Monday, December 14, 2015

சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ..

பாடல் : காதல் ஊர்வலம் இங்கே..
படம் : பூக்களைப் பறிக்காதீர்கள்
இசை : டி. இராஜேந்தர்
பாடலாசிரியர் : டி . இராஜேந்தர்
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ,சித்ரா
இந்தப் படத்துக்கு இசை டி. ராஜேந்தர் என்பதே எனக்கு இணையம் வந்துதான் தெரியும்..ஆ!ச்சரியம்.. இயக்குநர் ,பாடலாசிரியர் ,இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட திறமையாளர்..தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர்.  எண்பதுகளில் தமிழ்த் திரையுலகம் பற்றிப் பேச ஆரம்பித்தோமானால் தவிர்க்கவே முடியாதவர் . இசையில் மட்டுமே இவரது கவனம் இருந்திருக்குமேயானால் நாம் இன்னும் பல முத்துக்களை இவரிடம் இருந்து பெற்றிருக்கலாம் என்பது என் துணிபு.. இசையும் தமிழும் இவரிடம் துள்ளி விளையாடி இருக்கிறது என்பதை இவரது பாடல்கள் மூலம் உணரலாம்..
வழக்கமாக அவர் இயக்கிய படங்களுக்கு மட்டுமே இசை என்பதில் இருந்து,வேறொரு இயக்குநருக்கும் இவரது இசை ஜொலித்து இருக்கிறது..
இப்படத்தில் "பூக்களைத்தான் பறிக்காதீங்க காதலைத்தான் முறிக்காதீங்க "
மலேசியா வாசுதேவன் குரலில் ஓர் அட்டகாசப் பாடல். அதையும் அவசியம் கேளுங்க..
இந்தப் படத்தில் மற்றுமொரு பாடலான மாலை எனை வாட்டுதே தான் எனக்கு மிகப் பிடித்தது..நிச்சயத்ததில் இருந்து திருமண நாளுக்கான இடைப்பட்ட இன்பமான வேதனை மற்றும் ஏக்கம் எதிர்பார்ப்பை வெகு அழகாகச் சொல்லிய பாடல்களில் முதல்தரம் அது.. அது இந்தத் தலைமுறைக்கும் அறிமுகமான பாடல் பெரிதாக அறிமுகம் நான் தரத்தேவை இல்லை என்றே அடுத்த முத்தான இதைத் தேர்ந்தெடுத்தேன்..
ராஜாவுக்கு வயலின்,  ரஹ்மானுக்கு புல்லாங்குழல் என  இசைக்கருவிகள் பாடலில் ஆளுமையைத் தருவது போல டி .இராஜேந்தருக்கு வீணை..நிறைய பாடல்களில் துள்ளி விளையாடும்..
இந்தப் பாடல் ஆரம்ப இசையிலும் பாருங்கள்.. அட்டகாசமான துவக்கத்தைக் கொடுக்கும்..பெண்ணை மீட்டுவது போல. அது முடிந்து மெதுவாக எடுப்பார் SPB . SPB சித்ரா கலக்கலான டூயட்களில் இதுவும் ஒன்று
சோலைகள் எல்லாம் பூக்களைத் தூவ..சுகம் சுகம்..ஆ ஆ..
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ ஓ ..
காதல் ஊர்வலம் இங்கே...(வீணை )
கன்னி மாதுளம் இங்கே..(வீணை )
கன்னி என்பதிலேயே சன்னமா ஒரு குறும்புச் சிரிப்பை வைத்திருப்பார் SPB ..இப்பாடலில் ஆங்காங்கே அவரது மயக்கும் சிறப்பைக் கேட்டு ரசிக்கலாம். காதல் டூயட்களில் இவரது குறும்புச் சிரிப்பு ஒரு காதலனின் குறும்பை நினைவூட்டி மெய் சிலிர்க்க வைத்து விடுகிறது.. 😍😍
பாடலாசிரியரும் இவரே..பேச்சிலேயே எதுகை மோனை துள்ளும்...பாட்டில் கேட்கணுமா? ஆனால் உறுத்தலாக இல்லாமல் அழகாக வந்து விழுந்திருக்கின்றன வரிகள்.. இடையிடையே அழகான கோரஸ் குரல்கள்..
காதலி அருகிலே (வயலின் )
இருப்பதே ஏ ஏ ஆஆனந்தம்
காதலன்ன்ன் மடியிலே (வயலின்)
கிடப்பதே ஏ   பரவசம்
நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா..ஹஹ்ஹா
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா..
புத்தகம் போல் தமிழை சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்
நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்
நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்
காதல் ஊர்வலம் இங்கே...அடுத்து அந்த வீணையோடு,  த தா த ததா வை இட்டு நிரப்பி இருப்பார் SPB அட்டகாசமாக இருக்கும் ☺
நதியாவும் சுரேஷும் அந்தக் கால ஹிட் ஜோடி..நதியா என்றாலே அவர் உடைகளைக் குறிக்காமல் இருக்க முடியாது..அருமையான dressing sense உடையவர்.. அதனால் இன்றளவும் அவரது உடைகளுக்கு நான் பெரிய ரசிகை.. துளி கூட ஆபாசமில்லாம ஒரு டூயட் எடுத்திருக்காங்கப்பா :)
இருப்பினும் எனக்கென்னவோ கார்த்திக் காதல் காட்சிகள் அளவுக்கு சுரேஷ்  பாடல்கள் ஈர்க்கவில்லை :)
இந்தப் பாடல் இடை இசைகள் flute ,வயலின் ,சாக்ஸ் என பல கருவிகளால் நிறைந்து இருக்கும்..எனக்கென்னவோ இவை ஏதோ ஒரு format ல அமைஞ்ச உணர்வு..அதாவது வேற சில பாடல்களிலும் இந்த format வருவது போலவும்.. அப்படி வேற ஒரு பாடல் கேட்டு இது நிச்சயமாக TR பாட்டாகத் தான் இருக்கும் என நினைச்சு அதே போலயே அது TR பாடல் :) TR பற்றி பல பிம்பங்கள்..ஆனால் அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு அவரது இசையை மட்டும் ரசிப்போம் ..அதுவே நிறைவானது :)







Saturday, November 7, 2015

மழை நின்ற பின்பும்..

பாடல் : மழை நின்ற பின்பும் தூறல் போல
படம் : ராமன் தேடிய சீதை
இசை : வித்யாசாகர்
பாடலாசிரியர் :கபிலன்
பாடியவர் : கல்யாணி

வித்யாசாகரின் தரமான ஆல்பங்களில் ஒன்று "ராமன் தேடிய சீதை " ஒவ்வொரு பாடல்களுமே முத்து.. என்ன புள்ள செஞ்ச நீ பாடலில் ஒரு பாமரனின் குரலில் உருகி இருப்பார் வித்யாசாகர்.. பெற்றவனுக்குத் தானே தெரியும் புள்ளையோட அருமை .உணர்ந்து பாடி இருப்பார்..அந்த வலியை அப்படியே நம்மிடம் சேர்த்திருப்பார். இப்பவே இப்பவே இன்னுமொரு முத்து..
இதிலே மழை நின்ற பின்பும் தூறல் போல தான் என்னோட most favorite .
இந்தப் பாடலைப் பிடிக்கக் காரணம் இது பெண்ணின் மனக் குரலாக வருவது தான்..இந்தப் பாடலை எழுதியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் :) நல்ல உவமை வரிகளில் ..

