Saturday, April 21, 2012

கதம்பம்

அரட்டை அரங்கம் மக்கள் அரங்கம் எல்லாம் பார்க்கும் பழக்கம் இல்லை.கைத்தட்டலுக்காக வயதுக்கு மீறி சிறுபிள்ளைகள் பேசுவதும் பலர் செயற்கைத்தனமாக அழுவதும் பார்க்க ஒவ்வாதவை.என் அம்மா கடந்த வாரம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது சரி பார்ப்போமே என்று பார்த்தேன்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தலைப்பு கொடுத்ததில் ஒரு பெண் எவரும் யாருக்கும் உண்மையாக இல்லை என்ற தலைப்பில் பேசினாள்.ஆனால் அவளே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தாள்.லட்சுமண ஐயர் என்ற பெரியவரின் இறுதிச் சடங்குக்கு மாணவிகள் பலரும் சென்றோம் என்று.எவரையும் மடக்கிப் பேசிப் பழக்கப்பட்ட விசு அவர்கள் இதைக் குறிப்பிட்டு நுணலும் தன் வாயால் கெடும் என்பது போல எவருக்கும் உண்மையாக இல்லை என்று வாதிட்டுவிட்டு நீயே அச்சடலம் பார்க்கச் சென்றாய் என்றால் உண்மையும் மனிதாபிமானமும் இல்லாமலா போனாய் என்று மடக்கினார்.அவளும் அவரின் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினாள்.இறுதியில் தன் தலைப்பில் இருந்து வாபஸ் பெற்றுக் கொண்டு உண்மையாக இருப்பவர்களும் இருக்கின்றார்கள் என்று ஒத்துக் கொண்டாள்.லட்சுமண ஐயர் ட்ரஸ்டுக்கு mudinதவறை பணம் சேகரிக்கும் பணியையும் மேற்கொண்டிருக்கின்றாள்.இதுவரை சரிதான்.ஆனால் அந்த நிகழ்ச்சியின் இறுதியில் விசு அவர்களின் பேச்சு சற்றே அதிரச் செய்தது."என்னுடைய மிகப் பெரிய வெற்றி என்னவென்றால் எவருக்கும் உண்மையாக இல்லை என்ற பெண்ணை கடைசியில் இந்த மேடையில் என் காலடியில் விழ வைத்ததுதான் என்று சொல்லி விடை பெறுகிறேன் "என்று முடித்தார்.அந்தப் பெண் கருத்தளவில் தோற்றாலும் கூட ஒரு நல்ல மனிதாபிமானம் உடைய பெண்ணாக ஜெயித்திருக்கிறாள் தானே?வயதில் பெரியவராக அதைக் குறிப்பிட்டு பாராட்டி தன் பெருந்தன்மை காட்டாமல் தான் ஜெயித்துவிட்டதாகச் சொன்னது உறுத்தலாக இருந்தது.நீ தோற்கவில்லை அம்மா ஜெயித்திருக்கின்றாய் என்று தட்டிக் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.தன் பேச்சுப் புலமையை தனக்கு சரியானவர்களிடம் காட்டி அவர் ஜெயித்ததாக அறிவித்திருந்தால் சரி.வடிவேலு டயலாக் தான் நினைவுக்கு வருகின்றது "நீங்க  அடிச்சது ஒரு புள்ள பூச்சியை .ஒரு வெண்கலக் கிண்ணம் கூடக் கிடையாது."
