Wednesday, July 17, 2013

தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா !

நம்ம ட்விட்டர் @RavikumarMGR புதன் மாலை 5 மணிக்கு தியாகராஜா கலைக் கல்லூரிக்கு இளைய ராஜா வருகை தருகிறார் அவசியம் செல்லுங்கள் என்று மென்சன் போட்டார். விஷயம் ஆச்சர்யம் என்றாலும் உள்ளே விடுவார்களா என்று அசுவராசியம்.ஆனால் எளிதாக பார்க்கலாம் என்றும் சொல்லவே சரி போகலாம் என்று ஒரு சபலம். ஆனால் நான் ஒரு மறதி கேஸு தயவு செய்து அந்த நேரத்தில் நினைவு படுத்துங்க என்றதும் மொபைல் ரிமைன்டர் வைக்கச் சொன்னதும் வைத்திருந்தேன்.(இதெல்லாம் ரொம்ப ஓவரா இல்ல என்று சொக்கன் தன் மைண்ட் வாய்ஸ் பதிவும் செய்து விட்டார் :) ) அதே போல மறந்தும் விட்டு தூங்கி எழுந்ததும் ரிமைன்டர் NOTIFICATION காட்டியது.சுத்தம் ..

அரக்க பறக்க ஒரு கலர் சுடு தண்ணியை அதான் காப்பி (நானே போட்டா அப்படித்தான் இருக்கும்)விழுங்கிட்டு அந்த டம்ளரை தூக்கி எறியாத குறையா வச்சுட்டு இரண்டு ஷேர் ஆட்டோ மாறிப் பயணித்தேன்.  எப்படியும் நம் தமிழ்க் குல வழக்கப்படி 5 மணி விழா ஆரம்பம் என்றால் 6 மணிக்குத் தான் ஆரம்பிப்பாங்க.காலம் காலமா அதானே சம்பிரதாயம்.அந்த நம்பிக்கையில் அங்கே சென்றடைந்தேன்.என்னை ஏமாற்றவில்லை.  5.50 க்குத் தான் ஆரம்பித்தார்களாம்.பத்து நிமிடம் தான் ஆகுதுன்னு பக்கத்துல இருக்கிற பொண்ணு சொல்லவும் தான் நிம்மதி :)

ஒரு கல்லூரியின் தனிப்பட்ட விழா என்பதாலோ என்னவோ மதுரையில் எந்த இடத்திலும் ஏன் கல்லூரிக்கு அருகில் கூட வரவேற்பு பேனரைக் காணோம். முழுக்க கல்லூரி மாணவர்களால் மட்டுமே அரங்கம் நிறைந்து வழிந்தது.அதிலே ஒருவராக சத்தமில்லாமல் உள்ளே சென்று அமர்ந்தேன்..(ஹி ஹி ..இப்பவும் காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரிதான் இருப்பேன் என நான் சொல்லாமலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்   என்பதற்காகவே   இது :) 

 பேராசிரியர் ஞான சம்பந்தர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார் .அவர் பேசுவதில் என் கவனம் செல்லவே இல்லை .  பல அடிகள் தூரத்தில் இருந்து ராஜாவை மட்டுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்..  மெலிந்த தேகம் தும்பைப் பூவாய் வெள்ளை வேட்டி சட்டை கழுத்தில் பெரிய ருத்திராட்ச மாலையுடன் மைக்கில் பேசுபவர்களை புன்னகையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்.. மேடையையும் அருகே வைக்கப் பட்டிருந்த தொலைக்காட்சி நேரலையையும் மாறி மாறி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.  எழுத்தாளர் சுகா அவர்கள் மூலமாக ராஜாவை இந்நிகழ்ச்சிக்கு வரவழைத்திருந்தார்கள் .தமிழிசை ஆய்வு மையத் துவக்க விழா . ராஜா சிறப்பு விருந்தினர் .

என்ன ஒரு ஆச்சர்யம் அரங்கத்தில் இந்த மாணவ மணிகள் அமைதியா உட்கார்ந்து இருக்கே என்று .  நான் வேடிக்கை பார்ப்பதற்கும் உலை வைப்பது போன்று நடு மத்தியில் ஒருவர் நின்று கொண்டார்.அருகே சென்று சார் தெரியல என்றேன்.  அதுக்கென்ன செய்யறது நான் இங்கிருந்து நகர்ந்துட்டா பசங்க ரொம்ப கத்துவாங்க என்றார் .  வேறு வழியின்றி வேறு பக்கம் நகர்ந்து அமர்ந்தேன்.ஆனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியல அங்கிருந்து வெளியேறி அடுத்த பக்கம் போயிட்டார்.  அப்பத் தான் அவர் சொன்னது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது.  ஏகப்பட்ட சலசலப்பு.அவர்களுக்கு சினிமாத் துறையைச் சார்ந்த ஒருவரைப் பார்க்கிறோம் என்ற பெருமை தானே தவிர அங்கே இருக்கும் சுகா பற்றியோ இளையராஜா பற்றியோமுழுவதும் அறிந்தவர்கள் இல்லை.  மேலும் அவர்கள் வயது அதற்கு அனுமதிக்கவும் இல்லை.  ஆனால் இளையராஜா பற்றி ஆச்சர்யத் தகவல்கள் அங்கே பேசுபவர்கள் பகிர்ந்த பொழுது எவரும் சொல்லாமலே உற்சாகத்துடன் கை தட்டினர் .

