Tuesday, November 8, 2011

அண்ணா நூலகம்!

ஏற்கனவே ஒரு சில முறை சென்னை சென்றிருந்தாலும் இம்முறை சென்றதில் ஆழப் பதிந்தது அண்ணா நூலகம்.

அண்ணா பல்கலைக் கழகம் அருகில் மாணவர்கள் அதிகம் வந்து செல்லும் பகுதியில் ஏதுவாக அமையப்பெற்றிருக்கின்றது.நுழைவாயிலில் அண்ணாந்து பார்த்தாலே பிரமிக்க வைக்கின்றது அண்ணா நூலகம் அதன் கட்டிட அமைப்பில்.அமர்ந்த நிலையில் புத்தகம் படித்துக் கொண்டே வரவேற்கின்றார் அண்ணா.

வெயில் கொடுமை தெரியாதிருக்க சுற்றி சிறிய அளவில் நீர்நிலை.அளவாக அழகாக இருக்கின்றது.புத்தக வடிவில் கல்வெட்டு திறந்து வைத்தவர் பெயருடன்.கைப்பை எதுவும் அனுமதி இல்லை உள்ளே எடுத்துச் செல்ல.முந்தி கேமரா எடுத்துச் செல்ல அனுமதித்தார்களாம் புகைப்படம் எடுத்துக் கொள்ள.தற்பொழுது மாற்றுவதால் (?) எதிர்ப்பாளர்களைச் சமாளிக்க ஏக கெடுபிடி.அனுமதி இல்லை.


முழுக்க முழுக்க அனைத்துப் பகுதிகளும் குளிரூட்டப்பட்டு இருக்கின்றது.சொந்த புத்தகங்களை எடுத்துச் சென்று கூட படிப்பதற்கென்று தனி இடம் தரைத் தளத்தில்.எட்டுத் தளங்கள் ஒவ்வொரு தளத்திற்கும் செல்ல இரண்டு LIFT .ஒரு தளத்தை இரண்டாகப் பிரித்து இருக்கின்றார்கள்.கீழேயே எந்த தளத்தில் எது சம்பந்தமான புத்தகங்கள் இருக்கின்றன என்று எழுதி ஒட்டி வைத்திருக்கின்றார்கள்.அலைய அவசியம் இன்றி நேராக அங்கேயே சென்று விடலாம்.ஒவ்வொரு தளத்திலும் அந்த தளத்தில் உள்ள புத்தகங்கள் எவை சம்பந்தப் பட்டவை என்று நுழைவாயிலில் ஒட்டி இருக்கின்றார்கள்.அதே போல உள்ளே சென்றாலும் இரண்டு பக்கம் உள்ள ஒரு அடுக்கில் எந்த எந்த எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்கள் எந்த பக்கத்தில்  இருக்கின்றன என்பதையும் தெளிவாக எழுதி ஒட்டி இருக்கின்றார்கள்.குழந்தைகளுக்கென்று பிரத்யேகத் தளம்.ஒவ்வொரு தளத்திலும் உள்ள இரண்டு பிரிவுகளிலும் நுழைவாயிலில் பணிப் பெண்கள் சீருடையணிந்து அமர்ந்திருக்கின்றார்கள் தகவல் அளிக்க.ஒவ்வொரு பிரிவிலும் ஏகப்பட்ட SOFA மற்றும் படிப்பதற்கு எதுவாக டேபிள் நாற்காலிகள் இணைந்தும்.


நான் சென்ற பொழுது அவ்வளவு அமைதி குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் என்பார்களே அந்த அளவுக்கு.உள்ளேயும் ஆட்கள் கேட்கின்ற உதவியைச் செய்ய.(மற்ற அரசு அலவலகங்கள் போல் அன்றி கனிவோடு இயன்றவரை உதவி செய்கின்றார்கள்).அத்தனையும் புத்தம் புது புத்தகங்கள்.ஒரே புத்தகம் பலருக்கும் தேவைப்படக் கூடும் ஆதலால் ஒரே தலைப்புள்ள புத்தகம் குறைந்தது ஐந்தாவது இருக்கின்றது. 
ஒட்டிலே உலை வைப்பது என்று சொல்வார்கள்.அதில் கலைஞர் வல்லவர்.அங்கேயும் திமுக வரலாறு புத்தகங்கள் சமச்சீர் கல்வியில் அவர் வரலாறைச் சேர்த்தது போல
நான் சென்ற பொழுது வேறு ஒரு பக்கம் சூப்பர் சிங்கர் ஜூனியர் மூன்றிற்கான தேர்வும் நடந்து கொண்டிருந்தது.அதனால் நூலகத்தில் குட்டீஸ் கூட்டம் அதிகமாக இருந்தது.ஞாயிறு என்பதால் நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகமாகவே வந்தது.


உட்புற அமைப்பு செயல்படும் விதம் பார்த்த பொழுதுதான் புரிந்தது அம்மா நூலகத்தை மாற்றியே தீருவேன் என்று அடம் பிடிக்கக் காரணம் எங்கே சென்ற ஆட்சியின் அழியா சாதனையாக இடம் பெற்று விடுமோ என்ற பதட்டம்.

எதற்கு இவ்வளவு பெரிய இடம் அடைத்துக் கொண்டு என்று கேட்பவர்கள் மனசாட்சி அற்றவர்கள்.எத்தனையோ நூலகங்கள் பயன்படாமல் மேம்படுத்தப் படாமல் கிடக்கின்றன இது மட்டும் என்ன என்பவர்களுக்கு எத்தனையோ அரசு மருத்துவமனைகள் மிகக் கேவலமாக இருக்கின்றன எத்தனையோ அவசியமான இடங்களில் வைக்கவேண்டிய தேவை இருந்தும் அங்கெல்லாம் மருத்துவ மனை கட்டவும் மேம்படுத்தவும் துப்பில்லாத அரசு எதற்கு இதை மட்டும் மாற்றியே தீருவோம் என்று அடம்பிடிக்க வேண்டும்?
யார் நூலகத்தை அதிகம் பயன்படுத்துகின்றார்கள் மாற்றுவதால் என்ன நட்டம் என்றும் கேள்வி எழுப்புகின்றது ஒரு கூட்டம்.பயன்படுத்தாமல் இருப்பது நம் தவறே அன்றி அது பயனில்லை என்று அறிவிப்பது அறிவிலித்தனம் என ஏன் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்?அங்க புத்தகமே இல்ல மச்சி சும்மா வேடிக்கை தான் பார்த்துட்டு வந்தேன் என்றும் யாரோ ஒருவர் எழுதி இருந்ததைப் பார்த்தேன்.அத்தனை புத்தகங்களையும் எட்டு தளங்களிலும் பிரித்து அடுக்கவே ஒரு வருடம் ஆகிற்றாம்.
 ஐந்து லட்சம் புத்தகங்கள் முடிந்தவரை சேகரித்து வைத்திருக்கின்றார்கள்.ஒன்றரை லட்சம் புத்தகம் கூட வைக்க இடம் இல்லாத இடத்தில் மாற்றப் போவதாக செய்தி வெளியிடுகிறார்கள்.ஐந்து ஒன்றரையாக மாறி விட்டால் நிறைய வந்துவிடுமோ என்ன கணக்கு இது? 
சரி என்று வாதிடுகிறார்கள் அம்மா ஆதரவாளர்கள்.
நூலகம் மூடப்படுவது(என்னைப் பொறுத்தவரை அப்படித் தான் சொல்வேன்) சரியா தவறா அதன் நன்மை தீமை என்பதை சீர்தூக்கிப் பார்ப்பதை விடுத்து இதுதான் சாக்கு என்று உடன்பிறப்புகள் மிகக் கேவலமாக முதல்வரை ஜாதி சொல்லி விமர்சிப்பதும் மோசமாகப் பேசுவதும் நோக்கத்தை சிதைக்காதா?எரியிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆகாதா?அதே போல பிடித்தமான தலைவராகவே இருந்தாலும் அடுத்தவன் வீட்டில் தானே தீ எரிகிறது என்று கைகொட்டிச் சிரிப்பதும் அதற்கு ஆதரவாக கண்ணை மூடிக் கொண்டு வாதிடுவதும் அந்தத் தீ நம்மைச் சுடும் தூரம் அதிகம் இல்லை என்பதை உணராதவர்களாகவே தோன்றுகின்றது.ஆளும் கட்சிக் காரர்களாகவே இருக்கட்டும்.யதார்த்தமாய் ஒரு கேள்வி முன்வைக்கிறேன்.பொது நலத்தை விடுங்க.மாய்ந்து மாய்ந்து படித்து ஏகப்பட்ட தேர்வு எழுதி இப்படி ஒரு இடத்தில் நல்லதாக ஒரு அரசு வேலை கிடைத்துவிட்ட திருப்தியில் இருக்கும் போது எந்நேரம் வேண்டுமானாலும் பறிக்கப் படலாம் அல்லது ஆட்குறைப்பு செய்யப் பட்டால் அதில் நாமும் ஒருவராக இருப்போமோ என்ற பதட்டநிலை உங்களுக்கு வருமா வராதா?வெளியே நின்று கொண்டு என்ன வேணாலும் பேசிடலாம்.தனக்கென்று வந்தால் தான் தெரியும் தலைவலியும் காய்ச்சலும்.

என் தந்தை புத்தகம் வாங்கக் கூட வழியின்றி நூலகத்தில் படித்து வந்தவர்தான்.அவருக்குப் பிறகு அவர் சந்ததிகள் படித்திருக்கின்றோம்.இதை விட அதன் பயன்பாட்டிற்கு என்ன சான்று வேண்டும்?அப்படியே மாற்றம் மட்டுமே கவலைக்கு இடமில்லை என்று நம்புபவர்களை எண்ணி நகைப்பதா பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.ஒவ்வொரு ஆட்சி மாற்றமும் முன்பு ஆட்சியில் இருந்தவர்களின் தவறுகளுக்கான தண்டனை என்பதை வேறு ஒரு கட்சி ஆட்சிக்கும் வந்ததும் வசதியாய் மறந்து விடுகின்றது.ஆதரிப்பவர்கள் எதிர்ப்பவர்கள் தாண்டி நம்மைப் போன்ற பொது  ஜனமே அதிகம் என்பதையும் மறந்து விடுகின்றன கழகங்கள்.ஒரு சாமானியராக இது போன்று என் வருத்தம் பதிவு செய்வது தவிர வேறு ஒன்றும் அறியேன் பராபரமே.. :((

Tuesday, October 18, 2011

பெருமூச்சு ...5!

எனது கற்பனைக்காதலனுக்கு சமர்ப்பணம் 

நீயில்லாப் பொழுதுகள்
யாவும் நீள் பொழுதுகளாக..
*******************************
யாதுமாகி நீ நின்றாய்
வேறு யாதொன்றும் 
இல்லாமற் போனது ..
****************************  
விலகி (__ ) செல்லாமல் 
அருகில் வந்து இதழ் 
ஒற்றி(று)ப் பிழை திருத்து..
************************************ 
நான் சிரிக்கப் 
பொறுக்காதவன் நீ 
சட்டென்று என் இதழ் மூடி ... ;)
********************************************************
உன்னால் மட்டுமே உதிர்ந்து விழும்
மணல் கோட்டைக்கு 
"திமிர்"எனப் பெயரிட்டு இருக்கின்றேன்..
******************************************************
சுக்கு நூறாகக் கிழித்த 
நினைவுகளை எல்லாம்
மொத்தமாக அள்ளினேன்
சிதறிப் போனது மனது 
*******************************  
உன் சுளித்த புருவங்களுக்கிடையே
சிக்கித் தவிக்கிறேன் 
சீராக்கி நீ சிரிக்கின்ற வரையில்...
******************************************  
நம் இடைவெளிகளை 
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
மௌனங்களும் உன் நினைவுகளும்
*************************************************
வெட்ட வெட்ட வளர்கின்றது
-வலி
*******
உச்சி முகர்ந்து நெற்றியில் 
கொடுக்கும் நின்
முத்தங்கள் யாவும் நீ
எனக்களிக்கும் ஆசீர்வாதங்களாகின்றன
********************************************************
உன் தவறுகளை மன்னிக்கும் பொழுது
தாயாகின்றேன்
சண்டையிடும் பொழுதெல்லாம் 
அடித்தாலும் நின் அணைப்பையே
எதிர்பார்க்கும் சேயாகின்றேன் 
*****************************************
என்ன தவறு செய்தது பூமி
இப்படி ஓங்கிக் கொட்டுகிறது
வானம் 
மழைக் கரம் நீட்டி 
"மாமழை"
*************

Monday, October 10, 2011

ஊமை உள் நாக்கு!

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுமாம்-எவ்வளவு வாஸ்தவமா சொல்லி வச்சுட்டுப் போயிருக்காங்க.நீண்ட நாட்கள் ஆயிற்று கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யலாம் என்று தான் தோழி வீட்டிற்கு சென்றது.இன்று மனம் விட்டு அவள் பகிர்ந்து கொண்ட வேதனைகளை அறிந்தபின் தான் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறோம் ஒரு விதத்தில் என உணர முடிந்தது.காதல் திருமணம் செய்து கொண்ட தோழியை விட அவர் கணவர் அழகு கம்மி.படிப்பும் கூட.இன்று வரை எங்கேயும் அவர் பொது நிகழ்ச்சிகளுக்கு அவளை அழைத்துச் செல்வதில்லை.அவளை விட அழகு கம்மி என்ற தாழ்வு மனப்பான்மையினால்.பிறந்த வீட்டுடனும் அவர் தகராறு என்பதால் அங்கேயும் போவதில்லை.பக்கத்து வீட்டில் "நீங்க ஏன் வெளியே வருவதே இல்லை உங்க வீடு மாடிக்கு கூட எப்பவாவது தான் வர்றீங்க"என்று சொல்லி இருப்பாங்க போல.பக்கத்து வீட்டில் என்னைத் தப்பாக நினைப்பாங்களா உமா எங்கேயும் வெளியே செல்லாமலே இருப்பதற்கு எனக் கேட்டாள்.எனக்கு புரியவில்லை இதில் தவறா நினைக்க என்ன இருக்கு? என்று கேட்ட பின் மெதுவாகச் சொன்னாள்.அவள் உறவினர் பெண்மணி உன் கணவன் என்ன உன்னை சின்ன வீடு மாதிரி வச்சிருக்கான் அதனால் தான் எங்கயும் கூட்டிச் செல்வதில்லை என்று.சொல்லி முடிப்பதற்குள் பொலபொலவெனக் கண்ணீர்.சில வார்த்தைகளைத் தன்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்றும் தன் அம்மா வீட்டு மீது உள்ள கோபத்தில் வார்த்தைகளால் குத்திக் கிழிக்கிறார் என்றும் ஒவ்வொன்றாகச் சொல்லி வெடித்து அழ ஆரம்பித்தாள்.எனக்கென்று போக்கிடம் இல்லை உமா ஒரு நாள் வேதனை தாங்காமல் குழந்தையை எடுத்துக் கொண்டு பார்க்கில் மாலை வரை அமர்ந்து விட்டு வந்தேன்.குழந்தை பிறந்த நேரத்தில் கூட அடி வாங்கி இருக்கிறேன் அவரிடம் என்று அனைத்தையும் சொல்லி அழுது தீர்த்து விட்டாள்.மௌனித்தேன் அவள் பேசி முடிக்கும்வரை.என்னையும் அப்பிக் கொண்டது அவள் கண்ணீர்.அவள் குழந்தையும் என்னை ஆ வெனப் பார்க்கும்.காரணம் அந்த வீட்டிற்குச் செல்லும் ஒரே வெளி ஆள் நான் மட்டுமே.அவள் கணவர் குணம் ஓரளவுக்குத் தெரிந்ததாலும் மேற்கொண்டு எதையும் மறுக்க முடியவில்லை.இருப்பினும் மனதிற்குள் அவரைத் திட்டிவிட்டு அவரிடம் உள்ள பாசிடிவ் கண்ணோட்டங்களாகத் தேடி எடுத்து ஆறுதல் சொல்லவும் தான் கொஞ்சம் அழுகையை நிறுத்தினாள்.இதை விட மோசமான வாழ்க்கை வாழ்பவர்கள் நிறைய என்றெல்லாம் சொல்லித் தேற்றினேன்.ஆயிரம் ஆணீயம் பெண்ணியம் எனப் பேசினாலும் யதார்த்தம் எப்பொழுதுமே வேறாகத் தானிருக்கின்றது.குடும்பம் என்ற கட்டமைப்பிற்குள் குழந்தை என்ற காரணத்திற்காக மட்டுமே மனதிற்குப் பிடிக்காத வாழ்க்கையை சகிப்பவர்கள் தான் அதிகம் இங்க.சரி செய்யப்பட முடியாத தவறுகளில் பலருக்கு திருமணமும் ஒரு முக்கியமான ஒன்றாகவே இருக்கும்.பெரியார் பெண்களும் பிடிக்கவில்லை என்றால் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் விவாகரத்து அவசியம் என்று குரல் கொடுத்தது எவ்வளவு தீர்க்க தரிசன வார்த்தைகள்.இது ஒரு புறம் என்றால் கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரியாமல் சிறு சிறு குறைகளைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் எல்லாவற்றிற்கும் பெண்ணியம் பேசி வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளும் பெண்களைப் பார்த்தால் கோபமாக வரும்.எல்லா இடத்திலும் பொங்கி பொங்கி பொங்கல் வைக்க முடியாது.என் தோழியே ஆயினும் அவள் கணவனிடம் நியாயம் கேட்டா அவ வீட்டுக்குச் செல்லும் ஒரே ஆளும் கட்.மேலும் பிரச்சனை அதிகமாகும்.அல்லது அவளே என் கணவரை எதுவும் சொல்லிடாதே ன்னு சேம் சைட் கோல் போடுவா.
சில அல்ல பல நேரங்களில் பல விசயங்களைக் கண்டும் காணாமல் செல்ல வேண்டியது அர்த்தமானதும் அன்றாடத் தேவையும் கூட ஆகிப் போனது 
உள்நாக்குகள் பேச உதவா ஊமைகள்.என்னிலும் உண்டு ஊமை உள் நாக்குகள்.


பெருமூச்சுடன் வீட்டை விட்டு வெளியே வந்தேன்