Sunday, April 8, 2012

எனக்கு பிடித்த பாடல்கள்-பகுதி 3

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற வரியை இசையைக் கேட்ட பின்பே பாடலாசிரியர் எழுதி இருக்கக் கூடும்.ஜென்சியின் குரல் குழைந்து உருகியிருக்கின்றது தெய்வீக ராகத்திற்குத் தகுந்தாற் போல.தீபாவும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றார்.ஒரு பாடல் மனதை விட்டு அகலாமல் நாயகனுக்கு ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதற்கு முழுத் தகுதியானது இந்தப் பாடல்.எவ்வளவு மனம் பிறழ்ந்து இருந்திருந்தாலும் சில விஷயங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்குமாம்.மொழி இன்னும் சில.அப்படி ஆழமா இந்த இசை நாயகனுக்கு பதிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
"செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்  பாராட்டவோ சீராட்டவா நீ நீந்தவா என்னோடு மோகம் தீருமே "
எனக்குப் பிடித்த வரிகள்.
***************************
நடனம் என்றால் இதுதான்.எடுத்து நீவி விட்ட புருவங்களும் நடுவில் பெரிய பொட்டுடனும் படு அழகாய் நதியா.கம்பீரமாய் SPB ஆரம்பிக்க ரசித்துத் தாளமிடுவது நதியாவின் கால்கள் மட்டுமல்ல நம் மனமும்தான்..13 to .20 வில் வரும் புல்லாங்குழல் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் பாடலில் வரும் புல்லாங்குழல் போன்றே அழகானது.2 .13 to 2 . 15 இல் நதியாவின் கண்களின் அசைவுக் கேற்ப அவரின் ஜிமிக்கியும் ஆடுவது அவ்வளவு ரசனையாக இருக்கின்றது.அந்தக் காலத்தில் நதியாவிற்கு யார் உடையமைத்துக் கொடுத்திருப்பார்கள்?.இப்பொழுது பார்த்தாலும் அதிக அழகாகவே தெரிகின்றது.
 
"ஒரு மௌனம் தீர்ந்தது  சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சொந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரமல்ல" 
 என்ன ஒரு சொல்லாடல் ஒரு மௌனம் தீர்ந்தது என்பது வெகுவாக ரசித்தேன்:)
"நம்மை யார் தான் கேட்பது விதிதானே சேர்ப்பது "(3 .44 ) என்ற வரிகளுக்கும் இறுதியில் 4 .03 இல்மறுபடி இளஞ்சோலை பூத்ததா என்று சிவகுமார் ஆரம்பித்து முழுமையாய் முடிக்கும் வேளையில் நதியாவின் நடனம்  அட்டகாசமான அசைவுகளுடன் முடிவது ரசிக்கும்படியான ஒன்று.
*********************************************************************
ஒரு படத்தின் எல்லா பாடல்களுமே அட்டகாசமாய் அமைவது ஒரு வரம்தான்.எல்லா படங்களுக்குமே அப்படி ஒரு வரம் வைப்பதில்லை.ஒரு சில படங்கள் அப்படி வரம் பெற்றவை.அதில் காதல் ஓவியம் படம் முக்கியமானது. 
ராதா நன்றாக நடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை.ஆனால் அவர் நடனம் பார்த்தால் அப்படித்தான் வருகிறது நல்லவேளை நாயகனுக்குக் கண்ணில்லை :) கைகளும் இடையும் நளினத்தில் வளைய மறுக்கின்றன.முத்திரைகள் என்று உண்டு.அதையும் முழுமையாக அன்றி அவசரப்பட்டே முடிக்கின்றார்.
*********************************************************************** 
ஆரம்பத்தில் வரும் நோ நோ நோ ஜஸ்ட் லிசன் அழகு.2 .36 to 2 .38 வரும் இசைக்கு மழைத்துளியை படமேடுத்தவன் ரசிகன் போற்றத் தக்கவன்.
"நீரோடை போலவே என் பெண்மை நீயாட வந்ததே என் மென்மை "எனும் பொழுது ஸ்ரீதேவியின் அழகு அப்பப்பா.ஜென்சிக்கு ர எப்பவும் கொஞ்சம் பெரிதாகத் தான் உச்சரிக்க வரும் போல.சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பறவுதே வார்ர்த்தைகள் தேவையா...ஆ..ஆ.ஆ.ஆ..என்றே பாடியிருக்கின்றார்.
இந்தப் படம் முழுக்க அற்புத பின்னணி இசை.அதிலும் ஸ்ரீதேவி ரஜினியிடம் காதலை வெளிப்படுத்தி விட்டு முதலில் ரஜினி மறுக்கவும் படபடவென தாழ்வு மனப்பான்மையில் தவிப்பதும் பின்பு அவர் சம்மதிக்கவும் குழந்தையாய் குழைந்து அப்படித்தான் பேசுவேன் என கண்ணீர் தழும்ப புன்னகைப்பதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
திடுக்கிடும் திருப்பங்கள் த்ரில்லர் என்று ஏதோ எல்லாம் முயற்சி செய்யாமல் ஒரு திருடனின் வாழ்க்கையை அப்படியே அவன்போக்கில் ஓடவிட்டுப் படம்பிடித்த இயக்குனர் மகேந்திரன் பாராட்டத்தக்கவர் .உங்கள் இன்மை உணர்கிறோம் ஐயா..

2 comments:

sailu said...

எப்ப பார்த்தாலும் ஒரே இடைக்கால பாடல்களாவே போடுறிங்களே. புதுப் பாட்டு போட மாட்டிங்களா...???

உமா கிருஷ்ணமூர்த்தி said...

எவரேனும் பரிந்துரைத்தால் அன்றி புதுப் பாடல்கள் அவ்வளவாகக் கேட்பதில்லை.எங்கேனும் போகின்ற வழியில் கேட்டு அரிதாய்க் கவர்ந்தால் தான் உண்டு