Sunday, December 28, 2014

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் -2014- பாகம் 1

ஏதோ 2012 ஆம் ஆண்டு இறுதியில் மனத்தைக் கவர்ந்தவர்கள் பற்றி ஆத்மதிருப்திக்காக எழுத ஆரம்பித்தது.. அதிலே அவர்களுக்கும் ஒரு சிறு மகிழ்ச்சி கிடைத்தது எனக்கு இன்னமும் உற்சாகம் தந்தது இது போன்று எழுத..  நான் சொல்வதாலோ அன்றி அவர்கள் நன்றி நவிலலோ எங்கள் இரு தரப்பு வாழ்க்கையில் எள்ளளவும் பயனுறப் போவதில்லை.  போலவே அன்று மனம் கவர்ந்தவர்கள் எல்லாம் என்றுமே கவர்ந்தவர்களாக இருப்பார்கள் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.    கடந்த இரு ஆண்டுகள் எனக்குப் பிடித்தவர்கள் பட்டியலில் இருந்தவர்கள் தாமாகவே முன் வந்து , தாங்கள் அதற்குத் தகுதியில்லை என்பதை ஒரு வலியோடு உணர்த்திச் சென்றார்கள்..


ஆமாம்..இவங்க கொடுக்கிற நல்லவங்க பட்டம் வச்சுத் தான் வாழப் போகிறோமா சரிதான் போடி என்பவர்களுக்கு நான் சொல்வதெல்லாம்

" நான் இழந்தது என் மீது மரியாதை அற்றவர்களைத் தான் ; ஆனால் நீங்கள் இழந்தது உங்கள் மீது மரியாதை வைத்திருந்த ஒருத்தியை "

எதற்குமே கவலை இல்லை என்பவர்கள் ஏதேனும் ஓர் இடத்தில் ஓங்கி அடி வாங்கும்போது முன்னம் செய்த அத்துணைப் பிழைகளும் கண்முன் வந்துபோகும் என் துணிபு.

தனிப்பட்ட முறையில் ட்விட்டர் பற்றிய அனுபவம் தனிப் பதிவாகவே போடும் அளவுக்கு இருப்பதால் இங்கே பிடித்தவை பற்றி மட்டும் பகிர விழைகிறேன்:)   இவ்வாண்டு பிடித்தவர்கள் என எவரை எடுப்பது எவரை விடுப்பது எனக் குழம்பும் அளவுக்கு ஏகப்பட்ட ட்ராபிக். எவரையும் பிடிக்காமல் பின்தொடர்வதே இல்லை என்கிற முன்மொழியோடு அதிகம் ஈர்த்தவர்கள் பற்றி சில :) 

@Thiru_navu  இங்கே நான் கருத்துகளில் வெகுவாக முரண்படும் ஒருவர்..பின் எப்படிப் பிடித்தது என்றால் காரணமும் அதுவேதான்.. சண்டையிடாமல் என்னோடு என் மாற்றுக் கருத்துக்களை ஒரு புன்னகையுடனையே என்னால் ஒருவரிடம் பகிர முடிகிறது என்றால் அது இவர்தான்.. இருவரும் மாறிக் கொள்ளப் போவதில்லை எனத் தெரிந்தும் பேசுவோம்..அது எல்லை மீறாமல் நிறுத்திப் புன்னகைத்து விடுவார் :)

"ட்வீட் போடாத நாளில் தான் நிறைய followers இப்போத் தான் புரியுது நான் நானாத் தான் கெட்டுப் போயிருக்கேன் " என்ற இவர் ட்வீட் பார்த்து புன்னகைத்துப் பின் தொடர்ந்தது :)

@DiNationS_   அநேகமாக இவரை அனைவருக்குமே பிடிக்கும் என்றே நினைக்கின்றேன்.. சமீபமாகவே தொடர்ந்தாலும் ,  எனக்கு mention tab மூலம் நன்கு பரிட்சயம்..  எதற்கும் கருத்து ஆழமாகச் சொல்லாமல் எப்பவும் ஒரு safe mode லயே திரிபவர் :)  கலகல பேர்வழி ..  சுமைலி மட்டுமே போட்டுக்கிட்டு திரிஞ்ச ஆளையும் நொந்துடிவிட்லான்கர் போட வைத்த பெருமை இசைச் சண்டையாளர்களையே சாரும் :-))

@bommaiya  யதார்த்த ட்விட்டர் .."தாஜ்மஹால் கட்டுன ஷாஜகானைத் தான் உலகம் நினைக்குது ..பொண்டாட்டிக்காக மாசாமாசம் EMI கட்டுற கணவர்களை அல்ல "என்றொரு நச் ட்வீட் மூலம் என்னை ஈர்த்தவர்.. சமீபமாக லிங்கா ரஜினியின் உறவுகளை ஆராய்ந்து அதிகம் பாராட்டு பெற்றவர்.

@2nrc   பெரிதாக ஈர்க்கும் கீச்சுகள் இல்லை எனினும் நல்ல மனிதர்.. எவரையும் காயப்படுத்திப் பார்த்ததே இல்லை.   சமையல் விரும்பிகள் தாராளமாகப் பின்தொடரலாம்..   இவரது நளபாகம் தளத்தில் நிறைய இருக்கின்றன. ஒருமுறையேனும் மும்பை சென்று இவரைச் சமைக்கச் சொல்லி சாப்பிட்டு வரும் அளவுக்கு ஆசை இருக்கிறது :)

 இந்தக் கோரஸ் புதிரில் மறக்கவே முடியாத நபராக இவர் @kuumuttai இருப்பார் :)   இவர் பதிலை மட்டும் வேகமாக ஸ்க்ரோல் செய்து படிப்பதில் ஓர் அலாதி இன்பம் .. ஏகப்பட்ட பதிலைப் போட்டு பிடிச்சதை எடுத்துக்கிடுங்க என்ற தாராள மனப்பான்மையில் ஆரம்பித்து , ராஜா கிவிஸ் ல ரஹ்மான் பாட்டு போட்டு அதிரடி செய்யும் வரை இவரது ரகளைகள் ஏராளம் :))  போற போக்குல எல்லா ரசிகர்களையும் வம்பு இழுத்துட்டு , சோடா பாட்டில் சைக்கிள் செயின் அறுந்த பிறகு  ரிலாக்ஸ் ஆ வருவாரு சாக்கிரத :)

ட்விட்டர் வந்த புதிதில் இருந்தே அறிமுகம். சினி டேட்டாபேஸ்ல இன்னும் ஒரு கெட்டி  @kaarthikarul 

இங்கே புகைப்படக் கமெண்ட்களில் சிறந்தவர்களாகவும் நல்ல பொழுதுபோக்காளர்களாகவும் இவர்களைச் சொல்லலாம் @su_boss2 @roflkanth @MrElani  @karuthujay 

@Mr_vandu  நல்ல பொழுதுபோக்கும் நகையுணர்வும், குறிப்பாக எழுத்துப் பிழை சொன்னால் கோச்சுக்க மாட்டாருங்க :-))
ஒரே மாதிரி ஏழு
இவருடைய  இன்னொரு ட்வீட் லிங்க் தேடினேன் கிடைக்கல "இன்னிக்கு நீ ட்வீட் போடுவ நாளைக்கு உன் மவன் ட்வீட் போடுவான் ஆனா முதல்ல ட்வீட் போட்டு நாசமாப் போனது நானு இதெல்லாம் பெருமையா கடமை"

  அருமையான தமிழ்ப்புதிர்போட்டி அதிலும் ஏகப்பட்ட தகவல்கள் எளிமையான விளக்கம் @naatupurathan 

@sivaramang பாடல்கள் வெறும் சினிமா என்ற அடையாளத்தோடு நில்லாமல் நம் வாழ்க்கையில் எந்த அளவுக்குப் பின்னிப் பிணைந்தவை என்பதை அனுபவத்தின் வாயிலாக சுவராசியமாகச் சொல்வதில் வல்லவர்.   இவரின் முகநூல்ப் பதிவுகளைத் தேடிப் படியுங்கள்..  அல்லது இவரது புத்தகம் முன்னேர்ப் பதிப்பகம் வாயிலாக வெளி வரும்போதே பெற்றுக் கொள்ளுங்கள்.. உங்கள் பணத்திற்குத் தகுதியானதாகவே இருக்கும் என்கிற உத்தரவாதம் அளிக்கிறேன்.

 அரசியல்சார் கீச்சுக்கள் விரும்புபவர்களுக்கு இவர் @saysatheesh  கீச்சுகள் நல்ல தீனி.. கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு இவர் தான் பிள்ளையார் சுழி என அறிவீர்களா ?:)

தமிழில் வெகு நேர்த்தியாக இவர்கள் @tamilLogos வடிக்கும் லோகோஸ் ஈர்க்கிறது.. ஆண்ட்ராயிட் போன் பற்றிய தகவல்களுக்கு ==> @TamilDroid  
கிருஷ்ணனைப் பிடிக்காதவர்களுக்குக் கூடப் பிடித்து விடும்.. இவர் @keshav61  வரையும் கிருஷ்ணன் ஓவியங்களைக் கண்டால்..   கிருஷ்ணர் எங்கே என்றால் இவர் விரல் நுனிகளில் விளையாடுகிறார் என்றே சொல்லுவேன் .பெண் உருவங்களில் கூட கிருஷ்ணனின் பிம்பமே பிரதிபலிக்கிறது :)


வாட்டர் கலர் பெயிண்டிங் க்கு @tparavai என்றால் ஆயில் பெயிண்டிங் @PrasannaArtz  மிகச் சிறந்த ஓவியர் ..அதிலும் அப்படியே தத்ரூபமாக வரைவதும், ஓவியத்தில் உயிரோட்டம் உணரச் செய்வதும் இவருக்குக் கை வந்த கலை :-)

@iamvaalu  பெண்களில் , அரசியல் கமென்ட்கள் ஆண்களுக்கு இணையாகப் போட வல்லவர்.. காங்கிரஸ் மொத்தமும் தோற்ற பொழுது வெகு டைமிங்காக இவர் அடித்த "டேய் தகப்பா " போட்டோ கமென்ட் ட்விட்டர்,fb ,வாட்சப் என மிகப் பிரபலமாக வலம் வந்தது.. அதே போல கேப்டனின் தொகுதிப் பங்கீடுக்கான ,சின்னவனுக்கு பேன்ட் பெரியவனுக்கு கறுப்புக் கண்ணாடி கருப்பு கேட்கறான் என்ற டைமிங் டயலாக் -ம் .. ஏனோ ஜெ விசயத்தில் மட்டும் அதிகம் அடக்கி வாசித்ததோடு அல்லாமல் அத்தோடு இங்கே ஆளையே காணோம்..மேடம் வி மிஸ் யூ :)

நான் ரசிக்கும் பெண் கவிஞர்கள்   @dhivisdreams   @i_Soruba  நாலு வரி எழுதவே எனக்கு நாக்கு தள்ளுது..இவங்க நீளம் நீளமா எழுதறாங்க..அதுல திவி உங்களைப் பார்த்து தான் மேடம் கவிதை எழுத ஆரம்பிச்சேன் ன்னு சொன்னப்ப ,கண் வேர்த்தாலும் ,பொறாமையில் கட்டை விரலைக் கொடு என்று கேட்கத் தோன்றியது.  அவரது மோகத் திணை கவிதை பார்த்து :) ஏன் எனில் அதில் வரும் ஒவ்வொரு கற்பனையும் கண்டு,சொற்களைத் தேடிக் களைத்திருந்தேன் :)

படிக்க இலகுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும்,நீளம் கருதியும் பாகங்களாகப் பிரித்திருக்கிறேன் ..பொறுத்தருள்க :)


பிடித்தவர்கள் பட்டியல் தொடரும் .... :-)) 

Sunday, November 2, 2014

கத்தி..