அடர்த்தியான பெண் குரலை விட மெலிதான குரல் வெகுவாக ஈர்த்து விடுகிறது.. பாடலானது ஒரு  ரமணிச்சந்திரன் சிறுகதை படித்த உணர்வைக் கொடுத்து விடுகிறது :) தனக்கு வந்த காதலை அவ்வளவு எளிதாக எந்தப் பெண்ணும் சொல்லி விடுவதில்லை.. ஆணுக்கு அந்த உணர்வு பெரும் பாரம் உடனே இறக்கி வைத்து விட வேண்டும்..ஆனால் பெண்களுக்கு அது வாழ்க்கை , யோசித்தே தான் முடிவு எடுப்பார்கள்..சட்டென உணர்வின் வசம் செல்லாம  நாலையும் யோசிப்பதும், அப்படியே சென்றாலும் யாசிக்கச் சிரமப்பட்டு நிற்பதும் நான் பார்த்த பெண்களுக்கான குணம்..இதை அப்படியே பதிவு செய்திருக்கும் இந்தப் பாடல்.. எத்தனையோ பாடல் வரிகள் இசை நன்றாக இல்லாமல் நம்மை வந்தடையாமல் குப்பைக்குள் முத்தாகக் கிடக்கின்றன..நல்ல இசை என்பது தனியாக ஹிட் ஆகலாம்..ஆனால் பாடல் வரிகள் மனதில் பதிவது என்பது இசை ஒத்துழையாமல் நிகழாது.. இப்பாடலிலும் இசை தன் பணியைச்  செவ்வனே செய்கின்றது..
மெலிதான ஹம்மிங்ல ஆரம்பிக்குது பாடல்..
மழை நின்ற பின்பும் தூறல் போல
உனை மறந்த பின்பும் காதல்
அலை கடந்த பின்பும் ஈரம் போல உனை பிரிந்த பின்பும் காதல் ..
ஒரு பாடலை ரசிக்க வைப்பதில்  எப்படி இசை மற்றும் வரிகளுக்குப் பங்கிருக்கிறதோ அதே போல பாடலைப் பாடியவரும் .
அதிலும் சில சொற்களை உச்சரிக்கும்போது அதிலே கொடுக்கும் அழுத்தம் ,கிறக்கம் ,மென்மை இப்படிப் பல உணர்வுகள் பாடல் வரிகளுக்கு அர்த்தமூட்டுகின்றன.. இதை இந்தப் பாடலைப் பாடிய பாடகியும் உணர்ந்து செய்தது சிறப்பு..ஆங்காங்கே பாடலின் இடையே மூச்சு விட்டிருப்பார் அதுவும் இந்தப் பாடலுக்கு அழகு சேர்க்கவே செய்கின்றது..
இந்தப் பாடலில் இரண்டாம் சரணம் தான் எனக்கு மிகப் பிடித்தமானது :)
கண்ணிமைகள் கைத் தட்டியே உன்னை மெல்ல அழைக்கிறதே
உன் செவியில் விழ வில்லையா..  உள்ளம் கொஞ்சம் வலிக்கிறதே
உன்னருகே நானிருந்தும் உண்மை சொல்லத் துணிவு இல்லை
கைகளிலே விரல் இருந்தும் கைகள் கோர்க்க முடியவில்லை"

இந்தப் பாடலுக்கு முத்தாய்ப்பான வரிகளாக நான் நினைப்பவை
"உன்னை எனக்குப் பிடிக்கும்
அதைச் சொல்வதில் தானே தயக்கம்
நீயே சொல்லும் வரைக்கும் என் காதலும் காத்துக் கிடக்கும் "
அடிக்கடி இந்தப் பாடலைக் கேட்க நேரிடும்போது இந்த வரிகளில் வழியும் பெண்மையை  வெகுவாக ரசிப்பேன் :))
இந்தக் குரல் கொடுத்த உணர்வை , காட்சியமைப்பில் கோட்டை விட்டு விட்டதாகவே தோன்றும்..அதனால் இந்தப் பாடல் கேட்க மட்டுமே..
பாடல் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை காதல் வந்த பெண்ணின் மனதை ,மெதுவான துள்ளலோடு (அது என்ன துள்ளல் என்று சொல்லிட்டு மெதுவா ன்னு யோசிக்காதீங்க.. பெண்ணின் மலர்ப்பாதம் எவ்வளவு துள்ளினாலும் மென்மை தான் ) இசையால் படம் பிடித்திருப்பார் வித்யாசாகர்..என்றும் இனியவைப் பட்டியலில் ஒரு தரமான மெலடி..மழை நின்ற பின்பும் தூறல் போல  பாடல் முடிந்த பின்பும் பாடலின் ஆலாபனை மனத்தில்..





Sunday, October 4, 2015

காதல் கவிதைகள் படித்திடும் நேரம்..

