Wednesday, August 26, 2015

மீனம்மா..அதிகாலையிலும் அந்தி மாலையிலும்

பாடல் : மீனம்மா அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே
படம் : ஆசை 
வரிகள் : வாலி 
இசை : தேனிசைத் தென்றல் தேவா 

பாட்டைப் பற்றி மட்டுமே எழுத நினைச்சேன்..ஆனால் பாடல் சார்ந்த நினைவுகள் என்னைப் பாடாய்ப் படுத்தி,  ரசிச்சததை முழுசாச் சொல்லியே ஆகணும்னு சற்றே நீளமானது பதிவு:)
தேவாவின் பாடல் ஒன்றைப்பற்றி எழுத வேண்டும் என்றதுமே இந்தப் பாடலே மின்னியது எண்ணத்தில்..இருப்பினும் வேறு பாடல்கள் பற்றியும் பரிசீலிக்கலாம் என கூகுளை ஒருமுறை ராவிவிட்டு அதிலே "ஆசை" பட ஸ்டில்களைப் பார்க்கவும் மனம் அங்கேயே நிலைகுத்தி , திரும்பவும் ஆரம்பித்த இடத்துக்கே வந்துவிட்டேன்..மனசுக்குப் பிடிச்ச பாடல்களை எழுதும்போது , உள்ளார்ந்து ரசித்து இருந்தால் ஒழிய ,அதைப் பற்றி எழுத முடியாது எழுதவும் வராது..அதனாலேயே சில நண்பர்கள் வேண்டி விரும்பிக் கேட்ட பாடல்கள் இன்னமும் தொங்கலில் நிற்கின்றன..
பள்ளிப்பருவத்தில் கேட்ட பாடல்கள் யாவுமே அவ்வளவு எளிதாக மறப்பதில்லை. ஒரு பாடலின் வெற்றி என்பது அதைத் திரும்பத் திரும்பக் கேட்கத் தூண்ட வைப்பதில் தான் இருக்கிறது..இப்பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என எண்ண முடியாத அளவுக்குக்கேட்டிருக்கிறேன்..அப்பொழுதெல்லாம் எங்கள் வீட்டில் சரியான டேப் ரிக்கார்டர் கிடையாது..ஒரு வாக்மேன்..ரெண்டு ஸ்பீக்கர்.. அவற்றை இணைக்க ஒரு ஆம்ப்ளிஃபையர் .. என் அண்ணன் செட் பண்ணி வச்சது.. இதுல கேசட் சிக்கினா எடுத்து , அந்த ஓட்டையில் விரலை விட்டு சுத்தோ சுத்துன்னு சுத்துவோம்..அந்த அளவுக்குப் பாட்டைப்போட்டு தேய்தேய்ன்னு தேய்க்கிறது :) அதிலும் ஸ்பீக்கரில் அலற வைச்சு பக்கத்து வீடுங்களுக்கு யாம் பெற்ற இன்பத்துல வாரி வழங்குறது..அவங்களுக்குத் தொந்தரவா இருக்கும்ன்னு தோனவே தோனாது..பாவம் அவங்க வீட்டுல இதெல்லாம் இருக்குமான்னு ஒரு கர்வமும் கரிசனமும் தான் :)) இதுல அஞ்சாறு வீடு தாண்டி எங்க ட்யூஷன் அக்கா (நோ டீச்சர் என்ற அழைப்பு ) ஹேய் உமா உங்க வீட்டில அந்தப் பாட்டு கேட்டுச்சே..செம சூப்பர் என்பார்கள்..அவ்ளோ பெரும்மையா இருக்கும்..ஆனால் அதெல்லாம் அவங்க வீட்டில் புதிதாய் வந்து இறங்கிய வெளிநாட்டு டேப் ரெக்கார்டரை பார்க்கும் வரை தான்.. மனம் அப்படியே தொங்கிப் போனது.. அது போன்று நாமும் வாங்கி வைக்க வேண்டும் என்ற கங்கணம்  நிறைவேறிய காலத்தில் அதன் மீதான ஈடுபாடு அற்று , சன் டிவியில் வீடியோ பாடல்கள் மீது மனம் லயித்து விட்டது..

