Sunday, November 2, 2014

கத்தி..

              கத்தி படத்தைப் பத்தி கத்தி கத்தி எல்லாரும் பத்தி பத்தியா எழுதி முடிச்சிருப்பீங்க...இருந்தாலும் இது என் திருப்திக்கு :-) இன்னொன்று கத்தி படத்தில் என்ன என்ன லாஜிக் ஓட்டைகள் இருக்கு என்பதையும் இயக்குனரே யோசிக்காத அளவுக்கு யோசிச்சு யோசிச்சு எழுதி இருந்திருப்பீங்க..அதையும் ஒதுக்கறேன் ..இந்தப் பதிவின் நோக்கம் இந்தப் படத்தின் தாக்கத்தை மட்டுமே சொல்லுவது..

முதலில் விஜய் : இந்த மனிதர் எப்படி இப்படி உடம்பைப் பராமரிக்கிறார் அதுவும் இந்த வயதில்...இள வயது  என்பது இவருக்கு மட்டும் ரிவர்ஸ்ல வருது போல. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் நான் இவரை ரசித்த படங்கள் குஷி,வசீகரா,சச்சின்,துப்பாக்கி இறுதியாக இந்த கத்தி .நடிப்பிலும் அழகிலும் மெருகேறி இருக்கின்றார்.. அழகிய தமிழ் மகன் உட்பட இவர் இரட்டை வேடங்கள் ஏற்று எதுவும் உருப்படியாக இருந்ததே இல்லை. இந்தப் படத்திலும் ரெட்டை வேடமா?  ம்க்கும் என்றே ஓர் அலட்சியம் இருந்தது.. இருப்பினும் துப்பாக்கியில் முருகதாஸ் ஹிட் ஆக்கி விட்டதால் இந்தப் படத்தில் சிறிதாக ஒரு எதிர்பார்ப்பு எனக்கு. ஒரு ஜாலியான குற்றவாளியாக இருந்து மனமாற்றம் கிடைத்து, எதிர்பாராத சூழலில் ஒன்றி அதைச் செயல்படுத்துவது வரை குறையற்ற நடிப்பு. இரு வேறு குணாதிசியங்கள் கொண்ட பாத்திரத்தை உணர வைப்பதே நடிப்பின் வெற்றி..அதில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.நியாயமாக இந்தப் படத்துக்குத் தான் தலைவான்னு வச்சிருக்கணும்..ஆனா வச்சிருந்தா கத்திக்கு கத்தி வந்திருக்கும்.. :) 


ஒரு சில காட்சிகளில் செம மிரட்டல் ..இந்த கெத்து இந்த நடிப்பை இன்னமும் மெருகேற்றிக் கொண்டே போனால் அடுத்து அடுத்து வெற்றி தான் .
என் தோழிக்கு விஜயே பிடிக்காது.முருகதாஸ் இயக்கம் அதனால் தான் விஜய் ஜொலிக்கிறார் என்பாள்.விஜய் மட்டுமல்ல எந்த ஒரு நடிகனுமே மிளிர்வது இயக்குநரின் திறமையே .ஆயினும் அதைத் தாண்டி இயக்குநருக்கு முழு ஒத்துழைப்பு நடிகனிடம் இருந்து வேண்டும்.

ஒருமுறை நடிகர் நெப்போலியனிடம் யாரோ ஒருவர் சொன்னாராம்..இயக்குநர் சொல்றதைச் செய்யறது தான் நடிகனோட வேலை..இதுல நடிகனோட திறமைன்னு ஒன்னும் இல்லன்னு.அதுக்கு நெப்போலியன் "வகை வகையாக இலையில் சாப்பாடு இருந்தாலும் அதை எடுத்து உண்ணச் செய்ய மூளையின் கட்டளை வேண்டும்..அதுக்காவது  மூளை இருக்கணும்..நான் உங்களைச் சொல்லல என்று பதிலடி கொடுத்தாராம்..

