கு:) அவ்வளவு பயந்திருந்தேன்.
முதன் முறையாக சேமியா உப்புமா சமைத்தேன்.பக்குவம் தவறி சேமியா குலைந்து ரவா உப்புமா போல கெட்டியாக மசமசத்து விட்டது.அதனால் என்ன வேறு எப்படி சமைச்சு பழகறது நல்லாத்தான் இருக்கு என்று வீணடிக்காமல் அப்பா சாப்பிட்டார்.(சமையலில் சிறு குறை இருந்தாலும் அம்மாவை வறுத்து எடுத்து விடுவார் அவ்வளவு கோபம் வரும் சாப்பாடு விஷயம் சரியாக இல்லையென்றால்.அதனால் தான் அவர் சாப்பிட்டது 

அதிசயம்.அம்மாவிற்கும் பொறாமை :) (ம்க்கும் மக செஞ்சா மட்டும் :P )
என் தோழியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசளிப்பது என்று யோசித்து ஒன்றுமே தோன்றவில்லை.மேலும் அந்த நேரம் கையிலும் பணம் இல்லாமல் போகவே என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் அவர் அன்போடு முன்பு அனுப்பிய SMS ஐ பொக்கிஷமாய் வைத்திருந்து அதை அனுப்பினேன்.அன்று அது தான் ஆகச் சிறந்த பரிசு என் நட்பிற்கு இவ்வளவு மதிப்பா என்று தோழி வெகுவாகப் பூரித்தார்.பரிசு என்றால் நிறைய பணமும் பிரம்மாண்டமும் தான் என்பதை அடியோடு பொய்யாக்கிய மகிழ்வு.
அண்ணா பையனை அழைக்க முக்கால் மணி நேரம் காத்திருந்தேன் பஸ் ஸ்டாப் ல நேரம் வீணாகிடுச்சு கரெக்ட் டைம் க்கு வந்திருக்கலாம் ன்னு தோனுச்சு.

பக்கத்தில் ஒரு பெண் உன்னைக் கூப்பிட யாரும் வரலையோ எனக் கேட்டாள் போல பஸ் போகவும் என்னைப் பார்த்த நிமிடத்தில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி
அந்த வினாடி குழந்தை முகத்தில் பார்த்த மகிழ்ச்சி முக்கால் மணி நேரம் நின்றது பெரிதாகத் தோன்றவே இல்லை :)

 
சென்ற வாரம் வீட்டில் விருந்தினர் வருகை அதிகம். காலையிலேயே வருவார்கள் என எதிர்பார்த்து இருந்ததால் சாப்பிடக் கூட நேரமின்றி ஆளுக்கொரு வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.மூன்று மணிக்கு மேல் அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு இறுதியாக வீட்டில் உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட குழந்தைகளை மேய்க்க தனி அறையில் இருந்த நான் கதவை திறந்து எட்டிப் பார்த்தேன்.நான் பசி பொறுக்கவே மாட்டேன் என்பதை என் அண்ணி நன்றாக அறிவார்.அதனால் முதலில் என்னை அமரவைத்து சாப்பிட வைத்துவிடுவார்கள் வீட்டில்.அன்று மறந்துவிட்டு அண்ணி உணவருந்திக் கொண்டிருந்தார்.என்னைப் பார்க்கவும் ஏதோ குற்ற உணர்ச்சியிலும் வந்து என்னையும் அமரச் சொல்லி தலையசைத்த பாவனையும் மறக்கவே முடியாத ஒன்றாகிப் போனது எனக்கு.வார்த்தைகள் கூடத் தேவைப்படுவதில்லை அன்பை வெளிப்படுத்த.அன்று என்னைப் பார்த்த பார்வை இன்னமும் ஆழமாக மனதில்.மெலிதாகப் புன்னகைத்து சாப்பிடச் சொல்லி சைகை செய்துவிட்டு பின்னர் உணவருந்த அமர்ந்த வேளையில் அருகில் இருந்து பரிமாறினார்.
