Friday, June 29, 2012

அக்னி நட்சத்திரம்..!

ஏதாச்சும் ஒரு படம் பார்த்துட்டு அதற்கு விமர்சனம் என்கிற பெயரில் தாளிப்பதை விடுத்து மனசுக்கு பிடிச்ச படங்களைப் பத்திப் பகிர்வது இன்னமும் மகிழ்வான ஒன்று.இனி அது போல ஒவ்வொரு பிடித்த படம் பற்றி எழுத முடிவு.சமீபத்தில் சுற்றுலா சென்ற பொழுது அக்னி நட்சத்திரம் போட்டார்கள் பேருந்தில்.எத்தனை முறை பார்த்திருந்தும் ஒரு காட்சி கூட போரடிக்காம ஏதோ இப்பொழுதுதான் புதிதாய்ப் பார்ப்பது போன்ற உணர்வு.கார்த்திக்கும் சரி பிரபுவும் சரி ஒருவருக்கொருவர் சளைக்காமல் வாழ்ந்திருக்கின்றார்கள் அந்த கதாபாத்திரங்களாகவே.இரண்டாவது துணைவியின்(courtesy :கலைஞர்) மகனாக அவமானமும் கோபமும் கலந்த உணர்வுகளை கார்த்திக் காட்டினால் அம்மாவுக்கு அப்பா செய்த துரோகம் தாளாத மகனாக பிரபு பட்டாசாய் வெளுத்து வாங்கி இருக்கிறார்.எண்பதுகளில் கார்த்திக் 
அதிக அழகே எனினும் பிற பிடங்களில் இல்லாத அளவு இந்தப் படத்தில் படு ஸ்மார்ட் பிரபு.
அதிலும் இந்தப் பாடலில் 0 .25 ல பிரபு நிற்கும் அழகே தனி ஸ்டைல்.
  "நீங்க உதாரணம் காட்ட என் குடும்பத்தை இழுக்காதீங்க"ன்னு கதவை அறைஞ்சு சாத்துவாரே பிரபு அடடா கோபத்தையும் ரசிக்க வைத்திருக்கின்றார்.


ஏதோ ரெண்டு பேர் சண்டை போட்டுக்கிராங்கன்னு இல்லாம அதிக வார்த்தைகளில் விவரிக்காம இருவருக்குமுண்டான பகையை நம்மை உணர வைத்த விதத்தில் மணி ரத்னம் மிளிர்கின்றார்.
படத்தில் காதலிப்பது தவிர வேறு வேலை கொடுக்கப்படாவிட்டாலும் நிரோஷாவும் அமலாவும் நிறைவாய்ச் செய்திருக்கின்றார்கள் ரசிக்கும்படியாகவே. 
அமிதாப் இந்தப் படம் பார்த்து நிரோஷா வெகு அழகு என நம்பி நேரில் பார்த்து வெறுத்துப் போனதாக என் அண்ணன் சொன்னதுண்டு:)
ஜெயச்சித்ராவிடம் "அவர் பேர் கெட வேணாம்ன்னு தான் வந்தேன் புள்ளைய ஒழுங்கா வளர்க்கப் பாருங்கன்னு"சுமித்ரா நறுக்கென கொட்டு வைக்கிறார்.அளவான நடிப்பு இருவருமே
  இளையாள் மகளே எனினும் எவரோ இரயிலில் வம்பிழுத்ததும் அண்ணனாக பிரபு படும் கோபம் செம்ம:)
 தனி ட்ராக்காக ஓடும் ஜனகராஜ் -VKR காமெடி பெரிதாக ஈர்க்கவில்லை எனினும் நோ தங்கமணி என்ஜாய் தமிழ்நாட்டில் எவரும் மறக்கமாட்டார்கள்
 குற்ற உணர்ச்சியில் அமைதியாகவே இருந்துவிட்டு இறுதியில் பொங்கும் விஜயகுமார் பாசமான அப்பா 
 இளையராஜா -எங்க சுத்தினாலும் நிச்சயம் இவர்கிட்ட வந்துதான் ஆகணும் படத்தை இன்னமும் சுவராசியமான ஒன்றாக வைத்திருப்பதில் இவர் பின்னணி இசையின் பங்கும் அதிகம்.தங்கையைப் பெண் பார்க்க வந்தவர்கள் திரும்பிச் சென்ற கோபத்தில் கார்த்திக் விஜயகுமார் வீட்டுக்குச் சென்று கத்தும் பொழுது சூழ்ந்துள்ள அமைதி சொல்கின்றது ஏதோ நடந்திருக்கிறது என்பதை. காமிராவும் இசையும் மெதுவாக எட்டிப் பார்க்கின்றன பாட்டியின் சடலத்தை அதிர்ந்தே போகிறோம் நாமும் கார்த்திக் போலவே.
 பாடல்களுக்குப் பெரிதாய் விளம்பரம் தேவையில்லை ஒவ்வொன்றும் நல்முத்து.ராஜாதி ராஜா பாடலில் கார்த்திக்கின் பின்புறம் பிரபுதேவாவும் க்ரூப் டான்சர்களில் ஒருவராக நடனமாடுகிறார்.நிச்சயம் வில்லன் பாத்திரமும் படு நேர்த்தி.(பெயர் தெரியல)
 இருவரும் ஒன்றாய்த் தந்தையைக் காக்க முற்படும் நேரத்தில் இப்பவாச்சும் சேர்ந்தாங்களேன்னு ஆசுவாசம் வருது.இறுதிக் காட்சிகளின் முடிவு தெரிந்தே இருந்தாலும் புதிதாய்ப் பார்ப்பது போல படபடப்பு பற்றிக்கொள்கின்றது.