சுகா பேசும் பொழுது மட்டும் அந்த சலசலப்புக்கு இடையே முடிந்தவரை கூர்ந்து கவனித்தேன். மிகத் தெளிவான பேச்சு, அருமையான தமிழ் உச்சரிப்பு அழிந்துவரும் நாட்டுப்புற இசை,வாத்தியங்கள் பற்றி நியாயமான ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "நிகழ்ச்சிக்கு வருகிறேன் ஆனால் இசை பற்றி எனக்கென்னயா தெரியும்?"   என்றாராம் ராஜா (ஙே ..அவருக்கு தன்னடக்கம்ன்னா என்னன்னே தெரியாதுன்னாங்க யாரோ) எழுபதுகளில் தமிழ் நாட்டில் இந்திப் பாடல்கள் படங்கள் மீதான மோகம் அதிகம் இருந்தது எனவும் அது அத்தனையையும் உடைத்து தமிழிசை கேட்க வைத்தவர் ராஜா என்பதை சுகாவும் ஞான சம்பந்தரும் நினைவு கூர்ந்தனர். இந்திப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களைத் தமிழ்ப் பாடல் கேட்க வைத்தவர் ராஜா இந்திக் காரர்களையே கேட்க வைத்தவர் ரகுமான் (அடக் கிரகமே ட்விட்டர் புத்தி அங்கயும் இப்படி யோசிக்க வைத்தது :) ) சுகாவை அறிமுகம் செய்த பொழுது எழுத்தாளர் ,படித்துறை என்ற படத்தின் இயக்குனர் என்று சொன்னார் ஞான சம்பந்தன். (படித்துறை படம் ரிலீஸ் எப்போ?நிறுத்தப்பட்டது என்று சொன்னாங்களே )இளைய தலைமுறை தொலைக் காட்சிகளில் அடங்கி விட்டீர்கள் .  இயன்றவரை அழிந்துவரும் நாட்டுப் புறக் கலைகளை மீட்டெடுக்க நம்மால் ஆன முயற்சிகள் எடுக்க வேண்டும்  நாதஸ்வரம் கச்சேரி போன்றவற்றை நம் வீட்டில் வைத்து அக்கலையை வளர்க்க இயன்ற அளவு உதவ வேண்டும் என்று வேண்டுகோளும் ஆதங்கமுமாக முடித்தார் சுகா .  சிறுவயதில் எங்கள் கிராமத்தில் கல்யாண வீட்டிலும் சரி ,கருமாதி வீட்டிலும் சரி நிச்சயம் நாதஸ்வரம் இருக்கும்.தமிழ் சினிமாப் பாடல்களை மிக அழகாக வாசிப்பார்கள்.அதையெல்லாம் பார்க்கும் கொடுப்பினை வரும் தலைமுறைக்கு இல்லை என்று சுகா கவலைப்பட்டதிலும் ஒரு அர்த்தம் இருக்கின்றது.