இந்தப்படத்திற்கு இசை தேவா என்று அறிந்தபோது நான் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை..காரணம் தேவா மீதான காப்பி என்ற பிம்பம் தான்..இதற்கு ரஹ்மான் என்றே நினைக்கும் அளவுக்கு பாடல்கள் அவ்வளவு fresh செம பீட்ஸ்.. காதலன் படத் தரத்தில் இந்தப் பாடல்கள் இருப்பதாகவே என் மனசுக்குப்பட்டது..அதற்கு முன்பு தேவா பல படங்களுக்கு இசை அமைத்து இருந்தாலும், அநேகமாக இந்தப் படத்திற்குப் பிறகு தான் அவருக்கு நிறைய படங்கள் கிடைத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் அந்த அளவுக்குப் பாடல்கள் சூப்பர்  ஹிட்.தேவா என்றாலே கானா பாடல்கள் என்பது எல்லாம் வான்மதி பட பிள்ளையார்பட்டி ஹீரோ நீதான் பா பாடல் பின் அதை விட அதிக ஹிட் ஆன வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா ,கவலைப்படாதே சகோதரா பாடல்களுக்கு அப்புறமே..ஆனால் இந்தப் படம் அதற்கும் முந்தைய கால கட்டம்..இன்று ஒன்றிரண்டு ஹிட் பட இசைகளை வச்சுகிட்டு இன்டர்நெட் காலத்தில் அடுத்த அடுத்த படங்களுக்கு வேறு எங்கோ சுட்டும் (கவுரமாக இன்ஸ்பிரேஷன் ) இசை அமைக்கும் இசையமைப்பாளர்கள் மத்தியில் தேவா மட்டும் இப்படி ஒரு பழி சுமந்து திரிவது வேதனையே..அதை என் மனத்தில் இருந்து புறந்தள்ளி அவர் கொடுத்த பல மெலடி மெட்டுக்களை இன்றளவும் ரசித்து வருகிறேன்.. 90- களில் பல ஹிட் படங்களில் இவர் ஹிட் பாடல்கள் ..கேட்டுப்பாருங்கள் அட என அசந்தே போவீர்கள்..இந்தப் படத்தில் அத்தனைப் பாடல்களுமே அருமை ரகம்..புல்வெளி புல்வெளி சித்ரா சோலோ ஓர் அட்டகாசம் என்றால் SPB&சொர்ணலதாவுக்கு திலோத்தமா இன்னுமோர் முத்து..கொஞ்ச நாள் பொறு தலைவா ஹரிஹரனின் கொஞ்சும் குரலில் ..ஷாக்கடிக்குது சோனா அக்காலத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே புகழ் சுரேஷ் பீட்டர் -GV பிரகாஷ் ..மீனம்மா உன்னி கிருஷ்ணன்,அனுராதா ஸ்ரீராம்..

அஜித் என்ற ஹீரோ ஆசை நாயகன் எனப் பெயர் பெறக் காரணம் பெற்ற படம்.பைக் ரேஸில் முதுகில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தவருக்கு, பவித்ரா கவனத்தைக் கொடுத்தாலும் முழு வீச்சில் பலரிடமும் சென்றடைய "ஆசை" தான் காரணம்.  இந்தப் பட ஷூட்டீங்ல பிரகாஷ் ராஜிடம் படம் ஹிட் ஆகிடும்ல என அஜித் கேட்டுக் கொண்டே இருப்பாராம்.. இந்தப் பட ஹிட்டுக்கு நன்றிக்கடனாகவே இயக்குநர் வசந்துக்கு "நேருக்கு நேர்" படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் அஜித்..ஆனால் பேருக்கு சில காட்சிகள் எடுக்கப்பட்டு , அதை வீணடித்து வேறு வழியே இல்லாமல்தான் விலகினார் அஜித்..அஜீத்துக்குப் பதில் சூர்யா ஒப்பந்தம் ஆனார். இப்படத்தில் கிடைச்ச ரொமாண்டிக் ஹீரோ இமேஜை அடுத்து வந்த "வான்மதி"" காதல் கோட்டை" தக்க வைத்தன. நிறைய தோல்விப்படங்கள் இருப்பினும் அரவிந்த்சாமி மாதிரி காணாமல் போகாமல் ,அஜித் ரசிகர்கள் ஒவ்வொரு தோல்வியிலும் பொறுமை காத்து , ஹிட் வரவும் கொண்டாடினார்கள்.. இதுதான் இன்றுவரை அஜித்தின் பெரிய பலம்..அஜித் உடைகளும் ரசிக்கும்படி இருக்கும்.இப்படத்தில் அஜித்க்கு குரல் கொடுத்தவர் நடிகர் சுரேஷ்..perfect match..நிஜமாகவே அது மட்டும் ஒரிஜினலா இருந்திருந்தா இன்னும் செமையா இருந்திருக்கும்.அஜித் டான்ஸ் குறை சொல்றவங்களே ..இந்தப் படப் பாடல்களில் வேகமாக ஆடாவிடிலும் ஒரு தனி ஸ்டைலாகவே எனக்கு இன்னைக்கு வரைக்கும் படுது  :))

