Thursday, June 4, 2015

காடு பொட்டக் காடு..

பாடல் : காடு பொட்டக் காடு 
படம் : கருத்தம்மா (1994)
இசை : A.R.ரஹ்மான் 
பாடியவர்கள் : மலேசியா வாசுதேவன்,பாரதிராஜா ,டி.கே.கலா 
பாடலாசிரியர் : வைரமுத்து 
நேயர் விருப்பமாக வருகிறது இந்தப் பாடல் :-) ரஹ்மான் எத்தனையோ படங்களுக்கு இசை அமைத்து விட்டாலும் என் மனம் என்னவோ அவரின் தொண்ணூறுகளின் பாடலைத் தாண்டி நகர மறுக்கின்றது..அத்தனையும் முத்துக்கள்..ஒருவேளை நிரூபித்துக் காட்ட வேண்டிய வெறி கொண்ட காலமோ என்னவோ? எப்பக்கம் தொட்டாலும் இனிக்கிறது..என்னுடைய பால்யம் ராஜா, ரஹ்மான், தேவா, வித்யாசாகர், சிற்பி என பலரை உள்ளடக்கியது..இசை யார் இயக்கம் யார் என்றறியாமலே கேட்டு ரசித்த பாடல்களே இன்றளவும் நெஞ்சில் நிற்கின்றன.. 

பாரதிராஜா படங்கள் என்றாலே மண் மணம் வீசும் ..இதிலும் பொட்டக் காட்டின் மணம் வீசுகின்றது..பாரதிராஜா படங்களில் இது அப்பொழுது மிக முக்கியமான பிரச்சனையாக இருந்த பெண் சிசுக் கொலையை மையமாகக் கொண்டது..அதனால் பாட்டைப் பற்றிப் பேசும் முன் படத்தின் கரு  பற்றியும் சில வரிகள் ..என் உறவினர் அக்காவுக்குத் திருமணம் ஆன புதிதில் "ஆண் குழந்தை பிறந்தால் மட்டுமே வீட்டுக்கு வா " என்ற கட்டளை வந்ததாகக் கேட்டு அறிந்திருக்கிறேன்..(இன்று அவர்களே ஒரு பெண் குழந்தை இல்லாமல் போனதே என்ற ஏக்கத்தையும் கண்டு கொண்டிருக்கிறேன் ) பெண் குழந்தை என்றாலே செலவு ,வரதட்சணை கொடுத்து மாளாது என்ற எண்ணத்தில் இருந்து இன்று ஓரளவு மீண்டு வெற்றி கண்டிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது.. ஏனெனில் இன்று பெரும்பாலும் முப்பதுக்குப் பிறகே தாமத திருமணம் அதிலும் குழந்தைப் பிறப்பு ஒரு பேறாக வேண்டி வரம் இருக்கும் நிலையில் எந்தக் குழந்தையாக இருந்தால் என்ன குழந்தை இருந்தால் போதும் என்ற நிலை வந்திருக்கிறது..இன்று பல மகளதிகாரங்கள் பார்க்க நேரிடுவது மகிழ்ச்சியாக இருக்கின்றது..(இது மிகப் பெரிய சமூக மாற்றம் ) போலவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் குறைய மகளைப் பெற்ற அப்பாக்களும் மகனைப் பெற்ற அம்மா  களும் பொறுப்புடன் பிள்ளைகளை வளர்ப்பார்கள் என நம்புவோமாக ! பெண்களுக்கான சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என முணுமுணுப்புகள் எழுந்தாலும் அவற்றில் சில உண்மை இருந்தாலுமே கூட , மிகக் கடுமையான சட்டங்கள் தாம் இன்று பல பெண்களைக் காப்பாற்றி இருக்கின்றன என்றால் அது மிகையாகாது..எண்பதுகளில் வரதட்சணை ஒரு மிக மோசமான சக்தியாக உருவெடுத்து இருந்தது.

படத்திற்கு பக்க பலமாக ரஹ்மான் இசை..இது டைட்டில் பாடலாக வருகிறது. இந்தப் பாடல் ,மற்றும் காட்சி அமைப்புகள் அப்படியே கிராமத்திற்கு பின்னோக்கி அழைத்துச் செல்கிறது என்னை..சிறு வயதில் ஒரு மணல் வீட்டில் வாழ்ந்ததுண்டு..அப்படியே எங்களுக்குச் சொந்தமான சில காடுகளையும் பராமரித்து வந்தார் அம்மா. ஏனோ நகரத்து பளபளப்பு மீது ஈர்ப்பு இருந்ததால் , கிராமத்து வாழ்க்கை பிடிக்காமலே ஓர் ஐந்து ஆண்டுகள் அங்கே வேண்டா வெறுப்பாகவே இருந்தேன்.. ஆனால் இப்போ ஒரு timecraft கிடைச்சா அப்படியே காலாற தொண்ணூறுகளுக்கு நடந்து போய் கண்மாய் ,செழிப்பான காடுகள் தோட்டங்கள் ,பவர்கட்டே இல்லாமல் இருந்த வாழ்க்கை,கூட்டாஞ்சோறு என ஒரு நாளேனும் வாழ்ந்து பார்த்துவிட்டு வர ஆசை. காடுகளில் சில வகை உண்டு..கரிசல் காடு ,பொட்டக் காடு என்பார்கள்.. நீர் இறைக்க கிணறு உள்ளவை தோட்டம் எனப்படும்..இதிலே பொட்டக் காடு கருப்பும் சிவப்பும் சேர்ந்த மண்.பொருபொருவென இருக்கும் (சகதி இன்றி ) ஓர் மழை நாளில் இந்தப் பொட்டக் காட்டுக்குச் சென்ற பொழுது கண்ணுக்குக் குளிர்ச்சியாக கண்ட  விதம் விதமான வண்ணத்துப் பூச்சிகள் இன்னமும் என் நினைவுகளில் பறந்து கொண்டே இருக்கின்றன..ஹ்ம்ம்..
காடு பொட்டக் காடு
செங்காத்து வீசும் காடு
வீடு கீத்து வீடு 
எலியோடு எங்க பாடு...
கீத்து வீடுன்னா என்னன்னு தெரியுங்களா ?தென்னங்கீத்து இருக்கு பாருங்க அதிலே வேயப்பட்ட வீடு.. அதிலே வெளியே இருந்து உள்ள பூனை குதிக்கும் எலி குதிக்கும்..சூரியன் கூட அப்பப்ப எட்டிப் பார்க்கும்..கிராமங்களில் மணல் வீடு ,கல்லு வீடு (காரை வீடு என்போம் ) மற்றும் இது போல கீத்து வீடுகள் நிறையப் பார்க்கலாம்.. 
கூழு சோழக் கூழு 
வெங்காயம் கூடச் சேரு 
தை மாசம் நெல்லுச் சோறு 
பூமி எங்க பூமி 
வானம் பார்த்து வாழும் பூமி 
தூங்கிப் போச்சு எங்க சாமி 
கிராமத்து உணவு முறை எப்படி தெரியுமா? நெல்லுச் சோறு விலை கூட அப்ப .(நெல் அவிக்கிற வாசம் இருக்கே..ப்பா ) தை மாசம் தான் அறுவடை.. பெரும்பாலும் கஞ்சி தான்..கம்பங் கூழு கேப்பக் கூழு சோழ கூழு.. இப்பல்லாம் மதுரையில் ஆங்காங்கே இவை விற்கப் படுகின்றன..