இந்த பேச்சுக்கிடையில் எங்கெல்லாம் எனக்கு முன்பு இடம் காலியாகிறதோ அங்கெல்லாம் நகர்ந்து நகர்ந்து முன்னே உட்கார்ந்தேன்.  இறுதியில் ராஜா பேச வருகிறார் எனும் பொழுதே ஒரே கைதட்டல் தான். காலையில் மீனாட்சியை தரிசித்து விட்டு வந்ததும் இப்பொழுது கோவில் சுத்தமாக இருப்பதையும் சொன்னார்.  சிறு வயதில் தியாகராஜா கல்லூரி எதிரே இல்ல தெப்பக்குளத்தில் சுற்றிய நாட்களையும்  .கல்லூரி நாடகத்திற்கு இசை அமைத்தது உட்பட சின்னச் சின்ன விசயங்களை நகைச்சுவையோடு நினைவு கூர்ந்தார். இயன்றவரை முன்னிருப்பவர்கள் அமைதி காக்க பின்னாடி இருக்கும் மாப்பிள்ளை பெஞ்ச் அட்டகாசம் தாங்க முடியல. அதிலும் பெண்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கூட்டத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை கமெண்ட் பறந்தது. ராஜா பேசுவதைக் கேட்க மிகப் பெரிய இடைஞ்சலாக இருந்தது.  பெண்களைக் கவர அவர்கள் கமெண்ட் அடிக்க இங்க பெண்கள் பக்கம் இருந்து அவர்கள் எதிர்பார்த்தது போன்றே கிக்கிக்கி ரெஸ்பான்ஸ். பொறுமையை இழுத்துப் பிடிப்பது மிகச் சிரமமாக இருந்தது எனக்கு.  வேறு வழியின்றி எனக்கு அருகே அந்த பக்கம் அமர்ந்திருந்தவன் கமெண்ட் அடிச்சுட்டு இந்தப் பக்கம் பார்க்கும் பொழுது ஒரு அருவெறுப்பான பார்வையை உமிழ்ந்தேன்.அவன் காதுக்கு மட்டும் கேட்கும் படி லூசா நீ என்றேன்.அத்தோடு அடங்கினான்.(யார்ரா இந்தப் பக்கின்னு நினைச்சிருப்பானோ ?:) 

நேரலையில் அருகில் இருந்த டிவியில் யாரோ ஒரு அம்மணியைக் காட்ட ஒரு கூட்டம் மட்டும் திடீர் கைதட்டல்.  ராஜாவுக்கே குழம்பி இருக்கும் , 
இசையின் மகத்துவத்தை சுருக்கமாக விளக்கி இசையை ஒரு கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும் என்று வேண்டுகோளை முன்வைத்தார் .  கல்லூரி முதல்வர் தமிழக அரசுடன் பேசி இதற்கு தக்க ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.. இசையால் லயித்த மனத்தில் வன்முறை குறையும் என்பதையும் சொல்லி இறுதியாக இதயம் ஒரு கோவில் என்று ஆரம்பித்ததும் ஹே என்று கூட்டத்தோடு கூட்டமாக கத்தியதில் உற்சாகம் தொற்றிக் கொண்டது :) எனது ஜீவன் நீதான் என்று முன்னிருந்த கூட்டம் நோக்கிப் பாட அரங்கமே அதிர்ந்தது கைதட்டலிலும் உற்சாக கூச்சலிலும் :) அவர் பேசியதும் கிளம்ப யத்தனித்தவர்களை நன்றியுரை மற்றும் தேசிய கீதம் ஒலித்த பின்பே நகர வேண்டும் என்று ஞான சம்பந்தர் கேட்டுக் கொண்டார்.

நன்றியுரையில் பேசியவர் தமிழிசை பத்தி  என்ன தெரியும் என்று ராஜா கேட்டது ஏழு பிள்ளை பெத்தவ ஒத்த பிள்ளை பெத்தவளிடம் அனுபவம் கேட்பது போல .இசையே நீங்கள் தான் ஐயா என்று பேசி கோவையைச் சேர்ந்த முத்துச் சாமி என்பவர் DTS தரத்தில் ராஜா இசையைத் தருவதாக பகிர்ந்து அமர்ந்தார் .  தேசிய கீதம் ஆரம்பித்ததும் நான் ஒரு நொடி கூடத் தாமதிக்காமல் மேடையில் இருந்து ராஜா இறங்கிச் செல்லும் வழியில் அவரின் கார் அருகே சென்று நின்று கொண்டேன் .  எப்படியும் அருகில் பார்க்க வேண்டும் என்று.தேசிய கீதம் பாடும் பொழுது அசையவே கூடாது என்று பள்ளி சொல்லிக் கொடுத்த பாடமெல்லாம் போயே போச்சு. இறுதியில் சுகா அழைத்து அவரை காரில் ஏறும் வரை கண்ணிமையாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சுகாவையும் ராஜாவையும் அவ்வளவு அருகில் பார்த்தும் கூட ஒரு வார்த்தை கூட வாயில் இருந்து வரல . கம் போட்டு ஒட்டிக் கொண்டது போல் ஆகி விட்டது :)

நடிகர் நடிகைகள் மீதிருந்த ஈர்ப்பு இசையமைப்பாளர்கள் மீது சிறு வயதில் இருந்ததே இல்லை . இசை எவரேன்றே தெரியாமல் நான் கேட்ட பாடல்கள் இன்றளவும் எனக்கு இனிக்கவே செய்கின்றன.நினைத்த மாத்திரத்தில் அழவும் சிரிக்கவும் செய்த பால்யத்தைக் கடந்த நாளில் இருந்து எனக்குள் ஒரு தனிமையை உருவாக்கிக் கொண்ட நாள் முதல் இசை மட்டுமே எனக்கு அதிகம் துணையாய் இருந்திருக்கின்றது.  அதில் அதிகம் ராஜாவின் பாடல் கலந்தே இருக்கின்றது.  அவ்வளவே எனக்கும் அவருக்குமான தொடர்பு.