************************
நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்-விஜய் சண்டை வீட்ல.உன்னாலதான் அஜித் பிடிக்கலன்னு அண்ணனும் உன்னாலதான் விஜய் மேல வெறுப்புன்னு நானும் போட்டுக் கொண்டோம்.இறுதியில் அஜித் ரொம்ப நல்லவர் என்று அண்ணனும் விஜயைப் பிடிக்கும்  என்று நானும் சமாதானம் செய்து கொண்டோம்.இடைப்பட்ட வேளையில் செம கொட்டு அம்மா இருவருக்கும் வைத்தார் என்பதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன் :)
*****************************
ஒரு வழியாக அருமையான பாடல்களுக்கு யூ ட்யூபில் டிஸ் லைக்  செய்வதன் சூட்சுமம் புரிந்தேன்.தான் அப்டேட் செய்த வீடியோ மட்டும் ஹிட் அடிக்கவும் பிறருடைய அதே வீடியோ வை டிஸ் லைக் செய்துவிட்டால் டிஸ் லைக் அதிகம் வாங்கிய வீடியோ முடக்கப்படும் #என்னா வில்லத்தனம் 
*******************************************
எதிர்வீட்டில் ஒருவர் இறந்து விட்டார்.அவர் மனைவியை நான்கு குழந்தைகள் பெற்ற பின்பு விட்டுவிட்டு வேறு ஒரு பெண்மணியுடன் ஓடிவிட்டார்.சொந்த தாய் மாமனையே திருமணம் செய்து தனித்து வாழ வேண்டிய சூழலில் எப்படியோ பிள்ளைகளை வளர்த்திருக்கின்றார்.(எங்கள் தெருவில் அனைத்து வீட்டிற்கும் வாசல் தெளித்து கோலமிடும் வேலை பார்க்கின்றார்.மாதம் ஒரு வீட்டிற்கு 150 ரூ.சம்பளம் )பதினைந்து நாட்களுக்கும் மேலாக உயிர் ஊசலாடிக் கொண்டிருந்திருக்கின்றது மருத்துவமனையில்.இந்தப் பெண் பார்க்கச் சென்று அவரது இரண்டாவது மனைவியிடம் உன்னைக் கூட பார்த்துக் கொள்வேன்.என்னைத் தனியே விட்டுச் சென்ற இவரை நிச்சயம் பார்க்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டார் போலும்.அதைக் கேட்டு அந்த மனிதர்(?) கண்ணீர் உகுத்து அழுதுவிட்டு சிறிது நேரத்தில் இறந்து விட்டார்.உயிரைச் செல்லவிடாமல் ஏதோ ஒன்று இறுதி நேரத்தில் அழுத்திப் பிடிக்கும் என்று கதைகளில் கேட்டும் பார்த்தும் இருக்கின்றேன்.(விஜய் டிவியில் கூட சேத்தன் நடித்து ஒரு கதை இறுதிக் கட்டத்தில் இருப்பவர்களின் மனநிலை அறிந்து அதைச் செய்கிறேன் என்று வாக்கு கொடுத்து உயிர் நிம்மதியாகப் பிரிய வழி வகுப்பார்).தன் தவறு உணர்ந்து அந்தப் பெண்மணியின் முகம் பார்க்கத்தான் அத்தனை நாள் உயிரைப் பிடித்து வைத்திருந்திருப்பாரோ என்று தோன்றுகின்றது.பெற்ற மகளின் வேதனை ஒரு புறமிருப்பினும் தன் தம்பிக்காக அழுத பெண்மணி இன்னமும் ஆச்சரியம்.எப்பொழுதோ இணையத்தில் ஒரு கதை படித்தேன்."நான் அவனை அப்படி நேசித்தேன் இப்படி காதலித்தேன் ஏமாற்றிவிட்டான் என அழுகின்றாயே அவன் தவறுகளை மன்னிக்கும் அளவுக்கு நீ காதலித்து இருக்கின்றாயா ?" என்று யாரோ கேட்பார்கள்.நிஜத்தில் அப்படித் தவறுகளை மன்னிக்கும் அளவுக்கு நேசிக்கும் தாய்க் குணம் சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கின்றது இப்பெண்மணி போல.