ஒரு தலைமுறை இதன் ருசி அறியாமலே வளர்வது வருத்தம் தான்.. மெனக்கெட்டு வெஞ்சினம் (side dish) வைக்க மாட்டாங்க வெங்காயம்  உரிச்சு தான் சாப்பாடு.. அந்த எளிமையான உணவு முறையே ஆரோக்கியமாகவும் இருக்கும். காட்டு வெள்ளாமை ,தோட்ட வெள்ளாமை என்ற இரண்டு சொற்பதங்களை கிராமங்களில் கேட்கலாம்.. நீர் தேவையை கிணறு வெட்டி இறைத்துக் கொண்டால் அது தோட்ட வெள்ளாமை..இதற்கு மழை தேவையில்லை.. இந்த நீரே போதுமானது.. ஓரளவு பணம் உள்ளவர்கள் இப்படி செய்து மாட்டின் மூலமாக நீர் இறைப்பதோ அன்றி மோட்டார் போட்டு தண்ணி எடுப்பதோ உண்டு.
காட்டு வெள்ளாமை என்பது இப்பாடலில் வரும் வானம் பார்த்த பூமி என்ற வரிகளுக்கானது.. விதைச்சுடுவாங்க ..மழை வந்தால் பிழைச்சுக்கும் இல்லாட்டி சிரமம்.அதிலும் பருவம் தப்பி மழை பெய்தாலும் கஷ்டம்..வானம் பொய்த்தால் அந்த ஆண்டு அதோ கதி தான்.
அந்தி நேரம் வந்தா தலையெல்லாம் எண்ணிப் பாரு 
ஆடு மாட்டச் சேர்த்து எங்க வீட்டில் ஏழு பேரு 
ஆறு எங்க ஆறு அட போடா வெட்கக்கேடு 
மழை வந்தா தண்ணி ஓடும் மறுநாளே வண்டி ஓடும்
கண்ணு பெத்த கண்ணு  என் கன்னுக்குட்டி ஒன்னு ஒன்னு 
கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு .
வீட்டிலே கோழி,ஆடு வளர்த்த அனுபவம் உண்டா? :) பகல் முழுக்க மேய விட்டுட்டு மாலையில் அவை வந்து அடையும் போது வெள்ளச்சி இருக்காளா கருப்பன் வந்துட்டானா என அண்ணன் சோதிப்பதுண்டு :) என்னதான் ஆட்டை ஒருநாள் வெட்டத் தான் போகிறார்கள் என்பதே நிதர்சனம் என்றாலும் பார்த்துப் பார்த்து வளர்க்கும் இன்பமே தனி :) இப்பவும் ஊருக்குள்ள மழை வந்தா அது பெரிய சேதியாகவே பரிமாறிக் கொள்வது .விவசாயம் நம்பியே வாழ்க்கை 
காக்கா இளைப்பாற கருவேலம் மரம் இருக்கு 
என் மக்க இளைப்பாற மாமரத்து நிழல் இருக்கா?
கொக்கு பசியாற கொக்குலத்து மீனிருக்கு 
என் மக்க பசியாற மக்கிப் போன நெல்லிருக்கா ?
சீமைக் கருவேலத்தை விட நம் கருவேல மரங்கள் எவ்வளவோ தேவலாம்..ஆனால் முள் இருக்கே ..கரிசக் காட்டில் பார்த்திருக்கிறேன் .இந்த மக்க என்ற சொல் கிராமத்தில் அதிகம் புழங்கும்..பிள்ளைகளைத் தான் நான் பெத்த மக்கா என்பார்கள் .சமீபத்தில் த்ரிஷ்யம் பார்த்தப்ப இந்த மக்களே மலையாளத்திலும் இதே பயன்பாட்டில் வருகிறது என அறிந்தேன். 

