Monday, February 6, 2012

நான் குழந்தையா இருக்கறச்ச....

 அரும்பு(ம்) நினைவுகள்:

1 . மயில் றெக்கை குட்டி போடும் என நம்பி இருக்கேன் 
2 .என் அண்ணா பம்பரத்துக்கு ஆக்கர் வைக்கிறத ஆ ன்னு வேடிக்கை பார்த்திருக்கேன் 
3 .முழு நெல்லிக்காயை அழகா அரை வட்டமா சாப்பிடுவேன் 
4 .லிப்ஸ்டிக் பூசிட்டு பல்லுல ஒட்டக்கூடாதுன்னு  வாயை ஈ ன்னு வச்சிட்டே இருந்திருக்கேன்.(வாய் வலிச்சுச்சு ;) )
5 .உடைஞ்ச பல்லை சாணி வச்சு மூடி ஓட்டு மேல தூக்கிப் போட்டிருக்கேன்(அப்படித்தான் செய்யணுமாம் :) )
6 .பொய்க்கால் குதிரை ஆடுறவங்களுக்கு நிஜமாவே மனுஷ முகம் குதிரை உடம்புன்னு பயந்து பார்த்திருக்கேன் 
7 .காந்தத்தை மணல்ல உருட்டி காகிதம் மேல மணலும் அடியில் காந்தமும் வச்சு விளையாடுவேன்
8 .ஃ ப்ரூட்டி வாங்கிக் குடிச்சு சேராம வாந்தி எடுத்ததில் இருந்து இன்றுவரை மாம்பழ சுவை ஆகாது எனக்கு 
9 .இப்பவரை விசிலடிக்க முயற்சி பண்ணி தோல்விதான்.வெறும் காத்துதான் வருது ஊ ஊ ஊ :)
10 .சினிமா தியேட்டரில் கலர் ஸ்க்ரீன் அழகா மெதுவா மேல ஏறி திரும்ப படம் முடியும் போது இறங்குவதையும் பார்த்து ரசிப்பேன்
11 .தமிழக அரசு செய்தது ,வாங்கியதுன்னு சொல்றாங்களே அது எங்க,எப்படி இருக்கும்ன்னு யோசிச்சு இருக்கேன்.
12 .தண்ணி கேட்டா வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணி கொடுப்பா பக்கத்துல இருக்கிற பக்கி :)
13 .அம்மை போட்டப்போ என் பெரியம்மா பையன் போலியா சாமி ஆடுனதை பார்த்து பயந்திருக்கேன் 
14 .கிரகணத்தப்போ நிலாவ பாம்பு முழுங்கிரும் ன்னு நம்பிருக்கேன்
15 .ஒரு ரூவாய்க்கு ரெண்டே ரெண்டு மிட்டாய் கொடுத்திட்டு மிச்சக் காசுதராம ஏமாத்தின பாட்டியை ரொம்ப நாள் சம்பிச்சிருக்கேன்
16 .நிலாவில் தெரியும் கறையை நுணுக்கமா ஆராய்ஞ்சு அதுல பாட்டி வடை சுடுதுன்னு நம்பிருக்கேன் 
17 .பீச் ல கரை ஓரமாவே நேரா நடந்து போனா வானத்தை தொட்டுரலாம்ன்னு நம்பிருக்கேன்
18 .ஸ்லேட்டு குச்சி,செங்கல்,விபூதி எல்லாம் சாப்பிட்டுருக்கேன் 
19 .சத்தியம் பண்ணி அதை மீறிட்டா பைத்தியம் பிடிச்சிரும்ன்னு நம்பிருக்கேன் 
20 .வாயைத் திறக்காமலே எப்படி பாடுறாங்கன்னு அதே போல முயற்சி பண்ணி ம்ம் தான் வந்தது 
21 .கரென்ட் வந்தா AREA குள்ள இருக்கிற வாண்டுகளோட சேர்ந்தே ஹே ன்னு கத்துவேன்
22 .நூத்தம்பது ரூபா இருந்தா அம்புட்டுக்கும் தேன் மிட்டாயா வாங்கி சாப்பிடலாம்னு நினைச்சிருக்கேன்
23 .என் அண்ணா ஸ்கூலுக்கு போகலன்னு அப்பா வீட்டுக்குள்ள நுழையும் போதே போட்டுக்கொடுப்பேன் 
24 .TV குள்ள எப்படி ஆளுங்க வராங்கன்னு TV க்கு பின்னாடி போய் ஆராய்ச்சி பண்ணிருக்கேன்
25 .செய்திகள்ன்னு போடுறப்போ அந்த FLASH சத்ததோட கூட சேர்ந்து ஷ் ன்னு கத்துவேன் 
26 .பழம் சாப்பிட்டு கொட்டை துப்பாட்டி வயித்துக்குள்ள மரம் வளர்ந்து செத்துப் போயிருவேன்னு நினைச்சிருக்கேன்