              கத்தி படத்தைப் பத்தி கத்தி கத்தி எல்லாரும் பத்தி பத்தியா எழுதி முடிச்சிருப்பீங்க...இருந்தாலும் இது என் திருப்திக்கு :-) இன்னொன்று கத்தி படத்தில் என்ன என்ன லாஜிக் ஓட்டைகள் இருக்கு என்பதையும் இயக்குனரே யோசிக்காத அளவுக்கு யோசிச்சு யோசிச்சு எழுதி இருந்திருப்பீங்க..அதையும் ஒதுக்கறேன் ..இந்தப் பதிவின் நோக்கம் இந்தப் படத்தின் தாக்கத்தை மட்டுமே சொல்லுவது..

முதலில் விஜய் : இந்த மனிதர் எப்படி இப்படி உடம்பைப் பராமரிக்கிறார் அதுவும் இந்த வயதில்...இள வயது  என்பது இவருக்கு மட்டும் ரிவர்ஸ்ல வருது போல. எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் நான் இவரை ரசித்த படங்கள் குஷி,வசீகரா,சச்சின்,துப்பாக்கி இறுதியாக இந்த கத்தி .நடிப்பிலும் அழகிலும் மெருகேறி இருக்கின்றார்.. அழகிய தமிழ் மகன் உட்பட இவர் இரட்டை வேடங்கள் ஏற்று எதுவும் உருப்படியாக இருந்ததே இல்லை. இந்தப் படத்திலும் ரெட்டை வேடமா?  ம்க்கும் என்றே ஓர் அலட்சியம் இருந்தது.. இருப்பினும் துப்பாக்கியில் முருகதாஸ் ஹிட் ஆக்கி விட்டதால் இந்தப் படத்தில் சிறிதாக ஒரு எதிர்பார்ப்பு எனக்கு. ஒரு ஜாலியான குற்றவாளியாக இருந்து மனமாற்றம் கிடைத்து, எதிர்பாராத சூழலில் ஒன்றி அதைச் செயல்படுத்துவது வரை குறையற்ற நடிப்பு. இரு வேறு குணாதிசியங்கள் கொண்ட பாத்திரத்தை உணர வைப்பதே நடிப்பின் வெற்றி..அதில் விஜய் வெற்றி பெற்றிருக்கிறார்.நியாயமாக இந்தப் படத்துக்குத் தான் தலைவான்னு வச்சிருக்கணும்..ஆனா வச்சிருந்தா கத்திக்கு கத்தி வந்திருக்கும்.. :) 


ஒரு சில காட்சிகளில் செம மிரட்டல் ..இந்த கெத்து இந்த நடிப்பை இன்னமும் மெருகேற்றிக் கொண்டே போனால் அடுத்து அடுத்து வெற்றி தான் .
என் தோழிக்கு விஜயே பிடிக்காது.முருகதாஸ் இயக்கம் அதனால் தான் விஜய் ஜொலிக்கிறார் என்பாள்.விஜய் மட்டுமல்ல எந்த ஒரு நடிகனுமே மிளிர்வது இயக்குநரின் திறமையே .ஆயினும் அதைத் தாண்டி இயக்குநருக்கு முழு ஒத்துழைப்பு நடிகனிடம் இருந்து வேண்டும்.

ஒருமுறை நடிகர் நெப்போலியனிடம் யாரோ ஒருவர் சொன்னாராம்..இயக்குநர் சொல்றதைச் செய்யறது தான் நடிகனோட வேலை..இதுல நடிகனோட திறமைன்னு ஒன்னும் இல்லன்னு.அதுக்கு நெப்போலியன் "வகை வகையாக இலையில் சாப்பாடு இருந்தாலும் அதை எடுத்து உண்ணச் செய்ய மூளையின் கட்டளை வேண்டும்..அதுக்காவது  மூளை இருக்கணும்..நான் உங்களைச் சொல்லல என்று பதிலடி கொடுத்தாராம்..

சமந்தா : ஒன்றரை டின் மேக் அப் இருந்தாலும் சமந்தாவுக்கு ஒரு லைக் . ஆனா இந்தப் படத்துக்கு அவங்க தேவையே இல்லை. ஒரு சில காட்சிகள் என்றாலும் ரமணாவில் சிம்ரனுக்கு இருந்தது போல இல்லை. சும்மா டைரக்டர் சொன்னதைச் செய்த கிளிப்பிள்ளை. அவங்களா சிரிக்கிறாங்க அவங்களா அப்புறம் லவ் பண்றாங்க.. அப்புறம் அவங்களா feel பண்றாங்க எதுவுமே மனசுல ஒட்டல. கமர்ஷியல் என்ற காம்ப்ரமைஸ் போல சமந்தா..

இசை : சும்மா கொஞ்ச காலத்துக்கு அந்த செல்பிபுள்ள பாட்டைக் கேட்டு ஆடிக்கலாம்..வேறு பாடல்கள் மனசுல பதியல..அப்புறம் இந்தப் படத்துக்கு பாட்டு எதுக்கு ?ஓர் அழுத்தமான கதைக்கு எந்த இடத்தில் எந்தச் சூழலில் பாடல் தேவைப்படுமோ அங்க வேணும்..எந்த இடத்தில் இசை வேண்டும் என்பது மட்டுமல்ல எந்த இடத்தில் இசை மௌனம் காக்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.ரமணாவில் எனக்கு அப்படித் தோன்றியது இல்லை (அந்தப்படம் பார்த்தப்ப இசை யார் என எனக்குத் தெரியாது என்பதே உண்மை) ஏன் ராஜாவைக் கொண்டாடுகிறோம் என்பதெல்லாம் புரிய திரை வரலாற்றைச் சற்றே திரும்பிப் பார்க்க வேண்டும்.அப்புறம் தம்பி இப்பல்லாம் இணையத்தில் போஸ்டர் விட்டாலே எங்க சுட்டதுன்னு பொசுக்குன்னு கண்டு பிடிச்சிடறாங்க...இதுல இசை வெளியீடு வந்த நாளில் இருந்து BGM ,தீம் ன்னு அத்தனையும் வெளியே வந்துருச்சு..இனி கண்டுபிடிக்க முடியாட்டிக் கூட ஒரிஜினல் என்றால் நம்பவே மாட்டேன் 

அடுத்து முருகதாஸ் : என்னதான் கோபி இது தன் கதை என நம்பும்படி சொன்னாலும் ஒவ்வொரு காட்சியுமா அவரே எழுதிக் கொடுத்திருப்பார்?அட்டைக்கத்தி,ஏழாம் அறிவு சமயத்தில் இவர் ஏன் வெளியே வரவில்லை என்ற கேள்வியும் இங்கே தவிர்க்க முடியாதது..
கார்பரேட் கம்பெனிகளால் நாம் சுரண்டப்படுவதை ஓரளவேனும் அழுத்தமாகச் சொன்னதில் இயக்குநர் ஜெயித்திருக்கிறார். கம்யூனிசம் பற்றி எளிதாக ஒரு விளக்கம் .நான் ஏதோ படம் முழுக்க அதான் என நினைக்கும் அளவுக்கு இட்லி டைம் லைனை ஆக்கிரமித்து இருந்தது..ஓர் உதாரணத்துக்கு இட்லி வச்சு விளக்குனா, கம்யூனிசத்தை விட்டுபுட்டு பூராப் பேரும் இட்லியை தின்னுட்டுக் கிடக்காங்க..அப்புறம் எப்படியா இந்தியா வல்லரசாகும்?
துப்பாக்கி வில்லன் போல இந்தப் பட வில்லன் ஈர்க்கல. சும்மா வெள்ளைவெளேர் ன்னு அவிஞ்சும் அவியாத இட்லி மாவு கணக்கா..
ஈசியா பணம் கொடுக்கறாரு ஈசியா அடி வாங்கறாரு ஈசியா செத்தும் போயிடறாரு .

அதே போல 2G பத்தியும் பக்கம் பக்கமா வசனம் இருக்குமோன்னு பார்த்தா அதுவும் ஓர் உதாரணத்துக்கு வருது ..உடனே அந்த வசனத்தை விஜயே சொந்தமா யோசிச்சு சொன்ன மாதிரி இதைப் பத்தி பேசறியே ஏன் அதைப் பத்தி பேசல ஏன் இதுக்கு திராணி இல்லை...என்பது போலப் பேசுபவர்களின் நோக்கம் உண்மையில் விஜயை கீழ்மைப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே அன்றி நிஜமான சமூக அக்கறை என்பதில்லை என்றறிக.