சமந்தா : ஒன்றரை டின் மேக் அப் இருந்தாலும் சமந்தாவுக்கு ஒரு லைக் . ஆனா இந்தப் படத்துக்கு அவங்க தேவையே இல்லை. ஒரு சில காட்சிகள் என்றாலும் ரமணாவில் சிம்ரனுக்கு இருந்தது போல இல்லை. சும்மா டைரக்டர் சொன்னதைச் செய்த கிளிப்பிள்ளை. அவங்களா சிரிக்கிறாங்க அவங்களா அப்புறம் லவ் பண்றாங்க.. அப்புறம் அவங்களா feel பண்றாங்க எதுவுமே மனசுல ஒட்டல. கமர்ஷியல் என்ற காம்ப்ரமைஸ் போல சமந்தா..

இசை : சும்மா கொஞ்ச காலத்துக்கு அந்த செல்பிபுள்ள பாட்டைக் கேட்டு ஆடிக்கலாம்..வேறு பாடல்கள் மனசுல பதியல..அப்புறம் இந்தப் படத்துக்கு பாட்டு எதுக்கு ?ஓர் அழுத்தமான கதைக்கு எந்த இடத்தில் எந்தச் சூழலில் பாடல் தேவைப்படுமோ அங்க வேணும்..எந்த இடத்தில் இசை வேண்டும் என்பது மட்டுமல்ல எந்த இடத்தில் இசை மௌனம் காக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.ரமணாவில் எனக்கு அப்படித் தோன்றியது இல்லை (அந்தப்படம் பார்த்தப்ப இசை யார் என எனக்குத் தெரியாது என்பதே உண்மை) ஏன் ராஜாவைக் கொண்டாடுகிறோம் என்பதெல்லாம் புரிய திரை வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும்.அப்புறம் தம்பி இப்பல்லாம் இணையத்தில் போஸ்டர் விட்டாலே எங்க சுட்டதுன்னு பொசுக்குன்னு கண்டு பிடிச்சிடறாங்க...இதுல இசை வெளியீடு வந்த நாளில் இருந்து BGM ,தீம் ன்னு அத்தனையும் வெளியே வந்துருச்சு..இனி கண்டுபிடிக்க முடியாட்டிக் கூட ஒரிஜினல் என்றால் நம்பவே மாட்டேன் 

அடுத்து முருகதாஸ் : என்னதான் கோபி இது தன் கதை என நம்பும்படி சொன்னாலும் ஒவ்வொரு காட்சியுமா அவரே எழுதிக் கொடுத்திருப்பார்?அட்டைக்கத்தி,ஏழாம் அறிவு சமயத்தில் இவர் ஏன் வெளியே வரவில்லை என்ற கேள்வியும் இங்கே தவிர்க்க முடியாதது..
கார்பரேட் கம்பெனிகளால் நாம் சுரண்டப்படுவதை ஓரளவேனும் அழுத்தமாகச் சொன்னதில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். கம்யூனிசம் பற்றி எளிதாக ஒரு விளக்கம் .நான் ஏதோ படம் முழுக்க அதான் என நினைக்கும் அளவுக்கு இட்லி டைம் லைனை ஆக்கிரமித்து இருந்தது..ஓர் உதாரணத்துக்கு இட்லி வச்சு விளக்குனா, கம்யூனிசத்தை விட்டுபுட்டு பூராப் பேரும் இட்லியை தின்னுட்டுக் கிடக்காங்க..அப்புறம் எப்படியா இந்தியா வல்லரசாகும்?
துப்பாக்கி வில்லன் போல இந்தப் பட வில்லன் ஈர்க்கல. சும்மா வெள்ளைவெளேர் ன்னு அவிஞ்சும் அவியாத இட்லி மாவு கணக்கா..
ஈசியா பணம் கொடுக்கறாரு ஈசியா அடி வாங்கறாரு ஈசியா செத்தும் போயிடறாரு .