இளையராஜாவைப் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்ததே இல்லை.  இசை நிகழ்ச்சியை நேரலையாக ட்விட்டரில் நேரலையாக ட்விட்டர் நண்பர்கள் ஒளிபரப்பும் பொழுது உள்ளே எப்பொழுது இதையெல்லாம் நேரில் பார்க்கப் போகிறோம் என்றொரு ஏக்கம் வந்ததுண்டு.   எதிர்பாராத விதமாய் இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் ரவிக்குமார் MGR க்கு நன்றி :))

ஒரு பூரண மன நிறைவோடு கல்லூரியை விட்டு வெளியே வந்து ஷேர் ஆட்டோவில் அமர்ந்த பொழுது பண்பலையில் இருந்து "கற்பூர முல்லை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று" பாடல். கலந்தாடக் கைகோர்க்கும் நேரம் கண்ணோரம் ஆனந்த ஈரம் என சுசீலா பாடியதும் கண்களில் ஈரம் எவருமறியாமல்.  அந்த ஆட்டோ ஓட்டுநர் உட்பட அங்கே பரபரப்புடன் சென்று கொண்டிருந்த மக்களுக்கு ராஜா எங்கிருக்கிறார் என்று தெரியாது.  அவர் வந்து போனதையும் அறிந்திருக்க முடியாது. ஆனாலும் அம்மாமனிதர் அம்மக்களோடு வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார் .  இசையை மலராய் நாளும் சூட்டிக் கொண்டு .

மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா ... பின்னாளில் எனக்குப் பிறக்கப் போகும் என் செல்ல மகளுக்கு கருவிலேயே இப்பாடலை அறிமுகம் செய்து வைப்பேன்.

இதயம் ஒரு கோவில் பாடி முடித்ததும் "இதை நான்  பாடி இப்பவே மறந்துடுவேன் ஆனால் உங்க காதுகளில் ஒலித்துக் கொண்டே தானிருக்கும் உங்கள் நெஞ்சத்தை விட்டு நீங்காது " என்று ராஜா உறுதியாகச் சொன்னது  இப்பொழுது நிஜமாகியது .ஆட்டோ என்னை இறக்கி விட்டுச் சென்று வெகு நேரம் ஆகியும் இதோ இந்த நொடி வரை "கற்பூர முல்லை ஒன்று "


Thursday, May 2, 2013

சுந்தரி..கண்ணால் ஒரு சேதி ..

சம்பிரதாய வார்த்தைகளாக இருப்பினும் சொல்லியே ஆகவேண்டும் .மிகப் பிடித்த பாடல்களில் ஒன்று..:)

சிவகாமியின் சபதம் முதன் முதலில் படித்த பொழுது அதிலே ஒவ்வொரு சூழலுக்கும் ஒவ்வொரு பாடலைப் பொருத்திப் பார்த்ததுண்டு..அதிலே மாமல்லர் ஒரு சின்ன போருக்கு செல்ல வேண்டி வரும்..செல்கின்ற வழியில் சிவகாமியைப் பார்க்க வேண்டி வரும். ஓரமாய்ப் பார்த்துவிட்டு கோபமும் தாபமுமாக குதிரையை ஓங்கி ஒரு உதைத்து முன்னேறிச் செல்வார். பாழும் பெண் மனம் மன்னவன் திரும்பி வரும் வரை தவிப்பில் ஆழ்ந்து இருக்கும். 


அப்பொழுது இந்தப் பாடல் பொருந்தும் என நினைக்கிறேன். போருக்குப் பின் இருவரும் இறுதியாய் ஒரு இடத்தில மகிழ்ச்சியும் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற கலக்கமுமாக லயித்திருப்பார்கள்.அவ்விடத்திலும் இதைப் பொருத்தலாம்.மிக சமீபத்தில் தான் படித்தேன் அந்தப் பாடல் பொன்னியின் செல்வன் தாக்கத்தில் படமாக்கப் பட்டதாக . ஆனால் எதற்கு ரஜினிக்கு அந்த கருப்பு உடையும் கொண்டையும் தான் என்பது புரியவில்லை. வழக்கமாக மன்னன் உடை வேண்டாம் என்று மணி  இப்படிசெய்தாரோ என்னவோ ?