மாடு தத்த மாடு இது ஓடும்  ரொம்ப தூரம் 
வாழ்க்க தத்த வாழ்க்க இது போகும் ரொம்ப காலம்
காட்டுக் கள்ளிக்குள்ள  உள்ளாடும் வால போல 
உள்ளூர கண்ணீர் பொங்கும் சொல்லாம உள்ளம் பொங்கும்..
பட்ட மரத்து மேல எட்டிப் பார்க்கும் ஓணான் போல
வாழ வந்தோம் பூமி மேல 

நான் ஏன் வரிக்கு வரி எழுதி இங்க சொல்கின்றேன் என்றால் கவிஞர் வைரமுத்துவின் இயல்பான யதார்த்தம் தோய்ந்த உவமை மிக்க வரிகளுக்காகவே.. கிராமத்தில் இருந்து வந்தவர் என்பதால் கிராமத்துப் பாடல்களில், தான் கண்டவற்றை சொற்களில் அழகாகப் படம் பிடிக்கின்றார் .
மாடுகள் விவசாயிகளின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஓர் அங்கம்.  மாட்டு வண்டிப் பயணங்கள் மறக்கவே முடியாது.. இதிலே சுறுசுறுப்பான மாடுகள் கழுத்தில் மணியோடு பறக்கும்..சில ஆடி அசைஞ்சு ,நீ எவ்ளோ வேணா பின்ன இருந்து குச்சி வச்சு குத்து நான் மெதுவாத் தான் போவேன்னு நிக்கும்..இன்னமும் "ஒரு வேலை செய்ய வைக்க உன்ன குச்சி வச்சுக் குத்தணுமா" என்று அம்மாவிடம் திட்டு வாங்குவதுண்டு :) இதுல மெதுவாகப் போகின்ற மாட்டைத் தான் தத்த மாடு என்பதுண்டு. தத்தித் தத்திச் செல்லும் என்ற வரிகள் கேள்விப் பட்டதுண்டு தானே ? (தத்தி என திட்டும் சொல் கூட உண்டு ..எதையும் உடனே புரிஞ்சுக்காத மண்டன்னு அர்த்தம் ) இப்படி தத்தித் தத்திச் செல்லும் மாடு எவ்வளவு மெதுவாகப் போகுமோ போலவே எங்களின் வாழ்க்கையும் என்பதே இதன் பொருள். சற்றே வலி தைக்கும் வரிகள். 

கள்ளிச் செடி வெளியே பார்க்க கனமான தோலைக் கொண்டதாக இருக்கும்..ஆனால் உள்ளே வழுவழுப்பான உட்பொருளைக் கொண்டிருக்கும் . இந்தப் படத்தில் கூட தகப்பன் பெண் குழந்தைகளாப் போச்சே என்றொரு எரிச்சலோடு தான் இருப்பார். ஆனாலும் பெண் மணமாகிச் செல்லும்போது கண் கலங்குவார். அழகான உவமை இது.
ஒரு பாடல் எவ்வளவு சின்னச் சின்னச் கதைகளை சொல்லிச் செல்கிறது..போகிற போக்கில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையையும்..
எல்லாப் பாடல்களும் அட்டகாசமாய் பாடக் கூடியவர் எனினும் கிராமத்துப் பாடல்கள் எனில் அதற்குத் தனி உயிர் கொடுக்க மலேசியா வாசுதேவனாலேயே  முடியும் .அதற்கெனவே நேர்ந்து விட்டது போல..சோகம் இழையோட , ஒரு துண்டை வீசி தோளில் போட்டு நடந்து கொண்டே ஒரு பெரியவர் நம்மிடம் இக்கதைகளைச் சொல்வது போன்ற ஒரு பாவனை குரலில். இடையே கட்டையாய் சற்றே இழுவையுடன் பாரதிராஜா குரலும் ஆகப் பொருத்தம் இந்தப் பாடலுக்கு. பெண் குரல்  மிக மெலிதாக , பெற்றவளின் மனக் குரல் வேதனையைப் பறை சாற்றும்.. 

படமும் பாடலும் வெளி வந்து இருபது ஆண்டு காலம் ஆகியும் இன்னமும் பசுமையாக மனதில் நிற்கின்றது. பாடல் கேட்டு முடித்தவுடன் மனம் முழுக்க ஓர் ஆக்கிரமிப்பு அகலாது ஏதோ ஒன்று அப்படியே அழுத்தி வைக்கிறது சில கணங்களுக்கு.. .




Wednesday, February 11, 2015

கொடியிலே மல்லியப் பூ..

படம் : கடலோரக்கவிதைகள் 
பாடல் :கொடியிலே மல்லியப் பூ 
இசை : இளையராஜா 
பாடலாசிரியர் வைரமுத்து 
பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , ஜானகி 

படிக்கும் பொழுது, தங்கி இருந்த ஹாஸ்டலில் பொழுது போக்காக ஓர் இரவில் தோழி, காதில் கிசுகிசுப்பாகப் பாடியதில் பிடித்துப் போன பாடல் இது :) வருங்காலச் சந்ததிக்கு நான் சொல்லும் தகவல் முன்பெல்லாம் பாடல் என்பது டீ ப்ரேக்க்கு அல்ல.  ஒரு குழும உழைப்பாக இருக்கும்..போற போக்குல மச்சி பச்சின்னு இல்லாம,படத்தோட சூழல், கருப்பொருள் உள் வாங்கி,  உருப்பெற்றதாக இருக்கும்.. இந்தப் பாடலும் அவ்வகை சார்ந்ததே.. ஒரு காலத்தில காதலைச்சொல்லவே தயங்கி இருக்காங்க என்பது கூட,  வரும் காலத்தினருக்கு காமெடியாக இருக்கக்கூடும் .. ஆனால் இருந்தது .

பாடல் முழுக்க கவனிச்சுப் பாருங்க.. ஒரு தயக்கம் இழையோடும் இசையில்.. 4 நிமிடங்களும் , மழை சற்றே வெறித்த யாருமற்ற சாலையில் ,கைகளை உரசவா,வேணாவா என்ற தயக்கத்தின் ஊடே ,மயக்கத்துடன் மெலிதாக நடை போடும் இசை , காதலர்களின் மனம் உணர்ந்தார் போல .. 

கொடியிலே....மல்லியப் பூ...... மணக்குதே மானே...
எடுக்கவா....தொடுக்கவா...துடிக்கிறேன் நானே..
பறிக்கச் சொல்லித் தூண்டுதே... பவள மல்லித் தோட்டம்..
நெருங்க விட வில்லையே நெஞ்சுகுள்ளக் கூச்சம்..(இந்தக் கூச்சம் என்ற சொல்லைக் கூச்சத்துடன் உச்சரித்து இருப்பார்கள் பாடகர்கள் )

கவனிச்சுக் கேளுங்க..ஒவ்வொரு சொல்லின் ஊடேயும் இடைவெளி இருக்கும்..அதை ஆமோதித்து ,அடுத்துச் சொல்ல மெல்லத் தூண்டுவது போல இடையிசை..எப்பவுமே தயக்கத்தில் பேசுபவர்களைத்தடை செய்யக் கூடாது..அதுவும் பேசவே யோசிக்கின்ற விசயத்தில்..இசை அதை நன்கு உணர்ந்து எவ்விதத்திலும் உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டேன் என்பது போலச் சமர்த்தாக இருக்கும் ..எட்டி எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே  பயணிக்கும் உறுத்தலின்றி .. பாடல் முழுக்க mindvoice தான்...அதனால சத்தமாப் பாடக் கூடாதுன்னு சொல்லிருப்பாரு போல :) சின்ன வயசுல இந்தப் பாட்டை டிவியில முதல் முத பார்த்தப்ப, வாயே திறக்காம எப்படிப் பாடுறாங்க என வியந்து ,நானும் முயற்சி செய்ததில் ஒரு ம்காரம் மட்டுமே தொண்டையில் இருந்து வந்தது :( 

ஒரு நல்ல காரியம் என்றால் நல்ல சகுனம் வேணும் இல்லையா...46வது  விநாடியில வரும் பாருங்க ஒரு கோயில் மணி ஓசை..டிவைனு :) அதன் பின்னான வயலின் கூட அநியாயத்துக்கு அடக்கி வாசிக்கும்..அந்த குட்டி குய்குய்குய்  சன்னமாக ஒவ்வொரு சொற்களுக்கும் இடையில் வருவது பாடலுக்கு ராஜா செய்த அலங்காரம் :) 

மனசு தடம் மாறும் அது நினைச்சா இடம் மாறும்..
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்..

இப்படியாகச் செல்லும் மனவோட்டங்கள்...பாடலாசிரியர் பற்றிக் குறிப்பிடா விட்டால் அது பெரும் அநீதி.. வைரமுத்துவின் சிறப்பே இது போன்ற இயல்பான வரிகள் தான்.. வார்த்தை விளையாட்டு,தமிழை ஆழமாகப் பயன்படுத்தி அந்நியப்படுத்திவிடாமல்,ஒரு யதார்த்தமானவனின் குரலாகவே ஒலிப்பது..காதலிக்கும் எல்லாருக்கும் கவிநயமாகப் பேச வந்துவிடுவதில்லை என்பதே நிதர்சனம்.. அதே சமயம் காதலிக்கும் அனைவருக்குமே பொதுவான உணர்தல் என்ற ஒன்று இருக்கும்..அதை உள்ளது உள்ளபடி சொல்லும் பொழுது தானாகவே முன் வந்து மனதுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது மக்கள் பாடலாக :P