அதே போல 2G பத்தியும் பக்கம் பக்கமா வசனம் இருக்குமோன்னு பார்த்தா அதுவும் ஓர் உதாரணத்துக்கு வருது ..உடனே அந்த வசனத்தை விஜயே சொந்தமா யோசிச்சு சொன்ன மாதிரி இதைப் பத்தி பேசறியே ஏன் அதைப் பத்தி பேசல ஏன் இதுக்கு திராணி இல்லை...என்பது போலப் பேசுபவர்களின் நோக்கம் உண்மையில் விஜயை கீழ்மைப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அன்றி நிஜமான சமூக அக்கறை என்பதில்லை என்றறிக.

ஒரு படம் என்ன விசயத்தைப் பற்றி சொல்ல வருது அதன் சாராம்சம் என்ன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஏன் அதைச் சொல்லல ஏன் இதைச் சொல்லல..ஏன் அம்மா ஊழல் சொல்லல என்பதெல்லாம் உஸ்ஸ்  ....சாதாரண மக்களிடம் போய்ப் பேசுங்கள்...  எத்தனை பேரு ஜெ தண்டனை பெற்றதற்கு மக்கள் எண்ணம் என்னவென புலப்படும்..மக்களிடமே தவறுகள் மண்டிப் போயி கிடக்கு.இதெல்லாம் ஒரு அமௌன்ட்டா இதுக்குப் போயா ஜெயிலு என்றே தான் சொல்கின்றார்கள்..இந்த லட்சணத்துல ஏன் விஜய் அந்த வசனம் பேசலன்னு ஒரே feelings ..ஒரு நடிகனோட வேலை பிணமாகவோ, அல்லது தலைவனாகவோ கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே ..அதை ஒழுங்கா செஞ்சாரா இல்லையா என்பதை மட்டுமே ஏன் விமர்சிக்க முடியறதில்லை? உங்க ஆபீஸ்ல உங்க வேலை தவிர அக்கம்பக்கத்து டேபிள் காரன் வேலைய உங்கள செய்யச் சொன்னா உடனே செஞ்சுடுவீங்களா ? இப்படித்தான் சூர்யா fair &lovely விளம்பரத்துக்கு வரவும் உடனே அத்தனை சமூக அக்கறையாளர்களும் கருமையை சிறுமைப் படுத்துவதா எனப் பொங்கி எழுந்தார்கள்..என்னமோ fair &lovely இப்பத் தான் புதுசா அறிமுகம் ஆன மாதிரி..சச்சின் கூட பெப்சி விளம்பரத்துக்கு வந்திருக்காரு.இப்ப வரைக்கும் அத்தனை கிரிகெட் ப்ளேயர்களும் வந்துட்டு தானே இருக்காங்க..யாரும் அவங்கள கேட்பதில்லையே?ஆக உங்களுக்கு பிரச்னை விளம்பரத்தில் இல்ல.. சவுக்கு போன்ற நான் விரும்பும் தளம் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. 
படத்துல இப்படி வசனம் பேசுவாங்க..ஆனா ஒரிஜினலா வேற  எனச் சிரிப்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது பழைய படமான சினிமாப் பைத்தியம் என்றதைத் தான்..பாருங்க அப்பத் தான் உங்க கேள்விகளில் எவ்வளவு லூசுத்தனம் இருக்குன்னு தெரியும்..வாங்குன காசுக்கு நடிகன் நடிச்சா, கொடுத்த காசுக்கு அந்த நடிப்புக்காக கைத் தட்டலோ காறித் துப்பலோ செய்யுங்க .அதைத் தாண்டி பெர்சனல் விமர்சனங்கள் தேவையா?

