Wednesday, June 10, 2015

சிறிய பறவை சிறகை விரிக்கத் துடிக்கிறதே...

பாடல் : சிறிய பறவை
படம் : அந்த ஒரு நிமிடம்
இசை :இளையராஜா
பாடலாசிரியர் : வைரமுத்து
பாடியவர்கள் : SPB,ஜானகி
பாடல் என்ன படம் இசை யார் என்றே அறியாத காலத்தில் அண்ணனின் TDK கேசட்டின் மூலம் அறிமுகமான பாடல்களில் ஒன்று.. இது இரவு கேட்பதற்கு, இது பகலில் கேட்பதற்கு , இது ஒரே மாதிரி பீட்ஸ் , இடையில் அதிரடியாய் உறுத்தல் வராத விதத்தில் பாடல்களின் தர வரிசை பிரித்து வைத்திருப்பார் என் அண்ணன்.   அப்படியாக என் மனத்தைக் கொள்ளை கொண்ட பாடல். இப்பாடலை ஒலியைச் சத்தமாக வைத்தும் பீட்ஸ் ரசிக்கலாம்.   அன்றி மெலிதாக, இரவு நேரத்தில் ஓர் ஏகாந்தத் தருணத்திலும் கசிய விடலாம்.  எச்சூழலுக்கும் கேட்க இனிமை. சில நேரம் பாடலுக்காக இசையா, இசைக்காக பாடலா எனக் குழப்பம் வரும்..  இந்தப் பாடல் எழுதிய பின்பே இசையமைக்கப்பட்டதோ என்றே தோன்றும் எனக்கு.   சிறிய பறவை என்று தான் பாடலின் ஆரம்பம் என்பதை அறிந்தே அமைத்தது போல ஆரம்ப இசை அப்படியே கீழிருந்து மேலே எழும் ஒரு பறவை பறக்க ஆயத்தமாகி பின் எழுவது போல வயலின் ஆர்ப்பரித்து எழும்.

 பல்லவி முடிந்ததும் அன்பு லைலா என்ற வரிகளுக்காகவே கோர்த்தது போல இடை இசை (.59-1.01 &1.04-1. 06) இருக்கும் . கவனித்தால் தெரியும்.கருவி பெயர் பரிட்சயம் இல்லாவிடிலும் பொதுவாக மொகலாய கதைகள் கொண்ட பாடல் படங்களில் அந்த இசை வரும்.

SPB-ஜானகி போன்ற ஜோடிகள் இனி கிடைப்பது அரிது.. டூயட் பாடல்களில் அப்படியே ஒரு ரொமாண்டிக் mood ஐக் கொண்டு வந்து விடுவார்கள் .. கேட்பவர்களுக்கு ;)  இசையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் இருவரும் செய்யும் கொஞ்சல்கள் பாடலின் அழகுக்கு அழகு சேர்ப்பவை.
 SPB &கமல் ஜோடி பற்றி தனிப் பதிவுகளே எழுதலாம் ஆராய்ச்சி செய்து .. அந்த அளவுக்கு அவர்களுக்குள் ஒத்துப்போகும் :)

அன்பு லைலா...ம்
நீயே எந்தன் ஜீவ சொந்தம் (ஒரு சிறிய சிரிப்பு)
நீ சிரித்தால் ..
பாலை எங்கும் பூ வசந்தம்
காதலர்களுக்கு இடையேயான உரையாடல் ஒரு கலை நயத்தோடு சொற்களால் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் . ராஜா- வைரமுத்து ஜோடியில் மற்றுமோர் முத்து மணி .வருகவே என்ற ஒலியில் ஓர் அழைப்பை உணர முடியும்.