ஒரு படத்தின் வெற்றி என்பது தனிப்பட்ட ஒருவரினால் மட்டும் அல்ல 
ஒட்டுமொத்த குழுவின் கடின உழைப்பு என்பதை நிரூபித்த படங்களில் ஒன்று அக்னி நட்சத்திரம்

Saturday, June 9, 2012

கதம்பம்..!

தோழி ஒருத்தியின் சகோதரிக்கு கிட்னியில் பிரச்சனை அதைப் பற்றி ஆட்டோவில் பேசிக் கொண்டே வந்த பொழுது ஆட்டோக்காரர் சொன்ன ஒரு தகவல் பெரும் அதிர்ச்சி அளித்தது .பொதுவாக பெரும்பாலோனோர் மினரல் வாட்டர் என்ற பெயரில் கேன் தண்ணீர் (25 லிட்டர் ) தான் வாங்குகிறோம் வீடுகளில் .அதிகம் அலுவலகங்களிலும் அதையே பார்க்க முடிகிறது.ஆனால் அதை விட சுகாதாரமற்ற தண்ணீர் வேறு இல்லையாம்.வீட்டில் பயன்படுத்தும் குடம் ,பானை கூட நாம் தான் கை வைத்து கழுவுகிறோம்.அந்த கேன் களை கழுவுவதற்கு என்று கெமிக்கல் ஊற்றி விடுவார்களாம்.அதனால் அது அவ்வளவு சுகாதாரமானது அல்ல என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.நீரைத் தூய்மையாக்கி குடிக்கும் வேறு கருவிகள் வாங்கி பயன்படுத்துவது நல்லது கவனம் மக்கள்ஸ்..! 
***********************************************************************
அம்மாவுக்கு திடீர் என உடல்நிலை மோசமாகிவிட்டது.தூங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தலைக்குள் ஏதோ செய்கிறது வாந்தி வருவது போல இருக்கு கிறுகிறுப்பு என்றெல்லாம் பீதி கிளப்பி விட்டுவிட்டார்.அத்தனை பதட்டமும் வந்து ஒட்டிக் கொண்டது.வெளியே காட்டிக்காமல் இருக்கவே சிரமப்பட்டேன்.இத்தனைக்கும் முடிந்தவரை அதிகம் மன தைரியம் உள்ள ஆள் நான் தான்.ஆனால் இந்த விடயத்தில் ஆணி வேரே ஆடிப் போயிருந்தது.அப்பாவின் மறைவே இன்னமும் ஆற்றமுடியாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அம்மாவிற்கு உடல் மோசமானதைத் தாங்கவே முடியவில்லை.மருத்துவமனை அழைத்துச் சென்றேன்.வழக்கமாய் அம்மாவுக்குச் செக் அப் செய்யும் டாக்டர் தான்.பொறுமையாக கேட்டுவிட்டு அவர் கொடுத்த ஆறுதல் வார்த்தைகள் நிச்சயம் மறக்கவே முடியாத ஒன்று."எதுவுமே இல்லை என்று பொய் சொல்ல மாட்டேன்.இரும்பில் செய்த உடம்பல்ல.வந்தால் எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வேணும்.ரத்த அழுத்தம் தான் உணவுக் குழாய் புண் ஆகி இருப்பதால் அது போன்ற உணர்வு வரவே செய்யும்.வேறு பயப்படும்படி ஒன்றுமில்லை.பயமே பெரிய வியாதி.அது இருந்தால் எந்த நோயும் குணப்படுத்தவே முடியாது.சும்மா தொட்டதுக்கெல்லாம் டெஸ்ட் அது இதேன்றால் செலவு தான் ஆகும் என்றார்.