Saturday, January 19, 2013

மாலையில் யாரோ மனதோடு பேச ..

இப்படி ஒரு பதிவை எழுத தூண்டுகோலாய் இருந்த நண்பர் @mokrasu அவர்களுக்கு ஒரு வணக்கம்:) 

பல நாட்களுக்கு முன் ஒரு ட்வீட் போட்டேன் சொர்ணலதா பாடியதில் மிகவும் பிடித்தது என்று.உடனே அவரவருக்கு பிடித்த பாடல்களை பகிர்ந்தார்கள் ஆனால் இவர் மட்டும் ராஜாவை விட ரஹ்மான் தான் சொர்ணலதா குரலை நன்றாக பயன்படுத்தி இருக்கிறார் முடிந்தால் ரங்கீலா படத்தில் ஹேய் ராமா யே க்யா ஹுவா பாடலைக் கேளுங்கள் என்று பரிந்துரைத்தார்.அண்ணனின் புண்ணியத்தில் அந்தப் பாடலையும் கேட்டிருக்கின்றேன்.ஆனால் இது ராஜா ரஹ்மான் வாதமே அல்ல சொர்ணலதா பாடியதில் எது சிறந்தது என்று வாதிட ஆரம்பித்துவிட்டார் .நான் எனக்குப் பிடித்தது என்றுதான் யதார்த்தமாய்ச் சொன்னேனே அன்றி எது சிறந்தது என்ற கேள்வியை முன்வைக்கவே இல்லை 

ஆக ஒரு ட்வீட்டையே உருப்படியாய்ப் படிக்க தவற விடுபவர்கள் எப்படி ட்விட் லான்கரைப் புரிந்து கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணி...... :) அன்றைக்கே மனதில் தோன்றிவிட்டது இந்த பதிவு ஒன்று எழுத வேண்டும் என்று .பாடலைப் பற்றி மட்டுமல்ல இன்ன பிற விடயங்களையும் :)

முதலில் இங்கே @nchokkan  @Tparavai @Sharan_kay @Kavi_rt @Tpkd @kanapraba @rexarul @raviaditya @vrsaran இன்னும் பலர் இவர்களைப் போன்றவர்களோடு ஒரே ஜீப்பில் என்னையும் ஏற்றவேண்டாம் .நான் அவங்க அளவுக்கு விஷயம் தெரிஞ்ச ராஜா ரசிகை அல்ல.

ஏதோ என் அண்ணன் அந்த காலத்தில் T - series கேசட்ல பதிவு செய்த பாடல்களைத் திரும்ப திரும்ப கேட்கும் பழக்கம் உடையவள்.இவர்களைப் போல இளையராஜா இசையமைத்த படம் பாடல் என ஒன்று விடாமல் தெரிந்து வைத்திருக்கும் பிரகஸ்பதி அல்ல.என் அண்ணன் நல்ல இசைக்கு ரசிகர் . ராஜா ரகுமான் என்றெல்லாம் வித்த்தியாசம் பார்த்ததில்லை.ஹிந்திப் பாடல்களும் எனக்கு அவர் அறிமுகப்படுத்தியவைதான்
என் அண்ணன் வெளிநாடு சென்ற பிறகு வந்த எந்த ஹிந்திப் பாடலும் யாம் அறியேன் பராபரமே மீதி தமிழ்ப் பாடல்கள் தொலைக் காட்சி வழி மட்டுமே :)

  ரஹ்மான் மீது துளி கூட துவேஷமில்லை எனக்கு 

ஒரே ஒரு ட்வீட் மட்டும் ராஜா காப்பி என்று என் TL ல வந்த RTக்காக. 
அதுவும் ராஜா ரசிகர்கள் உசுப்பேற்றி விடுகிறார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
ரோஜாவும் எனிமா என்ற படத்தின் காப்பி இசைதான் என படித்ததைப் பகிர்ந்து இருக்கின்றேன்.அதுவும் அதை RT செய்த நபர் காரணமாக .அதற்கு முன்போ பின்போ எதுவும் ரஹ்மான் பற்றி எழுத தோன்றியதே இல்லை . 

என்னைத் தீவிர ராஜா ரசிகையாக்கியதில் ட்விட்டரில் ராஜா பாடல்களை  பிடிக்க தக்க காரணங்களோடு விளக்குபவர்களும் காரணமே இன்றி திட்டிக் கொண்டே இருப்பவர்களும் தான் :)

ரஹ்மானை  விட  ராஜாவை ஒரு படி மேலே ஏன் பிடிக்கும் என ஏற்கனவே சொல்லி இருக்கின்றேன் :)

ஏதேனும் மன வருத்தத்தில் இருக்கும் பொழுது எங்கிருந்தோ வரும் பாடல் வரிகள் அசரீரியாய் ஆறுதல் சொல்கின்றன.அவ்வமயம் காது யார் இசை என்றெல்லாம் உணர்வதில்லை
  
 இது  ரஹ்மான் பாடல் கேட்க கூடாது என்ற கட்டளை எல்லாம் என் காதுகள் கேட்பதே இல்லை.முத்து பட பாடலை ஒரே நாளில் ஒன்பது தடவை போட்டுக் கேட்டது நினைவிருக்கின்றது:) கொக்கு சைவ கொக்கு பாடல் ரொம்ப பிடிக்கும் எனத் தோழியிடம் சொல்லப் போக  ச்சே கேவலமான பாடல் வரிகள் என அவள் சொல்ல என்னவென்றே புரியாமல் ஓஹோ என நான் மையமாய்த் தலையாட்டியதும் :) (அவளும் யார் சொன்னதையோ அப்படியே கேட்டுவிட்டே என்னிடம் பிறழாமல் சொல்லி இருக்கக் கூடும் :)
ஆனால் அப்பவே தோன்றியது அரபிக் கடலோரம் ,முக்காபுலா எல்லாம் சீசனுக்கு மட்டுமே என்று..

 அல்லது மெல்லிசையில் நாட்டம் அதிகம் இருந்தது எனலாம் .இன்றும் ரஹ்மானின் மின்னலே நீ வந்ததேனடி ,கையில் விழுந்த கனவா நீ என்று அவரின் மெலடி யாவும் வெகுப் பிடித்தவை .

இந்த ராஜா -ரஹ்மான் கமல் ரஜினி சண்டை எல்லாம் எங்கள் வீட்டில்வந்ததே இல்லை .சரி சமமாக அனைத்தும் ரசித்தேப் பழக்கம் மேலும் பிடித்த நடிகர் படங்கள் வீட்டில் வைக்க அனுமதி எல்லாம் இல்லை .நல்லவேளை அது போன்ற தீவிரங்கள் இல்லாமல் வளர்க்கப்பட்டது :) எங்கள் வீட்டில் ராஜாவைத் திட்டுகின்ற ஒரே ஆள் என் தந்தை :) பல நல்ல பாடல்களை ராஜா பாடிக் கெடுத்து விட்டதாக புலம்புவார் ஒருவேளை என் இளையராஜா பதிவுகளைப் பார்த்திருந்தால்  புருவம் உயர்த்தி இருக்க கூடும் :)

நடிகர்களுக்காக சண்டை கேள்விப்பட்டிருக்கிறேன் இசையமைப்பார்களுக்காகவும்  சண்டை வருமென்பது ட்விட்டர் வந்த பின்பே அறிந்தது.முன்பு வலை பாயுதே டிவிட்ஸ்  எடுப்பவர் இளையராஜா ரசிகர் என யூகித்தும் RT காகவும் ராஜா புகழ் கீச்சிய கைகள் இன்று தனக்கென்று இடம் அமையவும் நக்கல்கள் அதே RT காக :) 

தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்காத சாமான்யர்கள் கூட மெய்நிகர் உலகத்தில் கொஞ்சம் பிரபலம் ஆகவும் போடுகின்ற ஆட்டங்களைப் பார்த்திருக்கின்றேன்.எனக்கு மிகப் பிடித்த  அதிகம் திறமை சாலி என்று நான் நம்பிய நபர் இங்கே புகழ் பெற செய்த யுக்திகளைக் கண்டு நேரடியாகவே சொல்லிவிட்டேன் ஆனால் அதற்கு அவர் உங்களைப் பாராட்டல என்ற கோபம் என திசை திருப்பி விட்டுட்டார் என் கோபமே பாராட்டிற்காக சுயம் இழக்காதே என்பதற்காகத் தான் என்று புரியாமல்
ஹ்ம்ம் ..சில பயங்கர வெறுப்பிற்கு பின்னால் அவர்கள் மீதான ஆழ்ந்த மரியாதையும் அவரின் பிம்பம் உடைந்த அதிர்ச்சியும் காரணமாயிருக்கலாம்