பாடல் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம்
படம்    : கோபுர வாசலிலே
பாடலாசிரியர் : பிறை சூடன்
இசை : இளையராஜா

இந்தப் பாடல் பற்றி உங்களுக்குப் பெரிதாக அறிமுகம் தேவையில்லை..ராஜாவின் டாப்  பட்டியலில் எப்படியும் பத்துக்குள் வந்துவிடும் .இந்தப் பாடல் பற்றி எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டியது எனது ஹெட்போன்..அதிலே கேட்கும்போது தான் இப்பாடலில் ராஜா கொடுத்த விருந்து ,இசை ஜாலங்கள் சின்னச் சின்ன நுணுக்கங்கள் எல்லாம் புரிபட்டன..எத்தனையோ முறை கேட்டிருந்தாலும் எனக்கு இந்தப் பாடல் இன்னமும் புத்துணர்ச்சியோடு புதிதாகவே உணர வைக்கின்றது..காரணம் இசை.எவ்வளவு வாத்தியக் கருவிகள் பயன்படுத்தி அதை எத்தனை அடுக்குகளாக வைத்து ஒரு RICH ORCHESTRATION கொடுத்திருக்கிறார் ராஜா என்ற ராட்சசன்.. எத்தனையோ இசையமைப்பாளர்களின் பாடல்களை ரசிக்கிறோம் தான்.மறுப்பதற்கில்லை.. ஆனால் அவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தி தனித்தன்மையோடு காட்டுபவை இவை போன்ற பாடல்களே..

எங்க...ஒன் .....டூ...த்ரீ...
எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅஅ அட்

பெண் என்பவள் அவ்வளவு எளிதில் காதலைச்சொல்லிவிட மாட்டாள்..அவளைத் தூண்டி உள்ளிருக்கும் காதலை இப்படி சத்தமாக வெளிப்படுத்துவதைச் சாத்தியமாக்கிய சிரிப்புடன் கார்த்திக் ,சொல்லிவிட்டு வெட்கிச் சிரிக்கும் அப்பெண்(பேர் சுசித்ரா வாம்..பாடல் இருக்கும் வரை இவரும் நினைவில் இருப்பார் )  என்று அப்படியே அந்தக் காட்சி மனதில் நிறைக்க,  அந்த ஆனந்தத்தை , உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இசை..

மனசுல பட்டாம்பூச்சி பறப்பது மட்டுமல்ல மனமே பட்டாம்பூச்சியாகி பறந்தால் எப்படி இருக்கும் என்பதை உணர்த்துகிறது அந்த வயலின் இசை..மெலிதாக ஆனந்தப் பிரவாகத்தை , ஆர்ப்பரித்து மேலெழும்ப வைக்கும்.
இந்த வயலினைத் தொடர்ந்து பீட்ஸ் ஆரம்பிக்கும்போது கூர்ந்து கவனியுங்கள் சில் சில் என்ற ஓசை வெகு வெகு மெலிதாக ஒவ்வொரு காதிலும் மாற்றி
மாற்றிக் கேட்கும். இது வீடியோவில் கேட்பதில்லை.. அந்த பீட்ஸ் தொடர்ந்து
புல்லாங்குழல் ..அதுவும் இரண்டு விதமாக ஒலிக்கும்..முதலில் தொலைவில்
இருந்து ஒலிப்பது போலவும் அடுத்து நெருக்கமாக ஒலிப்பது போலவும்
இருக்கும்.அப்படியே நின்று அடுத்து மணி மங்கள ஒலி எழுப்பும் .  அந்த மணி ஓசையின் போது அந்த சில் சில் நின்றுவிடும்..பின் SPB ஆரம்பிக்கவும் திரும்ப வந்து இணைந்து கொள்ளும்.