அடுத்து 2.04இல் ஆரம்பிக்கும் இடை இசை ,  முதல் இடை இசையில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும்.   ஒரு rich orchestration என்பார்களே அதை இந்தப் பாடலில் நாம் உணரலாம்.   ஸ்வரங்கள் பதனிச என வரும்..அந்தக் காலத்தில்  ஆடத் தெரியாதவர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பமோ என நினைக்கும் அளவுக்கு இருக்கும் ஓர் ஆளை நான்காய் திரையில் காட்டுவது :)  ஓர் மாபெரும் சபையினில்,  ஆடல் பாடல் நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அறிதல் மட்டுமல்ல  உங்கள் செவிக்கும் அதைக் காட்சியாக்க வேண்டும்.   அதை அப்படியே பிறழாமல் செய்திருக்கும் இரண்டாவது சரண இடையிசை.
இரண்டாவது சரணத்தில் நான் எப்பொழுதுமே ரசிக்கின்ற வரிகள்

"சோழன் குயில் பாடுகையில் சோலைக் குயில் ஓய்வெடுக்கும்
மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் "

இந்த வரிகளாகட்டும் அதற்கு உயிர் கொடுத்து உருகும் SPB ஆகட்டும் ஒரு பெரிய கை தட்டல் :) சோழன் குயிலுக்கும் சோலைக் குயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர் உச்சரிப்பில் உணர முடியும் .
வல்லினங்கள் வாய் வலிக்கும் என்பதில் ஓர் அக்கறை தெரியும்.. வல்லினங்கள் எனும்போது அவர் எப்படி உச்சரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்.செம்ம :) வலிச்சுடுமோ எனும் பதட்டமும் இருக்கும்.

யப்பா..டேய்..சாமி...என்னாம்மா லவ் பண்றீங்கடா...ன்னு தோன வைக்கும் :) தமிழோடு என்ன ஓர் அழகான ஓர் உவமை.

"அன்பனே இளைய கம்பனே
கவிதை நண்பனே நம்பினேன்
சொர்ணமே அரச அன்னமே
இதழில் யுத்தமே முத்தமே "

இரண்டாம் சரணத்தில் வரும் இளைய கம்பனே என்பது அம்பிகாபதி.கம்பரின் மகன் .அமராவதியுடனான இவரது காதல் புகழ்மிக்கது.அதை அழகாகப் பிரதி பலிக்கும் வரிகள்.

சொந்தமே இன்பம் தந்தது
கங்கையே இங்கு வந்தது
தென்றலே இங்கு நின்றது
நன்று தான் சந்தம் என்றது
கன்றுகள் ரெண்டு இன்று போல் என்றும் வென்று வாழ் என்றது..
இதுவரை முதல் சரணத்திற்கும் இரண்டாவது சரணத்திற்கும் எவ்வளவு வேறுபாடு ..எனினும் எங்கேனும் ஓர் உறுத்தலையாவது நம்மால் உணர முடிகிறதா?அது தான் இசை .ராஜாவைக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கின்றன ஆயிரமாயிரம் பாடல்கள் இது போல இருக்கின்றன :)
முதலாம் சரணம் "வருகவே" போலவே இங்கு "வாழவே" அப்படியே இணையும் .
மூன்று சரணங்கள் கொண்ட பாடல்கள் பெரும்பாலும் இப்பொழுது வருவதில்லை. அடுத்த இடையிசை அப்படியே மேற்கத்திய பாணியைத் தொட்டுச் செல்லும்..
ஏனெனில் சரணம் ஆரம்பம் அன்பு ரோமியோ என இருக்கும்
சரண முடிவில் ,இப்படி மூன்று விதமான (லைலா-மஜ்னு), அம்பிகாபதி அமராவதி , பின்னர் ரோமியோ -ஜூலியட் )கலந்த கற்பனையை மரத்தில் சாய்ந்து கொண்டு கமல் கண்டு கொண்டிருப்பார். இந்த மனசு இருக்கே அது திடீர்னு எங்க வேணா பறக்கும்..ஆனா அதைச் செயல் படுத்துவது அவ்வளவு சாத்தியமா ?ராஜா அதில் கமலுக்கு நன்கு ஒத்து உழைத்திருக்கிறார் .பாலா அதை உணர்ந்திருக்கிறார். சரண முடிவில் வரும் அந்தச் சிரிப்பு ..யப்பா என்னா கிக்..:))  இது கமலுக்காகவே என பரிசளித்து இருக்கிறார் SPB.
"பழைய கனவு உனக்கு எதற்கு கலையட்டுமே" (திரும்பவும் பல்லவிக்கு வர்ற அந்த  வர்ற பீட்ஸ் இங்க வந்து சேர்ந்துக்கும் .. சரணத்தில் மட்டும் வேணாம்  நீ கொஞ்சம் ஓரமா நில்லுன்னு சொல்லி வச்சிருப்பார் போல ) போதும் நம்ம கனவு கண்டது இனி காதலுக்கு இலக்கணமா அவங்களைச் சொன்னது போல இனி நம்மையும் உலகம் புகழட்டும் என்று முடித்திருப்பார்கள்