ஆசை கேசட் முகப்பில் இந்தப் பாடலின் ஸ்டில்கள் தான் ..
அஜித் எனும் நடிகன் மீதான மோகம் இந்தப் படத்திற்குப் பிறகுதான்..கைகள் விரித்து ,அதில் கன்னம்  பதுக்கி ஆ...வென பார்த்ததுண்டு..:)) இந்தப் படம் பாட்டெல்லாம் இப்படி ஒவ்வொரு தடவையும் புதுசா பார்க்கிற மாதிரியே பார்த்ததால ,அம்மா கொதித்து ,அதைப் பார்த்து அண்ணன் என் முதுகில் ஓங்கி ஒன்னு போட்டதெல்லாம் வரலாறு.. இப்பவும் இந்தப்  பாடல் பத்தி எழுதலாம்னு எதுக்கும் ஒருதடவை யூ ட்யூப்ல பார்க்கப் போனா மீள முடியல உட்கார்ந்து நாலு நாளா எழுதிட்டுகிருக்கேன்  ..:)) ஒரு ட்யூஷன் வகுப்பில் மஞ்சள் மாலை வேளையில்,  மாடில உட்கார்ந்து படிக்கிறோம் க்கான்னு சொல்லிட்டு நானும் தோழியும் மேல உட்கார்ந்து ,எனக்குப் பிடிக்கும் என்பதற்காகவே இதுவரை யார் கேட்டும் பாடினது இல்லடி உனக்காக.. சரியா..என்று தோழி இந்தப் பாடலைப் பாடினாள்..எனக்கு அன்னிக்கும் சரி இன்னிக்கும் சரி அது ஒரு சிறப்புப் பரிசாகவே தெரிகிறது :))
என் அம்மா இப்பவும் "இந்த பிரகாஷ்ராஜ் படமே எனக்குப் பிடிக்காது அவன் கட்டுன பொண்டாட்டியை மூச்சடைக்க கொல்லுவான் "என்று பிரகாஷ்ராஜ் படங்களைப் புறந்தள்ளுவார் ..அந்த அளவுக்கு சைக்கோ இப்படத்தில்.
இந்தப் பாட்டுக்கு முன்பும் திலோத்தமா பாடல் முன்பும் அஜித்,  சுவா விடம் கட்டிக்கட்டுமா என்று தவிப்பும் ஆசையுமாகக் கேட்பார்..அனுமதி கிடைத்ததும் ஓடிச் சென்று அணைப்பார்..அதை உணர்த்தும் வகையில் இருக்கும் இப்பாடலின் ஆரம்ப இசை..வீடியோவில் அது மிஸ்ஸிங்..ஆடியோல இருக்கும் கேளுங்க..இளமையும் துள்ளலுமாக இசை.