ஒரு படம் என்ன விசயத்தைப் பற்றி சொல்ல வருது அதன் சாராம்சம் என்ன என்பதைக் கருத்தில் கொள்ளாமல் ஏன் அதைச் சொல்லல ஏன் இதைச் சொல்லல..ஏன் அம்மா ஊழல் சொல்லல என்பதெல்லாம் உஸ்ஸ்  ....சாதாரண மக்களிடம் போய்ப் பேசுங்கள்...  எத்தனை பேரு ஜெ தண்டனை பெற்றதற்கு மக்கள் எண்ணம் என்னவென புலப்படும்..மக்களிடமே தவறுகள் மண்டிப் போயி கிடக்கு.இதெல்லாம் ஒரு அமௌன்ட்டா இதுக்குப் போயா ஜெயிலு என்றே தான் சொல்கின்றார்கள்..இந்த லட்சணத்துல ஏன் விஜய் அந்த வசனம் பேசலன்னு ஒரே feelings ..ஒரு நடிகனோட வேலை பிணமாகவோ, அல்லது தலைவனாகவோ கொடுக்கப்பட்ட பாத்திரத்தை செவ்வனே செய்ய வேண்டும் என்பதே ..அதை ஒழுங்கா செஞ்சாரா இல்லையா என்பதை மட்டுமே ஏன் விமர்சிக்க முடியறதில்லை? உங்க ஆபீஸ்ல உங்க வேலை தவிர அக்கம்பக்கத்து டேபிள் காரன் வேலைய உங்கள செய்யச் சொன்னா உடனே செஞ்சுடுவீங்களா ? இப்படித்தான் சூர்யா fair &lovely விளம்பரத்துக்கு வரவும் உடனே அத்தனை சமூக அக்கறையாளர்களும் கருமையை சிறுமைப் படுத்துவதா எனப் பொங்கி எழுந்தார்கள்..என்னமோ fair &lovely இப்பத் தான் புதுசா அறிமுகம் ஆன மாதிரி..சச்சின் கூட பெப்சி விளம்பரத்துக்கு வந்திருக்காரு.இப்ப வரைக்கும் அத்தனை கிரிகெட் ப்ளேயர்களும் வந்துட்டு தானே இருக்காங்க..யாரும் அவங்கள கேட்பதில்லையே?ஆக உங்களுக்கு பிரச்னை விளம்பரத்தில் இல்ல.. சவுக்கு போன்ற நான் விரும்பும் தளம் கூட இதற்கு விதிவிலக்கு இல்லாமல் போனது வருத்தத்திற்குரியது. 
படத்துல இப்படி வசனம் பேசுவாங்க..ஆனா ஒரிஜினலா வேற  எனச் சிரிப்பவர்களுக்கு நான் பரிந்துரைப்பது பழைய படமான சினிமாப் பைத்தியம் என்றதைத் தான்..பாருங்க அப்பத் தான் உங்க கேள்விகளில் எவ்வளவு லூசுத்தனம் இருக்குன்னு தெரியும்..வாங்குன காசுக்கு நடிகன் நடிச்சா, கொடுத்த காசுக்கு அந்த நடிப்புக்காக கைத் தட்டலோ காறித் துப்பலோ செய்யுங்க .அதைத் தாண்டி பெர்சனல் விமர்சனங்கள் தேவையா?

அப்புறம் கோலா கெட்டது என்பது இப்பத் தான் தெரியுமா? கார்பரேட் கொள்ளைக்காரர்கள் என்பது ஏற்கனவே தெரியாதா?விவசாயம் பத்தி இப்பத் தான் அறிவு வந்ததா?நீர் மேலாண்மை பத்திக் கூட தெரியல..ஒரு நடிகன் வசனம் பேசவும் உனக்குப் பொங்குதா இத்யாதி இத்யாதி... நியாயம் தான் ஏற்கனவே தெரிஞ்சுருக்கணும் ..ஆனா தெரிஞ்சுக்கவே இல்லையே ஏன்? என்ன தேவையோ எதில் சீக்கிரம் பணம் சம்பாதிக்க முடியுமோ அதைப் படி..இதுவும் உதவும் அதைப் படி அதுவும் உதவும் இதைப் படி என ரெண்டு பக்கமும் திரை கட்டப்பட்ட குதிரை மாதிரி நம்மைச் செலுத்தியது யார் குற்றம்? எத்தனை பேரு நம்ம நாட்டில் படிச்சிருக்காங்க?படிச்சவங்க எத்தனை பேருக்கு கம்ப்யூட்டர் தெரியும் ? அதுல எத்தனை பேரு இணையம் பற்றித் தெரியும்?இந்த fb twitter பிரபலமானது இந்த நான்கு வருடத்திற்குள் தான் . அன்றாடம் அஞ்சுக்கும் பத்துக்கும் ஆளாய்ப் பறந்து சம்பாதிக்கும் கீழ்தட்டு &நடுத்தர மக்களோடு பழகி இருக்கீங்களா? எனக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது சில காலம். அதில் நூற்றுக்கு பத்து பேருக்கு மட்டுமே SMS படிக்கத் தெரியும்..மற்றவர்கள் அதைக் கண்டுகொள்வதே இல்லை.ஏன் வந்த SMS ஐ எப்படி நீக்குவது என்று கூடத் தெரியாமல் நானூறு ஐநூறு என இன்பாக்ஸ் நிறைந்து வழிய வைத்திருப்பார்கள்.ஈ மெயில் தானே நீங்க ஜி மெயில் ன்னு சொல்றீங்களே ன்னு நமக்கு அறிவு இருக்கா என சீரியஸா சோதிப்பார்கள்.

. பல குடும்பத்தில் முதல் பட்டதாரி இப்பத் தான் வந்திருப்பாங்க.. அவங்களுக்கும் அது சார்ந்த அறிவு மட்டுமே இருக்கும்..பொது அறிவுக்கான தேடல் எது , நாட்டுக்கு நல்லது எது கெடுதி என்பதைப் பற்றிய அடிப்படை அறிவு என்பது இருக்காது.. தன் வீடு தன் குடும்பம் என்ற சுயநலம் மட்டுமே தமிழகம் அமைதிப் பூங்கா என குறிப்பிட முக்கிய காரணம்.சமீபத்தில் கேரளா சென்றிருந்தேன்.. வளர்ச்சி அளவில் தமிழகத்தை விட முப்பது ஆண்டு பின்னோக்கி இருக்கிறார்கள். ஆனால் அதை விட இயற்கையைப் போற்றுகிறார்கள் . ஒவ்வொரு வீட்டிலும் தென்னை.இயன்றவரை கடைகளில் துணிப்பை தான். சாலையில் கூட குப்பை பார்ப்பது அரிது.(கேரளாவில் குப்பை கொட்டினால் அபராதம் அதனால் தமிழக எல்லையில் வந்து மொத்தமாக கொட்டி விட்டுப் போகிறார்கள் நமக்குத் தான் சூடு சொரணை கிடையாதே ) சீமக் கருவேல மரம் பார்க்கவே முடியல.. ஆனால் தமிழகத்தில் அதுதான் ஆக்கிரமித்து இருக்கிறது. .சீமக் கருவேலத்தின் தீங்கு இங்கே எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கும்?


படித்தவர்களிடையே அதுவும் இணையத்தைப் பயன்படுத்துபவர்களிடையே தான் ஓரளவு விஷயம் பரவி இருக்கு.. மற்றபடி சாமான்ய மக்களிடம் போய் சொல்லிப் பாருங்க காதுலயே வாங்க மாட்டாங்க..பலருக்கு தண்ணி கஷ்டத்துக்கு காரணம் மழை வராதது தான் என மழைய சபிப்பாங்க..ஆனா அதற்கான காரணத்தை ஆராய நேரமிருக்காது அவங்களுக்கு. 

இந்த மூஞ்சிபுக் இரண்டு வகைப்படும்..ஒன்னு காரசாரமா விவாதிச்சு மண்டைய ஒடைச்சு ,விசயங்களைப் பகிர்ந்து அஜித் விஜய் கிண்டல் செஞ்சே லைக் வாங்கும்..இன்னொன்னு உலகமே உருண்டு அழுதாலும் வந்தமா போட்டோ போட்டமா,  லைக் வாங்கினமா தின்னத போட்டோ பிடிச்சமா ஊருக்குப் போறேன் வாரேன் குட் நைட்டு ன்னு சிவனேன்னே திரியும்..அதுங்களும் படிச்ச கூட்டம் தான் ஆனாலும் முக்காவாசி forward மெசேஜ் படிக்காமலே forward பண்றது இவிங்க தான்..இந்த இணையம் பயன்படுத்தும் கூட்டம் கூட நம்ம மக்கள் தொகையில் அதிக பட்சம் பத்து சதவீதம் தான் என்பது என் துணிபு..இப்படி இருக்கிற மக்களுக்கு இணையத்தில் நாம் வைக்கும் பொங்கல் தெரியாது..அவங்களுக்கு டிவி,செய்தித்தாள் தான் ஊடகம்.. ஆனால் அவங்க என்ன செய்யறாங்க.. கத்தி படத்துக்கு தின தந்தி என்ன விமர்சனம் போட்டாங்க என அறிய ஆவலா இருக்கு :) முக்காவாசி கள்ளக் காதல் மீதி நேரம் ஆளும் கட்சி ஜிங் சக்..எந்தக் கட்சி வருதோ அந்தக் கட்சிக்கு ஆதரவு என பிழைக்கத் தெரிந்தவர்கள்..நூதனம் என்ற சொல்லைக் கண்டுபிடிச்சதே இவிங்க தான்..நூதன முறையில் தற்கொலைன்னு போடுவாங்க .திருட்டு, தற்கொலை, கொலைய விட எப்படி நூதனமா அதை செஞ்சிருக்கான் என ரசிப்பது போன்றே இருக்கும் இவிங்க செய்தி.அப்புறம் தினமலர்..சாதிப் பற்று அதிகம்..தின கரன் கேட்கவே வேணாம் ..சரி வார இதழ்..அட நம்ம ஜூவி...கலைஞர் வீடு,ஜெ கொடநாடு வரை இவங்க சிசிடிவி ரொம்பப் பிரபலம்..விகடன் மீது பெரும்மதிப்பு இருந்தது. (விகடனை விமர்சிக்க ஆரம்பித்த பின்பு என் ட்வீட் வலைபாய்ந்ததே இல்லை ) ஒரு காலத்தில் பத்திரிகை சுதந்திரம் இருந்தது..தொன்னூறுகளில் இருந்து இந்த 2௦௦௦ இறுதி வரையிலும் கூட.அதனால் தான் திமுக அதிமுக ஊழல்கள் தெரிய வந்தது..ஆனால் இப்போ இல்ல.தங்கள் தேவைக்கேற்ப செய்தி போடுகிறார்கள்..சரி டிவி பக்கம் போவோம்..கலைஞர் ,ஜெயா , சன் டிவி மாறி மாறி ஒரு வாரம் தொடர்ந்து பார்த்தா பைத்தியம் பிடிச்சிரும்..இப்படி ஊடகங்களிலும் கள்ளத்தனங்கள் மலிந்து கிடக்கு.. ஓர் ஊடகம் நினைத்தால் மலாலாவை உலகறியச் செய்ய முடியும்..நிர்பயாவுக்காக நாட்டையே வருந்த வைக்க முடியும்..ஆனால் இசைப்ரியாவை சிறிய பெட்டிச் செய்தியாக்கி விடவும் முடியும்..இரோம் ஷர்மிளா பற்றி நான் படித்தது என்றோ வாரமலரில் சிறிய பெட்டிச் செய்தியாகத் தான்..இந்த லட்சணத்துல நாம என்ன நல்லது கெட்டது தெரிஞ்சுக்க முடியும்?