கனவு கலையலாம் ..பாடல் தந்த பாதிப்பு கலையாது :)



Thursday, June 4, 2015

காடு பொட்டக் காடு..

பாடல் : காடு பொட்டக் காடு 
படம் : கருத்தம்மா (1994)
இசை : A.R.ரஹ்மான் 
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்,பாரதிராஜா ,டி.கே.கலா 
பாடலாசிரியர் : வைரமுத்து 
நேயர் விருப்பமாக வருகிறது இந்தப் பாடல் :-) ரஹ்மான் எத்தனையோ படங்களுக்கு இசை அமைத்து விட்டாலும் என் மனம் என்னவோ அவரின் தொண்ணூறுகளின் பாடலைத் தாண்டி நகர மறுக்கின்றது..அத்தனையும் முத்துக்கள்..ஒருவேளை நிரூபித்துக் காட்ட வேண்டிய வெறி கொண்ட காலமோ என்னவோ? எப்பக்கம் தொட்டாலும் இனிக்கிறது..என்னுடைய பால்யம் ராஜா, ரஹ்மான், தேவா, வித்யாசாகர், சிற்பி என பலரை உள்ளடக்கியது..இசை யார் இயக்கம் யார் என்றறியாமலே கேட்டு ரசித்த பாடல்களே இன்றளவும் நெஞ்சில் நிற்கின்றன.. 

பாரதிராஜா படங்கள் என்றாலே மண் மணம் வீசும் ..இதிலும் பொட்டக் காட்டின் மணம் வீசுகின்றது..பாரதிராஜா படங்களில் இது அப்பொழுது மிக முக்கியமான பிரச்சனையாக இருந்த பெண் சிசுக் கொலையை மையமாகக் கொண்டது..அதனால் பாட்டைப் பற்றிப் பேசும் முன் படத்தின் கரு  பற்றியும் சில வரிகள் ..என் உறவினர் அக்காவுக்குத் திருமணம் ஆன புதிதில் "ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே வீட்டுக்கு வா " என்ற கட்டளை வந்ததாகக் கேட்டு அறிந்திருக்கிறேன்..(இன்று அவர்களே ஒரு பெண் குழந்தை இல்லாமல் போனதே என்ற ஏக்கத்தையும் கண்டு கொண்டிருக்கிறேன் ) பெண் குழந்தை என்றாலே செலவு ,வரதட்சணை கொடுத்து மாளாது என்ற எண்ணத்தில் இருந்து இன்று ஓரளவு மீண்டு வெற்றி கண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.. ஏனெனில் இன்று பெரும்பாலும் முப்பதுக்குப் பிறகே தாமத திருமணம் அதிலும் குழந்தைப் பிறப்பு ஒரு பேறாக வேண்டி வரம் இருக்கும் நிலையில் எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன குழந்தை இருந்தால் போதும் என்ற நிலை வந்திருக்கிறது..இன்று பல மகளதிகாரங்கள் பார்க்க நேரிடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது..(இது மிகப் பெரிய சமூக மாற்றம் ) போலவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் குறைய மகளைப் பெற்ற அப்பாக்களும் மகனைப் பெற்ற அம்மா  களும் பொறுப்புடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள் என நம்புவோமாக ! பெண்களுக்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என முணுமுணுப்புகள் எழுந்தாலும் அவற்றில் சில உண்மை இருந்தாலுமே கூட , மிகக் கடுமையான சட்டங்கள் தாம் இன்று பல பெண்களைக் காப்பாற்றி இருக்கின்றன என்றால் அது மிகையாகாது..எண்பதுகளில் வரதட்சணை ஒரு மிக மோசமான சக்தியாக உருவெடுத்து இருந்தது.