இணையத்தில் இந்தப் பாடல் வரிகள் பெரும்பாலும் தவறாகவே எழுதப்பட்டிருக்கின்றன.. என்னை மாதிரி நிறையவாட்டிக் கேளுங்கடா :)
மீனம்மா அதிகாலையிலும் அந்திமாலையிலும் உந்தன் ஞாபகமே
அம்மம்மா முதல் பார்வையிலே சொன்ன வார்த்தையில்தான் புதுக்காவியமே
அது என்ன அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே.. ஏன் அப்ப மதியம் யார் ஞாபகமாம்?  என்றொரு கேள்வி மனதில் கோபமாய் எழுந்து அடங்கும் :)
சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச்சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும்
மோதல் வந்து ஊடல் வந்து முட்டிக் கொண்ட போதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்
இது மாதங்கள் நாட்கள் செல்ல.. ஆ ..ஆ..
நிறம் மாறிடும் பூக்கள் அல்ல...ஆ..ஆ..
காயமின்றி..என்ற உச்சரிப்பில் செல்லமாய் ஒரு கொஞ்சலும் குறும்பும் கலந்த சங்கதி வைத்திருப்பார் அனுராதா ஸ்ரீராம்..
ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில்
இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா..
ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு
அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா...
உன்னியின் சீண்டல் குரலுக்கு வெட்கமாய் பதில் தருவார் அனுராதா..
மாமன் காரன் தானே மாலை போட்ட நானே
மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம்..
ஓர் அழகான ஊடலுக்குப் பின்னான சமாதான உடன்படிக்கையில் காதலன் மடியில் காதலி அமர்ந்து கொண்டு, இருவருக்கும் ஓர் உரையாடல் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பதைப் போன்றதே இப்பாடல் வரிகள் :) அடிக்கடி சண்டை போட்டுப்பாங்க அஜித் -சுவா ஆனாலும் ஆத்மார்த்தமான காதல் தான் திரும்ப அவங்கள சேர்த்து வைக்கும்..படத்தில் கவிதையாய் சில காட்சிகள் ..நிறைய ரசிக்கலாம் :) இந்தப் பாடலுக்கு இப்பாடகர்கள் அருமையான தேர்வு என்பேன்..உன்னி குரலில் ஒரு வாஞ்சை. ..அனுராதா ஸ்ரீராம் இதற்கு முன்பு என்ன பாடல் பாடினார் என்று தெரியாது..ஆனால் எனக்கு அவரை அறிமுகம் செய்து வைச்ச பாடல் இது..மிக மிக மெலிதாக காதுக்குக் குளிர்ச்சி அவர் குரல்..
அன்று பட்டுச் சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உன்னைக் கேட்டேனே சண்டை போட்டேனே ன்னு ஒரு வரி வரும்..இந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சியே கிடையாது..அப்புறம் ஏன் இப்படி வச்சாங்கன்னு ரொம்ப நாள் மண்டை காஞ்சேன் ..ஊடல் என்பதற்காக இதைச் சேர்த்து இருப்பார் போலும் வாலி..சரி அவங்க போட்ட சண்டையக் காட்டலன்னு நானா சமாதானம் ஆகிகிட்டேன் அப்ப :))

அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது 
அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது 
அன்று பட்டுச்சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் 
உன்னைக் கேட்டேனே சண்டை போட்டேனே 
அது க..ண்ணில் நிற்கிறது..
ஜாதி மல்லிப் பூவே..தங்க வெண்ணி லா...வே
ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு....
யாராச்சும் பேசி நேரத்தை வீணடிப்பாங்களா டே ன்னு தோனிருக்கு :-P
மீனம்மா உன்னை நேசிக்கவும் அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு 
அம்மம்மா உன்னைக் காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு..
இந்தப் பாடலில் ஆடியோவில் தான் கீழ்க்கண்ட வரிகள் இடம்பெறும்..வீடியோவில் இதுவும் கட்..படுபாவிப்பசங்க..
உன்னைத் தொட்ட தென்றல் வந்து என்னைத் தொட்டு என்னென்னவோ சங்கதிகள் சொல்லிவிட்டுப் போக 
உன் மனமும் என் மனமும் ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட
பின்பு மோகனப் பாட்டேடுத்தோம் ஆ..ஆ..
முழு மூச்சுடன் காதலித்தோம் ஆ..ஆ..
பாடல் படமாக்கிய விதமும் அருமை....நடன அமைப்பாளர் ராஜூ சுந்தரம் .   மங்கலான ஒளியில் முகம் தெரியாமல்  ஆடுவதும் அவரே..ஒரு பக்கம் ஹீரோ ஹீரோயின் ரொமான்ஸ் மறுபக்கம்  உறுத்தாமல் இருக்கும் நடனக் காட்சிகள்..ராஜூ சுந்தரம் & கோ அதிகம் கவனிக்கப்பட்டது இப்படத்திற்குப் பிறகே என நினைக்கிறேன்..ஹைய்யோ ஹய்யையோ பாட்டில் பூஜா பத்ராவுடன் நடனம் ஆடுவார்..அந்தப் பாட்டுல கூட கடைசியா அஜித் தன் தொப்பிய எடுத்துட்டு சுவா கன்னத்தில் முத்தமிடுவார்..பயபுள்ள இதுக்குத்தான் முன்னாடியே திட்டுவாங்கும் ஆனாலும் அடங்காது :))