சொன்னால் தோற்றுவிடுவோமோ என்றஞ்சியே சொல்லாமலேத் தோற்ற காதல்கள் இம்மண்ணில் தான் எத்தனை..வெளிப்படுத்தப் படாத அன்பு முழுமை பெறாமலே போய்விடுகிறது..ஒருவேளை சொல்லி இருக்கலாமோ, ஒருவேளை சொல்லாமலே இருந்திருக்கலாமோ என்ற நுண் உணர்வுகளைக் கடக்காத காதல் மனம் மிகக் குறைவு..

ஜெயச்சந்திரனும் ஜானகியும் தயங்கித் தயங்கி ,காதலர்  மன ஓட்டங்களைப் பதிவு செய்திருப்பார்கள்.. ஆண் குரலே தயக்கத்துடன் வரும் பொழுது பெண் குரல் எப்படி இருக்கும்..வெளியேவே வராதே...அப்படியான குரல்.. பாறையில பூ முளைச்சு பார்த்தவுக யாரு...எனும் போது ஒரு மெலிதான வலி கொண்டும், அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு என சொல்ல மாட்டாமல் சொல்லும் அழகும், பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத் தானே தெம்பு இல்ல ன்னு ஒரு இழு இழுப்பாங்க.. 


ஜானகியை ஓர் ஆகச் சிறந்த பாடகி என்பேன்.. சொல்வதைச் செய்யும் கிளிப்பிள்ளைகள் காண்பது எளிது.. பாடலின் அழகியலை உணர்ந்து அதை இன்னும் மெருகேற்றும் பாடகிகள் அரிது..அதிலே ஜானகி "அ.."
கடைசியில் கூட 
காலம் வரும் வேலையில 
காத்திருப்பேன் பொன் மயிலே 
தேரு வரும் உண்மையில 
சேதி சொல்வேன் கண்ணால " தான் முடிக்கிறாங்க :) 

நிறையப் பணம் செலவழித்து வெளிநாட்டு லொகேஷன் இல்ல ஒரு பாலத்தின் மீது பீர் பாட்டிலோடு நண்பர் குழுவோடு நடனம் என்றில்லாமல் , அழகான காட்சியமைப்பு ஒளிப்பதிவு  .  பாடலில் வரும் கடலைப் பாருங்கள் ஏதோ சொல்ல வந்து வந்து தயங்கி,  பின் செல்வது போன்றே தோன்றவில்லை? A to Z வரை எழுத்து ஒரு பக்கம் சத்யராஜ் மறுபக்கம் ரேகா...எதனால் தயக்கம் என்ற மொத்தக் கதையும் இறுதியாக வந்து நிற்கும்..பிரம்மாண்டம் என்பது இத்தகைய பாடல்கள்  உள் நுழைந்து நம் மனதில் காலம் கடந்து ,நம்மில் விரிந்து இசைந்து ஒன்றி விடுவதும் கூடத் தான் :) எளிமையின் பிரம்மாண்டம் இந்தப் பாடல் 


நமது திண்ணை என்ற தமிழ் மின்னிதழில் வந்த பதிவு இது..அதற்கான சுட்டி :) 

Tuesday, February 10, 2015

எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் பாகம் -3



எனக்குப் பிடித்த டிவிட்டர்கள் பாகம் -1 & பாகம் 2

கவிஞர் மகுடேஸ்வரன் தமிழ் இலக்கணத்தை எளிமையாகவும், சுவராசியமாகவும் சொல்லித் தரும் மெய்நிகர்  தமிழாசிரியர் ..ஆர்வம் உள்ளோர் அவரது முகநூல்ப் பக்கத்தில் தொடரலாம் . 