நான் ரஜினியை வேறெந்த படத்திலும் இவ்வளவு ரசித்ததே இல்லை :) 

ரஜினியின் வேகம் மட்டுமே இருக்கும் படம் முழுவதும். எவ்விடத்திலும் ரஜினியின் தனி முத்திரையான ஸ்டைல் எதுவும் இராது. ரஜினியை ரஜினியாய் பயன்படுத்தாமல் தான் நினைத்த ஒரு கதாபாத்திரமாக மட்டுமே உலவவிட்டிருப்பார் மணி. 
ஒரு சூப்பர்ஸ்டார் என்றெல்லாம் அதீத மரியாதை கொடுத்து அந்நியமாக்காமல் வெகு இயல்பான கோபக்கார இளைஞனாக காட்டியதில் மணிக்கு ஒரு ஜே. கர்ணன் படத்தின் ரீமிக்ஸ் என்றாலும் தன் பாணி தனி முத்திரை .

இந்தப் பாடல் பதிவு செய்யப்பட்டது மும்பையில். பாடலை எழுதியவர் வாலி. பாடலைப் பதிவு செய்த தினத்தில் மும்பை இசைக் கலைஞர்கள் வாய் பிளந்து அதிசயித்தார்களாம் . நிச்சயம் மிகையிருக்காது செய்தியில். அவ்வளவு பிரம்மாண்டம் பாடலில் கொடுத்திருக்கிறார் ராஜா . 

பொதுவாக  ஒரு நல்ல சேதி எதிர்பார்க்கும் பொழுது எங்கேனும் மணியடிக்கும் சத்தம் கேட்டால் அதை மங்களகரமாக நினைப்பது வழக்கம். ரஜினிக்கு தன் கோபம் உள்ளூர நம்மையெல்லாம் இவளுக்குப் பிடிக்குமா என்ற பரிதவிப்பு , மனசுக்குப் பிடிச்சிருந்தாலும் திருதிருன்னு விழிச்சுகிட்டு பயமும் தயக்கமுமாக ஷோபனா பிடிச்சிருக்குன்னு சொன்னவுடன் அடிக்கும் மங்கள மணியோசையில் ஆரம்பிக்கும் பாட்டு ..டாப் கியரில் தூக்கும்னு சொல்வாங்களே அப்படி இருக்கும் ஆரம்ப இசையே :)


சுந்தரி கண்ணால் ஒரு சேதி என்றதும் ஒரு மிக மெல்லிய புல்லாங்குழல் வரும் .
சுந்தரி கண்ணால் ஒரு சேதி (புல்லாங்குழல் )
சொல்லடி இந்நாள் நல்ல தேதி ((புல்லாங்குழல் )
என்னையே தந்தேன் உனக்காக (புல்லாங்குழல் )
ஜென்மமே கண்டேன் உனக்காக (புல்லாங்குழல் )


சில வருடங்களுக்கு முன்பு ஒரு வலைத்தளத்தில் CALL& RESPONSE  பத்திப் படித்தேன் .அதாவது இசையினாலே அழைப்பும் அதே இசையிலேயே அதற்கு மறுமொழியும்.அதற்கு உதாரணமாக சில பாடல்கள் சொல்லிருந்தாங்க கீரவாணி என SPB அழைத்ததும் அடுத்து வரும் சிதார் இசை பல்லவியை அழகு படுத்தி இருக்கும் அந்த சிதார் இசை ஒவ்வொரு அழைப்பிற்கும் மறுமொழியாக .
அதே போல பாடும் வானம் பாடி ஹாங்....என்றதும் அடுத்து டொய் டொய் டொய்ங் என்று வருமே வீணை அவ்வளவு அழகாய் SPB க்கு ஈடு கொடுத்திருக்கும்.

பாடல் ஆரம்பத்தில் மட்டுமல்ல சரணத்திலும் பயன்படுத்தப் பட்ட பாடல்களும் உண்டு .
ஒரு பொன் மாலைப் பொழுது பாட்டின் சரணத்தில் ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் வரிகளுக்கு அடுத்து வரும் புல்லாங்குழல்

இது பற்றி அறிந்த பொழுது ஒரு புது அனுபவமாக இருந்தது. ஆர்வத்தில் நான் கேட்ட சில பாடல்களை ஆய்ந்தேன். எதுவுமே அறியாமல் ப்ல்யாஂக் ஆக ஒரு பாடல் கேட்பது ஒரு சுகம் என்றால் ஏதேனும் அதில் உள்ள நுணுக்கம் அறிந்து கேட்கும் பொழுது அது இன்னமும் அழகாகிவிடுவதும் நிஜம்.

என் உதாரணங்கள் மிகச் சரிதானா என்று தெரியாது.ஆனால் இவை அந்த CALL &RESPONSE க்குப் பொருந்துவது போல ஒரு பிரம்மை. இசை நுட்பம் அறிந்தவர்கள் பிழை என்றால் திருத்தவும். 