*************************************
ஓரிரு மாதங்களுக்கு முன்பு மின்சாரம் இல்லாத இரவு வேளையில் மொட்டை மாடியில் நானும் என் அண்ணனும் பொழுதைக் கழித்தோம்.ராஜா இசையமைக்காத சில பாடல்களை அலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்த பொழுது எண்பதுகளின் இசையமைப்பாளர் பற்றி ஒரு சிறு அலசல் செய்தோம்.சந்திர போஸ் ,மனோஜ் கியான்,ஹம்சலேகா போன்ற பலர் இசையமைத்து இருந்தாலும் ஏன் அதிகம் புகழ் பெறவில்லை?எண்பதுகளில் நல்ல இசை என்றாலே ராஜாதான் இசை என்று அனிச்சையாக முடிவு செய்யும் எண்ணம் எல்லாருக்கும் வர என்ன காரணம் எனப் பேசினோம்.என் அண்ணன் சொன்னது :எத்தனை பேர் இசையமைத்திருந்தாலும் ராஜாவின் தாக்கம் இல்லாமல் அவர்களால் ஒரு மெல்லிசை கொடுத்திருக்க முடியாது.டி.ஆர்.மட்டுமே சற்று தனித்து தெரிந்திருக்கின்றார்.அதனால் தான் ஜாம்பாவானாக ராஜாவால் இருக்க முடிந்தது.அதன் பின்பு வந்த ரகுமான் மட்டுமே ராஜாவின் தாக்கமின்றி தனித்து தெரியும்படியான இசையமைத்தது.ஆகவே தான் ராஜாவுக்கு அடுத்து வந்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் முக்கியமானதாகவும் போட்டிக்கு சரியான தேர்வாகவும் ரகுமான் பெயர் வரக் காரணமாக இருந்தது என்றார்.சரி என்றே தோன்றியது எனக்கு.தொண்ணூறுகளின் ரஹ்மான் இசை இன்றளவும் பிடித்தமானது என்பதால்.

Sunday, April 8, 2012

எனக்கு பிடித்த பாடல்கள்-பகுதி 3

தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் என்ற வரியை இசையைக் கேட்ட பின்பே பாடலாசிரியர் எழுதி இருக்கக் கூடும்.ஜென்சியின் குரல் குழைந்து உருகியிருக்கின்றது தெய்வீக ராகத்திற்குத் தகுந்தாற் போல.தீபாவும் அழகாகக் காண்பிக்கப்பட்டிருக்கின்றார்.ஒரு பாடல் மனதை விட்டு அகலாமல் நாயகனுக்கு ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கின்றது என்பதற்கு முழுத் தகுதியானது இந்தப் பாடல்.எவ்வளவு மனம் பிறழ்ந்து இருந்திருந்தாலும் சில விஷயங்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்குமாம்.மொழி இன்னும் சில.அப்படி ஆழமா இந்த இசை நாயகனுக்கு பதிந்திருப்பதில் வியப்பேதும் இல்லை.
"செந்தாழம் பூவைக் கொண்டு சிங்காரம் பண்ணிக் கொண்டு செந்தூரப் பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன்  பாராட்டவோ சீராட்டவா நீ நீந்தவா என்னோடு மோகம் தீருமே "
எனக்குப் பிடித்த வரிகள்.
***************************
நடனம் என்றால் இதுதான்.எடுத்து நீவி விட்ட புருவங்களும் நடுவில் பெரிய பொட்டுடனும் படு அழகாய் நதியா.கம்பீரமாய் SPB ஆரம்பிக்க ரசித்துத் தாளமிடுவது நதியாவின் கால்கள் மட்டுமல்ல நம் மனமும்தான்..13 to .20 வில் வரும் புல்லாங்குழல் ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம் பாடலில் வரும் புல்லாங்குழல் போன்றே அழகானது.2 .13 to 2 . 15 இல் நதியாவின் கண்களின் அசைவுக் கேற்ப அவரின் ஜிமிக்கியும் ஆடுவது அவ்வளவு ரசனையாக இருக்கின்றது.அந்தக் காலத்தில் நதியாவிற்கு யார் உடையமைத்துக் கொடுத்திருப்பார்கள்?.இப்பொழுது பார்த்தாலும் அதிக அழகாகவே தெரிகின்றது.