27 .சினிமாக்காரங்க எல்லாரும் மெட்ராஸ் ல ஒரே வீட்ல இருப்பாங்கன்னு நினைச்சிருக்கேன்
28 .நைட் சாப்பிடாட்டி பிள்ளையார் வந்து சோதிப்பார் ன்னு அம்மா சொல்றதை நம்பிருக்கேன்
29 .maths நோட் ல அண்ணாவுக்கு லெட்டர் எழுதிருக்கேன் அது போய்ச் சேருமா சேராதா ன்னு தெரியாம
30 .ரெண்டு ரெண்டு பேரா வரிசையா போய் பாட்டு பாடி பிள்ளையாரை கரைச்சுட்டு வருவோம்
31 .ஐ லவ் யூ ரொம்ப கெட்ட வார்த்தைன்னு நினைச்சிருக்கேன்
32 .மாசமா இருக்கிறவங்களுக்கு வயிறு பெருசாகி பெருசாகி அப்படியே பாப்பா ரொம்ப ஈசியா வெளியே வந்திரும்ன்னு நினைச்சிருக்கேன்:)
33 .காப்பி கலக்க குழம்பு கரண்டி உபயோகப்படுத்தினேன் அது காரமா இருந்துச்சுன்னு அண்ணன் இன்னைக்கு வரை திட்டு :)
34 .ஏரோப்ளேன் சத்தம் கேட்டா உடனே மாடிக்கு போய் வேடிக்கை பார்ப்பேன் 
35 .அரைத் தூக்கத்தில் எழுந்து தீபாவளி முதல் நாள் இரவுஎனக்கு என்ன டிரஸ் ன்னு பார்ப்பேன்
36 .சொர்க்கம் மதுவிலே சொறிநாய் தெருவிலே,நானொரு சிந்து சாக்கட பொந்து ன்னு என் அண்ணா பாடுறதுதான் சரியான பாட்டு வரின்னு நம்பிருக்கேன் (நற நற)
37 .மழை பெஞ்சு ஓய்ந்த பிறகு மரத்தின் மீது உள்ள துளிகளை உதிர்த்து விளையாடிருக்கேன்
38 .மழை ஈரமுள்ள சுத்தமான ஆத்து மணலை மிதிச்சா லைட் எரியும்ன்னு நம்பிருக்கேன்(அதுல ஒரு மாதிரி கலர் மண் தெரியும்)
39 .புது நோட்,புத்தக வாசனை பிடிப்பேன் 
40 .பொன்வண்டை தீப்பெட்டிக்குள்ள போட்டு அதுக்கு இலை போட்டு பாதுகாத்தேன் 
41 .நண்பர்களோட சேர்ந்து நிலா முற்றத்தில் கூட்டாஞ்சோறு சாப்பிட்டு இருக்கேன்.
42 .இஞ்சினியர் ன்னா அது கட்டிடம் கட்டற வேலைன்னு மட்டும்தான்னு நினைச்சிருக்கேன்
43 .மேஜை மேல் ஏறி விளையாடி ஒரு கையை உடைச்சுகிட்டு சுண்ணாம்பு பத்து போட்டிருக்கேன்
44 .பாட்டி இறந்ததற்கு நாங்க வளர்த்த கருப்பு ஆட்டுக்குட்டியை கறியும் சோறுக்காக வெட்டினப்போ அழுதோம் நானும் என் அண்ணாவும்
45 .முதமுதல்ல டிவி வீட்டுக்கு வந்தப்போ சும்மா போட்டு வெறும் புள்ளியை வேடிக்கை பார்த்திருக்கோம்
46 ஆத்துல மணல் வீடு கட்டி ரெண்டு பக்கமும் ஓட்டை போட்டு கைகொடுத்துக்குவோம்
47 களிமண் பொம்மைகள் செய்ததுண்டு இப்போ போல நகம் அழுக்குப்படாமல் பாதுக்காக்கும் கவலை எல்லாம் அப்போ இல்லை.அப்பாவுக்கு மீன் பிடிக்க மண் புழு தோண்டி எடுத்துக் கொடுத்ததுண்டு.
48 அப்ப நல்லாப் படிச்சேன்னு சத்தியமா இப்போ என்னால நம்பவே முடியல :)(கவனம் சிதறும் வாய்ப்புகள் இப்போ போல அப்போ இல்ல )
49 வளர்ற புள்ளன்னு அளவு பெரிசா உள்ள டிரஸ் எடுத்துத் தருவாங்க.எரிச்சலா இருக்கும் எப்போ பெரிய ஆளாவோம்ன்னு.
50 இரயில் பயணங்களுக்கு ஏங்கி இருக்கேன் 



Saturday, February 4, 2012

பொத்தி வச்சா அன்பு இல்ல..!



