Thursday, August 13, 2015

கனா காணும் கண்கள் மெல்ல..

பாடல் : கனாக் காணும் கண்கள் மெல்ல..
படம் : அக்னி சாட்சி
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : வாலி
 பாடியவர் : SPB
இளையராஜா முதலில் அறிமுகம் ஆன எனக்கு இந்தப் பாடல் MSV இசை என்றதும் ஆச்சர்யம் தாள வில்லை. MSV என்றால் பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தவர் அதைத் தாண்டி இப்படி ஒரு மெலடி அவரிடம் இருந்து என்ற போது தான் அவரின் உண்மைத் திறமைகள் புலப்பட ஆரம்பித்தது..
ஆரம்பத்தில் மெல்லிய கிடார் இசை தாலாட்டுக்குத் தயார் படுத்தும் அதைப் பின் தொடர்ந்து மொத்த தாய்மையையும் உள்ளடக்கி தாயுமானவனாக SPB மெல்லமாக ஆரம்பிப்பார்..
இசை சிறந்ததா பாடல் வரிகள் சிறந்ததா என சில பாடல்களுக்கு பட்டி மன்றமே வைக்கலாம்..அப்படியான பாடல் இது..வாலியின் மென்மை தோய்ந்த இந்தத் தாலாட்டு வரிகள் என் மனதிற்கு மிக மிக நெருக்கமானவை. ஒரு தலைவன் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான பாடலாக இதுவும் ,உறவுகள் தொடர்கதையும் (கங்கை அமரன் )மிகப் பிடித்தம்..
சமூகத்தின் அநீதிகள் பிடிக்காத நாயகி,அவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நாயகன் அவளின் மனப் போராட்டங்களுக்கு மயிலிறகான சொற்கள் கொண்டு வருடுகிறான்..இந்த அருமையான கதைக் களத்திற்கு பக்க பலமாக இசையும் வரிகளும் .. இந்தப் படம் பார்த்தால்தான் இந்தப் பாடல் இப்படத்திற்கு எப்பேர்ப்பட்ட ஜீவனை சுமந்து நம்மிடம் கொண்டு செலுத்துகிறது என உணர முடியும்..சமூகத்தின் மீதான ஆதங்கங்கள் அநீதிகள் ஓய வேண்டும் என நாயகி நினைவோ அன்றி வெறும் கனவு மட்டும் தானோ என்பதை உணர்ந்து தலைவன் ஆரம்பிப்பது போல் இருக்கும்.
"கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப்போகும் நேரம்  கண்ணே.."
இதற்கு அடுத்து வரும் இடை இசை ஆனது நாயகியின் மன ஓட்டங்களைப் பதிவு செய்திருக்கும்..அவளின் பதட்டம் வேகம் கோபம்  ,வேதனை என..அதனை அப்படியே அரவணைத்து ஆறுதல் சொல்லும் அடுத்து வரும் சரண இசையும் வரிகளும் ..
" குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ 
நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி 
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே.."
சரிதாவுக்கு இது ஓர் அட்டகாசமான படம்..இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தனக்குப் பிடித்த நடிகை சரிதா என்றதில் துளி கூட மிகையில்லை..அந்த குண்டுக் கண்களும்,இயல்பான நடிப்பும் அருமையான குரலும் நம்மைக் கதறடித்து இருப்பார் படத்தில்.. எல்லாப் பெண்களும் புரட்சிப் பெண்கள் அல்ல..விரும்பி ஆவதும் அல்ல..சூழல் ..ஒடுக்கி ஒடுக்கி ஒரு கட்டத்துக்கு மேல் தாள முடியாமல் வெடிக்கும்போது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றப் பழமொழி நினைவுக்கு வருகின்றது..
எண்பதுகளில் படங்கள்  எப்படி பெண்களின் மீதான அடக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அதை எப்படிப் போராடி பெண்கள் எதிர்கொண்டனர் என்பதைப் பதிவு செய்தன பல திரைப்படங்கள்..இன்று அதை மீறிக் கடந்து வந்து விட்டாலும் ,அக்காலம் எத்தகையது என்பதை அறிய உதவியாய் இருக்கின்றன இது போன்ற படங்கள் தாம்.. இப்படியான கதைக் களங்கள் கொண்ட படங்களில் இசையும் அதன் பொறுப்பை உணர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது..
"புதிய கவிதை புனையும் குயிலே 
நெஞ்சில் உண்டான காயம் என்ன..
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன..
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் 
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் 
வருங்காலம் இன்பம் என்று 
நிகழ்காலம் கூறும் கண்ணே..நிகழ்காலம் கூறும் கண்ணே.."