(இதுவே சென்னை கோவை என்றால் கற்பனை செய்து பாருங்கள் எத்தனை ஆயிரம் செலவுகள் ஆகியிருக்கும் ஆய்வின் முடிவில் ஒன்றுமில்லை என்று சொல்ல #ஒய் மதுரை இஸ் காட் :) இறுதியில் மெதுவாக தோளில் தட்டி ஒரு மகன் போன்று ஆறுதலாய்ச் சிரித்தது இன்னமும் மதிப்பு கூடிற்று.என் மனத்திலும் அப்பாடா என்ற ஆசுவாசம் வந்தது பாருங்கள் அதை வெறும் வார்த்தைகளில் அந்த உணர்வை சொல்லிவிட முடியாது.என்னதான் நாம் பேசினாலும் ஒரு ப்ரோபெசனலிஸ்ட் பேசும் போது அதற்கு தனி மரியாதை தான்.அதனால் தானோ என்னவோ மருத்துவத் துறையில் இருப்பவர்களை வெறும் சாமான்யர்களாக நம்மால் எண்ண முடியவில்லை.உயிரைக் காப்பாற்றும் வேலையைச் செய்பவர்கள் தரம் இறங்கி செய்யும் வேலைகளை ஜீரணிக்கவும் முடிவதில்லை
****************************************
பதின்ம வயதுகளில் படிக்க முடியாமல் வசதியின்றி திருமணம் செய்து வைக்கப்பட்ட தோழிக்கு கணவர் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு இறந்து போனார்.கணவரின் அலவலகத்தில் கருணை அடிப்படையில் வாரிசு வேலை கிடைத்தது.சில வருடங்களுக்குப் பிறகு இப்பொழுதுதான் மனம் மாறி தோழி மறுமணம் செய்ய முடிவெடுத்து இருக்கின்றாள்.விஷயம் கேள்விப்பட்டு மிகுந்த மகிழ்ச்சி.அழகு,அடக்கம்,எவரையும் நிமிர்ந்து பார்க்காத ஒழுக்கம் அனைத்தும் ஒருங்கே சேர்ந்த பெண் என பழகிய இரண்டு ஆண்டுகளில் நன்கு அறிவேன்.ஆனால் இதுவரை அவர் வருமானம் அனுபவித்த பெற்றோர் அதை இழக்கவிரும்பாமல் முன்பே அவள் திருமணம் செய்யவிருக்கும் நபருக்கும் உறவு இருந்தது போல அக்கம்பக்கம்,வேலை பார்க்குமிடம்,உறவினர் மத்தியில் அசிங்கப்படுத்திவிட்டனர்.பெற்றோரே இப்படி செய்வது அதிர்ச்சியும் வேதனையும் தாளாமல் தோழி கதறி அழுதது என்னவோ போல் இருக்கின்றது.தனியாய் இருக்கும் பெண் தானே என்ற சீண்டல்கள்,வக்கிரப் பார்வைகள் என்று ஒவ்வொன்றிலும் தப்பித்து வருவது எவ்வளவு சிரமம் என்பது கணவர் இல்லாத பெண்களுக்குத் தான் தெரியும்.வயதின் தேவைக்கே திருமணம் செய்தால் கூட தவறென்ன?அறுபது வயதில் மனைவி இறந்த மூன்றாம் மாதம் திருமணம் செய்து கொண்டார் உறவினர் ஒருவர்.ஆணைப் பழிக்காத சமூகம் பெண்ணைப் பழிப்பதை மட்டும் எப்பொழுது நிறுத்தப் போகின்றது?தனிப்பட்ட வலிகள்,ஆழ்ந்த வேதனை ,இளமையில் தனிமை புரியாமல் துணை இல்லாதவர்களை கிண்டல் செய்பவர்களைப் பார்த்தால் அருவெருப்பாகவே இருக்கின்றது
***********************************************