பாருங்கள்..ஒரு சில நொடிகளுக்கான PRELUDE க்கு எவ்வளவு மெனக்கெடல்..எத்தனை இசைக் கருவிகள் அதில் எத்தனை ஜாலங்கள்..இது பாடல் முழுக்கத் தொடர்கின்றது..SPB பாட இடையில் தொடர்கிறார் சித்ரா..இது படத்தில் சின்னக் கவிதையாக காட்சியமைக்கப்பட்டிருக்கும்..கார்த்திக் பாடிக்கொண்டிருக்கும் போதே மைக்கை நாயகியிடம் நீட்ட , அவர் வெட்கத்தோடு பாட ஆரம்பிப்பார்..கார்த்திக் உற்சாகத்தோடு இன்னும் ஆவலாய் மைக்கை நீட்டுவார்..இதைக் கற்பனை செய்து இசை அமைத்தாரா இல்லை இப்படித்தான் எடுப்போம் என்று கேட்டே இப்படி பாட வைத்தாரா எனத் தெரியவில்லை :)

அதே போல இடை இசையையும் கவனியுங்கள் எத்தனைக் கருவிகள் எப்படி நிறைத்து , நிறைவு செய்திருக்குமென..பியானோ(என நினைக்கிறேன் ) , ட்ரம்ஸ், புல்லாங்குழல்,கிடார்,வயலின் என ஒரு அவியலே இருக்கும்.எனினும் தனித் தனியாக உணர முடியும். அளவாக மிகையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் . அந்த சில் சில் , சிலவற்றுக்கு வழி விட்டு நின்று திரும்பத் தொடரும்.. இடையில் வரும் அந்த வயலின் நின்று நின்று இசைக்கும்..எனக்கென்னவோ அது கார்த்திக்கின் துள்ளலுக்கானது :)) ஓர்
அழகான GIFT கவரில் இன்னும் அழகு சேர்க்க அதன் மேல ஓர் வெல்வெட்
துணி கொண்டு பூ டிசைனில் அழகு படுத்திக் கட்டி இருப்பார்களே அது
போன்று இருக்கும்.இந்த வயலின் முடிந்து ஒலிக்கும்
புல்லாங்குழலானது..இசை முடிவதும் பாடகர்கள் தொடங்குவதும் ஓர்  அழகான புரிந்துணர்வு ..

கை வீசிடும் தென்றல்ல்ல்
கண் மூடிடும் மின்னல்ல்ல்
இது கனியோ கவியோ சிலை அழகோ..

பாடலாசிரியர் பிறை சூடன்..ஆச்சரியம்தான் வழக்கமாக வாலி,வைரமுத்து என்றில்லாமல் இவரைப் பற்றியும் அறிய ஓர் அரிய வாய்ப்பு.. ராஜ இசைக்குத்
தக்க இவரும் பரிமாறி இருக்கிறார் வரிகளை.

மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி
தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி..

என்ன அழகான வரிகள் :)

இரண்டாவது இடை இசையில் அந்த டோட்டடோட்ட உடுக்கை மாதிரி ஒரு  இசை வர்றப்ப அந்த சில் சில் மாறி மாறி ஒலிக்காமல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கும்.அடுத்து ஒரு புல்லாங்குழல் நீளமாக ஒலிக்கும்..அதுவரை இந்த சில் சில் சேர்ந்தே வரும். அது முடிய மெலிதாக பியானோ , அடுத்த விருந்து  வயலின் கொடுக்கும்
பாருங்கள் கண் மூடி லயிக்கலாம்..

பாடலே ராஜ போதை..இதிலே கள்ளுண்டவர்கள் போலத்தான் பாடி இருப்பார்கள் SPBயும் சித்ராவும்..அதனால் ஒவ்வொரு வரியிலும் அது தென்படும்..

பூ மாலைகள் கொஞ்சும்ம்ம்
பாமாலைகள் கெஞ்சும்ம்ம்
.................
தோள் சேர்ந்திடும் கங்கைஐஐ
செவ்வாழையின் தங்கைஐஐ
............................................
இதயம்ம்ம் இடம் மாறும்
இளமை பரி...மாறும்..(உச்சரிப்பிலேயே பரிமாறுவார் SPB)
அமுதும்ம்ம் வழிந்தோடும் அழகில் கலந்தாட
இப்படி..

உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை என்றதும் வயலின் -புல்லாங்குழல் -வயலின்  மெலிதாகத் தொட்டுச்செல்லும்..