சில வருடங்களுக்கு முன் மிக மோசமான ஒரு தருணத்தில் ஆழ்ந்த வருத்தத்தை வேறு வழியே இன்றி அழுகையாய் வெளிப்படுத்திய போது இரண்டே வயது நிரம்பிய வாண்டு சட்டென்று வந்து கண்ணீரைத் துடைத்து கழுத்தை இறுக அணைத்து அமர்ந்து கொண்டது மடியில்.அண்ணா திட்டியதற்கு முன்பு அழுத பொழுது அன்று ருத்ர தாண்டவம் ஆடி கோபமாய் அப்பா வெளிப்படுத்திய அன்பின் ஈரம் அந்தப் பிஞ்சுக் கரங்களில்.
எனக்கு பொம்மை வெகு இஷ்டம்.அதனால் தோழி வாங்கிக் கொடுத்த பொம்மையை என் அண்ணன் மகளுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்தேன்.அடம் அதிகம்.கேட்டால் மறுக்க முடியாது என்பதால்.எங்கோ வெளியே சென்று விட்டு வந்து பார்த்தால் என் டிரெஸ்ஸிங் டேபிள் கலைந்து கிடந்தது.இவள் வேலை என அறிந்து பதட்டம்.பொம்மையைப் பார்த்திருந்தால் கேட்பாளே என்று.ஆனால் அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பார்க்கவில்லை போலும் என ஆறுதலடைந்தேன்.ஆனால் அவள் வீட்டிற்கு செல்லும் பொழுது அத்தை நீங்க பொம்மை வச்சிருக்கீங்க நான் பார்த்தேன்.சட்டென்று கதி கலங்கிவிட்டது.ஆனால் அவள் இலகுவாக நீங்க என்ன INFANT ஆ பொம்மை வச்சுக்க?நீங்களே வச்சுக்கோங்க எனக்கு வேணாம் என்று சொல்லிவிட்டுப் போனாள்.எனக்கு பல்ப்.குழந்தைகள் தான் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்கின்றார்கள் நம்மைவிட:)
சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது.தலையில் அடி இரண்டு தையல் போடும் அளவுக்கு.பலத்த அடி எனச் சொல்லமுடியாது எனினும் அதிர்ச்சியில் சுய நினைவை சில மணி நேரம் இழந்திருந்தேன்.அதை விடக் கொடுமை எழுந்து என்ன நடந்தது என்றே மறந்துபோனது.வெகு சிரமப்பட்டு ஒவ்வொன்றாக ஒருமணி நேரத்திற்குள் நினைவுக்கு கொண்டு வந்தேன்.தோழிகள் தவிர ஒரே ஒரு நண்பரிடம் மட்டும் பகிர்ந்தேன்.சும்மா கிடந்த வண்டிய இடிச்சு தலையில எம்பராய்டரி போடும் அளவுக்கு கோவக்காரங்களா என்று வெகு இயல்பாக கிண்டல் செய்தார்.எனினும் அக்கறையான விசாரிப்புகளும் கூடவே.மனம் விட்டுச் சிரித்தேன்.வந்து குசலம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாக அறிவுரை கொடுத்து போரடிக்க வைக்கும் சொந்தங்களுக்கு நடுவே நோயாளியாக உணரவைக்காமல் கேலியும் கிண்டலுமாய் இயல்பாய்ப் பேசுவது தோழமை மட்டுமே.
நேற்று நிலா என்ற பெண்ணை டிவிட்டரில் பின்தொடர்ந்தேன்.ஒருசிலர் பின்தொடர்வதற்கு நன்றி சொல்வது வழக்கமே எனினும் இவர் சொன்ன விதத்தில் சற்று நெகிழ்ந்தே போனேன்.என்னை அவ்வளவு கவனித்து இருக்கிறார்.ஒன்று ஒன்றாகச் சொல்லி அவ்வளவு பிடிக்கும் என்றது எனக்கே ஆச்சர்யம்.என்னைத் தாழ்வாக நினைக்கவோ அன்றி உயர்வாக நினைக்கவோ எதுவும் இல்லை.என் தகுதி என்னவென்று நான் அறிவேன் என்பதால்.அதிகம் புகழ்ந்தால் சட்டென்று கவனம் என மூளை உசுப்பி விடும்.அதே சமயம் ஆத்மார்த்தமான பாராட்டுகள் மனதிற்கு இதத்தை அளிக்கின்றன.அது போல இதமாக இருந்தது நிலாவின் பாராட்டும் அன்பும்.