எத்தனையோ இருந்தாலும் அத்தனையும் ஒரு சேர நினைவுகூறுவது கடினமே எனினும் சில முக்கியமான தருணங்கள் பகிர விரும்புகிறேன்.
பெரிதாக அன்பை எல்லாம் வெளிப்படுத்திக் கொண்டதே இல்லை எங்கள் வீட்டில்.என் தோழி அவள் அண்ணாவிற்கு சட்டை வாங்கிக் கொடுக்கவும் மிகுந்த தயக்கத்துடன் நானும் அண்ணனின் பிறந்தநாளுக்கு சட்டை பரிசளித்தேன்.எங்கள் சண்டையை மட்டுமே பார்த்துப் பழகி இருந்த அப்பா,இதழில் குறும்புச் சிரிப்புடனும் அம்மாவிடம் பார்த்தியா என்று கண்களில் ஜாடை காட்டியதும் மறக்கவே முடியாதது:)
என் பிசாத்து சம்பளத்தில் வாழ்க்கையிலேயே உருப்படியாகச் செய்த காரியம் தீபாவளிக்கு அம்மாவுக்கும் அப்பாவுக்கும் துணி எடுத்துக் கொடுத்தது.பசங்க செய்யாததை நான் செய்தேன் என்று அவர்களுக்குள் நெகிழ்வு.
என் பிறந்தநாளுக்கு பரிசளிக்க தோழி என்னையே அழைத்துச் சென்று யாருக்கோ வாங்குவது போலச் சொல்லி என்னையே பரிசை தேர்ந்தெடுக்கச் சொன்னாள்.அவளுக்குப் பிடித்தது என்று நானும் எனக்குப் பிடித்திருக்கும் என்று அவளும் ஏதோ ஒரு மஞ்ச வாத்தை தேர்வு செய்தோம்.யாருக்கோ தானே என்று அசுவராசியம் எனக்கு.பின் எனக்குத் தான் எனத் தெரியவும் அசடு வழிந்தேன்.அன்று முதல் இன்று வரை எவருக்கோ என்றாலும் பரிசு எனக்கே வாங்குவது போல முடிந்தவரை மிகச் சிறப்பாகவே தேர்வு செய்கிறேன்:)
இணைய நண்பர் ஒருவர் போன் நம்பர் கேட்க அவர் மீது இருந்த அசாத்திய நம்பிக்கையினால் முதன் முறையாக அவரிடம் மட்டுமே கொடுத்தேன்.என் பிறந்தநாள் அன்று அவர் போன் செய்த நேரத்தில் அதை எடுத்தது அம்மா.வாழ்த்து சொல்ல அழைத்தேன் நண்பர்தான் என்று வைத்துவிட்டார்.அவர் நம்பரை தோழியின் பெயரில் SAVE செய்து வைத்திருந்தேன்:) அம்மா சொல்லவும் வியர்த்து விட்டது தவறா எடுத்திருப்பாங்களோ என்று.தோழியிடம் சொல்லி அவர் கணவர்தான் போன் செய்ததாக சொல்லிவிடு என்று கேட்டுக் கொள்ளவும் அவளும் அதையே சொல்லிவிட்டாள்.பிறகு மெதுவாக அவளிடம் எதனால் அப்படிச் சொல்லச் சொன்னேன் என்று விளக்க முற்பட்ட பொழுது சட்டென்று உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் உமா விளக்கனுமா என்ன என்றதும் ஒரு ஆசுவாசம் வந்தது பாருங்கள் அத்தனை வருட நட்பின் ஆழமும் அர்த்தமும் அன்றுதான் புரிந்தது எனக்கு.மறக்கமுடியாத அன்பும் நம்பிக்கையும்:)சந்தர்ப்பமும் சூழ்நிலையும் நமக்கு எதிராக அமைந்தாலும் நம்மை புரிந்து கொள்ளும் நட்பு அமைவது ஒரு வரம்.
பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவு எனத் திட்டிக் கொண்டிருந்தார்கள் அம்மாவும் அண்ணனும்.எனக்கும் குற்ற உணர்ச்சி இன்னும் முயன்றிருந்தால் நல்லதாக மார்க் வாங்கி இருக்கலாமோ என்று.அப்பா வீட்டிற்குள் நுழையவும் இதைக் கேட்டுவிட்டு என்ன மார்க் என்றார்.445 என்று சொல்லவும் ஏன் நல்ல மார்க் தானே எனவும் தான் மூச்சே வந்தது எனக்கு:) அவ்வளவு பயந்திருந்தேன்.
முதன் முறையாக சேமியா உப்புமா சமைத்தேன்.பக்குவம் தவறி சேமியா குலைந்து ரவா உப்புமா போல கெட்டியாக மசமசத்து விட்டது.அதனால் என்ன வேறு எப்படி சமைச்சு பழகறது நல்லாத்தான் இருக்கு என்று வீணடிக்காமல் அப்பா சாப்பிட்டார்.(சமையலில் சிறு குறை இருந்தாலும் அம்மாவை வறுத்து எடுத்து விடுவார் அவ்வளவு கோபம் வரும் சாப்பாடு விஷயம் சரியாக இல்லையென்றால்.அதனால் தான் அவர் சாப்பிட்டது 