 
"ஒரு மௌனம் தீர்ந்தது  சுதியோடு சேர்ந்தது ஒரு தாளம் ராகம் சொல்ல சொந்தம் பொங்கும் மெல்ல மாயமல்ல மந்திரமல்ல" 
 என்ன ஒரு சொல்லாடல் ஒரு மௌனம் தீர்ந்தது என்பது வெகுவாக ரசித்தேன்:)
"நம்மை யார் தான் கேட்பது விதிதானே சேர்ப்பது "(3 .44 ) என்ற வரிகளுக்கும் இறுதியில் 4 .03 இல்மறுபடி இளஞ்சோலை பூத்ததா என்று சிவகுமார் ஆரம்பித்து முழுமையாய் முடிக்கும் வேளையில் நதியாவின் நடனம்  அட்டகாசமான அசைவுகளுடன் முடிவது ரசிக்கும்படியான ஒன்று.
*********************************************************************
ஒரு படத்தின் எல்லா பாடல்களுமே அட்டகாசமாய் அமைவது ஒரு வரம்தான்.எல்லா படங்களுக்குமே அப்படி ஒரு வரம் வைப்பதில்லை.ஒரு சில படங்கள் அப்படி வரம் பெற்றவை.அதில் காதல் ஓவியம் படம் முக்கியமானது. 
ராதா நன்றாக நடித்திருப்பார் என்பதில் ஐயமில்லை.ஆனால் அவர் நடனம் பார்த்தால் அப்படித்தான் வருகிறது நல்லவேளை நாயகனுக்குக் கண்ணில்லை :) கைகளும் இடையும் நளினத்தில் வளைய மறுக்கின்றன.முத்திரைகள் என்று உண்டு.அதையும் முழுமையாக அன்றி அவசரப்பட்டே முடிக்கின்றார்.
*********************************************************************** 
ஆரம்பத்தில் வரும் நோ நோ நோ ஜஸ்ட் லிசன் அழகு.2 .36 to 2 .38 வரும் இசைக்கு மழைத்துளியை படமேடுத்தவன் ரசிகன் போற்றத் தக்கவன்.
"நீரோடை போலவே என் பெண்மை நீயாட வந்ததே என் மென்மை "எனும் பொழுது ஸ்ரீதேவியின் அழகு அப்பப்பா.ஜென்சிக்கு ர எப்பவும் கொஞ்சம் பெரிதாகத் தான் உச்சரிக்க வரும் போல.சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பறவுதே வார்ர்த்தைகள் தேவையா...ஆ..ஆ.ஆ.ஆ..என்றே பாடியிருக்கின்றார்.
இந்தப் படம் முழுக்க அற்புத பின்னணி இசை.அதிலும் ஸ்ரீதேவி ரஜினியிடம் காதலை வெளிப்படுத்தி விட்டு முதலில் ரஜினி மறுக்கவும் படபடவென தாழ்வு மனப்பான்மையில் தவிப்பதும் பின்பு அவர் சம்மதிக்கவும் குழந்தையாய் குழைந்து அப்படித்தான் பேசுவேன் என கண்ணீர் தழும்ப புன்னகைப்பதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
திடுக்கிடும் திருப்பங்கள் த்ரில்லர் என்று ஏதோ எல்லாம் முயற்சி செய்யாமல் ஒரு திருடனின் வாழ்க்கையை அப்படியே அவன்போக்கில் ஓடவிட்டுப் படம்பிடித்த இயக்குனர் மகேந்திரன் பாராட்டத்தக்கவர் .உங்கள் இன்மை உணர்கிறோம் ஐயா..