படத்திற்கு பக்க பலமாக ரஹ்மான் இசை..இது டைட்டில் பாடலாக வருகிறது. இந்தப் பாடல் ,மற்றும் காட்சி அமைப்புகள் அப்படியே கிராமத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்னை..சிறு வயதில் ஒரு மணல் வீட்டில் வாழ்ந்ததுண்டு..அப்படியே எங்களுக்குச் சொந்தமான சில காடுகளையும் பராமரித்து வந்தார் அம்மா. ஏனோ நகரத்து பளபளப்பு மீது ஈர்ப்பு இருந்ததால் , கிராமத்து வாழ்க்கை பிடிக்காமலே ஓர் ஐந்து ஆண்டுகள் அங்கே வேண்டா வெறுப்பாகவே இருந்தேன்.. ஆனால் இப்போ ஒரு timecraft கிடைச்சா அப்படியே காலாற தொண்ணூறுகளுக்கு நடந்து போய் கண்மாய் ,செழிப்பான காடுகள் தோட்டங்கள் ,பவர்கட்டே இல்லாமல் இருந்த வாழ்க்கை,கூட்டாஞ்சோறு என ஒரு நாளேனும் வாழ்ந்து பார்த்துவிட்டு வர ஆசை. காடுகளில் சில வகை உண்டு..கரிசல் காடு ,பொட்டக் காடு என்பார்கள்.. நீர் இறைக்க கிணறு உள்ளவை தோட்டம் எனப்படும்..இதிலே பொட்டக் காடு கருப்பும் சிவப்பும் சேர்ந்த மண்.பொருபொருவென இருக்கும் (சகதி இன்றி ) ஓர் மழை நாளில் இந்தப் பொட்டக் காட்டுக்குச் சென்ற பொழுது கண்ணுக்குக் குளிர்ச்சியாக கண்ட  விதம் விதமான வண்ணத்துப் பூச்சிகள் இன்னமும் என் நினைவுகளில் பறந்து கொண்டே இருக்கின்றன..ஹ்ம்ம்..
காடு பொட்டக் காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு 
எலியோடு எங்க பாடு...
கீத்து வீடுன்னா என்னன்னு தெரியுங்களா ?தென்னங்கீத்து இருக்கு பாருங்க அதிலே வேயப்பட்ட வீடு.. அதிலே வெளியே இருந்து உள்ள பூனை குதிக்கும் எலி குதிக்கும்..சூரியன் கூட அப்பப்ப எட்டிப் பார்க்கும்..கிராமங்களில் மணல் வீடு ,கல்லு வீடு (காரை வீடு என்போம் ) மற்றும் இது போல கீத்து வீடுகள் நிறையப் பார்க்கலாம்.. 
கூழு சோழக் கூழு 
வெங்காயம் கூடச் சேரு 
தை மாசம் நெல்லுச் சோறு 
பூமி எங்க பூமி 
வானம் பார்த்து வாழும் பூமி 
தூங்கிப் போச்சு எங்க சாமி 
கிராமத்து உணவு முறை எப்படி தெரியுமா? நெல்லுச் சோறு விலை கூட அப்ப .(நெல் அவிக்கிற வாசம் இருக்கே..ப்பா ) தை மாசம் தான் அறுவடை.. பெரும்பாலும் கஞ்சி தான்..கம்பங் கூழு கேப்பக் கூழு சோழ கூழு.. இப்பல்லாம் மதுரையில் ஆங்காங்கே இவை விற்கப் படுகின்றன..