அதிசயம்.அம்மாவிற்கும் பொறாமை :) (ம்க்கும் மக செஞ்சா மட்டும் :P )
என் தோழியின் பிறந்த நாளுக்கு என்ன பரிசளிப்பது என்று யோசித்து ஒன்றுமே தோன்றவில்லை.மேலும் அந்த நேரம் கையிலும் பணம் இல்லாமல் போகவே என் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் அவர் அன்போடு முன்பு அனுப்பிய SMS ஐ பொக்கிஷமாய் வைத்திருந்து அதை அனுப்பினேன்.அன்று அது தான் ஆகச் சிறந்த பரிசு என் நட்பிற்கு இவ்வளவு மதிப்பா என்று தோழி வெகுவாகப் பூரித்தார்.பரிசு என்றால் நிறைய பணமும் பிரம்மாண்டமும் தான் என்பதை அடியோடு பொய்யாக்கிய மகிழ்வு.
அண்ணா பையனை அழைக்க முக்கால் மணி நேரம் காத்திருந்தேன் பஸ் ஸ்டாப் ல நேரம் வீணாகிடுச்சு கரெக்ட் டைம் க்கு வந்திருக்கலாம் ன்னு தோனுச்சு.

பக்கத்தில் ஒரு பெண் உன்னைக் கூப்பிட யாரும் வரலையோ எனக் கேட்டாள் போல பஸ் போகவும் என்னைப் பார்த்த நிமிடத்தில் ஆயிரம் வாட்ஸ் மகிழ்ச்சி
அந்த வினாடி குழந்தை முகத்தில் பார்த்த மகிழ்ச்சி முக்கால் மணி நேரம் நின்றது பெரிதாகத் தோன்றவே இல்லை :)