இந்த ஆண்டில் @saichithra வை நேரில் சந்தித்த அனுபவம் மறக்க முடியாதது.. தனிப்பட்ட முறையில் எவ்வளவு பெரிய பதவி , வெற்றிபெற்ற நபர் ஆனால் பழக இவ்வளவு எளிமையாக இருக்க முடியுமா என்ற பிரம்மிப்பு இப்போ வரை அகலவில்லை..  என்னைச் சந்தித்த மகிழ்ச்சியை அவர் அதிர்ஷ்டமாகப் பார்த்த பொழுது அது இன்னமும் அதிகமானது..  கொஞ்சம் காலர் தூக்கி விட்டுக்கற மொமென்ட் :)

பொதுவாக படம் பார்க்கும் முன் திரை விமர்சனங்கள் படிப்பதே கிடையாது.. ஏனெனில் அவை சுவராசியத்தைக் கெடுத்து விடும் . பெரும்பாலும் விமர்சனம் என்கிற பெயரில் கதை சொல்லிகள் கொஞ்சம் அழுத்திச் சொல்ல வேண்டுமானால் பல முந்திரிக் கொட்டைகளை உருவாக்கி இருக்கிறது இணையம்..  அவர்களிடம் இருந்து காத தூரம் ஓடி நான் தஞ்சம் புகும் இடம் @amas32 blog ... இயன்றவரை சார்பற்ற விமர்சனமும், கதை சொல்லி விடாமல் பிடித்த/ பிடிக்காதவற்றை விளக்கும் பாங்கும் , காயப்படுத்தாமல் எதிர்மறை விமர்சனம் செய்யத் தேர்ந்தெடுக்கும் சொற்களுமாக என்னைக் கவர்ந்திழுத்திருக்கிறார் :)


.இங்கே விவாதங்கள் எப்பொழுதும் இறுதியை எட்டுவதில்லை.அவரவர் அவரவர் சார்ந்த கருத்துக்களுடன் இனிப் பேசிப் பயனில்லை என விலகிச் செல்வதே உலக வழக்கம். ஆயினும் காரசார விவாதங்கள் ஒன்று சேற்றைப் பூசுபவனவாக இருக்கும் அல்லது தனி நபர் தாக்குதலாக இருக்கும்.   அவ்விரண்டும் அன்றி @amas32 -@kryes க்கும் இடையே நடந்த இந்த விவாதம் மிகப் பிடித்தமானது..   அமாஸ் அம்மாவின் தரப்பைத் தேடி இங்கு தர இயலவில்லை

பெண்களைப் பற்றிய மிகச் சிறப்பான புரிதலுக்கான எடுத்துக்காட்டாக இந்த ட்வீட் :)

ரஜினிக்கு ஆகச் சிறந்த சமர்ப்பணம் :) 
எனக்குப் பிடித்த ட்விட்டர் உரையாடல்கள் :)
ட்விட்குறள் 
பிசாசுகுட்டி-சுப்பிரமணி 

ஆகச் சிறந்த நகைச்சுவை போட்டோ அந்தாக்ஷரி by @Mrelani & Bubloo 
நான் ரசித்த பதிவுகள்
சில பதிவுகள் நம் அடி மனதின் ஆழம் வரைத் தாக்கி கண்ணில் நீராக வெளிப்படும்..அது போன்று ஒன்று இது..ஒவ்வொரு பெண்ணுக்குமான மன பிரதிபலிப்பு .

வெகு இலகுவான நகைச்சுவையில் கணவன் மனைவி உறவைப் பற்றிய பதிவு 

வயிறு வலிக்கச் சிரிக்க "தீனித் தின்னிகள் :)

நான் மிகவும் ரசித்த இன்னும் சொல்லப் போனால் அண்ணன் வெளிநாட்டில் இருப்பதால் ஆத்மார்த்தமாக உணர்ந்த சொற்களைக்  கொண்ட டிவிட்லான்கர் இது by @selvarocky 

போரடித்து மொபைலைத் திறக்க , பேருந்து நிலையம் எனப் பாராமல் வாய் விட்டுச் சிரிக்க வைத்த டிவிட்லான்கர்  இது :-)) by @MrElani 

நாடி நரம்பு எல்லாம் குறும்பும் , நகைச்சுவை உணர்வும் ஊறிப் போன ஒருத்தரால தான் ,  இப்படி பெண்கள் விலகிப் போற டாபிக்ல கூட,  நிறுத்திப் படிக்க வைத்து  வயிறு வலிக்கச் சிரிக்க வைக்க முடியும்  :-)) அது முத்தலிப்பின் இந்தப் பதிவு லிங்க் திறக்காமலே எதுவெனத் தெரிந்திருக்குமே :)