 சாமான்யர்களே இப்படி இருக்கும் பொழுது அப்போ பல லட்சம் ரசிகர்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் ராஜா , அவர்களுக்கு ஆறுதலும் ஆசுவாசமும் அளித்த ராஜா ,திறமை மிக்க ராஜா கர்வத்துடனும் ஆணவத்துடன் இருந்தால் என்ன மோசம். (போலவே ரஹ்மான் இன்னும் பல மெய்யுலகப் பிரபலங்களுக்கும் இருந்தாலுமே கூட  )

 வெறும் குடங்களே அதிகம் சத்தம் எழுப்பும் பொழுது குறைகுடங்கள் கூத்தாடினாலும் நிறை குடங்கள் தளும்பினாலும் என்ன தவறு?



ராஜா கர்வி என்பவர்களுக்கான என் முதலும் முடிவுமான பதில் மேற்சொன்னவை 
ராஜா ஆணவமாய் இருந்தால் என்ன தப்புன்னு கேட்கறீங்க அதுவே நாங்க சொன்னா ஏன் கோபம் வருதுன்னு கேட்ட @Lathamagan க்கு நாங்க அவரை என்ன வேணா சொல்லுவோம் யாரும் கேட்கக் கூடாது அவரை யாரும் எதுவும் சொல்லக் கூடாது நாங்க கேட்போம் :)) 

நீண்ட நாட்களாய்ச் சொல்ல நினைத்தவை :) சொல்லியாச்சு என்ற திருப்தியுடன் 
 
இனி பாடலுக்குள் : இந்தப் பாடல் முழுக்க நீர்ச் சூழலுக்குள் அமைந்திருக்கும் (மோகத் தீ மூட்ட நீரும் காரணமாய் அமையும் எனச் சொல்லாமல் சொல்லவோ ) ஆரம்பமே நீரலைகளின் அசைவைப் பிரதிபலிக்கும் prelude மிக மெலிதான பி சுசீலா வாணி ஜெயராம் குரல் போல அல்லாமல் சற்றே கனமான குரல் போல சொர்ணலதா குரல்.பாடல் என்னவோ மெலடி ரகம் தான் ஆனால் இந்தக் குரலை அப்படியே பிரதி எடுப்பது வெகு சிரமம் என்பது மட்டும் தெளிவு.அதனால் நாம பாட ரிஸ்க் எடுக்காம இது நமக்கான பாடல் என கேட்டுக் கொள்வதே உத்தமம் :) பாடலை எப்பொழுது அர்த்தம் புரிந்து ரசிக்க ஆரம்பிக்கிறோமோ பதின்ம வயது ஆரம்பமாகிவிட்டது என அர்த்தம்.இந்தப் பாடலை சிறு வயதில் கூட நான் கேட்டிருக்கலாம்.படம் எப்போ வந்தது பாடல் எப்போ முதன் முதலில் கேட்டேன் என்பதெல்லாம் நினைவில் இல்லை .பாடல் முழுக்க மெல்லிய மலர்ப் பாதங்களைக் கொண்டு பெண் நடை போடுவது போன்ற இசை இறுதி வரை வரும்  . எந்தக் கருவி என்றெல்லாம் தெரியாது வயலினும் புல்லாங்குழலும் மட்டும் அடையாளம் கண்டு உணர முடிகின்றது :)

இது போன்ற தனிமையில் காலார நடப்பது என்று பேச்சுத் தமிழில் சொல்வார்கள் அது போன்ற நடை இந்தப் பாடலில் பார்க்கலாம் மெல்ல நடை பயில்கின்றது இசை அந்தப் பாவையோடு 
 
 சின்னதாய் ஒரு கல்லைப் போட்டதும் அதை மையமாய் வைத்து விரிவடைந்து செல்லுமே அலைகள் அதைப் போல இந்த மோகம் என்ற ஒன்று வரவும் அதைச் சார்ந்து உருவாகும் கிளர்ச்சிகளைச் சொல்வது போல அந்த prelude ஐப் பார்க்கின்றேன் .பெண்ணின் மன உணர்வுகளைப் பல காலம் அருகிருந்து கவனித்திருந்தால் ஒழிய இப்படி எல்லாம் வரிகள் வந்து விழாது.வாலிக்கு ஒரு பெரிய வந்தனம் _/\_ (தகவல் உதவி : கூகிளாண்டவர் ) மயங்கும் மாலைப் பொழுதும் மார்கழி வாடையும் மெதுவாய் வீசியே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது 

மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச 
தேகம் பூத்ததே ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும் ஓ ..ஓ மௌனம் வந்ததோ 

முதன் முதலில் திருமணமான தோழியை வம்பாய் கலாய்த்த பொழுது அவள் சொன்னது "ஆண்கள் எப்படி வேணும்னா இருக்கலாம் நமக்கு feelings வந்தா நாம காட்டிக்கவே கூடாது அமைதியா இருந்துடணும் " இது எந்த விதத்தில் சரியான வழிகாட்டுதல் என்றெல்லாம் தெரியல ஆனா என் குணத்திற்கு மிக பொருந்திப் போனதால் மிக ஆழமாகப் பதிந்து போனது.
 
பெண்களின் மௌனத்திற்கு பல அர்த்தங்கள் அதில் ஒரு காரணமாக இந்த மோகமும் நிச்சயம் இருக்கும் :)

வலிய சென்று ஒரு பெண் காதலுக்காக துரத்துவதாக காட்டுவது பெரிய ஹீரோக்களுக்கு ஒரு பெருமை.ஆனால் யதார்த்தம் வேறு.ஏதேனும் ஒரு தருணத்தில் நீ தானே வலிய வந்தாய் நானில்லையே என்று ஆண் சொல்லிவிடக் கூடும் என்ற பயம் காரணமாக இருக்கலாம் அல்லது பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப் பாடுகளுக்குப் புறம்பாய் நடக்கும் பொழுது அதை பிறர் எப்படி எடுத்துக் கொள்ளக் கூடுமோ என்ற எண்ணம் காரணமாக இருக்கலாம் நான் இங்கே சொல்வதெல்லாம் என்னையும் நான் அறிந்த பிற பெண்களைப் பற்றியும் அதனால் அப்படி எல்லாம் பெண்கள் இப்போ இல்லை என சண்டைக்கு ஓடி வந்து விடாதீர்கள் :)


வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற 

ஆசையை நாணம் கட்டுப்படுத்துவதை வெகு இயல்பாய்ச் சொன்ன வரிகள் இவை  மனதிற்குப் பிடித்த ஒருவனை கனவுகளோடு நினைத்து சுகிப்பது கற்பனைகளை வளர்ப்பது இப்படி அனைத்தும் பதின்ம வயதுகளில் மட்டுமே சாத்தியம் பின் விளைவுகளைப் பற்றி யார் கவலைப்படப் போறோம் அப்போ?:)

அது போன்ற கனவில் மிதக்கும் பெண்ணாக மோகத்தில் ஆடை நெகிழ்ந்தும் அதைச் சரி செய்ய விரும்பாமலும் அசாதாரண லுக்குடன் அந்நியமாக்காமல் நம் பெண்களைப் போன்ற இயல்பான மாநிறத்துடனும் களையான முகத்துடனும் பார்க்க சலிக்காத ,கண்களை அதிகம் உறுத்தாத கவர்ச்சியும் பானுவின் பெரிய பலங்கள் அதிரடியான ஊர்மிளாவின் ஹே ராமா யே க்யா ஹுவா வை விட பானுவின் இந்த மென்மையான தாக்குதல் அதிகம் 