ஒரு தலைமுறை இதன் ருசி அறியாமலே வளர்வது வருத்தம் தான்.. மெனக்கெட்டு வெஞ்சினம் (side dish) வைக்க மாட்டாங்க வெங்காயம்  உரிச்சு தான் சாப்பாடு.. அந்த எளிமையான உணவு முறையே ஆரோக்கியமாகவும் இருக்கும். காட்டு வெள்ளாமை ,தோட்ட வெள்ளாமை என்ற இரண்டு சொற்பதங்களை கிராமங்களில் கேட்கலாம்.. நீர் தேவையை கிணறு வெட்டி இறைத்துக் கொண்டால் அது தோட்ட வெள்ளாமை..இதற்கு மழை தேவையில்லை.. இந்த நீரே போதுமானது.. ஓரளவு பணம் உள்ளவர்கள் இப்படி செய்து மாட்டின் மூலமாக நீர் இறைப்பதோ அன்றி மோட்டார் போட்டு தண்ணி எடுப்பதோ உண்டு.
காட்டு வெள்ளாமை என்பது இப்பாடலில் வரும் வானம் பார்த்த பூமி என்ற வரிகளுக்கானது.. விதைச்சுடுவாங்க ..மழை வந்தால் பிழைச்சுக்கும் இல்லாட்டி சிரமம்.அதிலும் பருவம் தப்பி மழை பெய்தாலும் கஷ்டம்..வானம் பொய்த்தால் அந்த ஆண்டு அதோ கதி தான்.
அந்தி நேரம் வந்தா தலையெல்லாம் எண்ணிப் பாரு 
ஆடு மாட்டச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு 
ஆறு எங்க ஆறு அட போடா வெட்கக்கேடு 
மழை வந்தா தண்ணி ஓடும் மறுநாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு  என் கன்னுக்குட்டி ஒன்னு ஒன்னு 
கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு .
வீட்டிலே கோழி,ஆடு வளர்த்த அனுபவம் உண்டா? :) பகல் முழுக்க மேய விட்டுட்டு மாலையில் அவை வந்து அடையும் போது வெள்ளச்சி இருக்காளா கருப்பன் வந்துட்டானா என அண்ணன் சோதிப்பதுண்டு :) என்னதான் ஆட்டை ஒருநாள் வெட்டத் தான் போகிறார்கள் என்பதே நிதர்சனம் என்றாலும் பார்த்துப் பார்த்து வளர்க்கும் இன்பமே தனி :) இப்பவும் ஊருக்குள்ள மழை வந்தா அது பெரிய சேதியாகவே பரிமாறிக் கொள்வது .விவசாயம் நம்பியே வாழ்க்கை 
காக்கா இளைப்பாற கருவேலம் மரம் இருக்கு 
என் மக்க இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசியாற கொக்குலத்து மீனிருக்கு 
என் மக்க பசியாற மக்கிப் போன நெல்லிருக்கா ?
சீமைக் கருவேலத்தை விட நம் கருவேல மரங்கள் எவ்வளவோ தேவலாம்..ஆனால் முள் இருக்கே ..கரிசக் காட்டில் பார்த்திருக்கிறேன் .இந்த மக்க என்ற சொல் கிராமத்தில் அதிகம் புழங்கும்..பிள்ளைகளைத் தான் நான் பெத்த மக்கா என்பார்கள் .சமீபத்தில் த்ரிஷ்யம் பார்த்தப்ப இந்த மக்களே மலையாளத்திலும் இதே பயன்பாட்டில் வருகிறது என அறிந்தேன். 