Friday, May 4, 2012

சித்திரைப் பெருவிழா

பதிவு எழுதுங்கள் என்று நண்பர் கேட்கும் வரை தோனல.நிச்சயம் இரு பெரும் 
திருவிழாக்கள் தான்.இவ்வளவு பேர் மதுரையில் இருக்கின்றார்கள் என்பதே இது 
போன்ற திருவிழா காலங்களில் தான் தெரியவரும்.சித்திரை  அமாவாசை அன்று அழகர் கோவிலும் மூன்றாம் நாளில் மீனாட்சிக்கும்  கொடி ஏற்றம் நடக்கும்.அன்று முதல் சாமி மாசி வீதிகளில் ஊர்வலம் வரும்.பிரியாவிடை அம்மன் பற்றிய கதை எதுவும் அறியேன்.ஆனால் இந்த 
திருவிழா காலங்களில் சிவனோடு உரிமையாக அமர்ந்து வருவது அவங்கதான்.
கோவிலில் அவருக்கு என்று தனி சன்னதி எல்லாம் இல்லை.உற்சவ மூர்த்தி 
மட்டுமே.

மீனாட்சி தனியாகத் தான் வருவார்.தேரோட்டம் அன்று மாலையில் 
மட்டுமே மூன்று தெய்வங்களும் ஒன்றாக வரும்.அழகர் கோவில் கள்ளழகர் தான் திருமணம் முடிக்க வருகிறார் 
அவர் வருமுன் திருமணம் கோவித்துக் கொண்டு வைகை ஆற்றோடு 
செல்கிறார் என்று செவி வழி செய்திகள் உண்டு.அது உண்மை அல்ல.
உண்மையில் திருக்கல்யாணம்,அழகர் ஆற்றில் இறங்குதல் இரு வேறு
விழாக்கள்.திருமலை நாயக்கர்தான்ஒன்றாக ஒரே மாதத்தில் மாற்றி
அமைத்தது.திருப்பரங்குன்றம் முருகனும் கல்யாணத்திற்கு வந்துவிடுவார்.
மதுரை சுந்தரராஜப் பெருமாளே இங்கே தாரை வார்த்துக் கொடுப்பது.சைவ 
வைணவச் சண்டைகளை திசை மாற்ற என்று பின்னாளில் இது புரிந்தது.மூன்று
 ஸ்தனங்களை உடையவள் மீனாட்சி என்றும் அவளுக்கே உரிய கணவனை 
பார்க்கும் பொழுது மூன்றாவது மறையும் என்றும் கதையில் உண்டு.மீனாட்சி
 சன்னதிக்குள் சுவற்றில் மீனாட்சி கதையை சிற்பமாக வடித்து இருப்பார்கள்.
மாசி உலாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு ஒவ்வொரு வாகனத்தில் கடவுள் எழுந்தருளல்.
.மதுரை உண்மையில் ஒரு கட்டமைக்கப்பட்ட ஊர்.மீனாட்சி கோவிலை மையமாகக் கொண்டு சதுரமாக ஒவ்வொரு வீதியாக இருக்கும்.ஆடி வீதி,
சித்திரை வீதி,ஆவணி மூல வீதி,மாசி வீதி,வெளி வீதி,மாரட் வீதி இப்படி.
இறுதியில் தேரோட்டம் தான் முத்தாய்ப்பு.

திருக்கல்யாணத்தன்று சுமங்கலிப் பெண்கள் அனைவரும் பழைய கயிறு மாற்றி
 புது மஞ்சள் கயிறு அணிந்து கொள்வார்கள்.அதனால் மஞ்சள் கயிறை  தனிப்பட மக்களும்இலவசமாக போவோர் வருவோருக்கு அளிப்பதுண்டு.அது
மட்டுமின்றி பக்தகோடிகளுக்கு நீர்,மோர் பந்தல் மற்றும் உணவுப் பொட்டலம்
விசிறி என்று வழிநெடுக எவரேனும் கொடுத்துக் கொண்டுதான் இருப்பார்கள்.
மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு எல்லாம் உண்டு.திருமணம் முடிந்து சாப்பாடும் மொய்யும் கூட உண்டு:)மதுரை என்றதும் மீனாட்சி ஆட்சியா வீட்டில்  என்ற கிண்டல்கள் உண்டு.உண்மையில் கடவுளே ஆனாலும் கணவனுக்கு அடங்கிய பெண் எனக்காட்ட ஒவ்வொரு வருடமும் இரு பங்காக பிரிக்கப்பட்டு ஆட்சிக்காலம் மீனாட்சியை விட சிவனுக்குத்தான் அதிகம்கொடுக்கப்படுகிறது:)உலக அதிசயத்தில் மீனாட்சி
கோவில் பட்டியலில் இருக்குஎனத் தெரியவும் ஆங்காங்கே பெரிய அளவில் 
விளம்பரம் வைத்துஓட்டுசேகரித்தார்கள்.ஓவ்வொரு சாமான்யனும் கூட 
வெளிநாட்டிற்குஅழைத்துதன் ஓட்டைப் பதிவு செய்தும் முன்னால்கொண்டு 
வராத நுண்ணரசியல்வெளிநாட்டுத் தேர்வுக்குழு செய்தது என்றால் அது
 மிகையல்ல.பணம்இழந்ததை விடஅதிசயப்பட்டியலில் எங்கள் கோவில்
வரவில்லையே என்ற ஆதங்கம் பெரும்பாலோருக்கு உண்டு.
வாராரு ...வாராரு...அழகர் வாராரு..
அடுத்த பெரும் திருவிழா இது.திருக் கல்யாணக் கூட்டத்தை விட மதுரையைச் 
சுற்றியுள்ள கிராமத்து மக்கள் அதிகம் வருகை தருவது இந்த விழாவிற்குத்தான்.
வண்டி கட்டிவருவார்கள்.அழகரை வரவேற்று வழியனுப்பும் வரை
மதுரைவாசம்தான்.மதுரையில் சௌராஷ்டிரா இனத்தவர்கள் அதிகம்.கைத்தறி
தான் இவர்களில்  பெரும்பாலோர் தொழிலாக இருந்தது.வீதியில் பட்டு நூலை வைத்து இழைப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது ஒரு காலத்தில்.
இன்று அதெல்லாமில்லை:((இவர்களில் குல தெய்வம் தெரியாதவர்களுக்கு
குல தெய்வமாய் விளங்குவது அழகர்தான்.(சௌராஷ்டிரா தோழி கொடுத்த தகவலில் அடிப்படையில்).சாமியை நாம் சென்று கோவிலில் 
வழிபடுவதுதான் வழக்கம்.வழக்கத்திற்கு மாறாக சாமி நம்மைப் பார்க்க 
வருகிறார் என்றுதான் அத்தனை மகிழ்வாக கொண்டாடப்படுகின்றது.அழகர் 
வைகை ஆற்றில் இறங்குவதற்கு பல கதைகள் சுவராசியமாக
புனையப்படுவதுண்டு.மீனாட்சி திருமணத்திற்கு வந்தவர் தான் வருவதற்கு
முன் தன்னுடையநகலான சுந்தரராஜப் பெருமாளைவைத்து சிவன் திருமணம்
முடித்ததால் கோபம் கொண்டுஆற்றோடுதிரும்புகிறார் என்பதும்,
மண்டூக மகரிஷிக்குமோட்சம் கொடுக்கவருகிறார்என்றும் பல கதை உண்டு.
ஆனால் சிவன்முதன்முதலில்தன்பக்தன்தாகம்தீர்க்க உருவாக்கிய வைகையை
முதலில் கடந்தவர் என்றும் சொல்வதுண்டு.