எத்தனையோ பிரபலங்கள் இந்த ஆண்டு இப்பூலகை விட்டுப் பயணித்திருந்தாலும் என் மனதில் ஆழப் பதிந்து போனவர் விகடன் ஆசிரியர் S.பாலசுப்பிரமணியன்  . அவரைப் பற்றி ஓரளவே முன்பு அறிந்திருந்தாலும் தற்பொழுது , அவரைப் பற்றிய கட்டுரைகள், பகிர்வுகள் படிக்கப் படிக்கப் பிரம்மிப்பு.. விகடனின் முன்பு உங்கள் மனம் கவர்ந்தவர்களைச் சந்தியுங்கள் என்று ஒரு நிகழ்ச்சி வைத்து அதில் நமக்குப் பிடித்தமான பிரபலங்களைச் சந்திக்க வைத்து , அதைக் கட்டுரையாக பிரசுரிப்பார்கள்.. இப்பொழுது மட்டும் எஸ் பி அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் , அப்படி ஒரு வாய்ப்பை அவருடன் எனக்கு வழங்குமாறு கேட்டிருந்திருப்பேன்.. அந்த அளவுக்கு என் மனதில் உயர்ந்து இருக்கிறார் . பல எழுத்தாளர்களை ஊக்குவித்த அந்த நல்லாசிரியருக்கு என் மனமார்ந்த அஞ்சலி!


நான் மிக மிக ரசித்தக் குறும்படம் எனைச் சாய்த்தாளே .. ஒரு நண்பரின் மூலம் அறிமுகம் ஆகி, அதை டைம் லைனில் பகிர்ந்த பின் , இப்போ மூஞ்சிபுக்ல பரவிகிட்டு இருக்கு வைரஸ் மாதிரி ..இந்தப் பெண்ணின் ஒவ்வொரு முகபாவமும் ரசிக்க வைக்கிறது . அட தமிழ் சினிமாவே   எப்படித் தவற விட்டாய் இப்படி ஒரு நாயகியை :-))


ராஜாவைப் பற்றி  பண்டிட் பாலேஷ்.. பத்திரப் படுத்த வேண்டிய ஒன்று 

சிவன் தருமிக்குக் கொடுத்த பாடல் அன்று ஒரு புலவர் தமிழுக்கு அளித்த குறுந்தொகை ..அதற்கான அருமையான விளக்கம் சொக்கன் குரலில்

மன்னிச்சூ ..மிக தாமத வெளியிடலுக்கு ..மனசுக்குப் பிடிச்ச விசயங்களை மட்டும் எடுத்துகிட்டா ட்விட்டர் ஓர் அருமையான பொழுதுபோக்குத் தளம்.. 
பலதரப்பட்ட மக்களைக் கையாளுவது எப்படி என்பதைப் பற்றி அனுபவப் பாடம் கொடுக்கும் இடமும் கூட :) நான் தொடராவிட்டாலும் எனைப் பின் தொடருபவருக்கு என் நன்றி :) பலரைப் பிடித்தும் பின் தொடராமல் இருக்கக் காரணம் அவர்களுக்கும் எனக்குமான wavelength முற்றிலும் வேறாக இருப்பதால் தான்..இயன்றவரை சகிக்கக் கூடிய , அல்லது கடக்கக்கூடிய நபர்களாகப் பார்த்தே தேர்ந்தெடுக்கிறேன்.. படக்கென அன்பாலோ வேண்டாம் எனத் தோன்றினால் mute போட்டுவிட்டு சகஜமாக இருக்க முடிகிறது.. ட்விட்டர் முழுதுமாய் வசப்பட்டு இருக்கிறது.. ட்விட்டர் விட்டு விலகி இருத்தலும் கூட ...என் எழுத்தை ரசிக்க,விமர்சிக்க என ஒரு நட்பு வட்டம் என்னை நன்கு செதுக்கவே செய்திருக்கிறது..அவர்களுக்கு என் சிறப்பு நன்றி :)

இனி எல்லாம் சுகமே.. :-)