          கரென்ட் கட் பல மணி நேரம் செஞ்சு ஒட்டுமொத்த தமிழ்நாடே தவிச்சப்ப சென்னை சிட்டி மட்டும் சொகுசா இருந்ததே..அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் போனா போகுதுன்னு ரெண்டு மணி நேரம் கட் செஞ்சதுக்கே சென்னைக்காரங்க அங்கலாய்ப்பு செஞ்சாங்களே..?சென்னையில் கார்பரேட் நிறுவனங்களுக்கு கரென்ட் வாரி வழங்கிட்டு இந்தப் பவர் கட்டினால் எத்தனை சிறுதொழில்கள் முடங்கிப் போயின எனத் தெரியுமா?அது சென்னைவாசிகளுக்குப் புரியுமா? மதுரைக்கு மிக அண்மையில் உள்ள கிராமத்துக்கு அந்தவேளையில் சென்றிருந்தேன்..ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் அதுவும் விட்டு விட்டு பவர் வரும் என்ற பொழுது எப்படி இவங்க இங்க இருக்காங்க என்றுதான் அதிர்ச்சி அடைந்தேன்.

இதெல்லாம் சொல்வது ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் சினிமா காரனிடமே எதிர்பார்க்கிறீர்கள்..ஏன் உங்களுக்குத் தானா புத்தி வர மாட்டேங்குது என்பவர்களுக்குத் தான்..சினிமா என்பது ஒரு மிகப் பெரிய ஊடகம்..செய்தித் தாளோ ,டிவியோ சினிமாவைத் தவிர்க்கவே முடியாது..மக்களிடம் சினிமா ஊறிப் போயிருக்கு..அது இன்று நேற்று அல்ல..முதன்முதலில் திரையில் நகரும் ஆட்களைப் பார்த்த காலத்தில் இருந்தே.. சினிமா நம் மக்களின் ஒவ்வொரு காலகட்டத்தையும் தன்னுள்ளே ஆவணப்படுத்தி வைத்திருக்கின்றது..அறுபதுகளில் மக்கள் எப்படி இருந்தாங்க எழுபதுகளில் எப்படி இருந்தாங்க என்பதற்கான சாட்சியாக சினிமா இருந்திருக்கின்றது.. சினிமா மூலமாக ஒரு விஷயம் மிகச் சரியாக சொல்லப்படும் பொழுது அது சென்றடையும் வீரியம் அதிகம். இந்தக் குளிர்பானம் சார்ந்த விஷயங்கள் விவசாயம் இதெல்லாம் இப்பவாவது சொன்னாங்களே என்று தான் தேற்றிக்கொள்கிறேன்..

என் தந்தை அலுவல் பொருட்டு நகரத்தில் இருக்க நாங்கள் கிராமத்தில் இருந்திருக்கிறோம்..வண்ணத்துப்பூச்சி பூங்கா பார்க்க நீங்க சுற்றுலா சென்றிருப்பீர்கள்..ஆனால் அதை மிகச் சாதரணமாக எங்கள் பொட்டைக் காட்டில் ஒரு மழைப் பொழுதைத் தாங்கி சிலிர்த்திருந்த காலையில் கண்டிருக்கிறேன். ஊர் முழுக்க பச்சைப்பசேல் என்றிருந்தது..ஏகப்பட்ட பறவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது மண் முழுக்க தரிசாக கிடக்கிறது..பசுமை குடிகொண்டிருந்த இடங்களில் வெயில் மட்டுமே எங்கும் விரவிக் கிடக்கின்றது..விவசாயம் செய்பவர்கள் வெகு சிலரே.அதற்கும் களை எடுக்க ஆளில்லை.. (நூறு நாள் திட்டத்தில் வெறும் கையெழுத்துப் போட்டு வேலை பார்க்காமலே நூறு ரூபா கிடைக்குதே சிரமப்பட்டு களை எடுக்க யார் போவா ?) கேரளாவைப் பார்க்கப் பார்க்க ஒரு காலத்தில் இப்படித் தானே இருந்தது தமிழகமும் என்ற ஏக்கமும் இப்ப அப்படி இல்லையே என்ற வயித்திரிச்சலும் மட்டுமே இருக்கு. பல ஏக்கர் நிலம் வெறும் ஆயிரம் ரூபாவுக்கு எங்கள் கிராமத்து அண்மையில் இருக்கும் மில் வாங்கிப் போட்டிருக்கு..நாம சாப்பிடும் சாப்பாட்டில் அதிக லாபம் பார்த்தது இடைத் தரகர்களாகத் தான் இருக்குமே ஒழிய அதைச் செய்த விவசாயியாக இருக்க மாட்டார்.

இவங்க ஜஸ்ட் நடிக்கிறவங்க,வசனம் பேசி காசு வாங்கிட்டுப் போவாங்க,இயக்குநரும் லைக்காவுக்கு பணம் சம்பாதிச்சுக் கொடுத்திட்டாரு..ஒத்துக்கறேன்..ஆனால் இது போன்ற சேதி அவசியம் தேவையான சூழலில் அதைக் காசாக்கிட்டுப் போகட்டுமே..உடனே இதைக் கேட்டு எல்லாரும் திருந்திடுவாங்களா ..உடனே விவசாயம் மலர்ந்திடுமா,கோலாவ நாம தடுத்திடுவோமா எனக் கேட்பவர்களுக்கு அதெல்லாம் நடக்காது..ஆனால் அவற்றைப் பற்றிய யோசனையாவது வந்திருக்கக்கூடுமே..சூரியூர் என்ற கிராமம் நிஜமான தன்நூத்து என்பது கத்தி படம் வெளிவந்த பிறகு தானே தெரிஞ்சிருக்கு..அதன் பிறகு தானே வாட்சப் விகடன் என அந்தக் கிராமம் பத்தி நமக்குத் தெரிய வருது..  ரவுடித் தனம் செய்யும் ஹீரோ அதை லைக்கி லவ்வும் காதலி என்றே உழன்ற சினிமாவில் இருந்து ந.கொ.ப.கா..சூதுகவ்வும் என அடுத்த தளத்திற்கு இப்பத் தான் தமிழ் சினிமா நகர்கின்றது..அதுல கத்தி போன்ற முயற்சியையும் வரவேற்கிறேன்..
இது மட்டும் ரஜினி செய்திருந்தா எப்படி இருந்திருக்கும் ச்ச மிஸ் ஆகிடுச்சே எனத் தோனுது..(குறிப்பா அந்தச் சில்லறைக்காசு சண்டைக் காட்சியில் gate கிட்ட  அடிச்சுப்போட்ட அத்தனை பேரு மேலயும் உட்கார்ந்துகிட்டு கேசுவலா பார்க்கிற ஸீன்ல ரஜினிய கற்பனை பண்ணிப் பார்த்தேன் ப்ப்பா :) அவர் செய்தால் இதற்கான reach அதிகம்..லாஜிக் எல்லாம் பார்க்கவே மாட்டோம். (ஆனால் ஒரு ரொம்பக் கெட்டவன் அவனை எதிர்த்துப் போராடும் நல்லவன் என்ற மசாலாவில் இருந்து ரஜினியும் வெளியே வர மாட்டார் ) 

பலருக்கு இது விஜய் படமாக அமைந்து போனதே மாபெரும் உறுத்தலாகி விட்டது போலும்.. இந்தப் பட போஸ்டர் வந்ததில் இருந்து டிரைலர் வந்த நாள்வரை விதம் விதமான கலாய்ப்புகள்.. ஆனால் அதை எதிர்கொண்டு விட்டது படம்..அதனால் கதைத்திருட்டுக்கு கவலைப்பட ஆரம்பிச்சாச்சு (ஒருவேளை கோபி பக்கம் நியாயம் இருந்தால் நிச்சயம் அவர் ஜெயிக்கணும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ) 
குழாயில் எப்படி மூனு நாள் கல்கத்தால இருந்து விஜய் கூடவே வந்த அந்த ரெண்டு பேரு என்ன ஆனாங்க  இப்படி லாஜிக் கேள்விகளை ஒதுக்கி வச்சுட்டு ,
மீடியாவோட இன்னொரு முகத்தைக் கிழிச்சதுக்கும் ,மீத்தேன் பற்றிய ஒரு வசனத்திற்காகவும் , கார்பரேட்காரர்கள் பற்றிய  நிதர்சனத்திற்கும் ,இத்தனை மணி நேரம் செலவழிச்சு ,சோம்பேறியா இருந்த என்னைப் பதிவு எழுதியே ஆகணும் எனத் தூண்டியதற்காகவும் 

கத்தி டீம் க்கு ஒரு பெரிய ஷொட்டு...

Thursday, May 8, 2014

வீரபாண்டி -கெளமாரியம்மன் திருவிழா

தேனியில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ளது இயற்கை எழில் கொஞ்சும் வீரபாண்டி..முல்லை ஆற்றின் புண்ணியத்தில் செழிப்பான அழகு.

உசிலம்பட்டி தாண்டிவிட்டால் ஆண்டிபட்டி,தேனி ,போடி,கம்பம்,பெரியகுளம் , வருசநாடு ,மேகமலை ,வீரபாண்டி,என விவசாயம் சார்ந்த இயற்கை எழில் கொஞ்சும் ஊர்கள் அதிகம்.வேகாத வெயில் அடிக்கும் சொந்த ஊரையே இவ்ளோ சிலாகிக்கிறோமே இது போன்ற அழகிய ஊர்களில் பிறந்தவர்களுக்கு எவ்வளவு கர்வம் இருந்தாலும் தகும் :) (அருகிலேயே கும்பக்கரை மற்றும் சுருளி அருவி கொண்ட இடங்கள் ...சுருளி வானுயர்ந்த மரங்கள் கொண்டது ).. கேரளாவிற்கு இந்த ஊர்களில் இருந்துதான் காய்கறிகள் செல்கின்றன..இங்க இருக்கும் விவசாயிகள் மட்டும் அதை அனுப்பாவிடில் அங்கே காய்கறி என்பதே இருக்காது..அல்லது விலைவாசி எகிறிக் கிடக்கும் என்பது கேள்வி.



ஒரு காலத்தில் தமிழ்த் திரைப்படங்களில் டூயட் காட்சிகளில்  இந்த முல்லை ஆறு தான் முக்கிய பங்கு வகித்திருக்கின்றது.குறிப்பாக தேனிக்கு அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கங்கை அமரன்,பாரதிராஜா படங்களில் தேனி மற்றும் அதன் சுற்றுப் புற கிராமங்களில் தான் படப்பிடிப்பு.. இங்கே உள்ள கௌமாரியம்மன் மிகப் பிரபலம்..

சுற்றுப்புற கிராமங்களில் உள்ள அனைவருமே சேர்ந்து கொண்டாடும் திருவிழா இது. அதனால் விழாக் காலங்களில் கூட்டம் ஜேஜே வென இருக்கும் .கங்கை அமரன் எழுதிய ( தகவல் உதவி கூகிள் )பூவரசம்பூ பூத்தாச்சு பாடலில் வரும் சில வரிகளை நினைவூட்டுகிறேன் உங்களுக்காக

"வீரபாண்டி கோயிலிலே வருகிற தை பொங்கலிலே வேண்டினபடியே பொங்கலும்  வைப்பேன் கேட்டதையெல்லாம் கொடுக்கிற சாமிக்கு "

முன்பொரு காலத்தில் மதுரையிலிருந்து போடி செல்லும் ரயிலில் நீங்கள் பிரயாணித்து இருந்தால் நிச்சயம் அது ஒரு நல்ல அனுபவமாக இருந்திருக்கும்..
சென்ற ஆண்டு முல்லை ஆற்றில் குளித்த அனுபவம் இனி வருடாவருடம் சென்றே ஆகவேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்திவிட்டது.அக்கினிசட்டி எடுத்தல்,அலகு குத்துதல்,காவடி,சேத்தாண்டி வேடம் (உடல் முழுக்க சேறு அப்பிக் கொள்ளுதல் அதுவும் ஒரு அழகு தான் பார்க்க  ), ஆண்கள் பெண் வேடமிட்டு நேர்த்திக் கடன் செலுத்துதல் ,தேர் இழுத்தல் என வீரபாண்டி திருவிழா நேரத்தில் அல்லோகல்லோலப்படும் .அதிலும் சிலர் அங்கே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தும் தருணம் மட்டும் கொட்டடிக்க ஆள் வைத்துக் கொள்ளுவார்கள்...ஆற்றில் இருந்து கோவில் செல்லும் வரை சும்மா தாரை தப்பட்டை கிழியக் கிழிய நடனம்..   

சாமி வந்து அருள் கொண்டு ஆடுவது என்ற நம்பிக்கையைத் தாண்டி, பலர் அச்சம் விட்டு ஆடும் ஆசையை இத்தருணத்தில் தீர்த்துக் கொள்கிறார்கள் என்றே அவதானிக்கிறேன்..நாற்பது கூட்டலில் உள்ள ஒரு அம்மணி அக்கினிச் சட்டி கொண்டு மகிழ்ந்து சிரித்துக் கொண்டே ஆடிய நடனம் இன்னமும் கண்ணுக்குள்.. ( மன்னிக்க அந்நேரம் ஆவென வேடிக்கை பார்த்ததில் இந்த நிகழ்வுகள் எல்லாம் கண்களில் மட்டுமே படம் பிடித்தேன் கேமரா மறந்தே போயிந்தி.. :)
வழக்கம் போல காவல் துறையினர் ஆங்காங்கே விழா ஒழுங்குடன் நடக்க பிரம்மப் பிரயத்தனப் பட்டு கூட்டங்களை வழி நடத்தினார்கள். தங்கும் மண்டபத்தில் தான் தகராறு.மெனக்கெட்டு ஒரு மாதம் முன்பே பதிவு செய்தால் இவர்கள் இன்னும் நாலு பேருக்கு அதே நாளில் பணம் வாங்கி மண்டபத்தை நான்காகப் பிரித்து அமர்த்தினார்கள்.மழை நேரம் குழந்தை குட்டிகளுடன் வெளியே செல்லவும் முடியாமல் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
மாரியம்மன் என்பதால் கிடாவெட்டு பலப்பட்டது..ஜாலியாக அசைவம் உண்டு விட்டும் சாமி பார்க்கலாம்..சாமி கண்ணைக் குத்தாது :) 
கோவிலில் இருந்து பக்கத்தில் தான் முல்லை ஆறு..
வேறெங்கும் இல்லாத நீர் ஊற்றி வேண்டுதல் செலுத்துவதும் இங்கு உண்டு.அதற்கும்,அக்கினி சட்டி எடுக்க,ஆயிரம் கண் பானைகள் என அனைத்தும் ஆற்றங்கரையிலேயே ஒரு சந்தையில் விற்கின்றது 
வெறுமனே நாற்பது ரூபாய்க்கே அழகழாய்ப் பானைகள் விற்கின்றார்கள்..மீன் குழம்பு வைக்கவென்று அண்ணி போன வருடம் அகன்ற பானை வாங்கினார் . . அருமையாக இருக்கின்றது என்று சொல்லி இந்த ஆண்டும் இரண்டு பானை வாங்கினார்.
நாங்கள் சென்ற நேரம் நல்ல மழை..இருப்பினும் காற்று இல்லாத மழை என்பதாலோ என்னவோ ஆற்றில் குளித்த ஈரத்துடன் இருந்தாலும் குளிரே தெரியவில்லை. அந்த மழையிலும் அவ்வளவு கூட்டம் .
நீண்ட வரிசையும் கூட்டமும் இருந்தாலும் அம்மன் தரிசனம் நன்கு கிடைத்தது மகிழ்ச்சி..சில பல வேண்டுதல்களை வைத்து விட்டு வந்திருக்கின்றேன்..:-) 
முல்லை ஆற்றின் படங்கள் சில உங்களுக்காக :) 








இதை விட மிகச் சிறப்பான இடங்கள் நிறையவே இருக்கலாம். ஆனால் ஏன் இந்த இடத்தின் மீது தனி பற்று என்றால் மண் மணம் மாறாமல் அப்படியே இருக்கும் திருவிழா,பழைய எண்பது மற்றும் தொன்னூறுகளில் நாம் அதிகம் ரசித்த பல படங்கள் மற்றும் பாடல்கள் வழியாக இன்றும் மனதில் நிற்கும் காட்சிகள் , நெரிசலான நகர வாசத்தில் இருந்து ,நினைத்தால் தொட்டுவிடக் கூடிய தூரம், மனத்திற்குப் பிடித்த தெய்வம் , இப்படி ஒரு உணர்வு சார்ந்த இடமாக இதனைப் பார்ப்பதால் இன்னமும் மனதிற்கு நெருக்கமான இடத்தில் இருக்கின்றது. 

கொண்டாட்டமான திருவிழா,அருமையான முல்லை ஆறு,அழகான சுற்றுப்புறம் நல்ல நினைவுகளுடன் , என் வேண்டுதல்கள் நடந்தாலும் நடக்காவிட்டாலும் முல்லை ஆறுக்காகவே ஒவ்வொரு ஆண்டும் சென்றே ஆக வேண்டும் என்ற உறுதியும் உடன் எடுத்து வந்தேன் :) 


Sunday, April 6, 2014

பங்குனியில் ஒரு சித்திரைத் திருவிழா ...!


ராஜா நிகழ்ச்சி மதுரையில் என அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மனம் இருதலைக் கொள்ளியாய்த் தவித்தது.நேர்ல பார்த்தா எப்படி இருக்கும் என்ற கற்பனையும் இரவு வெகுநேரம் ஆகிவிடும் வீடு திரும்ப என்ற யதார்த்தமும் மாறி மாறி அலைக்கழித்தது.ஒரு வழியாக அம்மாவிடம் அனுமதி பெற்றேன்.ஆனால் டிக்கட் நான் வாங்கலம்மா தோழி தான் வரமுடியவில்லை என்று அவள் வாங்கிய டிக்கட் நமக்குக் கொடுத்திருக்கிறாள் என நம்பவும் வைத்தாயிற்று :) (no screenshot allowed )அனுமதி கிடைத்தவுடனே டிக்கட் வாங்க முயற்சி செய்தால் இணையத்தில் ஒரு டிக்கட் கூட இல்லை என வெறுப்பேற்றியது.கீஷ்டு கானம் சென்றால் அங்கே அரங்க அமைப்பு map இருந்தது.500 ,1000ரூபாய் டிக்கட் எடுப்பது வீண் எனப் புரிந்தது.ஒரு வழியாகத் தோழி மூலம் ரூ.2500 டிக்கட் 2 புக் செய்தாயிற்று:))

அப்பொழுதில் இருந்து "மாலையில் நடத்தனும் இளையராஜா கச்சேரி"என்று சித்ரா காதில் பாடிக் கொண்டிருந்தார்.FREE SEATING  ஆகவே முதலில் செல்பவர்களே முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு .அதனால் 3.30 மணியில் இருந்தே 3 dress மாத்தி 4.30 க்கு கிளம்பியாச்சு..:)

சரியாக 5 மணிக்கு அங்கே ஆட்டோவில் சென்றால் கூஊஊட்டம் ..ஆ..த்தி...இது என்ன சித்திரைத் திருவிழாவாட்டம்...மலைத்தே போனேன் PLATINUM GATE ,GOLD GATE ,SILVER GATE என விலை வாரியாக பிரித்து விடப்பட்டு இருந்தது.SILVER க்கு உரிய இடத்தில் முன்னாடியே சென்று அமர்ந்தாலும் அங்கிருந்து stage வெகு தொலைவு..