 
சென்ற வாரம் வீட்டில் விருந்தினர் வருகை அதிகம். காலையிலேயே வருவார்கள் என எதிர்பார்த்து இருந்ததால் சாப்பிடக் கூட நேரமின்றி ஆளுக்கொரு வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.மூன்று மணிக்கு மேல் அவர்களுக்கு உணவு பரிமாறிவிட்டு இறுதியாக வீட்டில் உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட குழந்தைகளை மேய்க்க தனி அறையில் இருந்த நான் கதவை திறந்து எட்டிப் பார்த்தேன்.நான் பசி பொறுக்கவே மாட்டேன் என்பதை என் அண்ணி நன்றாக அறிவார்.அதனால் முதலில் என்னை அமரவைத்து சாப்பிட வைத்துவிடுவார்கள் வீட்டில்.அன்று மறந்துவிட்டு அண்ணி உணவருந்திக் கொண்டிருந்தார்.என்னைப் பார்க்கவும் ஏதோ குற்ற உணர்ச்சியிலும் வந்து என்னையும் அமரச் சொல்லி தலையசைத்த பாவனையும் மறக்கவே முடியாத ஒன்றாகிப் போனது எனக்கு.வார்த்தைகள் கூடத் தேவைப்படுவதில்லை அன்பை வெளிப்படுத்த.அன்று என்னைப் பார்த்த பார்வை இன்னமும் ஆழமாக மனதில்.மெலிதாகப் புன்னகைத்து சாப்பிடச் சொல்லி சைகை செய்துவிட்டு பின்னர் உணவருந்த அமர்ந்த வேளையில் அருகில் இருந்து பரிமாறினார்.
சில வருடங்களுக்கு முன் மிக மோசமான ஒரு தருணத்தில் ஆழ்ந்த வருத்தத்தை வேறு வழியே இன்றி அழுகையாய் வெளிப்படுத்திய போது இரண்டே வயது நிரம்பிய வாண்டு சட்டென்று வந்து கண்ணீரைத் துடைத்து கழுத்தை இறுக அணைத்து அமர்ந்து கொண்டது மடியில்.அண்ணா திட்டியதற்கு முன்பு அழுத பொழுது அன்று ருத்ர தாண்டவம் ஆடி கோபமாய் அப்பா வெளிப்படுத்திய அன்பின் ஈரம் அந்தப் பிஞ்சுக் கரங்களில்.
எனக்கு பொம்மை வெகு இஷ்டம்.அதனால் தோழி வாங்கிக் கொடுத்த பொம்மையை என் அண்ணன் மகளுக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்தேன்.அடம் அதிகம்.கேட்டால் மறுக்க முடியாது என்பதால்.எங்கோ வெளியே சென்று விட்டு வந்து பார்த்தால் என் டிரெஸ்ஸிங் டேபிள் கலைந்து கிடந்தது.இவள் வேலை என அறிந்து பதட்டம்.பொம்மையைப் பார்த்திருந்தால் கேட்பாளே என்று.ஆனால் அவள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.பார்க்கவில்லை போலும் என ஆறுதலடைந்தேன்.ஆனால் அவள் வீட்டிற்கு செல்லும் பொழுது அத்தை நீங்க பொம்மை வச்சிருக்கீங்க நான் பார்த்தேன்.சட்டென்று கதி கலங்கிவிட்டது.ஆனால் அவள் இலகுவாக நீங்க என்ன INFANT ஆ பொம்மை வச்சுக்க?நீங்களே வச்சுக்கோங்க எனக்கு வேணாம் என்று சொல்லிவிட்டுப் போனாள்.எனக்கு பல்ப்.குழந்தைகள் தான் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்துகொள்கின்றார்கள் நம்மைவிட:)
சில மாதங்களுக்கு முன்பு ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது.தலையில் அடி இரண்டு தையல் போடும் அளவுக்கு.பலத்த அடி எனச் சொல்லமுடியாது எனினும் அதிர்ச்சியில் சுய நினைவை சில மணி நேரம் இழந்திருந்தேன்.அதை விடக் கொடுமை எழுந்து என்ன நடந்தது என்றே மறந்துபோனது.வெகு சிரமப்பட்டு ஒவ்வொன்றாக ஒருமணி நேரத்திற்குள் நினைவுக்கு கொண்டு வந்தேன்.தோழிகள் தவிர ஒரே ஒரு நண்பரிடம் மட்டும் பகிர்ந்தேன்.சும்மா கிடந்த வண்டிய இடிச்சு தலையில எம்பராய்டரி போடும் அளவுக்கு கோவக்காரங்களா என்று வெகு இயல்பாக கிண்டல் செய்தார்.எனினும் அக்கறையான விசாரிப்புகளும் கூடவே.மனம் விட்டுச் சிரித்தேன்.வந்து குசலம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று வண்டி வண்டியாக அறிவுரை கொடுத்து போரடிக்க வைக்கும் சொந்தங்களுக்கு நடுவே நோயாளியாக உணரவைக்காமல் கேலியும் கிண்டலுமாய் இயல்பாய்ப் பேசுவது தோழமை மட்டுமே.
நேற்று நிலா என்ற பெண்ணை டிவிட்டரில் பின்தொடர்ந்தேன்.ஒருசிலர் பின்தொடர்வதற்கு நன்றி சொல்வது வழக்கமே எனினும் இவர் சொன்ன விதத்தில் சற்று நெகிழ்ந்தே போனேன்.என்னை அவ்வளவு கவனித்து இருக்கிறார்.ஒன்று ஒன்றாகச் சொல்லி அவ்வளவு பிடிக்கும் என்றது எனக்கே ஆச்சர்யம்.என்னைத் தாழ்வாக நினைக்கவோ அன்றி உயர்வாக நினைக்கவோ எதுவும் இல்லை.என் தகுதி என்னவென்று நான் அறிவேன் என்பதால்.அதிகம் புகழ்ந்தால் சட்டென்று கவனம் என மூளை உசுப்பி விடும்.அதே சமயம் ஆத்மார்த்தமான பாராட்டுகள் மனதிற்கு இதத்தை அளிக்கின்றன.அது போல இதமாக இருந்தது நிலாவின் பாராட்டும் அன்பும்.
இப்படி எழுதிக் கொண்டே போகலாம் அன்பு பரிமாறிக் கொண்ட நினைவுகளை.இங்கு சொல்லாமல் விட்டவை நிறைய.பொதுவாக பெரும்பாலோனோர் மனதில் அன்பை வெளிப்படுத்த அதிக பணம் தேவை என நினைக்கிறார்கள்.புடவையும் நகையும் மட்டுமே மனைவியை மகிழ்விக்க போதுமானவை என்றும் நினைப்பு சில ஆண்களுக்கு.அவை வேண்டும் ஆனால் அவை மட்டுமே என்றால் வேண்டாம்.ஆனால் உப்பில்லாப் பண்டம் மட்டுமல்ல அன்பில்லாப் பொருளும் மண்ணிற்குத் தான் சமம்.பக்கத்தில் இருப்பவர்களிடம் அன்பைப் பகிராமலும் பரிமாறாமலும் ஓடிக் கொண்டே இருக்கிறார்கள்.என்றேனும் ஒரு நாள் திரும்பிப் பார்க்கும் பொழுது அவர்கள் சேர்த்த பொருளை விட இழந்தது அதிகமிருக்கும்.அதை அனுபவிக்கவும் ஆள் வேண்டாமா?பரிசு என்றாலே நிறைய பணமும் பிரம்மாண்டமும் என்பதே நினைவுக்கு வருகிறது பலருக்கு.ஆனால் அதையும் தாண்டி நம் பொன்னான நேரம் அதை நம் பிரியமானவர்களுக்கு எப்படிச் செலவிடுகிறோம் என்பதில் இருக்கிறது.பிறந்தநாளுக்கு விழித்திருந்து பனிரெண்டு மணிக்கு தோழமையிடம் இருந்து வரும் SMS இல் உள்ள சுவராசியம் மறுநாள் வரும் போன் காலில் கூட இராது.மிக மோசமான தருணங்களில் சட்டென்று தோள் சாய விரும்பும் தோழமைக்கு நாம் கொடுக்கும் நம் நேரம் விலைமதிப்பற்றது.

