Wednesday, January 6, 2016

எனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015-பகுதி 1

சும்மா விளையாட்டா 2012ல எழுத ஆரம்பிச்சது..ஓர் ஆத்ம திருப்திக்காக .. இந்த ஆண்டும் எழுதத் தோனுச்சு :)அன்றிலிருந்து இன்றுவரை என் மனதில் உள்ள மதிப்பு மாறாமல் இருப்பவர்கள் சிலரே..எனக்கு அவங்க மேல பிம்பம் உடைஞ்ச மாதிரி என் மீதான அவங்க பிம்பமும் ஏதேனும் ஒரு தருணத்தில் உடைஞ்சு இருக்கலாம்..2011ல் வந்த நாள் முதல் நான் நானாகவே இருக்கிறேன் என இன்னமும் நான் நம்புகிறேன்..இன்னமும் கூட சிலரைப் பின்தொடரவிடிலும் எனக்குப் பிடிக்கும்..ஆனா மாறுபட்ட எண்ண அலைகள் , முன்னம் பெற்ற அனுபவம் ஒதுங்கியே இருக்கச் செய்கிறது.. இசை , அரசியல் ,வேறு சில ரசனைகள் 60% ஒத்துப்போகும் நபர்களை பின்தொடர்கிறேன்.

@RelaxplzzTamil  நாம் எழுதும் டிவிட்டை காப்பி அடிச்சு சொந்தமா போடுபவர்களுக்கு மத்தியில் , அதைப் புகைப்படத்தில் அச்சேற்றி  நம் பெயரோடு நமக்கே mention இடுவார்கள்.. இதுவே வாட்சப்பில் நம் பெயரோடு உலா வரும் அப்ப இனம் புரியாத மகிழ்ச்சி :) சமீபத்தில் எனது ட்விட்டர் pin ட்வீட் என் அண்ணன் தோழர் மூலமாக எனக்கே வந்தது..எத்தனை சுற்று சுற்றியிருக்கக் கூடும் என்பதே தனி மகிழ்ச்சியாக இருந்தது :)


@AmadhavaVarma தொல்லியல் ஆய்வாளர்.  மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் சிற்பங்கள் மீது கொண்ட காதல் இவரைப் பின் தொடர வைத்தது..பல அரிய சிற்பங்களை இவர் படமெடுத்துப் போடும் போது ஆச்சரியமாக இருக்கும்..சிற்பங்கள் மீதும் அவற்றை அறியவும் ஆர்வம் உள்ளவர்கள் பின் தொடரலாம்..ஆர்வத்திற்கு தீனி நிறைய கிடைக்கும். பழந்தமிழர் சிற்பக்கலை பற்றி வருங்கால சந்ததியினர் அறிய இவரைப் போன்றவர்கள் செய்யும் முயற்சிக்கு ஒரு வந்தனம்.