அப்புறம் கோலா கெட்டது என்பது இப்பத் தான் தெரியுமா? கார்பரேட் கொள்ளைக்காரர்கள் என்பது ஏற்கனவே தெரியாதா?விவசாயம் பத்தி இப்பத் தான் அறிவு வந்ததா?நீர் மேலாண்மை பத்திக் கூட தெரியல..ஒரு நடிகன் வசனம் பேசவும் உனக்குப் பொங்குதா இத்யாதி இத்யாதி... நியாயம் தான் ஏற்கனவே தெரிஞ்சுருக்கணும் ..ஆனா தெரிஞ்சுக்கவே இல்லையே ஏன்? என்ன தேவையோ எதில் சீக்கிரம் பணம் சம்பாதிக்க முடியுமோ அதைப் படி..இதுவும் உதவும் அதைப் படி அதுவும் உதவும் இதைப் படி என ரெண்டு பக்கமும் திரை கட்டப்பட்ட குதிரை மாதிரி நம்மைச் செலுத்தியது யார் குற்றம்? எத்தனை பேரு நம்ம நாட்டில் படிச்சிருக்காங்க?படிச்சவங்க எத்தனை பேருக்கு கம்ப்யூட்டர் தெரியும் ? அதுல எத்தனை பேரு இணையம் பற்றித் தெரியும்?இந்த fb twitter பிரபலமானது இந்த நான்கு வருடத்திற்குள் தான் . அன்றாடம் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளாய்ப் பறந்து சம்பாதிக்கும் கீழ்தட்டு &நடுத்தர மக்களோடு பழகி இருக்கீங்களா? எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது சில காலம். அதில் நூற்றுக்கு பத்து பேருக்கு மட்டுமே SMS படிக்கத் தெரியும்..மற்றவர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.ஏன் வந்த SMS ஐ எப்படி நீக்குவது என்று கூடத் தெரியாமல் நானூறு ஐநூறு என இன்பாக்ஸ் நிறைந்து வழிய வைத்திருப்பார்கள்.ஈ மெயில் தானே நீங்க ஜி மெயில் ன்னு சொல்றீங்களே ன்னு நமக்கு அறிவு இருக்கா என சீரியஸா சோதிப்பார்கள்.

. பல குடும்பத்தில் முதல் பட்டதாரி இப்பத் தான் வந்திருப்பாங்க.. அவங்களுக்கும் அது சார்ந்த அறிவு மட்டுமே இருக்கும்..பொது அறிவுக்கான தேடல் எது , நாட்டுக்கு நல்லது எது கெடுதி என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு என்பது இருக்காது.. தன் வீடு தன் குடும்பம் என்ற சுயநலம் மட்டுமே தமிழகம் அமைதிப் பூங்கா என குறிப்பிட முக்கிய காரணம்.சமீபத்தில் கேரளா சென்றிருந்தேன்.. வளர்ச்சி அளவில் தமிழகத்தை விட முப்பது ஆண்டு பின்னோக்கி இருக்கிறார்கள். ஆனால் அதை விட இயற்கையைப் போற்றுகிறார்கள் . ஒவ்வொரு வீட்டிலும் தென்னை.இயன்றவரை கடைகளில் துணிப்பை தான். சாலையில் கூட குப்பை பார்ப்பது அரிது.(கேரளாவில் குப்பை கொட்டினால் அபராதம் அதனால் தமிழக எல்லையில் வந்து மொத்தமாக கொட்டி விட்டுப் போகிறார்கள் நமக்குத் தான் சூடு சொரணை கிடையாதே ) சீமக் கருவேல மரம் பார்க்கவே முடியல.. ஆனால் தமிழகத்தில் அதுதான் ஆக்கிரமித்து இருக்கிறது. .சீமக் கருவேலத்தின் தீங்கு இங்கே எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?


படித்தவர்களிடையே அதுவும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடையே தான் ஓரளவு விஷயம் பரவி இருக்கு.. மற்றபடி சாமான்ய மக்களிடம் போய் சொல்லிப் பாருங்க காதுலயே வாங்க மாட்டாங்க..பலருக்கு தண்ணி கஷ்டத்துக்கு காரணம் மழை வராதது தான் என மழைய சபிப்பாங்க..ஆனா அதற்கான காரணத்தை ஆராய நேரமிருக்காது அவங்களுக்கு. 