இப்படி எழுதிக் கொண்டே போகலாம் அன்பு பரிமாறிக் கொண்ட நினைவுகளை.இங்கு சொல்லாமல் விட்டவை நிறைய.பொதுவாக பெரும்பாலோனோர் மனதில் அன்பை வெளிப்படுத்த அதிக பணம் தேவை என நினைக்கிறார்கள்.புடவையும் நகையும் மட்டுமே மனைவியை மகிழ்விக்க போதுமானவை என்றும் நினைப்பு சில ஆண்களுக்கு.அவை வேண்டும் ஆனால் அவை மட்டுமே என்றால் வேண்டாம்.ஆனால் உப்பில்லாப் பண்டம் மட்டுமல்ல அன்பில்லாப் பொருளும் மண்ணிற்குத் தான் சமம்.பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்பைப் பகிராமலும் பரிமாறாமலும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.என்றேனும் ஒரு நாள் திரும்பிப் பார்க்கும் பொழுது அவர்கள் சேர்த்த பொருளை விட இழந்தது அதிகமிருக்கும்.அதை அனுபவிக்கவும் ஆள் வேண்டாமா?பரிசு என்றாலே நிறைய பணமும் பிரம்மாண்டமும் என்பதே நினைவுக்கு வருகிறது பலருக்கு.ஆனால் அதையும் தாண்டி நம் பொன்னான நேரம் அதை நம் பிரியமானவர்களுக்கு எப்படிச் செலவிடுகிறோம் என்பதில் இருக்கிறது.பிறந்தநாளுக்கு விழித்திருந்து பனிரெண்டு மணிக்கு தோழமையிடம் இருந்து வரும் SMS இல் உள்ள சுவராசியம் மறுநாள் வரும் போன் காலில் கூட இராது.மிக மோசமான தருணங்களில் சட்டென்று தோள் சாய விரும்பும் தோழமைக்கு நாம் கொடுக்கும் நம் நேரம் விலைமதிப்பற்றது.

எங்கேனும் மகளுடன் நட்புறவோடு விளையாடும் தந்தையைக் கண்டால் ஏக்கம் பீறிடும் எனக்கு.அது போல எல்லாம் இல்லாமல் வேலைப் பளுவில் மூழ்கடித்துக் கொண்டவர் என் அப்பா.தகுந்த நேரத்தில் அன்பை வெளிப்படுத்தாமல் பின்னர் அப்படிப் பாசம் வைத்தேன் இப்படிப் பாசம் வைத்தேன் என்று புலம்புவதில் என்ன பயன்?எங்கேனும் சென்ற இடத்தில் பிரியமானவர்களுக்குப் பிடிக்கும் என அறிந்து பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள் மறக்கவே முடியாததாகப் போகும் அவர்களுக்கு.சின்னச் சின்னச் சந்தோசங்கள் தான் வாழ்வின் மிகப் பெரிய மகிழ்விற்கு ஆரம்ப அடிப்படை.
"பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல "
காதலுக்கு மட்டும் அல்ல எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் 
அன்பைப் பகிர்வதில் உள்ள நன்மை பெறுதல் இருபக்கமும் உண்டு.கொடுப்பதில் நஷ்டம் இல்லை லாபம் மட்டுமே.மிகச் சிறிய வாழ்க்கையில் வெளிப்படுத்தப்படும் அன்பு மட்டுமே வாழ்வின் ஜீவாதாரமாக இருக்கும்.