Wednesday, December 14, 2011

வாழ்க்கை!

ஒரு மனிதனுக்கு மரண பயம் வந்துட்டா எப்படி எல்லாம் நடந்துகொள்ளக் கூடும் என்று ஒரு உறவினர் மூலம் காண்கிறேன் வாழ்ந்த காலத்தில் எல்லாம் சுயநலமே பெரிதாகக் கருதி அத்தனை பேரையும் துச்சமென அவமதித்தவர்.அவர் நடவடிக்கை பிடிக்காமல் உடன்பிறப்புகள் சொந்தங்கள் அத்தனையும் ஒதுங்கிக் கொண்டன.இப்பொழுது தேடிச் சென்று ஒவ்வொரிடமும் வலிய பேசுகிறார்.சண்டை போட்ட உடன்பிறப்புகளிடம் கண்ணீருடன் உரையாடுகிறார்.ஆனா அவர் செய்த அநியாயங்கள் மனதைச் சுட அவரை முழுமையாக நம்ப மறுக்கிறார்கள் உடன்பிறப்புகள்.

என் அம்மாவிடம் வந்து சித்தி உங்களைப் பார்க்கணும் போல இருந்தது என்று வெகு நேரம் பேசிவிட்டுச் சென்ற பொழுது கூட ஏதோ காரியம் ஆக வேண்டியிருக்கு போல அதான் வந்திருக்கிறார் என்று ஒதுங்கிக் கொண்டேன் நானும் .அவர் சென்ற பின்பு அம்மா வருத்ததுடன் சொல்லியே தெரியும்.அம்மா சட்டென்று நம்புபவர் என்பதால் அப்பவும் நான் நம்பல ஆனா தொடர்ச்சியான அவர் நடவடிக்கைகள் அவர் நிஜமாகவே உள்ளூர வருத்தம் கொண்டு அலைகிறார் என்றே புரிந்தது.இதயம் மிகவும் பலவீனப்பட்டு பிரச்சனை செய்து கொண்டிருக்கின்றது போல.அத்தனை பேரின் ஒட்டுமொத்த வெறுப்பும் நெஞ்சைச் சுடுகிறது போலும்..அவர் உடன்பிறப்புகளிடம் அம்மா தான் பேசுகிறார் முடிந்த அளவு பேசுங்கப்பா பாவம் அவன் என்று.மடியில் கனமில்லை என்றால் வழியில் பயமில்லை  என்பது வாழ்க்கைக்கும் பொருந்தும் எதுக்கு அவ்ளோ வேதனைப் படுத்தணும் இன்னைக்கு எல்லாம் நினைச்சு வருத்தப் படணும்?ஆனாலும் இந்த அளவாவது உணர்கின்றாரே ஆச்சர்யம் தான் எங்களுக்கு.(எங்கள் குடும்பத்திலும் அத்தனை இடைஞ்சல்கள் முடிந்தவரை கொடுத்திருக்கிறார் இருப்பினும் மன்னித்தது எங்கள் தாய் மனம்) ஆனாலும் அம்மாவைப் போல உருகாமல் எங்களால் தள்ளி நின்று அனுதாபப்படுவது தவிர வேறு எதுவும் செய்ய முடியல.

இப்பவும் அவரை உறவுமுறை சொல்லி அழைக்க கூட மனம் வரல ஹ்ம்ம்..வாழ்க்கையில் எவ்வளவு இருக்கு என்பதற்கும் இவ்வளவு தான் வாழ்க்கை என்பதற்கும் இடைப்பட்டது அந்த நபருடைய வாழ்க்கை.முடிந்தவரை இனி செல்லுகின்ற நாட்களில் பிரியமானவர்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் தோன்றுகிறது..

No comments: