Thursday, April 21, 2011

ரமணிச்சந்திரன் !

கண்டிப்பாக சொல்லியே ஆக வேண்டும்.எனது மனம் கவர்ந்த எழுத்தாளர்.ஏன் நம்மூர்ப் பெண்களின் அனேக விருப்ப எழுத்தாளராகவும் இருக்கக்கூடும்.அப்படி என்ன இருக்கின்றது அந்த எழுத்துக்களில்?..
கண்டிப்பாக இருக்கின்றது அது பெண்களே ரசிக்கும் வகையிலான ரொமான்ஸ் .விரசமாக ஆபாசமாக வெறும் கவர்ச்சிக்காக இன்றி காதலுடன் இணைந்த காமம் எவ்வளவு இனிக்கும் என்பதை ஒரு பெண்ணின் பார்வையிலேயே சொல்வதால்.ஏதோ பொழுது போகாமல் இருந்த எனக்கு ஒரு அக்கா தெரியாத்தனமாக அறிமுகப்படுத்தி விட்டார்கள்.பொழுது போக்கிற்காக படிக்க ஆரம்பித்தவள் பொழுதிற்கும் படிக்க ஆரம்பித்தேன்.தேடித் தேடி பிடித்து ரசிக்க ஆரம்பித்தேன். காரணம் அனைத்தும் காதல் கதைகள்.மேலும் குடும்பத்தில் ஈகோவினால் என்ன சிக்கல்கள் வரக்கூடும் அதை எப்படி கதாநாயகி எதிர்கொள்கிறாள் என்று மிக இயல்பாக சொல்லி இருப்பார்.கதாநாயகி ,கதாநாயகன் அனைத்துக் கதைகளிலும் ஒரே குணம் கொண்டவர்களாகவே இருப்பர்.இதைப் பெரிய குறையாகப் பிறர் சொல்வதுண்டு.(அதைப் பற்றி எல்லாம் கவலைப் படுவதில்லை :) )எனது கற்பனைக்காதலனை இந்த கதைகளில் கண்டிருக்கிறேன்.என் கற்பனையை இந்த கதைகளிலே வருகின்ற நாயகனிடமிருந்து மேலும் மெருகூட்டி இருக்கின்றேன்.அதனால்தானோ அதீத ஈடுபாடு(இதுவரை யாரிடமும் சொல்லாத ரகசியம்.ரமணி சந்திரன் கதை படித்தவர்களுக்கு என் கிறுக்கல்களில் வருகின்ற நாயகனின் மேனரிசம் மற்றும் குணாதிசயங்கள் பரிச்சயமானதாக இருக்கும்.).எப்பொழுதும் ரமணிச்சந்திரனின் எழுத்து நடை  செந்தமிழ் நடையில் தான் இருக்கும்.பேச்சு வழக்கில் இருக்காது.இருந்தாலும் கதையின் உட்பொருளில் தோன்றிவிடும் ஈடுபாடு காரணமாக அது ஒரு குறையாக தோன்றாது.காதலர்களுக்கு இடையே வார்த்தைக்கு வார்த்தை விளையாடுதலும் ,செல்லப்பெயர்  வைத்து அழைத்தலும் என்று குறும்புகளுக்கும் குறைவு இருக்காது.அடிக்கடி பழமொழி பயன்படுத்துவார்கள்.அதே போல நாயகன்/நாயகியின்  தொழிலை பற்றி இன்ன தொழில் என்று மேலோட்டமாக சொல்லாமல் அதை ஆழமாக விஷய நுணுக்கத்தோடு விவரிப்பார்.ஆன்ட்டி ஹீரோ கதைகள் தான் என்னை அதிகம் கவர்ந்தவை.பால் நிலா,தொடுகோடுகள்,என் கண்ணிற் பாவையன்றோ,வளையோசை,மைவிழி மயக்கம் என்று மனதில் நீங்காமல் இடம் பெற்ற கதைகள் இவை.நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட கதைகள் படித்திருக்கிறேன்.ஒரே மாதிரியான காட்சி அமைப்பு,கதையமைப்பு என வந்தாலும் கூட ஒரு தடவை கூட சலித்ததே இல்லை.வாசகர்களிடம் காம உணர்வை தூண்டுவதற்காகவே என்று ஆபாசமாக எழுதி பணம் பார்ப்பவர் பலர்.ஆனால் காமத்தை காதல் ரசத்தோடு ஒரு அன்பான இரு உள்ளங்களுக்கிடையே யான அன்னியோன்யத்தொடு சொல்கின்ற பொழுது அது தனி அழகு பெறுகின்றது.பெரும்பாலான பெண்களின் ரசனைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும் முடிவு எப்பொழுதும் எனக்கு பிடித்தமாதிரி சுபமாகவே இருப்பதால் இன்னமும் என்னை வசீகரிக்கின்றன அக்கதைகள்.ஏதோ படித்தோம் அந்த நேரத்தில் மனம் சற்று ஆறுதலாகவும் அமைதியாகவும் இருக்கும் என்ற என்ணத்தை ஆழமாக பதியவைத்துவிட்டன.
உயரமாகவும் மாநிறமாகவும் மட்டுமே கதாநாயகனைக் காண்பிப்பார் எப்பொழுதும்.
ஒருமுறையேனும் இப்படி ஒரு கதாநாயகனை அணு அணுவாக ரசித்து படைத்தது எப்படி நிஜமாக அப்படி ஒரு உருவம் எழுத்தாளரின் அருகில் உலா வருகின்றதா என்று பார்க்கவேண்டும் என்ற உந்துதல் உண்டு.

ரமணிச்சந்திரன் -என்றும் குளிர் நிலவு 

Saturday, April 16, 2011

வேறு ஒரு வலைதளத்தில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான எனது பதில்களும்


பதிவர் கார்க்கியின் கேள்விகள் (சாளரம் என்ற அவரது வலைப்பதிவிலிருந்து)

1) பாஸ்போர்ட் சைசு ஃபோட்டோ ஏன் பாஸ்போர்ட்ட விட சின்ன சைசுல இருக்கு?
2) SAVE TIGERS என்னும் இந்திய அரசு ஏன் இலங்கையில் வாழ்ந்த புலிகளை அழித்தது?
3) வெளியே செல்லும்போது இந்திரா நூயி, ரிலையன்ஸ் என்றெல்லாம் சொல்லாமல் டாடா என்று சொல்வது ஏன்?
4) செவ்வணக்கம், செம்மண் என்பதெல்லாம் சிவப்பு நிறத்தை குறிக்குமென்றால் செம்மொழி என்பதன் மூலம் நாமும் சிவப்பாகிறோமா?
5)  பெண் சிங்கம் பார்க்காமல், சிங்கம், முரட்டு சிங்கம் பார்த்தால் ஆணாதிக்கமா?
6) செம்மொழி மாநாட்டை நடத்தியதன் மூலம் கோவையை மதிமுக ஆக்கியதா தமிழக அரசு?அதவாது கோவையை “தலைகீழாக” மாற்றியதா?
7) அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சி முடிந்துவிட்டதால் அடுத்து  அ.த.ம சீசன் 2 வருமா அல்லது “குருவி” வருமா?
8) இந்த தடவ யாருக்கும்மா ஓட்டு என்றால் அம்மிணிகள் திமுக என்பார்களா?இல்லை சந்தோஷ் அல்லது சக்திக்கு என்பார்களா? (கே.கு - அவங்க சூப்பர் சிங்கர்ஸ்)
9) சந்திரபாவும் , கவுண்டமணியும் லெஜெண்ட்ஸ் என்றால், கோவை சரளாவும் மனோரமாவும் லெ”லேடிஸ்” என்று சொல்லலாமா?
10) எதிர்பதிவே போட முடியாதபடி 9 கேள்வி அமைக்க நான் மண்டைய உடைச்சுக்கிட்ட மாதிரி, எதிர்பதிவு போடுபவரும் மண்டைய உடைச்சுப்பாரா?


எனது பதில்கள் 
1.பெருசா போட்டா அது passport இல்ல fail port ஆகிடும் அதனால
2.save tigers என்பதை shave tigers என்று தவறாக புரிந்து கொண்டார்களோ என்னவோ ?
3.ஊர் சுற்றுவது பெரும்பாலும் ஆண் பாலாக இருப்பதால் ட்டா டா வாக இருக்கலாம்.ரிலையன்ஸ் அவ்வளவு கன்வீனியன்ஸ் இல்ல
4. செம்மொழி என்றால் மொழி தானே சிவப்பாகும் நீங்கள் எப்படி ?அது என்ன facial cream aa?
5.பெண் சிங்கம் பார்க்கவே முடியாது.எனவே அது off ஆதிக்கம் ஆண் சிங்கம் தொலைக்காட்சியில் தானே பார்ப்பீர்கள் on ஆதிக்கம் செய்தால் தவறில்லை
6.நிச்சயம் இல்லை ஏற்கனவே அம்மாவிடம் தலைகீழாக கிடைக்கும் வைகோ வை மன்னிக்க கோவையை திரும்ப எப்படி அப்படி ஆக்க முடியும்?
7.அ.த.ம. சீசன் இரண்டு வராது.குருவி வந்தால் அதனை வேட்டையாட வேட்டைக்காரன் வருவார்
8.சந்தோசமா சக்தியோட ஓட்டு போடுவோம் திருட்டு முழி கண்ணா ன்னு பதில் சொல்லுவாங்க
9.ஏன் மனோரமாவையும் சரளாவையும் லே லேடிஸ் சொல்லணும் கில்லேடிஸ் நு சொல்லலாமே
10.இப்படி எல்லாம் கேள்வி கேட்ட உங்க மண்டைய உடைக்காம விட்டாலே புண்ணியம் நு நினைச்சுகோங்க





1) வண்டில ஃப்ரண்ட் பிரேக், பேக் பிரேக்ன்னு ரெண்டு இருக்கும் போது (காலால) லெக் பிரேக் போட்டு தட்டி தட்டி நிறுத்தறீங்களே.. உங்க மனசுல என்ன ஷேன் வார்னேன்னு நினைப்பா?

அட பொண்ணுங்க இஷ்டப்பட்டு அழகா உங்க கண்ணனுக்கு குளிர்ச்சியா வெளியில வராங்க.கடை கடையா ஏறி போய் செருப்பு கொலுசு வாங்கி போடறோம்.அதையெல்லாம் பார்க்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு வேணும் ல அதுக்குதான் இந்த லேக் ஷாட்.அப்படியே குண்டக்க மண்டக்க பேசறவங்களுக்கு இது ஒரு மறைமுக எச்சரிக்கை.வண்டிய வே இந்த மிதி மிதிக்கிரோமே மவனே எசகு பிசகா பேசினா என்ன மிதி வாங்கு வ ன்னு சொல்லாம சொல்லத்தான்.

2) இன்கமிங் காலுக்காகவும், மிஸ்டு காலுக்காகவுமே மொபைல் வாங்குறீங்களே. ஒரு வேளை மிஸ் எல்லாம் விடுற கால் என்பதால் தான் மிஸ்டு கால்ன்னு பேரு வந்ததா?

அட நிஜமாகவே நீங்க வேலை பண்ணிக்கிட்டு இருக்கீங்களா அல்லது நிஜமாகவே எங்க மேல உங்களுக்கு உண்மையான பிரியம் இருக்கா ன்னு கண்டுபிடிக்க தான் இந்த யுக்தி.மிஸ்டு காலை மிஸ் பண்ணாம நீங்க திருப்பி பண்ணா தான் அப்பாடா நம்ம புள்ளைக்கு நம்ம மேல ஒரு இது இருக்கு அதான் பார்த்த உடனே திருப்ப கூபிடுது ன்னு ஒருதிருப்தி வரும்.அதுவும் இல்லாம எங்களுக்கு ஒரு டாப் அப் போட்டு விட கூட வக்கு  இல்லாத ஆளை வச்சுகிட்டு இருக்கோம்னு விளம்பரபடுத்தவா முடியும்?

3) அஃபிஷியல் கால்ன்னா எதிர்ப்பக்கம் பேசுற ஆளு இருக்கிற திசையை நோக்கி நேரா பேசுற மாதிரி காட்டுக் கத்தல் போடுற நீங்க, பெர்சனல் கால்ன்னா மட்டும் உதடே அசையாம பேசுறீங்களே.. இதுக்கெல்லாம் தனியா ஸ்பெஷல் கிளாஸ் எதுனா போனீங்களா

பாருங்க எப்ப பாரு தப்பாவே புரிஞ்சுகிட்டு எவனோ ஒருத்தன் கூட பேசும்போது எப்படி பேசினா என்னங்க சரி நம்ம ஆளு பேசறாரு அவர்கிட்ட ஆத்மார்த்தமா நம்ம மனசு பேசட்டும் நு தான் மனசை பேசவிட்டு நாங்க அமைதியா வேடிக்கை பார்க்கிறோம்.இந்த இடத்திலையும் உங்களுக்கு தானே பேசறோம்.சத்தம் போட்டு பேசினா எந்த உதவாக்கரை பரதேசிகிட்ட பேசிகிட்டு இருக்க ன்னு வீட்ல விசாரிக்க மாட்டாங்களா?அப்புறம் கஷ்டப்பட்டு நீங்க கரெக்ட் பண்ணி வச்ச பிகரு கூட பேசுறது அதுவே கடைசி தடவை ஆகிடாதா?





4) தலைமுடிய தவிர எல்லாத்திலும் பிங்க் கலர் தேடுறீங்க ஓக்கே. அதுக்குன்னு தேசியக்கொடி தந்தா கூட பிங்க கலர் இல்லையான்னு கேட்கிறது டூ மச்ச, இல்லையில்ல, ட்விண்டி மச்சா தெரியல உங்களுக்கு?

அட அதுகூட உங்க வசதிக்காக தாங்க.ஏன்னா நாங்க இங்கி பிங்கி பாங்கி நா ஃ பாதர் ஹெட் எ டாங்கி நீங்க தானே..உங்க கண்ணுக்கு எது பளிச்சுன்னு தெரியுமோ அதை தானே உடுத்திட்டு வர முடியும்?வேற கலர் ல வந்தா வெறிச்சு வெறிச்சு பார்த்து உங்களுக்கு எதாச்சும் ஆகிட்டா எங்க பாழும் மனசு தாங்காது..
5)//ஃபோன்ல பேசிட்டே வண்டி ஓட்டின குத்தம் சொல்றாங்க. ஆனா ஃபோன்ல பேசிட்டே குறுக்குல வந்து, கரெக்ட்டா பச்சை சிக்னல் பார்த்து ஓட்டுற எங்கள பார்த்து “humpty dumpty sat on the wall” ன்னு ஏதோ இங்கிலீஷ்ல திட்டுறீங்களே. இப்ப நான் கேட்கிறேன். “baba black sheep have u any wool?//

அது சரி நிஜமாகவே பச்ச சிக்னல பார்த்தீங்களா இல்ல பச்ச சுடிதாரை பார்த்தீங்களா ன்னு யாருக்கு தெரியும்?செந்தமிழ் ல திட்டினா பாவம் அதை விட கேவலமா இருக்குமே பாவம் புள்ளைய யாருக்கும் தெரியாம இங்கிலீஷ் ல திட்டி அடுத்தவங்ககிட்ட இருந்து மறைமுகமா உங்க கௌரவத்தை காப்பாத்தினா தப்பா?"rain rain go go away man.."



//6) ஜீன்ஸ், டீஷர்ட், கார்கோன்னு எங்க டிரெஸ் ஒண்ணு விடாம போட்டுட்டு சுத்துறீங்க. நாங்க கிண்டலா செய்றோம்? ஆனா நாங்க டைட்டா டீ ஷர்ட் போட்டா மட்டும் ஜாக்கெட்ன்னு சொல்றீங்க. குர்தா போட்டா துப்பட்டா எங்கப்பான்னு கலாய்க்கறீங்க. உங்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா?//

ஆதி காலத்துல ஆண் பெண் பேதமில்லாம தான் ஆடைகள் உடுத்துகின்ற வழக்கம் இருந்ததாம்.பழைய பண்பாட்டை மறக்காம பின்பற்றுகிறோமே என்று பாராட்டுங்கள்.டைட்டா டி ஷர்ட் போடுங்க வேண்டாம் நு சொல்லல.ஆனா கொஞ்சம் சிக்ஸ் பேக் எய்ட் பேக் வச்சு போட்டா டி..ஷர்ட் இல்ல டே ஷர்ட் நு கூட சொல்றோம்.அம்மா வைக்கிறாங்க என்ன பண்றது ன்னு அள்ளி அள்ளி சாப்பிட்டு உடம்ப ஸ்கூல் பேக் மாதிரி வச்சா ஜாக்கெட் ன்னு சொல்லாம வேற எப்டி சொல்றதாம்.குர்தா போட்டா துப்பட்டா போடறது நல்லதுதானே அப்பத்தான் ஜீன்ஸ் போட்ட பொண்ணுங்கள பார்த்து நீங்க வழியும் பொழுது வழியிற ஜொள்ளை துடைக்க வசதியா இருக்கும். உங்க நல்லதுக்காக ஒரு நல்லதா சொன்னா இப்படி தான் அசட்டு தனமா கேள்வி கேட்கறதா ?



7) 30 வயச தாண்டிய ஷாலினியையோ, மாளவிகாவையோ பிடிக்கும்ன்னு சொன்னா உடனே “ஆண்ட்டி பண்டாரம்ன்னு” பேரு வைக்கறீங்க. ஆனா நீங்க மட்டும் “ஐ லவ் கமல்ப்பா”, சூப்பர்ஸ்டார அடிச்சிக்க முடியுமான்னு ஜொள்ளு விடுறீங்க. உங்கள ”அங்கிள் பைத்தியங்க” சொன்னா சும்மாவா விடுவீங்க?//

என்ன தான் வயசானாலும் வயசு ஏற ஏற உங்க அழகும் ஏறும் ங்கற ஒரு மேலான நம்பிக்கையை உங்களுக்கு ஊட்ட தான் அங்கிள் ஹீரோ க்களை பிடிக்கும் நு நாங்க சொல்றது இப்டி சின்ன வயசுலேயே அம்பது வயசு கிழவன் மாதிரி இல்லாம யூத் புல் லா இருக்க உங்களுக்கு நாங்க கொடுக்கிற நெகடிவ் ஃபோர்ஸ் 
தான் அது.புகையாம புன்னகையோட கேட்டு பழகுங்க.

ஆண்ட்டி செப்டிக் என்று தான் இருகின்றதே தவிர அங்கிள் செப்டிக் என்று எதுவும் இல்லை.எனவே ஆண்ட்டிகளை பார்த்து நீங்கள் செப்டிக் ஆகி விட கூடாதே என்று தான் கேலி செய்கிறோம்.உங்கள் நலனில் அக்"கறை" கொண்டு.

ஏனென்றால் "கறை"நல்லது.



//8) ஒரே பொண்ணுக்கு பல பேரு நூல் விட்டா சூப்பர் ஃபிகர்ன்னு மிதப்புல சுத்தறீங்க. அதே ஒரு பையன் பல பொண்ணுக்கு லெட்டர் தந்தா பொறுக்கின்னு பேரு வைக்கறீங்க.ஐ வாண்ட் டூ நோ த ரீசன் நவ். கமான் டாக் மீ.

அட இது கூட உங்க பெருமையை பறை சாற்ற தான்.பல பேரு பின்னாடி சுத்துற பொண்ணு என் ஆளு ன்னு நீங்க சொன்னா பசங்க மத்தியில நீங்க ஹீரோ தானே.ஆம்படையானோட பெருமை சிறுமை ல பங்கு எடுத்துக்கறது என்னடா அம்பி தப்பு நோக்கு ?பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் ஏற மாட்டான் ங்கற பழமொழி தெரியாதோ ?பல பிகர் பார்த்தவனுக்கு ஒரு பிகரையும் கரெக்ட் பண்ற தகுதி வராது.உங்களுடைய தகுதியை உயர்த்தி நாங்க காட்ட முயற்சித்தா எங்கள இத்தனை கேள்வி கேட்பீங்களா நீங்க :X




Friday, April 15, 2011

என் இனிய சகியே...

அதிகம் பேசாததாலேயே
நானும்
அதிகம் பேசுவதாலேயே 
நீயும்
திமிர் பிடித்தவர்களாகிப்போனோம்
முதல் பார்வையிலேயே !
  

உனது குதிரைவால்
 உன்னிரு கன்னங்களையும்
தீண்டியதை 
பொறாமையால் 
சீண்டின 
என் கண்கள் !


செம்பருத்திப்பூவின் 
வாசம்
நுகரும் பொழுதெல்லாம்
உன் கூந்தல் வாசமும் 
கடந்து செல்கின்றது 

பூப்பெய்திய பின்
நீ முதன்முதலில்
மஞ்சளுடன் வந்த முகம்
மங்காமல் மனதிலே!


உன் இனிய தோழி
எனக்கும் தோழியான 
நாளில் உன்னை 
அவளிடமிருந்து
பிரிக்க எண்ணி
இறுதியில் அவளிடமிருந்து
நின்னைத் தஞ்சம்
புகுந்ததென் நெஞ்சம்

கூண்டுக்கிளி 
என்னை 
தலை சாய்த்து
எட்டிப்பார்க்க 
வைத்ததுன்
தைரியம்

பேசா மடந்தையை
பேச வைத்த
மங்கை நீ!


எனக்குப் பிடித்ததாய் 
நினைத்து நீயும்
உனக்குப் பிடித்ததாய் 
நினைத்து நானும் 
வாங்கிய என் பிறந்தநாள் 
பரிசு 
நமக்குள் பிடித்துப்போன
கதை சொல்லிற்று

இது தான்
இறுதிநாள் என்று 
புல்வெளியில்
அமர்ந்து கதைத்தது
இனிக்கிறது இதயத்தில்!

என்னுடன் மட்டுமே
படிப்பேன் எனச்சொல்லி
இயலாமையால்
வேறு பள்ளியில்
நீ படிக்காமல் போனது
இன்னமும் குத்துகிறது நெஞ்சில்!

தோளில்
நான் புத்தகத்தை
சுமந்த நேரம்
நீ குடும்பத்தை
சுமந்தாய்

உங்களிருவரின்
நட்பை தொடர்பில்
வைத்தது தான்
என கர்வம் 
கொண்டது 
 எனது சைக்கிள்!

முடிவில்
உறுதி
கொண்டு
வாழ்க்கைப்படகில்
பயணித்தாய்

கூட்டில் இருந்து
பட்டாம் பூச்சியாய்
நான்
பட்டாம்பூச்சியிலிருந்து
கூட்டுக்குள்ளே நீ !

கூட்டுக்குள்
கூடி வாழும்
குணம் கொண்டே
என் மனம் வென்றாய் !


அன்புக்கணவன் 
அழகுக்குழந்தை
முகம் மலர
உன்னைப்பார்த்தபோழுது
அகம் மலர்ந்தேன் நான்!



தகவல் பரிமாற்றத்திற்கு
எத்தனை வசதிகள் வந்தாலும்
மணம் முடிந்து
முதன்முதலில் 
நீ எழுதிய கடிதத்தைப் போல் 
பிரியத்தை எதுவும் வெளிப்படுத்தியதில்லை 

மணம் ஆகவில்லை 
என்ற காரணத்தினாலேயே
என்னைச் சிறு பிள்ளையாக்கி
சின்ன சின்ன வருத்தம் மறைத்தாய் 


விடுமுறைக்கு நீ வரும் 
பொழுதெல்லாம் 
விடுமுறையின்றி 
ஊர் சுற்றுவோம் 


ஆண் நண்பரின்
தொலைபேசி அழைப்பிற்கு
அவசரமாய் 
விளக்கம் கொடுக்கும் முன்
சட்டென்று நிறுத்தி 
நீ சொன்ன வார்த்தைகள் 
என் மீதான
உன் நம்பிக்கையை
பொட்டென்று உறைத்தது 
என் நெற்றியில்..!