@KollywoodGifs   தமிழ் சினிமாக் காட்சிகளை தகுந்த தருணத்திற்கு gif படமாக்கி போடுவதில் வெகு கெட்டி..
@Mythili_Br   நகைச்சுவை உணர்வுள்ள பெண் கீச்சர்..எந்த சென்சேஷனல் டாபிக்கிலும் தலைக் கொடுக்காமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டே இவர் போடும் ஜாலி கேலி டிவிட்கள் அதகளம்..குறிப்பாக இவர் மிச்சர் சாப்பிட இடைஞ்சலா இருக்கிறதைக் குறை சொல்லி ஒரு டிவிட்லான்கர் போட்டாங்க பாருங்க :)) படிச்சுப்பாருங்க நாடி நரம்பெல்லாம் மிக்சர் சாப்பிடுற வெறி இருக்கறவங்களால் மட்டுமே இப்படி எழுத முடியும்.. :)) ஆபீஸ் மீட்டிங்கிலும் எப்போ பிஸ்கட் கொடுப்பாங்க எப்ப டீ கொடுப்பாங்க என்ற டேட்டாபேஸ் தான் நிறைய வச்சிருப்பார் .ஒரு கூட்டமா எதைப் பத்தியும் கவலைப்படாம மொக்கை போடுற கூட்டம் இவங்களுது :) funny girl மாரி :)
சமீபத்தில் வெள்ளநேரத்தில் இங்க RT ஆகி வர்ற நம்பர்களை verify பண்ண , ஒரு ராங் காலிடம் வாங்கிக் கட்டியதை இவரும் இவரோடு வாங்கிக் கட்டிய பலரும் ஒவ்வொருவராக ஒன்றன் பின் ஒன்றாக ஆஜரானதில் இரவு 12 மணிக்கு வயிறு வலிச்சு சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டோம் ..மறுநாள் தடயத்தை பூரா அழிச்சுட்டாங்க ராஸ்கல்ஸ் :)) தாமோதர ஆசான் விஷயம் போலவே இதிலும் ராங் கால் நபரிடம் வாங்கிக் கட்டிய ஆண் கீச்சர்கள் கமுக்கமாக இருக்க , பெண்கள் தான் ஜாலியாக உடைத்து விட்டார்கள் :) பொண்ணுங்க எல்லாம் இதயதாமரை ஜனகராஜ் மாதிரி வாயில இருக்கிறது சிகரட் இல்ல பட்டாசு தான்னு யாராஆஆஆவது சொல்லிருக்கக் கூடாதா mode ல பேச ஆரம்பிக்க , ராங்  கால் நபரிடம் பேச ஆரம்பிச்சு,அவர்  முழுசா திட்டறவரை அமைதியா இருந்தேன்..கடைசியா தான் தோனுச்சு முதல்லயே போனை கட் பண்ணிருக்கலாம்னு என முத்தாய்ப்பாக முடிச்சு வச்சாங்க வேற ஒரு கீச்சர் :))

@Real_Kadavul  போடும் ட்வீட் எல்லாமே அதிரடி ரகம் ..கடவுளே காண்டாகி நேராகப் பேசுவது போன்ற பிரம்மை :) ஆனா fake id maintain பண்ண முடியல போல கடவுள் அடிக்கடி வாறதில்லை இப்ப :)

@JAnbazhagan  திமுகவுக்கு கிடைத்த முத்தான MLA . வெகு அழகாக இணையத்தைக் கையாள்கிறார்.. இனிமையான பேச்சு..நக்கல் பதிலுக்கும் பணிவான பதில். தேவையில்லாதவற்றை அழகாக ஒதுக்கி விடுதல்..MLA பெரிய ஆள் என்ற எண்ணம் இன்றி சகஜமாக பல சாமானியர்களையும்  இங்கே பின் தொடர்கிறார்..சென்னை வெள்ளத்தில் கரண்ட்,நெட்வொர்க் இல்லாமல் பாதிக்கப்பட்ட பொழுதும் , அடுத்தவரிடம் வண்டி வாங்கி தொகுதிக்குச் சென்று பார்த்து வந்து நிவாரணப் பணிகளும் செய்ததை கவனித்தேன். நான் வியக்கும் பண்பாளர் .

@ChittizeN   கேண்டிட் போட்டோகிராபர்..இவர் கை வண்ணத்தில் பல கீச்சர்களின் திருமண ஆல்பம் அழகுற்றது :)

@gurussiva அருமையான நகைச்சுவை எழுத்தாளர்..ஏனோ இப்ப அதிகம் வருவதில்லை

நம்ம அலைவரிசைக்கு தகுந்தாற்போல் ஆட்கள் வந்து சேர்ந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. அது போல வெகு யதார்த்தமாக வந்தவர்கள் இவர்கள்
@isai_  @NamVoice  @ak_nirmal @Paramporul @Pa_Siva  

இதில் இசையின் தமிழ் , வாசிக்கும் நாவினைச் சுழற்றி அடிக்கும் :) படிச்ச உடனே புரிஞ்சுட்டா பெரிய விஷயம் தான் .
@imdiganesan  @Rdeepakk  பகுத்தறிவு பேசும் பலரும் , பெண்களை மானாவாரியாக நக்கல் அடிக்கும்போது அங்கே பகுத்தறிவு அடிப்பட்டுப் போகிறது.  பெண்ணை மதிப்பதற்கும், கடலை போடுவதற்கும் வித்தியாசம் தெரியாத மானிடர்கள் பகுத்தறிவால் யாதொரு பயனும் இல்லை.இன்னும் சொல்லப் போனால் ,கயமை இந்துத்வாக்களுக்கு இது போன்றவர்களால் ஒட்டுமொத்த பகுத்தறிவாளர்களே இப்படித்தான் என பொதுமைப்படுத்த ஏது செய்கிறார்கள்.. இவர்கள் அவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் .