எங்கேனும் மகளுடன் நட்புறவோடு விளையாடும் தந்தையைக் கண்டால் ஏக்கம் பீறிடும் எனக்கு.அது போல எல்லாம் இல்லாமல் வேலைப் பளுவில் மூழ்கடித்துக் கொண்டவர் என் அப்பா.தகுந்த நேரத்தில் அன்பை வெளிப்படுத்தாமல் பின்னர் அப்படிப் பாசம் வைத்தேன் இப்படிப் பாசம் வைத்தேன் என்று புலம்புவதில் என்ன பயன்?எங்கேனும் சென்ற இடத்தில் பிரியமானவர்களுக்குப் பிடிக்கும் என அறிந்து பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுங்கள் மறக்கவே முடியாததாகப் போகும் அவர்களுக்கு.சின்னச் சின்னச் சந்தோசங்கள் தான் வாழ்வின் மிகப் பெரிய மகிழ்விற்கு ஆரம்ப அடிப்படை.
"பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல "
காதலுக்கு மட்டும் அல்ல எல்லா உறவுகளுக்கும் பொருந்தும் 
அன்பைப் பகிர்வதில் உள்ள நன்மை பெறுதல் இருபக்கமும் உண்டு.கொடுப்பதில் நஷ்டம் இல்லை லாபம் மட்டுமே.மிகச் சிறிய வாழ்க்கையில் வெளிப்படுத்தப்படும் அன்பு மட்டுமே வாழ்வின் ஜீவாதாரமாக இருக்கும்.


Tuesday, December 20, 2011

இதயங்களின் ராஜா!

 நிறைய பேரு அடிக்கடி சண்டை போட்டுக்கறாங்க தீவிரமா விவாதம் பண்ணிக்கறாங்க.ராஜாவா 
ரகுமானா என்று நான் அந்த விவாதத்திற்குள் எல்லாம் போக விரும்பல .எனக்கு ஏன் பிறரை விட ஒரு படி மேலே ராஜாவைப் பிடித்தது என்று மட்டுமே யோசிக்க விரும்புகிறேன்.இந்தப் பதிவின் நோக்கமும் அதுவே 

ராஜா பத்தி பேசும் முன் என் சுய புராணம் கொஞ்சமா சொல்லிடறேன்.என் ஆத்மார்த்தமான நேசித்தலுக்கு எங்கேனும் காரணம் கிடைக்கலாம் உங்களுக்கு.

நான் சின்ன வயசில் எவரிடமும் அதிகம் பழகாமல் மனதில் பட்டதைப் பேசவே தயங்கும் ரிசர்வ்ட் டைப் என்றால்
நம்புவீர்களா?நம்பனும்:)அம்மா எங்கயும் வெளியே விட மாட்டாங்க வீட்டிற்கு உள்ளேயே இருக்கணும்
.அதிகம் கண்டிப்பு வேற.அண்ணனுக்கு விழும் அடி எல்லாம் பீதியடைந்த கண்களோடு வேடிக்கை பார்த்து ஓரமாய் ஒடுங்குவேன்.வெளியே நட்பு வட்டம் அறவே கிடையாது.அது மாதிரியான தருணங்களில் அண்ணன் அறிமுகப் படுத்தியவர் தான் ராஜா.அறியா வயசிலேயே ஆழப் பதிந்த ஆத்மார்த்தமான நண்பன் .
 என் அண்ணன் இசை ரசனையை சொல்லியே ஆகணும்.மெலடி ,பீட் ரெண்டும் ஒன்றாகக் கூட பதிய மாட்டாங்க.மிகச் சரியான கலவையாக இருக்கும் ஒரு கேசட்டில் பாடல்கள் அனைத்தும்.ஏனோ தானோ என்றல்லாமல் மிக செலெக்டிவ் பாடல்களாக இருக்கும்.ஸ்பீக்கர் ல அலற விட்டுத் தான் பாட்டு போடுவாங்க.கேசட்டில் இடையே நின்று நின்று பாடும்.எந்த இடத்தில் நின்று பாடும் என்பது கூட அத்துப்படி.தேர்ந்தெடுத்துப் பாடல்கள் இருக்குமென்பதால் எது எந்தப் படம் என்று எனக்குத் தெரியாது.யேசுதாஸ் பாடல்கள் பாகம் ஒன்று இரண்டு என்று வச்சிருந்தாங்க.அதிலே அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ பாடலை மிகச் சமீபத்தில்தான் யு ட்யூப் ல பார்த்தேன்.படம் பெயர் கூட அப்போதான் தெரியும்.இது பகல் ல கேக்கணும் இது இரவுல கேக்கணும் ன்னு பிரிச்சு வைப்பாங்க.(அதே பழக்கத்தில் இப்பவும் BEAT ,FEMALE SOLO MALE SOLO ,ROMANTIC DUETS ,MELODIES ன்னு டௌன்லோட் பண்ணதை தனித்தனியா பிரிச்சு வச்சு சிஸ்டம் ஹேங் ஆகிடாதான்னு அண்ணா கிட்ட வாங்கிக் கட்டினது வேற விஷயம் :P ) சின்ன வயசுல வானொலியில் பின்னணிப் பாடகர்கள் அறிவிப்பு செய்யும் பொழுது அவங்க தப்பா சொல்றாங்க படத்துல இது ரஜினி தானே பாடினாரு கமல் தானே பாடினாருன்னு தோணும் :) அப்புறம் அண்ணா சொல்லித் தான் தெரியும் பாடுறது வேற ஆளுங்கன்னு.
இயேசு தாஸ் குரல் மட்டுமே சட்டென்று கண்டு பிடிக்கும் வகையில் இருக்கும்.தனித்துவம் வாய்ந்த குரல் அது.பின்னாளில் எஸ்பிபியும்  மிக அருமையான பாடகர் என்று அறிவு சொன்னாலுமே கூட முதல் இடம் இயேசு தாசிற்குத் தான்.நீண்ட வருடங்கள் பொன் மானே கோபம் ஏனோ யேசுதாஸ் என்றே நினைத்திருந்தேன் ;-O உன்னி மேனன் என்றதும் ஆச்சர்யம்.இவர் மது பாலக்ருஷ்ணன் போன்றோரிடம் யேசுதாஸ் அவர்களின் தாக்கம் அதிகமாகவே இருக்குன்னு தோணுது.
ராஜா இசையமைத்த படங்களை எல்லாம் தேடித் தேடிக் கேட்கும் அளவுக்கு வெறியை இல்லை.இசை நல்லா இருந்தா ரசிப்பேன்.படம் கவிஞர் எல்லாம் ஆராய்ச்சி பண்ணித் தெரிஞ்சுக்க நினைச்சதே கிடையாது.ஏதோ பொழுது போகக் கேக்கிறோம்.அவ்ளோதான்.அதனால் இசை ஞானம் எல்லாம் அரைகுறைதான்.இணையத்தில் ராஜா ரசிகர்களைப் பார்த்தபின்பு தான் மலைத்தே விட்டேன்.எவ்ளோ தகவல்கள் தெரிஞ்சு வச்சிருக்காங்க.அவங்க முன்னாடி நிச்சயம் நான் மிக மிகச் சாதாரணம்தான்.பாட்டில் உள்ள நுணுக்கங்கள் என்ன என்பது தெரியாமலே ரசிப்பதற்கும் முழுவதும் அறிந்து சிலாகிப்பதற்கும் வித்தியாசம் உணர முடிந்தது.ரவி ஆதித்யா,றேடியோஸ்பதி,ராஜாரசிகன் என்னைக் கவர்ந்த தளங்கள்.
மனதிற்குப் பிடித்த விசயங்களில் முழுப் பைத்தியமா இருக்கணும் அதிலே அதிக பட்ச அறிவைப் பெற என்பது இணையதள ராஜா ரசிகர்களிடம் தாமதமாக அறிந்து கொண்டேன்.
கேட்காமல் விட்ட ராஜாவின் பாடல்கள் யாவும் புதுப் பாடல்கள் போலல்லாமல் சிரமமின்றி சட்டென்று மனதில் ஒட்டிக் கொள்கின்றன.தென்றல் என்னை முத்தமிட்டது இதழில் ...பாடல் சமீபத்தில் தான் கேட்டுப் பிடித்தது. 
அப்பாவின் கிராமத்திற்குப் போய்விட்டு மதுரை வரும் தருணங்களில் எல்லாம் பேருந்தில் இளையராஜா ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே திரும்பி வருவோம்.அந்த நேரம் எப்படிப் போகும் என்றே தெரியாது.அப்பாவே ரசித்ததால் சிந்து பைரவி அதிகம் பிடிக்கும் எனக்கு.
மண்ணில் இந்தக் காதலன்றி பாடலில் ஆரம்பத்தில் வரும் புல்லாங்குழலே சொல்லும் காற்றில் காகிதம் பறப்பதை.முத்துமணி மாலை ஆரம்ப இசையும் அப்படித்தான் முத்துமணி மாலை உருண்டோடுவதை கண் முன்னால் படம் பிடித்து காட்டும்."சொந்தம் வந்தது வந்தது ",பொன் வானம் பன்னீர் தூவும் இந்நேரம் " போன்ற பாடல்களை பார்க்காமலே கற்பனை செய்த விதமும் படத்தில் முதன் முதலில் பார்த்த பொழுதும் அப்படியே பிரம்மித்துப் போயிற்று.ராஜாவிடம் காட்சிப் படுத்தி விட்டு இசை அமைக்கச் சொன்னார்களா அல்லது அவர் இசைக்குத் தகுந்தாற் போல பாடல் காட்சிகளைப் படமாக்கினார்களா என்று பல முறை குழம்பி இருக்கின்றேன்.எப்படியாயினும் வெளிநாடு லொகேஷன் இல்லாமல் ,புது வித நடன அசைவுகள் பேர்வழி என்றோ இல்லாமல் அந்தக் காலத்தில் இயல்பாக நம் ஊர்களில் எடுக்கப்பட்ட பாடல்களே வெகுவாகக் கவர்ந்திருக்கின்றன இன்றளவும்.மதுர மரிக் கொழுந்து வாசம்,நிக்கட்டுமா போகட்டுமா இப்படி பாடல்களை அடுக்கிகிட்டே போகலாம்.ராஜா ஒரு முறை சொன்னது "இசையைக் கேட்கும் பொழுதே காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே உணர வைக்க வேண்டும் "என்று.அதை அப்படியே பல பாடல்களில் பிரதிபலித்திருப்பார்.
 
