படம் : கடலோரக்கவிதைகள்
பாடல் :கொடியிலே மல்லியப் பூ
இசை : இளையராஜா
பாடலாசிரியர் வைரமுத்து
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , ஜானகி
படிக்கும் பொழுது, தங்கி இருந்த ஹாஸ்டலில் பொழுது போக்காக ஓர் இரவில் தோழி, காதில் கிசுகிசுப்பாகப் பாடியதில் பிடித்துப் போன பாடல் இது :) வருங்காலச் சந்ததிக்கு நான் சொல்லும் தகவல் முன்பெல்லாம் பாடல் என்பது டீ ப்ரேக்க்கு அல்ல. ஒரு குழும உழைப்பாக இருக்கும்..போற போக்குல மச்சி பச்சின்னு இல்லாம,படத்தோட சூழல், கருப்பொருள் உள் வாங்கி, உருப்பெற்றதாக இருக்கும்.. இந்தப் பாடலும் அவ்வகை சார்ந்ததே.. ஒரு காலத்தில காதலைச்சொல்லவே தயங்கி இருக்காங்க என்பது கூட, வரும் காலத்தினருக்கு காமெடியாக இருக்கக்கூடும் .. ஆனால் இருந்தது .
பாடல் முழுக்க கவனிச்சுப் பாருங்க.. ஒரு தயக்கம் இழையோடும் இசையில்.. 4 நிமிடங்களும் , மழை சற்றே வெறித்த யாருமற்ற சாலையில் ,கைகளை உரசவா,வேணாவா என்ற தயக்கத்தின் ஊடே ,மயக்கத்துடன் மெலிதாக நடை போடும் இசை , காதலர்களின் மனம் உணர்ந்தார் போல ..
கொடியிலே....மல்லியப் பூ...... மணக்குதே மானே...
எடுக்கவா....தொடுக்கவா...துடிக் கிறேன் நானே..
பறிக்கச் சொல்லித் தூண்டுதே... பவள மல்லித் தோட்டம்..
நெருங்க விட வில்லையே நெஞ்சுகுள்ளக் கூச்சம்..(இந்தக் கூச்சம் என்ற சொல்லைக் கூச்சத்துடன் உச்சரித்து இருப்பார்கள் பாடகர்கள் )
கவனிச்சுக் கேளுங்க..ஒவ்வொரு சொல்லின் ஊடேயும் இடைவெளி இருக்கும்..அதை ஆமோதித்து ,அடுத்துச் சொல்ல மெல்லத் தூண்டுவது போல இடையிசை..எப்பவுமே தயக்கத்தில் பேசுபவர்களைத்தடை செய்யக் கூடாது..அதுவும் பேசவே யோசிக்கின்ற விசயத்தில்..இசை அதை நன்கு உணர்ந்து எவ்விதத்திலும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்பது போலச் சமர்த்தாக இருக்கும் ..எட்டி எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிக்கும் உறுத்தலின்றி .. பாடல் முழுக்க mindvoice தான்...அதனால சத்தமாப் பாடக் கூடாதுன்னு சொல்லிருப்பாரு போல :) சின்ன வயசுல இந்தப் பாட்டை டிவியில முதல் முத பார்த்தப்ப, வாயே திறக்காம எப்படிப் பாடுறாங்க என வியந்து ,நானும் முயற்சி செய்ததில் ஒரு ம்காரம் மட்டுமே தொண்டையில் இருந்து வந்தது :(
ஒரு நல்ல காரியம் என்றால் நல்ல சகுனம் வேணும் இல்லையா...46வது விநாடியில வரும் பாருங்க ஒரு கோயில் மணி ஓசை..டிவைனு :) அதன் பின்னான வயலின் கூட அநியாயத்துக்கு அடக்கி வாசிக்கும்..அந்த குட்டி குய்குய்குய் சன்னமாக ஒவ்வொரு சொற்களுக்கும் இடையில் வருவது பாடலுக்கு ராஜா செய்த அலங்காரம் :)
மனசு தடம் மாறும் அது நினைச்சா இடம் மாறும்..