@thachimammu  கீச்சுக்கள் பெரிதாக ஈர்க்கும் எனச் சொல்ல மாட்டேன்..ஆனால் சத்தமில்லாமல் பல உதவிகள் செய்பவர்...இங்கே வரும் நெகடிவ் கீச்சுகளுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல் தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர்..சமீபத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் கூட தாமதமாகவே வந்து அப்டேட் செய்தார். கமலுடனான அவரது சந்திப்பை ஒரு ரசிகனின் பார்வையில் சொன்னது மட்டும் மறக்கவே முடியாது :) தனக்குப் பிடிச்ச விசயங்களை மட்டுமே பேசியும் பகிர்ந்தும் விட்டு நகர்கின்ற சில டிவிட்டர்களில் ஒருவர்..ஒரு தனி கூட்டம் இருக்காங்க..இவர் ,சாய் சித்ரா இப்படி சிலர் சேர்ந்து ஒன்றாக ஒரு இடத்தில் கூடி அங்கே ராஜா பாடல்களை இசைமைத்துப் பாடி இன்புறுவர்..ஒரு நாளாவது அதை வேடிக்கை பார்க்கணும் என்று ஆசை :)

@Shaan_64   அனேகமா டிவிட்டரில் எல்லாருக்கும் இவங்களப் பிடிக்கும் என நினைக்கறேன்..ஏனெனில் இங்கே பெரும்பாலும் இவர் வேடிக்கையாளர்...ரசனையாளர்..சமீபமாக உரையாடல்களில் இவரது டைமிங் புகைப்படங்கள் கவர்ந்து இழுக்கின்றன ..அரசியல் சார்ந்த கருத்து கூட ஒரு பொதுசனத்தின் பார்வையில் தான் விழும்..


@AasifNiyaz  மிக தாமதமாகவே பின் தொடர்ந்தேன்..நல்ல சிந்தனையாளர்... தன் மதம் சார்ந்த நம்பிக்கை எனினும் பர்தா விசயத்தில் பெண்கள் விரும்பவில்லை எனில் வற்புறுத்துதல் கூடாது என நிதானமாகச் சொன்னவர்.... தமிழார்வலர் .இடைச்சங்கம் கடைச்சங்கம் பாடல்கள் பற்றி @kryes  உடன் இவரது உரையாடல்களை விரும்பிப் பார்ப்பேன்.. ஆவேசம் இராது..அறிந்து கொள்ளும்/பகிரும் ஆர்வம் மட்டுமே மேலோங்கி நிற்கும்..பல விசயங்களிலும் இதே நிதானம் தான் இவரிடம் :)

@Aanandraaj04  ஆனந்தராஜ் ஜெயின் என்றே அழைக்கும் அளவுக்கு சமணக்கருத்துகளை அள்ளித் தெளிப்பவர் :) தகவல்கள் ,அரசியல், அப்பப்ப கிரைண்டரில் மாவாட்டியும் சப்பாத்தி சுட்ட வாக்கிலும் வரும்..விவாதங்கள் பார்க்கப் பிடிக்கும்..ஆனா தப்பித் தவறி விவாத வண்டியில் ஏறிட்டா நான்ஸ்டாப்பா பல நாள் ஓடும்..(கதறிஅழறசுமைலி ) கேப்டன் சார் உங்க ட்ரைன் தான் அலர்ஜி மத்தபடி தகவல்கள் படிக்கப் பிடிக்கும் :) அதே நேரம் இவரோடு முரண்படும் விசயங்களும் உண்டு.  விவாதங்கள் விஷயங்கள் பகிரும் நோக்கிலோ அல்லது ஆரோக்கியமாக இல்லை என்றாலோ நான் பெரும்பாலும் தவிர்த்து விடுவேன்..இதனாலேயே சிலரை mute ,ப்ளாக் செய்ததுண்டு..ஆனா திரும்பத் திரும்பப் பேசியதையே பேசுபவர்களிடமும் , ரசிக சண்டையாளர்களிடமும் விடாக்கொண்டனாக இவர் பேசறப்ப வேடிக்கை பார்க்கிற நமக்குத்தான் களைப்பாகும்ன்னா பார்த்துக்கிடுங்க.. தெய்வ கேப்டன்(தெய்வ மச்சான் tone இல் வாசிக்கவும் )