எவ்வளவு அழகான நம்பிக்கை தரும் ஆறுதல் ..இது போன்ற பாடல்கள் எல்லாம் SPB க்கு அல்வா போல.. இவ்வளவு இனிமையான குரலில் , ஆண்மை சற்றே மென்மையும் பெண்மையும்  கலந்து வெளிப்படும்போது அது முழுமையும் நிறைவும் பெறுகின்றது..அப்படி  ஓர் தலைவன் மடிதான் ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கக்கூடும்.எந்த கிடாரில் அச்சாரம் போடப்பட்டதோ இறுதியில்  அதிலேயே மெல்லக் கண்ணுறங்க வைத்தும் முத்தாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..
தலைவனின் மனம் மற்றும் தலைவியின் மனம் என்று இரு மாறுபட்ட மனநிலைகளின் வெளிப்பாடான இசை அவ்விரண்டையும் ஒரு புள்ளியில் முரண்பாடின்றி இணைத்து ,அருமையான காலத்தால் நிலைத்து நிற்கும் பாடலைக் கொடுத்துத் தாலாட்டிய MSV அவர்களின் புகழ் என்றென்றும் நீங்கா இடம் பெற்று கன கம்பீரமாக நம் மனதில் வீற்றிருக்கும் ..






4 comments:

காரிகன் said...

உமா அவர்களே,

வலைச்சரத்தில் செந்தில் குமார் உங்கள் தளத்தை அறிமுகம் செய்திருந்ததைக் கண்டு இங்கே உடனே வந்தேன். மிக அருமையாக ஒரு அருமையான பாடலைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் என் தளம் வந்தால் என்னைப் பற்றி சற்று அறிந்துகொள்வீர்கள். நாமெல்லாம் ஒரே அலைவரிசை.

எம் எஸ் வி என் மனதில் உறைந்து விட்ட ஒரு இசை அதிசயம். இளையராஜாவை அறிந்த பின் எம் எஸ் வி யை நோக்கித் திரும்பிப் பார்ப்பது ஒரு பக்குவப்பட்ட முதிர்ச்சியான இசைப் பார்வை. வாழ்த்துக்கள்.இதுதான் என் முதல் பின்னூட்டம். உங்களின் பிற பதிவுகளை படித்து பதில் எழுத ஆர்வம்.

Thenammai Lakshmanan said...

அருமையான பாடல் பகிர்வுகள். வலைச்சர அறிமுகம் பார்த்து வந்தேன் உமா வாழ்த்துகள். :)

உமா கிருஷ்ணமூர்த்தி said...

நன்றி காரிகன் ..நன்றி தேனம்மை :)

JAYARAJ MATHS TEACHER said...

சமீபத்தில் இந்த பாடலை கேட்டு வியந்து இப்பாடல் பற்றிய ப்ளாக் எதுவும் இருக்கிறதா என தேடியபோது அகப்பட்டது இந்த ப்ளாக். மிக அருமையாய் எழுதியிருக்கிறீர்கள். உங்கள் ரசனையை வாசித்த பின் இன்னும் ஒருமுறை கேட்கப் போகிறேன் நீங்கள் கூறிய நுட்பங்களையும் பிரித்து கேட்டு ரசிக்க வேண்டுமல்லவா?!