இந்த ஹம்மிங் துத்துத்துது...துது துத்துத்துது இன்னும் அழகு பாடலுக்கு..பேசிக் கொண்டு இருக்கும் போதே எதிர்பாரா விதமாய் கன்னத்தில் சன்னமாய் அஜித்தின் முத்தமிடல்களே ரொமான்ஸை அதிகமாய்க் கொடுக்கும்..பாடல் முடியும் தருவாயில் 4.35-4.40 அஜித் ஒரு காதல் பார்வையை எடுத்து வீச, சுவலட்சுமி தாளாமல் கழுத்தோடு கட்டி அணைப்பார்..சட்டென இறுகும் அஜித் பிடி..சான்சேஏஏஏஏ.. இல்ல மச்சி :)))


டிஸ்கி : அன்று பட்டுச்சேலைகளும் நகை நட்டும் பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே என்ற வரிகளுக்கான அர்த்தத்தை நண்பர் ஒருவர் கூறியுள்ளார்..அது கல்யாணத்துக்கு நாள் குறிக்கச் சொன்னேனே என்ற பொருளாம்.. படத்திலும் அப்படி ஒரு சண்டை வரும்..வாலி சும்மா எதுவும் எழுதல ..:))



Thursday, August 13, 2015

கனா காணும் கண்கள் மெல்ல..

பாடல் : கனாக் காணும் கண்கள் மெல்ல..
படம் : அக்னி சாட்சி
இசை : M.S.விஸ்வநாதன்
வரிகள் : வாலி
 பாடியவர் : SPB
இளையராஜா முதலில் அறிமுகம் ஆன எனக்கு இந்தப் பாடல் MSV இசை என்றதும் ஆச்சர்யம் தாள வில்லை. MSV என்றால் பழைய கருப்பு வெள்ளை படங்களுக்கு மட்டுமே இசை அமைத்தவர் அதைத் தாண்டி இப்படி ஒரு மெலடி அவரிடம் இருந்து என்ற போது தான் அவரின் உண்மைத் திறமைகள் புலப்பட ஆரம்பித்தது..
ஆரம்பத்தில் மெல்லிய கிடார் இசை தாலாட்டுக்குத் தயார் படுத்தும் அதைப் பின் தொடர்ந்து மொத்த தாய்மையையும் உள்ளடக்கி தாயுமானவனாக SPB மெல்லமாக ஆரம்பிப்பார்..
இசை சிறந்ததா பாடல் வரிகள் சிறந்ததா என சில பாடல்களுக்கு பட்டி மன்றமே வைக்கலாம்..அப்படியான பாடல் இது..வாலியின் மென்மை தோய்ந்த இந்தத் தாலாட்டு வரிகள் என் மனதிற்கு மிக மிக நெருக்கமானவை. ஒரு தலைவன் மொழி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான பாடலாக இதுவும் ,உறவுகள் தொடர்கதையும் (கங்கை அமரன் )மிகப் பிடித்தம்..
சமூகத்தின் அநீதிகள் பிடிக்காத நாயகி,அவளை உயிருக்கு உயிராய் நேசிக்கும் நாயகன் அவளின் மனப் போராட்டங்களுக்கு மயிலிறகான சொற்கள் கொண்டு வருடுகிறான்..இந்த அருமையான கதைக் களத்திற்கு பக்க பலமாக இசையும் வரிகளும் .. இந்தப் படம் பார்த்தால்தான் இந்தப் பாடல் இப்படத்திற்கு எப்பேர்ப்பட்ட ஜீவனை சுமந்து நம்மிடம் கொண்டு செலுத்துகிறது என உணர முடியும்..சமூகத்தின் மீதான ஆதங்கங்கள் அநீதிகள் ஓய வேண்டும் என நாயகி நினைவோ அன்றி வெறும் கனவு மட்டும் தானோ என்பதை உணர்ந்து தலைவன் ஆரம்பிப்பது போல் இருக்கும்.
"கனா காணும் கண்கள் மெல்ல
உறங்காதோ பாடல் சொல்ல
நிலாக்கால மேகம் எல்லாம்
உலாப்போகும் நேரம்  கண்ணே.."
இதற்கு அடுத்து வரும் இடை இசை ஆனது நாயகியின் மன ஓட்டங்களைப் பதிவு செய்திருக்கும்..அவளின் பதட்டம் வேகம் கோபம்  ,வேதனை என..அதனை அப்படியே அரவணைத்து ஆறுதல் சொல்லும் அடுத்து வரும் சரண இசையும் வரிகளும் ..
" குமரி உருவம் குழந்தை உள்ளம் ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ 
தலைவன் மடியில் மகளின் வடிவில் தூங்கும் சேயோ 
நொடியில் நாள் தோறும் நிறம் மாறும் தேவி 
விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி 
விளக்கு ஏற்றி வைத்தால் கூட நிழல் போலத் தோன்றும் நிஜமே நிழல் போலத் தோன்றும் நிஜமே.."
சரிதாவுக்கு இது ஓர் அட்டகாசமான படம்..இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தனக்குப் பிடித்த நடிகை சரிதா என்றதில் துளி கூட மிகையில்லை..அந்த குண்டுக் கண்களும்,இயல்பான நடிப்பும் அருமையான குரலும் நம்மைக் கதறடித்து இருப்பார் படத்தில்.. எல்லாப் பெண்களும் புரட்சிப் பெண்கள் அல்ல..விரும்பி ஆவதும் அல்ல..சூழல் ..ஒடுக்கி ஒடுக்கி ஒரு கட்டத்துக்கு மேல் தாள முடியாமல் வெடிக்கும்போது சாது மிரண்டால் காடு கொள்ளாது என்றப் பழமொழி நினைவுக்கு வருகின்றது..
எண்பதுகளில் படங்கள்  எப்படி பெண்களின் மீதான அடக்குமுறைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன அதை எப்படிப் போராடி பெண்கள் எதிர்கொண்டனர் என்பதைப் பதிவு செய்தன பல திரைப்படங்கள்..இன்று அதை மீறிக் கடந்து வந்து விட்டாலும் ,அக்காலம் எத்தகையது என்பதை அறிய உதவியாய் இருக்கின்றன இது போன்ற படங்கள் தாம்.. இப்படியான கதைக் களங்கள் கொண்ட படங்களில் இசையும் அதன் பொறுப்பை உணர்ந்து கொடுக்கப்பட்டிருக்கின்றது..
"புதிய கவிதை புனையும் குயிலே 
நெஞ்சில் உண்டான காயம் என்ன..
நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும் பாவம் என்ன..
கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம் 
விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும் 
வருங்காலம் இன்பம் என்று 
நிகழ்காலம் கூறும் கண்ணே..நிகழ்காலம் கூறும் கண்ணே.."

எவ்வளவு அழகான நம்பிக்கை தரும் ஆறுதல் ..இது போன்ற பாடல்கள் எல்லாம் SPB க்கு அல்வா போல.. இவ்வளவு இனிமையான குரலில் , ஆண்மை சற்றே மென்மையும் பெண்மையும்  கலந்து வெளிப்படும்போது அது முழுமையும் நிறைவும் பெறுகின்றது..அப்படி  ஓர் தலைவன் மடிதான் ஒவ்வொரு பெண்ணின் கனவாக இருக்கக்கூடும்.எந்த கிடாரில் அச்சாரம் போடப்பட்டதோ இறுதியில்  அதிலேயே மெல்லக் கண்ணுறங்க வைத்தும் முத்தாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும்..
தலைவனின் மனம் மற்றும் தலைவியின் மனம் என்று இரு மாறுபட்ட மனநிலைகளின் வெளிப்பாடான இசை அவ்விரண்டையும் ஒரு புள்ளியில் முரண்பாடின்றி இணைத்து ,அருமையான காலத்தால் நிலைத்து நிற்கும் பாடலைக் கொடுத்துத் தாலாட்டிய MSV அவர்களின் புகழ் என்றென்றும் நீங்கா இடம் பெற்று கன கம்பீரமாக நம் மனதில் வீற்றிருக்கும் ..