தேனியில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் வீரபாண்டி..முல்லை ஆற்றின் புண்ணியத்தில் செழிப்பான அழகு.
உசிலம்பட்டி தாண்டிவிட்டால் ஆண்டிபட்டி,தேனி ,போடி,கம்பம்,பெரியகுளம் , வருசநாடு ,மேகமலை ,வீரபாண்டி,என விவசாயம் சார்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ஊர்கள் அதிகம்.வேகாத வெயில் அடிக்கும் சொந்த ஊரையே இவ்ளோ சிலாகிக்கிறோமே இது போன்ற அழகிய ஊர்களில் பிறந்தவர்களுக்கு எவ்வளவு கர்வம் இருந்தாலும் தகும் :) (அருகிலேயே கும்பக்கரை மற்றும் சுருளி அருவி கொண்ட இடங்கள் ...சுருளி வானுயர்ந்த மரங்கள் கொண்டது ).. கேரளாவிற்கு இந்த ஊர்களில் இருந்துதான் காய்கறிகள் செல்கின்றன..இங்க இருக்கும் விவசாயிகள் மட்டும் அதை அனுப்பாவிடில் அங்கே காய்கறி என்பதே இருக்காது..அல்லது விலைவாசி எகிறிக் கிடக்கும் என்பது கேள்வி.
ஒரு காலத்தில் தமிழ்த் திரைப்படங்களில் டூயட் காட்சிகளில் இந்த முல்லை ஆறு தான் முக்கிய பங்கு வகித்திருக்கின்றது.குறிப்பாக தேனிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கங்கை அமரன்,பாரதிராஜா படங்களில் தேனி மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் தான் படப்பிடிப்பு.. இங்கே உள்ள கௌமாரியம்மன் மிகப் பிரபலம்..
சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அனைவருமே சேர்ந்து கொண்டாடும் திருவிழா இது. அதனால் விழாக் காலங்களில் கூட்டம் ஜேஜே வென இருக்கும் .கங்கை அமரன் எழுதிய ( தகவல் உதவி கூகிள் )பூவரசம்பூ பூத்தாச்சு பாடலில் வரும் சில வரிகளை நினைவூட்டுகிறேன் உங்களுக்காக
"வீரபாண்டி கோயிலிலே வருகிற தை பொங்கலிலே வேண்டினபடியே பொங்கலும் வைப்பேன் கேட்டதையெல்லாம் கொடுக்கிற சாமிக்கு "
முன்பொரு காலத்தில் மதுரையிலிருந்து போடி செல்லும் ரயிலில் நீங்கள் பிரயாணித்து இருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும்..
சென்ற ஆண்டு முல்லை ஆற்றில் குளித்த அனுபவம் இனி வருடாவருடம் சென்றே ஆகவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்திவிட்டது.அக்கினிசட்டி எடுத்தல்,அலகு குத்துதல்,காவடி,சேத்தாண்டி வேடம் (உடல் முழுக்க சேறு அப்பிக் கொள்ளுதல் அதுவும் ஒரு அழகு தான் பார்க்க ), ஆண்கள் பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துதல் ,தேர் இழுத்தல் என வீரபாண்டி திருவிழா நேரத்தில் அல்லோகல்லோலப்படும் .அதிலும் சிலர் அங்கே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் தருணம் மட்டும் கொட்டடிக்க ஆள் வைத்துக் கொள்ளுவார்கள்...ஆற்றில் இருந்து கோவில் செல்லும் வரை சும்மா தாரை தப்பட்டை கிழியக் கிழிய நடனம்..