உண்மையில் கள்ளர் இனத் தலைவன் வைகை ஆற்றுவரையிலான பகுதியில் 
தொடர்ச்சியாக கொள்ளையடித்து விட்டு அப்படியே தன வைப்பாட்டியான 
துலுக்க நாச்சியார் (இஸ்லாமியப் பெண்மணி) வீட்டிற்கும் சென்று வருவதுண்டு.இன்றும் கள்ளர் இனத்தவர்கள் அழகர் மலை அருகில் 
வசிக்கவே செய்கின்றார்கள்.எனவே இவர் எம்இனம் எம் தெய்வம் என்று
கள்ளழகரைதமக்கே சொந்தம்கொண்டாடுகின்றார்கள்.யாரோ ஒரு கள்வன்
எப்படி பெருமாள் அவதாரம் எடுத்தார் என யாம் அறியோம்:) ஆனால் வருடா வருடம் அழகர்வருவது அந்தக் கள்ளனின் வேடத்தில்தான்.
பூட்டியே கிடக்கும் (ஒருதடவை கூட திறந்து நான் பார்த்தது இல்லை) பதினெட்டாம்படிகருப்பு காவல் தெய்வம்.பொதுவாக சாமி பார்க்க அசைவம்
தவிர்த்து செல்லும்பழக்கம் நமக்கு உண்டு.நம்ம கிராமத்து சனங்க அதெல்லாம்
பார்க்கிறது இல்லை.கெடாவெட்டி மொட்டை அடிச்சு சாமி கும்பிட்டு
அழகரையும் பார்த்துட்டுதான் போவாங்க.அழகரை எதிர்கொண்டு அழைக்கும்
நிகழ்ச்சி எதிர்சேவைஎனப்படும்.தமுக்கம்சிக்னல் தாண்டி போக்குவரத்து
நிறுத்தப்பட்டுவிடும்.எவ்ளோதூரமென்றாலும்நடந்துதான் போகணும்
அதன்பிறகு.இருந்தாலும்போவோம்ல:) சாமிவரும் வழியில் எல்லாம்
மண்டகப்படிவைக்கப்பட்டிருக்கும்.தங்கள்  இடத்தில் சாமியை வரவழைக்கப் பணம் கட்டிஇருப்பார்கள்.அங்கே சில நிமிடங்கள் தங்கி தங்கி வரும்.
முன்பெல்லாம் ஒரு சிலதான் இருந்தன.இப்போ ஆள் ஆளுக்கு பணம் கட்டி 
வைத்திருக்கின்றார்கள்.அந்தக் காலத்தில் இருந்தே பேர் போனது ராமராயர்
மண்டகப்படிதான்.எங்கேனும்வெளியே சென்ற இடத்தில தெரிந்தவர்களை
சந்தித்துப் பேசிநேரம்சென்றுதிரும்பிவந்தால் என்ன மண்டகப்படியில்
இருந்தியா என்ற கிண்டல் இன்றளவும் உண்டு மதுரையில்.அதே போல
 உள்ளூர்ச்சானல்கள் எல்லாம் இல்லாத அந்நாளில் சாமி பார்க்க செல்ல முடியாவிடில் "ஆத்தைக் கண்டேனா அழகரை கண்டேனா?"என்ற சொல்லாடலும் உண்டு.(என் அம்மா சொல்வாங்க உங்கப்பாவைக் கட்டி 
ஆத்தைக் கண்டேனா அழகரைச் சேவிச்சேனா?":))அந்த அளவுக்கு அழகரைப் 
பார்ப்பது பெரும் பாக்கியமாக கருதப்படுகின்றது.மூன்று நாட்கள் முன்பே 
வைகை அணையில் நீர் திறந்துவிடப்பட்டுவிடும்.வரலாற்றிலேயே  முதன்முறையாக மில்லேனியம் ஆண்டா அல்லது2003ஆ சரியாகத் தெரியல)
அழகர் நீரே இன்றிஇறங்கியதாகஎன் தந்தைசொன்னதுண்டு.அன்றைய தினம்
மட்டும்அழகரைதரிசிப்பவர்கள் எண்ணிக்கை சில பல லட்சங்கள் தாண்டும்
என்றால் நம்புவீர்களா?நம்பித்தான் ஆகவேண்டும்.தங்கள் இன,சொந்த
மண்டபங்களில் 
முதல்நாளே வந்து தங்கிவிடுவார்கள்.மேலே படத்தில் பார்க்கும் கூட்டம் 
ஏதோ ஒரு மூலையின் ஒரு பகுதிதான்.கண்டிப்பா எல்லாரும் சாமி பார்க்க
முடியாதுதான்.தள்ளி நின்று நாராயணா கோஷம் விண்ணைப்பிளக்கும்.