உன் உருவம் 
மாறினாலும் 
உள்ளம் நான் பார்த்த
முதல் பொழுதில் 
ரசித்தது போன்றே 


குடும்பத்தலைவி 
என்பதைமெதுவாக 
உச்சரிப்பவர்களுக்கிடையே
அதை கம்பீரமாக
உணர வைத்தவள் நீ !


தமக்கை 
இல்லையென தவறியும்
நினைத்ததில்லை நான்
உன்அக்காவுடனான
உனது 
ப்ரியத்தைப்பார்க்கும் வரை...

இலக்கணம் 
 சொல்லிக்கொடுக்க
திட்டியதை இன்றும் 
நீ சொல்லிசிரிக்கையில்
பெண்ணிலக்கணம் மீறி
முத்தமிடத் தோன்றுகிறது உன்னை !

என் வருத்தங்களை
உன் தோள்களில்
ஏந்தித் தாயாகினாய்
எனக்கு

என் நம்பிக்கை
 உன் வார்த்தைகளாலே
உயிர்ப்பெற்றது

எவ்வளவு பெரிய
கடினத்தை
மென்று மிழுங்கிக் கொண்டு
உன் உதடுகள்
சிரிக்கின்றன என
நான் அறிவேன்

இந்தப்பூமியில்
நாம் பிறந்த காரணம்
தேடி அலையச்சொன்னாய்
தேடிக்கொண்டே இருக்கின்றேன்
நானும் !

ஏமாந்தவள் என்று
ஏளனம் செய்தபொழுது
விட்டுக்கொடுத்தலால்
நிறைய பெற்றிருக்கிறேன்
என்ற உன்னை
கண் வியந்தது
தலை கவிழ்ந்தது
குற்ற உணர்வால்

உன்னிடமிருந்தே
இரவல் பெற்றேன்
வெளிப்படையாக
 பேசும் குணத்தை

வெளியிலிருந்து
பார்ப்பவர்களைவிட
என்னை உள்ளிருந்து
உணர உன்னால்
மட்டுமே முடியும்

துயரம்கொடுத்தாலும் 
துவளாமல் தாங்க
உன் போன்ற தூண்களையும்
கொடுத்தென்னை காக்கின்றான்
இறைவன்

திருமணம்
பெண்களின் நட்பிற்கு
வரமா சாபமா
என்பதை வருகின்ற
கணவனாலும்
சூழ்நிலைகளாலும்
மட்டுமே நிர்ணயிக்கப்படுகின்றது

கணவன் குழந்தைகள் 
என கவனம் சென்ற பிறகு
நட்பைத்தேடி
புதுப்பிக்க நேரம் இருப்பதில்லை 

என்றேனும் ஒரு 
தொலைபேசி
ஏதேனும் விழாவில் 
சந்திப்பு 
குசல விசாரிப்புகள் 
என்று இங்கே 
எத்தனையோ பேர் 

எத்தனைச் சிரமங்கள்
நீ பட்டிருந்தாலும்
நீ அழுது நான் பார்த்ததில்லை

பிறந்த இடத்தை 
விட்டுப்பிரிவது
எத்தனை வலியானது
என உன் கண்ணீர்
உணர்த்தியது எனக்கு!

உனது 
கலங்கிய கண்களை 
சந்திக்க திராணியற்று
வேறிடத்தில் பார்வையைச்
சுழல விடும் கோழை நான் 

ரயிலில் நீ சென்றதற்கு
எதிர்த்திசையில்
மிக வேகமாக உனது 
மனம் உன் பிறந்த 
மண்ணை நோக்கியே 
பயணித்திருக்கும் 

கவலை கொள்ளாதே 
எனக்கூற வார்த்தைகள் 
என்னிடமில்லை
என்றேனும் ஒருநாள்
எனக்கும் இதே நிலை வரும்
என்றெண்ணும் பொழுது ...


சூழ்நிலைகளை உடைத்து
நினைத்த நேரத்தில்
சந்திக்கின்ற சூழ்நிலை
நமக்கில்லை 


தள்ளி இருந்தாலும்
 மனதால் 
என்றென்றும் 
இணைந்தே இருப்போம் 
என் இனிய ப்ரிய சகியே...