ஒரு படத்தின் கதை மட்டும் நன்றாக அமைந்து விட்டால் அதற்கு இசை ஞானியின் இசை பலமாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமின்றி நிரூபித்த படங்கள் நிறைய மௌன ராகம்,சிந்து பைரவி ,முதல் மரியாதை ,சேது என வரிசையாக பல வெற்றிப் படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
எத்தனை துன்பங்களையும் அந்த நேரத்தில் மறக்க மாமருந்தாக ராஜ இசை உதவி இருக்கின்றது என்றால் அது மிகையல்ல.ஒரு தாயைப்போல மடியில் வைத்து மெல்லத் தலை வருடி அன்பைச் சொல்லும் பாடல்களாகட்டும் காதலனின் பிரியத்தைச் சொல்லும் காதல் பாடல்களாகட்டும் எத்தனை அவர் பெருமை சொல்ல?எல்லா நேரமும் நண்பர்கள் அருகில் இருக்க முடியாது.வேதனையான தருணங்களில் பெரும்பாலும் நான் தோள் சாயும் நண்பன் ராஜா மட்டுமே.அப்படியே அள்ளி அணைத்துக் கொள்ளும் நண்பன் ,காதலன், தாயுமானவன் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைப்பேன் மொத்தத்தில் இசைக்கு இறைவன். 
 எண்பதுகளில் பல நல்ல பாடல்கள் வேறு இசையமைப்பாளர்கள் இசைத்திருந்த பொழுதும் அதுவும் ராஜாகவே இருக்கக் கூடும் என்று அனிச்சையாகவே பலரும் நினைத்திருக்கக் கூடும்.ராஜாவின் இசையில் இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை அது.
அவர் இசை அறிவை எடுத்துச் சொல்லும் அளவுக்கு எனக்கு விஷய ஞானம் இல்லை.அதே போல ராஜாவை மோசமாக விமர்சிக்கவும் எவருக்கும் அருகதை இல்லை.காலிக் குடங்களின் சத்தமும் குறை குடங்களின் கூத்தாட்டமும் மிகுந்த உலகில் தலையில் விஷயம் உள்ள ஒருவர் தலைக்கனமாக இருந்தால் கூட தவறே இல்லை.
என்னைப் போன்ற பல ரசிகர்களின் எண்ண அலைகள், நிழலாய் இருந்து அவரைத் தெம்பூட்டிய அவரது துணைவியாரின் பிரிவில் இருந்து அவரை ஆற்ற சென்றடையட்டும் என்பதே என் பிரார்த்தனை.