@apssara2013  நான் அதிகம் ரசித்த குரல்..ஒலிமுகிலில் பல பாடல்கள் பதிவேற்றி வைத்திருக்கிறார்..எல்லாமே ரசிக்கலாம். முறையான பயிற்சியும் சரியான மேடையும் கிடைச்சா பெரிய பிரபலமாக வாய்ப்பு இருக்கு..ஆனா இங்க ஒவ்வொரு ட்விட்டர் கிட்டயா  மைக்கை நீட்டி கருத்து கேட்டு பொங்கிப் பொங்கல் வைக்கவே நேரம் சரியா இருக்கு..அப்ப மட்டும் அம்மா தாயே முடியலன்னு மனசு கிடந்து கதறும் :)) இவங்க பாட்டு கேட்கறதை விட்டுட்டு ட்வீட் மட்டும் பார்த்து கதறுனா கம்பெனி பொறுப்பேற்காது :))


@Gokula15sai  முழுக்க முழுக்க வேலைவாய்ப்புத்தகவல்கள் சார்ந்த RT .அவ்வப்போது அரசியல் ..நடிகர் சார்ந்த கீச்சு ,மொக்கை அறவே இராது..

@jebz4  @sheeba_v  டிவிட்டரின் இரட்டை வாலுகள்.. ஷீபா சில விசயங்களில் பக்குவம்.. ஜெபா தன் நட்புக்காக என ஆரம்பித்து அரசியல் வரை அத்தனையிலும் கம்பு சுற்றுவார்.  நான்லாம் இங்க இலகுவாகப் பேசுவதே குடும்பம், நெருங்கிய நட்பு இல்லன்னு தான்..ஆனா இவங்க குடும்பமா இங்க ஆக்டிவா இருக்கிறப்ப எப்பேர்ப்பட்ட புரிதல் அவங்களுக்குள்ள இருக்கக்கூடும் என வியந்ததுண்டு..பாசத்தைப் பிழிஞ்சு எடுக்காம ஒருவருக்கொருவர் கலாய்த்து கொள்வதும், ஆனால் உள்ளார்ந்து ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத தன்மையும் என்னை அசர வைக்கும். மேலும் பின்தொடர்ந்தாலும் அவ்வளவு இலகுவாக நானும் நெருங்கவில்லை. இவர்களையும்  நெருங்கவிடவில்லை .ஒரு கூட்டமா மொக்கை போட்டு மண்டை காய வைப்பாங்க..மேலும் நமக்குப் பிடிக்காதவர்களிடம் நெருக்கம் காட்டறப்ப இவங்க மேல வெறுப்பு வராட்டியும் ஒரு ஒதுக்கம் இருக்கும்..ஆனால் அதையும் தாண்டி ஜெபா கொஞ்சம் கொஞ்சமா என் வேலியை உடைத்து உள்ளே வந்துவிட்டாள் :) ரொம்ப பெர்சனலா பகிர்வது இல்லை எனினும் , பெயரைப் பார்த்ததும் புன்னகை இயல்பாய் வருமளவுக்கு மனதின் ஓரம் இருக்கிறார்கள் :)

@eestweets  வரலாறு முக்கியம் அமைச்சரே எனும் ஹிஸ்டரி வாத்தியார்:) எல்லா செய்திகளுக்கும் ஒரு நதிமூலம் ரிஷிமூலம் இருக்கும் இவர்கிட்ட..அதனால பார்த்துப் பேசணும் :)