ஒரு சொம்பில் நிறையசக்கரைவைத்துஅதில் சூடம் வைத்துக் காட்டுவார்கள்
சாமிக்கு.டிவியில்பார்த்துக்கொள்ளும் வசதி வந்தாலுமே கூட வீட்டில்
இருப்பவர்கள் குறைவே.அழகர்,கருப்பசாமி வேடமிட்டு ஆடி வருபவர்களைப்
பார்க்கவே ஆசையாக இருக்கும்.

இப்பொழுதாவது டிவி மூலம் சாமி எந்த இடத்தில இருக்கு என்று அறிய முடியும்
.அந்தக் காலத்தில் இருக்கும் இடம் எவரேனும் சுற்றி அலைந்து திரிந்தேனும் 
பார்த்து விடுவதுண்டு.டிவி பார்க்காமலே இந்நேரம் சாமி எங்கே இருக்கும் எங்கு
சென்றால் சாமி பார்க்கலாம்என்று மிகத் துல்லியமாக அம்மா சொல்வதுண்டு
(அனுபவம்).வெயிலில் வரும் சாமிக்கு நீர் பீய்ச்சி அடிப்பார்கள்.அப்படியே
நமக்கும்தான்.அதனால் அன்று வெயிலே தெரியாது.வெண்பட்டு அல்லது
பச்சைப்பட்டு உடுத்தி எழுந்தருள்வார்.பச்சை என்றால் மழை பொழியும்
விவசாயம் கொழிக்கும் என்றுநம்பிக்கை உண்டு.தேவா இசையமைத்ததிலேயே
உருப்படியான பாட்டுஅழகருக்கென்றே அட்டகாசமாக அமைந்த பாடல்
என்றால் அது வாராருவாராரு பாடல்தான்.அழகர் வரும் இடமெல்லாம் இந்தப்
பாடலை 
சலிக்காமல் ஒலிபரப்புவார்கள்(வீடியோவை பார்க்காமல் பாட்டை மட்டும்
கேட்கவும்.ஒரிஜினல் வீடியோகிடைக்கல:)வண்டியூரில் மண்டூக மக ரிஷிக்கு
மோட்சம் கொடுத்துவிட்டுதுளுக்கநாட்சியார் வீட்டுக்கெல்லாம் போயிட்டு
சாமி திரும்பிச் செல்லும்வரைமதுரை களைகட்டி இருக்கும்.வரும் பொழுது
பூப்பல்லாக்கில் வந்த தெய்வம்போகும் பொழுதுபூவெல்லாம் உதிர்ந்து
நாரோடு செல்லும்.போய்வருகின்றேன் என்று சொல்கிறாராம்:) அட  இப்படியெல்லாம்  சென்ற அழகர் கோவிலுக்குள் உடனே உள்ளே  விடப்படுவாரா  என்றால் அதுதான்இல்லை.தீட்டு பட்டதாகச் சொல்லி ஒதுக்கி
உட்கார வச்சிடுவாங்க.ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்றுதான் தீட்டு கழித்து உள்ளே விடுவாங்க.(என்ன தீட்டோ?:) கள்ளழகர் திருவிழா பிரபலம் என்பதாலோ என்னவோ அழகர் மலையில் 
இருக்கும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலை முருகன் 
அதிகம் கவனிக்கப்படுவதில்லை.அருமையான மூலிகை வனம் நிறைந்த மலை
 அழகர்மலை.இப்பொழுது ஆபத்தும் அதிகம் நிறைந்த மலை என்றே
ஆகிவிட்டது.தனித்து சென்றால் அழகாக இருக்கின்றது என்றே சற்று உள்ளே
ஆள் நடமாட்டம்இல்லாத மலைப்பகுதிகளில் சென்று அமர்வதை தவிர்க்கவும்.
கள்ளர்கள்சாக்கிரதை.மலை உச்சியில் ராக்காயி அம்மன் கோவில் உண்டு.
அங்கே இருக்கும்நீர் ஊற்றின் மூலம் தெரியவில்லை.எனினும் வற்றாத ஊற்று.
அருமையான நீரும் கூட.எனக்கு தெரிஞ்சதை செவி வழி அறிஞ்சதை விபரம்
 அறிஞ்சு பார்த்ததை சொல்லியாச்சு.பிழை இருப்பின் பொறுத்தருள்க:)
படங்கள் உதவி :கூகிள்