பக்கத்தில் ஸ்க்ரீன் கட்டப்பட்டு இருந்தது.இவ்வளவு தூரம் வந்தும் இப்படி screen ல தான் பார்க்கணுமா என நினைத்த பொழுதே எங்களுக்கு முன்பு பண்ணைபுரம் மக்களுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு முன்னேறிச் சென்றது நாங்கள் அமர்ந்து இருந்த இடத்தில இருந்து ஒரு கூட்டம். இரும்புத் தடுப்பின் அடியில் புகுந்து அந்தப் பக்கம் சென்றாயிற்று.இப்படியா சேரைத் தூக்கிட்டுப் போறது என்னா சனங்க என அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே யாமும் அதே வேலையைச் செய்து stage நன்றாகத் தெரியும் இடத்தில் சேரைப் போட்டு இடம் பிடித்தாயிற்று :)) ஒத்திகை நடந்து கொண்டிருந்தது..ஆகா..என அங்கே கவனம் செலுத்தினால் வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் பாடல்..அந்த prelude beats இருக்கே என்னா அடி..:) ச்ச..இன்னும் கொஞ்சம் முன்னாடி வந்திருக்கலாம் என நினைத்துக் கொண்டே ட்விட்டரில் நேரலை செய்ய போனை எடுத்தேன்.இறுதியாக அமாஸ் அம்மாவின் பறவையும் அங்குதான் இருக்கிறார் என்ற ட்வீட் மட்டுமே கண்ணில் பட்டது.அத்தோடு மொபைல் நெட்வொர்க் வேலை செய்யவே இல்லை.நானும் ஒரு 10 முறை போனை swtich off செய்து on செய்திருப்பேன்.ம்ஹ்ம்ம் ..போனைக் குலுக்கினா நெட் work ஆகுமா ஜீவா என எனக்கு நானே கேட்டுக் கொண்டே அதையும் செய்து பார்த்துவிட்டேன்.AIRTEL  ஐச் சபித்துவிட்டு சுற்றி உள்ள கூட்டத்தில் பார்வையைச் சுழல விட்டேன்.பறவையைத் தான் வெகு நேரம் தேடினேன்."பறவையே எங்கு இருக்கிறாய்"..ட்விட்டர் அப்டேட் உம் செய்ய முடியாது..இந்தப் பறவையையும் எங்கு என கண்டுபிடிக்க முடியாது.பேசாமல் நிகழ்ச்சியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியதுதான் என முடிவு கட்டியாயிற்று.நிகழ்ச்சி ஆரம்பம் ஆக இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது.அதனால் அருகில் இருந்த பண்ணைபுரம் மக்களிடம் பேச்சு கொடுத்தேன்.5000 ரூ,10,000 ரூ.டிக்கட் அரங்கமும் நிறைந்து வழிந்தது.ஆனால் அங்கே போய் அமருவதை விட இங்கேயே இருக்கலாம் இதுவே போதும் என்ற எண்ணமே வந்தது.பொதுவாக இப்படி கிராம மக்களைச் சந்திக்கும் பொழுது அவர்களின் வட்டார வழக்கிலேயே பேசி விடுவதில் ஒரு இலகுத் தன்மையை உணர முடியும்.இது எங்கள் இடமாச்சே நீங்க எப்படி இங்க உட்காரலாம் என விதிகள் எதுவும் பேசாமல் டிக்கட் விலை விசாரித்தார்கள்.

சொல்லவும் ஆத்தி..இம்புட்டா..எங்களுக்கெல்லாம் சும்மாக் கொடுத்தாக என்று தனக்கு அளிக்கப்பட்ட VIP டிக்கட்டை ஒரு அம்மா ஆட்டி ஆட்டிக் காட்டியது சிரிப்பை வரவழைத்தது. கிராமத்துல மொத்தம் எத்தனை தலைக்கட்டு என விசாரித்தேன்.அது இருப்பாங்க பத்தாயிரம் பேரு.வீட்டு வீடுக்கு டிக்கட் கொடுத்தாக..5000 டிக்கட் இருக்கும் மொத்தம் என்றார் அப்பெண்மணி.(13 சாதிகளாம் அங்கே..அத்தனை பேருக்கும் கொடுத்திருக்கின்றார்கள் ) என் அம்மா மெச்சிக் கொண்டார் பரவாயில்லை சொந்த கிராமத்து மக்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் என.
180 சுமோ(அவர்களில்  ஒருவர் கொடுத்த தகவல் ) ,பேருந்து வேன் என அங்கிருந்து சிரமம் பார்க்காமல் வந்திருந்தார்கள்.பின் இன்னொரு பெண்மணி மகன் பெங்களூருவில் வேலை பார்ப்பதாகவும்,இந்த நிகழ்ச்சிக்காகவே வந்திருப்பதாகவும் கூறினார்.இன்னொரு பண்ணைபுரத்துவாசி வேலை பார்ப்பது கேரளாவில்.அங்கிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்தாராம்..நான் எந்த ஊர் ,பெயர்,வேலை வரைக்கும் விசாரித்துவிட்டு நிகழ்ச்சி முடிவதற்குள் பேர் சொல்லி அழைத்து இலகுவாகப் பேசிக் கொண்டே இருந்தார்.பண்ணைபுரம் பற்றி,வீரபாண்டி போலவே இருக்குமா ஊரு ,தேனியில் இருந்து எவ்வளவு தூரம் போடி வழியா என விசாரித்து அறிந்துகொண்டேன் .எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெரு தான் அவர் வீடு.முந்தா நேத்து சின்ன மகனைப் பார்த்தேன் வந்திருந்தாக என்றார் பெருமை பொங்க ..இருக்காதே பின்னே...

அவங்க சொந்த பந்தம் எல்லாம் வந்திருக்காகளா எனக் கேட்டதில் ஆமாம் சித்தப்ப மக்க பெரியப்ப மக்க எல்லாம் வந்திருக்காக என கூட்டத்தில் ஒரு திசையைக் காட்டினார்..ம்ஹ்ம்ம் ..நமக்கு யாரைத் தெரியும்..இருந்தாலும் ஒரு ஓஹோ போட்டுக் கொண்டேன். உங்க கிராமத்துக்கு ஏதேனும் செய்திருக்கிறாரா என விசாரித்ததில் அங்கே பள்ளிக் கூடம் கட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.பரவாயில்லை நல்ல விஷயம்.அப்படியே சுத்தி எதுக்கும் போட்டோ எடுப்போம் ன்னு எடுத்தா நான் ஏதோ பத்திரிக்கையில் இருந்து போட்டோ எடுக்க வந்தவள் என நினைத்து எங்களை எடுங்கள் என ஒரு ஜோடி குரல் கொடுத்தது.
காசா பணமா எடுத்து வைப்போமே எடுத்துக் கொண்டேன் புன்னகையுடனே. வீடியோ கேமரா என்றால் ஆர்ப்பரிக்கும் கூட்டம் எல்லா இடத்திலும் இருப்பார்கள் போலும்..மேலும் கீழுமாகச் சுழன்ற கேமராவுக்கு ஏகப்பட்ட கையசைப்பும் குரலும் ..:)

பண்ணைபுரத்து மக்கள் வந்திருக்கீங்களா என கார்த்திக் ராஜா கேட்கவும் மேலே கையை உயர்த்தித் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள்.அவர்களின் வரவுக்குத் தனி மகிழ்ச்சி தெரிவித்து வரவேற்றார் கார்த்திக் ராஜா.அதே சமயம் சேரைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தவர்களை இது உங்களுக்கான நிகழ்ச்சி தயவுசெய்து ஒத்துழைப்பு கொடுங்க அவரவர் இடத்தில் அமருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.யாரது சேரைத் தூக்கிட்டுப் போறது ராஸ்கல்ஸ் என திட்டிக் கொண்டேன் :P மைதானத்தின் அருகில் வீடு வாய்க்கப்பட்டவர்கள் மொட்டை மாடியில் குவிந்து இருந்தார்கள்.கருமுத்து கண்ணன் தலைமையில் கார்த்திக் ராஜா வழங்கும் "ராஜாவின் சங்கீதத் திருநாள் "இதிலே கருமுத்து கண்ணன் என்பவர் மீனாட்சி கோவில் அறங்காவலர் என அம்மா சொன்னார்கள்.இருளத் துவங்கியதும் வண்ண ஒளி விளக்குகள் கண்ணைக் கவர்ந்தன.சமீபத்தில் பத்திரிக்கையாளர்கள் ராஜாவுடனான சந்திப்பு காணொளி ஒளிபரப்பட்டது.அந்தப் பேட்டியில் வந்த சந்திரா அக்காவை அம்மா அடையாளம் கண்டுகொண்டார்.சென்னைக்கு சென்ற பொழுது பார்த்தோமே பௌஷ்யா அம்மா தானே என்று.இடையில் மடை திறந்து பாடல் க்ளிப்பிங்க்ஸ் வெகுவாகக் கவர்ந்தது.."புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் நான்...." அந்த நிகழ்ச்சியை ரசிப்பதற்கான முழு மனதையும் தயார்படுத்த இது போதுமானதாக இருந்தது.
ஹலோ FM RJ அறிமுகம் நடந்தது..எனக்குப் பிடித்த  இரவு 12 மணிக்கு பேசும் வாடாத ரோசா வாடிப்பட்டி ராசா பிரபுவைக் காணும் வாய்ப்பு கிடைத்தது.இசை THIS  ..ஆனது இசைTHAT  ஆனது என ஒரு RJ feeling ஆக பேசிக் கொண்டிருந்தார்.இந்தப் பாழாப் போன ட்விட்டர் சகவாசத்தால் எனக்குத்தான் சிரிப்பு சிரிப்பா வந்தது மச்சி :-))


.மேலும் கவனம் முழுக்க ராஜா எப்போ வருவார் நிகழ்ச்சி எப்போ ஆரம்பிக்கும் என்றே இருந்ததால் இந்த இடைப்பட்ட மொக்கைகளை ரசிக்கும் மனநிலையே இல்லை.இறுதியாக , நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க சுஹாசினியை அழைத்தார்கள்.எப்படி இன்னமும் இளமையாக இருக்கிறார் என்ற ஆச்சர்யத்தை விதைத்துச் சென்றார்.நம் தமிழ் நாட்டின் சமீப UNIFORM DRESSCODE  ஆன வயலட்&பிங்க் கலந்த சேலை. எழுதிக் கொடுத்த மொக்கையை இம்மி பிசகாமல் பேசினார்.ரசிகர்களின் குரலாக என அவர் ராஜாவிடம் ஏதோ சொல்லப் போகிறார் என நினைத்தால் யாரோ ஒரு பக்கி மதுரையில் உள்ள அரசரடி,தல்லாகுளம் இடங்களுக்கு எதுகை மோனை போட்டு எழுதிக் கொடுத்த குடும்பமலர் டைப் கவிதையை வாசிச்சுக் காண்பித்தார்.உஸ்ஸ்ஸ் ..அவன் மட்டும் கையில கிடைச்சான்....