1.கண்ணா உனைத் தேடுகிறேன் வா என்று ஜானகி சொன்னதும் அடுத்து வரும் வயலின் கொஞ்சிக் குழைந்து அந்த அழைப்பை ஏற்கின்றது.உன்னோடுதான் வாழ்க்கை(புல்லாங்குழல்) உள்ளே ஒருவேட்கை (புல்லாங்குழல்)செல்லம் கொஞ்சி ம்ம் என்பது மறுமொழி செய்கின்றது.
2. மஞ்சப் பொடி தேய்க்கையிலே என்றதும் அடுத்து வரும் புல்லாங்குழல் விசிலடித்து செய்யும் ரெஸ்பான்ஸ் கிளாஸ் :) 

3.பொன் மானே (புல்லாங்குழல்)கோபம் ( (புல்லாங்குழல்)
ஏனோ ( (புல்லாங்குழல்)
4.பூந்தளிர் ஆட (ஹம்மிங் ரெஸ்பான்ஸ் )
5.காதல் கவிதைகள் படித்திடும் நேரம் ஆடியோ வெர்சனில் பாடல் இறுதியில் வரும் இதயம்ம்ம் இடம் மாறும் (ம்)  இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் (ம்) இடையில் வரும் இந்த இரண்டு ம் களும் வெகு நேர்த்தியான கொஞ்சல்கள் :)

வாலிக்கு கேக்கணுமா?சுருங்கச் சொல்லி நிறைய விளங்க வைப்பது என்பது இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியிலும் காணலாம். ரைமிங்காக எங்கிருந்துதான் வந்து விழுகின்றதோ வார்த்தைகள் :)
"சுந்தரி கண்ணால் ஒரு சேதி சொல்லடி இந்நாள் நல்ல தேதி "
காதலைச் சொன்ன அன்றே பதில் சொல்லிடனும் என்னால வெயிட் பண்ண முடியாது செல்லம் :))

உடனே பதில் எப்படி வந்து விழுது பாருங்க "என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக " அடுத்த உத்தரவாதம் ஆணிடமிருந்து "நானுனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன் சேர்ந்ததே நம் ஜீவனே "

எப்படி எல்லாம் ப்ராமிஸ் பண்ணின ஆனா இப்போ ரெஸ்பான்ஸ் பண்ணவே மாட்டேன்ற என்ற இக்கால ஊடல் நிமித்த சண்டைகள் நிறைய பார்த்திருப்போம்.
"வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா "

சில பாடல் வரிகள் எனக்குப் புரியாத பட்சத்தில் பாடியவர்தான் பிழை செய்திருக்கிறார் என்று உறுதியாய் நம்புவேன் :) 
எனைத்தான் அன்பே மறந்தாயோ என்ற கேள்விக்கு . மறப்பேன் என்றே நிலைத்தாயோ என்று முடிப்பார்..

நியாயமா நினைத்தாயோ என்று தானே வரணும் ஏன் SPB தப்பா பாடறார் ? ஒருவேளை நம்ம காது தான் சரியில்லையோ அவர் சொன்ன நினைத்தாயோ தான் நமக்கு காதுல அப்படி விழுதோன்னு ஒவ்வொரு முறையும் கூர்ந்து கவனிச்சிருக்கேன்..ம்ஹ்ம்ம் ..:) இறுதியாக SPB மறந்தார்போல தவறு செய்திருக்கிறார் என்று ஒரு முடிவுக்கு வர வேண்டி இருந்தது..கோபமா நான் மறப்பேன்னு நீ நினைச்சிட்டியோ ன்னு தானே கேப்பாங்க என்ற எண்ணம். இப்பொழுதுநான் மறப்பேன் என்பதை அப்படியே நம்பி அதே நிலைப்பாட்டில் இருந்துட்ட அதான் இப்படில்லாம் கேள்வி கேக்குற அப்படின்னு  நானாக புரிஞ்சுகிட்டேன் (வேற வழி :) )

அதே போல தேன் நிலவு நான் வாழ என்பது பொருந்தாமல் காண என்றிருந்தால் நன்றாக இருந்திருக்குமோன்னு வாலிக்கே எடுத்துச் சொல்லிருக்கேன் அந்த வயசுல :)
ஆ...வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சின் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்
தேன் நிலவு நான் வாழ ஏன் இந்த சோதனை
வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை



இரண்டாம் சரணம் சில வரிகள் காதல் தேசம் படத்தில் என்னைக் காணவில்லையே நேற்றோடு பாட்டிலும் வரும் .மிக வழக்கமான வரிகளே எனினும் அவ்விடத்தில் ஆகப் பொருத்தம் .