மாடு தத்த மாடு இது ஓடும்  ரொம்ப தூரம் 
வாழ்க்க தத்த வாழ்க்க இது போகும் ரொம்ப காலம்
காட்டுக் கள்ளிக்குள்ள  உள்ளாடும் வால போல 
உள்ளூர கண்ணீர் பொங்கும் சொல்லாம உள்ளம் பொங்கும்..
பட்ட மரத்து மேல எட்டிப் பார்க்கும் ஓணான் போல
வாழ வந்தோம் பூமி மேல 

நான் ஏன் வரிக்கு வரி எழுதி இங்க சொல்கின்றேன் என்றால் கவிஞர் வைரமுத்துவின் இயல்பான யதார்த்தம் தோய்ந்த உவமை மிக்க வரிகளுக்காகவே.. கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால் கிராமத்துப் பாடல்களில், தான் கண்டவற்றை சொற்களில் அழகாகப் படம் பிடிக்கின்றார் .
மாடுகள் விவசாயிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம்.  மாட்டு வண்டிப் பயணங்கள் மறக்கவே முடியாது.. இதிலே சுறுசுறுப்பான மாடுகள் கழுத்தில் மணியோடு பறக்கும்..சில ஆடி அசைஞ்சு ,நீ எவ்ளோ வேணா பின்ன இருந்து குச்சி வச்சு குத்து நான் மெதுவாத் தான் போவேன்னு நிக்கும்..இன்னமும் "ஒரு வேலை செய்ய வைக்க உன்ன குச்சி வச்சுக் குத்தணுமா" என்று அம்மாவிடம் திட்டு வாங்குவதுண்டு :) இதுல மெதுவாகப் போகின்ற மாட்டைத் தான் தத்த மாடு என்பதுண்டு. தத்தித் தத்திச் செல்லும் என்ற வரிகள் கேள்விப் பட்டதுண்டு தானே ? (தத்தி என திட்டும் சொல் கூட உண்டு ..எதையும் உடனே புரிஞ்சுக்காத மண்டன்னு அர்த்தம் ) இப்படி தத்தித் தத்திச் செல்லும் மாடு எவ்வளவு மெதுவாகப் போகுமோ போலவே எங்களின் வாழ்க்கையும் என்பதே இதன் பொருள். சற்றே வலி தைக்கும் வரிகள். 

கள்ளிச் செடி வெளியே பார்க்க கனமான தோலைக் கொண்டதாக இருக்கும்..ஆனால் உள்ளே வழுவழுப்பான உட்பொருளைக் கொண்டிருக்கும் . இந்தப் படத்தில் கூட தகப்பன் பெண் குழந்தைகளாப் போச்சே என்றொரு எரிச்சலோடு தான் இருப்பார். ஆனாலும் பெண் மணமாகிச் செல்லும்போது கண் கலங்குவார். அழகான உவமை இது.
ஒரு பாடல் எவ்வளவு சின்னச் சின்னச் கதைகளை சொல்லிச் செல்கிறது..போகிற போக்கில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும்..
எல்லாப் பாடல்களும் அட்டகாசமாய் பாடக் கூடியவர் எனினும் கிராமத்துப் பாடல்கள் எனில் அதற்குத் தனி உயிர் கொடுக்க மலேசியா வாசுதேவனாலேயே  முடியும் .அதற்கெனவே நேர்ந்து விட்டது போல..சோகம் இழையோட , ஒரு துண்டை வீசி தோளில் போட்டு நடந்து கொண்டே ஒரு பெரியவர் நம்மிடம் இக்கதைகளைச் சொல்வது போன்ற ஒரு பாவனை குரலில். இடையே கட்டையாய் சற்றே இழுவையுடன் பாரதிராஜா குரலும் ஆகப் பொருத்தம் இந்தப் பாடலுக்கு. பெண் குரல்  மிக மெலிதாக , பெற்றவளின் மனக் குரல் வேதனையைப் பறை சாற்றும்.. 

படமும் பாடலும் வெளி வந்து இருபது ஆண்டு காலம் ஆகியும் இன்னமும் பசுமையாக மனதில் நிற்கின்றது. பாடல் கேட்டு முடித்தவுடன் மனம் முழுக்க ஓர் ஆக்கிரமிப்பு அகலாது ஏதோ ஒன்று அப்படியே அழுத்தி வைக்கிறது சில கணங்களுக்கு.. .