பின்னால் உள்ள திரையில் சிவனை வைத்து நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க என பாடல் ஆரம்பிக்கப்பட்டது.

ராஜா வரவுக்கு முன்பு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டுவரப்பட்டது அவரின் ஆர்மோனியப்பெட்டி தான்.ராஜா குரலில் ஜனனி ஜனனி பாடல்.அதன் பின்னணியில் திரையில் அம்பிகையின் திருவுருவம் மற்றும் பல காட்சிகள் பாடலுக்குப் பொருத்தமாக..அந்தப் பாடலில் கண்ணை மூடி அமர்ந்திருப்பாரே ஒரு சாது ..நிச்சயம் அது ராஜாவின் அந்தப் பாடலை உள்வாங்கி மனமார ரசித்தே அப்படி அமர்ந்து இருந்திருக்கக் கூடும்..அடுத்து பாடகர் விஜய் பிரகாஷ் ஓம் சிவோகம் இவரைப் பார்த்தால் நிழல்கள் ரவியின் சற்றே ஒல்லியாக மாற்றி வடிவமைக்கப்பட்ட version போலத் தோன்றுவது எனக்கு மட்டும் தானா?..பாடகர்கள் அனைவரும் பாடுவதற்கு முன்பு ராஜாவிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டுப் பாட ஆரம்பித்ததில் துளி கூட போலித் தனம் தெரியவில்லை.குருபக்தி..ஆனால் வேறு சிலர்,சுஹாசினி கவிதை(?i ) புகழ்ந்தே ஆகவேண்டும் என்று கழுத்தைப் பிடித்தது போலப் பேசியது ஏனோ கவரவில்லை.அவ்வப்பொழுது அவர்களின் அந்தப் பேச்சுக்கு சிரித்துக் கொண்டே ராஜா கொட்டு வைத்தது ரசிக்க வைத்தது :) உதாரணத்திற்கு போடா போடா புண்ணாக்கு (முற்றிலும் இந்தப் பாடலை எதிர்பார்க்கவே இல்லை..ராஜ்கிரணின் கிராமத்துப் படங்களுக்கு ரசிகையான என் அம்மாவுக்கு இந்தப் பாடல் நல்ல விருந்து  ) பாடலில் இடையில் பேசிய ஆண் குரல் ராஜா பாடலைக் கேட்டு கிராமத்து மக்களுக்கு உற்சாகம் என்று ராஜ்கிரண் வசனத்தோடு extra bit போட ,ராஜா"கிராமத்து மக்களுக்கு மட்டும் தானா..பேச வந்ததை மட்டும் பேசு..உண்மையைச் சொல் "என சிரித்துக் கொண்டே கூற அந்தப் பாடகர் பே ..பே ..பின்பு அந்த டயலாக் மட்டும் பேசி பாடலைத் தொடர்ந்தார்கள்.அம்மா என்றழைக்காத பாடலின் பின்னணியில் ராஜாவின் அம்மா புகைப்படம் திரையில் அடிக்கடி காட்டினார்கள்.இந்தப் பாடல் எல்லாமே இவர் இசையமைத்ததா என என் அம்மா விசாரித்துக் கொண்டார்.அடுத்து வந்த முந்தி முந்தி விநாயகனே பாட்டில் அந்தத் தவில் சத்தம் மட்டும் தனியா வந்து விழுந்தது..இந்த நிகழ்ச்சியில் ஒரு குறையாக நான் நினைப்பது KS .சித்ரா அவர்களின் குரல்  தான்.பாவம் பயிற்சி அதிகம் எடுத்தாரா அல்லது மனநிலை சரியில்லையா எனத் தெரியவில்லை.குரல் வழக்கம் போல இல்லை:( பல்லவியில் திணறி சரணத்தில் எப்படியோ சரி செய்து சமாளித்தார்.மாங்குயிலே பூங்குயிலே என அவர் பாடியதில் எல்லாமே எனக்கு இந்த எண்ணம் தான்.(ஒருவேளை டிவியில் கேட்கும் பொழுது இது தெளிவாகக் கேட்குமோ?) எதிர்பாராவிதமாக பாடகி பிரியா அசத்தினார்.

ஓ ..பிரியா பிரியா என அட்டகாசமாக ஆரம்பித்தார் மனோ..அப்படியே திசை மாறி இஞ்சி இடுப்பழகா பாட வைத்தார் ராஜா பிரியாவை.அப்படியே தாளம் மாற்றி நில்லாத வைகையில நீராடப் போகையில என மனோ எடுக்க ஒரே உற்சாகம்..மனோவும் பிரியாவும் மாறி மாறிப் பாடி இஞ்சி இடுப்பழகா பெண் குரலாக மனோவும் ஆண் குரலாக ப்ரியாவும் சில வரிகள் பாடியது செம அசத்தல்.மனோ ஜானகி அம்மா குரலில் ப்ரியாவை ஆசிர்வதித்தார்..சின்ன மாணிக் குயில் இல்ல சின்ன மணிஈஈ குயில் என சரியாகப் பாட வைத்தார் மனோவை.நிச்சயம் இதை டிவியில் மறுமுறை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.காற்றில் வரும் கீதமே பாடலில் வரும் ஸ்வரங்கள் "பாமரிக ரிக " ஹரிஹரன் சரியாக எடுக்காதது போல உணர்வு.பாடல் முடிந்ததும் ராஜா அதையே சொல்ல..அட..அந்தப் பாடலில் கவரும் இடம் அதுதான்.அதைத் திரும்ப பாட வைக்கப் போகிறார் என மனம் துள்ளிக் குதித்தது..ஆனால் அதற்குள் கார்த்திக் ராஜா sponsors க்கு ராஜா கையால் பொன்னாடை போர்த்த அழைக்க அது அப்படியே நின்று அந்த நிகழ்வு முடியவும் வேறு பாடலுக்குத் தாவியது பெரிய ஏமாற்றம் எனக்கு. சங்கீதத் திருநாளோ ,சொர்க்கமே என்றாலும் பாடல் வரிகள் மாற்றிப் பாடினார்கள்.அதிலும் சொர்க்கமே என்றாலும் பாடலை நிறுத்தி ராஜா சித்ராவைப் பாடு எனச் சொல்ல அவர் வழக்கம் போல ஆடுபுலியாட்டம் என ஆரம்பித்து பல்பு வாங்கினார் :) அது வேணாம்னு தானே வேற வரிகள் கொடுத்தேன் எனச் சொல்லி அந்த வரிகள் பார்வையாளர்களுக்கும் புரிய இசையை நிறுத்தி பாடிக் காட்டினார்.

மதுரையில் நிகழ்ச்சி என்பதாலோ என்னவோ "தென் மதுரை வைகை நதி" பாடப்பட்டது.(இசை அப்படியே இருந்தாலும் குரலோடு ஒன்ற முடியவில்லை) ஆயிரம் தாமரை மொட்டுக்களே  prelude ஆரம்பிக்கவும் ஆ..வென ஒரு உணர்வு..இதயெல்லாம் நேரா எப்போ பார்க்கப் போகிறோம் என எண்ணிக்கொண்டே ரசிக்க ஆரம்பித்தேன்.அமெரிக்காவிலிருந்து வந்த அனிதா கிருஷ்ணா ,சுரேந்தர் பாடினார்கள்.அவர்களின் best அவர்கள் கொடுத்தாலும் ஜானகியின் குரலில் இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று"புல்லரிக்கும் மேனி என புல்லரித்துப் போய் பாடியதும் SPB யின் அடிக்கடி தாகம் வந்து ஆளைக் குடிக்கும் "என்பதும் சட்டென நினைவில் வந்து போனது..திரும்ப இதுபோல ஒரு ஜோடி அமையுமா..ஏக்கமாகிப் போனது miss you ஜானகி அம்மா 

சரிகா...சரிசரிசரிசரிகா...என ராஜா எடுத்துக் கொடுக்க ..அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே என பாடல் ஆரம்பிக்க கூடவே சேர்ந்து பாட ஆரம்பித்தேன்.என் முன்பிருந்த அம்மா அப்படியே கண்ணிமைக்காமல் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்..அட..என கொஞ்சம் காலர் தூக்கும் போதே எனக்குப் பின்னிருந்த பெரிய திரையைத் தான் வேடிக்கை பார்க்கிறார் என உறைத்தது .அந்த இருட்டிலும் என் முகம் பிரகாசமாய் எரிந்தது:)  that moment 
என் அருகில் இருந்த பலர் stage இருந்த திசைக்கு எதிராக screen தெரியும் இடத்துக்கு நேராக திருப்பிப் போட்டு அமர்ந்தார்கள்.