DISCLAIMER : இந்தப் பதிவை நீளம் கருதி சற்றே எடிட் செய்து #4வரி நோட் க்கு அனுப்பியிருந்தேன் .முதன் முதலாய் #4varinote இல் நான்அனுப்பியவாறே எடிட் செய்யப்படாமல் என் பதிவு இடம் பெற்றது மகிழ்ச்சி. அதற்கான சுட்டி :) 

Wednesday, February 13, 2013

காதலர்களுக்கு சில வேண்டுகோள்கள்


காதல் என்ற வார்த்தையும் காதலர்களும் அனைவரையும் படுத்தும் பாடு இருக்கே..சொல்லி மாளாது..தப்பித் தவறி காதலித்துக் கொண்டிருக்கும் தோழமை உங்கள் அருகில் இருந்தால் "சாவு பயம்னா என்னன்னு காட்டிடுவாங்க "


என் தோழிக்கு பிடிக்காத (அப்படித்தான் என்கிட்டே சொன்னா ) நபர் பிறந்தநாளுக்கு பரிசு கொடுத்து இதில் உள்ள எழுத்துகளை ஒன்று சேர் "என்று சொல்லிட்டு போயிட்டார்.அதிலே "I LOVE YO" எழுத்துகள் கிடைத்தன.அதில் U மட்டும் மிஸ்ஸிங். விடிய விடிய தூங்காம அதைத் தேடி அதை மட்டும் காணோம்னு வருத்தமா சொன்னப்போ தான் அந்தப் பக்கியும் அவனை லவ் பண்றான்னே தெரிஞ்சுது. அவனும்(பெரிய ஷாருக் கான்னு நினைப்பு) நீ தேடணும்னு தான் அந்த U மட்டும் வைக்கலன்னு வந்து சிரிச்சான் :)


அதே போல தன்னைச் சுற்றி சுற்றி வந்த ஒரு பையனிடம் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தாள் இன்னொருத்தி. ஆனால் பள்ளி முழுக்க அவன் அவளைத் தான் காதலிக்கிறான் என்பது தெரியும். அவளும் பதிலுக்கு காதலிக்கிறாள் எனத் தெரியவே நீண்ட நாட்கள் ஆச்சு. அப்போ தான் தோனுச்சு .


 பொண்ணு காதலிச்சா அந்தப் பொண்ணைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஆனா பையன் காதலிச்சா அந்தப் பொண்ணைத் தவிர   எல்லாருக்கும் தெரியும் 

இப்படி காதலிப்பவர்களால் பட்ட அவஸ்தைகள் அதிகம்.நாம காதலிச்சிருந்தா கூட இவ்ளோ சிரமப் பட்டிருப்போமான்னு தெரியல


ஆகையினால் அன்பார்ந்த காதலர் பெருமக்களே !

காதலிப்போர் அருகிலிருந்து பாதிக்கப்பட்டோர் மதுரை கிளை சார்பாக சில வேண்டுகோள்களை முன்  வைக்க இருக்கிறேன்

1. காதலுக்கு கண்ணு இல்ல சரி காதலிக்கிறவங்களுக்கும் கண்ணில்லாம கூட போகட்டும் . ஆனா உங்களை சுத்தி இருக்கிறவங்களுக்கு கண்ணு  இருக்கு . அதனால் அக்கம் பக்கம் பார்த்து  தனியா போய் காதலிங்க .உங்க சேட்டையெல்லாம் பொதுவுல பண்ணி எரியிற தீயில எண்ணையை ஊத்தாதீங்க :)

2.  உங்களுக்குப் பிடிச்சிருந்தா நீங்களே போய் லவ்வைச் சொல்லிக்கோங்க . நீங்க காதலிக்கிற பொண்ணுக்கு இருக்கிற தம்பி /தங்கச்சியை கரெக்ட் பண்றேன்னு கண்டதையும் வாங்கிக் கொடுத்து அவங்க வயிறையும் கெடுத்து மனசையும் கெடுத்து அவங்க பிஞ்சு மனசு நஞ்சு போகாத அளவுக்கு நடந்துக்கோங்க

3. ஈ மெயில் சாட் ,பேஸ் புக்,ஸ்கைப் இப்படி எத்தனையோ அட்வான்ஸ் வசதிகள் வந்தாலும்  ஆதிவாசி மாதிரி பச்சபுள்ளைங்க கிட்ட லவ் லெட்டரை கொடுத்து பாலகர்கள் வன் கொடுமை பண்ணாதீங்க
 
4.எங்கயாவது இருட்டுக்குள்ள கிசுகிசுன்னு பேசிட்டு பளீர்னு பல்லு தெரியற மாதிரி சிரிச்சு அந்தப் பக்கமா போற பச்சபுள்ளைங்க பயமுறுத்தாதீங்க:)


5. ராமராஜன் எஃபெக்ட் ல சுடிதார் , சாயம் போன கலர்ல பேன்ட் போட்டுக்கிட்டு வந்து அவ (ன்) கொடுத்தா(ன்)  சொல்றதோட நிக்காம எப்படி இருக்குன்னு எங்ககிட்ட வேற கேக்காதீங்க . நீங்க ரசிக்கணும் உங்க தலையெழுத்து எங்களுக்கென்ன வந்தது ?