@Mayilrekka  பொதுவா ஆண்டு இறுதியில்  பின்தொடர்ந்தவர்களைப் பற்றி நான் எழுதுவதில்லை.  ஆனாலும் இவர் ட்வீட்ஸ் எல்லாமே பிடிச்சுப் போனதால எழுதறேன்..எப்படி மிஸ் பண்ணோம் இத்தனை நாள் எனத் தோன்றியது.   ஒவ்வொரு கவிதையிலும் ஓர் அழகான காதல் சிறுகதை .  சில நேரம் நம் கற்பனைகளுக்கு எழுத்து வடிவம் கொடுக்கத் தடுமாறுவோம் அதை எவரேனும் சொல்றப்ப அடடேன்னும் கொஞ்சம் பொறாமையும் நமக்கு முந்திக்கிட்டாங்களே என்று ஒரு குற்றச்சாட்டும் தோன்றும்..அது போலத் தோன்றியது இவரது சில கீச்சுக்கள்..:) இவரது அரேன்ஜ்டு மேரேஜ் பார்ட் 1பார்ட் 2 ரெண்டுமே வெகு ரசனையான நிச்சயிக்கப்பட்ட காதல் கதை :)

@Kurunthokai   குறுந்தொகைப் பாடல்களும் அதன் ஆங்கில விளக்கமும் .நல்ல முயற்சி.
@udanpirappe  இவருடைய முகநூல் பதிவுகளுக்கு நான் ரசிகை..இங்கயும் தான் sense of humor அள்ளும் .முதல் வரியில் உருகி ,ஆகா என்ன ஒரு காதல் என நாம நம்புறதுக்குள்ள அதுக்கு கவுன்ட்டர் கொடுத்து கலாய்த்து வச்சிருப்பார் மனுஷன்..என்னமோ இப்ப அந்த வகை கவுஜகளைக் காணோம்.. :)

@WhimsyDaisy   தங்க்லீஷ் ல எழுதி கண்ணு வலிக்க வைப்பாங்க..ஆனாலும் பின் தொடரக் காரணம் rare ஆக வரும் விசயமுள்ள விவாதங்கள்.  அவ்வப்போது வந்து போகும் கணவன் மனைவிக்கு இடையேயான நகைச்சுவை உரையாடல்கள் ,ஓர் அம்மாவாக எழுதும் arjundays மகனதிகாரம் .

@Lakschumi  பெண்ணியவாதி பிடிக்காத பெண் கீச்சர் :) எவரிடமும் ஒட்டாமல் மேலோட்டமாகப் பேசி விட்டே நகர்வார்..  ஏதோ மோசமான அனுபவம் போல..பல விசயங்களில் நாங்க நேரெதிர் ..ஆனாலும் விவாதம் தவிர்த்து மௌனம் காத்து,  இப்போ தள்ளி நின்று புன்னகைக்கும் அளவுக்கு ஆகியாச்சு..:) இவங்க வாழ்த்தினா அன்றைய நாள் இனிதாக இருக்கும் என்பது எனது சமீபத்திய நம்பிக்கை :)

@nivethee  மான் விழியாள்ன்னு போட்டிருக்காங்க .எனக்கென்னவோ அது முட்டைக் கண் மாதிரிதான் தெரியுது... :) இவங்களோட ஒரு ரசனையான கிண்டல் பார்த்து பின் தொடர்ந்தது..மாணவப் பத்திரிகையாளர்..(எனக்கு இது ஒரு காலத்தில் கனவு ..ஆனா முயற்சி எடுக்கல :)) ) குறைந்தபட்ச நேர்மை உண்டு.. ராஜா-நிருபர் சர்ச்சையில் வீணாக தம் கட்டல..அதே நேரம் விஜயகாந்த் த்தூ வுக்கு,  நான் விகடன் உட்பட பொதுவா மீடியாவுக்கு டிவிட்லான்கர் எழுதியப்ப விட்டுக் கொடுக்காம ,கோபப்படாம நிதானமா சில கருத்துக்கள் சொன்னாங்க .  எனக்கு அது சரியான பதிலாக தோனாவிடிலும் கோபம் வரல..ஏனோ இவங்களுக்காகவே ஆனா இவங்களிடம் சொல்லாமலே அந்த விகடன் கட்டுரைக்கு எழுதிய எதிர்வினையைநிறைய RT ஆன பிறகும்கூட அழித்துவிட்டேன்..ஒரு சின்ன வருத்தம் கூட இல்ல அதுல :) I just love her attitude.  சிலரை ஏன் பிடிக்கும்ன்னே தெரியாது..அதிகம் பேசாட்டி கூட ஏதோ ஓர் ஈர்ப்பு இருக்கும்..இவங்களைப் பத்தி இங்க எழுதி வச்சிருந்த அதே நேரத்தில், யதார்த்தமா தனக்குப் பிடித்த டிவிட்டர்கள் லிஸ்ட் ல என்னையும் சேர்த்து எழுதி இருந்தாங்க..அதுவே எனக்கு ஆச்சரியம்தான் :)