நிச்சயம் பானுவைப் பார்த்த நொடி பைத்தியம் பிடித்துவிடும் நல்ல மனநிலையில் உள்ள எந்த ஆணுக்கும் :)அலைகள் வெல்லி ஆடை போல என உச்சரித்து இருப்பார் பானு அது மட்டுமே உறுத்தல் :)




நல்லவேளை மோகம் சேர்ந்த மோனத் தவத்தைக் கலைக்கவென்று கூட்ட நடனங்கள் அமைக்காமல் விட்டது.இது போன்ற நேரத்தில் தனிமை நல்லது :)

நெஞ்ஞ்சமே பா..ஆட்டெழுது அதில் நாயகன்ன்ன் பேஏஏர் எழுது...இன்னமும் சொர்ணலதா குரல் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது 

சமீபத்தில் கடல் படத்தில் கேட்ட நெஞ்சுக்குள்ள பாடல் சொர்ணலதா பாடி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் எனத் தோன்றியது. ஹ்ம்ம்...இன்மை உணர்கிறோம்

இந்தப் பாடலைத் தேடிப் போய் கேட்க தோன்றியதே இல்லை என சொல்லவும் எனக்கு ஆச்சர்யமாகவே பட்டது.

ஆனால் ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை .ட்விட்டரில் நண்பர்  ரசனைக்காரன் தனது நாகிர்தனா பாடல் விமர்சனத்திற்கு கருத்து கேட்டிருந்தார்.அவர் அவ்வளவு உருகி இருந்த அளவுக்கு என்னை அந்தப் பாடல் ஈர்க்கவே இல்லை என் செய்வேன் ?:)எனக்கு ஈர்க்கவில்லை என்பதற்காக நல்ல பாடல் இல்லை என்றாகி விடாதில்லையா?

போலவே சுந்தரி கண்ணால் ஒரு சேதி பாடலை மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்த வேளையில் குறுக்கே ஒரு குரல் பக்கத்தில் இருந்த பெண் "அக்கா என்னக்கா இந்தப் பாட்டு நல்லாவே இல்லை ;படமும் வெளங்காத படம் "எனத் தலைசொறிந்து கொண்டே சொன்னாள் .எதுவும் பேசத் தோன்றாமல் இமையை மட்டும் கொலைவெறியோடு உயர்த்தினேன் :) 

அந்தப் பாடலுக்குத் தனி பதிவே போடும் அளவுக்கு என்னுள் தாக்கம் உண்டு :)

தளபதி படத்தில் சில காட்சிகள் தவிர முழுதாய்ப் பார்த்ததில்லை என்று எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினாள் (முழுசா பார்க்காமலே விமர்சனம்)  பதட்டமாய் பாடல் ,படம் எப்படிப்பட்டது என்று விளக்கம் கொடுக்கவெல்லாம் முற்படவே இல்லை.அவளேதான் தினம் அலுவலகம் வரவும் கிழக்காலே செவுத்துப் பக்கம் பாடலை தவறாமல் இரண்டு முறையேனும் கேட்பவள் என்றேனும் ஒருநாள் இந்த சுந்தரி கண்ணால் ஒரு சேதி பல சேதிகள் சொல்லக் கூடும் என விட்டுவிட்டேன் :)

 நான் ரசித்த சில ராஜா டிவிட்டுகள் இங்கே 
இருந்துட்டுப் போட்டுமே.. :) 
ஆனா என் ப்ளே 
என் ஃப்ரெண்டோட அப்பா  
அதுதான் 
பரபரப்பான நிகழ்காலத்தை  
ராஜவ ரொம்ப புகழுறதா
ராசா தன் இசைக்கு
பத்து அல்லக்கைகளை
ஆனபோதும் இங்கு
சுட்டுவிரல் நீ காட்டு
மெட்டாவது, வரியாவது
தொண்ணூறுகளுக்கு முந்திய
#வந்தனமு
எண்பதுகளின் நாயகிகள்
கண் பார்வையற்றவருக்குக் கூட
இசைஞானியும் நடிகர் திலகமும்
ரஹ்மானின் ஆரம்பகாலப் பாடல்களை
ஒவ்வொரு உணர்வுகளுக்கும்
என் மனதில் பூட்டிவைத்திருக்கும்
ஜெனிபர் டீச்சர்