 
6.அரட்டை,சினிமா ,கேலி ,பாட்டு ,டிவி இதுக்கு நடுவுல எப்பவாவது தான் படிக்க உட்காருவோம் அந்த நேரம் வந்து அவன் இருக்கானேன்னு சுதியோட ஆரம்பிச்சு எசகுபிசகா கதை சொல்றதை நிறுத்த்த்துங்க.
7.  ஏதோ புள்ள நாசமா போயிடக் கூடாதேன்னு நாலு அட்வைஸு பண்ணினா "உனக்கென்ன தெரியும் காதலைப் பத்தி"ன்னு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்தறீங்களே அதை தயவு செய்து நிறுத்துங்கப்பா :)

 
8. நீங்க உங்க ஆளை டா போட்டு பேசுங்க டி போட்டும் பேசுங்க ஆனா உங்க அம்மா அப்பாகிட்ட இருந்து தப்பிக்க எங்ககிட்ட பேசுற மாதிரி ஸீன் போடாதீங்க . திடீர்னு அந்த நேரம் நாங்க நேர்ல வந்து எங்ககிட்ட நீங்க பேசுறத நாங்களே தேமேன்னு வேடிக்கை பார்க்க வேண்டியதாயிடும்.

9. எங்ககூடதான் வெளியே சுத்தறதா சொல்லிட்டு போற பொய்யை எங்களுக்கும் முன்கூட்டியே சொன்னா அனாவசியமா உங்க வீட்ல மாட்டிகிட்டு நாங்க திருதிருன்னு முழிக்கிறதுல இருந்து எஸ் ஆகலாம்


10.மத்த நேரமெல்லாம் நேர்ல பேசுற effect ல ஹெல்ல்லோஓ.ஓ.ஓ.ஓ.ஓ..ன்னு கத்தி பேசிட்டு உங்க ஆளுகூட பேசறப்போ மட்டும் (ரேவதி குரலில் ) ஹ்ம்ம்.ஹ்ம்ம்... வெறும் காத்துதான் வருது ங்கற effect ல பேசறீங்களே அப்படி போனுக்கேகூட தெரியாம என்னதாம்ல பேசுவீங்க?

11.  அப்புறம் உங்க ஆளுகூட பேச எங்க மொபைல் ல இருந்து SMS அனுப்பறது , மிஸ்ஸுடு கால் கொடுக்கிறது ப்ளீஸ் ப்ளீஸ் இதோ உடனே பேசிட்டு வந்துடறேன் பா சொல்லிட்டு மணிக்கணக்கா பேசி எங்களையும் எங்க மொபைலையும் சேர்த்து சூடாக்குறதை நிறுத்துங்க

12.பீச் , சினிமா தியேட்டர் ஒன்னுவிடாம ஊர் சுத்தறீங்க அதுக்காக குழந்தைங்க பார்க்ல கூடவா கூடிக் கூடிப் பேசணும் ? தாங்கலங்க

13. காதல்ங்கறதுன்னு ஆரம்பிச்சு நீங்க சொல்ற விக்ரமன் டைப் விளக்கம் #சத்தியமா கேக்க முடியலங்க :-O

14.ஏதோ வேற்றுக் கிரக வாசி மாதிரி திரியறீங்க சரி அதுக்காக நாங்க சொல்ற முக்கியமான விசயத்தைக் கூட மறந்துட்டு மெடுல்லா  ஆப்ங்கேட்டாவுல  அடிபட்ட மாதிரி கொடுக்கறீங்களே ஒரு ரியாக்ஷன் போதும்டா ஸ்ஸ்ஸ் ஸாமி...


(முன்பு இதே பதிவை வேறு ஒரு தளத்தில் , கவிதை என்கிற பெயரில் எதையேனும் எழுதி எங்கள வாசிக்க சொல்லிக் கொல்லாதீங்க என்றும் ஒரு பாயிண்ட் சேர்த்து எழுதி இருந்தேன்  ஹி ..ஹி ..இப்ப அது  ரிமூவ்ட் :P ) 

பெப்ரவரி 14 இல்லையா அதான் 14 -ட நிறுத்திட்டேன் வருஷம் முழுக்க நீங்க பண்ற அலும்புகளை சொல்ல சில பல ட்விட் லாங்கர் போட்டாலும் பத்தாது :))


யூ லவ் ..யூ கிவ் ப்ளட் ...பட்  ஒய் மீ ? :))