பலரைப் பத்தி முன்பே எழுதியாச்சு..பிடிக்காம என் TL ல யாரையும் நான் சகிப்பதில்லை..ஏதேனும் வருத்தம் வந்தால் கொஞ்ச நாள் mute அப்புறம் எடுத்து விட்டு சகஜமாகப் பேசுதல் நல்லாருக்கு..இந்த mute option தான் ஜாக் கொடுத்ததிலேயே பெஸ்ட் :)

எல்லாம் ஒரே நாளில் எழுதியது அல்ல..  அப்பப்ப தோன்றத draft ல போட்டு வச்சு எழுதறது..உட்கார்ந்து ஒரே மூச்சில் எழுதுவதில் சில விட்டுப் போகக் கூடும்..நேரம் கிடைக்காது..சில நேரம் கருத்துக்கள் மாறுபடும்...அதனால் தான் ரொம்ப ரொம்ப மெதுவா எழுதி இப்ப வெளியிடறேன்.. :)
***********************************
அடுத்தும் ஒன்று தொடரும் :))
***********************************













Monday, December 14, 2015

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ..

பாடல் : காதல் ஊர்வலம் இங்கே..
படம் : பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை : டி. இராஜேந்தர்
பாடலாசிரியர் : டி . இராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,சித்ரா
இந்தப் படத்துக்கு இசை டி. ராஜேந்தர் என்பதே எனக்கு இணையம் வந்துதான் தெரியும்..ஆ!ச்சரியம்.. இயக்குநர் ,பாடலாசிரியர் ,இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திறமையாளர்..தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர்.  எண்பதுகளில் தமிழ்த் திரையுலகம் பற்றிப் பேச ஆரம்பித்தோமானால் தவிர்க்கவே முடியாதவர் . இசையில் மட்டுமே இவரது கவனம் இருந்திருக்குமேயானால் நாம் இன்னும் பல முத்துக்களை இவரிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பது என் துணிபு.. இசையும் தமிழும் இவரிடம் துள்ளி விளையாடி இருக்கிறது என்பதை இவரது பாடல்கள் மூலம் உணரலாம்..
வழக்கமாக அவர் இயக்கிய படங்களுக்கு மட்டுமே இசை என்பதில் இருந்து,வேறொரு இயக்குநருக்கும் இவரது இசை ஜொலித்து இருக்கிறது..
இப்படத்தில் "பூக்களைத்தான் பறிக்காதீங்க காதலைத்தான் முறிக்காதீங்க "
மலேசியா வாசுதேவன் குரலில் ஓர் அட்டகாசப் பாடல். அதையும் அவசியம் கேளுங்க..
இந்தப் படத்தில் மற்றுமொரு பாடலான மாலை எனை வாட்டுதே தான் எனக்கு மிகப் பிடித்தது..நிச்சயத்ததில் இருந்து திருமண நாளுக்கான இடைப்பட்ட இன்பமான வேதனை மற்றும் ஏக்கம் எதிர்பார்ப்பை வெகு அழகாகச் சொல்லிய பாடல்களில் முதல்தரம் அது.. அது இந்தத் தலைமுறைக்கும் அறிமுகமான பாடல் பெரிதாக அறிமுகம் நான் தரத்தேவை இல்லை என்றே அடுத்த முத்தான இதைத் தேர்ந்தெடுத்தேன்..
ராஜாவுக்கு வயலின்,  ரஹ்மானுக்கு புல்லாங்குழல் என  இசைக்கருவிகள் பாடலில் ஆளுமையைத் தருவது போல டி .இராஜேந்தருக்கு வீணை..நிறைய பாடல்களில் துள்ளி விளையாடும்..
இந்தப் பாடல் ஆரம்ப இசையிலும் பாருங்கள்.. அட்டகாசமான துவக்கத்தைக் கொடுக்கும்..பெண்ணை மீட்டுவது போல. அது முடிந்து மெதுவாக எடுப்பார் SPB . SPB சித்ரா கலக்கலான டூயட்களில் இதுவும் ஒன்று
சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ..சுகம் சுகம்..ஆ ஆ..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ ஓ ..
காதல் ஊர்வலம் இங்கே...(வீணை )
கன்னி மாதுளம் இங்கே..(வீணை )
கன்னி என்பதிலேயே சன்னமா ஒரு குறும்புச் சிரிப்பை வைத்திருப்பார் SPB ..இப்பாடலில் ஆங்காங்கே அவரது மயக்கும் சிறப்பைக் கேட்டு ரசிக்கலாம். காதல் டூயட்களில் இவரது குறும்புச் சிரிப்பு ஒரு காதலனின் குறும்பை நினைவூட்டி மெய் சிலிர்க்க வைத்து விடுகிறது.. 😍😍
பாடலாசிரியரும் இவரே..பேச்சிலேயே எதுகை மோனை துள்ளும்...பாட்டில் கேட்கணுமா? ஆனால் உறுத்தலாக இல்லாமல் அழகாக வந்து விழுந்திருக்கின்றன வரிகள்.. இடையிடையே அழகான கோரஸ் குரல்கள்..
காதலி அருகிலே (வயலின் )
இருப்பதே ஏ ஏ ஆஆனந்தம்
காதலன்ன்ன் மடியிலே (வயலின்)
கிடப்பதே ஏ   பரவசம்
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா..ஹஹ்ஹா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா..
புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே...அடுத்து அந்த வீணையோடு,  த தா த ததா வை இட்டு நிரப்பி இருப்பார் SPB அட்டகாசமாக இருக்கும் ☺
நதியாவும் சுரேஷும் அந்தக் கால ஹிட் ஜோடி..நதியா என்றாலே அவர் உடைகளைக் குறிக்காமல் இருக்க முடியாது..அருமையான dressing sense உடையவர்.. அதனால் இன்றளவும் அவரது உடைகளுக்கு நான் பெரிய ரசிகை.. துளி கூட ஆபாசமில்லாம ஒரு டூயட் எடுத்திருக்காங்கப்பா :)
இருப்பினும் எனக்கென்னவோ கார்த்திக் காதல் காட்சிகள் அளவுக்கு சுரேஷ்  பாடல்கள் ஈர்க்கவில்லை :)
இந்தப் பாடல் இடை இசைகள் flute ,வயலின் ,சாக்ஸ் என பல கருவிகளால் நிறைந்து இருக்கும்..எனக்கென்னவோ இவை ஏதோ ஒரு format ல அமைஞ்ச உணர்வு..அதாவது வேற சில பாடல்களிலும் இந்த format வருவது போலவும்.. அப்படி வேற ஒரு பாடல் கேட்டு இது நிச்சயமாக TR பாட்டாகத் தான் இருக்கும் என நினைச்சு அதே போலயே அது TR பாடல் :) TR பற்றி பல பிம்பங்கள்..ஆனால் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது இசையை மட்டும் ரசிப்போம் ..அதுவே நிறைவானது :)







Saturday, November 7, 2015

மழை நின்ற பின்பும்..

பாடல் : மழை நின்ற பின்பும் தூறல் போல
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர் :கபிலன்
பாடியவர் : கல்யாணி

வித்யாசாகரின் தரமான ஆல்பங்களில் ஒன்று "ராமன் தேடிய சீதை " ஒவ்வொரு பாடல்களுமே முத்து.. என்ன புள்ள செஞ்ச நீ பாடலில் ஒரு பாமரனின் குரலில் உருகி இருப்பார் வித்யாசாகர்.. பெற்றவனுக்குத் தானே தெரியும் புள்ளையோட அருமை .உணர்ந்து பாடி இருப்பார்..அந்த வலியை அப்படியே நம்மிடம் சேர்த்திருப்பார். இப்பவே இப்பவே இன்னுமொரு முத்து..
இதிலே மழை நின்ற பின்பும் தூறல் போல தான் என்னோட most favorite .
இந்தப் பாடலைப் பிடிக்கக் காரணம் இது பெண்ணின் மனக் குரலாக வருவது தான்..இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் :) நல்ல உவமை வரிகளில் ..

அடர்த்தியான பெண் குரலை விட மெலிதான குரல் வெகுவாக ஈர்த்து விடுகிறது.. பாடலானது ஒரு  ரமணிச்சந்திரன் சிறுகதை படித்த உணர்வைக் கொடுத்து விடுகிறது :) தனக்கு வந்த காதலை அவ்வளவு எளிதாக எந்தப் பெண்ணும் சொல்லி விடுவதில்லை.. ஆணுக்கு அந்த உணர்வு பெரும் பாரம் உடனே இறக்கி வைத்து விட வேண்டும்..ஆனால் பெண்களுக்கு அது வாழ்க்கை , யோசித்தே தான் முடிவு எடுப்பார்கள்..சட்டென உணர்வின் வசம் செல்லாம  நாலையும் யோசிப்பதும், அப்படியே சென்றாலும் யாசிக்கச் சிரமப்பட்டு நிற்பதும் நான் பார்த்த பெண்களுக்கான குணம்..இதை அப்படியே பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல்.. எத்தனையோ பாடல் வரிகள் இசை நன்றாக இல்லாமல் நம்மை வந்தடையாமல் குப்பைக்குள் முத்தாகக் கிடக்கின்றன..நல்ல இசை என்பது தனியாக ஹிட் ஆகலாம்..ஆனால் பாடல் வரிகள் மனதில் பதிவது என்பது இசை ஒத்துழையாமல் நிகழாது.. இப்பாடலிலும் இசை தன் பணியைச்  செவ்வனே செய்கின்றது..
மெலிதான ஹம்மிங்ல ஆரம்பிக்குது பாடல்..
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் ..
ஒரு பாடலை ரசிக்க வைப்பதில்  எப்படி இசை மற்றும் வரிகளுக்குப் பங்கிருக்கிறதோ அதே போல பாடலைப் பாடியவரும் .
அதிலும் சில சொற்களை உச்சரிக்கும்போது அதிலே கொடுக்கும் அழுத்தம் ,கிறக்கம் ,மென்மை இப்படிப் பல உணர்வுகள் பாடல் வரிகளுக்கு அர்த்தமூட்டுகின்றன.. இதை இந்தப் பாடலைப் பாடிய பாடகியும் உணர்ந்து செய்தது சிறப்பு..ஆங்காங்கே பாடலின் இடையே மூச்சு விட்டிருப்பார் அதுவும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்கவே செய்கின்றது..
இந்தப் பாடலில் இரண்டாம் சரணம் தான் எனக்கு மிகப் பிடித்தமானது :)
கண்ணிமைகள் கைத் தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ வில்லையா..  உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நானிருந்தும் உண்மை சொல்லத் துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை"

இந்தப் பாடலுக்கு முத்தாய்ப்பான வரிகளாக நான் நினைப்பவை
"உன்னை எனக்குப் பிடிக்கும்
அதைச் சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும் "
அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்க நேரிடும்போது இந்த வரிகளில் வழியும் பெண்மையை  வெகுவாக ரசிப்பேன் :))
இந்தக் குரல் கொடுத்த உணர்வை , காட்சியமைப்பில் கோட்டை விட்டு விட்டதாகவே தோன்றும்..அதனால் இந்தப் பாடல் கேட்க மட்டுமே..
பாடல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காதல் வந்த பெண்ணின் மனதை ,மெதுவான துள்ளலோடு (அது என்ன துள்ளல் என்று சொல்லிட்டு மெதுவா ன்னு யோசிக்காதீங்க.. பெண்ணின் மலர்ப்பாதம் எவ்வளவு துள்ளினாலும் மென்மை தான் ) இசையால் படம் பிடித்திருப்பார் வித்யாசாகர்..என்றும் இனியவைப் பட்டியலில் ஒரு தரமான மெலடி..மழை நின்ற பின்பும் தூறல் போல  பாடல் முடிந்த பின்பும் பாடலின் ஆலாபனை மனத்தில்..