இந்த மூஞ்சிபுக் இரண்டு வகைப்படும்..ஒன்னு காரசாரமா விவாதிச்சு மண்டைய ஒடைச்சு ,விசயங்களைப் பகிர்ந்து அஜித் விஜய் கிண்டல் செஞ்சே லைக் வாங்கும்..இன்னொன்னு உலகமே உருண்டு அழுதாலும் வந்தமா போட்டோ போட்டமா,  லைக் வாங்கினமா தின்னத போட்டோ பிடிச்சமா ஊருக்குப் போறேன் வாரேன் குட் நைட்டு ன்னு சிவனேன்னே திரியும்..அதுங்களும் படிச்ச கூட்டம் தான் ஆனாலும் முக்காவாசி forward மெசேஜ் படிக்காமலே forward பண்றது இவிங்க தான்..இந்த இணையம் பயன்படுத்தும் கூட்டம் கூட நம்ம மக்கள் தொகையில் அதிக பட்சம் பத்து சதவீதம் தான் என்பது என் துணிபு..இப்படி இருக்கிற மக்களுக்கு இணையத்தில் நாம் வைக்கும் பொங்கல் தெரியாது..அவங்களுக்கு டிவி,செய்தித்தாள் தான் ஊடகம்.. ஆனால் அவங்க என்ன செய்யறாங்க.. கத்தி படத்துக்கு தின தந்தி என்ன விமர்சனம் போட்டாங்க என அறிய ஆவலா இருக்கு :) முக்காவாசி கள்ளக் காதல் மீதி நேரம் ஆளும் கட்சி ஜிங் சக்..எந்தக் கட்சி வருதோ அந்தக் கட்சிக்கு ஆதரவு என பிழைக்கத் தெரிந்தவர்கள்..நூதனம் என்ற சொல்லைக் கண்டுபிடிச்சதே இவிங்க தான்..நூதன முறையில் தற்கொலைன்னு போடுவாங்க .திருட்டு, தற்கொலை, கொலைய விட எப்படி நூதனமா அதை செஞ்சிருக்கான் என ரசிப்பது போன்றே இருக்கும் இவிங்க செய்தி.அப்புறம் தினமலர்..சாதிப் பற்று அதிகம்..தின கரன் கேட்கவே வேணாம் ..சரி வார இதழ்..அட நம்ம ஜூவி...கலைஞர் வீடு,ஜெ கொடநாடு வரை இவங்க சிசிடிவி ரொம்பப் பிரபலம்..விகடன் மீது பெரும்மதிப்பு இருந்தது. (விகடனை விமர்சிக்க ஆரம்பித்த பின்பு என் ட்வீட் வலைபாய்ந்ததே இல்லை ) ஒரு காலத்தில் பத்திரிகை சுதந்திரம் இருந்தது..தொன்னூறுகளில் இருந்து இந்த 2௦௦௦ இறுதி வரையிலும் கூட.அதனால் தான் திமுக அதிமுக ஊழல்கள் தெரிய வந்தது..ஆனால் இப்போ இல்ல.தங்கள் தேவைக்கேற்ப செய்தி போடுகிறார்கள்..சரி டிவி பக்கம் போவோம்..கலைஞர் ,ஜெயா , சன் டிவி மாறி மாறி ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தா பைத்தியம் பிடிச்சிரும்..இப்படி ஊடகங்களிலும் கள்ளத்தனங்கள் மலிந்து கிடக்கு.. ஓர் ஊடகம் நினைத்தால் மலாலாவை உலகறியச் செய்ய முடியும்..நிர்பயாவுக்காக நாட்டையே வருந்த வைக்க முடியும்..ஆனால் இசைப்ரியாவை சிறிய பெட்டிச் செய்தியாக்கி விடவும் முடியும்..இரோம் ஷர்மிளா பற்றி நான் படித்தது என்றோ வாரமலரில் சிறிய பெட்டிச் செய்தியாகத் தான்..இந்த லட்சணத்துல நாம என்ன நல்லது கெட்டது தெரிஞ்சுக்க முடியும்?