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்..
இப்படியாகச் செல்லும் மனவோட்டங்கள்...பாடலாசிரியர் பற்றிக் குறிப்பிடா விட்டால் அது பெரும் அநீதி.. வைரமுத்துவின் சிறப்பே இது போன்ற இயல்பான வரிகள் தான்.. வார்த்தை விளையாட்டு,தமிழை ஆழமாகப் பயன்படுத்தி அந்நியப்படுத்திவிடாமல்,ஒரு யதார்த்தமானவனின் குரலாகவே ஒலிப்பது..காதலிக்கும் எல்லாருக்கும் கவிநயமாகப் பேச வந்துவிடுவதில்லை என்பதே நிதர்சனம்.. அதே சமயம் காதலிக்கும் அனைவருக்குமே பொதுவான உணர்தல் என்ற ஒன்று இருக்கும்..அதை உள்ளது உள்ளபடி சொல்லும் பொழுது தானாகவே முன் வந்து மனதுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது மக்கள் பாடலாக :P
சொன்னால் தோற்றுவிடுவோமோ என்றஞ்சியே சொல்லாமலேத் தோற்ற காதல்கள் இம்மண்ணில் தான் எத்தனை..வெளிப்படுத்தப் படாத அன்பு முழுமை பெறாமலே போய்விடுகிறது..ஒருவேளை சொல்லி இருக்கலாமோ, ஒருவேளை சொல்லாமலே இருந்திருக்கலாமோ என்ற நுண் உணர்வுகளைக் கடக்காத காதல் மனம் மிகக் குறைவு..
ஜெயச்சந்திரனும் ஜானகியும் தயங்கித் தயங்கி ,காதலர் மன ஓட்டங்களைப் பதிவு செய்திருப்பார்கள்.. ஆண் குரலே தயக்கத்துடன் வரும் பொழுது பெண் குரல் எப்படி இருக்கும்..வெளியேவே வராதே...அப்படியான குரல்.. பாறையில பூ முளைச்சு பார்த்தவுக யாரு...எனும் போது ஒரு மெலிதான வலி கொண்டும், அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு என சொல்ல மாட்டாமல் சொல்லும் அழகும், பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத் தானே தெம்பு இல்ல ன்னு ஒரு இழு இழுப்பாங்க..
ஜானகியை ஓர் ஆகச் சிறந்த பாடகி என்பேன்.. சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள் காண்பது எளிது.. பாடலின் அழகியலை உணர்ந்து அதை இன்னும் மெருகேற்றும் பாடகிகள் அரிது..அதிலே ஜானகி "அ.."
கடைசியில் கூட
காலம் வரும் வேலையில
காத்திருப்பேன் பொன் மயிலே
தேரு வரும் உண்மையில
சேதி சொல்வேன் கண்ணால " தான் முடிக்கிறாங்க :)
நிறையப் பணம் செலவழித்து வெளிநாட்டு லொகேஷன் இல்ல ஒரு பாலத்தின் மீது பீர் பாட்டிலோடு நண்பர் குழுவோடு நடனம் என்றில்லாமல் , அழகான காட்சியமைப்பு ஒளிப்பதிவு . பாடலில் வரும் கடலைப் பாருங்கள் ஏதோ சொல்ல வந்து வந்து தயங்கி, பின் செல்வது போன்றே தோன்றவில்லை? A to Z வரை எழுத்து ஒரு பக்கம் சத்யராஜ் மறுபக்கம் ரேகா...எதனால் தயக்கம் என்ற மொத்தக் கதையும் இறுதியாக வந்து நிற்கும்..பிரம்மாண்டம் என்பது இத்தகைய பாடல்கள் உள் நுழைந்து நம் மனதில் காலம் கடந்து ,நம்மில் விரிந்து இசைந்து ஒன்றி விடுவதும் கூடத் தான் :) எளிமையின் பிரம்மாண்டம் இந்தப் பாடல்
நமது திண்ணை என்ற தமிழ் மின்னிதழில் வந்த பதிவு இது..அதற்கான சுட்டி :)