Tuesday, October 18, 2011

பெருமூச்சு ...5!

எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம் 

நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
*******************************
யாதுமாகி நீ நின்றாய்
வேறு யாதொன்றும் 
இல்லாமற் போனது ..
****************************  
விலகி (__ ) செல்லாமல் 
அருகில் வந்து இதழ் 
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************ 
நான் சிரிக்கப் 
பொறுக்காதவன் நீ 
சட்டென்று என் இதழ் மூடி ... ;)
********************************************************
உன்னால் மட்டுமே உதிர்ந்து விழும்
மணல் கோட்டைக்கு 
"திமிர்"எனப் பெயரிட்டு இருக்கின்றேன்..
******************************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
*******************************  
உன் சுளித்த புருவங்களுக்கிடையே
சிக்கித் தவிக்கிறேன் 
சீராக்கி நீ சிரிக்கின்ற வரையில்...
******************************************  
நம் இடைவெளிகளை 
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
மௌனங்களும் உன் நினைவுகளும்
*************************************************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உச்சி முகர்ந்து நெற்றியில் 
கொடுக்கும் நின்
முத்தங்கள் யாவும் நீ
எனக்களிக்கும் ஆசீர்வாதங்களாகின்றன
********************************************************
உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம் 
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன் 
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம் 
மழைக் கரம் நீட்டி 
"மாமழை"
*************

Monday, October 10, 2011

ஊமை உள் நாக்கு!

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்-எவ்வளவு வாஸ்தவமா சொல்லி வச்சுட்டுப் போயிருக்காங்க.நீண்ட நாட்கள் ஆயிற்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று தான் தோழி வீட்டிற்கு சென்றது.இன்று மனம் விட்டு அவள் பகிர்ந்து கொண்ட வேதனைகளை அறிந்தபின் தான் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம் ஒரு விதத்தில் என உணர முடிந்தது.காதல் திருமணம் செய்து கொண்ட தோழியை விட அவர் கணவர் அழகு கம்மி.படிப்பும் கூட.இன்று வரை எங்கேயும் அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அவளை அழைத்துச் செல்வதில்லை.அவளை விட அழகு கம்மி என்ற தாழ்வு மனப்பான்மையினால்.பிறந்த வீட்டுடனும் அவர் தகராறு என்பதால் அங்கேயும் போவதில்லை.பக்கத்து வீட்டில் "நீங்க ஏன் வெளியே வருவதே இல்லை உங்க வீடு மாடிக்கு கூட எப்பவாவது தான் வர்றீங்க"என்று சொல்லி இருப்பாங்க போல.பக்கத்து வீட்டில் என்னைத் தப்பாக நினைப்பாங்களா உமா எங்கேயும் வெளியே செல்லாமலே இருப்பதற்கு எனக் கேட்டாள்.எனக்கு புரியவில்லை இதில் தவறா நினைக்க என்ன இருக்கு? என்று கேட்ட பின் மெதுவாகச் சொன்னாள்.அவள் உறவினர் பெண்மணி உன் கணவன் என்ன உன்னை சின்ன வீடு மாதிரி வச்சிருக்கான் அதனால் தான் எங்கயும் கூட்டிச் செல்வதில்லை என்று.சொல்லி முடிப்பதற்குள் பொலபொலவெனக் கண்ணீர்.சில வார்த்தைகளைத் தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றும் தன் அம்மா வீட்டு மீது உள்ள கோபத்தில் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார் என்றும் ஒவ்வொன்றாகச் சொல்லி வெடித்து அழ ஆரம்பித்தாள்.எனக்கென்று போக்கிடம் இல்லை உமா ஒரு நாள் வேதனை தாங்காமல் குழந்தையை எடுத்துக் கொண்டு பார்க்கில் மாலை வரை அமர்ந்து விட்டு வந்தேன்.குழந்தை பிறந்த நேரத்தில் கூட அடி வாங்கி இருக்கிறேன் அவரிடம் என்று அனைத்தையும் சொல்லி அழுது தீர்த்து விட்டாள்.மௌனித்தேன் அவள் பேசி முடிக்கும்வரை.என்னையும் அப்பிக் கொண்டது அவள் கண்ணீர்.அவள் குழந்தையும் என்னை ஆ வெனப் பார்க்கும்.காரணம் அந்த வீட்டிற்குச் செல்லும் ஒரே வெளி ஆள் நான் மட்டுமே.அவள் கணவர் குணம் ஓரளவுக்குத் தெரிந்ததாலும் மேற்கொண்டு எதையும் மறுக்க முடியவில்லை.இருப்பினும் மனதிற்குள் அவரைத் திட்டிவிட்டு அவரிடம் உள்ள பாசிடிவ் கண்ணோட்டங்களாகத் தேடி எடுத்து ஆறுதல் சொல்லவும் தான் கொஞ்சம் அழுகையை நிறுத்தினாள்.இதை விட மோசமான வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய என்றெல்லாம் சொல்லித் தேற்றினேன்.ஆயிரம் ஆணீயம் பெண்ணியம் எனப் பேசினாலும் யதார்த்தம் எப்பொழுதுமே வேறாகத் தானிருக்கின்றது.குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் குழந்தை என்ற காரணத்திற்காக மட்டுமே மனதிற்குப் பிடிக்காத வாழ்க்கையை சகிப்பவர்கள் தான் அதிகம் இங்க.சரி செய்யப்பட முடியாத தவறுகளில் பலருக்கு திருமணமும் ஒரு முக்கியமான ஒன்றாகவே இருக்கும்.பெரியார் பெண்களும் பிடிக்கவில்லை என்றால் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் விவாகரத்து அவசியம் என்று குரல் கொடுத்தது எவ்வளவு தீர்க்க தரிசன வார்த்தைகள்.இது ஒரு புறம் என்றால் கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரியாமல் சிறு சிறு குறைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றிற்கும் பெண்ணியம் பேசி வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் பெண்களைப் பார்த்தால் கோபமாக வரும்.எல்லா இடத்திலும் பொங்கி பொங்கி பொங்கல் வைக்க முடியாது.என் தோழியே ஆயினும் அவள் கணவனிடம் நியாயம் கேட்டா அவ வீட்டுக்குச் செல்லும் ஒரே ஆளும் கட்.மேலும் பிரச்சனை அதிகமாகும்.அல்லது அவளே என் கணவரை எதுவும் சொல்லிடாதே ன்னு சேம் சைட் கோல் போடுவா.
சில அல்ல பல நேரங்களில் பல விசயங்களைக் கண்டும் காணாமல் செல்ல வேண்டியது அர்த்தமானதும் அன்றாடத் தேவையும் கூட ஆகிப் போனது 
உள்நாக்குகள் பேச உதவா ஊமைகள்.என்னிலும் உண்டு ஊமை உள் நாக்குகள்.


பெருமூச்சுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன்