Monday, October 10, 2011

ஊமை உள் நாக்கு!

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்-எவ்வளவு வாஸ்தவமா சொல்லி வச்சுட்டுப் போயிருக்காங்க.நீண்ட நாட்கள் ஆயிற்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று தான் தோழி வீட்டிற்கு சென்றது.இன்று மனம் விட்டு அவள் பகிர்ந்து கொண்ட வேதனைகளை அறிந்தபின் தான் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம் ஒரு விதத்தில் என உணர முடிந்தது.காதல் திருமணம் செய்து கொண்ட தோழியை விட அவர் கணவர் அழகு கம்மி.படிப்பும் கூட.இன்று வரை எங்கேயும் அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அவளை அழைத்துச் செல்வதில்லை.அவளை விட அழகு கம்மி என்ற தாழ்வு மனப்பான்மையினால்.பிறந்த வீட்டுடனும் அவர் தகராறு என்பதால் அங்கேயும் போவதில்லை.பக்கத்து வீட்டில் "நீங்க ஏன் வெளியே வருவதே இல்லை உங்க வீடு மாடிக்கு கூட எப்பவாவது தான் வர்றீங்க"என்று சொல்லி இருப்பாங்க போல.பக்கத்து வீட்டில் என்னைத் தப்பாக நினைப்பாங்களா உமா எங்கேயும் வெளியே செல்லாமலே இருப்பதற்கு எனக் கேட்டாள்.எனக்கு புரியவில்லை இதில் தவறா நினைக்க என்ன இருக்கு? என்று கேட்ட பின் மெதுவாகச் சொன்னாள்.அவள் உறவினர் பெண்மணி உன் கணவன் என்ன உன்னை சின்ன வீடு மாதிரி வச்சிருக்கான் அதனால் தான் எங்கயும் கூட்டிச் செல்வதில்லை என்று.சொல்லி முடிப்பதற்குள் பொலபொலவெனக் கண்ணீர்.சில வார்த்தைகளைத் தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றும் தன் அம்மா வீட்டு மீது உள்ள கோபத்தில் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார் என்றும் ஒவ்வொன்றாகச் சொல்லி வெடித்து அழ ஆரம்பித்தாள்.எனக்கென்று போக்கிடம் இல்லை உமா ஒரு நாள் வேதனை தாங்காமல் குழந்தையை எடுத்துக் கொண்டு பார்க்கில் மாலை வரை அமர்ந்து விட்டு வந்தேன்.குழந்தை பிறந்த நேரத்தில் கூட அடி வாங்கி இருக்கிறேன் அவரிடம் என்று அனைத்தையும் சொல்லி அழுது தீர்த்து விட்டாள்.மௌனித்தேன் அவள் பேசி முடிக்கும்வரை.என்னையும் அப்பிக் கொண்டது அவள் கண்ணீர்.அவள் குழந்தையும் என்னை ஆ வெனப் பார்க்கும்.காரணம் அந்த வீட்டிற்குச் செல்லும் ஒரே வெளி ஆள் நான் மட்டுமே.அவள் கணவர் குணம் ஓரளவுக்குத் தெரிந்ததாலும் மேற்கொண்டு எதையும் மறுக்க முடியவில்லை.இருப்பினும் மனதிற்குள் அவரைத் திட்டிவிட்டு அவரிடம் உள்ள பாசிடிவ் கண்ணோட்டங்களாகத் தேடி எடுத்து ஆறுதல் சொல்லவும் தான் கொஞ்சம் அழுகையை நிறுத்தினாள்.இதை விட மோசமான வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய என்றெல்லாம் சொல்லித் தேற்றினேன்.ஆயிரம் ஆணீயம் பெண்ணியம் எனப் பேசினாலும் யதார்த்தம் எப்பொழுதுமே வேறாகத் தானிருக்கின்றது.குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் குழந்தை என்ற காரணத்திற்காக மட்டுமே மனதிற்குப் பிடிக்காத வாழ்க்கையை சகிப்பவர்கள் தான் அதிகம் இங்க.சரி செய்யப்பட முடியாத தவறுகளில் பலருக்கு திருமணமும் ஒரு முக்கியமான ஒன்றாகவே இருக்கும்.பெரியார் பெண்களும் பிடிக்கவில்லை என்றால் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் விவாகரத்து அவசியம் என்று குரல் கொடுத்தது எவ்வளவு தீர்க்க தரிசன வார்த்தைகள்.இது ஒரு புறம் என்றால் கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரியாமல் சிறு சிறு குறைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றிற்கும் பெண்ணியம் பேசி வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் பெண்களைப் பார்த்தால் கோபமாக வரும்.எல்லா இடத்திலும் பொங்கி பொங்கி பொங்கல் வைக்க முடியாது.என் தோழியே ஆயினும் அவள் கணவனிடம் நியாயம் கேட்டா அவ வீட்டுக்குச் செல்லும் ஒரே ஆளும் கட்.மேலும் பிரச்சனை அதிகமாகும்.அல்லது அவளே என் கணவரை எதுவும் சொல்லிடாதே ன்னு சேம் சைட் கோல் போடுவா.
சில அல்ல பல நேரங்களில் பல விசயங்களைக் கண்டும் காணாமல் செல்ல வேண்டியது அர்த்தமானதும் அன்றாடத் தேவையும் கூட ஆகிப் போனது 
உள்நாக்குகள் பேச உதவா ஊமைகள்.என்னிலும் உண்டு ஊமை உள் நாக்குகள்.


பெருமூச்சுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன்

Saturday, July 23, 2011

அது ஒரு கனாக்காலம்...!

1 .டிவி சரியா தெரியாட்டி விதம் விதமா ஆண்டெனாவை திருப்பி வச்சு மேல ஒருவர் கீழ ஒருவர் சத்தமிட்டு சரி செய்த காலம் 
2 .கிரிக்கெட் விளையாடி பந்து தலையில் பட்டு வீங்கியதை தேய்த்துக் கொண்டே அம்மாவிடம் சொல்லி விடாதே என்ற அண்ணனின் கெஞ்சல்

3 . வெள்ளிக்கிழமைகளில் வெளியூரிலிருந்து திரும்பி வர நேர்கையில் ஒலியும் ஒளியும் சத்தம் கேட்டு வீட்டிற்கு விரைவாக அண்ணன் இழுத்து சென்றதுண்டு

4 . வீட்டிற்கு முதன் முதலாக போன் வந்தபொழுது ஒவ்வொரு அழைப்பிற்கும் ஓடி போய் பேசியதுண்டு 
5 .தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் அம்மாவின் அடிக்கு பயந்து பரண் மேல் இருந்த அண்டாவில் அண்ணன் அமர்ந்திருந்ததை அண்ணாந்து பார்த்து விழித்த காலம் 
6 .நேராக நடந்து சென்றால் தொலைவில் தெரியும் வானத்தை தொட்டு விடலாம் என்றெண்ணியது ஒரு காலம் 
7 .அண்ணன் பள்ளி செல்லாததை அப்பா மாடி படியில் ஏறி வீட்டில் நுழையும் முன்பே "அண்ணா இன்னைக்கு ஸ்கூலுக்கு போகல "என்று போட்டுகொடுத்ததும் அப்பா அவனைக் கொல்லு கொல்லு படிக்காதவனை என்று திட்டியதும்

Monday, July 18, 2011

பெருமூச்சு ...4!

உன் மனமெனும் கருவறையில்
பத்திரமாக படுத்துகிடக்கின்றது 
என் எதிர்காலம் 
"தாயுமானவன்"
*********************
எனை எவ்வளவு பிடிக்கும் என 
கைகள் விரித்து சொல்லாதே 
அவ்வளவு பேராசைக்காரி இல்லை நான் 
என் "மெய்"அளவு கை சுருக்கி 
"மெய்" சொல் அதுபோதும்
**********************************
உன்னை எவ்வளவு பிடிக்கும் 
எனக் கேட்டால் தெரியாது
உன்னளவு மட்டுமே பிடிக்கும் 
உன்னைத் தவிர வேறு எதுவும் சிறந்ததில்லை 
உதாரணம் சொல்வதற்க்குக்  கூட...
************************************************* 

வார்த்தைகள்வெற்றிடமாகின்றன
நினைவுகளில் நீ நிரம்பி வழியும் பொழுது
*******************************************
சட்டென்று சமாதானம் செய்துவிடும் 
உன் அதிசய வித்தைகள் 
கற்கவே கோபம் கற்கின்றேன்
******************************
என் கனவுகள் ஜென்ம சாபல்யம் 
அடைகின்றன 
நனவுகளாக நீ தீண்டியதால்
************************************ 
ஏதோ பண்டிகை என்கிறார்கள் 
திருவிழா என்கிறார்கள் 
நீ வருகின்ற வரையில்
எனக்கு இது மற்றும் ஒரு நாளே !

*****************************************
நீ சரணடையும் தருணங்களில்
உன் கைகளுக்குள் அடங்கி
சரணடைவதின் இன்பத்தை உணர்கின்றேன் நானும்..
*************************************************************************
என் வெட்கங்கள் 
தவம் கலைகின்றன 
உன் பட்டுக் 
கை பட்டு..
*************
எத்தனை முறை 
எதிரெதிர் கருத்துக்கள்
நமக்குள் வந்தாலும்
நாம் "முட்டி"க்கொண்டதில்லை..
*********************************************
உன் அன்பு அதிகமாகிவிட்டது 
என்று சொல்ல விருப்பமில்லை
என்றைக்கு குறைவாக இருந்தது
இன்று புதியதாய் கூடி விட்டது
எனச் சொல்வதற்கு
***************************

மறைந்திருந்து வெளியேறினால்
சட்டென்று அணைக்கின்ற 
காதலன் 
"மாமழை"
************
முகம் நோக்கித் தூறும்
சாரல்கள் யாவும் 
என் செல்லக் கோபங்களை 
சமாதானம்செய்யத்
தீண்டும்
உன் விரல்கலாகின்றன
"மம்ம்ம்மாமழை"
***********************
எண்ணிடாத
மழைத் துளி அளவிற்கு
 எண்ணிலடங்காத  
காதல்
"மாமழை"
*************
எங்கோ இருக்கும் உன்னை 
எந்நேரமும் என் ஆவி 
தழுவிக் கொண்டே தான் இருக்கின்றது 
கைகளுக்குள் எப்பொழுது சிக்கப் போகின்றாய்..
****************************************************************
விலகி செல்லாதே அருகில் வந்தென்
இதழ் ஒற்றி(று) ப்பிழை திருத்து 
*******************************************
நம் ஊடல் பொழுதுகளில் 
பெரும்பாலும் மௌனங்கள் மட்டுமே
அதிகம் பேசிக் கொண்டிருக்கின்றன
*************************************************
வெற்றிடம் மட்டுமே நிறைந்து
வழிகின்றது
நீ இல்லாத் தருணங்களில்
************************************
யதார்த்தமாய்க் காட்டிக் கொண்டு
உலவும் தருணங்கள் முழுவதும்
நீறு பூத்த நெருப்பாய் உன் நினைவுகள்
கனன்று கொண்டே..     
 ***************************
பொய்யறிந்த கண்களின் 
கேலியில் உன்னிடம் 
மாட்டிக்கொண்ட மெய்யறிந்து
வெட்கித் தலைகவிழ்ந்தன 
என் இதழ்கள் பற்களுக்குள்...
*************************************
கழுத்து வளைவுகளுக்குள் 
நீ புதையும் பொழுதெல்லாம் 
உயிர்த்தெழுகின்றது 
என் மோகம் 
*****************