நானோ screen ஐ அவ்வப்பொழுதும் பெரும்பாலும் stage ஐ எக்கி எக்கிப் பார்த்தேன்.கழுத்தே சற்று நீண்டுவிட்ட உணர்வு.அப்படியே சோர்ந்து நாற்காலியில் பின் சாய்ந்தால் "எனக்கு என் பாட்டு வேண்டும் என்ற பாலாவின் வேண்டுகோளுக்கு இணங்க கான கருங்குயிலே பாடலுக்கு தாரை தப்பட்டை கிழிய ஆரம்பித்தது.திரும்ப நிமிர்ந்து அமர்ந்தேன் :) ஒரு கல்லில் மூன்று மாங்காயாக கச்சேரி,IFC இனிதே துவக்கம்,கார்த்திக் ராஜா நீண்ட இடைவேளைக்குப் பின் இசையமைக்கும் "வாராயோ வெண்ணிலாவே "ஆடியோ லான்ச் ..ஆனால் பாலாவும்,பிரகாஷ் ராஜும் இங்கிதமாக தங்கள் படத்துக்கு விளம்பரம் அவ்விடத்தில் தேடாமல் அவர்கள் படத்துக்கு ராஜா இசையமைப்பதைத் தகவலாகச் சொல்லி சிலாகித்தனர்.மிஸ்கின்,பாலா சிநேகன் ,சுஹாசினி என எத்தனை பேர் பேசினாலும் என்னை முழுமையாகக் கவர்ந்தது பிரகாஷ் ராஜ்-ன் பேச்சு தான்.பிறருக்கு எப்படித் தெரியுமோ எனக்கு அவர் பாராட்டு பாசாங்கின்றி இயல்பான மரியாதையுடன் வெளிப்பட்டதாகவே உணர முடிந்தது.

பாடல்கள் பற்றி பல சுவராசியமான தகவல் எதிர்பார்த்தேன்.ஆனால் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே வெகு நேரம் எடுத்துக் கொண்டதன் விளைவு,குறிப்பிட்ட நேரத்திற்குள்,விளம்பரதாரர்களை கௌரவித்தல் உட்பட அனைத்துப் பொறுப்புகளும் இருந்ததால் அந்தக் குறையைப் பொறுத்து புரிய முடிந்தது.நிறைய பாடல்கள் இன்னும் எதிர்பார்த்தேன்.(நமக்கு எவ்ளோ கொடுத்தாலும் போதாதுதான் ) நேரமின்மை.
இசை நிகழ்ச்சி ஆரம்பித்த உடனேயே ராஜா கையை உயர்த்தி "பிற இசை நிகழ்ச்சிகளில் செய்வது போல இங்கே விசில் அடிக்கவே கூடாது.அமைதியாக ரசிக்க வேண்டும்.என் இசைக் கலைஞர்களை மதிப்பது என்னையே மதிப்பது போல "குரலை உயர்த்தாத அதே சமயம் அழுத்தமாக சொல்லியதில் ஒரு தகப்பனின் கண்டிப்பு இருந்தது. அதன் பின்பு ஒரு விசில் சத்தம் கூட விழாமல் அமைதி காத்து ரசித்தார்கள்.சின்னத் தாயவள் பாடல் FLUTE ஆரம்பிக்க அருகில் இருந்தப் பெரியவர் "ஆரது ..அதான் விசில் அடிக்கக் கூடாதுன்னு சொல்லிருக்காருல்ல " என்றதும் சிரித்துக் கொண்டே அது பாட்டுலேயே வருது தாத்தா என்றதும் தான் அமைதியானார் .எங்களுக்கு முன்பு எவரையும் நின்று ரசிக்க பண்ணைபுரத்து மக்கள் விடவில்லை.அதனால் நன்றாகSTAGE தெரிந்தது.




"நீ தூங்கும் நேரத்தில் " ஹரிஹரன் படு சிறப்பாகப் பாடினார்.போலவே யுவனும் "போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி"என்னா பீட்ஸ்...ப்ப்பா :) ஒன்றே பாடினாலும் நன்றே செய்தார் யுவன்.

ராஜா நிகழ்ச்சி என்றாலே சில குறிப்பிட்ட பாடல்கள் தான் இருக்கும் என்பதை உடைத்து முற்றிலும் புதிதான பாடல் தேர்வு..அதைச் செய்தவர் திருமதி கார்த்திக் ராஜா..வாழ்த்துகள் அவருக்கு.200 பாடல்கள் தேர்ந்தெடுத்து ஒவ்வொன்றாக குறைத்து 47 பயிற்சி செய்து அதிலும் சுருங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் சீக்கிரமே நிகழ்ச்சி ஆரம்பித்து இருந்தால் இன்னும் சில பாடல்கள் கொடுத்திருக்கலாம்.அடுத்த முறை கார்த்திக் ராஜா இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அதே போல பாடலின் ஒலித்தரம் பாராட்டும் படியாகவே இருந்தது.கண்ணை மூடிக் கேட்டால் பக்கா original தரத்தில் சற்றும் குறைவில்லாமல்.
சுஹாசினி அதிகம் பேசாதது ஒரு பெரிய ஆறுதல்:)

இசைக்கலைஞர்கள் அனைவரையும் ராஜா பெயர் சொல்லி அறிமுகம் செய்து கௌரவப் படுத்தினார்.புல்லாங்குழல் வாசித்தவர் அருண்மொழி என்றே நினைத்தேன்.நெப்போலியன் என்றார்(இருவரும் ஒரே ஆள் தானா?) குன்னக்குடி வைத்தியநாதன் மகனும் அவர்களில் ஒருவர்.அப்புறம் யார் அது ரவுடி பேர் என்ன என ராஜா கேட்டதும் ப்ரியாஎன்று பதில் வந்தது.எவ்வளவு செல்லமோ இந்தப் பெண் என ரசித்தேன்  அந்த அழைப்பை :) 

பாடல்களை நோட்ஸ் வைத்துக் கொண்டு பாட வேண்டியதற்காக தன்னைத் தானே நொந்து கொண்டார் ராஜா.பாப் சாங் எல்லாம் நோட்ஸ் வச்சுகிட்டா பாடுறாங்க நாமதான் இப்படி பாட வேண்டி இருக்கு..அது சரி அவங்கல்லாம் ஒரே  பாட்டை பாடுறாங்க என்று சந்தில் சிந்து பாடினார் :) அவ்வப்பொழுது அம்மாவையும் பார்த்துக் கொண்டேன்.MSV காலத்து ஆள் இந்த நிகழ்ச்சிக்கே என் வற்புறுத்தலின் பெயரிலியே வந்தவர் என்ன மனநிலையோ என்று பரிதவிப்புடன் பார்த்தேன்.ஆறும் அதுவும் ஆழமில்லை,ராஜாவின் அந்த தாங்கிடதத்த தரிகிட தத்த வீட்டுக்குவீடு பாடல் யாவும் கைதட்டி ரசித்துக் கொண்டிருந்தார்.

தாங்கிடதத்த தரிகிட தத்த வரிகளை தம் கட்டிப் பாடி தவறு செய்ததாக ராஜாவே சொல்லும் வரை கண்டுபிடிக்கமுடியவில்லை. எப்படித் தவறு செய்யப்பட்டது என சொல்லியும் காட்டினார் :)
என் பின்னே ஒரு வாண்டு பாப் கார்ன் வேணும் என அழ,  கையில் வைத்திருந்த முறுக்கைக் கொடுத்து சமாதானம் செய்தார் என் அம்மா ..அன்னபூரணி :) நிகழ்ச்சிக்கு இடையே இந்த வாண்டுகள் தான் அழிச்சாட்டியம்..ஒரு வாண்டு வலது புறக் கடைசியில் இருந்து இடது புறக் கடைசியில் உள்ள அதோட அம்மாவின் கைகளுக்கு இடையில் அமர்ந்திருந்தவர்களால் கை மாற்றி கை மாற்றி கடத்தப்பட்டதை வெகுவாக ரசித்தேன்.படக்கென பிடுங்கி கொஞ்சம் கடிச்சு வச்சிருக்கலாம்..ஒரு இடத்துல உட்கார்ந்தா என்னவாம் ?:)

அட்டகாசமான ஒலித்தரத்தில் இந்த நிகழ்ச்சியிலேயே சிறந்தது என நான் நினைப்பது அச்சு அசலாக உமா ரமணனின் குரலிலேயே வந்த ஆனந்த ராகம் பாடலைத்தான்.வயலின் என்னவோ இது தனக்கான பாடல் என ஆர்ப்பரித்து முழங்கியது.

இது போன்ற தருணத்தில் நம் அலைவரிசைக்கு ஒத்தவர்கள் அருகில் இருந்தால் அந்த சுகமே தனி.குறைந்தபட்சம் மொபைல் வேலை செய்திருந்தாலாவது எண்ணங்களைப் பகிர்ந்திருக்கலாம். இரவு வீடு வந்து ட்விட்டரில்  பறவை&லதா மகனின் ட்வீட்ஸ் முழுக்க வெகுவாக ரசித்தேன்.
ராக்கம்மா கையத் தட்டு பாடலும் அந்த பிரம்மாண்ட அரங்கம் முழுக்க அனைவர் மனத்திலும் அடி வரை சென்றிருக்கும்.குற்றம் குறைகள் இருந்தால் மன்னிக்க வேண்டும் என்று கார்த்திக் ராஜா கேட்டுக் கொண்டார்.அதற்கு ராஜா கொடுத்த நதி நீர் விளக்கம் திரையில் பார்த்து கேட்டுக் கொள்ளுங்கள் :)

கூட்டம் மொத்தமாக வெளியேறும் பொழுது வரும் தள்ளுமுள்ளுவில் இருந்து தப்பிக்கவும் நேரம் கருதியும் கடைசி 15 நிமிடங்கள் மனதே இன்றி வெளியே கிளம்பினோம்.தண்ணித் தொட்டி பாடலும்,என்கிட்டே மோதாதே பாடலும் படு உற்சாகமாய் பாடப்பட்டது.

நான் ரசித்ததை விட ,60 வயது அம்மாவையும் ரசிக்க வைத்த அந்த மாபெரும் கலைஞரை மற்றும் ஒரு பிரம்மாண்டமான மேடையில் SPB யுடன் பார்க்கும் ஆசையைச் சுமந்து வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள் காலை கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த பொழுது காற்றில் இருந்து வந்த "அடி வான்மதி"பாடல் முதல் நாள் நிகழ்ச்சியில் ஒருவரால் சொல்லப்பட்ட ஒரு கருத்தை நினைவூட்டிச் சென்றது.
அது ==> "ராஜா அவர் பசங்களுக்கு சொத்து சேர்த்து வச்சிருக்காரோ இல்லையோ நிச்சயம் தமிழ்நாட்டுக்கு ஏகப்பட்ட சொத்து சேர்த்து வச்சிருக்காருய்யா :) "

கானாபிரபாவுடன் இந்த அனுபவம் பற்றி ஒரு உரையாடல் :)
பாடல்கள் பட்டியல்