போலவே கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவா என்ற முடிவில் வரும்
 வயலினும்..பாடல் முழுக்க இந்த வயலின் மொத்தமாய் ஒரு விதமாக கட்டி
அணைத்தால் குறுக்கே குறுக்கே வரும் மற்ற புல்லாங்குழல் வகையறாக்கள்
காதலர்களின் செல்லச் சீண்டல்கள் ,குறும்புகள் கொண்டவை.

சரணம் முடியும் தருவாயில் பல்லவி முதல் சொல் ஆரம்பிக்கும்போது     காஆ ஆஆஆத..ல் என்பதில் கொத்து புரோட்டாபோட்டிருப்பார் மெலிதான ட்ரம்ஸ்  வைத்து :)

இதயம்ம்ம் இடம் மாறும்....ம் 
இளமை பரி...மாறும்.
அமுதும்ம்ம் வழிந்தோடும்.....ம் 
அழகில் கலந்தாட

பாடல் முடியும் தருவாயில் , ஆடியோ வெர்சனில் மட்டும்தான் தனியாக
 மயக்கத்துடன் சொல்லும்  இந்த "ம்" வரும்.  வீடியோ வெர்சனில் இல்லை.
இறுதியாக ஒரு பினிஷிங் டச் என்பார்களே..புது மோகம் என சித்ரா,  முடிக்கும் போது வைத்திருப்பார்

ராஜா இதை நேரடியாக கச்சேரியில் இசைக்கும் போது ஒவ்வொரு இசைக் கருவிகளும் என்ன என்ன என அறிந்து ரசிக்கணும்..என்பது என் பேராசை..
.கண்டிப்பா இந்தப் பாடலோட ஆடியோவெர்சனை டவுன்லோட் செய்துவிட்டு மொபைலில் ஹெட்போனோடு அமர்ந்து கொண்டே இதைப்படிக்கவும்.. பின்னர் வீடியோ வெர்சனையும் பார்த்து மகிழவும்..அதன் பின் மனம் முழுக்க ஆனந்தப் பிரவாகம்  பரவி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை ராஜா மீது ஆணையாக சொல்லிக் கொள்கிறேன் :)

ராஜாவின் இசைக்கு சரியாக நியாயம் செய்திருப்பார்கள் அழகான காட்சிப்படுத்தலின் மூலம்.  காட்சியில் ஆரம்ப வயலின் & புல்லாங்குழலுக்கு உற்சாகத்தோடு நீரில் விழுவதும்,  புறாக்கள் மேலே எழும்புவதும் வெகு பொருத்தம் .புறாக் கூட்டம் , கடல்,கார் பயணம், மழை என பாட்டு முழுக்க ஒரே மகிழ்ச்சியில் திளைத்தல் தான் காதலர்களுக்கு வேலை :) காதலர்களின் உற்சாகம் அப்படியே நம் மனத்திலும் அப்பிக் கொள்ளும் :))

 இரண்டாம் இடை இசையில் , பறக்கும் குடையை யாரோ ஒருவர் இழுத்துச் செல்வதை சமீபமாக , எழுத்தாளர் நர்சிம் சொல்லித்தான் ஊன்றிக்
கவனித்தேன்:) எங்க .. பாட்டை ரசிக்கவும் , கார்த்திக்கை வேடிக்கை பார்க்கவே போதல :)

சார் கார்த்திக் சார் அழகு சார் :-)) குறும்பு சார் .. இனிமையான காதலன் சார் .. :))
சிரிப்பே கிக்கா இருக்கும் சார் :)) சிரிக்கறப்ப கண் சின்னதாகிடும் சார்.. :))
எத்தனை ஹீரோ அவருக்கும் முன்பும் பின்பும் ..  ஆனாலும் கார்த்திக் தான்
ரொமாண்டிக் ஹீரோ.  காதல் காட்சிகளை , கார்த்திக்கின் சாயல் இல்லாமல்,
இனி வரும் ஹீரோக்கள் செய்துவிட முடியாது.

எஸ் ஐ லவ் திஸ் இடியட் லவ் திஸ் லவபில் இடியஅஅ அட் :))