சாமி வந்து அருள் கொண்டு ஆடுவது என்ற நம்பிக்கையைத் தாண்டி, பலர் அச்சம் விட்டு ஆடும் ஆசையை இத்தருணத்தில் தீர்த்துக் கொள்கிறார்கள் என்றே அவதானிக்கிறேன்..நாற்பது கூட்டலில் உள்ள ஒரு அம்மணி அக்கினிச் சட்டி கொண்டு மகிழ்ந்து சிரித்துக் கொண்டே ஆடிய நடனம் இன்னமும் கண்ணுக்குள்.. ( மன்னிக்க அந்நேரம் ஆவென வேடிக்கை பார்த்ததில் இந்த நிகழ்வுகள் எல்லாம் கண்களில் மட்டுமே படம் பிடித்தேன் கேமரா மறந்தே போயிந்தி.. :)
வழக்கம் போல காவல் துறையினர் ஆங்காங்கே விழா ஒழுங்குடன் நடக்க பிரம்மப் பிரயத்தனப் பட்டு கூட்டங்களை வழி நடத்தினார்கள். தங்கும் மண்டபத்தில் தான் தகராறு.மெனக்கெட்டு ஒரு மாதம் முன்பே பதிவு செய்தால் இவர்கள் இன்னும் நாலு பேருக்கு அதே நாளில் பணம் வாங்கி மண்டபத்தை நான்காகப் பிரித்து அமர்த்தினார்கள்.மழை நேரம் குழந்தை குட்டிகளுடன் வெளியே செல்லவும் முடியாமல் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
மாரியம்மன் என்பதால் கிடாவெட்டு பலப்பட்டது..ஜாலியாக அசைவம் உண்டு விட்டும் சாமி பார்க்கலாம்..சாமி கண்ணைக் குத்தாது :)
கோவிலில் இருந்து பக்கத்தில் தான் முல்லை ஆறு..
வேறெங்கும் இல்லாத நீர் ஊற்றி வேண்டுதல் செலுத்துவதும் இங்கு உண்டு.அதற்கும்,அக்கினி சட்டி எடுக்க,ஆயிரம் கண் பானைகள் என அனைத்தும் ஆற்றங்கரையிலேயே ஒரு சந்தையில் விற்கின்றது
வெறுமனே நாற்பது ரூபாய்க்கே அழகழாய்ப் பானைகள் விற்கின்றார்கள்..மீன் குழம்பு வைக்கவென்று அண்ணி போன வருடம் அகன்ற பானை வாங்கினார் . . அருமையாக இருக்கின்றது என்று சொல்லி இந்த ஆண்டும் இரண்டு பானை வாங்கினார்.
நாங்கள் சென்ற நேரம் நல்ல மழை..இருப்பினும் காற்று இல்லாத மழை என்பதாலோ என்னவோ ஆற்றில் குளித்த ஈரத்துடன் இருந்தாலும் குளிரே தெரியவில்லை. அந்த மழையிலும் அவ்வளவு கூட்டம் .
நீண்ட வரிசையும் கூட்டமும் இருந்தாலும் அம்மன் தரிசனம் நன்கு கிடைத்தது மகிழ்ச்சி..சில பல வேண்டுதல்களை வைத்து விட்டு வந்திருக்கின்றேன்..:-)
முல்லை ஆற்றின் படங்கள் சில உங்களுக்காக :)
இதை விட மிகச் சிறப்பான இடங்கள் நிறையவே இருக்கலாம். ஆனால் ஏன் இந்த இடத்தின் மீது தனி பற்று என்றால் மண் மணம் மாறாமல் அப்படியே இருக்கும் திருவிழா,பழைய எண்பது மற்றும் தொன்னூறுகளில் நாம் அதிகம் ரசித்த பல படங்கள் மற்றும் பாடல்கள் வழியாக இன்றும் மனதில் நிற்கும் காட்சிகள் , நெரிசலான நகர வாசத்தில் இருந்து ,நினைத்தால் தொட்டுவிடக் கூடிய தூரம், மனத்திற்குப் பிடித்த தெய்வம் , இப்படி ஒரு உணர்வு சார்ந்த இடமாக இதனைப் பார்ப்பதால் இன்னமும் மனதிற்கு நெருக்கமான இடத்தில் இருக்கின்றது.
கொண்டாட்டமான திருவிழா,அருமையான முல்லை ஆறு,அழகான சுற்றுப்புறம் நல்ல நினைவுகளுடன் , என் வேண்டுதல்கள் நடந்தாலும் நடக்காவிட்டாலும் முல்லை ஆறுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்றே ஆக வேண்டும் என்ற உறுதியும் உடன் எடுத்து வந்தேன் :)