          கரென்ட் கட் பல மணி நேரம் செஞ்சு ஒட்டுமொத்த தமிழ்நாடே தவிச்சப்ப சென்னை சிட்டி மட்டும் சொகுசா இருந்ததே..அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் போனா போகுதுன்னு ரெண்டு மணி நேரம் கட் செஞ்சதுக்கே சென்னைக்காரங்க அங்கலாய்ப்பு செஞ்சாங்களே..?சென்னையில் கார்பரேட் நிறுவனங்களுக்கு கரென்ட் வாரி வழங்கிட்டு இந்தப் பவர் கட்டினால் எத்தனை சிறுதொழில்கள் முடங்கிப் போயின எனத் தெரியுமா?அது சென்னைவாசிகளுக்குப் புரியுமா? மதுரைக்கு மிக அண்மையில் உள்ள கிராமத்துக்கு அந்தவேளையில் சென்றிருந்தேன்..ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் அதுவும் விட்டு விட்டு பவர் வரும் என்ற பொழுது எப்படி இவங்க இங்க இருக்காங்க என்றுதான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதெல்லாம் சொல்வது ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் சினிமா காரனிடமே எதிர்பார்க்கிறீர்கள்..ஏன் உங்களுக்குத் தானா புத்தி வர மாட்டேங்குது என்பவர்களுக்குத் தான்..சினிமா என்பது ஒரு மிகப் பெரிய ஊடகம்..செய்தித் தாளோ ,டிவியோ சினிமாவைத் தவிர்க்கவே முடியாது..மக்களிடம் சினிமா ஊறிப் போயிருக்கு..அது இன்று நேற்று அல்ல..முதன்முதலில் திரையில் நகரும் ஆட்களைப் பார்த்த காலத்தில் இருந்தே.. சினிமா நம் மக்களின் ஒவ்வொரு காலகட்டத்தையும் தன்னுள்ளே ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றது..அறுபதுகளில் மக்கள் எப்படி இருந்தாங்க எழுபதுகளில் எப்படி இருந்தாங்க என்பதற்கான சாட்சியாக சினிமா இருந்திருக்கின்றது.. சினிமா மூலமாக ஒரு விஷயம் மிகச் சரியாக சொல்லப்படும் பொழுது அது சென்றடையும் வீரியம் அதிகம். இந்தக் குளிர்பானம் சார்ந்த விஷயங்கள் விவசாயம் இதெல்லாம் இப்பவாவது சொன்னாங்களே என்று தான் தேற்றிக்கொள்கிறேன்..

என் தந்தை அலுவல் பொருட்டு நகரத்தில் இருக்க நாங்கள் கிராமத்தில் இருந்திருக்கிறோம்..வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்க்க நீங்க சுற்றுலா சென்றிருப்பீர்கள்..ஆனால் அதை மிகச் சாதரணமாக எங்கள் பொட்டைக் காட்டில் ஒரு மழைப் பொழுதைத் தாங்கி சிலிர்த்திருந்த காலையில் கண்டிருக்கிறேன். ஊர் முழுக்க பச்சைப்பசேல் என்றிருந்தது..ஏகப்பட்ட பறவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது மண் முழுக்க தரிசாக கிடக்கிறது..பசுமை குடிகொண்டிருந்த இடங்களில் வெயில் மட்டுமே எங்கும் விரவிக் கிடக்கின்றது..விவசாயம் செய்பவர்கள் வெகு சிலரே.அதற்கும் களை எடுக்க ஆளில்லை.. (நூறு நாள் திட்டத்தில் வெறும் கையெழுத்துப் போட்டு வேலை பார்க்காமலே நூறு ரூபா கிடைக்குதே சிரமப்பட்டு களை எடுக்க யார் போவா ?) கேரளாவைப் பார்க்கப் பார்க்க ஒரு காலத்தில் இப்படித் தானே இருந்தது தமிழகமும் என்ற ஏக்கமும் இப்ப அப்படி இல்லையே என்ற வயித்திரிச்சலும் மட்டுமே இருக்கு. பல ஏக்கர் நிலம் வெறும் ஆயிரம் ரூபாவுக்கு எங்கள் கிராமத்து அண்மையில் இருக்கும் மில் வாங்கிப் போட்டிருக்கு..நாம சாப்பிடும் சாப்பாட்டில் அதிக லாபம் பார்த்தது இடைத் தரகர்களாகத் தான் இருக்குமே ஒழிய அதைச் செய்த விவசாயியாக இருக்க மாட்டார்.

இவங்க ஜஸ்ட் நடிக்கிறவங்க,வசனம் பேசி காசு வாங்கிட்டுப் போவாங்க,இயக்குநரும் லைக்காவுக்கு பணம் சம்பாதிச்சுக் கொடுத்திட்டாரு..ஒத்துக்கறேன்..ஆனால் இது போன்ற சேதி அவசியம் தேவையான சூழலில் அதைக் காசாக்கிட்டுப் போகட்டுமே..உடனே இதைக் கேட்டு எல்லாரும் திருந்திடுவாங்களா ..உடனே விவசாயம் மலர்ந்திடுமா,கோலாவ நாம தடுத்திடுவோமா எனக் கேட்பவர்களுக்கு அதெல்லாம் நடக்காது..ஆனால் அவற்றைப் பற்றிய யோசனையாவது வந்திருக்கக்கூடுமே..சூரியூர் என்ற கிராமம் நிஜமான தன்நூத்து என்பது கத்தி படம் வெளிவந்த பிறகு தானே தெரிஞ்சிருக்கு..அதன் பிறகு தானே வாட்சப் விகடன் என அந்தக் கிராமம் பத்தி நமக்குத் தெரிய வருது..  ரவுடித் தனம் செய்யும் ஹீரோ அதை லைக்கி லவ்வும் காதலி என்றே உழன்ற சினிமாவில் இருந்து ந.கொ.ப.கா..சூதுகவ்வும் என அடுத்த தளத்திற்கு இப்பத் தான் தமிழ் சினிமா நகர்கின்றது..அதுல கத்தி போன்ற முயற்சியையும் வரவேற்கிறேன்..
இது மட்டும் ரஜினி செய்திருந்தா எப்படி இருந்திருக்கும் ச்ச மிஸ் ஆகிடுச்சே எனத் தோனுது..(குறிப்பா அந்தச் சில்லறைக்காசு சண்டைக் காட்சியில் gate கிட்ட  அடிச்சுப்போட்ட அத்தனை பேரு மேலயும் உட்கார்ந்துகிட்டு கேசுவலா பார்க்கிற ஸீன்ல ரஜினிய கற்பனை பண்ணிப் பார்த்தேன் ப்ப்பா :) அவர் செய்தால் இதற்கான reach அதிகம்..லாஜிக் எல்லாம் பார்க்கவே மாட்டோம். (ஆனால் ஒரு ரொம்பக் கெட்டவன் அவனை எதிர்த்துப் போராடும் நல்லவன் என்ற மசாலாவில் இருந்து ரஜினியும் வெளியே வர மாட்டார் ) 

பலருக்கு இது விஜய் படமாக அமைந்து போனதே மாபெரும் உறுத்தலாகி விட்டது போலும்.. இந்தப் பட போஸ்டர் வந்ததில் இருந்து டிரைலர் வந்த நாள்வரை விதம் விதமான கலாய்ப்புகள்.. ஆனால் அதை எதிர்கொண்டு விட்டது படம்..அதனால் கதைத்திருட்டுக்கு கவலைப்பட ஆரம்பிச்சாச்சு (ஒருவேளை கோபி பக்கம் நியாயம் இருந்தால் நிச்சயம் அவர் ஜெயிக்கணும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ) 
குழாயில் எப்படி மூனு நாள் கல்கத்தால இருந்து விஜய் கூடவே வந்த அந்த ரெண்டு பேரு என்ன ஆனாங்க  இப்படி லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வச்சுட்டு ,
மீடியாவோட இன்னொரு முகத்தைக் கிழிச்சதுக்கும் ,மீத்தேன் பற்றிய ஒரு வசனத்திற்காகவும் , கார்பரேட்காரர்கள் பற்றிய  நிதர்சனத்திற்கும் ,இத்தனை மணி நேரம் செலவழிச்சு ,சோம்பேறியா இருந்த என்னைப் பதிவு எழுதியே ஆகணும் எனத் தூண்டியதற்காகவும் 

கத்தி டீம் க்கு ஒரு பெரிய ஷொட்டு...